உம்மத்தின் நலனில் உம்மி நபி ﷺ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ رَحْمَةً لِّلْعَالَمِينَ
وَجَعَلَهُ بِالْمُؤْمِنِينَ رَءُوفًا رَّحِيمًا، حَرِيصًا عَلَى هِدَايَتِهِمْ وَنَجَاتِهِمْ أَجْمَعِينَ.
وَأَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، النَّبِيُّ الْأُمِّيُّ الْكَرِيمُ الَّذِي عَاشَ يُنَادِي «أُمَّتِي أُمَّتِي»، وَادَّخَرَ دَعْوَتَهُ شَفَاعَةً لَنَا يَوْمَ الدِّينِ،
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ، وَمَنِ اتَّبَعَ هُدَاهُ إِلَى يَوْمِ الْمَبْعَثِ وَالْحِينِ أَمَّا بَعْدُ.
فَقَالَ اللَّهُ تَعَالَى فِي كِتَابِهِ الْعَزِيزِ: لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
قال رسول الله صلى الله عليه وسلم لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا، وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الآخِرَةِ
உலக வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள்; பேரரசுகள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால், மனிதர்களின் உடல்களை ஆளாமல், அவர்களின் உள்ளங்களை ஆண்ட ஒரே உன்னதத் தலைவர் நம் உயிரினும் மேலான உம்மி நபி முஹம்மது ﷺஅவர்கள்! மட்டுமே!
பிறக்கும் போது தன் குடும்பத்திற்காகவும், வாழும் போது தன் புகழுக்காகவும் வாழ்ந்த தலைவர்களுக்கு மத்தியில்—பிறப்பில் "உம்மத்தீ", வாழ்வில் "உம்மத்தீ", மரணப் படுக்கையிலும் "உம்மத்தீ" என்று தன் மூச்சுக் காற்றையே சமுதாயத்திற்காய் அர்ப்பணித்த ஒரே கருணை வடிவம் நம் முஹம்மது நபி ﷺஅவர்கள்!
தமக்குக் கல்லடி பட்ட போதும், பற்கள் உடைக்கப்பட்ட போதும், காலணிகளில் இரத்தம் உறைந்து நின்ற போதும்—சாபமிடாமல், "இறைவா! என் சமூகத்தை மன்னித்து விடு, அவர்கள் அறியாதவர்கள்" என்று எதிரிகளுக்காகவும் கண்ணீர் சிந்திய நிகரற்ற அன்புத் தலைவர்! முஹம்மது நபி ﷺஅவர்கள்!
விசாரணைக் களத்தில் மாபெரும் நபிமார்களே அல்லாஹ்வின் கோபத்தைக் கண்டு "நப்ஸீ... நப்ஸீ..." (என் ஆன்மாவே! என்னை நானே காத்துக் கொள்ள வேண்டுமே) என்று நடுங்கும் அந்தப் பயங்கரமான மஹ்ஷர் பெருவெளியில், அர்ஷின் கீழ் ஸஜ்தாவில் விழுந்து "யா ரப்! என் உம்மத்... என் உம்மத்..." என்று நமக்காக வாதாடக் காத்திருக்கும் ஒரே பரிந்துரையாளர்! முஹம்மது நபி ﷺஅவர்கள்!
இவ்வுலகில் எந்தத் தாயும் தன் பிள்ளைக்காகச் சிந்தாத கண்ணீரை, தன் சமுதாயத்தின் மறுமை ஈடேற்றத்திற்காக அதிகமாக சிந்தி, நரக நெருப்பிலிருந்து நம்மைத் தன் திருக்கரங்களால் இழுத்துக் காப்பாற்றத் துடிக்கும் அந்தப் பாசத்தின் உறைவிடம் நம் தலைவர் முஹம்மது நபி ﷺஅவர்கள்!
உம்மத்தின் மீது நபிகளாரின் பேரன்பு
அல்லாஹ் தன் திருமறையில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பாசத்தையும், உம்மத்தின் மீதான அவர்களின் அக்கறையையும் மிக அழகாக வர்ணிக்கிறான்:
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
"நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குப் பெரும் பாரமாக இருக்கிறது. உங்கள் (நலனின்) மீது பேரார்வம் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அளவற்ற இரக்கமும் கருணையும் உடையவராகவும் அவர் இருக்கிறார்."
(அல்குர்ஆன் 9:128)
மற்றொரு வசனத்தில், மக்கள் சத்தியத்தை ஏற்காமல் நரக நெருப்பில் வீழ்ந்து விடுவார்களோ என்ற வேதனையில் நபிகளார் உருகியதை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا
"(நபியே!) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உமது உயிரையே மாய்த்துக் கொள்வீர் போலும்!"(அல்குர்ஆன் 26:3)
மதீனாவின் ஓர் அமைதியான இரவுப் பொழுது…
உலகமே உறங்கிக் கிடந்த அந்த நடுநிசியில், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகத் தனிமையில் நின்றார்கள்.அவர்கள் திருக்குர்ஆனை ஒவ்வோர் ஆயத்தாக நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்தார்கள். அப்போது முந்தைய இறைத்தூதர்கள் தம் சமுதாயத்திற்காக வேண்டிய இரு முக்கிய குர்ஆன் வசனங்கள் நபிகளாரின் நாவில் வந்தன.
நபிகளார் ஓதிய முதல் வசனம் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் துஆ:
அல்லாஹ்வின் உற்ற தோழர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் சமுதாயத்தின் தவறுகளுக்குப் பரிந்துரைத்த வசனத்தை நபிகளார் ஓதினார்கள்
رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ ۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي ۖ وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ
"என் இறைவா! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் பெரும்பாலோரை வழிகெடுத்துவிட்டன. ஆகவே, என்னை யார் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர்; யார் எனக்கு மாறு செய்கிறாரோ—நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கிறாய்." அல்குர்ஆன் (14:36)
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், மாறு செய்த மக்களுக்கு உடனடியாகத் தண்டனை கேட்காமல் அல்லாஹ்வின் மன்னிப்பிற்கே அவர்களை ஒப்படைத்தார்கள்.
நபிகளார் ஓதிய இரண்டாவது வசனம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் துஆ:
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் சமுதாயம் வழிகெட்ட போது இறைவனிடம் பணிந்து மன்றாடிய வசனத்தை நபிகளார் ஓதினார்கள்:
إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ۖ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
"நீ அவர்களைத் தண்டித்தால் நிச்சயமாக அவர்கள் உனது அடியார்களே! நீ அவர்களை மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீயே மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறாய்."(5:118)
இந்த இரண்டு வசனங்களையும் ஓதிய நபிகள் நாயகம் ﷺ அவர்களின் உள்ளத்தில் ஒரு பெரும் நடுக்கமும் தவிப்பும் ஏற்பட்டது:
"இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் சமூகத்திற்காக அல்லாஹ்வின் மன்னிப்பை வேண்டினார்கள்."
"ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோ தண்டிப்பதும் மன்னிப்பதும் அல்லாஹ்வின் தனிப்பெரும் உரிமை என்று சரணடைந்தார்கள்."
"ஆனால், என் பின்னால் வரக்கூடிய பலவீனமான என் உம்மத்தின் நிலை என்னவாகும்? அவர்கள் பாவங்கள் செய்து நரக நெருப்பில் வீழ்ந்து விடுவார்களோ?" இந்த எண்ணம் நபிகளாரின் உள்ளத்தை உலுக்கியது. தாள முடியாத பாசமும் கவலையும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
உடனே நபிகளார் தொழுகையிலேயே தம் இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி, விம்மி விம்மி அழத் தொடங்கினார்கள். கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. அந்த அழுகையின் நடுவே அவர்களின் திருவாயிலிருந்து வந்த ஒரே முழக்கம்:
«اللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي»
"இறைவா! என் உம்மத்... என் உம்மத்... (என் சமுதாயத்தைக் காப்பாற்று!)"
நபிகளாரின் இந்த இதயப் பூர்வமான அழுகை ஏழு வானங்களையும் தாண்டி அல்லாஹ்வின் அர்ஷை எட்டியது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்; ஆனாலும் அண்ணல் நபியின் அந்தப் பேரன்பையும் தவிப்பையும் உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறினான்:
"ஜிப்ரீலே! முஹம்மதிடம் ﷺ செல்லுங்கள். உமது இரட்சகன் யாவற்றையும் நன்கறிவான்; இருப்பினும் அவரிடமே சென்று, 'தாங்கள் அழுவதற்கான காரணம் என்ன?' என்று கேட்டு வாருங்கள்!"
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பூமிக்கு இறங்கி வந்து, அழுதுகொண்டிருந்த நபிகளாரிடம் இறைவனின் செய்தியைக் கூறி விசாரித்தார்கள். நபிகளார் தன் சமுதாயத்தின் பாவங்கள், பலவீனங்கள் மற்றும் அவர்களின் மறுமை ஈடேற்றம் குறித்த தனது ஏக்கத்தைத் தெரிவித்தார்கள்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்குத் திரும்பிச் சென்று நபிகளாரின் பதிலைத் தெரிவித்தபோது, அளவற்ற கருணையாளனான அல்லாஹ் ஈடுஇணையற்ற ஆறுதலைப் பரிசாக வழங்கினான்:
«يَا جِبْرِيلُ، اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، فَقُلْ: إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ، وَلَا نَسُوءُكَ»
"ஜிப்ரீலே! முஹம்மதிடம் உடனே செல்லுங்கள்; 'நபியே! நாம் உமது உம்மத்தின் விஷயத்தில் உம்மை திருப்தியடையச் செய்வோம்; ஒருபோதும் உமக்கு நாம் மனவருத்தத்தை ஏற்படுத்த மாட்டோம்' என்று நற்செய்தி கூறுங்கள்!" நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
அல்லாஹ் தன் நபியிடம் "நீர் திருப்தியடையும் வரை நாம் உமது உம்மத்திற்கு மன்னிப்பையும் நன்மைகளையும் வாரி வழங்குவோம்" என்று வாக்களித்தான். (இதைத்தான் ஸூரா அள்ளுஹாவில்: وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.(அல்குர்ஆன் : 93:5)
நபிகளார் தமக்காகவோ, தன் அருமைப் பிள்ளைகளான பாத்திமா, காஸிம், இப்ராஹீம் ஆகியோருக்காகவோ அந்த இரவில் அழவில்லை. நபிகளாரை நேரில் பார்த்திராத, பின்னால் வரக்கூடிய பலவீனமான நம்மைக் காப்பாற்றவே அந்த நடுநிசியில் விம்மி அழுதார்கள்.
நம்மைப் பற்றி இவ்வளவு கவலைப்பட்ட நபிகளாருக்கு நாம் காட்டும் நன்றிக் கடன் என்பது அவர்களை நேசிப்பதும் அவர்களின் சுன்னத்துகளை உயிர்ப்பிப்பதும், அவர்கள் காட்டிய நேரான வழியில் வாழ்வதுமே ஆகும்.
சிறப்புப் பிரார்த்தனை (முஸ்தஜாப் துஆ)
அல்லாஹ் தான் அனுப்பிய ஒவ்வொரு தூதருக்கும் ஒரு "தனித்துவமான வாக்குறுதியை" அளித்திருந்தான். அதாவது:
"நீங்கள் உலகத்தில் எதை மிக முக்கியமாகக் கருதி என்னிடம் ஒருமுறை கேட்கிறீர்களோ, அதை நான் உடனே ஏற்றுக்கொண்டு தருவேன்; அதற்கு எந்த மறுப்பும் இருக்காது."
முந்தைய அனைத்து நபிமார்களும் தங்களின் அந்த மாபெரும் சிறப்புப் பிரார்த்தனையை இந்த உலக வாழ்விலேயே பயன்படுத்திவிட்டார்கள்:
நூஹ் அலைஹிஸ்ஸலாம்: 950 ஆண்டுகள் மார்க்கப் பிரச்சாரம் செய்தும் மக்கள் அடங்காமல் வரம்பு மீறியபோது, "இறைவா! இந்தப் பூமியில் நிராகரிப்பாளர்களில் எவரையும் விட்டுவைக்காதே!" என்று கேட்டு வெள்ளப் பிரளயத்தின் மூலம் அழிவைத் தந்தார்கள் (ஸூரா நூஹ் 71:26).
மூஸா அலைஹிஸ்ஸலாம்: ஃபிர்அவ்னின் அக்கிரமங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, அவனது செல்வங்களையும் படைகளையும் அழிக்குமாறு இறைவனிடம் துஆ கேட்டார்கள் (ஸூரா யூனுஸ் 10:88).
ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்: "இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற ஓர் ஆட்சி அதிகாரத்தை எனக்குத் தா!" என்று கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள் (ஸூரா ஸாத் 38:35).
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இந்த வாய்ப்பு இருந்தது. தாயிஃப் நகரில் கல்லடிபட்டு இரத்தம் சிந்திய போது கேட்டிருக்கலாம்.
உஹுத் போர்க்களத்தில் பற்கள் உடைக்கப்பட்டு, முகம் காயம்பட்ட போது அந்த எதிரிகளை அழிக்கக் கேட்டிருக்கலாம்.
மக்கத்து காஃபிர்கள் பல ஆண்டுகள் சமூகப் புறக்கணிப்பு செய்து, மர இலைகளைத் தின்ன வைத்த போது கேட்டிருக்கலாம்.
ஆனால், உலகத்தின் எந்தத் துன்பத்திற்கும் தன் சிறப்புத் துஆவை நபிகளார் பயன்படுத்தவில்லை. "எனக்கு இப்போது துன்பம் வந்தாலும் பரவாயில்லை; என் சமுதாயம் நாளை மஹ்ஷர் மைதானத்தில் நரக நெருப்பின் விளிம்பில் நிற்கும் போது இந்த துஆ தான் அவர்களுக்குப் பயன்படும்" என்று கூறி, அதை மறுமைக்காகப் பத்திரமாகப் பூட்டி வைத்தார்கள்.
மறுமைப் பெருவெளியில் அந்த துஆ வெளிப்படும் தருணம் (அஷ்-ஷஃபாஅதுல் உழ்மா)
அல்லாஹ் மனிதகுலம் அனைவரையும்—முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் உலகத்தின் இறுதி மனிதர் வரை—ஒரே சமவெளியில் ஒன்று சேர்ப்பான்.
சூரியனின் நெருக்கம்: சூரியன் மக்களின் தலைக்கு மேலே மிகச் சமீபத்தில் (சுமார் ஒரு மைல் தொலைவில்) கொண்டு வரப்படும். பூமி செம்புத் தகடாகக் கொதிக்கும்.
மனிதர்கள் செய்த பாவங்களின் அளவுக்கு ஏற்ப சிலர் கரண்டைக் கால் வரையிலும், சிலர் முழங்கால் வரையிலும், சிலர் இடுப்பு வரையிலும், பலர் தங்களின் வாய் வரை வியர்வை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிப்பார்கள்.
மக்கள் அங்கு பல ஆண்டுகள் பசியோடும் தாகத்தோடும், நிற்கக் கூட இடமில்லாமல் நெரிசலில் நிற்பார்கள். இறைவனின் கடும் கோபத்தைக் கண்டு பூமி நடுங்கும். விசாரணை தொடங்கப்படாமல் நீண்ட நேரம் தவித்துப் போன மனிதர்கள், "அல்லாஹ்விடம் பேசி விசாரணையைத் தொடங்க வைக்கக்கூடிய ஒரு தலைவர் நமக்குக் கிடைக்க மாட்டாரா?" என்று புலம்புவார்கள்.
மனிதகுலம் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வரிசையாக
இறைத்தூதர்களின் வாசலைத் தட்டும்:
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (சமைத்த) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அவர்களுக்கு ஆட்டின் முன்னங்கால் பகுதி எடுத்துக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். அதிலிருந்து ஒரு கவளம் கடித்தார்கள். பிறகு கூறினார்கள்:
“மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் நானே. அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? (அல்லாஹ்) முந்தையவர்களையும் பிந்தையவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அழைப்பவர் (அழைத்தால்) அவர்களுக்குக் கேட்கும்; பார்ப்பவர் (பார்த்தால்) (அனைவரையும்) ஊடுருவிப் பார்க்க முடியும். சூரியன் (அவர்களுக்கு) மிக அருகில் வரும். மக்களுக்குத் தாங்க முடியாத, சுமக்க முடியாத அளவுக்குத் துயரமும் கவலையும் ஏற்படும். அப்போது மக்கள், ‘(துயரத்தில்) நீங்கள் எந்த நிலையை அடைந்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கவில்லையா? உங்கள் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்பவர் ஒருவரை நீங்கள் தேடமாட்டீர்களா?’ என்று பேசிக்கொள்வார்கள்.
சிலர் வேறு சிலரிடம், ‘ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள். அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று, ‘நீங்கள் மனிதகுலத்தின் தந்தை. அல்லாஹ் உங்களைத் தன் கரத்தால் படைத்தான். மேலும் அவன் தன் ரூஹிலிருந்து (ஆன்மாவிலிருந்து) உங்களுக்குள் ஊதினான். மேலும் வானவர்களை உங்களுக்கு ஸஜ்தா செய்யும்படி கட்டளையிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? நாங்கள் எத்தகைய (துயரத்தை) அடைந்துவிட்டோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘இன்று என் இறைவன் முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். அவன் என்னை (அந்த) மரத்தை விட்டும் தடுத்தான். ஆனால் நான் அவனுக்கு மாறுசெய்துவிட்டேன். எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
எனவே அவர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று, ‘நூஹ் அவர்களே! நீங்கள் பூமியிலுள்ள மக்களுக்கு (அனுப்பப்பட்ட) தூதர்களில் முதலாவதாக இருக்கிறீர்கள். அல்லாஹ் உங்களை நன்றியுள்ள அடியார் என்று பெயரிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள், ‘இன்று என் இறைவன் (அல்லாஹ்) முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். எனக்கு (உலகில்) நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு பிரார்த்தனையைச் செய்யும் உரிமை இருந்தது. அதை நான் என் சமூகத்திற்கு எதிராகச் செய்துவிட்டேன். எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று, ‘இப்ராஹீம் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராகவும் பூமியிலுள்ள மக்களில் அவனுடைய கலீல் (நெருங்கிய நண்பர்) ஆகவும் இருக்கிறீர்கள். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அவர்களிடம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘என் இறைவன் இன்று முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். நான் மூன்று பொய்களைச் சொல்லியிருந்தேன்’ என்று கூறிவிட்டு – ‘எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று, ‘மூஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். அல்லாஹ் தனது தூதுத்துவத்தாலும், (உங்களுடன்) பேசியதாலும் மற்ற மனிதர்களைவிட உங்களுக்கு மேன்மையை வழங்கினான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘என் இறைவன் இன்று முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். நான் கொல்லும்படி கட்டளையிடப்படாத ஓர் உயிரைக் கொன்றுவிட்டேன். எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
எனவே அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று, ‘ஈஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். மேலும் மர்யமிடம் அவன் போட்ட அவனுடைய வார்த்தையாகவும், அவனிடமிருந்து உருவான ஓர் ஆன்மாவாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் குழந்தையாகத் தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘என் இறைவன் இன்று முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான்’ என்று கூறுவார்கள் – ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்தப் பாவத்தையும் குறிப்பிடமாட்டார்கள் – ‘எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
எனவே அவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகிய என்னிடம் வருவார்கள். அவர்கள், ‘முஹம்மது அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். மேலும் நபிமார்களில் இறுதியானவர் ஆவீர்கள். அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள்.
அப்போது நான் புறப்பட்டுச் சென்று அர்ஷுக்குக் கீழே என் இறைவனுக்கு முன்னால் ஸஜ்தாவில் விழுவேன். பின்னர் அல்லாஹ் எனக்கு முன் வேறு யாருக்கும் வெளிப்படுத்தாத அவனது புகழாங்களையும், அவனைப் போற்றும் அழகிய வார்த்தைகளையும் எனக்கு வெளிப்படுத்துவான். பின்னர், ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள், உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், (உங்கள் பரிந்துரை) ஏற்கப்படும்’ என்று கூறப்படும். எனவே நான் என் தலையை உயர்த்தி, ‘என் உம்மத்தினரே! என் இறைவனே! என் உம்மத்தினரே! என் இறைவனே!’ என்று கூறுவேன். அப்போது, ‘முஹம்மதே! உங்கள் உம்மத்தினரில் கேள்வி கணக்கு இல்லாதவர்களைச் சொர்க்கத்தின் வாசல்களில் வலதுபுறத்தில் அமைந்துள்ள வாசல் வழியாக நுழையச் செய்யுங்கள். மேலும் அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் கூட்டாக நுழைவார்கள்’ என்று கூறப்படும்.”
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, சொர்க்கத்தின் வாசல்களின் இரு கதவுகளுக்குப் இடைப்பட்ட தூரமானது, மக்காவிற்கும் ஹிம்யருக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றது; அல்லது மக்காவிற்கும் புஸ்ராவிற்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றது.”நூல்:ஸஹீஹுல் புகாரி
"நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அரியாசனமான அர்ஷை நோக்கி விரைவார்கள்.அர்ஷுக்குக் கீழே சென்று தன் திருமுகத்தை மண்ணில் வைத்து ஸஜ்தாவில் விழுவார்கள்.இதற்கு முன் மனிதர்களோ வானவர்களோ அறிந்திராத மகத்தான, மிகச் சிறந்த இறைப்புகழ்களை (ஹம்து மற்றும் தஸ்பீஹ்களை) அல்லாஹ் நபிகளாரின் உள்ளத்தில் உதிக்கச் செய்வான். நபிகளார் அழுதுகொண்டே அந்தப் புகழுரைகளை ஓதி இறைவனிடம் மன்றாடுவார்கள்.
நீண்ட நேரம் ஸஜ்தாவில் கிடந்து உருகும் நபிகளாரைப் பார்த்து அல்லாஹ் அருள்மொழிவான்:
«يَا مُحَمَّدُ، ارْفَعْ رَأْسَكَ، وَقُلْ يُسْمَعْ لَكَ، وَسَلْ تُعْطَهْ، وَاشْفَعْ تُشَفَّعْ»
"முஹம்மதே! உமது தலையை உயர்த்தும்! பேசும், உமது பேச்சு கேட்கப்படும்! கேளும், உமக்கு வாரி வழங்கப்படும்! பரிந்துரை செய்யும், உமது பரிந்துரை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும்!"
அப்போது நபிகளார் தலையை உயர்த்தி, தமக்காகவோ, தன் அருமை மகள் பாத்திமாவிற்காகவோ கேட்காமல் கேட்கும் முதல் முழக்கம்:
«يَا رَبِّ، أُمَّتِي أُمَّتِي»
"என் இறைவா! என் உம்மத்... என் உம்மத்... என் சமுதாயத்தைக் காப்பாற்று!"
உலக ஆசைகளுக்காகவோ, எதிரிகளைப் பழிவாங்கவோ தன் அதிகாரத்தைப் பயன்படுத்தாத தன்னலமற்ற தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்காக ஒரு துஆவைச் சேமித்து வைத்து, மஹ்ஷரின் கொடூர நாளில் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்த உத்தம நபியின் மீது நாம் எந்த அளவுக்கு அன்பும் மரியாதையும் வைத்திருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நபிகளாரின் ஆதங்கம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் மக்களை நல்வழியின் பால் அழைத்தபோது, மனித மனம் சிற்றின்பங்களிலும் பாவங்களிலும் எளிதில் ஈர்க்கப்படுவதை உணர்ந்தார்கள்.
மனிதர்கள் தங்களின் அறியாமையினாலும், மன இச்சையினாலும், ஷைத்தானின் கவர்ச்சியான மாயையினாலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் செயல்களை நோக்கித் தங்களை அறியாமலேயே ஓடுகிறார்கள்.
ஒரு தந்தை தன் குழந்தை நெருப்பை நோக்கி ஓடும்போது பதறிப்போய் இழுப்பது போல, மனிதகுலம் நரகின் படுகுழியை நோக்கி விரைவதைக் கண்டு நபிகளாரின் உள்ளம் துடித்தது. மக்களுக்கு எளிதாகப் புரிய வைக்கவே, பாலைவனத்து இயல்பு வாழ்க்கையோடு இணைந்த இந்த அழகிய உவமையை நபிகளார் எடுத்துரைத்தார்கள்.
«مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ أَوْقَدَ نَارًا، فَجَعَلَ الْجَنَادِبُ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهَا، وَهُوَ يَذُبُّهُنَّ عَنْهَا، وَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ، وَأَنْتُمْ تَفَلَّتُونَ مِنْ يَدِي»
பாலைவனத்தில் இரவில் இருள் சூழ்ந்திருக்கும் வேளையில் ஒரு வழிப்போக்கன் வெளிச்சத்துக்காகவும் குளிருக்காகவும் நெருப்பை மூட்டுகிறான்.
பூச்சிகளின் அறியாமை (பாவங்களின் மாயை):இரவு நேரத்துப் பூச்சிகளும் விட்டில் பூச்சிகளும் அந்த நெருப்பின் ஒளியைக் கண்டு கவரப்பட்டு, அது தங்களைச் சுட்டெரிக்கும் என்று தெரியாமல் அதை நோக்கிப் பாய்கின்றன.
நெருப்பை மூட்டிய மனிதன், "ஐயோ! இந்தப் பூச்சிகள் கருகி மடிந்து விடக்கூடாதே" என்று தன் இரு கரங்களாலும் அவற்றை விரட்டி விரட்டித் தடுக்கப் பார்க்கிறான். ஆனால், அவை அவனது கைகளையும் மீறி நெருப்பில் குதிக்கின்றன.
நபிகளார் கூறுகிறார்கள்: "மனிதர்களே! நீங்கள் உலக மோகத்திலும் பாவங்களிலும் மயங்கி நரக நெருப்பை நோக்கி ஓடுகிறீர்கள். ஒரு மனிதன் தவறி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவனது இடுப்புப் பகுதியை (ஆடையைப்) பிடித்து பலமாகப் பின்னோக்கி இழுப்பது போல, நான் உங்களை நரகில் விழுந்துவிடாமல் இடுப்பைப் பிடித்து இழுக்கிறேன்; நீங்களோ என் பிடியை உதறிவிட்டு நழுவி நரகில் விழப் பார்க்கிறீர்கள்!"
இந்த உவமை வெறும் வார்த்தை மட்டுமல்ல; நபிகளாரின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்வின் நேரடிப் பிரதிபலிப்பாகும்.
அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) பெண் சிசுக்கொலை, விபச்சாரம், சூதாட்டம், வட்டி, மது மற்றும் அற்ப விஷயங்களுக்காக தலைமுறை தலைமுறையாக நடந்த போர்கள் என அரபு உலகம் நரகத்தின் விளிம்பில் நின்றது. நபிகளார் தன் உயிருக்கு ஆபத்து வந்தபோதும் தளர்ந்து போகாமல், அந்த ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கையைப் பிடித்து இழுத்து நரகின் படுகுழியிலிருந்து சுவனத்தின் பாதைக்கு மீட்டெடுத்தார்கள்.
எனக்கு விபச்சாரத்திற்கு அனுமதி தாருங்கள்
ஒருமுறை ஓர் இளைஞர் நபிகளாரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபச்சாரத்திற்கு மட்டும் அனுமதி தாருங்கள்" என்று பகிரங்கமாகக் கேட்டார். சுற்றியிருந்த தோழர்கள் கோபமடைந்து அவரை அடிக்கப் பாய்ந்தார்கள்.
ஆனால் நபிகளார் அவரை அன்போடு அருகில் அமர வைத்து,
"இந்தச் செயலை உனது தாய்க்கோ, மகளுக்கோ, சகோதரிக்கோ பிறர் செய்வதை நீ விரும்புவாயா?" என்று கேட்டார்கள்.
அவர் "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். நபிகளார் தமது புனிதக் கரத்தை அந்த வாலிபரின் நெஞ்சில் வைத்து, "இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!" என்று துஆ செய்தார்கள். விபச்சாரத்தின் மூலம் நரகில் விழத் துடித்த அந்த இளைஞரைத் தன் பாசக் கரத்தால் நபிகளார் காப்பாற்றினார்கள். நூல்: அஹ்மத்
யூதச் சிறுவனின் இறுதி ஈடேற்றம்:
நபிகளாருக்குப் பணிவிடை செய்து வந்த ஒரு யூதச் சிறுவன் மரணப் படுக்கையில் இருந்தான். நபிகளார் அவனது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்து, "மகனே! இஸ்லாத்தை ஏற்றுக்கொள்" என்றார்கள். அச்சிறுவன் தன் தந்தையைப் பார்த்தான். அவனது தந்தை, "அபுல் காஸிம் (நபிகளார்) சொல்வதற்குக் கட்டுப்படு" என்றார்.உடனே அச்சிறுவன் கலிமாவை மொழிந்து முஸ்லிமாகி தன் இறுதி மூச்சை விட்டான். அப்போது நபிகளார் வெளியே வந்து பெருமூச்சுடன் கூறினார்கள்:"அவனை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!"நூல்: ஸஹீஹ் புகாரி
அல்லாஹ் கூறுகிறான்:-
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا
"(நபியே!) இந்தச் செய்தியை (வேதத்தை) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக, அவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரையே மாய்த்துக் கொள்வீர் போலும்!” அல்குர்ஆன் 18:06
இஸ்லாம் கூறும் தொழுகை, நோன்பு, ஹலால்-ஹராம் வரம்புகள் மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கல்ல; விட்டில் பூச்சியைப் போல நரகில் வீழ்ந்து விடாமல் நம்மைப் பிடித்து இழுக்கும் நபிகளாரின் கருணைக்கரங்களே அவை.
பாவங்களை உதறித்தள்ளுதல்: நபிகளாரின் கரத்தை விட்டு நழுவிச் செல்லும் விட்டில் பூச்சிகளாக நாம் மாறிவிடக் கூடாது; அவர்களின் சுன்னத் எனும் பிடிமானத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
துயரங்களின் ஆண்டு (ஆமுல் ஹுஸ்ன்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தின் 10-ஆம் ஆண்டு. நபிகளாரின் வாழ்வில் அடுத்தடுத்து இரண்டு பெரும் இழப்புகள் நிகழ்ந்தன:தமக்கு உறுதுணையாக நின்ற பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தார். 25 ஆண்டுகள் தமக்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும் திகழ்ந்த அன்பு மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலமானார்கள்.
இந்த இருவரின் மறைவுக்குப் பின் மக்கத்து குறைஷிகளின் அக்கிரமங்களும் கொடுமைகளும் எல்லையைத் தாண்டின. மக்காவில் சத்தியத்தை எடுத்துச் சொல்வது மிகக் கடினமான சூழலாக மாறியது.
அப்போது, மக்காவிற்கு வெளியே அமைந்திருந்த செழிப்பான தாயிஃப் நகரத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து, அவர்களிடம் அடைக்கலம் தேட நபிகளார் திட்டமிட்டார்கள்.
நபிகளார் மக்காவிலிருந்து தாயிஃப் வரை சுமார் 80 கிலோமீட்டர் தூரமுள்ள கரடுமுரடான மலைப்பாதையைக் கால்நடையாகவே கடந்தார்கள். அவர்களுடன் அவர்களின் வளர்ப்பு மகனான ஸைத் இப்னு ஹாரிஸா ரலியல்லாஹு அன்ஹு மட்டுமே சென்றார்கள்.
தாயிஃபை அடைந்த நபிகளார், அங்குள்ள 'ஸகீஃப்' கோத்திரத்தின் தலைவர்களான அப்து யாலீல் மற்றும் அவனது இரு சகோதரர்களைச் சந்தித்து ஏகத்துவத்தின் செய்தியை எடுத்துரைத்தார்கள்.
ஆனால், அந்தத் தலைவர்கள் நபிகளாரை மிகக் கேவலமாகப் பேசி அவமதித்தனர்:
ஒருவன் கூறினான்: "அல்லாஹ் உன்னைத் தவிர தூதராக அனுப்ப வேறு எவரையும் காணவில்லையா?"
இன்னொருவன் கூறினான்: "கஅபாவின் திரையை நான் கிழித்து எறிந்துவிடுவேன், அல்லாஹ் உன்னைத் தூதராக அனுப்பியிருந்தால்!"
மூன்றாமவன் கூறினான்: "உன்னுடன் பேசவே எனக்கு விருப்பமில்லை; நீ உண்மையாளராக இருந்தால் உன்னிடம் பேசுவது ஆபத்து, பொய்யராக இருந்தால் உன்னிடம் பேசத் தகுதியே இல்லை!"
அவமதித்ததோடு நில்லாமல், அவர்கள் தங்கள் ஊரிலிருந்த பசங்களையும், தெருவில் உள்ள சிறுவர்கள்,அடிமைகளையும் ஏவிவிட்டனர்.
தாயிஃபின் தெருக்களில் இருபுறமும் வரிசையாக நின்று கொண்டு நபிகளாரைக் கல்லால் அடித்தனர்:
நபிகளார் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கற்கள் வீசப்பட்டன.
அவர்களின் புனிதமான கால்களில் காயங்கள் ஏற்பட்டு, இரத்தம் வழிந்தோடி பாதணிகளில் உறைந்து நின்றது.நபிகளார் வலியால் அமர முற்படும் போதெல்லாம், அவர்களைக் கையைப் பிடித்து எழுப்பி மீண்டும் மீண்டும் கல்லால் அடித்தார்கள். ஸைத் இப்னு ஹாரிஸா ரலியல்லாஹு அன்ஹு நபிகளாரைக் காக்கத் தன் உடலையே கேடயமாக ஆக்க முயன்றார்; அவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இறுதியாக, ஊருக்கு வெளியே இருந்த உத்பா மற்றும் ஷைபா ஆகியோருக்குச் சொந்தமான ஒரு திராட்சைத் தோட்டத்திற்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.
உடலெல்லாம் காயங்களுடன், ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்த நபிகளார், தம்மைக் கல்லால் அடித்த மக்களுக்காக சாபமிடவில்லை. மாறாக, இறைவனிடம் தன் பலவீனத்தை முறையிட்டு உருகி அழுதார்கள்:
"இறைவா! எனது பலவீனத்தையும், எனது உபாயக் குறைவையும், மக்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட இந்த இழிவையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளனே! நீயே எளியவர்களின் இறைவன்; நீயே என் இரட்சகன்... உன் கோபம் என் மீது இல்லாத வரை எனக்கு எந்தத் துன்பத்தைப் பற்றியும் கவலையில்லை!"
நபிகளாரின் இந்த உருக்கமான துஆவைக் கண்டு வானுலகமே அதிர்ந்தது. நபிகளார் தாயிஃபை விட்டுத் திரும்பி 'கர்னுல் மனாஸில்' என்ற இடத்தை அடைந்தபோது, ஒரு மேகம் அவர்கள் மீது நிழலிட்டது.
அதில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி, நபிகளாரை அழைத்து, மலைகளுக்கான வானவரை அறிமுகப்படுத்தினார்கள்.
மலைகளுக்கான வானவர் சலாம் கூறிவிட்டு இவ்வாறு வேண்டினார்:
"அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமூகம் உங்களுக்குச் செய்ததை அல்லாஹ் பார்த்தான். நான் மலைகளுக்குப் பொறுப்பான வானவர். நீங்கள் உத்தரவிட்டால், இந்த நகரத்தின் இருபுறமும் உள்ள 'அல்-அஃகஷபைன்' (அபூ குபைஸ் மற்றும் குஐகிஆன்) ஆகிய இரு பெரும் பாறை மலைகளையும் ஒன்று சேர்த்து, இந்த ஒட்டுமொத்த தாயிஃப் மக்களையும் இப்போதே நசுக்கி அழித்து விடுகிறேன்!"
நூல்:ஸஹீஹ் புகாரி
ஒரு நொடி நபிகளார் கண் அசைத்திருந்தால் ஒட்டுமொத்த தாயிஃப் நகரமும் சுவடே இல்லாமல் பூமிக்குள் புதைந்திருக்கும்.
ஆனால், அங்கே வெளிப்பட்டது அகிலத்தின் அருட்கொடையின் பேரன்பு! நபிகளார் உடனே கூறினார்கள்:
«بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلَابِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا»
"வேண்டாம்! (அவர்களை அழிக்காதீர்கள்!) இவர்களின் சந்ததியிலிருந்தாவது அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல், அவனை மட்டுமே வணங்கக்கூடிய ஒரு தலைமுறையை அல்லாஹ் உருவாக்குவான் என நான் நம்புகிறேன்!"
நபிகளாரின் அந்தப் பொறுமையும் நம்பிக்கையும் வீண் போகவில்லை:
சில ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த தாயிஃப் மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
நபிகளார் அன்று துஆ செய்த அதே தாயிஃபின் சந்ததியிலிருந்துதான் பிற்காலத்தில் சிந்து சமவெளியை வென்று இந்தியத் துணைக்கண்டத்திற்கு இஸ்லாத்தைக் கொண்டு சேர்த்த முஹம்மது இப்னு காஸிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்ற மாபெரும் இஸ்லாமிய வீரர்கள் உருவானார்கள்.
தன் உடலிலிருந்து இரத்தம் சொட்டிய போதும், எதிரிகளுக்குத் தண்டனை வாங்கித் தராமல் அவர்களின் வருங்கால சந்ததிக்காக நன்மையை வேண்டிய உத்தம நபி.
உம்மத்தின் நலனைத் தன் உயிருக்கும் மேலாக நேசித்த அந்த உம்மி நபியின் அன்பையும் பொறுமையையும் நமது வாழ்வில் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
நோயின் தொடக்கமும் தோழர்களின் தவிப்பும்
ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு, ஸஃபர் மாதத்தின் இறுதி நாட்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
அவர்களின் உடல் அனலாகக் கொதித்தது. அவர்களது தலையில் கட்டப்பட்டிருந்த துணியைத் தொட்ட தோழர்கள் கூட அந்தக் காய்ச்சலின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் கையை எடுத்தார்கள். இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரின் உடலைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு இரு மடங்கு காய்ச்சல் அடிக்கிறதே!" என்ற போது, நபிகளார் கூறினார்கள்:
"ஆம், உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சலின் வேதனை எனக்கு ஒருவருக்கு ஏற்படுகிறது. இதனால் அல்லாஹ் என் தவறுகளை (அந்தஸ்துகளை உயர்த்தும் பொருட்டு) மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல உதிரச் செய்கிறான்."நூல்: ஸஹீஹ் புகாரி
நபிகளாரின் விருப்பப்படி, அவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்கள்.
காய்ச்சல் மிகக் கடுமையாக இருந்த நிலையிலும், தன் உம்மத்துடன் சேர்ந்து தொழுகை நடத்த வேண்டும் என்பதில் நபிகளார் காட்டிய உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது: இஷாத் தொழுகையின் நேரம் வந்தபோது, நபிகளார் "மக்கள் தொழுதுவிட்டார்களா?" என்று கேட்டார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, "இல்லை அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்" என்றார்.
உடனே நபிகளார் தொழுகைக்குப் புறப்பட எண்ணி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்து உளூச் செய்தார்கள். ஆனால், எழுந்திருக்க முயன்ற போது மயக்கமடைந்து விழுந்தார்கள். மயக்கம் தெளிந்ததும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள்: "மக்கள் தொழுதுவிட்டார்களா?"
இவ்வாறு மூன்று முறை மயக்கமடைந்து விழுந்த பிறகும், அவர்களின் சிந்தனை மக்கள் மீதும் தொழுகையின் மீதுமே இருந்தது.
இறுதியாகத் தம்மால் எழ முடியாத நிலையை உணர்ந்த போது, "அபூபக்ரிடம் சொல்லுங்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்" என்று கட்டளையிட்டார்கள். நூல்:ஸஹீஹ் புகாரி
மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன், நோயின் தீவிரம் சற்று குறைந்த ஒரு வேளையில், அலி ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரின் தோள்களில் கை தாங்கலாகத் தன் கால்கள் தரையில் இழுபட மஸ்ஜிதுந் நபவிக்கு வந்தார்கள்.
மிம்பரில் அமர்ந்து தன் அருமைத் தோழர்களைப் பார்த்து உம்மத்திற்கான இறுதி எச்சரிக்கைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்கள்:
"மக்களே! முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; ஆனால் எனக்கு அடைக்கலம் தந்த அன்ஸாரிகளின் எண்ணிக்கை குறையும். ஆகவே, அவர்களில் நல்லவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்; குற்றம் புரிபவர்களை மன்னித்து விடுங்கள்."
"நான் யாருக்காவது அநீதி இழைத்திருந்தால், இதோ என் முதுகு! என்னைப் பழிவாங்கிக் கொள்ளுங்கள்! யாரிடமாவது கடன் பட்டிருந்தால் இதோ என் செல்வம், என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்!"
நபிகளார் இவ்வுலகை விட்டுப் பிரிந்த அந்த திங்கட்கிழமை அதிகாலை ஃபஜ்ர் தொழுகை. தோழர்கள் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அறையின் திரைச்சீலையை நபிகளார் தன் பலவீனமான கைகளால் மெதுவாக விலக்கினார்கள். தன் உம்மத் தொழுகையில் வரிசையாக நின்று அல்லாஹ்வை வணங்குவதைக் கண்ட நபிகளாரின் முகம் பௌர்ணமி நிலவைப் போல பிரகாசித்தது.தன் 23 ஆண்டுகால உழைப்பும் தியாகமும் வீண் போகாமல், தன் உம்மத் நேர்வழியில் நிற்பதைக் கண்டு அவர்களின் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது. தோழர்கள் நபிகளாரின் முகத்தைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சியில் தொழுகையை விட்டே விலக முற்பட்டனர். ஆனால் நபிகளார், தொழுகையைத் தொடருமாறு கையசைத்துவிட்டுத் திரையை மூடிக்கொண்டார்கள். அதுவே தோழர்கள் கண்ட நபிகளாரின் இறுதிப் புனித முகம்! (ஸஹீஹ் புகாரி - 680)
அன்று நண்பகல் நேரம் நெருங்கியது. நபிகளார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நெஞ்சில் சாய்ந்திருந்தார்கள். அவர்களின் உயிர் பிரியும் கடினமான தருணம் (சகராத்துல் மவ்த்) வந்தது. அருகில் இருந்த ஒரு பாத்திரத்து நீரில் தன் புனிதக் கைகளை நனைத்து, முகத்தைத் துடைத்துக் கொண்டே கூறினார்கள்: "லா இலாஹ இல்லல்லாஹ்... நிச்சயமாக மரணத்திற்குப் பெரும் வேதனைகள் உண்டு."
அந்தக் கடுமையான மரணத் தவிப்பிலும் அவர்களின் உதடுகள் முனகிய இறுதி வார்த்தைகள்:
«الصَّلَاةَ الصَّلَاةَ، وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ»
"தொழுகை... தொழுகையை உயிரெனப் பேணுங்கள்! மற்றும் உங்கள் கீழ் உள்ள எளியவர்கள்/பணியாளர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!"
நூல்:ஸுனன் அபூதாவூத் -
தன் குடும்பத்திற்கான சொத்துக்களையோ, வாரிசுகளுக்கான பதவிகளையோ நபிகளார் இறுதி நேரத்தில் உயிலாக எழுதி வைக்கவில்லை.
அவர்கள் விட்டுச் சென்ற ஒரே உயில்: "தொழுகையை விட்டுவிடாதீர்கள்; எளியவர்களைத் துன்புறுத்தாதீர்கள்" என்பது மட்டுமே.
தன் இறுதி மூச்சிலும் தொழுகையையும், உம்மத்தின் ஒற்றுமையையும் நினைத்து உருகிய நபிகளாரின் உம்மத்தாகிய நாம், தொழுகையை அலட்சியப்படுத்துவது அந்த உத்தம நபிக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். தொழுகையைப் பேணி வாழ்வதே நபிகளாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அன்பாகும்.
என் அன்புச் சகோதரர்களை நான் எப்போது காண்பேன்?"
(பிற்கால உம்மத்தின் மீதான ஏக்கம்)
ஒருநாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் 'பகீஉ' மையவாடிக்குச் சென்று கப்றாளிகளுக்கு சலாம் கூறினார்கள். பின்னர் தம்முடன் இருந்த தோழர்களைப் பார்த்து ஏக்கத்தோடு கூறினார்கள்:
«وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا»
"என் சகோதரர்களை நான் நேரில் காண்பதை மிகவும் ஆசைப்படுகிறேன்!"
அப்போது தோழர்கள் ஆச்சரியத்துடன், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள்தானே உங்கள் சகோதரர்கள்?" என்று கேட்டார்கள்.அதற்கு நபிகளார் நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்கள்"இல்லை! நீங்கள் என் தோழர்கள் (அஸ்ஹாபிகள்). என் சகோதரர்கள் யார் தெரியுமா? எனக்குப் பின்னால் இந்த உலகிற்கு வருவார்கள்; என்னை நேரில் பார்க்காமலேயே என் மீது அசைக்க முடியாத ஈமான் கொள்வார்கள். அவர்களே என் அன்புச் சகோதரர்கள்!" நூல்: ஸஹீஹ் முஸ்லிம் -
நபிகளார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை நேரில் பார்க்காமல் வாழும் நம்மைக் குறிப்பிட்டு "என் சகோதரர்கள்" என்று அழைத்து நமக்காக ஏங்கினார்கள்.
50 வக்த் தொழுகைகளை 5 வக்த் ஆகக் குறைத்தது
அல்லாஹ் நபிகளாரை விண்ணுலகிற்கு அழைத்துச் சென்று நேரில் பேசிய 'மிஃராஜ்' இரவில், உம்மத்திற்கு தினமும் 50 நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டு நபிகளார் விடைபெற்றார்கள். வழியில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிகளாரைச் சந்தித்து: "உங்களுக்கு இறைவன் என்ன கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள்.
நபிகளார் "தினமும் 50 தொழுகைகள்" என்றார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்: "உங்கள் உம்மத் உடலமைப்பிலும் உள்ளத்திலும் பலவீனமானது. இஸ்ரவேலர்களுக்கே என்னால் இதைக் கடைப்பிடிக்க வைக்க முடியவில்லை; உங்கள் உம்மத்தால் இதைத் தாங்க முடியாது. உடனே திரும்பிச் சென்று இறைவனிடம் குறைத்துக் கேளுங்கள்!"
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் மீண்டும் அல்லாஹ்விடம் சென்று பணிந்து மன்றாடினார்கள்:50 தொழுகையிலிருந்து 40, 30, 20, 10 என ஒவ்வொன்றாகக் குறைத்து இறுதியாக 5 தொழுகைகளாக மாற்றினார்கள். 5 தொழுகையான பிறகும் மூஸா அலைஹிஸ்ஸலாம் "இன்னும் போய்க் கேளுங்கள்" என்ற போது, நபிகளார் கூறினார்கள்: "நான் என் இறைவனிடம் பலமுறை கேட்டுவிட்டேன்; இனிமேல் கேட்க வெட்கப்படுகிறேன். ஆனால், என் உம்மத்திற்கு இதை நான் திருப்தியுடன் ஏற்கிறேன்." நூல் :ஸஹீஹ் புகாரி
அல்லாஹ் அந்த 5 நேரத் தொழுகையை நிறைவேற்றினாலே 50 தொழுகைக்கான முழு நன்மையையும் உம்மத்திற்கு வழங்குவதாக வாக்களித்தான். உம்மத்தின் பலவீனத்தைத் தன் தோள்களில் சுமந்து குறைந்த சுமையையும் அதிக நன்மையையும் பெற்றுத் தந்த தலைவரின் கருணை அது.
உஹத் போர்க்களத்தில் எழுந்த துஆ
உஹத் போர்க்களத்தில் முஸ்லிம்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது. எதிரிகள் நபிகளாரைச் சூழ்ந்து தாக்கினர்:நபிகளாரின் தலைக்கவசம் உடைந்து, அதன் இரும்பு வளையங்கள் புனித கன்னங்களில் பாய்ந்தன. அவர்களின் முன்பல் உடைக்கப்பட்டு இரத்தம் பீறிட்டு வழிந்தது. இரத்தம் தரையில் சிந்திவிட்டால் அல்லாஹ்வின் தண்டனை இறங்கிவிடுமோ என்று அஞ்சி, தம் புனிதக் கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டே இருந்தார்கள்.தோழர்கள் துயரம் தாளாமல், "அல்லாஹ்வின் தூதரே! இந்த எதிரிகளை அழிக்குமாறு அல்லாஹ்விடம் சாபமிட்டுப் பிரார்த்தியுங்கள்!" என்று கதறினார்கள்.
அப்போது இரத்தம் வழியும் முகத்தோடு அண்ணலார் மொழிந்த வார்த்தைகள்:
«اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لَا يَعْلَمُونَ»
"இறைவா! என் சமூகத்தை மன்னித்து விடு; நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருக்கிறார்கள்!"நூல்:ஸஹீஹ் புகாரி
குழந்தையின் அழுகைக் குரலும் சுருக்கப்பட்ட தொழுகையும்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தொழுகை என்பது கண்களின் குளிர்ச்சியாகவும், உலகிலேயே மிகவும் விருப்பமான வழிபாடாகவும் இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் நின்று ஓதித் தொழுவதையே விரும்புவார்கள்.ஆனால், தன் உம்மத்தின் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சிரமத்தை உணர்ந்து அவர்கள் கூறியது:
"நான் தொழுகையை நீண்ட நேரம் ஓதித் தொழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தொடங்குகிறேன். ஆனால், பின்னாலிருந்து ஒரு குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்கும்போது, அக்குழந்தையின் அழுகையால் அதன் தாயின் உள்ளம் படும் வேதனையை நான் அறிவேன். அதனால் அந்தத் தாய்க்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காக எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்."நூல்: ஸஹீஹ் புகாரி
இறை வழிபாட்டின் உச்சக்கட்ட இன்பத்தில் திளைத்திருக்கும் போதும் கூட, தன் சமூகத்தின் எளிய மனிதர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு இரக்கம் காட்டிய உன்னதத் தலைவர்.
ஒரு மனிதன் இரண்டு நிலையில் மற்றவர்களை மறந்து விடுவார் இன்னும் அதிக சந்தோசமாக இருக்கும் போது அல்லது அதிகம் கவலையாக இருக்கும் போது ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரண்டு நிலையிலேயும் இந்த உம்மத்தை நினைத்தார்கள்.
அதிக சந்தோசமாக இருக்கும் போது இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்காத ஒரு பெரும் பாக்கியம் மிஃராஜ் அல்லாஹ்வை சந்தித்த அந்த பெரும் பாக்கியம் கிடைத்த போதும் உள்ளத்தை நினைத்தார்கள்.
நபிகளாரின் காணிக்கை (அத்தஹிய்யாத்)
அல்லாஹ்வின் பேரொளிக்கு முன்னால் பணிந்து நின்ற நபிகள் நாயகம் அவர்கள், அகிலத்தின் இரட்சகனுக்குத் தகுதியான வார்த்தைகளால் காணிக்கை செலுத்தினார்கள்:
«التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ»
"சொல் வடிவிலான துதி காணிக்கைகளும், உடல் ரீதியான வணக்க வழிபாடுகளும், பொருள் ரீதியான தூய்மையான தர்மங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியன!"
அகிலத்தின் இறைவனான அல்லாஹ், தன் அருமைத் தூதரின் இந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மட்டுமே உரிய தனித்துவமான வாழ்த்தைப் பரிசாக வழங்கினான்:
«السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ»
"நபியே! உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் பேரருளும், அவனது அபிவிருத்திகளும் (பரக்கத்தும்) உண்டாவதாக!"
நபிகளாரின் உம்மத் பாசம் (அஸ்ஸலாமு அலைனா)
இறைவனின் நேரடிப் பேரருளும் சாந்தியும் தமக்கு மட்டுமே கிடைத்த அந்த உச்சக்கட்ட கௌரவமான தருணத்தில், நபிகளார் "அஸ்ஸலாமு அலய்ய" (என் மீது உண்டாவதாக) என்று ஒருமையில் தமக்கு மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை.
"என்னை நேரில் பார்க்காமல் பூமியில் வாழப்போகும் என் உம்மத்திற்கு இந்த சாந்தியும் பரக்கத்தும் கிடைக்க வேண்டுமே" என்று எண்ணி, உடனே பன்மையில் முழு உம்மத்தையும் இணைத்துக் கூறினார்கள்:
«السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ»
"எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் அந்தச் சாந்தி உண்டாவதாக!"
நபிகளாரின் இந்த எல்லையற்ற தியாகத்தையும் உம்மத்தின் மீதான பாசத்தையும் கண்ட வானவர்கள் வியப்படைந்து, அனைவரும் ஒருசேர முழங்கினர்:
«أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»
"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நாங்கள் சாட்சி பகர்கிறோம்!"
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:"நீங்கள் (தொழுகையில்) 'அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்' என்று கூறும்போது, வானத்திலும் பூமியிலும் உள்ள அல்லாஹ்வின் அனைத்து நல்லடியார்களுக்கும் உங்களின் அந்த ஸலாம் சென்றடைகிறது!"
உலகத்தின் அதிஉயர் அந்தஸ்தில், இறைவனின் அருகாமையில் நின்ற போதும் கூடத் தன் உம்மத்தை ஒரு நொடி கூட மறக்காத தலைவர் நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .
நாம் தொழுகையில் அமர்ந்து 'அத்தஹிய்யாத்' ஓதும் ஒவ்வொரு முறையும், மிஃராஜில் நமக்காக நபிகளார் வாங்கித் தந்த அந்தப் பேரருளையும் பாதுகாப்பையும் நினைவுகூர்கிறோம்.
நபிகளாரோடு சேர்ந்து வானுலகின் ஸலாத்தைப் பெற்ற அந்த உன்னத சமுதாயத்திற்குரிய பண்புகளோடு—தொழுகையைப் பேணி, நற்குணங்களோடு வாழ்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நூல்:இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் 'ஃபத்ஹுல் பாரீ' (فتح الباري شرح صحيح البخاري)
அதிக கவலை மற்றும் கடும் வேதனையாக இருக்கும் போது…
ஒரு மனிதனுடைய கடுமையான வேதனை கடும் கவலை உயிர் பிரியும் மரண நேரத்தில் தான் ஏற்படும் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நேரத்திலும் உம்மத்தை நினைத்தார்கள்.
மரணத் தாகமும் உயிர் பிரியும் வலியும்
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மடியில் நபிகளார் சாய்ந்திருந்த அந்த இறுதிப் பொழுதுகளில், அவர்களின் அருகில் ஒரு தோல் பாத்திரத்தில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.
நபிகளார் தங்களின் புனிதக் கைகளை அந்தத் தண்ணீரில் நனைத்து, தங்களின் திருமுகத்தைத் துடைத்துக் கொண்டே கூறினார்கள்:
«لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ لَسَكَرَاتٍ»
"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நிச்சயமாக மரணத்திற்குப் பெரும் வேதனைகளும் தவிப்புகளும் உண்டு!" நூல்: ஸஹீஹ் புகாரி
உயிர்களைக் கைப்பற்றக் கூடிய மலக்குல் மவ்த் (இஸ்ராயீல் அலை) அவர்கள் நபிகளாரிடம் வந்து சலாம் கூறி, மிக மென்மையாகவும் கண்ணியமாகவும் நபிகளாரின் உயிரைக் கைப்பற்றத் தொடங்கினார்கள். அப்போது அண்ணலார் அந்த மரண வலியின் உக்கிரத்தை உணர்ந்து, வானவரிடம் வினவினார்கள்:
"மலக்கே! அனைத்து மனிதர்களின் உயிரும் பிரியும் போது இத்தகைய வேதனை ஏற்படுமா?"அதற்கு வானவர் பதிலளித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இது மரணத்தின் வேதனை. ஆனால், உலகத்தில் இதுவரை எந்த மனிதருக்கும் செய்யாத அளவிற்கு மிக மென்மையாக, கண்ணியமாகவே தங்களின் உயிரை நான் கைப்பற்றுகிறேன்!"
மலக்குல் மவ்த் கூறியதைக் கேட்ட நபிகளாரின் உள்ளம் தன் உம்மத்தை நினைத்துப் பதறிப்போனது.
"அகிலத்தின் தலைவரான எனக்கே இந்த மரண வலி இவ்வளவு கடுமையாக இருக்கும் போது, பாவங்களைச் செய்து பலவீனமாக வாழும் என் உம்மத் இந்த மரண வேதனையை எப்படித் தாங்குவார்கள்?" என்ற கவலை அவர்களை ஆட்கொண்டது.
உடனே நபிகளார் அல்லாஹ்விடம் கையேந்தி உருகிப் பிரார்த்தித்தார்கள்:
«اللَّهُمَّ شَدِّدْ عَلَيَّ مَوْتِي، وَخَفِّفْ عَلَى أُمَّتِي»
"இறைவா! என் சமுதாயம் அனுபவிக்க வேண்டிய மரண வேதனைகள் அனைத்தையும் என் மீதே அதிகப்படுத்தித் தந்துவிடு; ஆனால், என் உம்மத்தின் மரண வேதனையை அவர்களுக்கு லேசாக்கி, எளிதாக்கிக் கொடுப்பாயாக!”
ஒரு மனிதன் மரணத்தின் பிடியில் இருக்கும்போது தனது உடலின் வலியை மட்டுமே உணர்வான்; தன் சுயநினைவையே இழப்பான்.
ஆனால், உலக வரலாற்றில் உயிர் பிரியும் அந்த உச்சக்கட்ட மரண வலியிலும் கூட, "என் உம்மத்தின் வேதனையை என் தலையிலேயே சுமத்து; என் மக்களுக்கு அதை லேசாக்கு" என்று வேண்டிய ஒரே அன்புத் தலைவர் நம் பெருமானார் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே. நூல்:இஹ்யா உலூமித்தீன்' (إحياء علوم الدين) – பாகம் 4, கிதாபு திக்ரில் மவ்த்
யா அல்லாஹ்! எங்கள் உயிரினும் மேலான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது எல்லையற்ற ஸலவாத்தையும் ஸலாமையும் பொழிவாயாக!
யா ரஹ்மான்! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது உண்மையான, தூய்மையான அன்பை எங்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைப்பாயாக!
யா கரீம்! எங்கள் சொல், செயல், குடும்பம் அனைத்திலும் நபிகளாரின் அழகிய சுன்னத்துகளைப் பின்பற்றி வாழும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக!
யா ரஹீம்! மரணத்தின் போதும், கப்ரின் தனிமையிலும், மஹ்ஷரின் கொடூரமான பெருவெளியிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகத்தைக் கண்டு மகிழும் நற்பேற்றை எங்களுக்கு வழங்குவாயாக!
யா அல்லாஹ்! மறுமை நாளில் மஹ்ஷரின் வெப்பத்திலிருந்து காக்கப்பட்டு, நபிகளாரின் பொற்கரங்களால் 'ஹவ்ளுல் கவ்ஸர்' நீரைக் குடித்து, அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்று, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நபிகளாருடன் ஒன்றாக வாழும் பெரும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் தந்தருள்வாயாக!
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக