“வாக்குரிமை: ஒரு மார்க்கக் கடமை”
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم
قال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
قال رسول الله صلى الله عليه وسلم كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
அல்லாஹ்வின் நல்லடியார்களே !"இன்று நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் (தேர்தல் களம்) இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டின் மாநில தேர்தல் இன்ஷா அல்லாஹ் வரும் 23/04/2026 வியாழக்கிழமை நடைபெற உள்ளது. நாம் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
அரசியல் என்பது ஏதோ உலகியல் விஷயம், அதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், நம்முடைய ஒவ்வொரு அசைவும் மறுமையில் விசாரிக்கப்படும் என்பதை நாம் மறக்கக்கூடாது. குறிப்பாக, நாம் அளிக்கப் போகும் 'வாக்கு' (Vote) என்பது ஒரு சாதாரண மின்னனு காகிதமல்ல; அது நாம் அல்லாஹ்விடம் அளிக்கப்போகும் ஒரு சாட்சியம்.”
இன்று நம் நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு நிகழ்வு மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரின் உரிமையையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடிய ஒரு களம்.
ஒரு முஃமின் (நம்பிக்கையாளர்) தனது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் மார்க்கத்தின் வழிகாட்டுதலோடு அணுகுவது போல, இந்தத் தேர்தல் மற்றும் வாக்குரிமையையும் நாம் மார்க்கக் கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும்.
வாக்கு அளிப்பது என்பது வெறும் ஜனநாயகக் கடமை மட்டுமல்ல,
அது ஒரு மார்க்கக் கடமையுமாகும் என்று மார்க்க அறிஞர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாமா முஃப்தி முஹம்மது ஷபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனது 'மஆரிபுல் குர்ஆன்' கிதாபில் 'வாக்களிப்பதன் நான்கு நிலைகள்' குறித்து பேசுகிறார்கள் அவை:
ஷஹாதத் (شَهَادَة): சாட்சி கூறுதல்.
ஷபாஅத் (شَفَاعَة): பரிந்துரை செய்தல்.
வகாலத் (وَكَالَة): பிரதிநிதித்துவம்/வக்கீலாக நியமித்தல்.
அமானத் (أَمَانَة): அமானிதம்/நம்பிக்கைப் பொறுப்பு.
1.வாக்கு என்பது ஒரு ஷஹாதத் சாட்சியம் (The Nature of Voting as Testimony)
இஸ்லாமியச் சட்டவியலில் (Fiqh), ஒருவருக்கு வாக்களிப்பது என்பது, "இந்த நபர் இந்தப் பதவிக்குத் தகுதியானவர், இவர் நாணயமானவர்" என்று ஒரு சான்றிதழைப் பொதுமக்களுக்கும் இறைவனுக்கும் வழங்குவதாகும்.
தகுதியுள்ளவருக்குச் சாட்சி கூறுதல்.
ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் மீது இரண்டு அடிப்படைத் தகுதிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்:
1)திறமை (Capability) அந்தப் பதவியின் பொறுப்புகளைச் சுமக்கக்கூடிய அறிவு மற்றும் நிர்வாகத் திறன் அவரிடம் இருக்க வேண்டும்.
2)நேர்மை (Integrity) அவர் அமானிதங்களைப் பேணக்கூடியவராகவும், ஊழல் மற்றும் அநீதிக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இவை இருப்பவருக்கு வாக்களிப்பது உண்மையான சாட்சியமாகும்.
தவறான சாட்சி கூறுதலின் விளைவு (False Witness)
தகுதியற்றவர் அல்லது அநியாயக்காரர் என்று தெரிந்தும், ஒருவருக்குக் கட்சி ரீதியாகவோ அல்லது பணத்திற்காகவோ வாக்களிப்பது 'பொய் சாட்சி' (Zoor) சொல்வதற்குச் சமம்.
நீங்கள் வாக்களித்து வெற்றி பெற்றவர் அந்தப் பதவியைப் பயன்படுத்திச் செய்யும் ஒவ்வொரு ஊழலிலும், அநியாயத்திலும் உங்களது 'தவறான சாட்சியத்திற்கும்' (வாக்கிற்கும்) பங்கு உண்டு.
பொய் சாட்சி கூறுவது இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சாட்சி சொல்ல வராமல் இருப்பதன் தீமை (Withholding Testimony)
"தேர்தல் காலங்களில் எனக்குப் பிடிக்கவில்லை" அல்லது "யார் வந்தால் என்ன?" என்று கூறி வாக்களிக்காமல் இருப்பது மார்க்க ரீதியாகப் பெரும் பிழையாகும்.
தகுதியான வேட்பாளர் ஒருவருக்குப் போட்டியாகத் தீயவர்கள் நிற்கும்போது, நீங்கள் சாட்சி சொல்ல (வாக்களிக்க) வராமல் இருப்பது 'உண்மையை மறைத்தல்' (Kitman al-Shahada) என்ற குற்றத்தில் சேரும்.
وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன்.2:283)
"வாக்கிற்குப் பணம் வாங்குவது என்பது உங்கள் சாட்சியத்தை விற்பனை செய்வதாகும்.
ஒரு சாட்சியம் (வாக்கு) என்பது விற்பனைக்குரிய சரக்கு அல்ல; அது சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் அறப்பணி.
பணத்திற்காக ஒருவருக்குச் சாதகமாகச் சாட்சி சொல்வது (வாக்களிப்பது) அந்தப் பணத்தை ஹராமான (லஞ்ச) வருமானமாக மாற்றிவிடும்.
ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களைத் தேர்வு செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது 'சகீஃபா' என்ற இடத்தில் ஸஹாபாக்கள் கூடியிருந்தனர்.
அப்போது ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்து, "இவர் மக்களுடன் ஹிஜ்ரத் செய்தவர், குகையில் நபியோடு இருந்தவர், தொழுகையை முன்னின்று நடத்தியவர்" என்று அவருடைய தகுதிகளுக்குச் சாட்சி கூறினார்கள்.
இங்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சாட்சி (வாக்கு) என்பது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தகுதிக்கு வழங்கப்பட்ட ஒரு ‘ஷஹாதத்’ (சாட்சியம்) ஆகும். இதன் மூலமே ஒரு சிறந்த ஆட்சி மலர்ந்தது.
ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களை தேர்வு செய்தல்
ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது, அடுத்த கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒரு குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைக்காமல், ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை (The Committee of Six) அமைத்தார்கள்.
இந்தக் குழுவில் பின்வரும் ஆறு முக்கிய ஸஹாபாக்கள் இடம்பெற்றிருந்தனர்:
ஹழ்ரத் உஸ்மான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு
ஹழ்ரத் அலி இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு
ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு
ஹழ்ரத் ஸஅது இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு
ஹழ்ரத் ஸுபைர் இப்னுல் அவ்வாம் ரலியல்லாஹு அன்ஹு
ஹழ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "நானே இந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்; ஆனால் உங்களுள் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என்று அறிவித்தார்கள். இது ஒரு நடுநிலையான 'தேர்தல் ஆணையர்' போன்ற பொறுப்பாக அமைந்தது.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூன்று பகல், மூன்று இரவுகள் மக்களிடம் தீவிரமாக ஆய்வு நடத்தினார்கள்:
அவர் மதீனாவின் தெருக்களுக்குச் சென்று சாதாரண மக்கள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரிடமும் தனித்தனியாகச் சென்று கருத்து கேட்டார்கள்.
மூன்று நாள் கலந்தாலோசனை மற்றும் மக்கள் கருத்தறியும் பணிகளை முடித்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நான்காவது நாள் சுபுஹ் தொழுகைக்குப் பின் மஸ்ஜிதுந் நபவியில் மக்களைத் திரட்டினார்கள்.
அவர்கள் முதலில் ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, "அல்லாஹ்வின் தூதரின் வழியிலும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரின் வழியிலும் நீங்கள் ஆட்சி செய்வீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "எனது அறிவிற்கும் சக்திக்கும் உட்பட்டு அவ்வாறு செய்வேன்" என்று பதிலளித்தார்கள்.
அடுத்து ஹழ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து அதே கேள்வியைக் கேட்டபோது, அவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி "நிச்சயமாகச் செய்வேன்" என்று பதிலளித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்து முதல் பைஅத்தைச் செய்தார்கள்:
"اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ إِنِّي قَدْ جَعَلْتُ مَا فِي رَقَبَتِي مِنْ ذَلِكَ فِي رَقَبَةِ عُثْمَانَ."
"யா அல்லாஹ்! நீயே சாட்சி, யா அல்லாஹ்! நீயே சாட்சி, யா அல்லாஹ்! நீயே சாட்சி. என் கழுத்தில் இருந்த இந்தப் பொறுப்பை (தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சுமையை) இதோ உஸ்மானின் ரலியல்லாஹு அன்ஹு கழுத்தில் நான் சுமத்திவிட்டேன்."
இதைத் தொடர்ந்து, அங்கிருந்த முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் என அனைவரும் வரிசையாக வந்து உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத் செய்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்:
முதலில் பைஅத் செய்தவர்களில் ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். இது சமுதாயத்தின் ஒற்றுமைக்குச் சான்றாக அமைந்தது.
தகுதியான ஆட்சியாளரை மக்கள் ஒருமனதாகச் சாட்சியம் கூறி தேர்ந்தெடுத்ததால், மதீனாவில் ஒரு மாபெரும் அமைதி நிலவியது.
பொய் சாட்சி குறித்த நபிகளாரின் எச்சரிக்கை
வாக்களிப்பது ஒரு சாட்சியம் என்பதால், தகுதியற்றவர்களுக்குச் சாட்சி சொல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது:
أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ ثَلَاثًا، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَعِقُوقُ الْوَالِدَيْنِ، وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ: أَلَا وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ، فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தோழர்களை நோக்கி): "பெரும் பாவங்களிலேயே மிகப்பெரியவற்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று மூன்று முறை கேட்டார்கள்.
தோழர்கள்: "ஆம், அல்லாஹ்வின் தூதரே! (நிச்சயமாகச் சொல்லுங்கள்)" என்றனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் (ஷிர்க்).
பெற்றோரைத் துன்புறுத்துதல் (அவர்களுக்கு மாறு செய்தல்).
(இதைச் சொல்லும்போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். பிறகு (நேராக) எழுந்து உட்கார்ந்து கொண்டு: "எச்சரிக்கை! பொய் பேசுவதும், பொய் சாட்சி கூறுவதும் தான் அது (மிகப்பெரிய பாவம்)!" என்று கூறினார்கள். அவர்கள் (வருத்தத்துடன்) இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். (அவர்கள் சிரமப்படுவதைக் கண்ட) நாங்கள், "அவர்கள் நிறுத்தக் கூடாதா (அமைதியாகிவிடக் கூடாதா)?" என்று சொல்லும் அளவுக்கு அதனை வலியுறுத்தினார்கள். நூல்: புகாரி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்திருந்த நிலையை விட்டுவிட்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து இதைக் கூறுவது, இந்தப் பாவத்தின் தீவிரத்தன்மையைக் காட்டுகிறது.
மற்ற இரண்டு பாவங்களை ஒருமுறை மட்டும் குறிப்பிட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'பொய் சாட்சி' (ஷஹாததுஸ் ஸூர்) என்பதை மட்டும் திரும்பத் திரும்பக் கூறினார்கள். மக்கள் சாட்சி கூறுவதை (வாக்களிப்பதை) மிகச் சாதாரணமாகக் கருதிவிடக்கூடாது என்பதே இதன் நோக்கம்.
'ஷிர்க்' என்பது தனிமனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான பாவம். ஆனால், பொய் சாட்சி என்பது ஒரு நாட்டின் நீதியைச் சீர்குலைத்து, தகுதியற்றவர்களை அதிகாரத்தில் அமர்த்தி, முழுச் சமுதாயத்தையும் அழித்துவிடும்.
ஒரு வேட்பாளர் தகுதியற்றவர் என்று தெரிந்தும், அவருக்குச் சாதகமாகச் சாட்சி சொல்வது (வாக்களிப்பது) இந்த ஹதீஸில் எச்சரிக்கப்பட்டுள்ள 'ஷஹாததுஸ் ஸூர்' என்ற குற்றத்திற்குள் வரும் என மார்க்க அறிஞர்கள் விளக்குகிறார்கள்.
அநீதிக்கு நான் சாட்சியாக இருக்க மாட்டேன்
நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தனது மகனுக்கு (நுஃமானுக்கு) மட்டும் ஒரு குறிப்பிட்ட சொத்தை (அல்லது ஒரு அடிமையை) அன்பளிப்பாக வழங்கினார்கள்.
நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் அம்ரா பின்த் ரவாஹா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இதற்குச் சாட்சியாக ஆக்கினால் ஒழிய நான் இதனை ஒப்புக்கொள்ள மாட்டேன்" என்று நிபந்தனை விதித்தார்கள்.
பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறி, சாட்சியாக இருக்குமாறு வேண்டினார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்: "உமது மற்ற பிள்ளைகளுக்கும் இதுபோலவே கொடுத்திருக்கிறீரா?"
பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள்.
இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தச் சொத்தை வழங்கச் சாட்சியாக இருக்க மறுத்துவிட்டார்கள்.
அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளுக்கிடையே நீதியாக நடந்து கொள்ளுங்கள். அநீதியான ஒரு காரியத்திற்கு என்னைச் சாட்சியாக்காதீர்கள்". (நூல்: முஸ்லிம்).
இந்தச் சம்பவத்திலிருந்து மார்க்க அறிஞர்கள் பின்வரும் சட்டங்களை விளக்குகிறார்கள் :- தாய் மற்றும் தந்தை தனது பிள்ளைகளுக்கு வாழ்நாளில் ஏதேனும் சொத்தையோ, அன்பளிப்பையோ வழங்க விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். ஒருவருக்கு அதிகமாகவும், மற்றவருக்குக் குறைவாகவும் அல்லது ஒருவருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவரைப் புறக்கணிப்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தச் சொத்து வழங்கப்படுவதைச் 'ழுல்ம்' (அநீதி) என்று குறிப்பிட்டார்கள். "அநீதிக்கு நான் சாட்சியாக இருக்க மாட்டேன்" என்று கூறியதன் மூலம், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பதை அறியலாம்.
ஒரு வேட்பாளர் தகுதியற்றவர் என்று தெரிந்தும் அவருக்கு வாக்களிப்பது அநீதிக்கு சாட்சியாக இருப்பது போல எனவே இது கூடாது.
தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதில் ஸஹாபாக்களின் கண்டிப்பு
சிறுபான்மையினராக இருந்தாலும், சமூகத்தின் பிரதிநிதித்துவம் என்பது ஒரு அமானிதம் என்பதில் ஸஹாபாக்கள் உறுதியாக இருந்தனர்.
ஒருமுறை ஒரு அதிகாரி நியமிக்கப்படும்போது, அவரிடம் அந்த வேலைக்குரிய 'வலிமை' (திறமை) மற்றும் 'நாணயம்' இருக்கிறதா என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தீவிரமாக ஆராய்வார்கள்.
"யார் ஒருவரைத் தகுதியானவர் இருக்கும்போது, வெறும் நட்பு அல்லது உறவுக்காக மற்றவரைத் தேர்ந்தெடுக்கிறாரோ, அவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் துரோகம் செய்துவிட்டார்" என்பது ஸஹாபாக்கள் பின்பற்றிய சட்டமாகும்.
வரலாற்றில் எப்போதெல்லாம் தகுதியற்றவர்களுக்குச் சாட்சி கூறி (வாக்களித்து) மக்கள் பதவியில் அமர்த்தினார்களோ, அப்போதெல்லாம் அந்தச் சமூகம் அழிவைச் சந்தித்திருக்கிறது என்று அறிஞர்கள் விளக்குகிறார்கள்.
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْيَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً وَكَذٰلِكَ يَفْعَلُوْنَ
(பல்கீஸ் அம்மா ) அவர்கள் கூறினார்கள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள். (அல்குர்ஆன் : 27:34)
அத்தகைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் சாட்சி கூறுபவர்கள் (வாக்காளர்கள்) மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.
'வாக்கு' என்பது ஒரு தனிமனிதனின் விருப்பம் மட்டுமல்ல; அது சமுதாயத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு “உண்மைச் சாட்சியம்” தகுதியானவர்களுக்குச் சாட்சி சொல்வதன் மூலம் நீதியான ஆட்சியை நிலைநாட்ட முடியும்.
2.வாக்கு என்பது ஒரு ஷபாஅத் (சிபாரிசு செய்தல்)
இஸ்லாமியச் சட்டவியலில், ஒருவருக்கு வாக்களிப்பது என்பது அவரை அந்தப் பதவிக்கு நீங்கள் 'சிபாரிசு' (Recommendation) செய்வதற்குச் சமம். நீங்கள் அளிக்கும் அந்தச் சிபாரிசு ஒரு மாபெரும் நன்மையாகவோ அல்லது தீமையாகவோ மாற வாய்ப்புள்ளது.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:-
مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا
"யார் ஒரு நல்ல காரியத்திற்காகப் (அழகிய முறையில்) பரிந்துரை செய்கிறாரோ, அவருக்கு அந்த நன்மையிலிருந்து ஒரு பங்கு உண்டு. அவ்வாறே, யார் ஒரு தீய காரியத்திற்காகப் பரிந்துரை செய்கிறாரோ, அவருக்கும் அந்தத் தீமையிலிருந்து ஒரு பங்கு உண்டு". (அல்குர்ஆன் 4:85)
நன்மையில் பங்கு (Good Intercession)
நீங்கள் ஒரு வேட்பாளரின் தகுதியை ஆராய்ந்து, அவர் நீதமானவர், நேர்மையானவர் என்று கருதி அவருக்கு வாக்களித்தால் (சிபாரிசு செய்தால்)
அவர் பதவியில் இருக்கும் காலத்தில் செய்யும் அனைத்து நற்செயல்களிலும் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்.
அவர் கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், ஏழைகளுக்கான உதவிகள் மற்றும் நீதியான சட்டங்கள் ஆகியவற்றால் கிடைக்கும் நன்மைகளில் நீங்கள் நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும், உங்கள் சிபாரிசின் (வாக்கின்) மூலம் அந்த நன்மைகள் உங்களை வந்தடையும்.
தீமையில் பங்கு (Evil Intercession)
மாறாக, ஒரு வேட்பாளர் தகுதியற்றவர், அநியாயக்காரர் அல்லது ஊழல்வாதி என்று தெரிந்தும் அவருக்கு வாக்களித்தால்..
அவர் பதவியைப் பயன்படுத்திச் செய்யும் அநியாயங்கள், லஞ்ச ஊழல்கள் மற்றும் சமுதாயத்திற்கு எதிரான சட்டங்கள் ஆகியவற்றால் ஏற்படும் பாவங்களில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு.
நீங்கள் அந்தத் தவறை நேரடியாகச் செய்யாவிட்டாலும், அவர் அந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு நீங்கள் செய்த 'தவறான சிபாரிசு' (வாக்கு) உங்களைக் குற்றவாளியாக்கும்.
தேர்தல் களத்தில் மக்கள் பெரும்பாலும் கட்சி அல்லது தனிப்பட்ட லாபங்களுக்காகவே சிபாரிசு செய்கிறார்கள். ஆனால், ஒரு முஸ்லிம் தனது வாக்கைச் சிபாரிசாகக் கருதும்போது சிபாரிசு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் செய்யப்பட வேண்டும். வாக்கை விற்றுப் பணம் வாங்குவது என்பது சிபாரிசின் புனித்தையே கெடுத்துவிடும்.
ஒரு தனிமனிதனின் சிபாரிசு (வாக்கு) ஒட்டுமொத்த சமுதாயத்தின் விதியைத் தீர்மானிக்கிறது. எனவே, அந்தச் சிபாரிசு இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட 'ஷபாஅத்தே ஹஸனா' (அழகிய பரிந்துரை) ஆக இருக்க வேண்டும்.
மறுமையில் நன்மைகளைப் பெற்றுத் தரும் 'அழகிய சிபாரிசாக' உங்கள் வாக்கு அமைய வேண்டும்.
அபூ மூஸாஅல்அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلَانِ مِنْ بَنِي عَمِّي، فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ: يَا رَسُولَ اللَّهِ، أَمِّرْنَا عَلَى بَعْضِ مَا وَلَّاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَقَالَ الْآخَرُ مِثْلَ ذَلِكَ، فَقَالَ: "إِنَّا وَاللَّهِ لَا نُوَلِّي عَلَى هَذَا الْعَمَلِ أَحَدًا سَأَلَهُ، وَلَا أَحَدًا حَرَصَ عَلَيْهِ."
அபூ மூஸா அல்-அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது உறவினர்கள் இருவருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். அந்த இரு நபர்களும் தங்களுக்கு ஏதேனும் ஒரு பகுதியில் ஆட்சி அதிகாரம் அல்லது நிர்வாகப் பொறுப்பை வழங்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தனர்.
அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை: அவர்கள் இருவரும் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பார்கள் என்பதை அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அதற்காக தான் வருகிறார்கள் என்பதை முன்னரே அறிந்திருந்தால், அவர்களைத் தன்னுடன் அழைத்து வந்திருக்க மாட்டேன் என்று அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு பின்னர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்கள்.
அவர்களின் கோரிக்கையைச் செவிமடுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்தப் பொறுப்பை (அதிகாரத்தை) யார் கேட்கிறாரோ அவருக்கும், அதன் மீது அதிக ஆசை வைக்கிறாரோ அவருக்கும் நாம் இதனை வழங்குவதில்லை".
அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த இருவரையும் தன்னுடன் அழைத்து வந்ததே ஒரு வகையான பரிந்துரைதான். ஆனால், அவர்கள் தகுதியற்ற முறையில் அதிகாரத்தைக் கேட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை நிராகரித்ததோடு, அத்தகையவர்களுக்குப் பரிந்துரைப்பதையும் மறைமுகமாகத் தடுத்தார்கள்.
அதிகாரத்தின் மீது அதிக ஆசை கொண்டவர்களுக்குப் பரிந்துரைப்பது (வாக்களிப்பது) சமுதாயத்திற்குத் தீங்கையே விளைவிக்கும்.
தகுதியுள்ளவர்கள் தாமாக முன்வந்து பதவி கேட்பதில்லை; அவர்களைச் சமுதாயமே அடையாளம் கண்டு சாட்சி கூறி (வாக்களித்து) அமர்த்த வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.
ஹழ்ரத் அபூதர் அல்-கிஃபாரி (ரலி) அவர்களின் கோரிக்கையும் நபிகளாரின் பதிலும்
ஹழ்ரத் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரின் மிக நெருக்கமான மற்றும் உண்மையான தோழர்களில் ஒருவர். அவர் ஒருமுறை தனக்கு ஏதேனும் ஒரு நிர்வாகப் பொறுப்பை (அதிகாரத்தை) வழங்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களிடம் கோரினார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோளைத் தட்டிப் பின்வருமாறு கூறினார்கள்:
"அபூதரே! நிச்சயமாக நீர் பலவீனமானவர் (நிர்வாக விஷயத்தில் மென்மையானவர்). இந்த அதிகாரம் என்பது ஒரு அமானிதம் (பொறுப்பு). தகுதியற்ற முறையில் அதனை ஏற்பவர்களுக்கு அது மறுமை நாளில் இழிவையும் வருத்தத்தையும் தரும்."
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த இறையச்சம் கொண்டவர், ஆனால் நிர்வாகத்தில் அவர் 'பலவீனமானவர்' என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அறிந்திருந்தார்கள்.
ஒரு நல்ல மனிதர் என்பதற்காக மட்டும் ஒருவரை அதிகாரத்திற்குப் பரிந்துரைப்பது (வாக்களிப்பது) 'ஷபாஅத்தே ஹஸனா' (நல்ல சிபாரிசு) ஆகாது. அந்தப் பணிக்குத் தேவையான நிர்வாகத் திறன் அவரிடம் இருக்கிறதா என்று பார்த்துச் சிபாரிசு செய்வதே முறையாகும்.
3.வாக்கு என்பது ஒரு 'வகாலத்' (பிரதிநிதித்துவம்)
இஸ்லாமியச் சட்டவியலில் (Fiqh), ஒரு காரியத்தை ஒருவரால் நேரடியாகச் செய்ய முடியாதபோது, அதைச் செய்து முடிக்கத் தகுதியான ஒருவரைத் தனது 'வக்கீலாக' (Agent/Proxy) நியமிக்கலாம். தேர்தல் முறையில், ஒவ்வொரு குடிமகனும் நேரடியாகச் சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ சென்று சட்டம் இயற்ற முடியாது. எனவே, தனது சார்பாக அந்தப் பணியைச் செய்ய ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்.
குடும்பப் பொறுப்பும் நாட்டின் பொறுப்பும்
ஒரு தந்தை தனது மகளுக்குத் திருமணம் செய்ய வரன் தேடும்போது, அந்தப் பையனின் குணம், ஒழுக்கம், சம்பாத்தியம் மற்றும் குடும்பப் பின்னணியை எவ்வளவு ஆழமாகத் தீர விசாரிப்பார்? ஏனெனில், அது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்.
ஒரு மகளின் வாழ்க்கையை விட, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் என்பது மிக முக்கியமானது. எனவே, நாட்டின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தந்தை காட்டும் கவனத்தை விட பல மடங்கு அதிகக் கவனத்தை ஒரு வாக்காளர் காட்ட வேண்டும்.
வக்கீல்' (பிரதிநிதி)செய்யும் தவறுகளுக்கு யார் பொறுப்பு?
வகாலத் சட்டத்தின்படி, நீங்கள் நியமிக்கும் வக்கீல் (பிரதிநிதி) செய்யும் செயல்களுக்கு நீங்கள் 'தார்மீகப் பொறுப்பேற்க' வேண்டும்.
நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் உங்கள் சார்பாக அநீதியான சட்டங்களை ஆதரித்தாலோ அல்லது ஊழல் செய்தாலோ, அந்தத் தவறுக்கு அவரைத் தேர்ந்தெடுத்த உங்களுக்கும் பங்கு உண்டு.
"நான் அவரைத் தேர்ந்தெடுத்தேன், அவர் தவறு செய்தால் எனக்கு என்ன?" என்று ஒரு முஸ்லிம் ஒதுங்கிவிட முடியாது. ஏனெனில், அவர் அந்த அதிகாரத்தைப் பெற்றது உங்கள் 'வகாலத்' (ஒப்பந்தம்) மூலமே ஆகும்.
'வகாலத்'திற்குத் தேவையான தகுதிகள்?
ஒருவரை உங்கள் பிரதிநிதியாக நியமிக்க வேண்டுமெனில் அவரிடம் இரண்டு பண்புகள் இருக்க வேண்டும் என குர்ஆன் கூறுகிறது:
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பணியில் அமர்த்துவதற்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகள்கள் கூறிய செய்தியை அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்கிறான்.
قَالَتْ اِحْدٰٮہُمَا يٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ اِنَّ خَيْرَ مَنِ اسْتَـاْجَرْتَ الْقَوِىُّ الْاَمِيْنُ
அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”(அல்குர்ஆன் : 28:26)
அல்-கவிய்யு (القوي): அந்தப் பணியைச் செய்யத் தேவையான திறமையும் ஆற்றலும் கொண்டவர்.
அல்-அமீன் (الأمين): நேர்மையானவர் மற்றும் அமானிதங்களைப் பேணக்கூடியவர்.
அல்-கவிய்யு (القوي - ஆற்றல் மிக்கவர்)
'கவிய்யு' என்றால் வெறும் உடல் வலிமை மட்டுமல்ல, தான் ஏற்கும் அந்தப் பொறுப்பைச் செவ்வனே செய்து முடிக்கத் தேவையான நிர்வாகத் திறமை மற்றும் ஆளுமை என்று பொருள்.
தான் இருக்கும் பதவியின் சட்டதிட்டங்கள், நாட்டு நடப்பு மற்றும் மக்களின் தேவைகள் குறித்த ஆழமான அறிவு இருக்க வேண்டும்.
நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவெடுக்கும் துணிச்சலும், எதற்கும் அஞ்சாமல் நீதியை நிலைநாட்டும் மன வலிமையும் இருக்க வேண்டும்.
ஒரு திட்டத்தைத் தீட்டி அதனைச் சரியாகச் செயல்படுத்தும் நிர்வாக நுணுக்கம் தெரிந்திருக்க வேண்டும்.
ஒருவர் நல்லவராக (நேர்மையாளராக) மட்டும் இருந்தால் போதாது; அவர் அந்தப் பதவிக்குத் தேவையான அறிவும் திறமையும் கொண்டவராக இருக்க வேண்டும். திறமையற்ற நல்லவரிடம் அதிகாரம் சென்றால், நிர்வாகம் சீர்குலைந்துவிடும்.
அல்-அமீன் (الأمين - நேர்மையானவர்)
'அமீன்' என்பது ஒருவரின் ஒழுக்கம், நாணயம் மற்றும் இறை அச்சத்தைக் குறிக்கிறது.
பொதுச்சொத்தை (வரிப்பணம்) தனது சொந்தச் சொத்து போலப் பாதுகாக்க வேண்டும். ஒரு ரூபாய் கூட முறையற்ற வழியில் செலவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பணத்திற்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டுத் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளாத நேர்மை அவரிடம் இருக்க வேண்டும்.
பதவியை ஒரு கௌரவமாகப் பார்க்காமல், அது இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய ஒரு பாரமான பொறுப்பு (அமானிதம்) என்று அஞ்ச வேண்டும்.
எவ்வளவு பெரிய திறமைசாலியாக (கவிய்யு) இருந்தாலும், அவரிடம் நேர்மை (அமானத்) இல்லை என்றால், அவர் தனது திறமையைப் பயன்படுத்திச் சமுதாயத்தைச் சுரண்டத் தொடங்குவார். எனவே நேர்மை மிக அவசியம்.
ஆற்றல் (Strength) இருந்து, நேர்மை (Trustworthiness) இல்லை என்றால் அவர் 'அக்கிரமக்காரராக' மாறிவிடுவார்.
நேர்மை (Trustworthiness) இருந்து, ஆற்றல் (Strength) இல்லை என்றால் அவர் 'பலவீனமானவராக' ஆகிவிடுவார்; அவரால் நன்மைகளைச் செயல்படுத்த முடியாது.
எனவே, இந்த இரண்டும் ஒருவரிடம் இணையும்போதுதான் அந்த ஆட்சி ஒரு 'நல்லாட்சியாக' அமையும்.
வாக்களிப்பது என்பது உங்களின் அதிகாரத்தை மற்றொருவரிடம் ஒப்படைப்பதாகும்.
உங்களின் சிறிய உலகியல் லாபத்திற்காகத் தகுதியற்றவரை உங்கள் பிரதிநிதியாக (வக்கீலாக) நியமிக்கக் கூடாது.
வேட்பாளரின் கொள்கை மற்றும் செயல்பாடு உங்கள் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிராக இருந்தால், அவருக்கு 'வகாலத்' (பிரதிநிதித்துவம்) வழங்குவது மார்க்க ரீதியாகத் தடுக்கப்பட்டதாகும்.
உங்கள் மகளுக்குத் தவறான வரனைத் தேர்ந்தெடுத்தால் ஒரு குடும்பம் அழியும்; ஆனால் நாட்டுக்குத் தவறான பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தால் ஒரு சமுதாயமே அழியும். எனவே, உங்கள் 'வக்கீலை' (வேட்பாளரை) மிக எச்சரிக்கையுடன் தேர்ந்தெடுங்கள்.
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆளுநர்
ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில், இஸ்லாமியப் பேரரசு பாரசீகம் முதல் எகிப்து வரை விரிவடைந்திருந்தது. நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களை (Governors) நியமிப்பது வழக்கம். அந்த அடிப்படையில், ஒரு முக்கியமான மாகாணத்திற்கு ஆளுநரை நியமிக்க உமர் (ரலி) அவர்கள் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த நபர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் அல்லது உயைனா இப்னு ஹிஸ்ன் என்று அடையாளம் காணப்படுகிறார்கள்.
ஆளுநராக நியமிக்கப்பட இருந்த அந்த நபர், முறைப்படியான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது சிறிய குழந்தையை மடியில் வைத்து மிக வாஞ்சையோடு கொஞ்சி, முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதைக் கண்ட அந்த நபர் முகம் சுளித்தார். "அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? எனக்குப் பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் ஒருவரைக்கூட இதுவரை முத்தமிட்டதில்லை" என்று பெருமையாகக் கூறினார்.
இதைக் கேட்டவுடன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம் மாறியது. "அல்லாஹ் உமது உள்ளத்திலிருந்து இரக்கத்தை அப்புறப்படுத்திவிட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்.
உடனடியாகத் தயாராக இருந்த அந்த நியமனக் கடிதத்தை (அரசாணையை) உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்பப் பெற்றார்கள். அந்த நபரை நோக்கிப் பின்வருமாறு கூறினார்கள்
"உமது சொந்தக் குழந்தைகள் மீதே உமக்கு இரக்கம் இல்லை என்றால், உமது பொறுப்பில் விடப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நீர் எப்படி இரக்கம் காட்டுவீர்? ஒருபோதும் உமக்கு இந்தப் பதவி கிடையாது. நீர் திரும்பிச் செல்லலாம்.”
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த நபரை ஆளுநராக (வக்கீலாக) நியமித்திருந்தால், அந்த ஆளுநர் அங்கு செய்யும் ஒவ்வொரு அநீதிக்கும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்.
ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும்போது அவருடைய திறமையை மட்டும் பார்க்கக்கூடாது; அவர் மக்களிடம் மென்மையாக நடப்பாரா என்பதையும் பார்க்க வேண்டும்.
ஒரு தந்தை தன் மகளுக்கு வரன் தேடும்போது, அந்தப் பையனிடம் பணம் இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பதை விட, அவன் நல்ல குணம் உடையவனா என்றும் பார்ப்பார். அதேபோல், ஒரு வாக்காளராகிய நீங்கள், உங்களின் பிரதிநிதி (வக்கீல்) இதயத்தில் இரக்கம் உள்ளவரா என்றும் பார்க்க வேண்டும்.
4.வாக்கு என்பது ஒரு'அமானிதம்' (Trust)
ஒரு வாக்காளரின் கையில் இருக்கும் வாக்கு என்பது தனிப்பட்ட சொத்து அல்ல, அது சமுதாயம் அவரிடம் ஒப்படைத்துள்ள ஒரு புனிதமான பொறுப்பு.
அமானிதம் (Trust) - பொறுப்பை ஒப்படைத்தல்
இஸ்லாமியப் பார்வையில், அதிகாரம் (Power) மற்றும் பதவி (Position) என்பது ஒருவருக்குக் கிடைக்கும் கௌரவம் அல்ல; அது அவர் சுமக்க வேண்டிய ஒரு பாரமான பொறுப்பு. அந்தப் பொறுப்பை யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உங்களிடம் (வாக்காளரிடம்) அமானிதமாக வழங்கப்பட்டுள்ளது.
குர்ஆனின் கட்டளை இந்த நிலைக்கு அடிப்படையாகத் திருக்குர்ஆனின் ஸூரா அந்-நிஸா (4:58) வசனம் அமைகிறது:
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
"நிச்சயமாக அல்லாஹ் அமானிதங்களை அதற்குரியவர்களிடம் (தகுதியானவர்களிடம்) ஒப்படைக்குமாறு உங்களுக்குக் கட்டளையிடுகிறான்."
இந்த வசனத்தின் படி, ஒரு பதவியை அல்லது பொறுப்பைத் தகுதியற்றவரிடம் ஒப்படைப்பது இறைக்கட்டளையை மீறுவதற்குச் சமமாகும்.
அமானிதத்தை வீணடித்தல் (Betrayal of Trust)
ஒரு வாக்காளர் தனது வாக்கைச் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனில், அவர் அமானிதத்திற்குத் துரோகம் செய்தவராகக் கருதப்படுவார்.
சொந்த லாபத்திற்காகவோ, பணத்தைப் பெற்றுக்கொண்டோ வாக்களிப்பது அமானிதத்தைச் சீரழிக்கும் செயலாகும்.
தகுதியான வேட்பாளர் இருக்கும்போது, வெறும் ஜாதி அல்லது மொழி அடிப்படையில் தகுதியற்றவரைத் தேர்ந்தெடுப்பது அமானிதத் துரோகம் (கியானத்) ஆகும்.
"அமானிதம்" என்பது இருவகைப்படும்:
1.அவர் பதவியைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
2. அவர்கள் தகுதியானவரை மட்டுமே அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாக்காளர் அமானிதத்தைச் சரியாக நிறைவேற்றவில்லை எனில், ஆட்சியாளர் அநீதி இழைக்க அதுவே காரணமாகிறது. எனவே, அநீதியான ஆட்சியின் பாவத்தில் வாக்காளருக்கும் பங்குண்டு.
فَقَالَ: مَتَى السَّاعَةُ؟
ஒருமுறை ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "மறுமை எப்போது வரும்?" என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
قَالَ: إِذَا ضُيِّعَتِ الْأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ
"அமானிதம் வீணடிக்கப்படும்போது மறுமையை எதிர்பாருங்கள்"என்று கூறினார்கள்.
قَالَ: كَيْفَ إِضَاعَتُهَا؟
அந்த மனிதர், "அமானிதம் எப்படி வீணடிக்கப்படும்?" என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்:
قَالَ: إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ
"எப்போது ஒரு பொறுப்பு (அதிகாரம்) தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதோ, அப்போது மறுமையை எதிர்பாருங்கள்." (நூல்:புகாரி)
தேர்தல் களத்தில் தகுதியற்றவர்களை நாம் அதிகாரத்தில் அமர்த்துவது, உலக அழிவிற்கான (மறுமைக்கான) ஒரு அடையாளமாக அமையலாம் என இந்த ஹதீஸ் எச்சரிக்கிறது.
உங்கள் 'வாக்கு' என்பது உங்களிடம் கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைச் சரியான கைகளில் ஒப்படைப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. தகுதியற்றவர்களிடம் அதனை ஒப்படைப்பது சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் நீங்கள் செய்யும் துரோகமாகும். எனவே, "இந்த அமானிதத்தைச் சுமக்க இவர் தகுதியானவரா?" என்று ஆயிரம் முறை சிந்தித்து வாக்களியுங்கள்.
மக்கா வெற்றியும் கஃபா சாவியும்
மக்காவிலுள்ள புனிதக் கஃபாவைப் பராமரிக்கும் பொறுப்பும், அதன் சாவியை வைத்திருக்கும் உரிமையும் ஜாஹிலிய்யா காலம் முதலே பனூ அப்தித் தார் என்ற குடும்பத்திடம் இருந்து வந்தது. மக்கா வெற்றியின் போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உஸ்மான் இப்னு தல்ஹா என்பவரிடம் அந்தச் சாவி இருந்தது.
ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது, கஃபாவிற்குள் நுழைந்து சிலைகளை அகற்ற விரும்பினார்கள்.
உஸ்மான் இப்னு தல்ஹா பயத்தினால் கஃபாவின் கூரை மேல் ஏறிக்கொண்டார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவின் பேரில், ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடமிருந்து சாவியைப் பெற்றார்கள்.
சாவியைப் பெற்ற பிறகு, ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள்: "யா ரஸூலல்லாஹ்! ஹாஷிம் குடும்பத்தாராகிய எங்களிடமே ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டும் (ஸிகாயத்) பொறுப்பு ஏற்கனவே உள்ளது.
இப்போது கஃபாவைப் பராமரிக்கும் இந்தப் பொறுப்பையும் (ஹிஜாபத்) எங்களிடமே வழங்கி விடுங்கள். இரண்டு கௌரவங்களும் எங்களுக்கே கிடைக்கட்டும்."
அன்பிற்குரிய அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்தக் கோரிக்கையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனமாகச் செவிமடுத்தார்கள்.
அப்போதுதான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் அந்தப் புகழ்பெற்ற வசனம் இறங்கியது:
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
"நிச்சயமாக அல்லாஹ் அமானிதங்களை அதற்குரியவர்களிடம் (தகுதியானவர்களிடம்) ஒப்படைக்குமாறு உங்களுக்குக் கட்டளையிடுகிறான்..." (ஸூரா அந்-நிஸா: 58).
இந்த வசனம் இறங்கியவுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உஸ்மான் இப்னு தல்ஹா எங்கே?" என்று தேடி வரச் சொன்னார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸ்மான் இப்னு தல்ஹாவை அழைத்து, மிக மென்மையாக அந்தச் சாவியை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
"உஸ்மானே! இதோ உமது சாவி. இன்று நன்மையும், வாக்குறுதியைப் பேணுதலும் நிறைந்த நாளாகும். இதனை நீரே வைத்துக்கொள்ளும். அநியாயக்காரர்களைத் தவிர வேறு யாரும் உங்களிடமிருந்து இதனைப் பறிக்க முடியாது."
இந்த உயரிய நீதியைக் கண்ட உஸ்மான் இப்னு தல்ஹா அவர்கள், உடனே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
ஒரு பொறுப்பு அல்லது அதிகாரம் என்பது சொந்த பந்தங்களுக்கோ அல்லது வேண்டியவர்களுக்கோ கொடுக்கப்பட வேண்டிய வெகுமதி அல்ல. அது யாருக்குத் தகுதியோ அவருக்கே வழங்கப்பட வேண்டும்.
தேர்தல் காலத்தில் நாம் அளிக்கும் வாக்கு என்பது அந்த 'அதிகாரச் சாவி' போன்றது. நெருங்கிய உறவினராக இருந்தாலும், தகுதியைத் தாண்டி வழங்கக்கூடாது என்பதே இதிலுள்ள பாடம்.
சமுதாயத்தின் அமானிதங்களை (பதவிகளை) முறையற்றவர்களுக்கு வழங்குவது இறைக்கட்டளையை மீறுவதாகும்.
மறுமை நாள் வரை கஃபாவின் சாவி உஸ்மான் இப்னு தல்ஹாவின் வாரிசுகளிடமே இருக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றே உறுதி அளித்தார்கள். அந்த அமானிதம் இன்றும் பேணப்படுகிறது. இதேபோல், நமது வாக்குகளையும் சரியானவர்களிடம் ஒப்படைப்பதே உண்மையான மார்க்கப் பற்றாகும்.
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
'ஐந்தாவது கலீஃபா' இரண்டாம் உமர் ரலி என்று போற்றப்படும் இறைநேசர் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்வில் நடந்த மிகப்பிரபலமான நிகழ்வு….
ஒருமுறை அவர் இரவு நேரத்தில் அரசு அலுவலகத்தில் அமர்ந்து மக்களின் குறைகளை ஒரு விளக்கின் ஒளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். வந்தவர் தனது குடும்பத்தைப் பற்றியும், நண்பர்களிடம் நலம் விசாரிக்கவும் தொடங்கினார். உடனே உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்த விளக்கை அணைத்துவிட்டு, வேறொரு விளக்கை ஏற்றினார்கள்.
நண்பர் ஆச்சரியப்பட்டு இதற்கென்ன காரணம் எனக் கேட்டார்கள். அவர்கள் சொன்னார்கள்: "முதலில் எரிந்த விளக்கு மக்களுடைய அமானிதப் பணத்தில் (அரசுப் பணத்தில்) வாங்கியது. அப்போது நான் மக்கள் நலப் பணியைச் செய்தேன். இப்போது நீ உனது சொந்த விஷயங்களைப் பேசுகிறாய். மக்கள் பணத்தில் வாங்கிய விளக்கில் எனது சொந்தப் பேச்சை நான் நடத்தக் கூடாது."
இத்தகைய நுணுக்கமான அமானிதப் பேணுதலே ஒரு நல்லாட்சிக்கு அடிப்படை. அத்தகைய தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதே வாக்காளரின் கடமை.
இமாம் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி (ரஹ்)
சுஃப்யான் அஸ்-ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பஸரா நகரில் தங்கியிருந்தபோது, ஒரு நபர் அவரிடம் ஒரு குறிப்பிட்டத் தொகையை (தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள்) ஒப்படைத்தார். "இமாம் அவர்களே! இது என்னிடம் உள்ள அமானிதம், இதனை உங்களிடம் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறேன்" என்று கூறிச் சென்றார். இமாம் அவர்களும் அதனைப் பெற்றுத் தனது வீட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தார்கள்.
சில காலத்திற்குப் பிறகு, அந்தப் பணத்தை ஒப்படைத்த நபர் ஒரு பயணத்தின் போது அல்லது வேறு ஊரில் இறந்துவிட்ட செய்தி இமாம் அவர்களுக்குக் கிடைத்தது. இதைக் கேட்டவுடன் இமாம் அவர்கள் அடைந்த கவலைக்கு எல்லையே இல்லை.
ஒரு சாதாரண மனிதர் அந்தப் பணம் தனக்குக் கிடைத்தது என மகிழ்ந்திருப்பார். ஆனால், இறைநேசரான சுஃப்யான் அஸ்-ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், "இப்போது இந்தப் பணம் அந்த மனிதருடையது அல்ல; அது அவருடைய வாரிசுகளுக்குச் சொந்தமான அமானிதம். இதனை அவர்களிடம் ஒப்படைக்கும் வரை என் தலைக்கு மேல் ஒரு பெரிய மலை தொங்கிக் கொண்டிருப்பது போன்ற பாரத்தை நான் உணர்கிறேன்" என்று கூறி வருந்தினார்கள்.
அந்த நபரின் வாரிசுகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது இமாம் அவர்களுக்குத் தெரியாது. அவர் தனது பணிகளையும், கல்வியையும் தள்ளிவைத்துவிட்டு, அந்த நபரின் ஊர் மற்றும் உறவினர்களைத் தேடிப் புறப்பட்டார்கள். பல மாதங்கள் பல ஊர்களுக்குப் பயணம் செய்து, விசாரணைகளை மேற்கொண்டார்கள். இறுதியில், அந்த நபரின் வாரிசுகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தனர்.
அவர்களிடம் அந்தப் பணத்தை ஒரு காசு கூட குறையாமல் ஒப்படைத்த பிறகுதான் இமாம் அவர்களின் முகம் மலர்ந்தது. அப்போது அவர்கள் கூறிய அந்த வார்த்தை:
"அல்லாஹ்வின் அமானிதத்தைச் சுமப்பது என்பது வானங்களையும் பூமியையும் விடப் பாரமானது. அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரை ஒரு முஃமினுக்கு நிம்மதியான தூக்கம் வரக்கூடாது."
ஒரு தனிமனிதனின் சிறு தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்க ஒரு இறைநேசர் இவ்வளவு சிரமப்பட்டார் என்றால், கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணமும், எதிர்காலமும் அடங்கிய 'வாக்கு' (Vote) எனும் அமானிதத்தை நாம் தகுதியற்றவர்களிடம் ஒப்படைத்தால் மறுமையில் நம் நிலை என்ன?
அமானிதம் என்பது அமானிதக்காரர்களிடம் (நேர்மையானவர்களிடம்) தான் ஒப்படைக்கப்பட வேண்டும். சுஃப்யான் அஸ்-ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற பேணுதல் உள்ளவர்களிடம் தான் அந்த நபர் பணத்தைக் கொடுத்தார். நாமும் நமது வாக்கை நேர்மையானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
வாக்கிற்குப் பணம் வாங்குவது 'ஹராம்' (தடுக்கப்பட்டது)
மார்க்க ரீதியாக, ஒரு வேலையைச் செய்து கொடுக்க அல்லது ஒருவருக்குச் சாதகமாகச் செயல்படப் பணம் பெறுவது லஞ்சமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அவர்கள் கூறினார்கள்:
لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي
"லஞ்சம் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக." நூல்: அபூதாவூத்
ஒரு வேட்பாளரிடம் பணம் வாங்கிவிட்டு அவருக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சாட்சியத்தை (வாக்கை) விலைபேசுவதாகும். இது அப்பட்டமான லஞ்சமாகும்.
வாக்கு என்பது அல்லாஹ் உங்களிடம் கொடுத்துள்ள ஒரு அமானிதம். அமானிதத்தைச் சரியான தகுதியுள்ளவரிடம் ஒப்படைப்பது உங்கள் கடமை. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு தகுதியற்றவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது அமானிதத் துரோகம் (கியானத்) ஆகும்.
வாக்களிப்பது என்பது ஒரு வேட்பாளரின் தகுதிக்கு நீங்கள் கூறும் 'ஷஹாதத்' (சாட்சி) ஆகும். பணத்திற்காக ஒருவருக்கு வாக்களிக்கும்போது, "இவர் இந்தப் பதவிக்குத் தகுதியானவர்" என்று நீங்கள் பொய் சாட்சி சொல்கிறீர்கள். பொய் சாட்சி கூறுவது பெரும் பாவங்களில் ஒன்று என்பதை நாம் ஏற்கனவே ஹதீஸ்கள் மூலம் பார்த்தோம்.
வாக்கிற்குப் பணம் வாங்குவது என்பது ஒரு தனிமனிதப் பிரச்சனையல்ல.
ஒரு வேட்பாளர் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து வெற்றி பெறுகிறார் என்றால், அவர் பதவியேற்றதும் முதலில் அந்தப் பணத்தை எடுக்கவே ஊழல் செய்வார்.
இதன் மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் சாலை வசதிகள் போன்ற பொதுநலத் திட்டங்கள் பாதிக்கப்படும். இறுதியில், நீங்கள் வாங்கிய சில ஆயிரம் ரூபாய்களுக்காக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையே நீங்கள் அடமானம் வைக்கிறீர்கள்.
"வாக்கு என்பது ஒரு புனிதமான சாட்சியம். சாட்சியத்தைச் சொல்லி பணம் பெறுவது ஹராம். அவ்வாறு பெறப்படும் பணம் லஞ்சத்தின் கீழ் வரும். அந்தப் பணம் ஒரு முஃமினுக்கு நரகத்தின் நெருப்பாகும்."
"அன்பார்ந்தவர்களே! தேர்தலுக்குப் பின் நாம் ஆட்சியாளர்களைக் குறை சொல்கிறோம். ஆனால், நாம் லஞ்சம் (பணம்) வாங்கிவிட்டு ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், அந்த அநியாயத்திற்கு நாமே அஸ்திவாரம் போடுகிறோம். 500 அல்லது 1000 ரூபாய்க்கு உங்கள் ஈமானையும், மறுமையையும் விற்றுவிடாதீர்கள். ஹராமான ஒரு காசு உங்கள் வயிற்றுக்குள் சென்றால், 40 நாட்கள் உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
இந்த நான்கு நிலைகளும்:
1. ஷஹாதத் (சாட்சி கூறுதல் - நாம் ஒருவருக்குப் போடும் வாக்கு அல்லாஹ்விடம் நாம் சொல்லும் சாட்சியம்).
2. ஷபாஅத் (பரிந்துரை - நல்லவருக்குப் பரிந்துரைத்தால் நன்மையில் பங்கு, தீயவருக்குப் பரிந்துரைத்தால் தீமையில் பங்கு).
3. வகாலத் (பிரதிநிதித்துவம் - ஒரு தந்தை தன் மகளுக்கு வரன் தேடுவதைப் போல ஜாக்கிரதையாகப் பிரதிநிதியைத் தேட வேண்டும்).
4. அமானிதம் (பொறுப்பு - வாக்கு என்பது சமுதாயம் நம்மிடம் ஒப்படைத்துள்ள ஒரு புனிதமான அமானிதம்).
வாக்களிப்பது என்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல; அது ஒரு மார்க்கக் கடமை.
ஜாதி, மதம், மொழி என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.
பணத்திற்கும் பொருளுக்கும் விலை போகாதீர்கள்.
யார் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் உண்மையாகப் பாடுபடுவார், யார் அமானிதத்தைப் பேணுவார் என்று உங்கள் மனச்சாட்சியைக் கேட்டு முடிவெடுங்கள். அல்லாஹ்வை பயந்து முடிவெடுங்கள்.
"ஒரே ஒரு ஓட்டுதானே, இதனால் என்ன ஆகிவிடப்போகிறது?" என்று நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. ஒரு ஓட்டு என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை கொண்டது.
உலக வரலாற்றில் ஒரே ஒரு வாக்கினால் ஆட்சிகள் மாறியிருக்கின்றன, பல சட்டங்கள் உருப்பெற்றிருக்கின்றன.
நீங்கள் அளிக்கும் அந்த ஒரே ஒரு வாக்கினால் ஒரு தகுதியானவர் வெற்றி பெற்று, அவர் ஒரு ஏழைக்கு உதவி செய்தாலோ, ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்தாலோ, அந்த நன்மையில் உங்களுக்கும் பங்கு உண்டு.
அவர் பதவியில் இருக்கும் 5 ஆண்டுகளும் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் உங்கள் கணக்கில் 'ஸதக்கத்துல் ஜாரியா'வாக (நிலையான தர்மமாக) வந்து சேரும்.
"யார் ஜெயித்தால் நமக்கென்ன?" என்று நீங்கள் வாக்களிக்காமல் வீட்டில் முடங்கிக் கிடந்தால், அந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒரு தகுதியற்றவர் வெற்றி பெற்றுவிடலாம்.
அவர் செய்யும் அநீதிகளுக்கு, "வாக்களிக்காமல் தடுத்திருக்கலாமே" என்று உங்களிடம் கேள்வி கேட்கப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கூறியது போல, தகுதியற்றவர்களிடம் பொறுப்பு செல்வது மறுமையின் அழிவுக்கான அடையாளம். அந்த அழிவிற்கு உங்கள் அலட்சியம் காரணமாகிவிடக் கூடாது.
ஓட்டு போடும் போதும் அதற்கு முன்பும் இந்த துஆவை அதிகம் ஓதுவோம்.
اللَّهُمَّ لَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَخَافُكَ فِينَا وَلَا يَرْحَمُنَا
"யா அல்லாஹ்! எங்கள் விஷயத்தில் உனக்கு அஞ்சாதவர்களையும், எங்கள் மீது இரக்கம் காட்டாதவர்களையும் எங்கள் மீது அதிகாரிகளாக (ஆட்சியாளர்களாக) ஆக்கிவிடாதே!”
"யா அல்லாஹ்! எங்கள் அனைவருக்கும் உன்னுடைய அமானிதங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் தக்வாவைத் தந்தருள்வாயாக!
எங்கள் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நன்மையை நாடக்கூடிய, அமானிதத்தைப்
பேணக்கூடிய நல்ல ஆட்சியாளர்களை எங்களுக்குத் தந்தருள்வாயாக! நாங்கள் செய்யும் இந்தச் சிறு அமலையும் (வாக்களிப்பதையும்) உனது பொருத்தத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு நற்செயலாக ஏற்றுக் கொள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக