வெள்ளி, 17 ஜூன், 2016

சோதனைகளை தடுக்கும் பிரார்த்தனை.









மனிதனுக்கு மிகமிக அவசியமான ஒன்று துஆ எனும் பிரார்த்தனை. துன்பங்களை துடைத்தெறியும் மகாசக்தி நமது பிரார்த்தனைகளுக்கு உண்டு. அதற்கு மிகச் சரியான காலம் தான் இந்த ரமலான்.
சஹர் நேரம், ஐங்காலத் தொழுகைகளின் நேரம், லுஹா (முன்பகல்) தொழுகை நேரம், தஹஜ்ஜத் தொழுகை என ஒரு நோன்பாளிக்கு முழு நேரமும் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் தான். எனவே இந்த நேரங்களை நாம் ஒரு போதும் வீணாக்கழித்து விடக் கூடாது.


நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
الدعاء مخ العبادة
துஆ என்பது அதுவே ஒரு வணக்கம் தான்.
                                         (நூல் அபூதாவூத், திர்மிதி.)

துஆ - அது தான் அனைத்து வணக்க வழிபாடுகளுக்கும் அசலாய் இருக்கிறது என்றும், அது துன்பங்களையும், சோதனைகளையும் தடுக்க கூடியது என்றும் நபிகளார் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. நம்மால் முடியாத எந்த ஒன்றையும் நமது பிரார்த்தனையால் அல்லாஹ்வின் அருளால் சாதித்து விட முடியும்.

அல்லாஹ் கூறுகிறான்.
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ
என்னை அழையுங்கள். உங்கள் அழைப்புக்கு நான் பதில் அளிக்கிறேன்.
                                                (திருக்குர்ஆன். 40 - 60)

அல்லாஹ்வின் சொல் பொய்யாகுமா...?, இல்லையே, பிறகு ஏன் இறைவனிடம் கேட்பதற்கு மிகவும் யோசிக்க வேண்டும்...?
மூஸா நபி அலை அவர்கள் அல்லாஹ்வோடு அடிக்கடி பேசிய நபி என்பதை நமக்கு உணர்த்தும் விதமாகத் தான் திருக்குர்ஆன் முழுவதும் சுமார் 135 இடங்களில் அவரது பெயரும், அவர் தொடர்பான சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மூன்று நபர்களின் துஆ நிராகரிக்கப்படாது :  நோன்பாளி நோன்பு திறக்கும் வரை கேட்கப்படும் துஆ, நீதி செலுத்தும் தலைவரின் துஆ, அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ.
                                        (நூல் அஹ்மத், திர்மிதி.)

இங்கு முதல் நபராக இடம் பிடித்திருப்பவர் ஒரு நோன்பாளி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதுவும் அவர் நோன்பு திறக்கும் வரை என்று மிகத் தெளிவாகவே நபிகளார் சொல்லியிருக்கிறார்கள் என்றால் ஒரு நோன்பாளியின் துஆ எவ்வளவு உயர்வானது, உயிரோட்டமுள்ளது என்பதை எளிதாக அறிய முடிகிறது.

எனவே ஒரு நோன்பாளி இயன்ற வரை பகல் நேரங்களை அதிகமதிகம் துஆ செய்வதிலேயே கழிக்க வேண்டும். நமக்கு மட்டுமல்ல, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கடன் சுமையால் பாதிக்கப்பட்டவருக்காக, கடும் நோயால் அவதிப்படுபவர்களுக்காக என நமது துஆவின் எல்லையை விரித்துக் கொண்டே செல்லலாம். நாம் அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற துஆ செய்கிற போது, நமது தேவைகளை நாம் கேட்காமலேயே அல்லாஹ் நிறைவு செய்கிறான்.இந்த ரமலானில், நமக்காக, நம் மக்களுக்காக நாம் அனைவரும் இறைவனிடம் மனமுருகி துஆ செய்வோம்.


                      ஆக்கம்.
மௌலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி. ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக