வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

தவறுகளை தடுக்கும் இறை நம்பிக்கை.





இம்மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் வணக்க வழிபாடுகளுக்கு மட்டுமல்ல அன்றாட வாழ்வியல் நெறிகளுக்கும் வழிகாட்டுகிறது. குறிப்பாக மனிதன் என்னென்ன உணவுகளை உண்ணலாம், வேறு என்னென்ன உணவுகளை உண்ணக்கூடாது என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால் அவனது வாழ்வு நிம்மதி நிறைந்ததாக அமைகிறது.


இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.


يايها الناس كلوا مما فى الارض حللا طيبا ولا تتبعوا خطوات الشيطن انه لكم عدو مبين


மனிதர்களே.... பூமியில் உள்ளவற்றில் இருந்து உணவுப் பொருளாக அனுமதிக்கப்பட்ட பரிசுத்தமானவற்றையே உண்ணுஙகள் ( 2:168 )


يايهاالذين امنوا كلوا من طيبت ما رزقنكم وشكروا لله ان كنتم اياه تعبدون


இறை நம்பிக்கையாளர்களே.... உங்களுக்கு நாம் அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள் ( 2:172 )


இதில் முதல் வசனம். மனிதர்களே என்று சரவதேச மனிதர்களையும் விளிக்கிறது. மறு வசனம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களை அழைக்கிறது. ஆக அனைவரும் இம் மண்ணில் நல்லவற்றையே புசிக்க வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது.


இந்த வகையில் இன்று இந்தியாவை, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் மதுவை பற்றியும் குர்ஆன் கூறாமல் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரில் இருந்து முந்நூறு மைல்களுக்கு அப்பால்உள்ள மதினா நகர் சென்றபோது அந்நகர விவசாயிகளிடம் குடிப்பழக்கம் மிதமிஞ்சி காணப்பட்டது. அது கண்டு அண்ணல் நபி அல்லலுற்றபோது, பின் வரும் திருக்குர்ஆன் வசனம் மதுபழக்கத்தை மிக மென்மையாக கண்டிக்கத் தொடங்கிற்று. 


يسئلونك عن الخمر والميسر قل فيهما اثم كبير ومنافع للناس واثمهما اكبر من نفعهما  


2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” ........ ( 2:219 )


நாட்கள் நகர்ந்தபின் இன்னொரு வசனம் போதையான நிலையில் இறைவழி வேண்டாம் என எச்சரிக்கிறது.


நம்பிக்கை கொண்டவர்களே..... நீங்கள் போதையில் இருக்கும் போது நீங்கள் கூறுவது இன்னதென்று அறிந்து கொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள். ( 4:43 )


இன்னும் சில நாட்கள் நகர்ந்த பிறகு, மது பானத்திற்கு முற்றிலும் தடை விதிக்கும் வசனம் வந்தது.


  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.


இம்மூன்று திரு வசனங்களையும் திரும்ப மீள் வாசிப்பு செய்து பாருங்கள். மது பானத்திற்கு அடிமைப்பட்டு போன அந்த மக்களிடையே இஸ்லாம். எவ்வளவு எளிதாய், படிப்படியாய் மது விலக்கை அமல்படுத்தி இருக்கிறது என்பது சற்று கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும்.


மதுவை குறித்து இன்னொரு வசனம் இப்படி பேசுகிறது.


5:91   اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ

5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?


இந்த வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் மதுவின் அடுக்கடுகான கேடுகளை வெகு ஆழமாக பட்டியலிட்டு காட்டுகிறதல்லவா..


மது போதைக்கு அடிமையாகி பாதை தவறிப்போய் பயணிப்பவர்களை நல்வழிக்கு கூட்டி வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.


மது-அது நாட்டிற்கும் வீட்டிற்கும், உடலுக்கும் கேடு.


குடி குடியைக் கெடுக்கும்.


குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்.


மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்.


வேண்டாம் சாராயம். வேண்டும் ஆரோக்யம்.


என்பது போன்ற எச்சரிக்கை எழுத்துக்களாக மட்டுமல்ல, குடிப்பவர்களின் இதயத்திலும் பதிய வேண்டும்.


தனி மனித வாழ்வை, சமூகத்தை, பொது சுகாதாரத்தை, சுற்றுச்சூழலை, பொருளாதாரத்தை, சமூக மேம்பாட்டை, இளைய சக்தியை, கூட்டு குடும்பத்தை, சுய மரியாதையை, பொதுஜன ஒழுக்கத்தை, அறவியலை, அரசியலை, அறவியலை, ஆன்மீகத்தை, என எல்லாத் தளங்களிலும் இன்றைக்கு மதுபானம் புகுந்து கேடான பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ( இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண ) இரவில் அவர்களிடம் ஒன்றில் மதுவும் மற்றொன்றில் பாலும் இருந்த இரு கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அவ்விரண்டையும் பார்த்து விட்டு பால் இருந்த கிண்ணத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இயற்கை மரபில் உங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், நீங்கள் மது கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயமே வழி தவறிப் போயிருக்கும். என்றார்கள்.


மதுவின் கேடு குறித்த பின்வரும் நபிமொழிகள் சிந்தனைக்குரியது.


மதுபானத்தை தவிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் அனைத்து தீமைகளுக்கும் திறவுகோலாக இருக்கிறது.  ( ஆதாரம் நூல் - ஹாகிம். )


மதுபானம்தான் அனைத்து பாவங்களுக்கும் அன்னையாக இருக்கிறது. (நூல் -தப்ரானி.)


போதை தரும் ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதே. மதுவும் போதை தருகிறது எனவே அதுவும் விலக்கப்பட்டதே. ( ஆதாரம் நூல் முஸ்லிம்.)


மது போதையில் மூழ்கிக் கிடப்பவன். சொர்க்கம் புக மாட்டான். (ஆதாரம் நூல் இப்னு மாஜா.)


மது பருகியவரின் நாற்பது நாட்களின் தொழுகைகளை அல்லாஹ் அங்கீகரிப்பதில்லை. ( ஆதாரம். நூல் திர்மிதி.)


மதுவை ஏந்திய கரம். அது பிரார்த்தனைக்காக ஏந்தப்படும் போது அவரது பிரார்த்தனை மறுக்கப்படுகிறது. ( ஆதாரம் நூல் தப்ரானி.)


மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதை செய்ய மாட்டான். மது அருந்துகிறவன் மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்த மாட்டான். திருடன் திருடும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருட மாட்டான். என்றார்கள்.


ஆக இறை நம்பிக்கையாளர்களாக இருப்பது தவறுகளை தடுக்கும் என்பது நபிகளாரின் நம்பிக்கையாகும்.


இறையச்சம், மறு உலக நம்பிக்கை, மறுமை நாளின் விசாரனை, சொர்க்கம்-நரகம் போன்றவை மூலமே இஸ்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளது.


மது கிண்ணங்கள் அவை மரணத்தின் சின்னங்கள்.
மது மக்களுக்கு போதையூட்டி பாதை மாற்றி அழைத்துச் செல்லும்.
எனவே மது விலக்கு அமலுக்கு வராதவரை சமூக அரசியல் சீர் பெறுவது தாமதத்திற்குரியது. சந்தேகத்திற்குரியது.


                         எஸ்.என்.ஆர். சவுகத் அலி மஸ்லஹி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக