செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

மகத்துவம் மிக்க “மஹர்”

கருத்துகள் இல்லை:


 திருமணம் என்பது வல்ல இறைவனின் அத்தாட்சியாகவும் அருளாகவும்(30:21) உள்ளது.அவனுடைய இறுதித் திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய அழகிய முன்மாதிரிகளில் ஒன்று.இந்த இருவராலும் அங்கீகரிக்கப்படும் திருமணத்தில் “மஹர்” முகாமையான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.அதைப் பற்றிக் இந்தக் கட்டுரையில் காணும் முன்னர் ஒரு சில பழங்காலத் திருமண முறைகளைப் பற்றி அறிதல் மஹரின் மகத்துவத்தை அறிய உதவும்.


மனித குலத்தை அல்லாஹ்வே விரும்பிப் படைத்தான். அவன் படைத்த மனிதர்கள் அவனுடைய உவப்பைப் பெறத்தக்கவர்களாகவும் தங்களுக்கிடையில் விரும்பி வாழும் சமுதாயமாகப் பல்கிப் பெருகவும் மக்களுடைய பாலியல் ஒழுக்கத்தை முறைப்படுத்தவும் சட்ட மதிப்பு மிக்கதாக அருளப்பட்ட ஒரு நன்னெறிமுறைதான் திருமணம்.


தொல்பழங்காலத்தில் மக்கள் அவரவர் மனம் விரும்பியபடித் துணையைத் தேர்ந்தெடுத்து-திருமணம் என்ற ஒரு வரையறுக்குள் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறியாமல்-கூடி வாழ்ந்திருக்கிறார்கள்.அந்த வாழ்க்கை முறையில்-குறிப்பாகப் பெண்களுக்கு-பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.அப்போது தமிழ்கூறும் நல்லுலகத்தில் இருந்த சமுதாய அக்கறை மிக்கவர்கள் அதை முறைப்படுத்த முற்பட்டபோதுதான்கரணம்-திருமணம்-வரையறுக்கப்பட்டுள்ளது.இதைத் தொல்காப்பியர்பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்ப” என்று கூறுகிறார்.


திருமணம் செய்துகொண்டு வாழ்வதுதான் கற்பொழுக்கம் உள்ள வாழ்வு என்பதை அவர்,கற்பெனப்படுவது கரணமொடு புணர என்று கூறுகிறார்.இந்தத் திருமணத்தையும் தமிழர்கள் ஊருக்குப் பொதுவான இடத்தில்-மன்றலில்(மன்றத்தில்)”-வெளிப்படையாகவே நட்த்தியுள்ளனர் என்பதை அந்த சொல்லே உணர்த்துகிறது.இதனைப் “பலரறி மணம் என்றும்இயல்பு மணம் என்றும் விளக்கியுள்ளனர்.இதையே “நாடறி நன்மணம் என்று குறிஞ்சிப் பாட்டு(232) சுவைபடச் சொல்லும்.


“வரைதல்” என்ற சொல்லும் திருமணத்தைக் குறிப்பதாகும்.இதுகுறித்து,வெளிப்பட வரைதல்,வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப” என்று தொல்காப்பியம் கூறுவதில் இருந்து இருவகைத் திருமண முறைகள் இருந்துள்ளன என்பதை அறிகிறோம்.வெளிப்பட வரைதல்என்பது தமிழர் திருமணத்தையும் அது ஏதோ ஒரு வகையில் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது என்பதையும் நன்கு புலப்படுத்துகிறது.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருமணம்,வாழ்க்கை ஒப்பந்தம்” என்று வழங்கத் தொடங்கியதையும் அது மணமக்களின் கையொப்பங்களுடன் பதியப்பட்டு வந்ததையும் பின்னர் அரசே பதிவுத் திருமண முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்ததையும் நாம் அறிவோம்.


சங்க இலக்கியங்கள் வாயிலாக ஏழுக்கும் அதிகமான திருமண முறைகள் தெரியவருகின்றன.அவற்றுள்,மரபு வழி மணம்,பரிசம் கொடுத்து மணம்” ஆகிய இருவகைத் திருமண முறைகளே பொதுமக்களிடையே பெரிதும் வழக்கத்தில் இருந்துவந்துள்ளன.


பரிசம் கொடுத்து மணமகளுடைய பெற்றோரின் ஒப்புதலோடு மணந்துகொள்வது,திருமணத்தின் அடிப்படைகளில் ஒன்றாக இருந்துள்ளது. அந்த நாள் தமிழர்கள், முசிறி நகர் போன்ற பெருஞ்செல்வத்தைப் பரிசமாகக் கொடுத்துக்கூட பெண் கேட்பார்கள் என்பது புறநானூறு(343) கூறும் செய்தி. எவ்வாறு பெண்கேட்டாலும் விருப்பம் இல்லை என்றால் பெற்றோராலும் பெண்ணாலும் மறுக்கப்பட்ட நிகழ்வுகளையும் பெண் தன் விருப்பத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் உரிமை பெற்றிருந்ததையும்,வழிபாடு மறுத்தல்-மறுத்தெதிர் கோடல்”,”களஞ்சுட்டு கிளவி கிழவியதாகும் என்பன போன்ற தொல்காப்பியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


தொல்காப்பியர் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது; சங்க காலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பன பெரும்பாலான அறிஞர்களின் ஆய்வு முடிவாகும்.


“மறையோர் தேயத்து மன்றல் எட்டு...”-அதாவது அந்தக்கால வட நாட்டு ஆரிய இனத்து மக்களுக்கிடையில் எட்டு வகையான திருமண முறைகள் இருந்துள்ளன.அவை-பெண்ணை‘தானமாகத் தருவது’,கோத்திரத்திற்குள் மட்டும்பெண் கொடுப்பது,வேள்வித்தீயின் முன்னிலையில் பெண்ணைத் தருவது,ஒத்த இருவர் தாமே கூடிக்கொள்வது,ஒன்றை சொல்லி அதைச் செய்தவனுக்குப் பெண்ணைத்தருவது,ஆண் பெண்ணைத் தூக்கிக்கொண்டு சென்று திருமணம் செய்துகொள்வது,தன்னுணர்வு இல்லாத நிலையில் அவளைப் புணர்ச்சியினால் அடைவது,ஒன்றிரண்டு பசுவையோ,எருது மாட்டையோ வாங்கிக்கொண்டு பெண்ணைக் கொடுப்பது என்பனவே “மறையோர் தேயத்து மன்றல்கள்”!அதாவது,‘வேதங்களைப் பெற்றிருந்த நாட்டைச் சேர்ந்தவர்களின் திருமண முறைகள்! இந்த எட்டுவகைத் திருமண முறைகளிலும் மணப்பெண்ணுக்கு எந்த மதிப்பும் சிறப்பும் இல்லை என்பது சொல்லாமலே பெறப்படும் பொதுச் செய்தி.


இன்னொன்றையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும்.இன்றுள்ள சட்டப்படி சிறைத் தண்டனையையும் தண்டத்தொகை செலுத்துவதையும் ஒரு சேர விதிக்கத்தக்க குற்றமான வரதட்சணை வாங்கும் வழக்கம்,வேதகாலத்தில் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய் நடைமுறையாக இருந்துவந்த வழக்கமாகும்.ரிக்வேதத்தின் கூற்றுப்படி இது வேத ஆதாரமுள்ள நடைமுறையாகும்.(The Rig Veda states that cows and gifts given by the Aryan father of the bride to the daughter accompanied the bride’s procession-Rg. Ved X.85. Dowry -dahej.மணமகன்,பெண் வீட்டாரிடம் வரதட்சணை பெற்றதனால், தான் பணக்காரனாக ஆனதைப் பீற்றிக்கொள்ளும் பதிவுகளுக்கும் வேத(!) ஆதாரம் உண்டு. இது, அந்தக்காலத்தில் இருந்து ஆழ வேரோடிப் பல்வேறு சமுதாயங்களை எப்படியெல்லாம் பாழ்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது ஊருலகம் அறிந்த ஒன்று.திருமண முறை எதுவாயினும் அதில் வரதட்சணை ஒர் அடிப்படையாக இருந்தது-இருந்து வருகிறது என்றால் அதற்கு ஆரியக் கலாசாரமே ஆதிமுதற் காரணம்.மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்கள்,வரதட்சணை வாங்குவது,அநாகரிக மானங்கெட்ட ஆரிய இழிவழக்குஎன்று சாடியுள்ளார்.


பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்குகிற ஆரிய கலாசாரம் இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் எதிரானது.மணமகன்,மணமகளுக்கு மார்க்கச் சட்டப்படித் தந்தாக வேண்டிய “மஹர்என்ற சொல்லைச் சிலர் ஆங்கிலத்தில்Dowry” என்று மொழிபெயர்த்து இரண்டையும் குழப்பிவிடுகின்றனர்.


இஸ்லாமியக் கலைச் சொற்கள் பல மொழிபெயர்ப்பதற்கு அரியவை. (மலைத் தலைய கடற்காவிரி” என்பது போல) அவை,சொற்சிக்கனமும் பொருட்செறிவும் மிக்கவையாக இருப்பதே அதற்குக் காரணம்.அவற்றிற்குப் பொருள் விளக்கம் கூறமுடிவதைப் போல மொழிபெயர்ப்புச் செய்ய இயல்வதில்லை.இதுமஹர்’ என்ற சொல்லுக்கும் பொருந்தும்.ஆங்கிலத்திலும் தமிழிலும் இதற்கான மொழிபெயர்ப்பைக் கொடுக்க அறிஞர்கள் பெரிதும் முயன்று வருகின்றனர்.அந்த முயற்சி இன்னும் முடிவடையவில்லை என்றாலும் இது “பரிசம்” என்ற தமிழ்ச் சொல்லோடும் அதன் பொருளோடும் ஒத்துப்போவதாக இருக்கிறது.


இதுகாறும் கூறியவற்றால், பழந்தமிழர் திருமண நடைமுறைக் கூறுகளோடு,பிற்காலத்தில் முழுமை பெற்ற மார்க்கமாக உலகத்திற்கு அறிமுகமான இஸ்லாம் மார்க்கத்தின் திருமண நடைமுறைகள் உள்வாங்கிக்கொண்டு ஒத்துப்போவதை அறியலாம். ஆரியத் திருமண நடைமுறைகளோடு ஒத்துப் போகாததையும் நாம் கவனிக்க வேண்டும்.இத்தகைய இயல்பான சிந்தனைப் போக்கின் காரணமாக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்னரே பெருந்தகை பேராசிரியர் கே.எம்.காதிர் மொகிதீன் அவர்கள்,இஸ்லாம் தமிழர்க்கு வந்த மதமா? சொந்த மதமா? என்ற அரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். இனியாவது அது முழுமைபெறும் என்றால்,அது இன்பத் தமிழுக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் ஆக்கவளம் சேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.(இந்தக் கோணத்தில் 1978-ஆம் ஆண்டுவாக்கில் இந்தக் கட்டுரையாளரும் பின்னர் பேராசிரியர் கே.எம்.கே அவர்களும் அவரை அடுத்து கவிக்கோ அவர்களும் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தியவர்கள்.)


எல்லா உலகங்களுக்கும் நல்லுபதேசமாக அருளப்பட்டிருக்கும் திருக்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த,அனைத்துலகிற்கும் அழகிய முன்மாதிரியாக” வாழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக்காட்டி உலகெங்கும் பின்பற்றப்படுகிற இஸ்லாம் மார்க்கத் திருமணம்,அரபு மொழியில்-திருக் குர் ஆனில்- நிகாஹ்” என்று கூறப்படுகிறது.இது மணமக்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தமே ஆகும்.(In Islam, marriage is accomplished through a contract which is confirmed by the bride’s reception of a Mahr…-Ency.of Islamஎனவே தமிழ் முஸ்லிம்களாகிய நாம்,திருமணத்தை,வாழ்க்கை ஒப்பந்தம்” என்று கூறுவது இருவகையிலும் சரியானதே ஆகும்.அந்த ஒப்பந்தமும் மணமகள் “மஹர்”-ஐப் பெற்றுக்கொள்வதன் மூலமே முழுமை பெறுகிறது.மணமகளின் மனமுவந்த இசைவும் மஹரும் இல்லையென்றால் அது திருமணமே இல்லை.


மஹ்ர்,பரிசம் போன்றதுதான் என்றாலும் இது,இறைவனின் கட்டளை;வேத விதி என்பதனால் இது மேலும் மகத்துவம் மிக்கதாக ஆகிறது.மஹரைக் குறிக்க அரபு மொழியில்-ஃபிக்ஹ் எனும் மார்க்கச் சட்ட நூல்களில்- உள்ள பல சொற்கள் இதன் சிறப்பை விரித்துரைப்பவை ஆகும்.


1.அந்-நிஹ்லா(வெகுமதி),2.அல்-ஃபரிதா(பரிந்துரைக்கப்பட்டதொகை அல்லது கடமைப் பொறுப்பு), 3.அல்-ஹிப்பா(முன் வைக்கும் வெகுமதி),4.அல்-அஜ்ர்(ஊதியம் அல்லது ஈட்டுத் தொகை),5.அல்-உக்ர்(முன் காப்பீடு),6.அல்-அலாஇக்(விலை மதிப்பற்ற பொருள்),7.அஸ்-ஸதகா(உண்மை வெகுமதி அல்லது நல்லறம்),8.அத்-தவ்ல்(திறம்),9.அந்-நிகாஹ்(திருமணம்).


இந்தச் சொற்பொருள்களை விளக்கப்போனால் கட்டுரை மிகவும் நீண்டுவிடும்.இவற்றில் உள்ள ஒன்பதாவது சொற்பொருள் மஹரையும் குறிக்கிறது;திருமணம் என்ற பொருளையும் தருகிறது என்பதிலிருந்து திருமணமும் மஹரும் எப்படி இரண்டறக் கலந்துள்ளது என்பதை எண்ணிப்பார்த்தால் இன்பம் பயக்கிறது.(இந்த அளவுக்குள்ள மஹரை முறையாக் கொடுக்காமல் 11,786 ரூபாய் என்று ஏட்டில் மட்டும் எழுதுவோரும் இருக்கவே செய்கின்றனர்.)


மஹரை மனமுவந்து கொடுக்க வேண்டும்(4:4),மஹர் கொடுக்கப்பட்ட பெண்தான் ஹலால்-சட்ட ஒழுங்குகளின்படி நுகர அனுமதிக்கப்பட்டவள்(33:50),அனுமதிக்கப்பட்ட திருமணத்தின் அடையாளம் மஹர்(4:24),பொற்குவியலையே மஹராகக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் (திரும்ப)எடுத்துக்கொள்ளாதீர்கள்...(4.20,21) என்பன போன்ற திருக் குர்ஆனின் கருத்துகள்மஹர் தொடர்பாக ஒரு மணமகனின்-  கணவனின் கடமைப்பொறுப்பை வலியுறுத்துவன.


இதுதான் மஹர் என்று வரையறுத்துக் கூறிவிடமுடியாத அளவுக்கு அது பலவாறாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.ஓர் இரும்பு மோதிரம்,தங்க நகை,பணம், தோட்டம்-துரவு,பேரீச்சையின் பழங்கள்,(கல்வி கற்பித்தல்,அடிமைகளை விடுவித்தல்,தான தருமங்கள் செய்தல் முதலிய)நற்செயல்கள் முதலிய எதையும் மணமகள் மஹராகக் கேட்கலாம்;பெற்றுக்கொள்ளலாம் என்பதை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் நிறைமொழித் தொகுப்பு நூல்களில் இருந்து அறிகிறோம்.அவர்கள் வாழ்ந்த காலம்,மார்க்க எழுச்சியின் மகத்தான பொற்காலம் அல்லவா?அதனால் இஸ்லாமிய உணர்வு மீதூர்ந்த உம்மு சுலைம் எனும் திருத்தோழியர் தம்மை மண்ந்துகொள்ள விரும்பிய மணமகனிடம் மஹராகக் கேட்டது என்ன தெரியுமா?அவர் இஸ்லாம் என்னும் திரு நெறியை மனதார ஏற்று,வாயார அதை வெளிப்படுத்த திருக்கலிமாவைச் சொல்ல வேண்டும் என்பதைத்தான்.இவையெல்லாம் மஹரைத் தீர்மானிக்கும் உரிமை மணமகளுடையது என்பதை உணர்த்துவன.


இஸ்லாம் மார்க்க அடிப்படையில்,மஹர் கொடுக்கப்படவேண்டும் என்பது பல நன்னோக்கங்களை உள்ளடக்கியதாகும்.(அவற்றின் சிறப்பை உணர நம் மனக்கண் முன் அந்தக் கால அரபு நாட்டைக் கொண்டுவர வேண்டும்;நடப்புலக நடவடிக்கைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும்)


1.ஒரு பெண் தன் திருமணம் குறித்து முடிவெடுக்கவும்,தனக்கு இன்னது மஹராக வேண்டும் என்று கேட்கவும் அதிகாரம் பெற்றவள் ஆகிறாள்.


2.ஒப்பந்தம் என்பது ஒத்த தகுதி உடையவர்களுக்கிடையில் செய்து கொள்ளப்படுவது.மணமகள் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்ளும் தகுதி உடையவள் என்கிறபோது அவள் ஆணுக்குப் பெண் சமானம் என்கிறமதிப்பை அடைகிறாள்.


3.பின்னர் பெற்றோர்,கணவன் ஆகியோரின் சொத்துக்களில் இருந்து பங்கு பெறும் உரிமை உடையவளான பெண்,திருமணத்திலிருந்தே மஹரை முற்ற முழுக்க தன்னுடைய சொத்தாக வைத்துக்கொள்ளும் உரிமை பெறுகிறாள்.


4.மணமகள் ஏழையானால் அல்லது மணவிடுதலை செய்யப்பட்டால் அவள் மஹரின் மூலம் பொருளாதாரப் பாதுகாப்பு பெறுகிறாள்.(ஒரு பொற்குவியலையே மஹராகக் கொடுத்திருந்தாலும் கணவன் அதைத் திரும்பக் கேட்க முடியாது-4:20).


5.தன்னுடைய மஹர் பொருளை ஒரு முதலீடாக்கி வணிகம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுத் தன் வசதி வாய்ப்புகளை இறைவனுக்குப் பொருத்தமான முறையில் பெருக்கிக் கொள்ளலாம்.


6.இறைவனின் கட்டளையை நிறைவேற்ற ஓர் ஆண்மகனுக்கு வாய்ப்பளிப்பவளாகிறாள்.


7.தட்டுமுட்டுச் சாமான்களைப் போல தான தருமம்(கன்யாதானம்) செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டுத் தன்மதிப்பு(சுயமரியாதை) உள்ள ஒரு மனித ஜீவனாக மதிப்படைகிறாள்.இவ்வாறு சொல்லிகொண்டே செல்ல்லாம்.


எல்லாவற்றிற்கும் மேலாக பெண் என்னும் படைப்பினத்தின் மீது,படைத்த அல்லாஹ்,கொண்டுள்ள அன்பையும் அருளையும் அறிந்து,சிந்தித்து,உணரலாம்.


இப்போது எண்ணிப்பார்ப்போம்-இந்த மஹர்தான் எவ்வளவு மகத்துவம் மிக்கதாக இருக்கிறது!

                                                        ----------ஏம்பல் தஜம்முல் முகம்மது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top