புதன், 17 ஜூலை, 2013

அலங்கோலக் கவிதை


கவிதைகள் எப்போதும் அழகானவை. அமிர்தமானவை. சில நேரங்களில் சில இன்சுவைப் பண்டங்கள்  தன் கசப்பை கக்கிவிடுவதுண்டு. அப்போது நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவை காலாவதியாகி விட்டன என்று. இவ்வாறு தான் சில நேரங்களில் சில தேன்கவிச் சொற்கள் அமைந்துவிடுவதுண்டு.

அரசியல் பண்பாட்டின் அடிச்சுவடுகளை அலசிஆராயும் காலச்சுவடு இதழ்  அவ்வப்போது கவிதைகள் வழியேயும் தம் வலிகளை வாசகர் நெஞ்சங்களில் வரைந்து காட்டுவதுண்டு

இந்நிலையில் இதழ் 162  ஜுனில் வெளியான  எம்.ரிஷான் ஷெரிப் வரைந்திருந்த நிந்தும் மீன்களை வரைபவள் எனும் பழமைவாத இஸ்லாமிய வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் கவிதை இஸ்லாமிய இயற் பண்பியலை தன் நவீனத்துவ நகங்களால் கொஞ்சம் கிள்ளி விட்டு, விட்டு, சற்று தள்ளிநின்று  கொண்டு வேடிக்கை பார்க்கிறது. நீண்ட நேரம் நின்று நோக்கும் எந்த ஒரு பாமர கலாரசிகனும் சில நேரங்களில் தன் வாயையும் கையையும் சற்று திறக்கவே செய்வான். என்பது ஒரு வேடிக்கைகாட்டிக்கு தெரியாத ஒன்றல்ல.


உருவமற்ற ஆனால் உயிருள்ள உயர் இறைவன் உயிர் உருவ வரை வடிவ வணிகவியலை ஊக்குவிக்கவில்லை. வரை கோடிட்டு வர்ணம் தீட்டி விற்றுப்பிழைக்கும் போது உயிர்ஜீவராசிகளின் உருவங்களை வரைந்திட வேண்டாம்.!  மறுமைநாளில் மாமன்னவன் அல்லாஹ் உங்களது உயிரோவியங்களுக்கு உயிர் கொடுங்கள் எனறு சொன்னால்…… அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்.   இவைத்தவிர வரைவதற்க்கென்று எண்ணற்ற நிறைவடிவங்கள் இருக்கத்தானே செய்கிறது என்கிறது இஸ்லாமியம்.

 இது ஒரு பழமைவாத பாரம்பரியம் எனறு இலங்கைக் கவிஞர், இளமைக்கவிஞர் ரிஷான்ஷெரிப் இஸ்லாமிய கண்ணாடிக் கூண்டிற்க்குள் நின்று கொண்டு அதுவும் பட்டப்பகலில் வெளீர் வெளிச்சம் தேடி கண்டணக் கனைக் கற்க்களை வீசுவது ஏன்......?

தேன்கவிச் சொற்க்களை திகட்டாமல் அள்ளிக்கொட்டிச் செல்கிற வேளையில் முக்காடிட்ட பெண்கள், பித்தேறிய ஆண்கள். பாரம்பரியச் சங்கிலிகள், முடங்கிய விரல்கள். என்பன போன்ற அமிலச் சொற்க்களையும் வலிந்து அள்ளிக் கொட்டுவது ஏன்.......? 

பரந்து விரிந்த இப்பாருலகில் எங்குதான் இல்லை ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்துவமும். 

பெண்ணியல் சுதந்திரத்தை வெகுவிசாலமாய் பேசுவோர் தங்களது சுய அகக்கண்ணாடியில் முதலில் தமது சுயமுகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். அப்போது தெரிந்து விடும் அவர்களது எழுத்தும் பேச்சும் அழகியல் தன்மை கொண்டவை தானா என்று. 

பெண்ணியத் திறமைகளை இஸ்லாம் இம்மண்ணில் ஒரு போதும் ஒரங்கட்டி வைக்கவில்லை. வெளிப்படுத்தும் வழிமுறைகளை நிறைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறது இனிய இஸ்லாம். 

பாரம்பரியச் சங்கிலித் தொடர்கள் நிறைந்த ஈரானியப் பெண்களிண் நூறாண்டுச் சாதனைகள் அகிலம் அறியாத ஒன்றல்ல. 

பெண்ணியத் திறமைகளை ஒடித்துப்போட்ட மத குருமார்களின் பிரம்புகளை விட, அதீத சுதந்திரங்களை சுயநல சிறைக்கூடங்களுக்குள் அடுக்கிவைத்துக்கொண்டு வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே......! என்னிடம் வாருங்கள்  இளைப்பாருதல் தருகிறேன் என்று அறைகூவல் விடுகிற அதிநவீனத்துவ முற்ப்போக்குவாதிகள் தான் இங்கு அதிகம் ரிஷான் அவர்களுள் ஒருவராக இருக்கக்கூடும்.

அதீத அறிவாலோ அல்லது அறியாமையினாலோ இஸ்லாமை பழித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகும் என்பதை உள்ளதை உள்ளபடியே காட்டும் உயர்தர இஸ்லாமியக் காலக் கண்ணாடி  என்றென்றைக்கும் காரிருள் நீக்கும் பேரொளி வெளிச்சங்களை பிரதிபலித்துக் கொண்டேதான் இருக்கும்.


                                 

                                                                    SNR_MASLAHI@YAHOO.CO.IN




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக