வெள்ளி, 14 ஜூன், 2013

அன்பே – இஸ்லாத்தின் அழகிய அடிப்படை


அல்லாஹ்வின் வார்த்தையாம் அல்குர்ஆன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளிலெல்லாம் மிக மேலான அருட்கொடை ஆகும். ஏனெனில் மனிதனுடைய இம்மை வாழ்வு செம்மையடைவதற்கும், அவன் தன்னையும், தன்னைப் படைத்தவனையும் அறிந்து தெளிவதற்கும் அதன் மூலம் மறுமையில் அழிவில்லா அருளானந்தப் பெருவாழ்வினைப் பெறுவதற்கும் இந்த குர்ஆன் வழிகாட்டியாய் அமைந்துள்ளது.


அறிவுக் கருவூலமாய், அருள் சுரக்கும் பெட்டகமாய், அன்பார்ந்த கட்டளையாய், வழிபட்டோருக்கு நற்செய்தியாய், வழிதவறியவருக்கு அச்சமூட்டும் எச்சரிக்கையாய், எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாததாய் விளங்கும் அல்குர்ஆனின் (இஸ்லாத்தின்) அடிப்படையாம் அன்பைப் பற்றி பார்ப்போம்.
 
1.திருக்குர்ஆன் – இதோ திருக்குர்ஆனின் ஆரம்ப வரி கூறுகின்றது. ’பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.’ பொருள் – அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
அல்ஹம்துலில்லாஹ் ! திருக்குர்ஆனின் ஆரம்ப வரி அன்பை உணர்த்துகிறது என்பதை அறியலாம்.
2 .இஸ்லாம் – இஸ்லாம் என்றால் அமைதி சமாதானம் என்று பொருள். அமைதியையும், சமாதானத்தையும் உலகில் பரப்பி அன்புடன் வாழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நோக்கம் ஆகும். அல்ஹம்துலில்லாஹ் ! என்ன ஒரு அழகிய அர்த்தம் இஸ்லாத்திற்கு.
 
3. இஸ்லாத்தில் முகம்மன் கூறும் முறை – ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஸலாம் மூலம் முகம்மன் கூறவேண்டுமென்பது இஸ்லாமிய ஒழுக்க நெறியாகும். ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு’ பொருள் – அல்லாஹ்வின் அழகிய சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். மேலும் அவனது கருணையும், பாக்கியமும் உங்கள் மீது உண்டாகட்டும். அல்ஹம்துலில்லாஹ் ! இஸ்லாமிய முகம்மன் முறையும் கூட அன்பையும், சமாதானத்தையும் உணர்த்துகிறது
4. அல்குர்ஆன் கூறுகிறது – மேலும் அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், பிரயாணம் தொழில் போன்றவற்றில் கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (4:36) இவ்வசனத்தின் மூலம் யார் தன்னுடைய தாய் தந்தை நெருங்கிய உறவினர்கள் அண்டை வீட்டார் கூட்டாளிகள் வழிப்போக்கர்கள் ஆகியோருடன் அன்புகாட்டவில்லையோ, அவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று எச்சரிக்கிறது. அன்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாத்தில் அல்ஹம்துலில்லாஹ் !
5. அண்டை வீட்டாரிடத்தில் அன்பு - அபூதர் அவர்களே, நீர் குழம்பைத் தயார் செய்தால் அதில் தண்ணீரை அதிகமாக்கி பின்பு உம் பக்கத்து வீட்டாரையும் கவனித்து அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பீராக என்று என் நேசர் நபி (ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள். (முஸ்லிம் 2625 – 142.143) மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். எவனது தீங்கைக் கண்டு பக்கத்து வீட்டார் பயப்படுகிறார்களோ அவன் ஒரு இறை விசுவாசி (முஃமீன்) அல்ல என்று. இதன் மூலம் நாம் எவ்வளவு அன்பை அண்டை வீட்டாரிடத்தில் செலுத்தினால் அல்லாஹ்வின் நேசத்தை பெறமுடியும் என்று. சிந்தியுங்கள் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்று.
6. இன்முகம் - தனது சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பது உட்பட எந்த ஒரு நல்லறத்தையும் இலேசாக எண்ணிவிடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பாளர் அபூதர் (ரலி) நூல் முஸ்லிம். இஸ்லாத்தில் நன்மைபெற பல வழிகள் காட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மனிதர்களுக்கு நன்மை தரும் செயலாக இருக்கும். ஒரு மனிதர் தனது சகோதரனை புன்சிரிப்புடன் பார்ப்பதும் கூட நன்மை ஆகும். பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எதையும் கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவன் தன் முகத்தால் அன்பை வெளிப்படுத்தினால் அதற்கும் கூட அல்லாஹ் மறுமையில் நன்மையளிக்கிறான் என்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள். அல்ஹம்துலில்லாஹ் ! என்னே ஒரு எளிமையான மார்க்கம் இஸ்லாம்.
 
7. ஒற்றுமை - நீங்கள் ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பகைமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியாராகவும், சகோதரராகவும் ஆகுங்கள். தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருப்பது முஸ்லிமுக்கு ஆகுமானதல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – அனஸ் (ரலி) நூல் – புகாரி, முஸ்லிம்.
சிந்தியுங்கள். இன்று பணம் தான் குறிக்கோள் என்று வரும்போது சொந்தம் பந்தம் நண்பர் இப்படி எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் பகைமை உணர்வு மேலோங்கி விடுகிறது. இதனால் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுகிறது. இதன் மூலம் சமுதாயத்திற்கே பெரும் கேடு நிகழ்ந்து விடுகிறது. இத்தனையும் கருத்தில் கொண்டுதான் இஸ்லாம் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுடன் 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராம் (விலக்கப்பட்டது) என கடுமையாக எச்சரிக்கிறது. எப்போதும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாம் விரும்பும் மனிதநேயமாகும்.
 
8. மஃரூர் இப்னு சுவைது (ரலி) அறிவிக்கின்றார்கள். (ஒருமுறை) அபூதர் (ரலி) அவர்கள் அழகிய மேலாடை அணிந்திருக்க கண்டேன். அவரது ஊழியரும் அதேபோல் அழகிய மேலாடை அணிந்திருக்க கண்டேன். இதுபற்றி அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தான் ஓர் அடிமையை ஏசியதாகவும், அவரின் தாயார் பற்றிப் பழித்துப் பேசியதாகவும் கூறிவிட்டு, அப்போது நபி (ஸல்) அவர்கள் “அபூதாரே நீர் இன்னும் அறியாமைக் காலத்தவராகவே இருக்கின்றீர். அவர்கள் (அடிமைகள்) உங்களின் சகோதரர்கள் ஆவர். உங்களின் கைகளில் அல்லாஹ் அவர்களை ஒப்படைத்து உள்ளான். எனவே தனக்கு கீழ் அவருடைய சகோதரர் இருந்தால், தான் சாப்பிடுவதிலிருந்து அவருக்கு உண்ணக் கொடுக்கட்டும். தான் உடுத்திய ஆடை போல் அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களது சக்திக்கு மீறி அவர்களுக்கு வேலைகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். (ஒருவேளை) அவர்களுக்குச் சிரமமான வேலை தந்தால் அவர்களுக்குத் துணையாக நீங்களும் உதவுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர் (ரலி) சொன்னார்கள். (நூல், புகாரி 2545 முஸ்லிம் 1661)
இந்த சம்பவத்தின் மூலம் இஸ்லாம் எவ்வாறு அன்பையும் மனித நேயத்தையும் வலியுறுத்துகிறது என்பதை அறிய முடியும். அல்ஹம்துலில்லாஹ் ! நாமும் அனைவரிடத்திலும் அன்புக் காட்டி அல்லாஹ்வின் அன்பை பெற முயற்சிப்போம்.
அறிந்து கொள்வோம் – அல்லாஹ் நம் மீது வைத்திருக்கும் அளவில்லா அன்பின் காரணமாகத்தான் திருக்குர்ஆனின் மூலம் அச்சமூட்டி எச்சரிக்கின்றான் வாழுங்கள் முஸ்லிமாக என்று. மேலும் ஒவ்வொரு (இஸ்லாமியனும் – முஸ்லிமும்) நம் மீதும் பிற மத சகோதரர்கள் மீதும் வைத்திருக்கும் அன்பினால் தான் அழைக்கின்றான், வாருங்கள் இஸ்லாத்தை நோக்கி என்று, இன்ஷா அல்லாஹ் சிந்தித்து செயல்படுவோம், அல்லாஹ்வின் அன்பை பெற. அல்ஹம்துலில்லாஹ்!
 மு.கதிஜத்துல் சாரா அமீரா – சென்னை
நன்றி : நர்கிஸ் மாத இதழ் – ஜுன் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக