புதன், 14 டிசம்பர், 2011

சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி வேதாளத்தைத் தூக்கி இன்னோவாவில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, ""நண்பா, ஒரு நல்ல டீ சாப்பிடணும்; வண்டிய நேரா "சீ மெரிடியன்' ஓட்டலுக்கு ஓட்டு, அங்க வெச்சு உனக்கு ஒரு கதை சொல்றேன்''என்றது வேதாளம். விக்கியின் இன்னோவா "சீ மெரிடியனை' நோக்கிச் சீறியது.



வேதாளத்தை நம்பி ஓட்டலுக்குச் செல்ல முடியாதென்று நினைத்த விக்கி வண்டியை வெளியே நிறுத்தினான். ""ஆறு ரூவா "டீ'க்கே அக்கவுண்டு சொல்றவனை நம்பி "ஸ்டார்' ஓட்டல்குள்ள ஸ்டெப் எடுத்து வைக்க முடியாதுன்னு தயங்குறியா நண்பா? பயப்படாதே, உள்ள பணக்கார நண்பனுக பலபேரு இருக்காங்க... பயப்படாம வா'' என்றது வேதாளம்.


வேதாளத்தின் பேச்சில் நம்பிக்கை வராமல் வண்டியைத் திருப்பினான் விக்கி. உடனே, "கோவிச்சுக்காத நண்பா. ஒரு சின்ன சிக்கல் அதைத் தீர்த்து வைக்கத்தான் <உன்னை இங்க கூட்டீட்டு வந்தேன். "மல்டி லெவல் மார்க்கெட்டிங்' பத்திக் கேள்விப்பட்டிருக்கியா? அதான்பா, எழவு வீட்டுக்கு போனாக் கூட "எப்பிடிப் பணக்காரன் ஆகுறது'ன்னு, அழுகுறவங்களுக்கு மத்தியில நின்னு மணிக்கணக்கா பேசுவாங்களே அந்த "குரூப்'தான்'' என, ஆரம்பித்தது வேதாளம்.


"ஒருநாள் ராத்திரி மரத்துக்கு கீழ நாலு "ஸ்கார்ப்பியோ' வந்து நின்னுச்சு. யாரோ நம்மளைத்தான் தேடி வந்திருக்காங்கன்னு எட்டிப் பாத்தேன். ஆனா, அவங்க "ஓன் பாத்ரூம்' போறதுக்காக வண்டிய ஓரங்கட்டியிருக்காங்க. மூக்கணாங்கயிறு மாதிரி கழுத்துல தங்கச்சங்கிலி, கையில பிரேஸ்லெட்டுன்னு பந்தாவா இறங்குன ஆளை எங்கியோ பாத்த மாதிரி இருக்கேன்னு உத்துப்பாத்தா, அட... நம்ம பழைய பங்காளி. சந்தோசமா கீழ இறங்கி வந்து குசலம் விசாரிச்சேன்.


"இந்த நாத்தம் புடிச்ச இடத்துலதான் இன்னும் நீ குடி(?)யிருக்கியா? எப்பிடி உன்னை இத்தனை நாளா மறந்தேன்' அப்புடின்னு பாசமா பேசுனான். "இத்தனை வருஷமா உழைச்சு என்னத்தக் கண்டே.... அடுத்தவனுக்காக வேலை பார்த்தா 5 ஆயிரத்துக்கு மேல சம்பாதிக்க முடியாது. என் கூட வா உழைக்காமயே சம்பாதிக்கலாம்; ஆறே வாரத்துல ஐ.பி.எல்., டீமை வாங்கலாம், பத்தே வாரத்துல பாகிஸ்தானை வாங்கலாம்'னு அடிச்சு உட்டான்.


"இந்த பிசுனஸ்ல, பிளாட்டினம், கோல்டு, சில்வர், ஈயம், பித்தளை, பேரீச்சம்பழம்ன்னு பல ரேஞ்சு இருக்கு. வாராவாரம் "செக்'கு வரும்; வாங்குறதுக்கு நீ உசுரோட இல்லேன்னாலும் நாலு தலைமுறைக்கு(!) "ராயல்டி' வரும்'னு அவன் குடுத்த அலப்பறையில மயங்கி 5 ஆயிரம் கட்டி கூரியருக்கு காத்திருந்தா, செக்கு வரலை; செருப்புதான் வந்துச்சு. ஏன்னு கேக்குறியா? "செக்'கு வரும்ன்னு நம்பி ரோட்டையே பாத்துட்டு இருந்ததால, போற வர்ற பொம்பளைங்க அவங்களைத்தான் பாக்குறேன்னு தப்பா நெனைச்சுட்டாங்க. "சனியனைப் புடிச்சு பனியனுக்குள்ள போட்டவனுக்கு "செக்'கு வராது செருப்புதான் வரும்'னு லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன் நண்பா.
நம்ப பங்காளியப் புடிச்சு இன்னும் ஏன் "செக்'கு வரலைன்னு விசாரிச்சா, உனக்கு கீழ "லெப்டு ரைட்டு'ன்னு நாலு பேர சங்கிலியா சேத்தாதான் வரும்ங்கறான். நாலு பேரைப் புடிக்க நான் எங்க போவேன்? எனக்குப் போட்ட பணம் வந்தாலே போதும்ன்னு ஆயிருச்சு. அதான் உன்னைக் கூட்டிகிட்டு வந்தேன்'' என்றது வேதாளம்.


பல போர்களைக் கண்ட விக்கி, எம்.எல்.எம்., என்கிற பேரைக் கேட்டதும் ஓடத் துவங்க, அவனை விரட்டிப் பிடித்த வேதாளம், ""எங்கூட கூட்டத்துக்கு வா; இல்ல 5 ஆயிரத்துக்கு ஒரு வழியச் சொல்லு, இல்லைன்னா உன் தலை வெடிக்கும்'' என்றது.
"உழைக்காம பணம் சம்பாதிக்கலாம்; அதுக்கு நீ உழைச்சு சம்பாதிச்ச பணத்துல இருந்து 5 ஆயிரத்தை கட்டுன்னு, ஒருத்தன் சொல்றதுல இருந்தே உழைக்காம எதுவும் கிடைக்காதுன்னு புரியலையா? இன்னைக்கு இருக்கற இந்த வளர்ச்சியும், மாற்றமும் வியர்வையால வந்ததுதான். அந்த உழைப்பை ஒருத்தன் கேவலமா பேசியிருக்கான்; அவனை உதைக்காம, 5 ஆயிரம் குடுத்திருக்கியே உனக்கு வெக்கமா இல்ல?


எங்க பொருளை வாங்கி, "ஃப்ரீ டைய'த்துல உங்க பக்கத்து வீட்டுக்காரங்ககிட்டயும் தெரிஞ்சவங்கிட்டயும் "பிசினஸ் பண்ணுனா, உழைக்காம சம்பாரிக்கலாம்ன்னு ஒருத்தன் சொல்லுறான்; அதுக்கு நீங்க மண்டைய ஆட்டிட்டு வர்றீங்க. பக்கத்து வீட்டுகாரங்ககிட்ட ஒரு பொருளை விக்குறதுக்குப் பேரு உழைப்பு இல்லையா? பக்கத்து வீட்டுக்காரங்களும், நமக்குத் தெரிஞ்சவங்களும், நம்ம மேல இருக்கற நம்பிக்கையிலதான அந்தப் பொருளை வாங்குறாங்க. நமக்கு இருக்கற நல்ல பேரைத் தன்னோட பொருளை விக்க பயன்படுத்தறதும் இல்லாம, நீ ஒண்ணுமே பண்ணாம உனக்கு பணம் கொட்டும்ன்னு பச்சைப்பொய் சொல்றானே, அவனை விடலாமா? உடம்பை வளைச்சு ஒரு வேலையும் செய்ய வேண்டாம்; இதுல சேர்ந்தாலே கோடி கோடியா சம்பாதிக்கலாம்ன்னு கதை விடுறானே, அவன் குடுக்குற பொருட்கள் எப்படி வந்துச்சு? யாரோட உழைப்பும் இல்லாம வானத்துல இருந்து கொட்டுச்சா? அந்தப் பொருட்களை உருவாக்குற உழைப்பாளிக எல்லாம், உழைச்சு என்னத்தைக் கண்டோம், நாமளும் எம்.எல்.எம்., ஆகலாம்ன்னு வந்துட்டா, விக்கறதுக்கு இவங்ககிட்ட எதுவும் மிச்சமிருக்காது. உழைக்காம சம்பாதிக்கலாம்ன்னு நெனைச்சதுக்கு உனக்கு தண்டனையா 5000 போச்சு. இனியாவது, உழைச்சு சம்பாதிக்கிற வழியைப் பாரு,'' என்றான் விக்கி.


விக்கியின் இந்த சரியான பதிலால் அவன் மௌனம் கலைந்தது; முகத்தைத் தொங்கப் போட்டபடி வேதாளம் பறந்தது.

 இரா.செந்தில் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக