வெள்ளி, 2 டிசம்பர், 2011

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?



தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும். குறைந்த நேரம்  தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர்.  ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.
அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.


தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது


தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும்.    இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது.  அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும்  பலமும் பெற ஏதுவாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.  நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது  களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.
சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மது, புகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள்.  மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.
மனப்பாதிப்பு, தீராத சிந்தனை, பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.



உடல் உழைப்பு


உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும்.  உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது.  இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன்.  அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள்.  ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.


எவ்வளவு நேரம் தூங்கலாம்


ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து  தூக்கம் வித்தியாசப்படும்.  இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8மணிநேரம் தூக்கம் தேவை.  ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும்.  பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு  10-12 மணி நேரம் தூக்கம் அவசியம்.  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9மணி நேரத் தூக்கம் அவசியம்.  முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.


உடலில் உள்ள கடிகாரம்


நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது.  இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.  குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது.  இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது.  நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும்.  இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும்.  பின் இது தூக்கத்தைத் தூண்டும்.  அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர்.  இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.
இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள்.  பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.
பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது.  இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது.  இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.


தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்


தூக்கமின்மையால் மன உளைச்சல், ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.


தூக்கத்தின் பயன்கள்


ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.
நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது.  ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது.  புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking)  நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்.  நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.  இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம். (மருத்துவம்.காம்)

(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்;இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.  (அல்குர்ஆன் 8:11)

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்;  இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)

அப்துல்லாஹ்! எல்லா நாட்களும் நோன்பு வைப்பதாகவும், இரவு முழுவதும் தொழுவதாகவும் உன்னைப் பற்றிச் சொல்லப்படுகிறதே என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். நான் 'ஆம்' (உண்மைதான்) என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அப்படிச் செய்யாதே'' (சில நாட்கள்) நோன்பு வை. (சில நாட்கள்) நோன்பை விட்டு விடு. (கொஞ்ச நேரம்) தொழு (கொஞ்ச நேரம்) தூங்கு. ஏனெனில் உன் உடலுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உள்ளது. உன் கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு. உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.(நூல்: புகாரி 1153, முஸ்லிம் 2143, திர்மிதி மற்றும் நஸயீ)

'தூக்கத்தை ஒரு மனிதன் தன் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமை' என நபி(ஸல்) அவர்கள் கூறி, தூங்காமல் தொழுது கொண்டே இருப்பதைத் தடுத்துள்ளார்கள். நபி(ஸல்) கூறினார்கள்: உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால், அவர் தம்மை விட்டுத் தூக்கம் அகலும் வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர்(உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப் போக, அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து) விடக்கூடும். (புகாரி 212-முஸ்லிம் 1440)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக