"ஒரு முத்தத்திற்கே மரண தண்டனையா?”
தீர விசாரிப்போம் தீமைகளைத் தவிர்ப்போம்!
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، أَمَّا بَعْدُ
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ
«الْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ»
சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் மக்கா புனித மஸ்ஜிதுல் ஹராம் தொடர்பான ஒரு செய்தி காட்டுத்தீ போலப் பரவி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் இந்த விவகாரம் பலவிதமான மிகைப்படுத்தல்களுடன் பரப்பப்பட்டது:
மக்காவுக்கு உம்ரா அல்லது (Honeymoon) வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள், கஃபாவை பின்னணியாக வைத்து சமூக ஊடக வீடியோவுக்காக (Reels) பொதுவெளியில் முத்தமிட்டதாகவும், அதனால் பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கைது செய்து உடனடியாக மரண தண்டனை விதித்ததாகவும் ஒரு தகவல் பரவியது.
இந்தச் செய்தியோடு சேர்த்து, மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் இருவர் பொதுவெளியில் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை பெறுவது போன்ற 2015-ஆம் ஆண்டின் பழைய குற்ற வழக்குகளின் வீடியோக்களை இணைத்து, இதுதான் அந்தச் சம்பவம் எனப் பலரும் தவறாகப் பகிர்ந்தனர்.
"ஒரு முத்தத்திற்கே மரண தண்டனையா?" என்ற கோணத்தில் பல வெளிநாட்டு இணையப் பக்கங்களிலும், மனித உரிமைக் குழுக்களின் தளங்களிலும் சவூதி சட்ட நடைமுறைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
உண்மை பின்னணி என்ன?
சர்வதேச ஊடக அறிக்கைகள் மற்றும் தூதரகத் தகவல்களின் அடிப்படையில் வெளிவந்த உண்மை நிலவரம்:
தண்டனைக்குள்ளான நபர்கள் (நஸ்ருல் இஸ்லாம் மற்றும் சிட்டி அக்தர்) உம்ரா செய்யச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அல்ல. அவர்கள் இருவரும் புனித மஸ்ஜிதுல் ஹராம் வளாகத்திலேயே தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் (Cleaners).
சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில், அவர்கள் மசூதி வளாகத்திற்குள் "ஒழுக்கக்கேடான / புனிதத்தை அவமதிக்கும் இழிவான செயலில்" ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டது. சவூதி அரேபியச் சட்டப்படி, புனித கஃபா வளாகத்தில் நடைபெறும் இத்தகைய ஒழுக்கக் கேடுகள் மிகக் கடுமையான "ஹராம் எல்லை மீறலாக" (Desecration of holy site) கருதப்படுகிறது.
முத்தத்திற்காக மட்டும்தானா?: சவூதி சட்ட அமைப்பில் பொதுவெளியில் வரம்பு மீறுவதற்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகளே எடுக்கப்படும். மரண தண்டனை என்பது மிகத் தீவிரமான குற்றங்களுக்கே வழங்கப்படும். எனவே, இணையத்தில் பரப்பப்படுவது போல "வெறும் ஒரு அன்பான முத்தத்திற்காக மட்டுமே" மரண தண்டனை அளிக்கப்பட்டது என்பது உண்மைக்கு மாறான, மிகைப்படுத்தப்பட்ட வதந்தி. எனினும், வழக்கின் முழுமையான விசாரணை நகலை சவூதி அரசு பொதுவெளியில் பகிரவில்லை
ஜாகோ நியூஸ் 24 பங்களாதேஷ் செய்தி ஊடகம்
சவூதி அரேபியாவில், பங்களாதேஷிகளான.... நஸ்ருல் இஸ்லாம் பஷீர் மற்றொரு பங்களாதேஷ் நாட்டவரான ஸ்வீட்டி எனப்படும் சித்தி அக்தருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டனர்
இதுபற்றி... பங்களாதேஷ் ஊடகம் ஒன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆணின் வீட்டை தேடிச் சென்று அவரின் தந்தை பஷீரை சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் பரியா சதர் மாவட்டத்தின் சுல்தான்பூர் ஒன்றியத்தில் உள்ள பிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நஸ்ருலின் தந்தை அப்துல் பஷீர், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், தங்கள் குடும்பத்திற்கு ஸ்வீட்டியை யாரென்றே தெரியாது என்றும் கூறி இந்தக் கூற்றை முற்றாக மறுத்துள்ளார்.
ஜாகோ நியூஸிடம் பேசிய அப்துல் பஷீர்,
தனது குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்ற உதவுவதற்காக, தனது மகன் நஸ்ருல் இஸ்லாம் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவனை சவுதிக்கு வேலை பார்க்க அனுப்பியதாகக் கூறினார்.
அவரின் கூற்றுப்படி, 25 வயதான நஸ்ருல் தனது குடும்பத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் நம்பிக்கையில், 2022 நவம்பர் 10 அன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.
சவூதி அரேபியாவுக்கு சென்ற பிறகு வேலை பார்த்த நஸ்ருலால் ஆறு மாதங்கள் மட்டுமே வேலை செய்து பணம் அனுப்ப முடிந்ததாகவும், அதன் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகள் & மூன்று மாதங்களைச் சிறையில் கழித்ததாகவும் அவர் தந்தை கூறினார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார், என்ன குற்றம் செய்தார் என்பது அவரது குடும்பத்தினருக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. திடீரென 3 ஆண்டுகள் கழித்து இப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறார்கள்.
நஸ்ருலின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்த பிறகு, அவரது அத்தை அபேதா பேகம் புதன்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார் என்றும் அப்துல் பஷீர் தனது சகோதரியின் மரணம் பற்றி கூறினார்.
“என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்தப் பெண் நஸ்ருலின் மனைவியே அல்ல. எங்களுக்கு அவரை யாரென்றே தெரியவே தெரியாது. அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ததாக பிறகு கேள்விப்பட்டேன். அவர்களுடைய உடல்கள் பங்களாதேஷுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுகின்றன என்பதும் உண்மையல்ல,” என்று அவர் கூறினார்.
“என் மகனை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக நான் 7 லட்சம் டாக்கா கடன் வாங்கினேன். அவர் எனக்கு 6 மாதங்களில் 1 லட்சம் டாக்கா அனுப்பினார். இப்போது நான் யாரிடம் கடன் வாங்கினேனோ அவர்களும் எனக்கு கடனை கேட்டு அழுத்தம் கொடுக்கிறார்கள். என் மகனின் உடல் அவனது தாய்நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும். என் மகனுக்குக் காரணமின்றி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், எனக்கு நீதி வேண்டும்,” என்று அவர் கூறினார்.
நஸ்ருல் சவுதி வந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, மக்காவில் மஸ்ஜிதில் "அநாகரிகமான செயலில்" ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, சவூதி காவல்துறை அவரையும் ஸ்வீட்டி அக்தர் என்ற இளம் பெண்ணையும் 2023 ஆம் ஆண்டு மத்தியில் கைது செய்தது. நஸ்ருலின் கைது பற்றி அவரது குடும்பத்தினர் அந்த நேரத்தில் அறிந்திருந்தாலும், அதற்கான சரியான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
உறவினர்களின் கூற்றுப்படி, நஸ்ருல் இஸ்லாம் மற்றும் ஸ்வீட்டி அக்தர் ஆகியோர் மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர், கடந்த புதன்கிழமை சவூதி அரசாங்கத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டனர்.
நஸ்ருலுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி பரவியதிலிருந்து, கிராம மக்கள் அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரிப்பதுடன், தங்கள் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
"சவூதி அரேபியாவைத் தொடர்புகொண்டு உண்மைகளை வெளிக்கொணருமாறு அரசாங்கத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் இதுவரை பார்த்த வரையில், வங்கதேச தூதரகத்தின் தரப்பில் கணிசமான அலட்சியம் இருந்துள்ளது. அவர்கள் தொடர்பைப் பேணி வந்திருந்தால், நிலைமை இந்த அளவுக்கு வந்திருக்காது,” என்று அவர் கூறினார்.
இத்தகைய சூழலில், இஸ்லாமிய அடிப்படையில் நாம் உணர்ந்து படிப்பினை பெற வேண்டிய இரண்டு மிக முக்கியமான கடமைகள் உள்ளன:
அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் ஆலயங்களையும் கண்ணியப்படுத்துதல்.
சமூகத்தில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்தல்.
அல்லாஹ்வின் அடையாளங்களைப் பேணுதல் (ஷஆயிருல்லாஹ்)
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ
"இதுவே (இறை கட்டளையாகும்). எவர் அல்லாஹ்வின் புனித அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது இதயங்களின் இறையச்சத்தின் வெளிப்பாடாகும்." (அல்குர்ஆன் 22:32)
பூமியில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இடங்கள் பள்ளிவாசல்களாகும்; அதில் தலையாயது மக்கா திருநகரமும், கஃபத்துல்லாஹ்வும் அமைந்திருக்கும் புனித ஹரம் ஷரீஃப் ஆகும்.
ஹரமின் தனித்துவம்: அங்கு ஒரு நற்செயல் செய்தால் பல்லாயிரக்கணக்கான மடங்கு நன்மைகள் வழங்கப்படுவது போல, அங்கு செய்யப்படும் பாவங்களுக்கும் தகுந்த தண்டனை உண்டு என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் இந்த பூமியிலே சில இடங்களுக்கு மகத்தான புனிதத்தை வழங்கியிருக்கின்றான். அந்தப் புனித தலங்களிலே முதன்மையானதும் தலையாயதுமான இடம் தான் நாம் தொழுகைக்காக முன்னோக்குகின்ற 'பைத்துல்லாஹ்' என்னும் புனித கஃபா.
கஃபத்துல்லாஹ் மற்றும் ஹரமின் சிறப்புகள் ஒரு தொழுகைக்கு 1,00,000 தொழுகைகளின் நன்மை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
عَنْ جَابِرٍرَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ
"எனது இந்த (மதீனா) மஸ்ஜிதில் தொழுவது, ஏனைய மஸ்ஜிதுகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்; மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர. மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் ஒரு தொழுகை, ஏனைய மஸ்ஜிதுகளில் தொழும் ஒரு இலட்சம் (100,000) தொழுகைகளை விடச் சிறந்ததாகும். (நூல்: அஹ்மத், இப்னு மாஜா)
பூமியில் அமைக்கப்பட்ட முதல் ஆலயம்
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ؟قَالَ: «المَسْجِدُ الحَرَامُ قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟
قَالَ: «المَسْجِدُ الأَقْصَى»،قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟
قَالَ: «أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الفَضْلَ فِيهِ
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன்முதலில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'மஸ்ஜிதுல் ஹராம்' என்றார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன். 'மஸ்ஜிதுல் அக்ஸா' என்றார்கள்…”நூல்:ஸஹீஹ் புகாரி
அந்த இடத்தில் வரம்பு மீறினால்…
وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ
"எவரேனும் அங்கு (புனித ஹரமில்) அநீதி இழைத்து, வரம்பு மீற நாடுகிறாரோ, அவருக்கு நோவினை தரும் வேதனையை நாம் சுவைக்கச் செய்வோம்."(அல்குர்ஆன் 22:25)
மற்ற இடங்களில் ஒரு பாவத்தைச் செய்ய நினைத்துவிட்டு அதைச் செய்யாவிட்டால் பாவம் எழுதப்படாது; ஆனால் ஹரமில் வரம்பு மீற எண்ணுவதே (நாடுவதே) கொடிய வேதனைக்குரிய குற்றமாகிறது என்று முஃபஸ்ஸிர்கள் (இப்னு கஸீர் போன்றோர்) இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கின்றனர்.
அல்லாஹ்விடம் மிகவும் வெறுக்கத்தக்க மனிதன்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلاَثَةٌ: مُلْحِدٌ فِي الحَرَمِ، وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الجَاهِلِيَّةِ، وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ
ஹரம் எல்லைக்குள் வரம்பு மீறி அநீதி செய்பவன்.
இஸ்லாத்தில் இணைந்த பிறகும் அறியாமைக் காலத்து வழக்கங்களைத் தேடுபவன்.
ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்துவதற்காக எவ்வித நியாயமுமின்றி அவனைக் கொலை செய்ய நாடுபவன்." நூல்: ஸஹீஹ் புகாரி
இமாம் இப்னுல் கையிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:- ஹரமில் நன்மைகளின் கூலி பல மடங்கு உயர்த்தப்படுவது போல, அங்கு செய்யப்படும் பாவங்களின் எண்ணிக்கையும் பல மடங்காக மாறுவதில்லை என்றாலும், அந்தப் பாவத்தின் தீவிரமும் (கனம் / சீரியஸ்னஸ்) கொடூரமும் பல மடங்கு அதிகரிக்கின்றது.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:-
"மக்காவுக்கு வெளியே எழுபது பாவங்களைச் செய்வதை விட, மக்காவுக்குள் ஒரு பாவத்தைச் செய்வது எனக்கு மிக அச்சமூட்டக்கூடியதாகும்.”
அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவதும், அவன் தடைசெய்த பாவங்களைச் செய்வதும் எப்போதுமே கொடிய குற்றம்தான். ஆனால், அதே பாவத்தை அல்லாஹ் புனிதம் என்று கண்ணியப்படுத்திய எல்லைக்குள்ளே ஒருவன் துணிந்து செய்தால், அல்லாஹ்வின் தண்டனை எத்தகைய விரைவாக வரும்? மனிதனின் வழிகேடு எத்தகைய கீழ்நிலைக்குச் செல்லும்? என்பதற்கு அரபு வரலாற்றிலே ஒரு மிக முக்கியமான படிப்பினை இருக்கிறது. அதுதான் இஸாஃப் மற்றும் நாஇலா என்ற இருவரின் வரலாறு.
வரலாற்றுப் பின்னணி: யார் இந்த இஸாஃப் மற்றும் நாஇலா?
இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பிறகு மக்காவில் 'ஜுர்ஹும்' (Jurhum) கோத்திரத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாஹிலிய்யா காலப்பகுதி அது. அக்காலத்தில் யமன் தேசத்திலே இரண்டு நபர்கள் வாழ்ந்து வந்தார்கள்:
ஆணின் பெயர்: இஸாஃப் பின் பஃக்லா (إِسَاف بْن بَغْلَى)
பெண்ணின் பெயர்: நாஇலா பின்த் தைப் (نَائِلَة بِنْت ذِئْب)
இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக நேசித்தனர். ஆனால், அவர்களின் குடும்பத்தாரும் ஊராரும் அவர்களின் தொடர்பை வன்மையாக எதிர்த்து தடை விதித்திருந்தனர். தங்களின் இச்சையை நிறைவேற்ற வேறு வழி தெரியாத இருவரும், மக்காவுக்குச் செல்லும் ஹஜ் யாத்ரீகர்களின் கூட்டத்தோடு சேர்ந்து, தங்களை யாத்ரீகர்கள் போலக் காட்டிக்கொண்டு மக்கா வந்தடைந்தனர்.
யாத்ரீகர்கள் அனைவரும் கஃபாவை வலம் வந்து தங்களின் இருப்பிடங்களுக்கு ஓய்வெடுக்கச் சென்ற ஓர் இரவை இவர்கள் தேர்ந்தெடுத்தனர். கஃபாவின் உள்ளே எவருமற்ற தனிமையான சூழலைப் பார்த்து, அல்லாஹ்வின் இறையில்லத்தின் கண்ணியத்தை அணுவளவும் உணராமல் கஃபாவின் உள்ளே நுழைந்தனர்.
அல்லாஹ்வை அஞ்சவேண்டிய அந்தப் புனிதக் கூடாரத்திலே, அல்லாஹ்வின் வரம்பை உடைத்து, அந்த இடத்திலேயே விபச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் கண்களை மறைத்துவிடலாம்; ஆனால் அகிலங்களைப் படைத்துக் கண்காணிக்கும் ரப்புல் ஆலமீனை எவரால் மறைக்க முடியும்? அல்லாஹ் அந்த இடத்திலேயே தன் உடனடித் தண்டனையை இறக்கினான்.
فَمَسَخَهُمَا اللَّهُ حَجَرَيْنِ مَكَانَهُمَا حِينَ ارْتَكَبَا الْفَاحِشَةَ فِي الْبَيْتِ الْحَرَامِ
"அவர்கள் இருவரும் அந்தப் புனித இல்லத்தில் மானக்கேடான அந்தப் பாவத்தைச் செய்த உடனேயே, அல்லாஹ் அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே இரண்டு கற்களாக மாற்றினான்."
மறுநாள் காலையில் மக்கள் கஃபாவின் கதவைத் திறந்து பார்த்தபோது, எலும்பும் சதையுமாக இருந்த மனிதர்கள் அங்கே கல்லாக, சிலைகளாக உறைந்து போய்க் கிடப்பதைக் கண்டு நடுங்கிப் போயினர்.
மக்கள் இக்காட்சியைக் கண்டு அதிர்ந்துபோய், "அல்லாஹ்வின் புனித எல்லையில் பாவம் செய்வோருக்கு இதுவே முன்னுதாரணத் தண்டனை" என்பதை வரும் தலைமுறையினர் நினைவுகூர வேண்டும் என்பதற்காக:
இஸாஃப்பின் கல் உருவத்தை ஸஃபா (الصفا) மலையின் மீதும், நாஇலாவின் கல் உருவத்தை மர்வா (المروة) மலையின் மீதும் கொண்டுபோய் வைத்தனர்.
யாத்ரீகர்கள் ஸஃபா மற்றும் மர்வாவுக்கு இடையே ஓடும்போதெல்லாம் இந்த உருவங்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் இல்லத்தில் பாவம் செய்தால் கல்லாக்கப்படுவோம்" என்று அச்சமடைந்து எச்சரிக்கையுடன் வாழ்வதே இதன் உண்மையான நோக்கமாக இருந்தது.
காலங்கள் உருண்டோடின. அந்த எச்சரிக்கையைக் கண்ட தலைமுறையினர் மரணித்தனர். தலைமுறைகள் மாற மாற, அந்தச் சிலைகளின் உண்மையான வரலாற்றுப் பின்னணியை ஷைத்தான் மக்கள் நெஞ்சிலிருந்து மறக்கடித்தான்.
அரபு தேசத்தில் முதன்முதலில் சிலை வணக்கத்தைப் புகுத்திய 'குஸாஆ' கோத்திரத்தின் தலைவன் அம்ர் பின் லுஹை (عَمْرُو بْنُ لُحَيٍّ) என்பவன் அதிகாரத்திற்கு வந்தான். அவன் மக்களிடையே, "இவை வெறும் மனிதர்கள் அல்ல; அல்லாஹ்விடம் நமக்குப் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த தெய்வங்கள்" என்று கூறி, ஸஃபா மற்றும் மர்வாவில் இருந்த அந்த இரு சிலைகளையும் கஃபாவின் வாசலருகே கொண்டுவந்து நிறுவினான்.
பாவத்தின் அடையாளமாக வைக்கப்பட்ட உருவங்கள், பலிகொடுத்து வணங்கப்படும் கடவுளர்களாக மாறின. குறைஷிகள் அச்சிலைகளின் முன் கால்நடைகளை அறுத்துப் பலியிட்டு, அதன் இரத்தத்தைச் சிலைகள் மீது பூசி வழிபட்டனர். அப்துல் முத்தலிப் அவர்கள் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டுவதற்குக் கனவில் அடையாளம் காட்டப்பட்ட இடம்கூட, குறைஷிகள் இஸாஃப் மற்றும் நாஇலாவுக்குப் பலியிடும் இடமாகத்தான் அமைந்திருந்தது.
நபி (ஸல்) அவர்களின் இறுதித் தீர்ப்பு: மக்கா வெற்றி
ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றியாளராகத் திறந்து நுழைந்தார்கள் (ஃபத்ஹு மக்கா). கஃபாவைச் சுற்றி 360 சிலைகள் நின்றிருந்தன. நபிகளார் தமது கையில் இருந்த கைத்தடியால் ஒவ்வொரு சிலையையும் குத்தி வீழ்த்தி உடைத்தெறிந்தார்கள்.
அப்போது கஃபாவின் அருகாமையில் வைக்கப்பட்டிருந்த இந்த இஸாஃப் மற்றும் நாஇலா சிலைகளும் நொறுக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன.
وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ ذَهُوقًا
"மேலும், நீர் கூறுவீராக: சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயமாக அசத்தியம் அழிந்து போவதேயாகும்."அல்குர்ஆன் 17:81):
அல்லாஹ் புனிதம் என்று கண்ணியப்படுத்திய பள்ளிவாசல்கள், புனித நகரங்கள், மார்க்கக் கடமைகள் ஆகியவற்றை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. புனித இடங்களில் செய்யப்படும் பாவத்திற்குத் தண்டனை பலமடங்கு தீவிரமானது.
அசத்தியமும் மூடப்பழக்கங்களும் எத்தனை நூற்றாண்டுகள் கோலோச்சினாலும், அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் வரும்போது அவை ஒரு துரும்பைப்போல் அழிந்து போகும்.
நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் (السيرة النبوية لابن هشام) — இப்னு இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்புகள் ,அல்-பிதாயா வந்-நிஹாயா (البداية والنهاية) — இமாம் இப்னு கஸீர் (ரஹ்).
உருமாற்றம் இப்போதும் நடக்கலாம்
وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو عَامِرٍ ـ أَوْ أَبُو مَالِكٍ ـ الأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ، يَأْتِيهِمْ ـ يَعْنِي الْفَقِيرَ ـ لِحَاجَةٍ فَيَقُولُوا ارْجِعْ إِلَيْنَا غَدًا. فَيُبَيِّتُهُمُ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ .
அபூ மாலிக் அல்-அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள் (அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் என்னிடம் பொய் உரைக்கவில்லை) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டார்கள்:
“என் சமுதாயத்தில் (உம்மத்தில்) சிலர் தோன்றுவார்கள்; அவர்கள் விபச்சாரம் (அல்-ஹிர்), பட்டு (ஆண்களுக்கு), மது மற்றும் இசைக் கருவிகள் ஆகியவற்றை ஆகுமானதாகக் (ஹலால்) கருதுவார்கள். மேலும், சிலர் ஒரு மலையின் (உயர்ந்த இடத்தின்) ஓரத்தில் தங்குவார்கள்; அவர்களின் மேய்ச்சல் விலங்குகளுடன் (ஆடு, மாடுகள்) மேய்ப்பன் மாலையில் அவர்களிடம் வருவான்; அப்போது, தேவையுடைய ஒருவர் (ஏழை) ஒரு காரியத்திற்காக அவர்களிடம் வருவார். ஆனால் அவர்கள் அவனிடம், 'நாளை எங்களிடம் வா' என்று கூறுவார்கள். அல்லாஹ் இரவில் அவர்களை (அவர்கள் அறியாத நிலையில்) அழித்துவிடுவான்; மேலும், அந்த மலையை (அவர்கள் மீது) விழச் செய்வான்; மற்ற சிலரை மறுமை நாள் வரை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றிவிடுவான்.”நூல்: ஸஹீஹுல் புகாரி
தூய்மை காத்தல்
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கு அல்லாஹ் இட்ட கட்டளையே, "தவாஃப் செய்பவர்களுக்காகவும், ருகூஃ, ஸுஜூது செய்பவர்களுக்காகவும் எனது வீட்டைத் தூய்மையாக வையுங்கள்" என்பதுதான்.
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
"இன்னும், அந்த வீட்டை (கஃபாவை) நாம் மனிதர்கள் ஒன்று கூடும் இடமாகவும், அபயமளிக்கும் இடமாகவும் ஆக்கினோம்; 'இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்' (என்றும் கூறினோம்). மேலும், 'தவாஃப் செய்பவர்கள், இஃதிகாஃப் இருப்பவர்கள், ருகூஃ மற்றும் ஸுஜூது செய்பவர்களுக்காக எனது வீட்டை நீங்கள் இருவரும் தூய்மையாக வையுங்கள்' என்று இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம் உடன்படிக்கை வாங்கினோம்." (அல்குர்ஆன் 2:125)
وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَن لَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
"இன்னும், அந்த வீட்டின் (கஃபாவின்) இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்துக் காட்டியபோது: 'நீர் எனக்கு எதனையும் இணையாக்காதீர்; தவாஃப் செய்பவர்களுக்காகவும், (தொழுகையில்) நிலைத்து நிற்பவர்களுக்காகவும், ருகூஃ மற்றும் ஸுஜூது செய்பவர்களுக்காகவும் எனது வீட்டைத் தூய்மையாக வைப்பீராக!' (என்று நாம் கட்டளையிட்டதை நினைவூட்டுவீராக)." (அல்குர்ஆன்.22:26)
"தூய்மையாக வையுங்கள்" (தஹ்ஹிரா) என்பதன் விளக்கம்
இஸ்லாமிய விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிர்கள்) இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, முஜாஹித், கத்தாதா ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்ற முன்னோர்களின் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இங்கு கூறப்படும் "தூய்மை" (தஹாரத்) இரண்டு வகைப்படும் என்று விளக்குகின்றனர்:
ஆன்மீக கொள்கைத் தூய்மை (தஹாரத் மஃனவிய்யா):
இணைவைப்பு (ஷிர்க்) இல்லாமை: அந்த இல்லத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் வணக்கம் செலுத்தப்படக் கூடாது; சிலைகள், உருவங்கள் மற்றும் இணைவைப்பு வழிபாடுகள் அற்ற இடமாக அது இருக்க வேண்டும்.
பாவங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகள் அற்ற நிலை: ஹஜ், உம்ரா பயணத்தின் போது பொய், வீண் விவாதங்கள், தகாத வார்த்தைகள், காமச் சண்டைகள் மற்றும் அநாகரிகமான நடத்தைகள் எதுவுமின்றி ஆன்மீக ரீதியில் தூய்மையாக இருக்க வேண்டும். (சூரா அல்-பகரா 2:197-ல் "ஹஜ்ஜின் காலத்தில் தகாத பேச்சோ, வரம்பு மீறலோ, தர்க்கமோ கூடாது" என்று குறிப்பிடப்படுவதும் இதன் தொடர்ச்சியே).
வெளிப்படையான மற்றும் பௌதீகத் தூய்மை (தஹாரத் ஹிஸ்ஸிய்யா)
நஜீஸ் (அசுத்தங்கள்), அசிங்கங்கள், துர்நாற்றங்கள் மற்றும் குப்பைகள் அண்டாமல் நிலத்தையும் சுவர்களையும் சுத்தமாகப் பராமரித்தல்.
தொழுகையாளிகளுக்கும் வணக்கசாளிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாதவாறு நறுமணம் மற்றும் தூய்மையுடன் வைத்திருத்தல்.
வணக்கசாளிகளின் நான்கு பிரிவுகள்
மேற்சொன்ன வசனத்தில் அல்லாஹ்வின் இல்லத்தை யாருக்காகத் தூய்மையாக வைக்க வேண்டும் என்று நான்கு வகையான வணக்கங்கள்/வணக்கசாளிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்:
அத்தாயிஃபீன் (الطَّائِفِينَ): கஃபத்துல்லாஹ்வைச் சுற்றி வலம் (தவாஃப்) வருபவர்கள். (உலகிலேயே தவாஃப் எனும் வணக்கம் கஃபாவில் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது).
அல்-ஆகிஃபீன் (الْعَاكِفِينَ): இறை நினைவில் மூழ்கி அங்கு தங்கி 'இஃதிகாஃப்' இருப்பவர்கள்.
அல்-காயிமீன் (الْقَائِمِينَ): தொழுகையில் அல்லாஹ்வுக்கு முன்னால் பயபக்தியோடு நீண்ட நேரம் நின்று வணங்குபவர்கள்.
அர்-ருக்கஉஸ் ஸுஜூத் (الرُّكَّعِ السُّجُودِ): தொழுகையில் ருகூஃ (குனிந்து) மற்றும் ஸுஜூது (சிரம்பணிந்து) செய்து தங்களை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்கள்.
"எனது வீடு" (பைத்தீ) என்ற வார்த்தையின் தனிச்சிறப்பு
அல்லாஹ் இந்த வசனத்தில் கஃபாவை வெறுமனே "அந்த வீடு" என்று கூறாமல், "எனது வீடு" (بَيْتِيَ - பைத்தீ) என்று தன் பெயரோடு இணைத்துக் கூறுகிறான்.
பூமி முழுவதும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது என்றாலும், கஃபாவைத் தன்னோடு இணைத்துக் கூறுவது அதன் மகத்துவத்தையும் புனிதத்தையும் (இழாஃபத்துத் தஷ்ரீஃப்) உலகிற்கு உணர்த்துவதற்காகவே ஆகும்.
அகிலத்தைப் படைத்த அதிபதியின் வீட்டைச் சுத்தப்படுத்தும் பொறுப்பு, ஒரு சாதாரண நபரிடம் ஒப்படைக்கப்படாமல், இறைத்தூதர்களான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரிடமே நேரடியாக ஒப்படைக்கப்பட்டது. இது பள்ளிவாசல்களைத் தூய்மைப்படுத்துவது நபிமார்களின் சுன்னத் என்பதைக் காட்டுகிறது.
சமகால நடைமுறைப் படிப்பினை
கஃபாவின் வழியில் கட்டப்படும் உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களைச் சுத்தமாகவும், நறுமணத்தோடும் வைத்திருப்பது இறை விசுவாசிகளின் தலையாய கடமை.
மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் பணியாற்றக்கூடிய துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் அங்கு செல்லும் ஒவ்வொரு யாத்ரீகர் வரை, அந்த இடத்தில் எந்தவொரு பாவமோ அல்லது அநாகரிகமான செயலோ நடக்காமல் பாதுகாப்பது இறைக்கட்டளையை மதிக்கும் தலையாய இறையச்சமாகும்.
அந்தப் புனிதத் தலங்களில் எத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களுக்கோ, வரம்பு மீறல்களுக்கோ அணுஅளவும் இடம் கிடையாது. அங்கு பணியாற்றுபவர்களாக இருந்தாலும், தவாஃப் செய்யச் செல்பவர்களாக இருந்தாலும் ஹரமின் அந்தஸ்தை முழுமையாக உணர்ந்து பணிவோடும் பயத்தோடும் நடந்துகொள்ள வேண்டும்.
செய்திகளை ஆராய்தல் (வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி)
இன்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதைப் பற்றி இஸ்லாம் நமக்குத் தெளிவான வழிகாட்டலைத் தந்துள்ளது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
"நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் ஒரு சமூகத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து, பின்னர் நீங்கள் செய்ததற்காகக் கைசேதப்பட நேரிடும்." (அல்குர்ஆன் 49:6)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்:
«كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»
"தான் கேட்கின்ற எல்லாவற்றையும் (ஆராயாமல் பிறருக்குப்) பேசுவதே ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்." (நூல்: முஸ்லிம்)
இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டியது:
"ஒரு முத்தத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது" என்று வதந்திகளைப் பரப்புவதும், ஆதாரமற்ற வீடியோக்களை பகிர்வதும் மார்க்கத்தின் ஒழுங்குமுறைக்கு எதிரானது.
உண்மை என்னவென்று அதிகாரப்பூர்வமாகத் தெரியாத வரை, நாமே தீர்ப்பளிக்கவோ அல்லது மற்றவர்களின் பாவங்கள், தண்டனைகள் குறித்து பொதுவெளியில் கேலிபேசி பதிவிடவோ கூடாது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் (WhatsApp, Facebook, X, Instagram) வழியாக நொடிப் பொழுதில் பரவும் செய்திகளையும், வதந்திகளையும் ஓர் இறைநம்பிக்கையாளர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்
மேற்சொன்ன ஸூரா அல்-ஹுஜுராத் 49:6 வசனம் அருளப்பட்ட காரணம்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலீத் பின் உக்பா ரலியல்லாஹு அன்ஹு என்பவரை பனூ முஸ்தலக் கூட்டத்தாரிடம் ஜகாத் நிதியை வசூலித்து வருவதற்காக அனுப்பினார்கள். வலீத் வருவதைக் கேள்விப்பட்ட அந்தக் கூட்டத்தினர், அவரை வரவேற்கத் தங்கள் ஊர் எல்லையை நோக்கித் திரளாக வந்தனர். ஆனால் அறியாமைக் காலத்தில் அவர்களுடன் தனக்கிருந்த பழைய பகையை நினைவுகூர்ந்த வலீத், "அவர்கள் தன்னைக் கொல்ல வருகிறார்கள்; ஜகாத் தர மறுத்துவிட்டார்கள்" என்று தவறாக எண்ணி, அவர்களிடம் செல்லாமலேயே மதீனாவுக்குத் திரும்பி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அத்தகவலைக் கூறினார்.
இதைக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் கூட்டத்தினர் மீது நடவடிக்கை எடுக்க நினைத்த தருணத்தில்,
இதற்கிடையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதர் தங்களைச் சந்திக்காமல் திரும்பிச் சென்றதை அறிந்த பனூ முஸ்தலக் தலைவரான அல்-ஹாரிஸ் பின் அபீ திரார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நேரடியாக மதீனாவிற்கு விரைந்து வந்தார்.
அதே நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "அங்கு சென்று இரவில் நிலைமையை உற்றுக் கவனியுங்கள்; அவர்கள் பாங்கு சொல்லி தொழுகை நடத்துகிறார்களா என்று பாருங்கள்; அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள்" என்று கூறி அனுப்பினார்கள்.
காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் பாங்கு சொல்லி முறையாகத் தொழுவதையும், இஸ்லாமியக் கடமைகளைப் பேணி வருவதையும், ஜகாத் நிதியைத் தயாராக வைத்திருப்பதையும் கண்டார்.
மதீனா வந்த பனூ முஸ்தலக் தலைவர் அல்-ஹாரிஸ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்:
"அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தூதர் எங்கள் ஊருக்கு வரவே இல்லை. பழைய பகையின் அச்சத்தால் அவர் திரும்பிவிட்டார். நாங்கள் ஜகாத்தை மறுக்கவுமில்லை, இஸ்லாத்தை விட்டு விலகவுமில்லை"
என்று விளக்கமளித்தார். இதன் மூலம் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்று தவறான புரிதலால் ஏற்பட்டது என்பது உறுதியானது.
அந்நேரத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக இந்த வசனம் இறங்கியது. விசாரணையில், பனூ முஸ்தலக் கூட்டத்தினர் இஸ்லாத்திலேயே உறுதியாக இருப்பதும், வலீதை வரவேற்கவே வந்ததும் தெளிவானது.
இந்த வசனம் கற்றுத்தரும் மூன்று மார்க்கக் கோட்பாடுகள்:
தபய்யுன் (التَّبَيُّنُ) மற்றும் தஸப்புத் (التَّثَبُّتُ): ஒரு தகவல் நம் கைக்கு வரும்போது, அதை உடனடியாக நம்பிவிடாமல் அதன் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை, ஆதாரம் ஆகியவற்றைத் தீர விசாரிக்க வேண்டும்.
செய்தியைத் தரும் நபர் யார்? அவர் நம்பகமானவரா, அதிகாரப்பூர்வ பொறுப்புள்ளவரா அல்லது பரபரப்பை உண்டாக்கும் ஃபாஸிக்கா (ஒழுக்கக் கேடானவரா/முகமறியாத கணக்கா) என்பதைக் கவனிக்க வேண்டும்.
அவசரப்பட்டு வதந்திகளை நம்பிச் செயல்பட்டால் ஒரு நிரபராதிக்கோ, சமூகத்திற்கோ அநீதி இழைத்துவிட்டு, பின்னர் மீள முடியாத வருத்தத்திற்கும் கைசேதத்திற்கும் ஆளாக நேரிடும்.
«كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ»
தான் கேட்கின்ற எல்லாவற்றையும் பேசுவதே ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்.”
இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் விளக்கம்:-
ஒரு மனிதன் வேண்டுமென்றே ஒரு பொய்யை உருவாக்க வேண்டிய அவசியமில்லை; அவன் காதில் விழும் அல்லது போனில் வரும் ஒவ்வொரு தகவலையும் சரிபார்க்காமல் அப்படியே பிறருக்கு ஃபார்வர்ட் (Forward) செய்தாலே, அவன் அறியாமலேயே பல பொய்களுக்குப் பங்காளியாகி விடுகிறான்.
மனிதர்கள் பேசும் அல்லது பகிரும் விஷயங்களில் உண்மையும் இருக்கும், பொய்யும் கலந்திருக்கும். இரண்டையும் பிரித்தறியாமல் அனைத்தையும் பரப்புபவன் பொய் பேசுபவனாகவே அல்லாஹ்விடத்தில் பதிவு செய்யப்படுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்:
"நிதானமும் ஆராய்ந்து செயல்படுவதும் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும்; அவசரமும் பதற்றமும் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும்." (நூல்: திர்மிதி)
உஹுத் போர்க்களத்தில் பரவிய வதந்தி
ஹிஜ்ரி 3ம் ஆண்டு உஹுத் போரின் போது, முஸ்லிம்களின் கை ஓங்கியிருந்த நிலையில், கணவாயில் நின்ற அம்பு எறியும் தோழர்கள் சிலர் செய்த தவறால் எதிரிகள் பின்னால் வந்து தாக்கினர். போர்க்களத்தில் கடுமையான குழப்பம் நிலவியது.
அந்தக் குழப்பத்தில் இப்னு கமீஆ என்பவன் முஸ்அப் பின் உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தாக்கி வீழ்த்திவிட்டு, அவர்களது தோற்றம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் இருந்ததால், "முஹம்மது கொல்லப்பட்டுவிட்டார்!" என்று கூச்சலிட்டான்.
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இறந்துவிட்டார்கள்" என்ற இந்த ஒற்றை வதந்தி மின்னல் வேகத்தில் பரவியதும், முஸ்லிம் படையின் மன உறுதி குலைந்தது. சிலர் போர்க்களத்திலேயே ஆயுதங்களை எறிந்துவிட்டு அமர்ந்துவிட்டனர்; சிலர் பின்வாங்கத் தொடங்கினர்.
அப்போது கஅப் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிருடன் இருப்பதை முதன்முதலில் பார்த்து, "முஸ்லிம்களே! நற்செய்தி, இதோ அல்லாஹ்வின் தூதர் உயிரோடு இருக்கிறார்!" என்று குரல் கொடுத்த பிறகே படையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு நிலமை சீரானது.
எதிரியின் வாளை விடவும் ஒரு வதந்தி அதிக சேதத்தை உண்டாக்கும் என்பதற்கு உஹுத் போர்க்களமும், ஹதீஸுல் இஃப்க் சம்பவமும் சான்று.
சமுதாயத்தைப் பிளவுபடுத்தவும், தனிமனிதர்களின் கண்ணியத்தைக் குலைக்கவும் நயவஞ்சகர்கள் எப்போதும் வதந்திகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.
ஆதாரமில்லாத ஒரு செய்தியைக் கேட்கும்போது, முதலில் நல்லெண்ணம் கொள்வதும், அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாவைக் கட்டுப்படுத்துவதுமே மார்க்கம் நமக்குக் கற்றுத்தரும் உயர்ந்த ஒழுக்கமாகும்.
சமகால நிகழ்வு மக்கா விவகாரம் தரும் பாடம்
மஸ்ஜிதுல் ஹராமில் நடந்ததாகக் கூறப்படும் தண்டனை விவகாரத்தில் சமூக ஊடகங்கள் செய்த தவறுகளும், நாம் கவனிக்க வேண்டிய ஒழுக்கங்களும்:
பரபரப்புக்காகத் தலைப்புகளை மாற்றுதல் (Clickbait): "ஒரு முத்தத்திற்காக மரண தண்டனை" என்ற ஒற்றை வரி, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தல். சட்டப்பூர்வ தீர்ப்பின் ஆழம் தெரியாமல் உணர்ச்சிகளைத் தூண்டுவது மார்க்க நெறிக்கு முரணானது.
பழைய வீடியோக்களை இணைத்துப் பரப்புதல்: சம்பந்தமில்லாத பழைய வீடியோக்களை தற்போதைய நிகழ்வு போலப் பகிர்வது அப்பட்டமான மோசடி (கித்ப் மற்றும் தத்லீஸ்) ஆகும்.
மற்றவர்களின் அந்தரங்கங்களையும் பாவங்களையும் பொதுவெளியில் கேலி செய்தல்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டாலும் சரி, அவர்களின் பாவங்களை மீம்ஸ்கள் (Memes) மூலமாகவோ அல்லது கேலிப் பதிவுகள் மூலமாகவோ பொதுவெளியில் காட்சிப்படுத்துவது ஒரு முஸ்லிமின் நாவிற்கும் செயலுக்கும் அழகல்ல.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
لَا يَسْتُرُ عَبْدٌ عَبْدًا فِي الدُّنْيَا، إِلَّا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
"ஒரு அடியான் மற்றொரு அடியானின் குறையை இவ்வுலகில் மறைத்தால், மறுமை நாளில் அல்லாஹ் அவனது குறையை மறைக்கிறான்." (நூல்: முஸ்லிம்)
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான 4 முக்கிய இஸ்லாமிய விதிகள்
பகிர்வதற்கு முன் சரிபார்த்தல் (Think Before Sharing): எந்தவொரு ஆடியோ, வீடியோ அல்லது தகவலையும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் அல்லது நம்பகமான அமைப்புகள் உறுதிப்படுத்தும் வரை குழுக்களில் பகிரக் கூடாது.
மௌனம் காத்தல்: தனக்குத் தொடர்பில்லாத அல்லது முழுமையாகத் தெரியாத விவகாரங்களில் கருத்துக் கூறாமல் அமைதியாக இருப்பது ஈமானின் அடையாளம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புபவர் நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்." (நூல்: புகாரி).
தீய எண்ணங்களைத் தவிர்த்தல் (ஸுவுழ் ழன்): ஆதாரமற்ற யூகங்களை வைத்து முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குர்ஆன் கூறுகிறது: "நம்பிக்கையாளர்களே! யூகங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக யூகங்களில் சில பாவமாகும்." (49:12).
டிஜிட்டல் மறுமை விசாரணை: நாம் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு எழுத்தும், பகிரும் ஒவ்வொரு பதிவும் (Post/Share) நமது பட்டோலையில் பதிவு செய்யப்படுகிறது. நாளை மறுமையில் அதற்கான விளக்கத்தை அல்லாஹ்விடம் கொடுத்தாக வேண்டும் என்ற இறையச்சம் எப்போதும் இருக்க வேண்டும்.
தனி மனித ஒழுக்கமும் ஹயா எனும் வெட்கமும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً، وَالحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ»
"ஈமான் 70 மேற்பட்ட கிளைகள் உள்ளன. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளை." (நூல்: புகாரி)
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களும் சமூக ஊடகங்களும் அதிகரித்த பிறகு, இளைஞர்கள் மத்தியில் பொது இடங்களில் கூட வெட்க உணர்வு குறைந்து வருகிறது. பள்ளிவாசலில், பொது இடங்கள் போன்றவற்றில் நாம் செய்யும் செயல்களை அல்லாஹ் கண்காணிக்கிறான் என்ற 'இஹ்ஸான்' மனப்பான்மை நம்மிடம் இருக்க வேண்டும்.
«الْحَيَاءُ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ»
"வெட்கம் நன்மையைத் தவிர வேறெதனையும் கொண்டு வருவதில்லை."(நூல்: ஸஹீஹ் அல்-புகாரி:
அறிஞர்கள் 'ஹயா'வை இரண்டு நிலைகளாகப் பிரிக்கின்றனர்:
அல்லாஹ் எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, அவன் தடுத்த பாவங்களைச் செய்ய அஞ்சுவது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வை எவ்வாறு வெட்கப்பட வேண்டுமோ அவ்வாறு வெட்கப்படுங்கள்... தலையையும் அது சுமந்திருக்கும் எண்ணங்களையும், வயிற்றையும் அது உட்கொள்ளும் உணவையும் பாதுகாப்பதே அவனிடம் வெட்கப்படுவதாகும்." (திர்மிதி).
பொதுவெளியில் அநாகரிகமான, அருவருப்பான மற்றும் மார்க்க வரம்புகளை மீறும் செயல்களைச் செய்யாமல் தன் கண்ணியத்தைப் பேணிக்கொள்வது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்:
"முந்தைய நபிமார்களின் போதனைகளிலிருந்து மக்கள் பெற்றுக்கொண்டவற்றில் ஒன்று: 'உனக்கு வெட்கம் இல்லையென்றால், நீ விரும்பியதைச் செய்துகொள்' என்பதாகும்." நூல்: புகாரி
அதாவது, வெட்கம் விடைபெற்றுவிட்டால் மனிதன் எத்தகைய இழிவான செயலையும் செய்யத் துணிந்துவிடுவான்.
இன்றைய நவீன உலகம்: குறைந்துவரும் வெட்க உணர்வு
ஸ்மார்ட்போன்களும் சமூக ஊடகங்களும் மனிதர்களின் அந்தரங்கத்திற்கும் பொதுவெளிக்கும் இடையிலான எல்லையை அழித்துவிட்டன:
ரீல்ஸ் மற்றும் கவன ஈர்ப்பு மோகம் (Attention Seeking): இணையத்தில் 'லைக்ஸ்' (Likes) மற்றும் 'வியூஸ்' (Views) வாங்குவதற்காகப் பொது இடங்களிலும், பள்ளிவாசல் போன்ற புனித தலங்களிலும் கேமரா முன்னால் தேவையின்றி நடனமாடுவது, மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகளைக் காட்டுவது மற்றும் தேவையற்ற சாகசங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இஸ்லாம் கணவன்-மனைவி உறவை மிகக் கண்ணியமானதாகக் கருதுகிறது. ஆனால், இன்றைய 'விலாக்' (Vlog) கலாச்சாரத்தில், தம்பதிகளுக்கு இடையேயான தனிப்பட்ட பாசப் பகிர்வுகள், கொஞ்சல்கள் மற்றும் விளையாட்டுகளைக் கூட வீடியோவாகப் பதிவு செய்து லட்சக்கணக்கானோர் பார்க்கும் வண்ணம் வெளியிடுவது வெட்க உணர்வின்மைக்குச் சான்றாகும்.
மக்கா, மதீனா மற்றும் பள்ளிவாசல்களில் இபாதத் (வணக்கம்) செய்ய வேண்டிய நேரத்தைக் கேமரா கோணங்களை அமைப்பதிலும், லைவ் (Live) ஸ்ட்ரீமிங் செய்வதிலும் செலவழிப்பது, அந்த இடங்களின் ஆன்மீகப் பயபக்தியைக் குலைக்கிறது.
இந்தச் சீரழிவிலிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்லாம் முன்வைக்கும் உச்சகட்ட ஆன்மீக நிலைதான் 'இஹ்ஸான்' ஆகும்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "இஹ்ஸான் என்றால் என்ன?" என்று கேட்டபோது, நபிகளார் அளித்த பதில்:
«أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ»
"நீர் அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போல் வணங்குவதாகும்; நீர் அவனைப் பார்க்காவிட்டாலும், நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்." நூல்: முஸ்லிம்
ஒரு மனிதன் தனிமையில் இருந்தாலும் சரி, ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் போதும் சரி, மக்கள் கூட்டத்தில் நிற்கும் போதும் சரி—அல்லாஹ்வின் "பார்வைக் கோணத்திற்குள்" (Divine Surveillance) தான் இருக்கிறோம் என்ற பிரக்ஞை இருக்கும் வரை அவனால் வெட்கத்தைக் கைவிட முடியாது.
கேமரா இயங்கும்போது மட்டுமே ஒழுக்கமாக இருப்பதும், கேமரா இல்லாதபோது வரம்பு மீறுவதும் போலித்தனம்.
அல்லாஹ் கூறுகிறான்:
"يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:108)
இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கான நடைமுறை வழிகாட்டல்
பார்வையைப் பேணுதல் சமூக வலைத்தளங்களில் வரும் ஆபாசமான, வரம்பு மீறிய காட்சிகளைத் தவிர்த்து நாவையும் கண்களையும் கட்டுப்படுத்துவது.
தன் மனைவி, குழந்தைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை இணையத்தில் காட்சிப் பொருளாக மாற்றுவதைத் தவிர்ப்பது.
பள்ளிவாசல்களுக்குள் நுழையும்போது மொபைல் போன்களை அமைதிப்படுத்தி, அங்குள்ள சூழலை வீடியோ எடுப்பதை விடத் தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதலில் மனதை ஒருமுகப்படுத்துவது.
இன்று நாம் சமூக வலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களும் பதிவுகளும் நாம் இறந்த பிறகும் இணையத்தில் நிலைத்திருக்கும் "பாவத்தின் தொடர் சங்கிலியாக" (ஸதகதுன் ஜாரியாவின் எதிர்மறை) மாறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுதல்.
அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் வெட்கம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் புதல்வி அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், தம் வாழ்நாளில் வெட்கத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்தார்கள்.
அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது, தம்மைப் பராமரித்துக் கொண்டிருந்த அஸ்மா பின்த் உமைஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்தார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்திய கவலை அனைவரையும் வியக்க வைத்தது.
"அஸ்மாவே! பெண்கள் இறந்த பிறகு ஜனாஸாவை எடுத்துச் செல்லும் விதம் எனக்கு மிகுந்த சங்கடத்தையும் வெட்கத்தையும் தருகிறது. மைய்யத்தின் மீது துணி மட்டுமே போர்த்தப்படுவதால், இறந்த உடலின் உருவ அமைப்பை (வடிவத்தை) ஆண்கள் பார்த்துவிடுவார்களோ என்று நான் மிகவும் அஞ்சுகிறேன், வெட்கப்படுகிறேன்."
அதற்கு அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்"அபிசீனியாவில் (ஹபஷா) நான் ஒரு வழக்கத்தைக் கண்டேன்; அங்குப் பேரீச்ச மர மட்டைகளைக் கொண்டு ஒரு கூண்டு போன்ற சட்டகம் செய்து, அதன் மீது துணியைப் போர்த்தி உடலின் அமைப்பு துளியும் தெரியாதவாறு செய்வார்கள்" என்று விளக்கி, அதைச் செய்து காட்டினார்.
இதைக் கண்ட அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, "நான் இறந்த பிறகு என் உடலை யாரும் பார்க்காதவாறு இப்படித்தான் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று வஸிய்யத் (மரண சாசனம்) செய்தார்கள்.
உயிரோடு இருக்கும்போதே அல்லாமல், தான் இறந்து உடலாக மாறும் போது கூட அந்நிய ஆண்களின் பார்வை தன் வடிவத்தின் மீது படக்கூடாது என்று அஞ்சிய அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இந்த ஹயா, இன்றைய முஸ்லிம் பெண்களுக்குப் பெரும் படிப்பினையாகும்.
நபித்தோழர் உஸ்மான் (ரலி) அவர்களின் அளப்பரிய வெட்கம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூன்றாம் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெட்கத்தின் சிகரமாகத் திகழ்ந்தார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தபோது, அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் உள்ளே வந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயல்பாகவே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனடியாக எழுந்து அமர்ந்து, தமது ஆடைகளை ஒழுங்குபடுத்திச் சரிசெய்து கொண்டார்கள்.
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்ற பிறகு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் காரணம் கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
«أَلَا أَسْتَحِي مِنْ رَجُلٍ تَسْتَحِي مِنْهُ الْمَلَائِكَةُ»
"வானவர்களே எவரைக் கண்டு வெட்கப்படுகிறார்களோ, அத்தகைய ஒரு மனிதரைக் கண்டு நான் வெட்கப்பட வேண்டாமா?"நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
வெட்கம் (ஹயா) என்பது ஒரு முஃமினின் மிக முக்கியமான நற்குணமாகும். அது ஒரு மனிதனை பாவங்கள், அநீதிகள் மற்றும் வரம்பு மீறல்களிலிருந்து தடுத்து, இறைவனுக்கும் சக மனிதர்களுக்கும் முன்னால் கண்ணியத்தோடு வாழ வைக்கிறது. எனவே வெட்க உணர்வோடு இருப்பது அவசியமாகும்.
அல்லாஹ்வின் புனித இல்லங்களின் மதிப்பையும் மாண்பையும் உணர்ந்து நடப்போம்.
காதுக்கு எட்டும் ஒவ்வொரு வதந்தியையும் சமூக வலைத்தளங்களில் பரப்புவதைத் தவிர்த்து, செய்திகளைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.
அல்லாஹ்வின் ஆலயங்களையும், குறிப்பாக கஃபத்துல்லாஹ் போன்ற உலக முஸ்லிம்களின் சங்கமத் தலங்களையும் உள்ளூர மதித்து, அங்கு எந்தவிதமான ஒழுக்கக்கேடோ, வரம்பு மீறலோ நிகழாமல் பாதுகாக்கும் இறையச்சத்தை வளர்ப்போம்.
சமூகம் தவறான பாதையில் செல்வதைத் தடுக்க, நம் கைபேசிக்கு வரும் ஒவ்வொரு செய்தியையும் உடனே பகிராமல், தீர விசாரித்து மௌனம் காக்கும் உயர் குணத்தை மேற்கொள்வோம்.
பொதுவெளியிலும் தனிமையிலும் அல்லாஹ் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற ‘இஹ்ஸான்’ மனப்பான்மையுடன், நாவையும் பார்வைகளையும் கட்டுப்படுத்தி வாழ்வோம்.
நமது நாவுகளையும் பார்வைகளையும் அல்லாஹ்வுக்குப் பயந்து பாதுகாப்போம்.
اللَّهُمَّ أَرِنَا الْحَقَّ حَقًّا وَارْزُقْنَا اتِّبَاعَهُ، وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَا اجْتِنَابَهُ
"யா அல்லாஹ்! எங்களுக்கு சத்தியத்தைச் சத்தியமாகக் காட்டி, அதைப் பின்பற்றும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி, அதிலிருந்து விலகி வாழும் வாய்ப்பைத் தந்தருள்வாயாக!
அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து, புனித தலங்களின் கண்ணியத்தைப் பேணி நடக்கும் நற்பேற்றை நம் அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.".
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக