ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

அறிவிற்பட்ட கேள்வியும்....! அறிவார்ந்த பதிலும்...!








கேள்வி :  அதிக குழந்தைகளை பெற்றொடுத்து அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாமல் சிரமப்படுவதை விட ஓரிரு குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்து அவர்களை நல்லவர்களாக வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதிக குழந்தைகள் பெற தடை செய்து கொள்ளலாமா...?


பதில். :
وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا‏ 
 "வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளை நீங்கள் கொல்ல வேண்டாம். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்."
                                                                 அல்குர்ஆன். 17 -31.

பனிஇஸ்ராயீல் என்ற அத்தியாயத்திலுள்ள இவ்வசனத்தின் விளக்கத்தில் வறுமைக்கு அஞ்சி குழந்தையை கொல்வது கூடாது. என்பதோடு சிறு குடும்பமாக இருந்தால் சீராக வாழலாம். என்ற எண்ணத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினாலோ குழந்தை பேற்றை தடை செய்வது கூடாது என்று முபஸ்ஸிரீன்கள் குறிப்பிட்டுள்ளார்கள்
                                        (தப்ஸீர். மஆரிபுல் குர்ஆன்.)

குழந்தைகள் ஒன்றிரண்டு இருந்தால் அவர்களை நல்லவர்களாக வளர்க்கலாம் அதிகமாக இருந்தால் அவ்வாறு வளர்க்க இயலாது என்று நினைப்பது மார்க்க விளக்கமும் அல்லாஹ்வின் நம்பிக்கையும் குறைவாக்க இருப்பதினால் ஏற்படுகின்ற தவறான எண்ணமாகும்.

ஒரு குழந்தையானாலும் ஒன்பதாக ஆனாலும் அனைவருக்கும் உணவளிப்பதும் அவர்களை வாழ வைப்பதும் அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக தீயவர்களாகவோ அமைவதும் அல்லாஹ் தஆலாவின் நாட்டப்படியும் அவனுடைய விதியின்படியும் நடைபெறுவதாகும். ஆனால் பெற்றோரை அதற்கு காரணமாக ஆக்கிவைத்து அவர்களுக்கு பொறுப்புக்களை சுமத்தியிருக்கின்றான். அப்பொறுப்புக்களை அவர்கள் சரியாக நிறைவேற்றிட வேண்டும். தவறினால் குற்றத்திற்குரியவர்களாக ஆவார்கள்.

ஓரிரு குழந்தைகள் உள்ளவர்கள் வாழ்வில் சிரமப்படுவதையும், அக்குழந்தைகள் பெற்றோர் சொல் கேளாதவர்களாகவும் நற்பண்புகள் இல்லாதவர்களாகவும் வாழ்ந்து வருவதையும், பல குழந்தைகள் உள்ளவர்கள் இனிமையாக வாழ்வதையும் அக்குழந்தைகளும் நல்லொழுக்கமுள்ளவர்களாக நற்பண்புள்ளவர்களாக வாழ்ந்து வருவதையும் பல குடும்பங்களில் கண்கூடாக கண்டு வருகிறோம்.


அல்லாஹ் நாடியது தான் நடக்கும் என்று அழுத்தமான நம்பிக்கை கொண்டுள்ள முஃமின்கள், குழந்தைகள் அதிகமாக இருப்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் பெற்றோர் தங்களுடைய பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றிட வேண்டுமென்பதில் மிகுந்த கவனம் செலுத்த்திட வேண்டும். ஏனெனில்,

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏ 


"ஈமான் கொண்டவர்களே... உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்." அல்குர்ஆன். 66 - 6.
என்ற திருவசனத்தின் மூலம் குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக வளர்க்கும் பொறுப்பை நம்மீது சுமத்தியுள்ளான். மேலும் ஓரிரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் அக்குழந்தைகள் பெரியவர்களாகும் வரை உயிருடன் இருப்பார்கள் என்பதற்கு எவ்வித உறுதி மொழியும் எவரும் தரமுடியாது. அவ்வாறு குழந்தை இறந்து விட்டால் பெற்றோர் அதனைப் போன்று மீண்டும் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்கும் உத்திரவாதம் கிடையாது.


எனவே தன்னுடைய விதிப்படி தான் நாடியவாறு குழந்தைகளை வழங்குகிற அல்லாஹ் அவர்களை வளர்ப்பதற்குரிய ஆற்றலையும் வழிகளையும் உணவு விசாலத்தையும் அவனே வழங்குகிறான். இந்த மன உறுதி வேரூன்றி விட்டால் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் கவலையோ கலக்கமோ கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது. சிரமங்கள் ஏற்பட்டாலும் எளிதில் நீங்கி விடும்.


முன்னால் கூறப்பட்டுள்ள ஆயத்தில் நாமே அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம் என்பதில் அவர்களுக்கு என்பதையும் முந்தியும் உங்களுக்கு என்பதை இரண்டாவதாகவும் கூறியிருப்பதின் மூலம் உங்களுக்கு முன்பே அவர்களுக்குரிய உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. என்பதையும் அவர்களின் காரணமாகவே உங்களுக்கு உணவு கிடைத்திடலாம் என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறான். இதனையே ஒரு ஹதீஸில்


" நீங்கள் உதவி செய்யப்படுவதும் உணவளிக்கப்படுவதும் உங்களிலுள்ள பலவீனர்க்களின் காரணத்தினால் தான்." என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.  நூல் அபூதாவூத்.

பலவீனர்கள் என்பவர்கள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் கால்நடைகள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (மஆரிபுல் குர்ஆன். )

எனவே குழந்தைகள் அதிகமாக இருப்பது அதிகமான வசதி வாய்ப்புக்களும் பொருளாதார பெருக்கமும் ஏற்படுவதற்கு காரணமாகும். எனினும் இதனை அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே விளங்கிட முடியும்.


ஓர் அறிவியல் விளக்கம்.

பூமியில் எப்பகுதியில் மரம் செடி கொடிகள் அதிகமாக இருக்கின்றனவோ அப்பகுதியில் மழை அதிகமாக பெய்து வருவது புவியியல் நியதி. இதனால் தான் "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்." என்றும், "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், நாட்டுக்கு நன்மை செய்வோம்." என்றும் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். (செயலில் இல்லை.)

இதே நியதியை குழந்தை பேற்றின் நிகழ்விலும் அல்லாஹு தஆலா அமைத்து வைத்துள்ளான். எந்த நாட்டில் அல்லது எந்த வீட்டில் குழந்தை பெருக்கம் இருக்கிறதோ அங்கு உணவு பெருக்கமும் அதிகம் ஏற்படும். இது அறிவியல் விளக்கம் மட்டுமல்ல. அல்லாஹ்வின் நியதியும் இது தான்.

இதனால் தான் "அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்கும் குடும்ப பாரம்பரியமுள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். கியாமத்து நாளில் உங்களின் மூலம் நான் மற்ற சமுதாயத்தினரிடம் பெருமை பாராட்டுவேன்."  என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளியுள்ளார்கள்.

எனவே எக்காரணத்தினாலும் எந்த முறையினாலும் குழந்தைப் பேற்றை தடை செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. குழந்தை பிறந்தால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர் கூறினால் அப்போது நல்ல விளக்கமுள்ள ஆலிம்களிடத்தில் ஆலோசனை கலந்து செயல்பட்டுக் கொள்ள வேண்டும்.

ஆனால் அதிகமான குழந்தைகளை பெற்றெடுங்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் சொல்லியிருப்பது தங்களின் விருப்பத்திற்கு கூறியிருக்க முடியாது அது அல்லாஹ்வின் மூலம் அறிவிக்கப்பட்ட தெய்வீகச் செய்தி தான். அவ்வாறாயின் அதில் பல்லாயிரக்கணக்கான ரகஸியங்கள் இருக்கலாம். தெரிந்தைவை சில தெரியாதவை பல.

எனவே படைத்தவனும் அவன் தூதர் அவர்களும் கூறியவற்றை நிறைவேற்றுவது தான் அடியார்களின் இலட்சணம்.



மர்ஹூம் மௌலானா மௌலவி நிஜாமுத்தீன் மன்பஈ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக