வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு









சமய நல்லிணக்கத்துக்கு இஸ்லாமியர்களின் இணையற்ற சேவை.

வன்முறை, போராட்டம் என்பது இன்று உலகம் முழுக்க ஒரு பொதுவான கலாச்சாரமாக உருவாகி வருகிறது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. இந்நிலையில் இந்திய சமூக அமைப்பில் போராட்டம் வன்முறை என்றாலே இஸ்லாமியர்கள் மீது விரல் சுட்டப்பட்டு வருவது வேதனைக்குரியது.


இரண்டு புரிதல்கள்.

இஸ்லாம் பற்றியும். இஸ்லாமியர்களைப் பற்றியும் உருவாகியுள்ள தவறான புரிதல்களை மாற்றியாக வேண்டும். இதற்காக முதலில் இரண்டு விதமான புரிதல்களை ஏற்படுத்தியாக வேண்டும்.
ஒன்று.  ஒரு புள்ளியின் நிழல் அளவுக்கு கூட இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.


இரண்டு. இந்திய வரலாற்றில் இஸ்லாமிய ஆட்சியாளர்களும், சமுதாய முன்னோடிகளும் இம்மண்ணின் கலாச்சார பண்பாட்டிற்கு வழங்கிய கௌரவத்தையும், சமூக நல்லிக்கணத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.


இவ்விரண்டு முயற்ச்சிகளும் புரிதல் தன்மையில் ஏற்பட்ட சில சிக்கல்களால்  வித்தியாசப்பட்டுப் போன மனங்களை மீண்டும் இணைக்கும் மத நல்லிணக்கம் இம்மண்ணில் உறுதிபடுத்தும். 


வலிய வந்தவர் யார்...?

வாளெடுத்தல் என்பது நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆட்சிகளில் சர்வ சாதாரணமான அம்சம். என்றாலும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாள் தூக்கியது இஸ்லாமிய அரசுக்கும் மார்க்கத்திற்கும் எதிராகத் தானாக வந்த படையெடுப்புகளை முறியடிக்க மட்டுமே.


அவர்கள் சந்தித்த முதல் யுத்தமான பத்ருப் போர் நடைபெற்ற இடம் எதிரிகளான குரைஷியர் புறப்பட்டு வந்த மக்காவிலிருந்து 200 மைல் தூரம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்ட மதினாவிலிருந்து பத்ரு போர்களம் 80 மைல் தூரம் தான்.
இஸ்லாம் கால் கொண்ட வரலாற்று காலத்தில் மிகப்பெரிய யுத்தம் உஹது போர். இந்த போர்க்களம் எதிரிகளான குரைஷியர் புறப்பட்ட மக்காவிலிருந்து ஏறத்தாழ 300 மைல் தூரத்தில் இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் படையுடன் புறப்பட்ட மதினாவிலிருந்து ஐந்தே மைல் தூரத்திலும் உள்ளது.


முன்னூறு மைல் கடந்து வந்தவர்கள் வலிய சண்டைக்கு வந்தார்களா...? வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளை எதிர் கொண்டவர்கள் வம்பு சண்டைக்கு சென்றார்களா...?

சிந்தித்து பார்த்தால்... அண்ணலார் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்கள் தற்காப்பு போர்கள் தான் என்பது தெளிவாக புரியும்.


அப்போர்களின் போது கூட தவறை உணர்ந்தவர்களுக்கு அவர்கள் வழங்கிய மன்னிப்பு மகத்தானது. அதுமட்டுமல்ல போர்க்காலங்களில் எதிரிகளிடம் நீதியுடன் நடந்து கொள்வது இறையச்சத்திற்கு நெருக்கமானது என்று அல்லாஹ் கூறுகிறான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ


அத்தியாயம். 5. வசனம். 8.


நபி (ஸல்) அவர்கள் கூறிய போர்க்களங்களில் வரம்பு மீறாதீர்கள். சிறுவர்களையும் மதகுருமார்களையும் கொல்லாதீர்கள். என்ற நபிமொழியும் வாளேந்தும் போது கூட மனித நேயம் காயம்படக்கூடாது என்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறையின் வெளிப்பாடாகும்.


ஹுதைபிய்யா.

வன்முறை நிகழ்வுகள் எதுவும் எக்காலத்திலும் உருவாக பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தது இல்லை. இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு 1400 நபித்தோழர்களுடன் புனித ஆலயமான கஃபாவை தரிசிப்பதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா சென்றார்கள். குரைஷியர் அவர்களை எல்லைப் பகுதியான ஹுதைபியாவில் தடுத்து நிறுத்துகின்றனர். பல நிபந்தனைகளை விதித்து மக்காவினுள் அடுத்த ஆண்டுதான் நுழைய வேண்டும் என்றனர்.
பெருமானார் நினைத்திருந்தால் அத்தடையை மீறி மக்காவினுள் நுழைந்திருக்க முடியும். அதற்கான ஆட்பலமும் ஆயுத பலமும் அவர்களிடம் இருந்தது. ஆனால் அங்கு ஒரு வன்முறை நிகழ்வதை நபியவர்கள் விரும்பவில்லை.


குரைஷிகள் விதித்த நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு ஹுதைபிய்யா உடன்படிக்கையை ஏற்று தமது தோழர்களுடன் மதினா திரும்பினார்கள்.
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு சக்தி மிக்க ஆட்சித்தலைவராகவும், தனது கட்டளைக்ளுக்கு காத்திருக்கும் ஏராளமான தோழர்களைக் கொண்ட சமுதாயத்தலைவராகவும் பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரவேசத்த போது, கத்தியின்றி இரத்தமின்றி மக்கமா பிரதேசம் அவர்களின் வசமானது.


உலக வரலாற்றில் சக்தி மிக்க தலைவர் ஒருவர் ஒரு உயிரைக்கூட கொல்லாமல் நாட்டை வெற்றி கொண்டது இது ஒன்றாகத்தான் இருக்கும்.
வெற்றித்தளபதியாக பெருமானார் மக்கா நகருக்குள் நுழையும் போது அமர்ந்திருந்த ஒட்டகத்தின் பிடரியில் அவர்களது தலைபடும்படி மிகுந்த பணிவுடன் நுழைந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். அப்படிப்பட்ட அவர்கள் நுழையும் போது அவர்களுடன் ஒட்டகத்தில் உடன் அமர்ந்து வந்தவர் யார் தெரியுமா...?  ஒரு காலத்தில் அடிமையாக இருந்து பெருமானார் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஸைத் (ரலி) அவர்களின் மகன் உஸமா (ரலி) அவர்கள் தான்.  சகோதரத்துவத்தை மண்ணுலகில் வரவு வைத்த சமத்துவ நாதருடன் ஒட்டகத்தில் அமர்ந்து வந்தார்.


பொது மன்னிப்பு..

மக்கா கையகப்பட்டவுடன் பெருமானார் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்...?

தன்னை கல்லால் அடித்தவர்கள், கொலை செய்ய முயற்சித்தவர்கள், நாடு துறக்க காரணமானவர்கள், தனது தோழர்களை கொடுரத்தின் எல்லை வரை சென்று துன்புறுத்தியவர்கள், ஏன் தனது மகள் ஸைனப் (ரலி) அவர்களின் கர்பத்தில் அம்பை எய்து கொன்ற கயவன் வரை அனைவருமே தங்கள் கதி என்னவாகுமோ என்று கதி கலங்கி நின்றனர்.


ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். இது தான் முஹம்மது நபி (ஸல்) ஆட்சித்தலைவராக வளேந்தி படைத்த வரலாறு. பெருமானாரின் அரசியல் நாகரீகம் அவர்களுக்கு பின் வந்த தலைவர்களான கலீபாக்களாலும் மிகச்சிறப்பாக பின்பற்றப்படது.


பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய ஆட்சி முறை வன்முறை கலாச்சாரத்திற்கு இடம் தராதது. மட்டுமல்ல பிற சமயத்தினரான ஆன்மீக கலாச்சாரத்திற்கும் வாழ்வியலுக்கும் உரிய மரியாதையை வழங்கியது.
சிறுபான்மையினர் எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வாழ்ந்தனர்.


وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ

அல்லாஹ் அல்லாத அவர்கள் வணங்குபவற்றை நீங்கள் பழிக்காதீர்கள். அல்குர்ஆன். 6 - 108.

என்று திருமறை இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகின்றது. எனவே ஒரு முஸ்லிம் பிற சமயத்தாரின் வழிபாட்டு தெய்வங்களை பழிக்கக்கூடாது. அப்படி பழித்தால் அவன் திருமறையின் கட்டளையை மீறியவனாகி விடுகிறான்.


பிற சமயத்தாரின் வழிபாடு மற்றும் ஆன்மீக விசயங்களில் ஒரு முஸ்லிம் தலையிடக்கூடாது. சமய தர்க்கங்கள் வரம்பு மீறும் போது

لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு . அல்குர்ஆன். 109. 6.
என்று கூறிவிட்டு கண்ணியமாக ஒதுங்கிவிடுமாறு திருமறை அறிவுறுத்துகின்றது. மறை சொல்லும் இந்த மனிததுவத்தை மார்க்கத்தை சமுதாய அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் சென்று உலக அமைத்திக்கு இஸ்லாம் ஆரோக்கியம் சேர்த்துள்ளது.


ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களும் மாதா கோவிலும்.

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில் ரோம் பாரசீக போரரசுகள் எல்லாம் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. ஜெரூசலத்திற்கு உமர் (ரலி) அவர்கள் விஜயம் செய்தார்கள். அப்போது கிருஸ்தவ பாதிரிமார்கள் அவர்களுக்கு வரவேற்பு அளித்து புகழ்மிக்க சர்ச் ஆப் ரிசரக்சன் என்ற மாதா கோவிலை சுற்றி காண்பித்தனர். மாதா கோவிலை பார்வையிட்டு கொண்டிருக்கும் போது தொழுகைக்கான பாங்கொலி கேட்கிறது. நீங்கள் உங்கள் தோழர்களுடன் இம்மாதா கோவில் உள்ளேயே தொழுது கொள்ளுங்கள் என்று பாதிரிமார்கள் வேண்டினார்கள். ஆனால் அவ்வேண்டுதலை உமர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள்.


தனது தோழர்களுடன் மாதா கோவிலின் வெளியே தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்த பின் கலீபாவிடம் பாதிரிமார்கள் உங்களை நாங்கள் மாதா கோவிலுனுள் தொழச் சொன்ன போது மறுத்து விட்டீர்களே ஏன் என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியர் யாராவது இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உரிமை கொண்டாடினால் நீங்கள் என்ன செய்வீர்கள்...? அதனால் தான் பிற்காலத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத் தான் நான் மாதாக்கோவிலுக்குள் தொழ மறுத்தேன் என்றார்கள்.


இவ்வாறு எந்த வன்முறை நிகழ்வுகளும் எந்த காலத்திலும் தங்களால் உருவாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனுமதித்தது இல்லை. 


ஜிஸ்யா வரி ஏன்...?


தங்களது ஆட்சியில் வாழ்ந்த சிறுபான்மையானரான கிருஸ்தவர்களையும் யூதர்களையும் இஸ்லாமியர்கள் கண்ணியமாக நடத்தினார்கள். ஒப்பந்தத்தில் இருப்போரிடம் அவர்களது சக்தக்கு மீறி வரி வசூல் செய்து விடாதீர்கள். என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இஸ்லாமிய ஆட்சியில் வாழ்ந்த பிற சமயத்தார் திம்மிகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களிடம் ஜிஸ்யா என்னும் வரியை அரசு வசூலித்தது. இந்த வரி வசூல் எதற்கு என்றால் திம்மிகள் அரசின் படைகளிலும் போரிலும் பங்கேற்காமல் இருப்பதற்கும் இஸ்லாமிய ஆட்சியில் முழுமையான பாதுகாப்பை பெறுவதற்கு வழங்கிய சில தீனார்கள் ஆகும்.


அலி (ரலி) அவர்கள் கலீபாவாக பொறுப்பேற்றவுடன் திம்மிகளின் உயிர் நம்முடைய உயிர் போன்றது. அவர்களது உடமைகள் நம்முடைய உடமைகள் போன்றது. அவர்கள் நமது முழு பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களை கண்ணியமாக நடத்துவது நமது கடமை என்று அறிவித்தார்கள்.


உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில் அபூ உபைதா (ரலி) சிரியா தேசத்தின் கவர்னராக இருந்தார். அப்போது இசூரியன்ஸ் என்ற இனக்குழுவினர் சிரியாவின் மீது திடிரென படையெடுத்தனர். அவர்கள் சிரியாவிற்குள் நுழைந்த பகுதி கிருஸ்தவ பெருமக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். எனவே அப்பகுதி கிருஸ்தவர்கள் பேரிழப்பிற்கு ஆளாயினார்கள்.
தகவல் அறிந்த ஆளுநர் அதிக படைகளை அனுப்பி இசூரியன்ஸை விரட்டியடித்தார்கள். என்றாலும் திடிர்படையெடுப்பால் அதிகப்பாதிப்புக்கள்ளாகி இருந்தனர். அவர்களிடம் ஜிஸ்யா வரி எதற்கு பெறப்பட்டது படையெடுப்புகளிலிருந்து போதிய பாதுகாப்பு கொடுப்பதற்காக தான்.
எனவே சரியான நேரத்தில் முழுமையான பாதுகாப்பை கொடுக்கத் தவறியதால் அம்மக்களிடம் வசூலித்த ஜிஸ்யா வரியை திருப்பிச் செலுத்த அபூ உபைதா (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். மேலும் அவர்களது இழப்புகளை கருத்தில் கொண்டு இன்னும் மூன்று ஆண்களுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று ஆணையிட்டார்கள். இதுதான் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர்க்கு வழங்கிய கண்ணியத்தின் வரலாறு.


இந்தியாவில் முஸ்லிம்களின் சமய நல்லிணக்கம்.

இது போன்றே இந்திய தேசத்தில் பல பகுதிகளை ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்களும் வாழ்ந்த சமுதாய முன்னோர்களும், இம்மண்ணின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் விளங்கிய கவுரவத்தையும் நல்லிணக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் தெரிந்து கொண்டால் வாழும் சமூக அமைப்பில் உள்ள அனைத்து சமய மக்களுக்கும் அவர்களுடைய சமயம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் இஸ்லாமியர் எதிரிகளல்ல என்பது புரியும்.


இஸ்லாமியர்களை மத நல்லிணக்கத்திற்கும் சமூக கலாச்சாரத்திற்கும் எதிரானவர்களாக சித்தரித்து காட்டி கொண்டிருந்த தீய சக்திகளுக்கு ஜல்லிக்கட்டு தடைக்கெதிரான ஆர்ப்பாட்டம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கின்றது.


ஜல்லிக்கெட்டு ஆர்பாட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், இளைஞர்கள், மார்க்க அறிஞர்களும் கலந்து கொண்டு இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்ருக்கின்றார்கள்.


இஸ்லாம் என்று உலகில் தோன்றியதோ அன்று முதலே மற்ற மனிதர்களின் உணர்வுகளுக்கு மட்டுமல்ல கலாச்சாரத்திற்கும் மதிப்பளிக்க கூடியதாகத் தான் இருந்து வந்திருக்கின்றது.  


இன்று இங்கு அடக்குமுறை கையாளப்படுவது மதத்திற்கெதிராக அல்ல நாம் யார் என்ற பாரம்பரியத்திற்கு எதிராக நமது கலாச்சாரத்திற்கு எதிராக கையாளப்படுகிறது.


தமிழ் கலாச்சாரம் என்பது இன்று நேற்று தோன்றியது அல்ல பல நூற்றாண்டு காலமாக தொன்று தொட்டு மக்கள் பேணி தங்களது அடையாளமாக வைத்திருக்க கூடிய ஒன்று தான் கலாச்சாரம்.


அப்படிப்பட்ட அடையாளங்களில் ஒன்று தான் இந்த ஜல்லிக்கட்டு. இப்படிப்பட்ட இந்த அடையாளத்தை இந்தி இந்து இந்தியா என்ற வட்டத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும்  சில தீய சக்திகள் பல நூற்றாண்டுகளாக பேசிவரக்கூடிய செம்மொழியான தமிழ் மொழியை அழிக்க முயற்சித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டையும் தடை செய்து விட்டு வேடிக்கை காட்டுகின்றது.


சங்க காலம் என்றழைக்கப்படும் கி.பி 250 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்கள் மதமற்றவர்களாக வாழ்ந்தார்கள் அன்று முதலே ஜல்லிக்கட்டு தமிழர்களிடையே நடைபெற்று வந்துள்ளது என்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.


நாம் யார் என்ற இது போன்ற கலாச்சார ரீதியான அடையாளத்தை நாம் இன்று மட்டுமல்ல என்றும் விட்டுக் கொடுக்க கூடாது.



ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கு இஸ்லாம் எதிரானது அல்ல.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களுடைய காலத்தில் ஒட்டக பந்தயம் வைத்து சிறந்த ஒட்டகத்தை தேர்வு செய்துள்ளார்கள். அம்பு விளையாட்டு, மல்யூத்தம் போன்ற வீர விளையாட்டுகளை விளையாட அனுமதித்துள்ளார்கள். அதுவும் அதற்காக இரண்டு நாள்கள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் நாட்களை ஒதுக்கியுள்ளார்கள். 
.
ஒட்டக பந்தயம்

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. பைலா (அழ்பா) தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அது அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை. அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும்" என்று கூறினார்கள். நூல் புகாரி
.
குதிரை பந்தயம்

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே 'ஹஃப்யா' எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை 'சனிய்யத்துல் வதா' எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை பந்தயம் வைத்தார்கள். 
நூல் :புகாரி
.
அம்பெறியும் விளையாட்டு

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : 

உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள். 
.
யார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை. அவர் மாறு செய்துவிட்டார். நூல் - முஸ்லிம் 

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த அம்பெறியும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள். 
.
இது போல் தமிழர்களின் விளையாட்டு ஜல்லிகட்டு. இது நம் இனத்தின் விளையாட்டு. தமிழர்களின் கலாச்சார விளையாட்டை பாதுகாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக