வியாழன், 18 செப்டம்பர், 2014

பகட்டு வாழ்க்கை...





இரண்டு பெண் நண்டுகள். நல்ல தோழிகள். ஆனால், இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்ற மனோபாவம் இருவருக்குமே உண்டு. அதில் ஒரு நண்டு அழகான, பலமான, திறமையான ஒரு ஆண் நண்டை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டது. தன் தோழியை விட சிறப்பான ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு நண்டின் ஆசை.


ஒரு நாள் வித்தியாசமான ஒரு ஆண் நண்டை அது பார்த்தது. எல்லா நண்டும் பக்கவாட்டில் நடந்த போது, இந்த நண்டு மட்டும் நேராக நடந்தது.... பெண் நண்டுக்கு மனதுக்குள் பெரிய சந்தோசம். என் தோழியை விட எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்துவிட்டார். "நேராக நடக்கும் நண்டு மாப்பிள்ளை" யாருக்கு கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில், உடனடியாக அந்த ஆண் நண்டிடம் போய், "ஐ லவ் யூ" சொன்னது பெண் நண்டு. ஆண் நண்டும் ஒ.கே சொல்ல அடுத்தநாளே கல்யாணம்.


கல்யாணம் முடிந்த மறுநாள் பெண் நண்டு ஓய்வாக உட்கார்ந்திருந்த சமயம், ஆண் நண்டை அழைத்தது. இப்போது புது மாப்பிள்ளை எல்லா நண்டுகளையும் போலவே பக்கவாட்டில் நடந்து வந்தார். பெண் நண்டுக்கு அதிர்ச்சி.  இது நேராக நடக்கும் நண்டு. என் ப்ரெண்டின் கணவரை விட சிறந்தவர் என்று தானே திருமணம் செய்தோம். இப்போது பக்கவாட்டில் நடக்கிறதே என்று பதற்றம்.


நான் உங்களை முதலில் பார்த்தபோது அழகாக, நேராக நடந்தீர்களே, இப்போது ஏன் பக்கவாட்டில் நடக்கீர்கள் என்று கோபமாக கேட்டது பெண் நண்டு. ஆண் நண்டு சிரித்து கொண்டே சொன்னதாம்....                    அடி பைத்தியகாரி.... அன்னிக்கு நான் தண்ணியடிச்சிட்டு இருந்தேன். அதனால போதையில அப்படி நடந்தேன். நீ ஆசைபடறதுக்காக நான் தினமும் தண்ணியடிச்சிட்டு நேராக நடக்க முடியுமா....?


பெண் நண்டுக்கு பெரிய ஏமாற்றம். தன் தோழியைவிடச் சிறப்பான திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் குடிகார நண்டோடு குடும்பம் நடத்தவேண்டியது ஆயிற்று.



தனக்குரிய சரியான, தகுதியான துணையை தேடிக்கொள்வதற்கான வாய்ப்பு, அறிவு இரண்டுமே அந்த பெண் நண்டுக்கு இருந்தது. ஆனால் தன் தோழியோடு தன்னை ஒப்பிட்டு அவளை மிஞ்ச வேண்டும் என்ற நினைப்பு பெண் நண்டை சுதந்திரமாகவும் இயல்பாகவும் சிந்திக்க விடாமல் தடுத்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக