வெள்ளி, 24 ஜனவரி, 2014

மணியான 12 விஷயங்கள்.




ஹஜ்ரத் கஃபுல் அஹ்பார் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் “தவ்ராத்-ஜபூர்-இன்ஜில்-குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்துள்ளேன். அவ் வேதங்களிலிருந்து மணியான 12 விஷயங்களை அணியாக தேர்ந்தெடுத்து அவைகளை ஒரு காகிதத்தில் எழுதி என் கழுத்தில் தொங்கவிட்டு கொண்டேன்.
அனுதினமும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் அதனை மும்முறை நோட்டம் விட்டு என்னை திருத்திக் கொள்வேன் என்று கூறினார்கள்.
இதோ இறைவன் கூறுகிறான்.


1.அடியானே.....! எனது பொக்கிஷம் நிறைந்திருக்கும் வரை உனக்குரிய உணவு கிடைக்காமல் தப்பிவிடும் என்றெண்ணிக் கலங்காதே.....! பயப்படாதே.....!  நிச்சயமாக எனது பொக்கிஷம் ஒரு போதும் குறையாது.


2.அடியானே.....! உனது தகுதி (நன்மைக்கு) தக்கவாறு உன்னை நான் நேசிக்கிறேன் எனது தகுதிக்கு தக்கவாறு நீ என்னை நேசி.


3.அடியானே......!  ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை நீ கடந்து சென்று உனது இரு பாதங்களையும் சொர்கத்தில் காணும் வரை எனது சூழ்ச்சியைப் பற்றி நிம்மதியாக இருந்திடாதே.


4.அடியானே....! உலகிலுள்ள சகல பொருள்களையும் உனது வாழ்வுக்காவே, வசதிக்காகவே படைத்திருக்கிறேன். ஆனால் என்னை வணங்குவதற்காவே உன்னை படைத்திருக்கிறேன்.


5.அடியானே.....! எனது திறமையும் வல்லமையும் நிரந்தரமாக இருக்கும் காலமெல்லாம் என்னை தவிர்த்து வேறு எவருக்கும் நீ வழிப்படாதே....


6.அடியானே......! உனது தவறினாலும் குற்றத்தினாலும் ஏற்படும் துன்பத்திற்காக, தீமைக்காக நீ என்மீது கோபமும், வெறுப்பும் கொள்ளாதே....!  நீ எனக்கு மாறு செய்த குற்றத்தினாலே அத்தீமைகள் நிகழ்ந்தன என்று உணர்ந்து உன்னையே நீ கோபித்துக் கொள்.


7.அடியானே......! அர்ஷுக்கு அப்பாலிருந்து பாதாளம் வரையிலுமுள்ள படைப்புகள் அனைத்தும் என்னையே நாடுகின்றன. ஆனால் நான் உன்னையே நாடுகிறேன். எனினும் நீ என்னை விட்டும் உன் பாவச் செயல்களால் வெகுதூரம் வெருண்டோடுகிறாய்.


8.அடியானே.......! நீ என்னை தவிர எப்பொருளையும் நேசிக்காதே.....!  ஏனெனில் அவை உனக்கு தக்க சமயத்தில் பயன் தராது. ஆனால் என்னை நீ எப்போது நாடுகிறாயோ அப்போதே எனது உதவியை பெற்றுக்கொள்வாய்.


9.அடியானே......! நாளைய தினத்தின் உணவை இன்றே நீ என்னிடம் கேட்காதே. ஏனெனில் நாளைய தினத்தின் அமலை (செயலை) இன்றே நான் உன்னிடம் கேட்பதில்லை.


10.அடியானே.......! உன்னை நான் அற்ப விந்துவிலிருந்து படைத்தேன். நீ உனது தாயின் கர்பத்தில் இருக்கும் போது கூட உனக்கு தேவையான உணவை நான் கொடுத்தருளினேன். அதில் அணுவளவும் நான் குறைக்கவில்லை.


11.அடியானே.......! உனக்காக நான் பங்கிட்டுக் கொடுத்த செல்வத்தைக் கொண்டு நீ திருப்தியவாயானால் உனது உடலையும், உள்ளத்தையும் நான் நலம் பெறச் செய்வேன். ஆனால் அந்த நிறைவான நன்றியுணர்வு உன் நெஞ்சத்திலே கொஞ்சமும் இல்லையானால் காடு மேடெல்லாம் உனது உணவை தேடி, மிருகங்கள் அலைவது போல் உன்னையும் அலையச் செய்து அவல நிலைக்கு ஆளாக்கிவிடுவேன். அகிலம் முழுவதும் நீ அவ்விதம் அலைந்து திரிந்தாலும் என் கண்ணியத்தின் மீது ஆணையாக...! நான் உனக்கு நிர்ணயித்ததை தவிர ஒரு துரும்பைக்கூட உன்னால் அடைய முடியாது. அது மட்டுமா.....?  நீ என்னிடத்திலும் மக்களிடத்திலும் வெறுக்கப்பட்டவனாவாய்.


12.அடியானே..... எவர் எனது முடிவையும், விதியையும் மன நிறைவோடு ஏற்றுப் பொருந்திக் கொள்ளவில்லையோ, எவர் எனது சோதனைகளை கண்டு பொறுமை கொள்ளவில்லையோ, அவர எனது வான பரப்பின் கீழிருந்து வெளியேறிக் கொள்ளட்டும், என்னை அல்லாத வேறு இறைவனை தேடிக் கொள்ளட்டும்.

3 கருத்துகள்: