திங்கள், 1 ஆகஸ்ட், 2011

உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!-ஏ.கே.கான்



உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து கடைசி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி, இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் (US congress) அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.

இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதமாகும்.) நாளை (ஆகஸ்ட் 2ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்த அளவை அமெரிக்கா தொட உள்ளது.

இதனால், இந்தக் கடன் அளவை உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா அரசு தள்ளப்பட்டது. ஆனால், பிரதிநிதிகள் சபை (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

கடன் அளவை உயர்த்த குடியரசுக் கட்சி ஒப்புக் கொள்ளாததால், செனட் சபையில் ஒபாமா கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், பிரதிநிதிகள் சபையில் அது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தர முடியாது, ஓய்வூதியதாரர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி இருக்காது, ராணுவ காண்ட்ராக்டர்களுக்கு பணம் தர முடியாது, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க, முதலீட்டாளர்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி கோரினால், அவர்களைச் சமாளிக்க வீட்டுக் கடன், கார் கடன், பர்சனல் லோன் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் அபாயமும் உருவானது.

அமெரிக்கா இப்படி சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தால், அந் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள் கூட வாபஸ் ஆகி, முழுப் பொருளாதாரமும் மூழ்கும் நிலை உருவானது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால், உலகமே தும்மியாக வேண்டுமே.. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்து பெரும் பொருளாதார சிக்கல் உருவாகியிருக்கும்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்கக் கூட நேரமில்லாமல் எதிர்க் கட்சி, தனது கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் இரவு, பகலாக இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி வந்தார் ஒபாமா.

இன்று ஒருவழியாக இந்தத் தீர்மானத்தை ஆதரி்ப்பதாக குடியரசுக் கட்சி அறிவி்த்துவிட்டதால், ஒட்டு மொத்த அமெரிக்காவே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது.

ஆமாம், அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்கிறீர்களா.. அதற்கு முக்கிய காரணங்கள், அந்த நாடு நடத்தி வரும் போர்கள் தான். ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர். பராக் ஒபாமா இதுவரை போர் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்!

இப்போது அமெரிக்காவின் கடன் அளவு மேலும் 2.5 டிரில்லியன் டாலர்கள் வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக