ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

நீதியே தக்வாவின் அடையாளம்

 


‌தராவீஹ் பயான் பிறை – 5


தலைப்பு : “நீதியே தக்வாவின் அடையாளம்” 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏


முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்

செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன்


இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட வசனங்களில் ஒன்று மேற்சொன்ன வசனம் ஆகும்.


இந்த வசனம் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால்…!!


1. அல்லாஹ்வுக்காக நிலைநிற்பது (قَوَّامِينَ لِلّٰهِ)


"கவ்வாமீன்" என்றால் ஒரு காரியத்தில் மிக உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் நிலைத்திருப்பவர்கள் என்று பொருள்.

 * உங்கள் நீதி மற்றும் சாட்சியம் என்பது உலக ஆதாயத்திற்காகவோ, புகழுக்காகவோ அல்லது ஒருவருக்குப் பயந்தோ இருக்கக் கூடாது.

 * அது அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே அமைய வேண்டும்.


2. நீதியான சாட்சியம் (شُهَدَاءَ بِالْقِسْطِ)


சாட்சி சொல்லும் போது சொந்தக்காரர், அந்நியர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு காட்டாமல் உண்மையை மட்டுமே பேச வேண்டும். நீதி என்பது ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது என்பதை இது வலியுறுத்துகிறது.


3. வெறுப்பு நீதியைத் தடுக்கக்கூடாது.


இந்த வசனத்தின் மிக முக்கியமான பகுதி இதுதான்: "ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்."

 * உங்களுக்குப் பிடிக்காத ஒருவராக இருந்தாலும், அல்லது உங்களுக்குத் தீங்கு செய்த ஒரு எதிரியாகவே இருந்தாலும், அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வரும்போது உங்கள் 'வெறுப்பு' குறுக்கே நிற்கக் கூடாது.

 * பகைவன் என்பதற்காக அவர் மீது பொய்க்குற்றம் சுமத்துவதோ அல்லது அவருக்குச் சேர வேண்டிய உரிமையை மறுப்பதோ கூடாது.


4. தக்வாவுக்கு மிக நெருக்கமானது (هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ)


"நீதி செய்யுங்கள்; அதுவே இறைப்பச்சத்திற்கு (தக்வா) மிக நெருக்கமானது."

 * ஒருவர் உண்மையான இறைப்பச்சம் உடையவர் என்பதற்கு அடையாளம், அவர் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழலிலும் நீதியாக நடப்பதுதான்.

 * அன்பு காட்டும் போது மட்டுமல்ல, கோபம் கொள்ளும் போதும் நீதியைக் கடைப்பிடிப்பதே ஒரு சிறந்த முஃமினின் பண்பு.


5. அல்லாஹ் கண்காணிப்பவன் (إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ)

வசனத்தின் இறுதியில் "நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன்" என்று எச்சரிக்கப்படுகிறோம்.

 * வெளியில் நீங்கள் நீதியாளராகத் தெரிந்தாலும், உங்கள் உள்ளத்தில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை அல்லாஹ் அறிவான்.

 * எனவே, தீர்ப்பு வழங்கும் போதும், சாட்சி சொல்லும் போதும் இறைவனை அஞ்ச வேண்டும்.

நோன்பு தக்வா கற்றுக்கொடுக்கும்.நீதி – அந்த தக்வாவின் வெளிப்பாடு.


யூதர்களுடனான பகை: 


மதீனாவில் வாழ்ந்த யூதக் கூட்டமைப்பினர் (குறிப்பாக பனூ நளீர் கோத்திரத்தினர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினர். இந்தச் செயலால் முஸ்லிம்கள் அவர்கள் மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர். அந்தச் சமயத்தில், "அவர்கள் உங்கள் எதிரிகளாக இருந்தாலும், அவர்களிடம் நீங்கள் நீதியைத் தவறவிட்டு விடாதீர்கள்" என்று எச்சரிக்கும் விதமாக இந்த வசனம் இறங்கியது.


மக்காவாசிகளின் தடை: 


ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது, மக்கா குறைஷிகள் முஸ்லிம்களை உம்ரா செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது கடும் வெறுப்பில் இருந்தனர். அந்த வெறுப்பின் காரணமாக அவர்களுக்கு அநீதி இழைத்துவிடக் கூடாது என்பதை உணர்த்தவும் இந்த வசனம் வழிகாட்டியது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 "அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர் ஒரு காஃபிராக (இறைமறுப்பாளராக) இருந்தாலும் சரியே. ஏனெனில், அந்தப் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை." (நூல்: அஹ்மத்).


"யார் தமது அதிகாரத்திலும், குடும்பத்திலும், தமக்குக் கீழ் உள்ளவர்களிடமும் நீதியாக நடக்கிறார்களோ, அவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் ஒளியால் ஆன மேடைகளில் இருப்பார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்).


மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பிறகு, முஸ்லிம்களுக்கும் மக்கா குறைஷிகளுக்கும் இடையே கடுமையான போர்கள் நடந்தன. குறைஷிகள் முஸ்லிம்களைத் துன்புறுத்தியவர்கள், அவர்கள் சொத்துக்களைப் பறித்தவர்கள். ஆனாலும், இந்த வசனம் அருளப்பட்ட பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் தங்கள் எதிரிகளிடம் கூட நீதியைத் தவறவிடவில்லை போர்க்களத்தில் பிடிபட்ட கைதிகளிடம் கூட கண்ணியமாக நடக்கவும், அவர்களுக்குரிய உணவையும் பாதுகாப்பையும் வழங்கவும் இந்த 'நீதி' கட்டளையே அடிப்படையாக இருந்தது.


"தக்வா" (இறையச்சம்) மற்றும் "நீதி" இடையேயான தொடர்பு

இந்த வசனத்தில் அல்லாஹ் "நீதி செய்யுங்கள்; அதுவே தக்வாவுக்கு மிக நெருக்கமானது" என்கிறான். இதன் பொருள் என்னவென்றால்:

தொழுவது, நோன்பு நோற்பது மட்டும் தக்வா அல்ல.

ஒரு இக்கட்டான சூழலில், உங்களுக்குப் பிடிக்காத ஒருவருக்கு ஆதரவாக உண்மை பேச வேண்டியிருக்கும் போது, உங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு உண்மையைச் சொல்வதுதான் உயர்ந்த தக்வா.

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அல்லாஹ்வின் கட்டளைக்காக நீதியாக நடப்பவரே உண்மையான இறையச்சம் உள்ளவர்.


 நீதிக்காகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தியாகம் 

செய்த உன்னத மனிதர்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கைபர் பகுதியில் வாழ்ந்த யூதர்களுடன் ஒரு ஒப்பந்தம் இருந்தது. அதன்படி, அவர்கள் விளைவிக்கும் பேரீச்சம்பழங்களில் பாதியை அரசுக்கு (பைத்துல் மால்) வரியாக வழங்க வேண்டும்.

இந்த வரியைச் சேகரிக்க அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அங்கு சென்றார். யூதர்கள் தங்களுக்குச் சாதகமாக வரி குறைக்கப்பட வேண்டும் என்பதற்காக அவரிடம் லஞ்சம் கொடுக்க முயன்றனர். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை:


"யூதர்களே! அல்லாஹ்வின் படைப்புகளிலேயே எனக்கு மிகவும் பிடிக்காதவர்கள் நீங்கள்தான் (ஏனெனில் அவர்கள் நபியை எதிர்த்தனர்). ஆனால், உங்கள் மீது எனக்கு இருக்கும் அந்த வெறுப்பு, உங்களுக்கு நான் அநீதி இழைக்கத் தூண்டாது. நான் விளைச்சலைச் சரியாக இரண்டு பாதியாகப் பிரிக்கிறேன். எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்."

இதைக் கேட்ட யூதர்கள் வியந்து போய், "இப்படிப்பட்ட நீதியால்தான் வானங்களும் பூமியும் நிலைபெற்றுள்ளன" என்று கூறினார்கள்.

(நூல்: முவத்தா இமாம் மாலிக்)


கலீஃபா உமர் (ரலி) மற்றும் ஒரு முதியவர்


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை மக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு முதியவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். அவர் ஒரு திம்மி (இஸ்லாமிய ஆட்சியில் வாழும் மாற்று மதத்தவர்). அவரிடம் உமர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விசாரித்தபோது, அவர் வறுமையின் காரணமாக 'ஜிஸ்யா' (பாதுகாப்பு வரி) கட்ட முடியாமல் அவதிப்படுவதாகத் தெரிவித்தார்.

உடனே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த முதியவரைக் கண்ணியமாக அழைத்துச் சென்று, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு அதிகாரிகளிடம் இப்படிக் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் இளைஞராக இருந்தபோது இவரிடம் வரியைப் பெற்றுக்கொண்டு, இப்போது இவர் வயதான காலத்தில் இவரைக் கைவிடுவது நீதியல்ல."


அந்த முதியவர் இஸ்லாத்தை ஏற்காதவர், மாற்றுக் கொள்கை உடையவர் என்றாலும், அவருக்குரிய நீதியை வழங்குவதில் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) உறுதியாக இருந்தார்கள்.


சமர்கந்த் வெற்றி - ஒரு முன்மாதிரி நீதி


முஸ்லிம் தளபதி குதைபா இப்னு முஸ்லிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சமர்கந்த் நகரைக் கைப்பற்றியபோது, முறையான போர் அறிவிப்பு இன்றி திடீரெனத் தாக்கி வெற்றி பெற்றார். இது இஸ்லாமியப் போர் விதிமுறைகளுக்கு (நீதிக்கு) எதிரானது என்று அந்நாட்டு மக்கள் புதிய கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் புகார் செய்தனர்.

கலீஃபா ஒரு நீதிபதியை நியமித்தார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்:

 * "முஸ்லிம் படைகள் முறையாகப் போர் அறிவிப்பு செய்யாமல் நகரைக் கைப்பற்றியது அநீதியாகும். எனவே, உடனடியாக முஸ்லிம் படைகள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும். மீண்டும் முறைப்படி அறிவிப்பு செய்த பிறகே போர் புரிய வேண்டும்."

உலக வரலாற்றிலேயே வெற்றி பெற்ற ஒரு இராணுவம், ஒரு நீதிபதியின் தீர்ப்புக்காகத் தான் கைப்பற்றிய நகரத்தை விட்டு வெளியேறியது இதுவே முதல்முறை. இந்த நீதியைக் கண்டு வியந்த சமர்கந்த் மக்கள் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர்.



ஜபலா இப்னுல் அய்ஹம் மற்றும் ஒரு சாதாரண மனிதன்


கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில், காஸான் வம்சத்தைச் சேர்ந்த ஜபலா இப்னுல் அய்ஹம் என்ற அரசர் இஸ்லாத்தை ஏற்றார். அவர் கஃபாவைச் சுற்றி வரும்போது (தவாஃப்), ஒரு ஏழை கிராமவாசி தெரியாமல் ஜபலாவின் ஆடையை மிதித்துவிட்டார். ஆத்திரமடைந்த ஜபலா அந்த ஏழையின் முகத்தில் அறைந்து அவரது மூக்கை உடைத்துவிட்டார்.


அந்த ஏழை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் புகார் செய்தார். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜபலாவை அழைத்து விசாரித்தார். ஜபலா, "அவர் என் ஆடையை மிதித்தார், நான் ஒரு அரசன், அவர் ஒரு சாதாரண மனிதன்" என்றார்.


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்: "இஸ்லாத்தில் அரசன், ஏழை என்ற பாகுபாடு இல்லை. நீ அவருக்குப் பகரமாக உன் மூக்கை உடைக்க அவரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும், அல்லது அவர் உன்னை மன்னிக்க வேண்டும்."


ஜபலா அதிர்ந்து போனார். "நான் ஒரு அரசன், அவர் ஒரு சாமானியன், எனக்கும் அவருக்கும் சமமான தண்டனையா?" என்று கேட்டார். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "ஆம், இஸ்லாமிய நீதிக்கு முன்னால் நீங்கள் இருவரும் சமம்" என்று திட்டவட்டமாகக் கூறினார்கள். நீதியைத் தட்டிக்கழிக்க முடியாது என்பதை உணர்ந்த ஜபலா, அங்கிருந்து தப்பி ஓடினார். இது அதிகார வர்க்கத்திடமும் நீதியைப் பேணுவதைக் காட்டுகிறது. நூல்:அல் இஸாபா


அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) மகனின் செயல்


எகிப்தின் ஆளுநராக அம்ரு இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தபோது, அவருடைய மகன் ஒரு குதிரைப் பந்தயத்தில் கலந்துகொண்டார். அந்தப் பந்தயத்தில் ஒரு சாதாரண எகிப்தியர் (கிப்தி இனத்தைச் சேர்ந்தவர்) வெற்றி பெற்றார். தோற்றுப்போன ஆளுநரின் மகன், "நானா தோற்பது?" என்று கோபத்தில் அந்த எகிப்தியரை அடித்தார்.


அந்த எகிப்தியர் மதீனாவுக்குச் சென்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட்டார். உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆளுநரையும் அவரது மகனையும் மதீனாவுக்கு வரவழைத்தார்கள். அந்த எகிப்தியரிடம் ஒரு சாட்டையைக் கொடுத்து, "ஆளுநரின் மகனை இப்போது நீ அடி" என்றார். அவர் அடித்தார்.

பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு அந்த ஆளுநரைப் பார்த்துப் புகழ்பெற்ற ஒரு வார்த்தையைக் கூறினார்கள்:

"மக்களின் தாய்மார்கள் அவர்களைச் சுதந்திரமாகப் பெற்றெடுத்திருக்க, நீங்கள் எப்போது முதல் அவர்களை அடிமைகளாக்கத் தொடங்கினீர்கள்?"

ஆளுநரின் மகன் என்பதற்காக நீதியை வளைக்காமல், ஒரு சாமானியனுக்கு நீதி வழங்கிய விதம் இது. நூல்: அல்-பிதாயா வன்-நிஹாயா 




முதிய பெண்மணிக்கு வழங்கிய நீதி


கலீஃபா மஃமூன் அவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளை அநீதியால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் நேரடியாக வந்து முறையிடுவதற்காக ஒதுக்கினார். ஒருமுறை ஒரு வயதான ஏழைப் பெண்மணி கலீஃபாவின் அவைக்கு வந்து, "அமீருல் முஃமினீன் அவர்களே! ஒரு அதிகாரமிக்க நபர் எனது நிலத்தை அநியாயமாக அபகரித்துக்கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும்" என்று அழுதுகொண்டே கூறினார்.

மஃமூன் அவரிடம், "அம்மா, உமது நிலத்தைப் பறித்த அந்த நபர் யார்?" என்று கேட்டார். அந்தப் பெண்மணி அங்கேயே அமர்ந்திருந்த கலீஃபாவின் மகனான அப்பாஸ் இப்னு மஃமூனை சுட்டிக்காட்டினார்.

அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் கலீஃபா மஃமூன் சற்றும் தயங்காமல், தன் மகனை பிரதிவாதியாக (குற்றம் சுமத்தப்பட்டவராக) ஒரு சாதாரண குடிமகனைப் போல அப்பெண்மணிக்கு முன்னால் வந்து நிற்குமாறு கட்டளையிட்டார். விசாரணை நடைபெற்றது. அந்தப் பெண்மணி தனது வாதங்களை ஆவேசமாகவும் உரத்த குரலிலும் முன்வைத்தார். கலீஃபாவின் மகன் மௌனமாக நின்றார்.

இறுதியில், அந்தப் பெண்மணியின் வாதம் உண்மை என்று நிரூபணமானது. கலீஃபா மஃமூன் தனது மகனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி, பறிக்கப்பட்ட நிலத்தை உடனடியாக அந்தப் பெண்மணியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், அந்த நிலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்காகத் தன் மகனிடமிருந்தே இழப்பீடும் பெற்றுத் தந்தார். நூல் அல்பிதாயா வந்நிஹாயா


நாம் தொழுகிறோம் நாம் குர்ஆன் ஓதுகிறோம் ஆனால் நம் உள்ளத்தில் பகை இருக்கிறது. உள்ளத்தில் பகையை வைத்து எப்படி இபாதத் ஏற்றுக் கொள்ளப்படும்? நீதியில்லாமல் இபாதத் முழுமையில்லை.


அல்லாஹ் நமக்கு ரமலானை அருளியுள்ளான். இந்த மாதம் நமக்கு தக்வாவை கற்றுத்தருகிறது. தக்வாவின் ஒரு முக்கிய அடையாளம் – நீதியாகும். எனவே நீதியுடன் நடப்போம்.


 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கூறினார்கள்:

"إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ - وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ - الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا"

நிச்சயமாக நீதிமான்கள் அல்லாஹ்விடம், அளவற்ற அருளாளனின் வலது பக்கத்தில் ஒளியால் ஆன மேடைகளில் (மினாபிர்) இருப்பார்கள் - அவனது இரு கரங்களுமே வலது கரங்கள்தாம் (அதாவது பாக்கியம் மிக்கவை). அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தீர்ப்புகளிலும், தங்கள் குடும்பத்தாரிடமும், தாங்கள் பொறுப்பேற்றுள்ள விவகாரங்களிலும் நீதியாக நடந்துகொள்பவர்கள் ஆவர்.” நூல்: முஸ்லிம் 


இன்று நாம் யோசிக்க வேண்டும் 


நான் யாரிடமாவது அநியாயம் செய்திருக்கிறேனா?

என் குடும்பத்தில் யாராவது என்னால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா?

நான் மன்னிப்பு கேட்க வேண்டியவர் உள்ளாரா?


ரமலான் – மாற்றத்தின் மாதம்.

நம் வாழ்வில் மாற்றம் வர வேண்டும்.


நம் வாழ்க்கையில் நீதி


✅ குடும்பத்தில் – குழந்தைகளிடம் சமமாக இருக்கிறோமா?

✅ வியாபாரத்தில் – அளவுகளில் நேர்மை உள்ளதா?

✅ சமூகத்தில் – பேசும்போது உண்மை பேசுகிறோமா?

✅ கருத்து வேறுபாட்டில் – கோபம் நியாயத்தை கெடுக்கிறதா?


நாம் பகலில் பசி தாங்குகிறோம். ஆனால் நம் நாவை அநியாயத்திலிருந்து தடுக்கிறோமா? நாம் தொழுகிறோம் ஆனால் நம் மனதில் பகை வைத்திருக்கிறோமே?


ரமலான் நமக்கு சொல்லுகிறது:“உள்ளமும் புறமும் நேர்மையாக நீதியாக இருங்கள்.”


வாழ்வில் நீதியில்லை தொழுவதால் நோன்பு வைப்பதால் – அந்த இபாதத் எப்படி அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் .


நாம் தராவீஹ் தொழுகிறோம் ஆனால் நம் இதயத்தில் பகை இருந்தால் அது தக்வாவாக ஆகுமா ?


அன்பான சகோதரர்களே, நீதியுள்ள மனிதன் தான் உண்மையான முஸ்லிம்.

நீதியுள்ள மனிதன் தான் அல்லாஹ்வின் நெருக்கத்துக்கு தகுதியானவன்.


யா அல்லாஹ் எங்கள் இதயத்தில் நீதியை கொடுப்பாயாக. எங்

கள் கோபத்தை கட்டுப்படுத்துவாயாக. எங்களை தக்வாவுடையவர்களாக ஆக்குவாயாக .எங்களை நீதியுள்ளவர்களின் கூட்டத்தில் சேர்த்து அருள்புரிவாயாக. ஆமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக