வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

நோன்பின் பலன்கள்.



அல்லாஹுத்தஆலா நமக்கு ஏற்படுத்தியிருக்கிற கட்டளைகள்,தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் இதுமாதிரி மனிதர்கள் கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிற எந்தக் கடமையாக இருந்தாலும் - அது சின்ன விஷயமா இருந்தாலும் சரி,இல்ல பெரிய காரியமாக இருந்தாலும் சரி அது வெறும் வணக்கமாக மட்டும் இல்லாது செய்யக் கூடிய மக்களுக்கு அதில் நிறைய பிரயோஜனங்களும் இருப்பதை நாம் பாக்கலாம்.

ஆன்மீக ரீதியாகவும், வணக்க ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆய்வு செய்து பார்த்த அறிவியல் மேதைகள், மருத்துவ நிபுணர்கள் எல்லோருமே சொல்லக் கூடிய விஷயம் என்ன தெரியுமா? இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எல்லா கடமைகளுமே மனித சமுதாயத்திற்கு நன்மையாகத்தான் இருக்கிறது, அதில் ஆரோக்கியம் கிடைக்கிறது, அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று தான்.



அதிலும் குறிப்பாக இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான நோன்பில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதை இன்று மருத்துவ உலகம் ஏற்றிருக்கிறது. அதனால் தான் சகோதர சமயத்தைச் சார்ந்தவர்கள் கூட இந்த நோன்பை அநுஷ்டிப்பதை நாம் உலகத்தில் பார்க்கிறோம்.



ஒரு சில டாக்டர்கள் கூட நோயினால் பாதிக்கப்பட்டு, உடல் பலகீனமாகி வரக்கூடிய நோயாளிகளிடம் நீங்க நோன்பு வைய்யுங்க, உங்க நோய் குணமாகும் என்று சொல்லும் அளவுக்கு நோன்பில் மருத்துவ குணங்கள் மிக அதிகமாக இருக்கிறது.



கண்மனி நாயகம் [ஸல்] அவர்கள் கூட என்ன சொல்றாங்க ? 


صوموا تصحوا நோன்பு வையுங்கள் நலம் பெறுங்கள். நோன்பில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது,நோன்பு நிறைய நோய்களை குணப்படுத்துகிறது, உலகத்தில் நாம ஆரோக்கியமாக வாழ்வதற்கு நோன்பு ரொம்ப முக்கியம் என்பதற்கு இந்த நபிமொழி மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.



إن الله تبارك وتعالى أوحى إلى نبي من بني إسرائيل أن أخبر قومك أنه ليس عبد يصوم يوما ابتغاء وجهي إلا أصححت جسمه وأعظمت أجره كما في كنز العمال



முந்தய காலத்தில் வாழ்ந்த ஒரு நபிக்கு அல்லாஹுத்தஆலா வஹியின் மூலம் ஒரு செய்தி சொன்னான் ; யார் எனக்காக ஒரு நாள் நோன்பு வைக்கிறார்களோ அவருக்கு நான் உடல் சுகத்தை கொடுக்கிறேன், அவருக்கு நிறைய நற்கூலியை கொடுக்கிறேன் என்று உங்கள் சமூகத்திற்குச் சொல்லுங்கள். 


இந்த செய்தி, நோன்பு வைய்யுங்கள் நலமாக வாழுங்கள் என்று நபி [ஸல்] அவங்க சொன்ன செய்தி இதுவெல்லாம், நோன்பிற்கும் உடல் சுகத்திற்கும்,நோன்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஏதோ தொடர்பு,ஏதோ ஒரு connection இருப்பதை நமக்குக் காட்டுகிறது.



நோன்பில் அப்படி என்ன ஆரோக்கியம் இருக்கிறது? நோன்பிற்கும் உடல் சுகத்திற்கும் அப்படி என்ன தொடர்பு? இருக்கிறது என்று நாம் யோசித்தால் இன்றைக்கு உள்ள அறிவியல் நிபுணர்களும், மருத்துவ நிபுணர்களும் நமக்கு பல்வேறு சுவையான செய்திகளை சொல்லித் தருகிறார்கள்.



30 நாள் தொடர்ந்து நோன்பு வைத்தால் உடல் பலகீனமாகி விடும்,உடலில் சத்து குறைந்து விடும் என்று இன்றைக்கு சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உணவில்லாமல், சாப்பிடாமல் இறந்து போனவர்களை விட அதிகமாக அளவுக்கு அதிகமாக,வயிறு புடைக்க சாப்பிட்டு இறந்தவர்கள் தான் அதிகம் என்று இன்றைய புள்ளி விபரம் சொல்கிறது.



நோன்பு வைப்பதால் உடல் வலிமை அதிகமாகிறது, உடலில் ஒரு விதமான தெம்பு ஏற்படுகிறது என்றெல்லாம் மார்க் குலிஸ் என்ற ஆசிரியர் சொல்கிறார்.


அமெரிக்காவில உள்ள டாக்டர் s.n.m. ஹாஸ் சொல்வதைப் பாருங்கள் ;

“நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மட்டுமல்ல ரொம்ப தொன்மையான, பழமையான நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோய்வாய் பட்டு, உடல் ரொம்ப பலகீனமாகி விட்டது. அந்த நேரத்தில் ஒரு சில தினங்களாக சாப்பிடாமல் என் வயிற்றை காலியாக்கினேன்.அதற்குப் பின்னால் தான் என் உடம்புக்கு ஒரு தெம்பு கிடைத்தது. நோன்பு வைப்பதினால் ஏதோ புதிய சக்தி உடலில் பாய்வதை நான் உணர்ந்தேன். உடலில் என்றைக்கும் இல்லாத அளவு ஒரு உத்வேகம் கிடைப்பதை நான் உணர்ந்தேன். எனவே பல நோய்களை தடுப்பதற்கும், உடல் பலகீனமானவர்கள் உடல் தேறுவதற்கும் நோன்பு தான் சிறந்த தீர்வு என்று நான் கண்டு பிடித்தேன் என்று சொல்கிறார்.



ஒரு நாள் நோன்பு வைப்பது மூன்று வாரம் தொடர்ந்து மருத்து சாப்பிடுவதற்குச் சமம் என்பது மருத்துவத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய இப்னு சீனா அவர்களின் கருத்து.

அதுமட்டுமில்லாமல் யார் என்றைக்கும் இளமையோடு இருப்பதற்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதற்கான சிறந்த வழிமுறை நோன்பு தான் என்று சைல்டு என்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.



கொஞ்சம் புழுக்களை வைத்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார் ;

சில புழுக்களுக்கு அவை என்னென்ன விரும்பி சாப்பிடுமோ அந்த எல்லா உணவையும் கொடுத்தார். ஒரு நேரம் விடாமல் ஒவ்வொரு நேரமும் அவைகளுக்குத் தீனி போட்டார். இன்னும் சில புழுக்களுக்கு ஒரு நேரம் உணவு கொடுத்து அடுத்த நேரம் பட்டினி போட்டார். அதாவது ஒரு நேரம் உணவு.ஒரு நேரம் பட்டினி, இப்படியே வளர்த்தார். எந்த புழுக்களுக்கு அதிகமாக தீனி போட்டு,எல்லா நேரமும் தீனி போட்டு வளர்த்தாரோ அந்த புழுக்கள் அனைத்தும் சீக்கிரமே இறந்து விட்டது. எந்த புழுக்களுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அரை தீனி போட்டு ஒரு நேரம் உணவு ஒரு நேரம் பட்டினி என்று வளர்த்தாரோ அந்த புழுக்கள் தான் அதிக நாள் உயிர் வாழந்தது.


அந்த ஆராய்ச்சிக்குப் பிறகு தான் பாதி நேரம் சாப்பிட்டு பாதி நேரம் வயிற்றை காலியாக போடும் நோன்பு, மனிதனுக்கு இளமையை தருகிறது என்று கண்டு பிடித்து இந்த உண்மையை உலகத்திற்குச் சொன்னதாக நாம் கேள்விப் படுகிறோம்.



இதிலிருந்து நாம புரியக் கூடிய விஷயம் என்ன... எந்தளவு உணவை குறைத்து வயிற்றை காலியாக வைக்கிறோமோ அந்தளவு நமக்கு ஆயுட்காலம் அதிகரிக்கிறது. எந்தளவு நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வயிற்றை கனமாக்குகிறோமோ அந்தளவு நமது ஆயுட்காலம் குறைகிறது என்று இந்த ஆய்வின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.


நாம் நோன்பு வைக்கும்போது ஏறக்குறைய 14 மணி நேரம் சாப்பிடாம வயிற்றை காலியாக போடுறோம். அதனால் இந்த நோன்பினால் நிச்சயம் நமக்கு ஆயுட்காலம் அதிகமாகும் என்பது வெட்ட வெளிச்சம்.



நமது உடல் சரியாக இயங்குவதற்கு நம் உடம்பில் உஷ்ணம் சரியாக இருக்க வேண்டும்.உஷ்ணம் அதிகாவும் இருக்கக்கூடாது. குறைவாகவும் இருக்கக் கூடாது.அதிகமாக இருந்தாலும் ஆபத்து. குறைவாக இருந்தாலும் ஆபத்து. ஆனால் இன்றைக்கு அப்படியா இருக்கிறது? ஒன்று ரொம்ப அதிகமாகி விடுகிறது. அல்லது ரொம்ப குறைவாக ஆகி விடுகிறது.


ஆனால் நோன்பு வைப்பதினால் அதிகப்படியான உடல் வெப்பம் குறைந்து உஷ்ணம் சமநிலைக்கு வருகிறது என்பதும் இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது.



இந்த விஷயத்தை நபி [ஸல்] அவர்கள் எவ்வளவு அழகாக சுட்டிக் காட்டுகிறார்கள் பாருங்கள்.

அப்துர்ரஹ்மான் பின் யஜீத் [ரலி] அவர்கள் சொல்கிறார்கள் ;- நானும் அல்கமா,அஸ்வத் இந்த மூன்று பேரும் எங்களுடைய தோழர் அப்துல்லாஹ் அவர்களை சந்திக்க சென்றிருந்தோம்.அப்போது அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார்கள் ;

அதாவது நாங்க வாலிபர்களாக இருந்தோம் அந்த நேரத்தில் எங்களுக்கு சரியான வசதி வாய்ப்புகள் இல்லை.ஒரு சமயத்தில் நபி [ஸல்] அவர்கள் எங்களைப் பார்த்துச் சொன்னார்கள் ;-

يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ

இந்த ஹதீஸை கொஞ்சம் நாம் ஆய்வு செய்து பார்த்தால் நபி [ஸல்] அவர்கள் எந்த அளவு தூர நோக்கு சிந்தனையோடும், நோன்பில் ஏற்படும் மருத்துவம் குறித்தும் பேசியிருப்பார்கள் என்று நாம் புரிந்து காள்ள முடியும்.



பொருள் வசதி உள்ளவர்கள் திருமணம் முடியுங்கள்.பொருள் வசதி இல்லாதவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று சொல்ல காரணம் என்ன? வாலிபப் பருவம் என்பது, இணையைத் தேடுகிற பருவம். குறிப்பிட்ட வயது வந்து விட்டால் திருமணம் செய்து வைக்க வேண்டும்.அந்த திருமணம் அவனுக்கு ஒழுக்கத்தைக் கொடுக்கும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும் திருமணம் முடிக்காமல் இருந்தால் அவன் தவறான பாதையில் போய் விடுவான். அதனால் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

திருமணம் என்றால் இஸ்லாமிய சட்டப்படி அதற்கு உடல் தகுதி மட்டும் போதாது.பொருளாதார தகுதியும் இருக்க வேண்டும்.பொருள் தகுதியும், உடல் தகுதியும் இருப்பவன் தான் திருமணம் செய்ய முடியும்.



ஆனால் ஒருவனுக்கு உடல் தகுதி இருக்கிறது.ஆனால் பொருள் தகுதி இல்லை. பொருள் தகுதி இல்லையென்றால் திருமணம் முடிக்க முடியாது. இந்த வயதுல திருமணம் முடிக்க வில்லை யென்றால் தவறான காரியத்திலும் போய் விடுவான்.

இப்ப என்ன செய்வது ? என்று யோசிக்கும் போது அதற்குத் தான் பதில் தருகிறார்கள் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் ;- பொருள் தகுதி இல்லையென்றால் நீங்கள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கு கேடயமாக இருக்கும் என்று சொல்லி, நோன்பு மனித உடம்பில் உஷ்ணத்தை கட்டுப் படுத்துகிறது என்ற அறிவியல் உண்மையை அழகாக சொல்லி விட்டார்கள் நபி [ஸல்] அவர்கள்.



இப்படி பல்வேறு பலன்களை நோன்பு தருவதினால் தான் {FASTING IS A BEST MADECINE} உண்மையான நோன்பு ஒரு சிறந்த மருத்துவம் என்று எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள். நோன்பு வையுங்கள் நலம் பெறுங்கள் என்று நபி [ஸல்] அவர்கள் சொன்ன கருத்தின் அர்த்தம் இப்போது நமக்கு தெளிவாக புரிகிறதல்லவா!



இன்றைக்கு ஏதாவது ஒரு நோய் என்று டாக்டரிடம் போனால் முதலில் அவர் சொல்கிற விஷயம் என்ன? இரண்டு நாளைக்கு சாப்பாட்டை கட்டுப் படுத்துங்கள். நோய் கொஞ்சம் கொஞ்சமா குணமாகி விடும். இப்படித்தான் சொல்வார்கள். அதனால் நாம் உணவை குறைத்து விட்டாலே பாதி நோயுக்கு அது தான் மருந்து.



அதுபோல நாம் அதிகமாக சாப்பிடுவதினால் நமக்கு ஏற்படக்கூடிய முக்கியமான பாதிப்பு என்னவென்றால்.... அதிகமாக சாப்பிடும் போது உடல் சோர்ந்து போய் விடும்.எந்த வேளையையும் கவனத்தோடு செய்ய முடியாது. ஒரு மாதிரியாக மயக்கமாக இருக்கும். மந்தமாக இருக்கும். அதே சமயத்துல குறைவாக சாப்பிட்டால் உடல் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும்.எந்த வேளையையும் கவனத்தோடு செய்ய முடியும். இதை இன்றைக்கு எல்லோருமே அனுபவப் பூர்வமாக உணர்ந்திருப்போம்.



என்ன காரணம்? இன்றைக்கு ஆராய்ச்சி சொல்கிறது....

நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் சீராக,சரியாக இரத்தத்தை சப்ளை செய்வது மூளை தான். அந்த மூளை சரியா எல்லா உறுப்புகளுக்கும் சப்ளை செய்வதால் தான் உடம்பில் எல்லா உறுப்புக்களும் சரியாக முறையாக வேளை செய்யும். அந்த மூளை தன் வேளையை சரியாக செய்ய வில்லையென்றால் என்ன ஆகும்? உடம்பில் எல்லா உறுப்புகளோட செயல் திறனும் குறைந்து போய் விடும். இது நமக்குத் தெரியும்.



அதேபோல் நாம் சாப்பிடக்கூடிய உணவை செரிமானம் ஆக வைக்கிறது நமது இரைப்பை தான். இரைப்பை சரியாக வேளை செய்வதினால் தான் நாம சாப்பிடக்கூடிய உணவு சரியாக செரிமானம் ஆகி, நாம் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.



நாம் அதிகமாக சாப்பிடும் போது இரைப்பைக்கு அதிகமாக இரத்தம் தேவைப்படுகிறது. எனவே உடம்பில் உள்ள அதிகமான இரத்தம் இரப்பைக்கு போய் விடும். இப்படி இரைப்பைக்கு அதிகமாக இரத்தம் செல்வதினால் மற்ற உறுப்புகளுக்கும் மூளைக்கும் இரத்தம் குறைந்து போய் விடும். இதனால் தான் எல்லா உறுப்புகளுக்கும் சோர்வு உண்டாகிறது, களைப்பு ஏற்படுகிது. இதனால் தான் அதிகமாக சாப்பிட்ட நேரத்தில் மூளையும் சரி மற்ற உறுப்புகளும் சரி சரியாக ஒழுங்காக வேளை செய்வதில்லை.



ஆனால் குறைவாக சாப்பிடும் போது வயிறு காலியாக இருக்குது. இரப்பைக்கும் அதிகமா இரத்தம் தேவைப்படாது.அதனால் உடலில் இரத்தம் எல்லா இடங்களுக்கும் முறையாக சப்ளை செய்யப்படுகிறது. உடல் உறுப்புக்களும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.



18ம் நூற்றாண்டில் மொஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பல்வேறு வகையான நோய்களை தடுப்பது பட்டினி சிகிச்சை தான், பட்டினியாக இருப்பது தான் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்று ஆய்வின் மூலம் கண்டு பிடித்து வெற்றியும் பெற்றார்கள்.



இன்று உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி, நல்லா பசிக்கிறதா? என்று. அப்படியென்றால் என்ன அர்த்தம் ? நல்ல பசி எடுத்தாலே நாம் உடல் நலத்தோடு இருக்குறோம் என்று தான் அர்த்தம். அதனால் தான் அல்லாஹுத்தஆலா நாம் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக நமக்கு உண்ணா நோன்பைக் கட்டாயமாக்கி இருக்கிறான் என்பதை புரிய முடிகிறது.


“உலகம் முறையாக இயங்குவதற்கு எது அடிப்படையான காரணம்?”எதை வைத்து உலகம் இயங்கிறது என்று அறிவிறல் ஆய்வாளர்கள் சிந்தித்தார்கள்.



ஒரு சிலர் பாலுறவு தான்,அதாவது மனிதனுக்கு நிகழக்கூடிய அந்த பாலுறவு தான் காரணம் என்று சொன்னார்கள். அவர்களுக்கு பின்னால வந்த ஆய்வாளர்கள், பாலுறவு என்பது ஒரு எல்லை வரை தான். அதனால் உலகம் இயங்குவதற்கு அது காரணமில்லை. மதம் சார்ந்த உணர்வு தான் உலக இயக்கத்துக்குக் காரணம் என்று அவர்கள் சொன்னார்கள்.



ஆனால் இமாம் கஸ்ஸாலி [ரஹ்] அவர்கள், “உலக இயக்கத்துக்கு பசி தான் காரணம்” என்று சொல்கிறார்கள். இதுதான் உண்மை என்று இன்று உலகம் நிரூபித்து விட்டது.



அதாவது பசி மட்டும் மனிதனுக்கு இல்லையென்றால்... அவன் எந்த வேலையையும் செய்ய மாட்டான். ஏன் என்றால்.... எல்லோரும் சம்பாதிப்பது, தொழில் செய்வது நல்ல சாப்பிடுவதற்குத்தான். பசியே இல்லையென்றால் எப்படி அவன் வேளை செய்வான் ? எப்படி அவன் தொழில் செய்வான் ? அதனால் தான் உலக இயக்கத்திற்கே பசி தான் காரணம் என்றார்கள் கஸ்ஸாலி [ரஹ்] அவர்கள்


முந்தைய பதிவுகளை வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

ரமலான் 2026.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக