தராவீஹ் பயான் பிறை – 4
தலைப்பு : மரணம் முடிவல்ல தொடக்கம்
ஹிஜ்ரி 1447.
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ
நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!”அல்குர்ஆன் 4:78
أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ. ترمذي
இன்று தராவீஹில் ஓதப்பட்ட ஸூரா நிஸாவில் வரக்கூடிய வசனங்களில் ஒன்று மேலே ஓதிக் காட்டப்பட்ட …… மரணம் எங்கிருந்தாலும் வரும்.
உஹத் போர்க்களத்திற்குப் பிறகு அதில் கலந்து கொண்ட ஸஹாபாக்களைக் குறித்து முனாஃபிக்குகள் சொன்னார்கள் ; அவர்கள் போருக்குச் செல்லாமல் எங்களோடு இருந்திருந்தால் அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள். கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறிய முனாஃபிக்களுக்கு பதில் கூறும் முகமாகத் தான் மேற்கூறப்பட்ட வசனத்தை இறைவன் இறக்கியருளினான்.
நூல்: தஃப்ஸீர் பகவீ
போர்க்களத்திற்கு சென்றதால் தான் அவர்கள் மரணித்தார்கள். போர்க்களத்திற்கு போகாமல் எங்களைப்போன்ற ஊரிலேயே அமர்ந்திருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது அவர்களது எண்ணம். ஆனால் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன், மரணம் எங்கிருந்தாலும் வரும். நீங்கள் போர்க்களத்திற்கு சென்றாலும் வரும். செல்லாமல் ஊரில் இருந்தாலும் மரணம் உங்களைத் தேடி வரும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று அந்த வசனத்தின் வழியே பதில் கூறுகிறான்.
மரணம் அனைவரையும் கண்டிப்பாக வந்தடைந்து விடும். இந்த நேரத்தில் எனக்கு மரணம் வர வேண்டும். இந்த இடத்தில் தான் நான் மரணிக்க வேண்டும். அல்லது இந்த நேரத்தில் நான் மரணிக்கக் கூடாது.
இந்த இடத்தில் மரணிக்கக் கூடாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அல்லாஹ் நம் விதியில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானோ அந்த இடத்தில் தான் நடக்கும். அந்த நேரத்தில் தான் நடக்கும்.
நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும். (அல் குர்ஆன் 62:8)
இன்பங்களை முறித்துவிடும், உறவுகளை பிரித்து விடும்,ஆசைகளை அறுத்துவிடும்.
மாளிகைகள் இதற்கு தடையில்லை. மன்னர்களும் இதற்கு தடையில்லை. மருத்துவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
யாருக்கு முன்னும் மண்டியிட்டு பழக்கமில்லை,
உலக வரலாற்றில் கருத்து வேறுபாடுகளை தாண்டி ஒரு விஷயம் இருக்குமானால் அது மரணத்திற்கு மட்டும் சொந்தமானது.
ஏனெனில் இறைவனை மறுக்கும் மதங்கள் உண்டு,மறுமையை மறுக்கும் மதங்களும் உண்டு,ஆனால் மரணத்தை மறுத்துப் பேசும் தைரியம் இதுவரை யாருக்கும் கிடையாது.
உலகின் எல்லா ஆராய்ச்சிகளும் தோற்றுப்போகும் இடமாகும்.
மரணத்தின் சூட்சுமத்தை அறிந்துகொள்ளவேண்டுமானால் மனிதனுக்கு மரணத்தை தருகிற ரூஹின் இரகசியத்தை தெரிந்தாக வேண்டும்.
ரூஹ் (Ruh) என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதற்கு "ஆன்மா" அல்லது "உயிர்" என்று பொருள்.
ரூஹ் என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஒன்று. இது மனித உடலுக்குள் இருக்கும் வரை மனிதன் உயிருடன் இருக்கிறான். அது உடலை விட்டு நீங்கும்போது மரணம் நிகழ்கிறது.
குர்ஆன் கூறுவது என்ன?
ரூஹ் என்பது மனித அறிவுக்கு எட்டாத ஒரு ரகசியம் என்பதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மக்கள் ரூஹ் பற்றி கேட்டபோது, அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:
وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் : 17:85)
இதிலிருந்து நாம் அறிவது:
ரூஹ் என்பது அல்லாஹ்வின் பிரத்யேகக் கட்டளையினால் ஆனது.
அதைப் பற்றிய முழுமையான அறிவு மனிதர்களுக்கு வழங்கப்படவில்லை.
ரூஹின் வகைகள்
மார்க்க அறிஞர்கள் ரூஹ் என்பதை பல்வேறு சூழல்களில் விளக்குகின்றனர்:
மனித ஆன்மா: ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட உயிர்.
குர்ஆனில் பல இடங்களில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "ரூஹுல் குதுஸ்" (பரிசுத்த ஆவி) அல்லது "அர்-ரூஹ்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
வஹீ (இறைச்செய்தி): குர்ஆன் மனிதர்களின் உள்ளங்களுக்கு உயிர் கொடுப்பதால், அதுவும் ஒரு வகை 'ரூஹ்' என்று சில இடங்களில் குறிக்கப்படுகிறது.
ரூஹ் என்பது இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஒரு தெய்வீகமான உயிர் சக்தி. அது எங்கிருந்து வருகிறது, அதன் வடிவம் என்ன என்பது போன்ற உண்மைகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களாகும்.
ஆன்மீக அறிஞர்கள் ரூஹின் ரகசியத்தை இவ்வாறு விளக்குகிறார்கள்:
உடல் மண்ணோடு மண்ணாகிவிடும், ஆனால் ரூஹ் அழிவதில்லை. அது ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு (ஆலமுல் அர்வாஹ் -> துன்யா -> பர்ஸக் -> ஆகிரத்) பயணம் செய்கிறது.
உடல் என்பது ஒரு வாகனம் என்றால், ரூஹ் என்பது அதை இயக்கும் ஆற்றல். ரூஹ் பிரிந்தவுடன் உடல் ஜடமாகிவிடுகிறது.
அல்லாஹ் மனிதனைப் படைத்தபோது,
فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ
“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, என்னுடைய ரூஹிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (அல்குர்ஆன் : 38:72)
என்று அல்லாஹ் கூறுகிறான். இது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான ஒரு நுட்பமான பிணைப்பைக் குறிக்கிறது.
ரூஹின் முழுமையான ரகசியம் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நாம் எவ்வளவுதான் அறிவியல் ரீதியாகவோ அல்லது தத்துவ ரீதியாகவோ தேடினாலும், அதன் முழு எதார்த்தத்தை மனித மூளையால் கிரகிக்க முடியாது. ஆனால், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் (தஸ்கியத்துன் நப்ஸ்), அந்த ரூஹின் பிரகாசத்தை உணர முடியும்.
உடல் மண்ணுக்குச் சென்றாலும், ரூஹ் அழியாமல் 'பர்ஸக்' (Barzakh) எனும் திரை மறைவு வாழ்க்கைக்குச் செல்கிறது.
மரணத்திலிருந்து மறுமை நாள் வரை ரூஹ் சந்திக்கும் நிலைகள் :
1. மனிதனின் இறுதி நேரத்தில் 'மலக்குல் மவ்த்' (உயிரைப் பறிக்கும் வானவர்) வந்து ரூஹைக் கைப்பற்றுவார்.
அவர் நல்லடியாராக இருந்தால் ரூஹ் மிக மென்மையாக, குடத்தில் இருந்து நீர் வழிவது போல வெளியேறும். வானவர்கள் அதனை நறுமணம் வீசும் பட்டு துணியில் ஏந்தி வானிற்கு அழைத்துச் செல்வார்கள்.
தீயவராக இருந்தால் ரூஹ் மிகக் கடினமாகவும் வலியுடனும் பிரிக்கப்படும். வானவர்கள் அதனை அருவருப்பான வாடை வீசும் சாக்குத் துணியில் ஏந்திச் செல்வார்கள்.
2. வானுலகப் பயணம்
ஒவ்வொரு ரூஹும் வானத்திற்கு கொண்டு செல்லப்படும்.
* நல்லவர்களின் ரூஹ் வரும்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படும். அல்லாஹ் அந்த ரூஹை 'இல்லிய்யீன்' (உயர்ந்தோரின் பதிவுப் புத்தகம்) என்ற இடத்தில் பதிவு செய்யச் சொல்வான்.
* தீயவர்களின் ரூஹ் வரும்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. அல்லாஹ் அதனை 'ஸிஜ்ஜீன்' (தாழ்ந்தோரின் பதிவுப் புத்தகம்) என்ற இடத்தில் பதிவு செய்யச் சொல்வான்.
3. 'பர்ஸக்' - திரை மறைவு வாழ்க்கை
இதற்குப் பிறகு ரூஹ் மீண்டும் அதன் உடலுக்குக் கொண்டு வரப்பட்டு, கப்ரில் (மண்ணறையில்) வைக்கப்படும். அங்கு முன்கர் அலைஹிஸ்ஸலாம் நகீர் அலைஹிஸ்ஸலாம் எனும் வானவர்கள் சில கேள்விகளைக் கேட்பார்கள்:
* உனது இறைவன் யார்?
* உனது மார்க்கம் எது?
* உனது நபி யார்?
இதற்குப் பிறகு:
* நல்லவர்களுக்கு: சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டு, நறுமணமும் தென்றலும் வந்துகொண்டிருக்கும். அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்.
அல்லாஹ் நல்லோர்கள் பட்டியலில் நம்மை சேர்ப்பானாக.
* தீயவர்களுக்கு: நரகத்தின் வாசல் திறக்கப்பட்டு, அதன் வெப்பமும் வேதனையும் வந்துகொண்டிருக்கும்.
அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக
4. ரூஹ் எங்கே தங்கியிருக்கும்?
(அறிஞர்களின் கருத்து) மறுமை நாள் வரும் வரை ரூஹ்கள் தங்கியிருக்கும் இடங்கள் குறித்து சில ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன:
ஷஹீத்கள் (உயிர்த்தியாகிகள்) இவர்களின் ரூஹ்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிற்றுக்குள் இருந்து சொர்க்கத்தில் சுற்றித் திரியும்.
முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) இவர்களின் ரூஹ்கள் சொர்க்கத்தின் மரங்களில் தொங்கும் பறவைகளாக இருக்கும்.
பாவிகள் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப (உதாரணமாக: வட்டி வாங்கியவர்கள், பொய் சொன்னவர்கள்) பர்ஸக் வாழ்க்கையில் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
எனவே மரணம் எப்போது வேண்டுமானாலும் அது வரலாம் அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் மரணத்திற்கு பிறகு உண்டான வாழ்வு தான் நிரந்தரமான வாழ்வு என்பதே நாம் எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நேரம் வந்துவிட்டால் ஒரு வினாடி கூட தள்ளிப்போடப்பட மாட்டாது.
أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ
🎙️"இன்பங்களை முறித்து விடக்கூடிய (மரணத்தை) அதிகமதிகம் நினையுங்கள்.” நூல்: திர்மிதீ
மதீனாவின் மீதான காதல்
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மதீனாவிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே கல்வி கற்று, அங்கேயே மறைந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்த மண்ணில் மிதிப்பதே பெரும் பாக்கியம் எனக் கருதி, மதீனாவின் வீதிகளில் அவர்கள் காலணி (செருப்பு) அணியாமல் நடப்பார்கள்.
"மதீனாவில் மரணிப்பவருக்கு நான் பரிந்துரை செய்வேன்" என்ற நபிமொழியை ஆழமாக நம்பியதால், அந்தப் பாக்கியம் தவறிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
கலீஃபா ஹாரூன் ரஷீத் தனது அரண்மனைக்கு வந்து தனது பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தும்படி இமாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்போது இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பதிலைச் சொன்னார்கள்
"கல்வி தேடிச் செல்லப்பட வேண்டியது; கல்வி யாரிடமும் தேடி வராது." (Al-Ilmu Yu'ta wa la ya'ti)
இந்தக் கண்ணியமான பதிலைக் கேட்டு, கலீஃபா அவர்களே இமாமிடம் வந்து கல்வி கற்கச் சம்மதித்தார்.
அவர்கள் ஆசை மதினாவில் மரணிக்க வேண்டும். அது தவறி விட கூடாது என்ற காரணத்தால் தான்.
அவர்கள் கடமையான ஹஜ் தவிர சுன்னத்தான ஹஜ்ஜை கூட அவர்கள் செய்யவில்லை காரணம் மதினாவில் மரணிக்க வேண்டும். மரணம் எப்போதும் வரலாம். அதற்கு தயாராக வேண்டும் என்பதற்காக.
உனக்காக யார் தொழுவார்?
யஜீத் பின் ரகாஷி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பஸராவைச் சேர்ந்த ஒரு சிறந்த பேச்சாளர். அவர் தனது உரைகளில் மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இவ்வளவு அதிகமாக அழுவார் என்றால், அவர் அழுவதைப் பார்த்து சபையில் இருப்பவர்களும் கதறி அழுவார்கள். அவர் ஒருமுறை இவ்வாறு கூறினார்:
"மரணமே நமக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகவும், மண்ணறையே நமது வீடாகவும், புழுக்களே நமக்குத் தோழனாகவும், முன்கர்-நகீரே நமது விசாரணையாளர்களாகவும் இருக்கும்போது, நாம் எப்படிச் சிரிக்க முடியும்? மறுமை நாள் நமக்காகக் காத்திருக்கிறது, சொர்க்கம் அல்லது நரகம் இரண்டில் ஒன்று தான் நமது முடிவு. அப்படியிருக்கையில் நமக்கு எப்படி உறக்கம் வரும்?"
அவர் தனது மரணத் தருவாயிலும் அழுதுகொண்டே தன் ஆன்மாவிடம் கேட்ட அந்த கேள்விகள் தான்: "யஜீதே! உனக்காக யார் தொழுவார்? உனக்காக யார் நோன்பு நோற்பார்? உனக்காக யார் உனது இறைவனைத் திருப்திப்படுத்துவார்?” நூல் :ஹில்யத்துல் அவ்லியா
அதாவது, நாம் மரணித்துவிட்டால் நம்முடைய அமல்கள் (செயல்கள்) முற்றுப் பெற்றுவிடும். நமக்காக யாரும் தொழ மாட்டார்கள், யாரும் நோன்பு நோற்க மாட்டார்கள். அந்தத் தனிமையில், அந்த இருட்டில் நாம் மட்டுமே இருக்கப் போகிறோம் என்ற பயம் அவரை நடுங்கச் செய்தது.
எந்த தயாரிப்பும் இல்லையே!
அபூ தாஹியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு அரசவை கவிஞர் அவர் தனது வாழ்வின் ஒரு பகுதியில் உலக இன்பங்களைப் பாடினாலும், பின்னாட்களில் உலகப்பற்றற்ற (Zuhd) கவிதைகளை அதிகம் பாடியவர். தனது இறுதித் தருணத்தில் சொன்னது. அவர் உலகப் புகழுடன் வாழ்ந்தவர். அவர் மரணத் தருவாயில் இருந்த போது, அவரது பிள்ளைகள் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தனர்.
அவர் தன் மகனை அழைத்துச் சொன்னார்:
"மகனே! இந்த உலகத்தில் நான் எதற்கெல்லாம் பயந்தேனோ, அதற்கெல்லாம் எனக்குத் தீர்வு கிடைத்தது. பசிக்கு உணவு கிடைத்தது, குளிர்ச்சிக்கு ஆடை கிடைத்தது, எதிரிக்கு வாள் கிடைத்தது.
ஆனால், இன்று நான் பார்க்காத ஒரு முகத்தை (மரண தூதரை) பார்க்க போகிறேன்.
நான் அறியாத ஒரு பாதையில் (மறுமை) பயணம் செய்யப் போகிறேன்.
இதுவரையிலும் நான் அனுபவித்திராத ஒரு வலியை (உயிர் பிரியும் வேதனை) அனுபவிக்கிறேன். ஆனால், என்னிடம் ஒரு தயாரிப்பும் இல்லையே!" நூல் : இஹ்யா உலூமித்தீன்
கவிஞர் அபூ தாஹியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொன்ன வார்த்தைகளில் உள்ள மிக முக்கியமான அம்சம் "தயாரிப்பு இல்லை (Lack of Preparation)" என்பதுதான்.
தெரியாத முகம்: மலக்குல் மவ்த்.
தெரியாத பாதை: பர்ஸக் மற்றும் மறுமைப் பயணம்.
அனுபவித்திராத வலி: ஸகராத்துல் மவ்த் (உயிர் பிரியும் வேதனை).
இவை மூன்றையும் வெல்ல 'ஈமான்' மட்டுமே வழி என்பதை இந்தச் சம்பவம் ஆழமாக உணர்த்துகிறது.
இரண்டாவது வாய்ப்பு
மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரான இமாம் ரபீஃ பின் கைஸம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை ஒரு ஜனாஸா (இறந்தவரின் உடல்) கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் அழுதுகொண்டே பின்னால் சென்றார்கள். ஒருவர் அவர்களிடம் கேட்டார்கள், "ஏன் இவ்வளவு அழுகிறீர்கள்? அவர் உங்கள் உறவினரா?"
அதற்கு அவர் சொன்னார்: "இல்லை, அவர் என் உறவினர் இல்லை. ஆனால், இப்போது அவர் படுத்திருக்கும் அந்தப் பெட்டியில் (ஜனாஸா கட்டிலில்) நான் படுத்திருப்பதாகக் கற்பனை செய்து பார்த்தேன். அவர் இப்போது உலகத்திற்கு மீண்டும் ஒருமுறை வந்து 'யா அல்லாஹ்! நான் தவறு செய்துவிட்டேன், என்னை ஒருமுறை திருப்பி அனுப்பு, நான் தொழுதுவிட்டு வருகிறேன்' என்று கெஞ்சுவார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு (உயிர்) இருக்கிறது. ஆனால் நான் இன்னும் மாறவில்லையே என்று நினைத்து அழுகிறேன்.” நூல்:ஸஃபவத்துஸ் ஸஃப்வா”
இரண்டாவது வாய்ப்பு" (The Second Chance)
குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்: மரணிக்கும் தருவாயில் ஒவ்வொரு மனிதனும், "இறைவா! என்னை மீண்டும் ஒருமுறை உலகிற்குத் திருப்பி அனுப்பு, நான் விடுபட்ட நற்செயல்களைச் செய்கிறேன்" என்று கெஞ்சுவான்.
ஆனால், அல்லாஹ் பதில் சொல்வான்: "கல்லா!" (அப்படியல்ல! அது வெறும் வார்த்தைதான்). (அல்குர்ஆன் 23:99-100).
அந்தப் பெரியவர் அழுததன் காரணம், அந்த ஜனாஸா இப்போது விரும்பும் அந்த "இரண்டாவது வாய்ப்பை" தான் இப்போது (உயிரோடு இருப்பதால்) அனுபவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.
மரண ஊர்வலத்தை ஒரு சடங்காகப் பார்க்காமல், அது தனக்கான ஒரு செய்தி என்று அவர் கருதினார்கள். "இன்று அவர், நாளை நான்" என்ற எண்ணமே ஒரு மனிதனைப் பாவங்களிலிருந்து தடுத்து, நல்வழியில் செலுத்தும்.
இந்த இமாம் அவர்கள், தனது வீட்டின் உள்ளேயே ஒரு கப்ரடியைத் (மண்ணறையை) தோண்டி வைத்திருந்தார்கள். தினமும் இரவு அதில் படுத்துக் கொண்டு அந்த ஜனாஸா சொன்னது போன்றே பேசுவார்:
"யா அல்லாஹ்! என்னை உலகிற்குத் திருப்பி அனுப்பு, நான் அமல் செய்துவிட்டு வருகிறேன்."
பிறகு அவரே குழியிலிருந்து வெளியே வந்து, "ரபீயே! இதோ உனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. இப்போதே நன்மைகளைச் செய்துகொள்!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வார்.
அன்புச் சகோதரர்களே! நாம் ஜனாஸாக்களைச் சுமந்து செல்கிறோம். ஆனால் நம்முடைய சுமைகளை (பாவங்களை) இறக்கி வைக்க மறந்துவிட்டோம். அந்த ஜனாஸா பெட்டியில் இருக்கும் மனிதன் தன் வாழ்நாளில் சேர்த்த அத்தனை சொத்துக்களையும் கொடுக்கத் தயாராக இருப்பான் - எதற்காகத் தெரியுமா? ஒருமுறை 'சுப்ஹானல்லாஹ்' சொல்வதற்காக! அல்லது இரண்டு ரக்அத் தொழுவதற்காக! அவருக்குக் கிடைக்காத அந்த பொன்னான வாய்ப்பு இப்போது உங்கள் ஒவ்வொருவர் மூச்சிலும் இருக்கிறது. அந்த மூச்சு நிற்கும் முன் நாம் மாறுவோமா?"
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
"உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து தான தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவர் மரணத்தின் போது) 'என் இறைவனே! எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே!' என்று கூறுவான்." (அல்குர்ஆன் 63:10)
அல்லாஹ் ஆயத் இறக்கினான்
(كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلالِ وَالإكْرَامِ)
குல்லு மன் அலைஹா ஃபான்" – பூமிக்கு மேல் உள்ள அனைவரும் அழிந்துவிடுவார்கள்.
மலக்குகளின் உரையாடல்
இந்த வசனத்தின் முதல் பகுதி (குல்லு மன் அலைஹா ஃபான்) இறங்கியபோது, வானவர்கள் (மலக்குகள்) இவ்வாறு எண்ணிக் கொண்டார்கள்:
"பூமியில் வசிக்கும் மனிதர்களும் மற்ற உயிரினங்களும்தான் அழியப் போகிறார்கள். நாம் வானத்தில் இருப்பவர்கள், நமக்கு அழிவில்லை போலிருக்கிறது.”
"வ யப்கா வஜ்ஹு ரப்பிக துல் ஜலாலி வல் இக்ராம்" – மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகம் (அவன் மட்டுமே) நிலைத்திருப்பான்.
அவர்கள் மனிதர்களின் நிலையை எண்ணி முதலில் அமைதியாக இருந்தார்கள். ஆனால், அதன் தொடர்ச்சியாக "குல்லு ஷைஇன் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹ்" (அவனது முகத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழியக்கூடியவையே - 28:88) போன்ற வசனங்கள் வந்தபோது, தாங்களும் அழிவுக்கு உட்பட்டவர்களே.
என்பதை நினைத்து கவலை கொண்டார்கள்.
🌲முஸ்லிமாக மரணம் ஆகனும்
.يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
காலம் முழுவதும் நல்லது செய்து முடிவில் மரண நேரத்தில் தீய செயல் செய்து விடாமல் இருக்க அல்லாஹ் விடம் துஆ செய்து கொண்டு இருக்க வேண்டும்.
ஒருமுறை இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒருவர் ஏளனம் செய்யும் நோக்கத்தில் கேட்டார்:
"உங்களுடைய தாடி சிறந்ததா? அல்லது இந்த நாயின் வால் சிறந்ததா?"
அதற்கு இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கோபப்படாமல் மிக அமைதியாகப் பதிலளித்தார்:
"நான் ஈமானுடன் (இறைநம்பிக்கையுடன்) மரணித்து, இறைவனின் மன்னிப்பைப் பெற்று சொர்க்கம் சென்றால், என் தாடி இந்த நாயின் வாலை விடச் சிறந்தது. ஒருவேளை நான் இறைவனால் சபிக்கப்பட்டு, நரகத்திற்குச் செல்பவனாக இருந்தால், இந்த நாய் என்னை விடச் சிறந்தது. ஏனெனில், இந்த நாய் நரகத்திற்குச் செல்லப் போவதில்லை, அதற்கு விசாரணையும் இல்லை.”
மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது அது மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது அதை விட்டு யாரும் தப்பிக்கவும் முடியாது எனவே இது வருவதற்கு முன்பாக நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் அல்லாஹ்விடத்தில் ஈமானோடு மரணி
க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அல்லாஹ் ஈமானோடு அவனை வணங்கிய நிலையில் மரணிக்கும் பாக்கியத்தை தருவானாக நாளை மறுமையில் நல்லோர்களோடு சொர்க்கத்தில் நம் எல்லோரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக