شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ
قال رسول الله ﷺ: "اقرؤوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعًا لأصحابه". رواه مسلم
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் : 2:185
புனித குர்ஆன் என்பது வெறும் புத்தகம் அல்ல; அது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட நேர்வழி (ஹிதாயத்) மற்றும் அருட்கொடை ஆகும்.
குர்ஆனின் மிக உயரிய சிறப்பு என்னவென்றால், அது நம்மை படைத்த இறைவனின் நேரடிப் பேச்சாகும். கலாமுல்லாஹ்)
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இது அருளப்பட்டது.
"நிச்சயமாக நாமே இந்த உபதேசத்தை (குர்ஆனை) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்" (அல்குர்ஆன் 15:9) என்று அல்லாஹ்வே இதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்றுள்ளான்.
சிறந்த வழிகாட்டி இந்த உலகம் மற்றும் மறுமை ஆகிய இரண்டிற்கும் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் இதில் உள்ளன.
இருளில் தவிக்கும் மனிதனை ஒளியின் பக்கம் கொண்டு வரும் வல்லமை குர்ஆனுக்கு உண்டு.
வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் இதில் தீர்வு உள்ளது.
குர்ஆனை ஓதுவது ஒரு சிறந்த இபாதத் (வணக்கம்) ஆகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "குர்ஆனின் ஒரு எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்காக ஆக்கப்படும். 'அலிஃப், லாம், மீம்' என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். மாறாக 'அலிஃப்' ஒரு எழுத்து, 'லாம்' ஒரு எழுத்து, 'மீம்' ஒரு எழுத்து" (ஆதாரம்: திர்மிதி).
மனக்கவலை, குழப்பம் மற்றும் உள்ளத்தின் நோய்களுக்கு குர்ஆன் ஒரு சிறந்த நிவாரணியாகும்.
"நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலமே உள்ளங்கள் அமைதி பெறுகின்றன" (அல்குர்ஆன் 13:28).
"நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! ஏனெனில் அது மறுமை நாளில் அதை ஓதியவர்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்: முஸ்லிம்.
வானவர்கள் செவிமடுத்த குர்ஆன்
உஸைத் இப்னு ஹுளைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அழகான குரலில் குர்ஆனை ஓதக்கூடியவர். ஒரு நள்ளிரவு நேரத்தில், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள பேரீச்சம்பழத் தோட்டத்தில் அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். அருகே அவர்களது குதிரை கட்டப்பட்டிருந்தது. அவரது மகன் யஹ்யா அருகே தூங்கிக் கொண்டிருந்தார்.
அவர் சூரா அல்-பகராவை ஓதத் தொடங்கியபோது, திடீரென குதிரை மிரண்டு குதிக்கத் தொடங்கியது. அவர் ஓதுவதை நிறுத்தியதும், குதிரையும் அமைதியானது. மீண்டும் அவர் ஓதத் தொடங்கியபோது, குதிரை முன்னைவிட வேகமாக மிரண்டு குதித்தது.
தனது மகன் குதிரையின் காலடியில் மிதிப்பட்டு விடுவானோ என்று அஞ்சிய உசைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஓதுவதை நிறுத்திவிட்டு வானத்தைப் பார்த்தார். அங்கே ஒரு மேகம் போன்ற நிழல் குடை தெரிந்தது. அந்த மேகத்திற்குள் பிரகாசமான விளக்குகள் போன்ற ஒளி தெரிந்தது. அந்த ஒளி அப்படியே மெல்ல மெல்ல வானத்தை நோக்கி உயர்ந்து மறைந்து போனது.
மறுநாள் காலை அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உசைத்தே! நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்திருக்க வேண்டாமா?" அதற்கு உசைத் ரலியல்லாஹு அன்ஹு" யா ரசூலுல்லாஹ்! என் மகன் யஹ்யாவை குதிரை மிதித்துவிடுமோ என்று பயந்தேன்" என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
"அவை மலக்குகள்! நீர் ஓதிய குர்ஆன் சப்தத்தைக் கேட்பதற்காக அவர்கள் கீழே இறங்கி வந்தார்கள். நீர் மட்டும் விடியும் வரை ஓதிக்கொண்டே இருந்திருந்தால், காலையில் மக்கள் அனைவரும் அந்த மலக்குகளை நேரில் பார்த்திருப்பார்கள். அவர்களும் மக்களிடமிருந்து மறைந்திருக்க மாட்டார்கள்." நூல்: புகாரி
நபிகளாரை அழ வைத்த குர்ஆன்
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அழகாக குர்ஆன் ஓதக்கூடியவர்களில் ஒருவர். ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும் பணிவுடனும், "யா ரசூலுல்லாஹ்! குர்ஆன் உங்கள் மீதுதான் இறக்கப்பட்டது. அப்படி இருக்க நான் உங்களுக்கு ஓதிக்காட்டுவதா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம், குர்ஆனை மற்றவர்கள் ஓத நான் செவிமடுப்பதையும் (கேட்பதையும்) நான் விரும்புகிறேன்" என்றார்கள்.
இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சூரா அன்னிஸா (பெண்கள்) அத்தியாயத்தை ஓதத் தொடங்கினார்கள். அவர் ஓதிக் கொண்டே வந்து பின்வரும் 41-வது வசனத்தை அடைந்தபோது
فَكَيْـفَ اِذَا جِئْـنَا مِنْ كُلِّ اُمَّةٍ ۭ بِشَهِيْدٍ وَّجِئْـنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًا
"ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வரும்போது (நபியே!) உம்மையும் இவர்களுக்குச் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (அவர்களுடைய நிலைமை) எப்படியிருக்கும்?" (அல்குர்ஆன் 4:41)
இந்த வசனத்தை அவர் ஓதி முடித்ததும், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "போதும், நிறுத்துங்கள்" என்றார்கள். இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரைப் பார்த்தபோது, அவர்களின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
நூல்: புகாரி
எதிரியின் உள்ளத்தைக் கரைத்த குர்ஆன்
ஜுபைர் பின் முத்இம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு, பத்ரு போரில் சிறைபிடிக்கப்பட்ட தனது உறவினர்களை விடுவிப்பதற்காக மதீனாவுக்கு வந்திருந்தார். அவர் அப்போது இன்னும் முஸ்லிமாகவில்லை.
அவர் மதீனாவுக்கு வந்தபோது மக்ரிப் தொழுகை நடந்து கொண்டிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் 'சூரா அத்தூர்’ (Surah At-Tur) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள். ஜுபைர் பின் முத்இம் மஸ்ஜிதுக்கு வெளியே நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதியபோது ஜுபைர் அப்படியே உறைந்து போய் நின்றார்:
اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ
اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ بَلْ لَّا يُوْقِنُوْنَ
"அல்லது, அவர்கள் யாதொரு பொருளுமின்றி (தாமாகவே) படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்கள் தாம் (தங்களைப் படைத்துக் கொண்ட) படைப்பாளர்களா?"
"அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்களே படைத்தார்களா? அல்ல; அவர்கள் (உண்மையை) உறுதி கொள்ள மாட்டார்கள்." (அல்குர்ஆன் 52:35-36)
இந்தக் கேள்விகளைக் கேட்டவுடன், ஜுபைர் பின் முத்இம் அவர்களின் உள்ளம் நடுங்கியது. அவர் பின்னாளில் இவ்வாறு கூறினார்:
"இந்த வசனங்களைக் கேட்டபோது, என் இதயம் வெடித்துவிடுமோ அல்லது பறந்துவிடுமோ என்று நான் பயந்தேன். அந்தத் தருணத்தில்தான் ஈமான் (இறைநம்பிக்கை) முதன்முதலாக என் உள்ளத்தில் நுழைந்தது." (நூல்: புகாரி)
குர்ஆன் ஓதுவதைக் கேட்டு மெய்சிலிர்த்த ஜின்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகருக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த காலம் அது. மக்காவிற்குத் திரும்பும் வழியில் 'நக்லா' என்ற இடத்தில் இரவு தங்கி, அதிகாலை (பஜ்ர்) தொழுகையில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியாகச் சென்ற ஜின்களின் ஒரு கூட்டத்தினர், நபிகளார் ஓதிய குர்ஆன் சப்தத்தைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.
இந்த நிகழ்வைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
"ஜின்களில் சிலரை குர்ஆனைச் செவியேற்பதற்காக நாம் உம்மிடம் திருப்பிவிட்ட போது, அவர்கள் அதற்கு முன்னிலையில் வந்த போது 'மௌனமாக இருங்கள்' (கவனித்துக் கேளுங்கள்) என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். (ஓதி) முடிக்கப்பட்டதும், தம் சமூகத்தாரிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகத் திரும்பிச் சென்றார்கள்." (அல்குர்ஆன் 46:29)
அந்த ஜின்கள் தங்கள் சமூகத்திடம் சென்று குர்ஆனைப் பற்றிச் சொன்ன விதம் வியப்பிற்குரியது:
"நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. அதன் மீது நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோம்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 72:1-2)
"தாவூது (அலை) அவர்களின் குழலோசை"
அபூ மூஸா அல்-அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை மிக மிக இனிமையான குரலில் ஓதக்கூடியவர். ஒருமுறை நள்ளிரவில் அவர் தனது வீட்டில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.
அவ்வழியாகச் சென்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த அழகிய ஓதத்தைக் கேட்டு அப்படியே நின்று விட்டார்கள். அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளார் அங்கே நிற்பதை அறியாமல், நீண்ட நேரம் குர்ஆனை ரசித்து ஓதிக்கொண்டே இருந்தார்கள்.
மறுநாள் காலையில்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தபோது, "அபூ மூஸாவே! நேற்று இரவு நீர் குர்ஆன் ஓதியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். உமக்குத் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட குழலோசைகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது" என்று பாராட்டினார்கள்.
இதைக் கேட்ட அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இவ்வாறு கூறினார்கள்:
"யா ரசூலுல்லாஹ்! நீங்கள் என் ஓதலைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்திருந்தால், இன்னும் சிறப்பாகவும், அழகாகவும் நான் ஓதியிருப்பேனே!" நூல் புகாரி
உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தை மாற்றிய குர்ஆன்
இஸ்லாத்தின் மிகக்கடுமையான எதிரியாக ஆரம்பத்தில் இருந்தவர் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு ஒருநாள் கோபத்தின் உச்சியில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாளை ஏந்திக்கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஒரு மனிதரைச் சந்தித்தபோது, "உமர்! எங்கே செல்கிறாய்?" என்று கேட்டார். உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது நோக்கத்தைக் கூற, அந்த மனிதர் சொன்னார்: "முஹம்மதுவை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தேடிச் செல்வதற்கு முன், உன் சகோதரி ஃபாத்திமாவும் அவர் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியைப் போய்ப் பார்!" என்றார்.
ஆத்திரமடைந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு நேராகத் தன் சகோதரி வீட்டிற்குச் சென்றார். அங்கே அவர்கள் குர்ஆனின் 'சூரா தாஹா' (Surah Ta-Ha) வசனங்களை ஓதிக்கொண்டிருந்தார்கள். உமர் வந்ததைக் கண்டதும் அவர்கள் அந்த ஏடுகளை மறைத்து வைத்தனர். கோபத்தில் தன் சகோதரியையும் அவர் கணவரையும் உமர் ரலியல்லாஹு அன்ஹு தாக்கினார்.
சகோதரியின் முகத்தில் ரத்தம் வழிந்ததைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு சற்று அமைதியானார். "நீங்கள் ஓதிய அந்த ஏட்டைக் காட்டுங்கள்" என்றார். சகோதரி ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: "நீங்கள் சுத்தமில்லாமல் இருக்கிறீர்கள், குளித்துவிட்டு வாருங்கள், இது பரிசுத்தமான வேதம்" என்றார்கள்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு குளித்து விட்டு வந்து, அந்த ஏட்டில் இருந்த முதல் சில வசனங்களை வாசிக்கத் தொடங்கினார்:
"நாமாகவே உம்மீது இக்குர்ஆனை இறக்கினோம்; நீர் துக்கப்படுவதற்காக அல்ல. பயப்படுபவர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாகும். பூமியையும், உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து இது இறக்கப்பட்டது..." (அல்குர்ஆன் 20:2-4)
இந்த வசனங்களை வாசித்த மாத்திரத்திலேயே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்கள் கலங்கின. அந்த வீரரின் உடல் நடுங்கியது. "எவ்வளவு அழகான வார்த்தைகள்! எவ்வளவு கண்ணியமான பேச்சு!" என்று வியந்து நின்றார்.
சிறிது நேரத்திற்கு முன்பு வரை நபிகளாரைக் கொல்லத் தேடிய அதே உமர் ரலியல்லாஹு அன்ஹு, குர்ஆன் வசனங்களைக் கேட்டவுடன் நேராக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, "அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்..." என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
இப்படிப்பட்ட மகத்தான வேதத்தை நம் அலமாரிகளில் அடுக்கி வைக்காமல், தினமும் ஓதுவோம். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 10 வசனங்களாவது ஓதாமல் நாம் உறங்கச் செல்ல மாட்டோம் என்று இன்று உறுதிமொழி எடுப்போம்.
புனித ரமலான் மாதத்தில் நோன்புடன் தொடர்புடைய குர்ஆனை அதிகம் ஓதுவோம்.
"யா அல்லாஹ்! எங்களின் உள்ளங்களை குர்ஆனின் ஒளியைக் கொண்டு பிரகாசமாக்குவாயாக. குர்ஆனை முறையாக ஓதவும், அதன் பொருளை விளங்கி அதன்படி நடக்கவும் எங்கள் அனைவருக்கும் தௌஃபீக் செய்வாயாக. நாளை மறுமையில் குர்ஆனை எங்கள் சார்பாகப் பரிந்துரை செய்யக்கூடியதாக ஆக்குவாயாக. ஆமீன்.”
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக