வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

இதயத்தின் உயிர் திக்ர்

 


‌தராவீஹ் பயான் பிறை – 10


தலைப்பு : “ இதயத்தின் உயிர் திக்ர் ”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

“நிச்சயமாக அல்லாஹ்வின் நினைவில் இதயங்கள் அமைதி அடைகின்றன.”

— Qur'an 13:28


ابن عباس رضي الله عنهما: ان رسول الله صلى الله عليه وسلم قال: اربع من اعطيهن فقد اعطي خير الدنيا والآخرة: قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله. رواه البيهقي



இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நான்கு பண்புகள் எவருக்கு வழங்கப்படுகிறதோ, அவருக்கு இவ்வுலக மற்றும் மறுமையின் நன்மை வழங்கப்பட்டுவிட்டது:


1)நன்றி செலுத்தும் இதயம் (قلب شاكر)இறைவனை 


2)திக்ரு செய்யும் நாவு (لسان ذاكر)


3)சோதனைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் உடல் (بدن على البلاء صابر)


4)தன் விஷயத்திலும், கணவனின் செல்வத்திலும் துரோகம் செய்யாத மனைவி (زوجة لا تبغيه خونا في نفسها ولا ماله)"



இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸூரா அர்ரஃது அத்தியாயத்தின் வசனம் மிக முக்கியமானவை…


இன்று பணம் இருக்கிறது, ஆனால் அமைதி இல்லை

சமூக ஊடகத்தில் பலர் போட்டி பொறாமை அதிகரிப்பு , கடன்,சுமை அதிகம் குடும்ப அழுத்தம் பலரை மரணம் வரை கொண்டு செல்கிறது.

மன அழுத்தம் (stress), பதட்டம் (anxiety)இது அத்துனை விட்டும் நீங்க தீர்வு திக்ரு தான் அல்லாஹ்வை நினைவு கூர்வது தான்.


 சிறு படையின் பெரும் உறுதி


பத்ருப் போரின்போது, முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது (313 பேர்). எதிரிப்படை பிரம்மாண்டமாக இருந்தது. அந்த இக்கட்டான சூழலில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் இறைவனை இடைவிடாது நினைவு கூர்ந்தார்கள் (திக்ர் மற்றும் துஆ).

யா ஹய்யூ யா கைய்யூம் பி ரஹ்மதிக அஸ்தகீஸ் என்று இரவு முழுவதும் ஓதிக்கொண்டே இருந்தார்கள்.


அல்லாஹ் அவர்களின் இதயங்களில் அமைதியையும் (ஸகீனா), உறுதியையும் இறக்கினான். வானவர்களைக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்தான். திக்ர் அவர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தந்தது.


பிலால் (ரலி) அவர்களின் 'அஹத்.. அஹத்..'

பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வரலாறு நாம் அனைவரும் அறிந்தது. சுட்டெரிக்கும் பாலைவன மணலில் பெரும் பாறையை அவர் நெஞ்சின் மீது வைத்து உமைய்யா இப்னு கலஃப் சித்திரவதை செய்தான்.


அந்த மரணப் போராட்டத்தில் கூட பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அழுததோ அல்லது கெஞ்சவோ இல்லை. மாறாக, "அஹத்.. அஹத்.." (அல்லாஹ் ஒருவனே.. ஒருவனே..) என்று இறைவனை நினைவுகூர்ந்து கொண்டே இருந்தார்கள்.

ஆதாரம் (ஸீறத் இப்னு ஹிஷாம்):


வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்: "ஏன் நீங்கள் அஹத் என்று சொல்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "அந்த வார்த்தைதான் என் எதிரிகளின் இதயத்தை நடுங்கச் செய்கிறது, என் இதயத்திற்கு நிம்மதியைத் தருகிறது" என்று பிலால் (ரலியல்லாஹு அன்ஹு) உணர்த்தினார்கள்.

 அந்த ஒரு திக்ரின் (இறை நினைவின்) வலிமை, அவரை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, பின்னாளில் இஸ்லாத்தின் முதல் 'முஅத்தின்' (பாங்கு சொல்பவர்) என்ற கௌரவத்தைப் பெற்றுத் தந்தது.



இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் மற்றும் ரொட்டி வியாபாரி


இந்தச் சம்பவம் திக்ரின் பயனை (துஆ கபூலாவதை) விளக்கும் ஒரு மிகச்சிறந்த நிகழ்வு:


இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ஒரு பயணத்தின் போது ஒரு ஊருக்குச் சென்றார். அங்குள்ள மஸ்ஜிதில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 

அப்போது ஒரு ரொட்டி வியாபாரி அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அந்த வியாபாரி ரொட்டி மாவைக் பிசையும்போதும், அடுப்பில் வைக்கும்போதும் இடைவிடாது "அஸ்தஃபிருல்லாஹ்" (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருகிறேன்) என்று திக்ர் செய்துகொண்டே இருந்தார்.

நூல் (மணாகிப் அல்-இமாம் அஹ்மது - இப்னுல் ஜவ்ஸி):


இமாம் அவர்கள் கேட்டார்: "இவ்வளவு திக்ர் செய்கிறீர்களே, இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது?"


வியாபாரி பதிலளித்தார்: "இந்தத் திக்ரினால் நான் கேட்கும் எல்லா துஆக்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். 


ஒரே ஒரு துஆவைத் தவிர."

இமாம் கேட்டார்: "அது என்ன துஆ?"

வியாபாரி சொன்னார்: "இமாம் அஹ்மது இப்னு ஹன்பலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அது."

உடனே இமாம் அஹ்மது கண்கள் கலங்கக் கூறினார்: "உங்களது இந்தத் திக்ருக்காகத்தான் அல்லாஹ் என்னை உங்கள் இடத்திற்கே இழுத்து வந்திருக்கிறான்!”



ஜுனைத் அல்-பக்தாதி (ரஹ்) மற்றும் திக்ரின் வலிமை

இறைநேசர்களின் தலைவர் என்று அழைக்கப்படும் ஜுனைத் அல்-பக்தாதி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒருமுறை அவரது சீடர் ஒருவர், "நிம்மதி எங்கே இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்காமல், திக்ர் செய்யத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து அவர் சொன்னார்:

"உலகம் அதன் இன்பங்களால் உங்களை நெருக்கினாலும், 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற திக்ரில் உங்கள் இதயம் இணைந்துவிட்டால், நீங்கள் சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற அமைதியை உணர்வீர்கள்."

ஆதாரம் (ரிஸாலா அல்-குஷைரிய்யா):



ராபியா அல்-அதவிய்யா (ரஹ்) - அன்பின் திக்ர்

பெண் இறைநேசர்களில் ஒருவரான ராபியா அல்-அதவிய்யா, திக்ரை ஒரு கடமையாகப் பார்க்காமல், இறைவனின் மீதான காதலாகப் பார்த்தார்கள்.


அவர் ஒருமுறை நோய்வாய்ப்பட்டிருந்த போது, அறிஞர்கள் அவரைப் பார்க்க வந்தனர். அவர்கள் வலியில் துடிக்கவில்லை. மாறாக, இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.


"உங்களுக்கு வலி இல்லையா?" என்று கேட்டதற்கு, அவர் சொன்னார்கள்:

"இறைவனின் நினைவில் மூழ்கியிருக்கும்போது, அவன் தரும் வலியைக் கூட நான் உணர்வதில்லை. அவனது நினைவே எனக்கு மருந்தாக இருக்கிறது."

நூல்: (தத்கிரத்துல் அவ்லியா - ஃபரிதுதீன் அத்தார்):


இறைவனின் நினைவால் இதயங்கள் அமைதி அடையும் என்பதற்கு இவரது வாழ்க்கை ஒரு பெரும் சான்று.


சுப்யான் அஸ்-ஸவ்ரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் மன உறுதி


சுப்யான் அஸ்-ஸவ்ரி அவர்கள் தனது காலத்து ஆட்சியாளர்களின் அநியாயங்களை எதிர்த்த ஒரு பெரும் இறைநேசர்.


ஆட்சியாளர்கள் அவரைத் தேடியபோது, அவர் ஒரு பாலைவனப் பகுதியில் மறைந்திருந்தார். அப்போது அவர் இடைவிடாது "யா ஹய்யு யா கையூம்" (உயிருள்ளவனே, நிலையானவனே) என்ற திக்ரைச் செய்துகொண்டிருந்தார்.

ஆதாரம் (ஹில்யத்துல் அவ்லியா - அபூ நுஐம்):

அவர்கள் கூறுவார்கள்: "உலகமே எனக்கு எதிராகத் திரும்பினாலும், என் நாவு அல்லாஹ்வின் நினைவில் இருக்கும் வரை என் இதயத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை." 


அவர்களது திக்ர் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தைரியத்தைத் தந்தது என்றால், அவர் மன்னர்களுக்கு முன்னால் கூட உண்மையை அச்சமின்றிப் பேசினார்.


அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒரு நூல் (கயிறு) இருந்தது. 

அதில் 2,000 முடிச்சுகள் இருந்தன. அவர் உறங்குவதற்கு முன் அந்த நூலைப் பயன்படுத்தி 12,000 முறை தஸ்பீஹ் செய்யாமல் உறங்க மாட்டார்.

அவர் கூறிய காரணம்: "நான் எனது பாவமன்னிப்பிற்காக (இஸ்திஃபார்) எனது நிலைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையை வைத்துள்ளேன்" என்பார்.

ஆதாரம்: இமாம் அபூ நுஐம் அல்-அஸ்பஹானி எழுதிய 'ஹில்யத்துல் அவ்லியா’


அபூ இஷாக் இப்னு ஹானி - ஒரு லட்சம் தஸ்பீஹ்


இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களின் நெருங்கிய தோழரும் சிறந்த அறிஞருமான இப்னு ஹானி (ரஹ்) அவர்களின் வாழ்வு திக்ரால் நிறைந்திருந்தது.


அவர் ஒரு நாளில் 1,00,000 (ஒரு லட்சம்) முறை தஸ்பீஹ் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவரது நாவு ஒருபோதும் ஓய்ந்திருந்ததில்லை.


 அவர்கள் மரணமடையும் தருவாயில் நோன்பு நோற்றிருந்தார்கள். தண்ணீர் கொடுக்கப்பட்டபோது, "நான் நோன்பு திறக்க இன்னும் நேரம் இருக்கிறது" என்று கூறிவிட்டு, குர்ஆன் வசனத்தை ஓதியபடி உயிர் நீத்தார்கள்.

நூல்: இமாம் தஹபி எழுதிய 'தத்கிரத்துல் ஹுஃப்பாழ்' (Tadhkirat al-Huffaz).


எண்ணிக்கை என்பது ஒரு இலக்குதான். ஆனால், அந்த எண்ணிக்கைக்குப் பின்னால் இருந்த உறுதியான எண்ணம் (நிய்யத்) மற்றும் இறைவனின் மீதான காதல் தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியது. "உன் நாவு அல்லாஹ்வின் நினைவால் எப்போதும் நனைந்திருக்கட்டும்" என்ற நபிகளாரின் வாக்கிற்கு இவர்கள் இலக்கணமாக வாழ்ந்தனர்.


சொர்க்கத்தின் பொக்கிஷம்: 


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

"அபூ மூஸாவே! சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்றான ஒரு வார்த்தையை உமக்கு நான் சொல்லித் தரட்டுமா? அதுதான் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்'." (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

99 நோய்களுக்கு மருந்து: "யார் இந்தத் திக்ரை ஓதுகிறாரோ, அவருக்கு 99 நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதில் மிகக் குறைந்தது 'கவலை' நீங்குவதாகும்." (ஆதாரம்: தப்ரானி)

அர்ஷின் கீழ் உள்ள பொக்கிஷம்: இது அர்ஷுக்குக் கீழே உள்ள சொர்க்கத்தின் ஒரு பொக்கிஷத்திலிருந்து இறக்கப்பட்ட வார்த்தையாகும்.


அவ்ஃப் இப்னு மாலிக் அல்-அஷ்ஜஈ (ரலி) அவர்களின் மகன் விடுதலை


அவ்ஃப் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மகனை எதிரிகள் சிறைபிடித்துச் சென்று கயிற்றால் கட்டி வைத்தனர். கவலையடைந்த தந்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபிகளார் அவருக்கு, "பொறுமையாக இருங்கள், நீங்களும் உங்கள் மனைவியும் அதிகமாக 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' ஓதுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.


அவர்கள் இருவரும் இடைவிடாது இந்தத் திக்ரை ஓதிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு நாள் இரவு, அவர் மகனின் கைகள் மற்றும் கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் தானாகவே கழன்றன. அவர் அங்கிருந்து தப்பித்து வரும்போது, எதிரிகளின் 4,000 ஆடுகளையும் ஓட்டி வந்தார். இந்தத் திக்ரின் பலனாக அல்லாஹ் அவருக்குப் பாதுகாப்பையும், எதிர்பாராத வாழ்வாதாரத்தையும் வழங்கினான்.

நூல்: (தப்சீர் இப்னு கஸீர் - ஸூரா அத்தலாக் 2-3 வசனங்களின் விளக்கம்).


இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

"யார் ஒருவருக்குச் சுமைகள் அதிகமாகிவிட்டதோ, கவலைகள் சூழ்ந்து கொண்டதோ அவர் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்பதை அதிகம் ஓதட்டும். ஏனெனில் இது கடினமான காரியங்களை எளிதாக்கும் ஆற்றல் கொண்டது.”



திக்ரு இதயத்தின் நிம்மதி: "நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன" (அல்குர்ஆன் 13:28).


உயிருள்ளவர் vs இறந்தவர்: திக்ரு செய்பவர் உயிருள்ளவருக்கும், திக்ரு செய்யாதவர் இறந்தவருக்கும் சமமானவர் 


 திக்ரு செய்வதற்கு ஒளுவோ, குறிப்பிட்ட இடமோ தேவையில்லை; எந்த நிலையிலும் இறைவனை நினைக்கலாம்.


அன்பிற்குரியவர்களே! நம்முடைய நாவுகள் எப்போதும் அல்லாஹ்வின் நினைவால் நனைந்து கொண்டே இருக்கட்டும். உலகக் கவலைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும் போது, 'சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்' போன்ற எளிய திக்ருகள் நமக்குப் பாதுகாப்பாக அமையும். நாம் அல்லாஹ்வை நினைத்தால், அவன் நம்மை நினைப்பான். எனவே, மரணம் நம்மைத் தழுவும் முன், நம்முடைய ஒவ்வொரு மூச்சும் இறைவனைத் துதிப்பதாக அமைய நாம் உறுதி பேணுவோம்.”



வெறும் நாவால் மட்டும் திக்ரு செய்யாமல், நம் உள்ளத்தாலும் உணர்ந்து இறைவனைத் துதிப்போம். எந்நேரமும் இறைநினைவோடு வாழும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! நம்முடைய பாவங்களை மன்னித்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தில் நுழைய நம் அனைவருக்கும் திக்ரு ஒரு சாட்சியாக அமையட்டும்.



"யா அல்லாஹ்! எங்களை எப்போதும் உன்னை நினைவு கூருபவர்களாகவும் (தாகிரீன்), உனக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் (ஷாகிரீன்) ஆக்கி அருள் புரிவாயாக.

யா அல்லாஹ்! எங்கள் நாவுகளில் உனது திக்ரு எப்போதும் ஈரமாக இருக்க அருள் செய். எங்கள் உள்ளங்களில் உனது அச்சத்தையும் அன்பையும் நிறைப்பாயாக. மறதி எனும் நோயிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக.

யா அல்லாஹ்! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. இந்த சபையில் நாங்கள் கேட்ட நல்ல விஷயங்களை எங்கள் வாழ்வில் கடைபிடிக்க தௌபீக் செய்வாயாக. எங்களின் கடைசி மூச்சு 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற திருக்கலிமாவுடன் பிரிய அருள் செய்வாயாக. ஆமீன்!"


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026



1 கருத்து: