வியாழன், 9 ஜூலை, 2026

அல்ஹம்துலில்லாஹ்

 


“அல்ஹம்துலில்லாஹ்.” 


اَلْحَمْدُ للهِ، اَلْحَمْدُ للهِ الَّذِي جَعَلَ الْحَمْدَ مِفْتَاحًا لِذِكْرِهِ، وَسَبَبًا لِمَزِيدِ فَضْلِهِ، وَشِعَارًا لِأَوْلِيَائِهِ وَأَصْفِيَائِهِ.

نَحْمَدُهُ سُبْحَانَهُ وَتَعَالَى عَلَى نِعَمِهِ الْغَزِيرَةِ، وَنَشْكُرُهُ عَلَى آلَائِهِ الْكَبِيرَةِ، الشَّاكِرُ لِقَلِيلِ الطَّاعَةِ، الْمُجْزِلُ لِعَظِيمِ الشُّكْرِ، الْقَائِلُ فِي كِتَابِهِ الْكَرِيمِ: "لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ".

وَنَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْحَمْدُ فِي الْأُولٰى وَالْآخِرَةِ، وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ.

وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَام الشَّاكِرِينَ، وَقُدْوَةُ الْحَامِدِينَ، صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا دَائِمًا إِلَى يَوْمِ الدِّينِ.

أَمَّا بَعْدُ... فَيَا عِبَادَ اللهِ، أُوصِيكُمْ وَإِيَّايَ بِتَقْوَى اللهِ الْعَظِيمِ وَطَاعَتِهِ، وَكَثْرَةِ حَمْدِهِ وَشُكْرِهِ فِي كُلِّ حَالٍ فَأَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ


"பிரார்த்தனைகளில் மிகச் சிறந்தது 'அல்ஹம்துலில்லாஹ்' ஆகும்."


நாம் இறைவனிடம் எதையாவது கேட்பதற்கு முன்பாக, அவனுக்கு நன்றி செலுத்துவதே மிகச்சிறந்த வழிபாடாக அமைகிறது.


மறுமை நாளில் மனிதர்களின் நன்மைகள் எடைபோடப்படும் போது, இந்த ஒரு வார்த்தை தராசின் தட்டை நிரப்பிவிடும் அளவுக்குப் பாரமானது.


ஒரு அடியான் தனக்குக் கிடைக்கும் சிறிய உணவிற்கும், தண்ணீருக்கும் கூட நன்றி செலுத்துவதை இறைவன் பெரிதும் விரும்புகிறான்.


ஒரு உணவை உண்டுவிட்டு அல்லது ஒரு பானத்தைக் குடித்துவிட்டு "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறும் அடியான் மீது அல்லாஹ் திருப்தி கொள்கிறான்.


நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்தும்போது, இறைவன் நமக்கு இன்னும் அதிகமாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளான்.


அல்லாஹ் தன் இறுதிவேதமான திருக்குர்ஆனை இந்த முபாரக்கான வார்த்தையைக் கொண்டே ஆரம்பிக்கிறான். குர்ஆனின் முதல் அத்தியாயமான 'சூரத்துல் ஃபாத்திஹா'வின் முதல் வசனமே "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்றுதான் தொடங்குகிறது. இதுவே இவ்வார்த்தையின் தனிச்சிறப்பிற்குப் சான்றாகும்.


சொர்க்கவாதிகள் சொர்க்கத்தில் நுழைந்த பிறகும், அங்கிருக்கும் போதும் இறைவனைப் போற்றித் துதிக்கும் இறுதி வார்த்தையாக இதுவே இருக்கும் என குர்ஆன் கூறுகிறது.


"எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்" (அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்) என்று பொறுமையுடன் கூற வேண்டும்.


தும்மிய பிறகு 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறுவது சுன்னத்தாகும் (அதைக் கேட்பவர் 'யர்ஹமுகல்லாஹ்' என்று கூற வேண்டும்).


கடமையான தொழுகை முடிந்த பிறகு 33 முறை 'அல்ஹம்துலில்லாஹ்' ஓதுவது மிகுந்த நன்மையைத் தரும்.

 

'அல்ஹம்துலில்லாஹ்' என்பது வெறும் வார்த்தையல்ல; அது ஓர் அடியானின் உள்ளத்தில் இருக்கும் நன்றியுணர்வையும், இறைநம்பிக்கையையும் பறைசாற்றும் உன்னதமான திக்ர் ஆகும்.


மார்க்க அறிஞர்கள் 'புகழ்' என்பதை நான்கு வகையாகப் பிரிப்பார்கள்:


படைத்த அல்லாஹ் அவனையே புகழ்ந்து கொள்வது.

அல்லாஹ் மனிதர்களைப் புகழ்வது.

மனிதன் அல்லாஹ்வைப் புகழ்வது.

மனிதன் சக மனிதனைப் புகழ்வது.


இந்த நான்கு வகையான புகழ்களுக்கும் சொந்தக்காரன் மற்றும் தகுதியானவன் அல்லாஹ்தான். 


நாம் பொதுவாகவே ஒரு மனிதனைப் புகழ்ந்தாலும் கூட, அந்தப் புகழும் உண்மையில் அல்லாஹ்வுக்குத்தான் போய் சேரும். ஏனெனில், நாம் ஏன் ஒரு மனிதனைப் புகழ்கிறோம்? அவன் சிறந்த நல்ல பண்பாளனாக, கெட்டிக்காரனாக, அறிவு மிகுந்தவனாக, அழகு மிக்கவனாக, செல்வம் அல்லது அதிகாரம் படைத்தவனாக இருக்கிறான்; அதைக் கொண்டு சமூகத்திற்கு நல்ல அறவழிகளில் பணி செய்கிறான் என்பதற்காகப் புகழ்கிறோம். ஆனால், அவனுக்கு அந்தச் செல்வத்தை, அறிவை, ஆற்றலை, பதவியை, அழகைக் கொடுத்தது அவன்தானே (அல்லாஹ்)! எனவே, எல்லா நிலைகளிலும் மனிதன் அல்லாஹ்வையே புகழ வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. எந்த ஒரு சூழலிலும் இறைப் புகழிலிருந்து நாம் விடுபட்டுவிடக் கூடாது.


நூஹ் (அலை) அவர்களின் நன்றியுணர்வு


நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குர்ஆனில் அல்லாஹ்

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا

நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிப் பாதுகாத்தோமே அவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் மிகவும் நன்றியுள்ள அடியாராக (அப்தன் ஷகூரா - عَبْدًا شَكُورًا) இருந்தார்." (திருக்குர்ஆன் 17:3)

"அப்தன் ஷகூரா" (மிகவும் நன்றியுள்ள அடியார்) என்று குறிப்பிடுகிறான். அவர்கள் ஏன் அப்படி அழைக்கப்பட்டார்கள் என்பதற்கு அறிஞர்கள் எழுதுகிறார்கள்: நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்த ஒரு உணவைச் சாப்பிட்டாலும் உடனே,

الحمد لله الذي أطعمني وسقاني، ولو شاء لجعلني جائعاً

 "இந்த உணவைத் தந்து என்னுடைய பசியைப் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அவன் நாடியிருந்தால் என்னை பசியிலேயே போட்டிருக்கலாம்" என்று ஓதுவார்கள்.

الحمد لله الذي كساني، ولو شاء لجعلني عرياناً

ஒரு ஆடையை அணிந்தால், "இந்த ஆடையை எனக்கு அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்; அவன் நாடியிருந்தால் என்னை ஆடை இல்லாமல் ஆக்கியிருக்கலாம்" என்பார்கள். 

الحمد لله الذي حذاني، ولو شاء لجعلني حافياً

தண்ணீர் குடித்தால் தாகத்தைத் தீர்த்ததற்கும், செருப்பு அணியும் போது வெயிலிலும் சகதியிலும் வெறும் காலோடு நடக்கவிடாமல் செருப்புத் தந்ததற்கும் அல்லாஹ்வைப் புகழ்வார்கள். 

இயற்கை உபாதைகளைக் கழித்த பின்:

الحمد لله الذي أخرج عني أذاه وأبقى فيّ نفعها

இதிலுள்ள தீங்குகளை (கழிவுகளை) என்னிலிருந்து வெளியேற்றி, இதன் சத்துக்களை என்னில் நிலைபெறச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஒரு சின்னத் தேவை நிறைவேறினாலும், "அல்லாஹ் நாடியிருந்தால் இதை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம், அவன் தந்துவிட்டான், அல்ஹம்துலில்லாஹ்" என்று ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டே இருப்பார்கள்.


நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 950 ஆண்டுகள் தன் சமூக மக்களால் பலவாறு துன்புறுத்தப்பட்டார்கள். அத்தனை சோதனையான காலகட்டத்திலும், அவர்கள் இறைவனைப் பழிப்புக் கூறாமல், ஒவ்வொரு நொடியும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று துதித்துக் கொண்டே இருந்தார்கள்.

அதனால்தான், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்றியுணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர்களை, அல்லாஹ் குர்ஆனில் அழியாப் புகழோடு "அப்தன் ஷகூரா" என்று பாராட்டி கௌரவித்துள்ளான். 


இன்றைய மனிதர்களின் நிலையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய கணக்கும்

இப்போது இந்த நிகழ்வுகளை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் "வியாபாரம் எப்படி இருக்கு?" என்று கேட்டால், சிலர் "அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கு" என்பார்கள். சிலர் "என்னத்த வியாபாரம்..." என்று சலித்துக் கொள்வார்கள். "எப்படி இருக்கீங்க?" என்று கேட்டால், "மாத்திரையில்தான் வாழ்க்கை ஓடுது" என்பார்கள். இந்த மாதிரி சலிப்பான வார்த்தைகள் அல்ஹம்துலில்லாஹ் என்ற நன்றியுணர்விற்கு மாற்றமானது; அல்லாஹ்வுக்கு இதில் விருப்பமில்லை. இப்படிப் பேசுவதால் ஆரோக்கியம் கூடிவிடாது, மாறாகக் குறையும்.


வழமையாக ஒரு பள்ளிவாசலுக்கோ, மதரஸாவுக்கோ அல்லது அனாதை இல்லத்திற்கோ ஒரு செல்வந்தர் ஆண்டுதோறும் 50,000 ரூபாய் நன்கொடை கொடுத்து வருகிறார் என்று வைப்போம். ஒரு வருடம் அவர் 25,000 ஆகக் குறைத்துக் கொடுக்கிறார். நிர்வாகி கேட்கும் போது, "வியாபாரம் இந்த வருஷம் சரியில்லை ஹாஜியார்" என்கிறார். ஆனால் கணக்குப் பார்த்தால், கடந்த ஆண்டு அவருக்கு 2 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கும் போது 50,000 கொடுத்தார், இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருப்பதால் 25,000 கொடுக்கிறார். நம்முடைய மனித கணக்குப்படி இது சரியாகத் தோன்றலாம், ஆனால் மார்க்கக் கணக்குப்படி இது பிழை!


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வித்தியாசமான ஆன்மீகக் கணக்கைக் கற்றுத் தருகிறார்கள், அதை நம் நப்ஸ் (மனம்) எளிதில் ஏற்காது. லாபம் குறையும் போது தர்மத்தைக் குறைக்கக் கூடாது; மாறாக 50-ஐ 60 ஆக உயர்த்த வேண்டும் என்கிறார்கள். சங்கடமான, கஷ்டமான நேரத்தில் சதக்காவை (தர்மத்தை) அதிகப்படுத்துங்கள்.


ஏனெனில், அள்ளிக் கொடுப்பவன் அல்லாஹ். அவன் பார்க்கிறான்: "இவனுக்கு நாம் லாபத்தைக் குறைத்த போதும், அவன் தர்மத்தை கூட்டுகிறானே!" என்று வியந்து, அடுத்த ஆண்டு அவனது 2 கோடியை 5 கோடியாக அல்லாஹ் மாற்றுவான். இதுதான் உன்னுடைய லாபத்தை முடக்கி வைத்திருக்கும் பூட்டை உடைக்கும் வழி என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனவே, குறையும் போதும் "அல்ஹம்துலில்லாஹ், அடுத்த முறை அல்லாஹ் கூட்டித் தருவான்" என்ற நம்பிக்கையோடு ஷுக்கூர் செய்ய வேண்டும்.


 தாவூத் (அலை) அவர்களின் கேள்வி


நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களது மகன் நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் உலகிலேயே மிக அதிகமான அருட்கொடைகளையும், பேரரசையும், தனித்துவமிக்க அற்புதங்களையும் (முஃஜிஸாத்) அல்லாஹ்விடமிருந்து பெற்றவர்கள்.


அல்லாஹ் தன் திருக்குர்ஆனில், "தாவூதின் குடும்பத்தினரே! நன்றியறிதலுடன் (நற்செயல்களைச்) செய்யுங்கள்; என் அடியார்களில் நன்றியுடையோர் மிகச் சிலரே!" (ஸூரா ஸபா: 13) என்று கட்டளையிட்டான்.


இவ்வசனம் அருளப்பட்ட போது, நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி இந்த நெஞ்சை உருக்கும் கேள்வியைக் கேட்டார்கள்.


"என் இறைவனே! நான் உனக்கு எவ்வாறு தகுந்த முறையில் நன்றி (ஷுக்ர்) செலுத்த முடியும்? ஏனெனில், நான் உனக்கு நன்றி செலுத்துவதே (அதற்கான உடலமைப்பையும், மனப்பக்குவத்தையும் நீ எனக்குத் தந்தது) நீ எனக்குச் செய்த மற்றொரு பெரும் அருட்கொடை அல்லவா! அதற்கு நான் தனியாக நன்றி செலுத்த வேண்டுமே!"


அப்போது அல்லாஹ் அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) மூலம் இவ்வாறு பதிலளித்தான்: "தாவூதே! இப்போதுதான் நீ எனக்கு உண்மையான நன்றியைச் செலுத்திவிட்டாய். காரணம், உன்னால் முழுமையாக நன்றி செலுத்திவிட முடியாது என்பதையும், உனக்குக் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் என்னிடமிருந்தே வருகின்றன என்பதையும் நீ எப்போது விளங்கி ஒப்புக்கொண்டாயோ, அதுவே நீ எனக்குச் செய்யும் மிகச்சிறந்த நன்றியாகும்!"


நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடர்ந்து இறைவனின் அளப்பரிய அருட்கொடைகளை எண்ணி வியந்து "இறைவனே! என் உடலில் உள்ள ஒவ்வொரு தலைமுடிக்கும், உடலில் உள்ள ஒவ்வொரு உரோமத்திற்கும் தலா இரண்டு நாக்குகள் கொடுக்கப்பட்டு, அந்த நாக்குகள் அனைத்தும் இரவும் பகலும் விநாடி கூட ஓய்வில்லாமல் உன்னைப் புகழ்ந்து துதித்துக் கொண்டே (திக்ர் செய்து கொண்டே) இருந்தாலும்... நீ எனக்குச் செய்த அருட்கொடைகளில் ஒரே ஒரு சிறிய அருளுக்குக் கூட (உதாரணமாக: கண் பார்வை அல்லது ஒரு மூச்சுக்காற்று) அது ஈடாகாது!"


மனிதன் எவ்வளவு பெரிய இபாதத் (வணக்கம்) செய்தாலும், அல்லாஹ்வின் அருளுக்குப் பகரமாக அது மாற முடியாது. நாம் செய்யும் நன்றியே அல்லாஹ்வின் கிருபையால் தான் சாத்தியமாகிறது.


இறைவனிடம் "எப்படியெல்லாம் வார்த்தை தேடியும் உனக்கு நன்றி சொல்ல என் தகுதி பத்தவில்லையே அல்லாஹ்" என்று அடியான் தன் பலவீனத்தை ஒப்புக்கொள்வதையே அல்லாஹ் பெருமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறான்.


சோதிக்கப்பட்ட மனிதரின் 'லிஸானன் தாகிரா' (துதிக்கும் நாவு)


தாபியீன்களில் சிறந்த அறிஞரான அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை எகிப்து நாட்டின் கடற்கரையோரப் பகுதியிலிருந்த இராணுவ முகாம் ஒன்றிற்குச் சென்றிருந்தார்கள். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வழியில் ஒரு பழைய கிழிந்த கூடாரத்தைக் கண்டார்கள்.

அந்தக் கூடாரத்திற்குள் இருந்து ஒரு மெல்லிய குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆர்வத்துடன் நெருங்கிச் செவிமடுத்தபோது, அங்கிருந்த ஒருவர் பின்வருமாறு துஆச் செய்துகொண்டிருந்தார்:


"என் இறைவனே! நீ உன்னுடைய படைப்புகளில் பலரை விட என்னை எவ்வளவோ மேன்மைப்படுத்தி, என் மீது எண்ணற்ற அருட்கொடைகளைச் சொரிந்துள்ளாய். அதற்காக உனக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ்)!"


அந்தக் குரலைக் கேட்டு அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூடாரத்திற்குள் எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த மனிதரின் நிலை வர்ணிக்க முடியாத அளவுக்குக் கொடூரமாக இருந்தது:

அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வையில்லை . அவரது இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.அவரது இரண்டு கால்களும் செயலிழந்து இருந்தன. அவர் படுத்திருந்த படுக்கையும் கிழிந்து, உடல் நலிவுற்று ஒரு மாபெரும் சோதனைக் களமாகக் காட்சியளித்தார்.


இவ்வளவு பெரிய உடல் உபாதைகளுடனும், வறுமையிலும் வாடும் ஒரு மனிதர், "அல்லாஹ் என்னை எவ்வளவோ மேன்மைப்படுத்தியிருக்கிறான்" என்று உருகி உருகி நன்றி செலுத்துவதைக் கண்டு அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் வியப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அவரிடம் நெருங்கி ஸலாம் கூறிவிட்டு, ஆச்சரியத்துடன் இப்படிக் கேட்டார்கள்:

உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களைப் பார்க்கும்போது கண் பார்வை இல்லை, கை-கால்கள் இல்லை, உடலில் எந்த ஆரோக்கியமும் இல்லை. இந்த நிலையிலும், 'அல்லாஹ் என்னை பலரை விட மேன்மைப்படுத்தி, பெரும் அருட்கொடைகளைத் தந்துள்ளான்' என்று நீங்கள் எதை வைத்துச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு அவன் செய்த அப்படிப்பட்ட மாபெரும் கொடைதான் என்ன?"

அதற்கு அந்தப் பெரியவர் புன்னகைத்துவிட்டு, "அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்கட்டும்! நீர் பார்ப்பது உண்மைதான். ஆனால், சற்று சிந்தித்துப் பாரும். அல்லாஹ் தன் படைப்புகளில் எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருக்கிறான். அவர்களில் பலருடைய உள்ளங்கள் இறைவனை மறுக்கின்றன, நாவுகள் இறைவனைத் திட்டுகின்றன.


"أَلَمْ تَرَ مَا صَنَعَ بِي رَبِّي؟ وَاللَّهِ لَوْ أَرْسَلَ السَّمَاءَ عَلَيَّ نَارًا فَأَحْرَقَتْنِي... مَا زِدْتُهُ إِلَّا شُكْرًا، لَقَدْ أَبْقَى لِي لِسَانًا ذَاكِرًا وَقَلْبًا شَاكِرًا”

ஆனால் அல்லாஹ் எனக்கு இந்த நிலையிலும், அவனை எப்போதும் துதித்துக் கொண்டிருக்கும் ஒரு நாவையும் (லிஸானன் தாகிரா), அவனுக்கு நன்றியோடு இருக்கும் ஓர் இதயத்தையும் (கல்பன் ஷாகிரா), சோதனைகளைப் பொறுத்துக் கொள்ளும் ஓர் உடலையும் மிச்சம் வைத்துள்ளானே! இதைவிட ஒரு மனிதனுக்குப் பெரிய அருட்கொடை என்ன வேண்டும்?


அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் வானத்திலிருந்து என் மீது நெருப்பை இறக்கி என்னை முழுமையாகக் கரிக்கினாலும்... எனக்கு இந்த நாவைத் தந்ததற்காக நான் அவனுக்கு நன்றி செலுத்துவதைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்த மாட்டேன்!"


அவர்களின் ஈமானியப் பேச்சைக் கேட்டு அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். அப்போது அந்தப் பெரியவர், "அப்படியே எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார்கள்.


"எனக்கு இந்த உலகத்தில் பணிவிடை செய்ய என் மகன் ஒருவன் மட்டுமே இருக்கிறான். நான் உண்ணும் போது உணவூட்டுவான், தாகத்தின் போது தண்ணீரூட்டுவான், இயற்கை உபாதைகளைக் கழிக்க உதவுவான். ஆனால், நேற்று காலை வெளியே சென்ற அவன், இதுவரை வீடு திரும்பவில்லை. அவனைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தேடிப் பார்த்துச் சொல்ல முடியுமா?" எனக் கேட்டார்கள்.

அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், "நிச்சயமாக, ஒரு நல்ல அடியானுக்குச் செய்யும் உதவியாக இதை நான் ஏற்கிறேன்" என்று கூறிவிட்டு அந்த மகனைத் தேடிப் புறப்பட்டார்கள்.


அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்தப் பாலைவனப் பகுதியில் தேடி அலைந்தபோது, தூரத்தில் சில எலும்புகளும், ஆடுகளின் கூட்டமும் சிதறிக் கிடப்பதைக் கண்டார்கள். அருகில் சென்று பார்த்தபோதுதான் அந்தப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த முதியவரின் ஒரே மகனைப் பாலைவனச் சிங்கம் ஒன்று அடித்துக் கொன்று, அவரது உடலைத் தின்று தீர்த்திருந்தது.


அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். "கை, கால், கண் இழந்த அந்த முதியவருக்கு இருந்த ஒரே ஒரு உலகத் துணையும் போய்விட்டதே! இந்தச் செய்தியை அவரிடம் எப்படிச் சொல்வது? இதைக் கேட்டால் அவரது இதயம் தாங்குமா?" என்று தவித்தபடியே கூடாரத்திற்குத் திரும்பினார்கள்.


கூடாரத்திற்குள் நுழைந்த அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அந்தப் பெரியவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று யோசித்து, அவரிடம் ஒரு தத்துவக் கேள்வியைக் கேட்டார்கள்:

"பெரியவரே! அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான, பெரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

முதியவர், "ஆம், நன்றாகத் தெரியுமே!" என்றார்.

"அவர்களது சொத்துக்கள், பிள்ளைகள் யாவும் அழிக்கப்பட்டு, உடல் முழுக்க நோய் பரவி, கடுமையான சோதனைகளைச் சந்தித்த போது அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கேட்டார்கள். முதியவர் உடனே, "அவர்கள் மாபெரும் பொறுமையைக் கையாண்டார்கள்; இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்" என்றார்கள்.


அப்போது அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி மெதுவாக விஷயத்திற்கு வந்தார்கள்"அப்படியென்றால், அந்த நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுமையைப் போலவே நீங்களும் இப்போது பொறுமையாக இருங்கள். உங்களது ஒரே மகன் ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில், சிங்கம் கடித்து இறந்துவிட்டான். அவனது எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன!"


இந்தக் கடுமையான பேரிடிச் செய்தியைக் கேட்ட அந்த முதியவர், கதறி அழவில்லை; இறைவனை சபித்து கூச்சலிடவில்லை. மாறாக, அவரது நாவிலிருந்து இந்த வார்த்தைகள் தான் வந்தன:

"அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என் சந்ததியில் எனக்கு முன்பாக நரக நெருப்பிற்குச் செல்லும் எவரையும் அவன் உருவாக்கவில்லை; என் மகனைப் பாவமில்லாத தூய்மையான நிலையில் தன் பக்கம் எடுத்துக் கொண்டானே, அவனுக்கே புகழ் அனைத்தும்!"


என்று கூறிவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார். அந்த இடத்திலேயே, இறைவனைத் துதித்துக் கொண்டிருந்த அந்த உன்னத ஆன்மா, அவனது உடலை விட்டுப் பிரிந்தது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). 


அபூ கிலாபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனியாக அந்த உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தபோது, அந்த வழியே வந்த சில பயணிகள் இவர்களுக்கு உதவினார்கள். அந்த உடலைக் கழுவி, கஃபன் துணி அணிவித்து அடக்கம் செய்தார்கள்.


அப்போது வந்தவர்களில் ஒருவர் அந்த முதியவரின் முகத்தைப் பார்த்துவிட்டு, "சுப்ஹானல்லாஹ்! இவர் யார் தெரியுமா? இவர் புகழ்பெற்ற ஸஹாபி அபுத் தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நெருங்கிய தோழரான பலாஹ் பின் யஸீத் ஆவார்!" என்று அடையாளம் காட்டினார்.

நூல்:அத்தர்கீப் வத்தர்ஹீப் (الترغيب والترهيب):


நம்முடைய நாவு அல்லாஹ்வைத் துதிக்கும் நாவாக இருக்க வேண்டும். அதிலிருந்து அடுத்தவர்களின் குறைகளைப் பேசுவதோ, குற்றங்களை ஆராய்வதோ, புறம் பேசுவதோ, சபிப்பதோ வரக்கூடாது. அதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அல்லாஹ்விடம் திக்ர் செய்யக்கூடிய நாவைத் தருமாறு கேட்டுள்ளார்கள்.


கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ

திக்ருகளிலேயே மிகச் சிறந்தது (அஃப்தலுத் திக்ர்): 'லா இலாஹ இல்லல்லாஹ்'.

துஆக்களிலேயே மிகச் சிறந்தது (அஃப்தலுத் துஆ): 'அல்ஹம்துலில்லாஹ்'.

நாம் துஆவை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் (அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று) அல்லாஹ்வைப் புகழ்ந்துதான் முடிக்கிறோம். சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு அங்கே தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற எந்த இபாதத்துகளும் (வணக்கங்களும்) கிடையாது. ஆனால், சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்பு எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கும் ஒரே வார்த்தை 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்பதாகும். அது சொர்க்கலோகத்தின் வார்த்தை.


கொஞ்சமான அடியார்களில் ஒருவனாக ஆக்கி வைப்பாயாக!


அமீருல் மூமினீன் உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை புனித கஃபாவை தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு மனிதர் கஃபாவின் திரையைப் பிடித்துக் கொண்டு மிக உருக்கமாக ஒரு துஆவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் கேட்ட துஆ வழக்கமாக மனிதர்கள் கேட்கும் துஆக்களைப் போலன்றி மிக வித்தியாசமாக இருந்தது. அவர், "அல்லாஹ்ஹும்மஜ்அல்னீ மினல் கலீல்" (யா அல்லாஹ்! என்னை உன்னுடைய கொஞ்சமான அடியார்களில் ஒருவனாக ஆக்கி வைப்பாயாக!) என்று மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டு அழுது கொண்டிருந்தார்கள்.



இதைக் கேட்டுக்கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் தவாஃப் முடிந்து அந்த மனிதரை நெருங்கி, "சகோதரரே! நீர் என்ன இப்படி ஒரு வித்தியாசமான துஆவைக் கேட்கிறாய்? மனிதர்கள் எப்போதுமே இறைவனின் அருளும், அவனது கூட்டமும் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்றுதானே கேட்பார்கள்? நீர் ஏன் உன்னைக் 'கொஞ்சமானவர்களில்' சேர்க்கச் சொல்லி இறைவனிடம் வேண்டுகிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.


அதற்கு அந்த மனிதர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, "அமீருல் மூமினீன் அவர்களே! நான் ஏன் இப்படிக் கேட்கிறேன் என்று அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் சொல்லும் சில வசனங்களை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கூறிவிட்டு பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்:

ஸூரா ஸபா (34:13) வசனம்:

وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ

"மேலும், என் அடியார்களில் நன்றியுடையோர் மிகச் சிலரே (கொஞ்சப் பேரே) ஆவர்."ஸூரா அல்-அஃராஃப் (7:10) வசனம்:

قَلِيلًا مَّا تَشْكُرُونَ

"நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்."

ஸூரா அல்-முஃமினூன் (23:78) வசனம்:

قَلِيلًا مَّا تَشْكُرُونَ

"எனினும், நீங்கள் நன்றி செலுத்துவது மிகக் சொற்பமே!"

அந்த மனிதர் தொடர்ந்து கூறினார்: "அமீருல் மூமினீன் அவர்களே! மனிதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. எனவே, நான் அந்தப் பெரும்பான்மையான கூட்டத்தில் இருந்து நரகிற்குச் செல்வதை விட, அல்லாஹ் பாராட்டும் அந்த 'நன்றி செலுத்தும் கொஞ்சப் பேர்கள் கொண்ட (கலீல்)' கூட்டத்தில் என்னைச் சேர்க்குமாறு அவனிடம் கெஞ்சுகிறேன்!" என்றார்.


அந்த மனிதரின் ஆழமான குர்ஆன் அறிவையும், ஈமானியச் சிந்தனையையும் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். தன் தலையில் கை வைத்துக் கொண்டு, அழுது கொண்டே பின்வருமாறு கூறினார்கள்:

"كل الناس أفقه من عمر! يا عمر، كل الناس أعلم منك"

"உமரை விட உலக மக்கள் அனைவரும் மார்க்கத்தை ஆழமாக விளங்கியவர்களாக இருக்கிறார்களே! உமரே! உன்னை விட மற்ற மனிதர்கள் அனைவரும் அதிகம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள்!”


பனூ இஸ்ரவேலர்களின் மூன்று மனிதர்கள்


பனூ இஸ்ரவேல் காலத்தில் மூன்று மனிதர்கள் இருந்தனர். ஒருவர் குஷ்டரோகி (அபரஸ்), இன்னொருவர் வழுக்கைத் தலையுடையவர் (அக்ரா), மூன்றாமவர் பார்வையற்றவர் (ஆமா). அல்லாஹ் அவர்களைச் சோதிக்க நாடி ஒரு மலக்கை (வானவரை) மனித உருவில் அனுப்பினான்.


முதலில் குஷ்டரோகி இடம் மலக்கு வந்து "உனக்கு என்ன விருப்பம்?" எனக் கேட்டார். அவர், "எனக்கு நல்ல தோலும், அழகான நிறமும் வேண்டும்" என்றார். மலக்கு துஆ செய்ய, அவர் குணமடைந்து அழகாக மாறினார். அடுத்து அவரிடம் சொத்துக்கள் குறித்துக் கேட்ட போது "ஒட்டகம் வேண்டும்" என்றார். சினையுள்ள (குட்டி போடவிருக்கும்) ஒட்டகம் ஒன்று வழங்கப்பட்டது.


அடுத்து வழுக்கைத் தலையுடையவரிடம் மலக்கு வந்து உனக்கு என்ன வேண்டும்?: எல்லாரும் இவரைக் கேலி செய்து வந்ததால், மலக்கிடம் "எனக்கு நல்ல அழகான முடி வேண்டும்" என்றார். மலக்கு துஆ செய்ய, அழகிய முடி முளைத்தது. சொத்தாக "மாடு வேண்டும்" எனக் கேட்க, சினையுள்ள மாடு வழங்கப்பட்டது.


அடுத்து பார்வையற்றவரிடம் மலக்கு வந்து உனக்கு என்ன வேண்டும்? மலக்கிடம் அவர், "எனக்கு பார்வை வேண்டும்" என்றார். மலக்கு துஆ செய்ய, பார்வை கிடைத்தது. சொத்தாக "ஆடு வேண்டும்" எனக் கேட்க, சினையுள்ள ஆடு வழங்கப்பட்டது.


காலப்போக்கில் அல்லாஹ் அருளிய பரக்கத்தினால் இவர்களது ஆடு, மாடு, ஒட்டகங்கள் பெருகி, மூன்று பேருமே மாபெரும் பண்ணையாளர்களாக, கோடீஸ்வரர்களாக மாறினார்கள்.

மீண்டும் அல்லாஹ் அந்த மலக்கை ஏழைப் பிரயாணி வடிவில் அவர்களிடம் அனுப்பி சோதித்தான்:

மலக்கு முதலில் குஷ்டரோகியாக இருந்த செல்வந்தரிடம் சென்று, "நீ ஒரு காலத்தில் குஷ்டரோகியாக ஏழையாக இருந்தாய், அல்லாஹ் உனக்கு அழகையும் செல்வத்தையும் தந்துள்ளான்; அந்த அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன், எனக்கு ஒரு ஒட்டகம் தா" என்றார். ஆனால் அவரோ, "நான் பிறப்பிலிருந்தே பரம்பரைச் செல்வந்தன், எனக்கு குஷ்டமெல்லாம் இல்லை" என்று மறுத்துப் பொய் கூறினார். மலக்கு, "நீ பொய் சொல்வதாயின் பழைய நிலைக்கு மாறுவாய்" எனக் கூற, அவரது சொத்துக்கள் அழிந்து மீண்டும் பழையபடி குஷ்டரோகியாக மாறினார்.


அடுத்து வழுக்கைத் தலையராக இருந்த செல்வந்தரிடம் சென்று அதே போல் கேட்க, அவரும் "என் குடும்பமே நல்ல முடியுடைய பரம்பரை வசதி படைத்தவர்கள்" என மறுத்தார். மலக்கு துஆ செய்ய, அவரும் சொத்துக்களை இழந்து பழையபடி வழுக்கைத் தலையராக மாறினார்.


இறுதியாக பார்வையற்றவராக இருந்த செல்வந்தரிடம் சென்று மலக்கு கேட்கும் போது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டு, "நீர் சொல்வது உண்மைதான். நான் பார்வையற்றவனாக, ஏழையாக இருந்தேன்; என் ரப்புதான் எனக்குப் பார்வையும் இந்தச் செல்வத்தையும் தந்தான். என் நேசனான அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி கேட்டுவிட்டீர்; உமக்கு என்ன வேண்டுமோ, இந்தச் சொத்தில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும், அனைத்தையும் எடுத்தாலும் எனக்குச் சந்தோஷமே" என்றார்.


மலக்கு அவரிடம், "எனக்கு எதுவும் தேவையில்லை. உங்களைச் சோதிக்கவே அல்லாஹ் அனுப்பினான்; மற்ற இருவர் தோல்வியுற்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள், நீர் வெற்றி பெற்று அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுவிட்டீர்" என்று கூறிச் சென்றார். நூல் : புகாரி


“அல்ஹம்துலில்லாஹ்" என்ற வார்த்தை”


பத்ருப் போர் முடிந்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றிருந்த காலகட்டம் அது. குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரான உமைர் பின் வஹ்ப் என்பவர் இஸ்லாத்தின் மீதும் நபிகளாரின் மீதும் கடுமையான கோபத்தில் இருந்தார். அவரது மகன் பத்ருப் போரில் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.


ஒருநாள், உமைர் பின் வஹ்ப் மற்றும் ஸஃப்வான் பின் உமையா ஆகிய இருவரும் கஃபாவின் நிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். உமைர் கூறினார்: "பத்ருப் போரில் நம் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகு வாழ்வில் சுவையே இல்லை. 


எனக்கு இருக்கும் கடன்களும், என் பின்னால் இருக்கும் குடும்பமும் மட்டும் இல்லையென்றால், நான் நேராக மதீனா சென்று (முஹம்மதை) கொன்றுவிடுவேன். என் மகனும் அங்குதான் சிறையில் இருக்கிறான் என்பதால் எனக்கு மதீனா செல்ல காரணமும் இருக்கிறது."


இதைக் கேட்ட ஸஃப்வான் பின் உமையா, "உன்னுடைய கடன்கள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்; உன் குடும்பப் பராமரிப்பையும் என் குடும்பத்தோடு சேர்த்து கவனித்துக் கொள்கிறேன். நீ உடனே மதீனா புறப்படு" என்று சதித் திட்டம் தீட்டினார்.


உமைர் தன் வாளில் விஷத்தைத் தடவிக்கொண்டு ரகசியமாக மதீனா சென்றடைந்தார். அவர் மஸ்ஜிதுந் நபவியின் வாசலில் நின்றபோது, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரது தோற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்து, அவரைப் பிடித்து நபிகளாரின் முன்னிலையில் நிறுத்தினார்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உமரே, அவரை விட்டுவிடுங்கள்" என்று கூறிவிட்டு, உமைரைப் பார்த்து, "உமைரே! அருகில் வாரும், நீர் ஏன் இங்கு வந்தீர்?" என்று கேட்டார்கள்.


"என் மகன் உங்களிடம் சிறைப்பட்டிருக்கிறான், அவனது விஷயத்தில் கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்று கேட்கவே வந்தேன்."

நபிகளார் சிரித்துக் கொண்டே, "அப்படியானால் உமது கழுத்தில் தொங்கும் இந்த விஷ வாள் எதற்கு?" என்று கேட்டார்கள். அதற்கு உமைர், "இந்த வாள்களால் தான் நமக்கு பத்ரில் எந்தப் பயனும் இல்லையே, அதை விடுங்கள்" என்று மழுப்பினார்.


அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமைரின் கண்களை நேராகப் பார்த்து, கஃபாவில் நடந்த அந்த ரகசியத்தைச் சொன்னார்கள்:

"நீர் சொல்வது பொய்! நீரும் ஸஃப்வான் பின் உமையாவும் கஃபாவின் நிழலில் அமர்ந்து பேசவில்லையா? உமது கடனையும் குடும்பத்தையும் அவன் ஏற்பதாகவும், அதற்குப் பகரமாக நீர் என்னைக் கொல்வதாகவும் சதி செய்தீர்களே! அல்லாஹ் உங்களுடைய திட்டத்தை எனக்குத் தெரிவித்துவிட்டான்."


இதைக்கேட்ட உமைர் அப்படியே உறைந்துபோனார். ஏனெனில், அந்தப் பாலைவனத்தில் அவரும் ஸஃப்வானும் பேசும்போது மூன்றாவது நபர் எவருமே அங்கு இல்லை.


உண்மை தன் இதயத்தைத் துளைத்த மாத்திரத்தில், உமைர் பின் வஹ்ப் உரத்த குரலில் பின்வருமாறு முழங்கினார்:"அல்ஹம்துலில்லாஹி அல்லதீ ஹதானா லில் இஸ்லாம்!" (எங்களை இஸ்லாத்தின் பால் நேர்வழி காட்டிய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!)


"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் உண்மையான இறைத்தூதர் என்பதை நான் சாட்சி கூறுகிறேன் (அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்). எங்களைத் தீமையிலிருந்து காத்து, எனக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!" என்று நெஞ்சம் உருகிக் கூறினார்.


நபியைக் கொல்ல வந்த உமைர், "அல்ஹம்துலில்லாஹ்" என்று இறைவனைப் புகழ்ந்து, ஒரு நொடியில் இஸ்லாத்தின் நிழலில் மிகச்சிறந்த ஸஹாபியாக (தோழராக) மாறினார். நூல்:ஸீரா இப்னு ஹிஷாம் (سيرة ابن هشام)


ஒரு மனிதன் அறியாமையில் இருக்கும்போது எவ்வளவு பெரிய தீமையைச் செய்யத் துணிந்தாலும், சத்தியம் அவனை வந்தடையும் போது அவன் தன் நாவால் சொல்லும் "அல்ஹம்துலில்லாஹ்" என்ற வார்த்தை, அவனது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்து, அவனைப் புனிதமானவனாக மாற்றிவிடுகிறது.


ஹஸன் அல்-பஸரீ (ரஹ்) அவர்களின் பொறுமை


ஒருமுறை இமாம் ஹஸன் அல்-பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் மாணவர்களுடனும் தோழர்களுடனும் ஒரு சபையில் அமர்ந்து மார்க்க உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தச் சபையில் ஆன்மீக அமைதியும், இறை சிந்தனையும் சூழ்ந்திருந்தது.


அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு நபர் பதற்றத்துடன் அந்தச் சபைக்குள் ஓடிவந்தார். அவர் இமாம் அவர்களிடம் நெருங்கி, மிகத் துயரமான ஒரு செய்தியைக் கூறினார்: "இமாம் அவர்களே! உங்களது வீட்டின் ஒரு பகுதி திடீரெனத் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது! உடனே வாருங்கள்!"


இந்த அதிர்ச்சி செய்தியைக் கேட்டதும் சபையில் இருந்த மாணவர்கள், தோழர்கள் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு எழுந்தனர். ஆனால், இமாம் ஹஸன் அல்-பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மட்டும் எவ்வித பதற்றமும் அடையாமல், தன் இருக்கையிலேயே அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.


அவர்கள் தன் கைகளை ஏந்தி, மிக ஆழமான அமைதியோடு நாவிலிருந்து இந்த வார்த்தையை மொழிந்தார்கள்:

"அல்ஹம்துலில்லாஹ்!" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) அவர்களது இந்த நிதானத்தையும், பேரிடி போன்ற செய்தியைக் கேட்டும் இறைவனைப் புகழ்ந்த தன்மையையும் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.


மாணவர்கள் சிலர் இமாமின் வீட்டை நோக்கிக் ஓடினர். ஆனால், சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு ஓடியவர்கள் முகத்தில் மகிழ்ச்சியோடு சபைக்குத் திரும்பினர். அவர்கள் இமாமிடம் கூறினர்:


"இமாம் அவர்களே! ஒரு நற்செய்தி. உங்களது வீடு தீப்பற்றவில்லை! அது உங்களது அண்டை வீட்டாரின் (அயலார்) கூரைப்பகுதி. ஆனால், அதிர்ஷ்டவசமாகத் தீ உங்களது வீட்டிற்குப் பரவுவதற்கு முன்பாகவே மக்கள் அனைவரும் சேர்ந்து அதை முழுமையாக அணைத்துவிட்டார்கள். உங்களது வீட்டிற்கு எந்தச் சேதமும் இல்லை!"


இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேட்ட இமாம் ஹஸன் அல்-பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், மீண்டும் தன் கைகளை ஏந்தி அதே நெஞ்சார்ந்த அமைதியோடு கூறினார்கள்: "அல்ஹம்துலில்லாஹ்!" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!)


இப்போது மாணவர்களுக்குப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் இமாமிடம் கேட்டார்கள்: "உன்னத ஆசிரியரே! உங்களது வீடு எரிகிறது என்று சொன்னபோதும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்றீர்கள். இப்போது வீடு தப்பித்துவிட்டது என்று சொன்னபோதும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்கிறீர்களே! இதன் ரகசியம் என்ன?"


அதற்கு இமாம் ஹஸன் அல்-பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் :-

"முதலில் என் வீடு எரிகிறது என்ற செய்தி வந்தபோது, என் உள்ளத்தைச் சோதித்துப் பார்த்தேன். என் வீடும், அதிலுள்ள பொருட்களும் அழிந்ததற்காக என் உள்ளம் அல்லாஹ்வோடு சண்டையிடுகிறதா அல்லது அவனது விதியை (கத்ர்) மனப்பூர்வமாக ஏற்கிறதா என்று கவனித்தேன். என் உள்ளம் இறைவனின் விதியைத் திருப்தியோடு ஏற்றுக் கொண்டது. ஒரு முஃமினுக்குச் சோதனை வரும்போது அவனது ஈமான் குலையாமல் இருப்பதே அவனுக்குக் கிடைத்த ஆகப்பெரிய பாக்கியம். அதற்காகவே முதல் முறை 'அல்ஹம்துலில்லாஹ்' என்றேன்.


இரண்டாவது முறை, என் வீடு தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டது என்ற செய்தி வந்தபோது, அது அல்லாஹ் என் மீது காட்டிய தனிப்பெரும் கிருபை என்பதை உணர்ந்து, அவனது அந்த உபகாரத்திற்கு நன்றி செலுத்த இரண்டாம் முறை 'அல்ஹம்துலில்லாஹ்' என்றேன்!" நூல்:ஜாமிஉல் உலூமி வல் ஹிகம் (جامع العلوم والحكم)


துன்பம் வரும்போது பொறுமையுடனும், இன்பம் வரும்போது நன்றியுடனும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறுவதே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும். சூழ்நிலைகள் எப்படி மாறினாலும், இறைவனின் முடிவுகள் அனைத்தும் நமக்கு நன்மையாகவே முடியும் என்ற உன்னத நம்பிக்கையை இந்த வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது.


நம்முடைய வாழ்க்கை என்பது ஷுக்கூரின் (நன்றியுணர்வின்) அடிப்படையில் அமைய வேண்டும். நாம் செய்யும் செலவுகள், ஈட்டும் பொருள்கள் எல்லாம் நம் திறமையால் வந்தது என்று நினைக்கக் கூடாது; அந்தத் திறமையைத் தந்தது யார் என்பதைச் சிந்திக்க வேண்டும். 


வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த நேரங்களில் மட்டுமன்றி, சோதனைகளும் தடைகளும் நம்மைச் சூழ்ந்துள்ள இக்கட்டான நேரங்களிலும் "அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்" (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று கூறும் பக்குவமே உண்மையான ஈமானாகும். நாம் எவ்வளவு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோமோ, அவ்வளவு அவனது பேரருளும் பரகத்தும் நம் வாழ்வில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.


அல்லாஹ்வுக்குப் பிரியமான வழிகளில் செலவிட வேண்டும். எல்லா நிலைகளிலும், இன்பத்திலும் துன்பத்திலும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்லக்கூடிய பக்குவம் நமக்கு வர வேண்டும்.


யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் எப்போதும் நன்றி செலுத்தக்கூடிய நற்பேற்றைத் தந்தருள்வாயாக! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்தை (பரிந்துரையை) எங்களுக்கு பெற்றுத் தருவாயாக.


யா அல்லாஹ் சோதனைகள் வரும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கும் பாக்கியத்தையும், இன்பங்கள் வரும்போது தலைக்கனம் கொள்ளாமல் உனக்கே புகழாரம் சூட்டும் பக்குவத்தையும் எங்களுக்குக் கொடுத்தருள்வாயாக! குர்ஆனில் நீ பாராட்டிய உன்னுடைய "நன்றி செலுத்தும் அந்தச் சில அடியார்களில்" (கலீல்) எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் சேர்த்தருள்வாயாக! ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக