வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தர்மம்.


 ‌தராவீஹ் பயான் பிறை – 3


தலைப்பு : தர்மம் 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ   وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏


நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:92)


இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட வசனங்களில் ஒன்று மேற்சொன்ன வசனம் உங்களுக்கு பிடித்தமான பொருட்களில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள். என்ற வசனம்.


நாம் பயன் படுத்த முடியாத, தூக்கி எறிய நினைக்கும் பொருள்களைக் கொடுப்பது "உதவி" ஆகலாம். ஆனால், நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருளை இன்னொருவருக்குக் கொடுப்பதுதான் "ஈகையின் உச்சம்". இது நமது மனதிலுள்ள பற்றுதலையும் பேராசையையும் குறைக்கிறது.


நாம் செய்யும் தர்மத்தின் அளவு (Quantity) எவ்வளவு என்பதை விட, அதை என்ன நோக்கத்திற்காக (Intention) செய்கிறோம் என்பதை இறைவன் உற்று நோக்குகிறான் என்பதை நினைவுபடுத்துகின்றன.


உயர்ந்த பொருள்களைத் தானம் செய்வது:


சுயநலத்தைக் குறைக்கிறது.


சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்குகிறது.


மனதிற்கு உண்மையான அமைதியையும் "நன்மை" (Al-Birr) எனப்படும் உயர்ந்த நிலையையும் பெற்றுத் தருகிறது.


அபூதல்ஹா (ரலி) அவர்களின் 'பைருஹா' தோட்டம்

மதீனாவில் வாழ்ந்த அன்ஸாரித் தோழர்களில் அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார். அவருக்கு மதீனா பள்ளிவாசலுக்கு எதிரே 'பைருஹா' என்ற ஒரு அழகான பேரீச்சம்பழத் தோட்டம் இருந்தது. அங்குள்ள நீரூற்றின் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அந்தத் தோட்டத்திற்குச் சென்று அந்தத் தண்ணீரைக் குடிப்பதுண்டு. அபூதல்ஹாவுக்கு அந்தத் தோட்டம் என்றால் உயிர்.

இந்த வசனம் (3:92) அருளப்பட்டவுடன், அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரிடம் ஓடி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு மிகவும் பிடித்தமான செல்வம் இந்த பைருஹா தோட்டம் தான். அல்லாஹ்வின் இந்த வசனத்திற்காக இதை நான் தர்மம் செய்கிறேன். இதன் நன்மையை நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். இதை நீங்கள் நாடியவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நெகிழ்ந்து போய், "இது லாபகரமான சொத்து!" என்று பாராட்டிவிட்டு, அந்தத் தோட்டத்தை அவருடைய நெருங்கிய ஏழை உறவினர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள். அவரும் அப்படியே செய்தார்கள்.


உமர் (ரலி) அவர்களின் கைபர் நிலம்


இரண்டாவது கலீபாவான உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கைபர் போரின் வெற்றிக்குப் பிறகு ஒரு நிலம் கிடைத்தது. அது அவருக்கு மிகவும் பிடித்தமான, அதிக வருமானம் தரக்கூடிய நிலமாக இருந்தது.


அவர் நபிகளாரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு நிலம் கிடைத்துள்ளது, அதைவிடச் சிறந்த செல்வம் என்னிடம் வேறு எதுவுமில்லை. அதை நான் என்ன செய்ய வேண்டும் என ஏவுகிறீர்கள்?" எனக் கேட்டார். அதற்கு நபிகளார், அதன் வருமானத்தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தர்மம் செய்யுமாறு கூறினார்கள். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்த நிலத்தை விற்கவோ, யாருக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கவோ முடியாதவாறு 'வக்ஃப்' (அறக்கட்டளை) செய்து, அதன் பலன்கள் அனைத்தையும் ஏழைகளுக்காக அர்ப்பணித்தார்.


பிடித்தமான குதிரை 


ஜைத் பின் ஹாரிஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் 'ஸுபுல்' என்று பெயரிடப்பட்ட ஒரு குதிரை இருந்தது. அது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த வசனத்தைக் கேட்டதும், அவர் அந்தக் குதிரையை அழைத்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது தர்மம்" என்றார். நபிகளார் அதை ஏற்றுக்கொண்டு, ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனான உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே ஒப்படைத்தார்கள். தன் மகனிடமே அது திரும்ப வந்ததைக் கண்டு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு தயங்கியபோது, "அல்லாஹ் உமது தர்மத்தை ஏற்றுக்கொண்டான்" என நபிகளார் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.


இந்தத் தோழர்கள் அனைவரும் "என்னிடம் மிஞ்சியிருப்பதை கொடுக்கிறேன்" என்று சொல்லவில்லை. மாறாக, "எது எனக்கு மிகவும் பிடிக்குமோ அதை இறைவனுக்காகக் கொடுக்கிறேன்" என்று முன்வந்தார்கள். இதுவே இந்த வசனம் நமக்குக் கற்றுத் தரும் உண்மையான தியாகம்.

இது போன்ற தியாக உணர்வு இன்றைய காலத்தில் நமக்கு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கின்றது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை அவர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது." நூல்: புகாரி


இந்த வசனத்தின் (3:92) அடிப்படை நோக்கமே, நம்மிடம் உள்ள "சுயநலத்தை" (Selfishness) அகற்றிவிட்டு "பொதுநலத்தை" (Selflessness) விதைப்பதுதான்.


நபியவர்கள் வேகமாக வீசும் காற்றைவிட அதிகமதிகம் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்வார்கள். மொத்தத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யாராவது ஒருவர் ஒன்றைக் கேட்டு அதை அவர்கள் தராமல், 'இல்லை'என்று சொன்ன சரித்திரம் இல்லை.


ஒரு முறை ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு சால்வையை அன்பளிப்பாக வழங்கினார்கள் . உடனே அதை நபியவர்கள் அணிந்தார்கள். அழகாக இருந்தது.


அதைக்கண்ட நபித்தோழர் ஒருவர், இறைத்தூதர் அவர்களே...! இது மிகவும் அழகாக உள்ளது. எனக்குப் பிடித்துள்ளது. நான் அதை அணிய விரும்புகிறேன். எனக்குத் தந்து விடுங்களேன் என்று கேட்டார்.


உடனே மறுபேச்சில்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இதோ' என்று அதைக் கழற்றி அவரிடம் தந்து விட்டார்கள். அருகிலிருந்த தோழர்களுக்கு கடும் வருத்தம் ஏற்பட்டு, அவரைப் பார்த்துக் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக் கேட்டாலும் தந்து விடுவார்கள் என்ற துணிச்சலில்தானே,அதைக்கேட்டுப் பெற்றாய்? இப்போதுதான் அதை பிரியமுடன் நபியவர்கள் அணிந்தார்கள், பார்க்க அழகாகவும் இருந்தது. உடனே அதைக் கேட்டுப் பெற வேண்டுமா? ஒருநாள் கழிந்த பின்பாவது கேட்டிருக்கலாமே என்று கடிந்து கொண்டார்கள்.

அதற்கு அந்தத் தோழர் என்ன சொன்னார் தெரியுமா? தோழர்களே...! நபியவர்களிடமிருந்து அதைப்பறிக்க வேண்டும் என்ற சாதரண எண்ணத்தில், அதை நான் அவர்களிடம் கேட்கவில்லை. மாறாக... நான் இறந்த பின்பு, என் மீது போர்த்தப்படும் கஃபன் துணியாக, அது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த எண்ணம் தான் அதைக் கேட்கத் தூண்டியது.


நபியவர்களுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம். அந்த தோழருக்குத்தான் எவ்வளவு தூய எண்ணம்.


பணம் இல்லாதவர்கள் "எங்களால் தர்மம் செய்ய முடியவில்லையே" என்று கவலைப்படத் தேவையில்லை. 


இஸ்லாம் தர்மத்தின் எல்லையை மிக விரிவுபடுத்தியுள்ளது:


தன் சகோதரனைப் பார்த்து புன்னகைப்பது தர்மம்.


பாதையில் கிடக்கும் முள் அல்லது கல்லை அகற்றுவது தர்மம்.


நல்ல விஷயங்களை ஏவி, தீயவற்றைத் தடுப்பது தர்மம்.


வழி தெரியாதவருக்கு வழிகாட்டுவது தர்மம்.


தர்மத்தின் தத்துவமும்; நோக்கமும்


1) உள்ளத்தை தூய்மைப்படுத்தல். 

2) செல்வத்தை தூய்மைப்படுத்தல். 

3) கஞ்சத் தனத்தை ஒழித்தல். 

4) நல்ல காரியங்களில் செலவு செய்ய பயிற்றுவித்தல். 

5) தாராள குணத்தை பெறல். 

6) இறைவனுக்கு நன்றி செலுத்துதல், 

7) உலகாசையிலிருந்து மீளல். 

8) செல்வந்தனின் ஆளுமை திறமையை வளர்த்தல். 

9) சகோதரத்துவம் பேணல் 

10) பாவ மன்னிப்பு பெறல். 

11) அல்லாஹ்வின் கோபத்தை அணைத்தல். 

12) மறுமையில் அர்ஷின் நிழல் பெறல். 

13) தீய மரணத்தை தடுத்தல் 

14) செல்வத்திற்கு பாதுகாப்பு கிடைத்தல். 

15) மழை போன்ற வளங்களை பெறல்.


தனக்கு மிஞ்சியதை கொடுப்பது தானம் 

தனக்கு உள்ளதை கொடுப்பது தயாளம் 

தன்னையே கொடுப்பது தியாகம்.


அது போன்று ஸஹாபாக்கள் நல்லோர்கள் இறை

நேசர்கள் வாழ்ந்தார்கள் நாமும் வாழ்வதற்கு முயற்சி செய்வோம் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக