தராவீஹ் பயான் பிறை – 11
தலைப்பு : “ நிஃமத்தை பாதுகாக்கும் ரகசியம் ஷுக்ர் ”
ஹிஜ்ரி 1447.
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ
“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (அல்குர்ஆன் : 14:7)
ஈமானின் மூன்று தூண்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை அன்சாரித் தோழர்கள் அமர்ந்திருந்த சபைக்கு வந்தார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள் முஃமின்களா?" என்று கேட்டார்கள்.
சபையில் அமைதி நிலவியது. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்வந்து, "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முஃமின்கள் தான்" என்று பதிலளித்தார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்களின் ஈமானுக்கு அத்தாட்சி (ஆதாரம்) என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் பின்வரும் மூன்று பண்புகளைக் கூறினார்கள்:
ஈமானின் மூன்று தூண்கள் (அடையாளங்கள்)
* நஷ்குரு அலர் ரஹா (نَشْكُرُ عَلَى الرَّخَاءِ):
வாழ்விலே வசதிகளும், மகிழ்ச்சியும், அருட்கொடைகளும் கிடைக்கும்போது அல்லாஹ்வுக்கு 'ஷுக்ர்' (நன்றி) செலுத்துதல். "அல்ஹம்துலில்லாஹ்" என்று நாவால் துதிப்பதோடு, அந்த அருட்கொடைகளை அல்லாஹ்வின் விருப்பப்படியே செலவிடுதல்.
* நஸ்பிரு அலல் பலா (نَصْبِرُ عَلَى الْبَلَاءِ):
வறுமை, நோய் அல்லது இழப்புகள் போன்ற சோதனைகள் வரும்போது பதற்றம் அடையாமல், அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்து 'ஸப்ர்' (பொறுமை) காத்தல்.
* நர்ளா பில் கழா (نَرْضَى بِالْقَضَاءِ):
அல்லாஹ் நமக்கு எதை விதித்துள்ளானோ, அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது (பொருந்திக் கொள்வது). "அல்லாஹ் எனக்கு எதை நாடுகிறானோ அதுவே எனக்கு சிறந்தது" என்ற மனப்பக்குவம்.
இந்த பதிலைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "கஃபாவின் இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் உண்மையான முஃமின்கள் தான் (அன்தும் முஃமினூன ஹக்கா)" என்று சான்று பகர்ந்தார்கள்.
* நூல:தப்ரானி ,மிஷ்காதுல் மஸாபிஹ்
ஷுக்ர், ஸப்ர், ரிளா (பொருந்திக் கொள்ளுதல்) ஆகிய மூன்றும் ஒரு நாணயத்தின் பக்கங்களைப் போன்றவை. இவை ஒருவரிடம் இருந்தால் அவர் ஈமானின் உச்சத்தை அடைந்துவிட்டார் என்பதே இதன் பொருள்.
உண்மையான நன்றி
தாவூத் (அலை) அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து இரவு பகலாக இபாதத் செய்த பிறகு, "இப்போது நான் உனக்கு உண்மையான நன்றி செலுத்தும் அடியானாகி விட்டேனா?" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ் அவருக்கு உணர்த்திய செய்தி: "தாவூதே! நீ செய்யும் இபாதத்களே நான் உனக்குக் கொடுத்த அருள்தான். அந்த இபாதத்தைச் செய்ய உனக்கு நான் உடல் நலத்தையும், மன உறுதியையும் கொடுத்தேன். எனவே, நீ செய்யும் இபாதத்திற்காகவே நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டும்!"
அதாவது, நாம் செய்யும் நல்ல காரியங்கள் நம்முடைய திறமையல்ல, அது அல்லாஹ்வின் கிருபை என்பதை உணர்ந்து தலைபணிவதே உண்மையான "நன்றி செலுத்தும் அடிமைத்தனம்" (அப்தன் ஷகூரா).
நூல் :கஸஸுல் அன்பியா
நன்றியுணர்வின் விளக்கம்
அக்காலத்தின் மிகப்பெரிய அறிஞரான ஜுனைத் அல்-பக்தாதி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வு.
பெரியவர்கள் "ஷுக்ர்" (நன்றி) என்றால் என்ன என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர் ஜுனைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னார்கள்: "அல்லாஹ் நமக்குத் தந்த அருட்கொடைகளை (கண், காது, கை) வைத்துக்கொண்டு அவனுக்கு மாறு (பாவம்) செய்யாமல் இருப்பதே உண்மையான நன்றி."
நாம் அல்லாஹ் கொடுத்த கண்ணால் ஹராமானதைப் பார்த்தால், அது அந்த கண்ணுக்குச் செய்யும் நன்றி கெட்டத்தனமாகும்.
ஒரு அல்ஹம்துலில்லாஹ் கூறியதற்கு 30 ஆண்டுகள் அஸ்தஃபிருல்லாஹ்
புகழ்பெற்ற இறைநேசரான ஹஜ்ரத் ஸரிய்யு ஸகதீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள். இவர்கள் ஈராக் நாட்டின் பக்தாத் நகரில் வாழ்ந்தவர்கள். பெரும் ஆன்மீக ஞானியான ஜுனைத் அல்-பக்தாதி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் மாமாவும், ஆசிரியரும் (ஷேக்) ஆவார்கள். இவர்கள் ஒரு சிறு வியாபாரியாகவும் இருந்தார்கள்.
பக்தாத் நகரின் கடைவீதியில் (ஸூக்) ஒருமுறை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. பல கடைகள் எரிந்து சாம்பலாகின. ஸரிய்யு ஸகதீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும் அங்கு ஒரு கடை வைத்திருந்தார்கள்.
செய்தி: ஒருவர் ஓடிவந்து அவர்களிடம், "உமது கடை மட்டும் தீயிலிருந்து தப்பித்துவிட்டது!" என்று கூறினார்.
அந்தச் செய்தியைக் கேட்டவுடன், மனித இயல்புப்படி "அல்ஹம்துலில்லாஹ்!" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினார்கள்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் திடுக்கிட்டார்கள். "எனது கடை தப்பித்ததற்காக நான் மகிழ்ச்சி அடைந்து அல்லாஹ்வைப் புகழ்ந்தேன். ஆனால், என் பக்கத்துக் கடைகள் எல்லாம் எரிந்து என் சகோதரர்கள் நஷ்டமடைந்து கவலையில் இருக்கும்போது, நான் மட்டும் தப்பித்ததை எண்ணி மகிழ்வது எவ்வளவு பெரிய சுயநலம்? இது ஒரு முஃமினுக்குரிய அழகல்லவே!" என்று வருந்தினார்கள். பின் தன் கடைக்கு வந்து இருந்த பொருட்களை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்கு வைத்து கொடுத்தார்கள்.
அந்த ஒரு "அல்ஹம்துலில்லாஹ்" என்ற வார்த்தைக்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அழுது அழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு (இஸ்திஃபார்) கோரினார்கள். நூல்: இஹ்யா உலூமித்தீன்
நன்றி செலுத்துவது என்பது வெறும் வார்த்தையல்ல; அது பிறருடைய கஷ்டத்தில் பங்கெடுப்பதையும் உள்ளடக்கியது.
"தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவர் முழுமையான முஃமின் ஆக முடியாது" என்ற நபிமொழியின் நேரடி விளக்கம் இது.
மறுமைப் பயம்: ஒரு சிறிய வார்த்தைக்காக 30 ஆண்டுகள் அழுதார்கள் என்றால், நாம் செய்யும் எத்தனையோ தவறுகளுக்கு நாம் எவ்வளவு வருந்த வேண்டும்
ஒரு விபத்து அல்லது கஷ்டம் வரும்போது "நான் தப்பித்துவிட்டேன்" என்று சொல்வதை விட, "பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் உதவட்டும்" என்று துஆ செய்வதே சிறந்த பண்பு.
வறுமையிலும் ஒரு சுவை
பல்க் நகரத்தின் மன்னராக இருந்து, அனைத்தையும் துறந்து இறைநேசராக மாறியவர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஒருமுறை அவர்கள் காய்ந்த ரொட்டித் துண்டை தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறிவிட்டுச் சொன்னார்கள்: "இந்த உணவில் நான் காணும் நிம்மதியும் சுவையும் ஒரு மன்னனுக்குக் கூடக் கிடைக்காது. மன்னர்களுக்குத் தெரிந்தால் இதைப் பறிக்க என்னோடு போரிடுவார்கள்."
நிம்மதி என்பது பொருளில் இல்லை; அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி அடைந்து நன்றி சொல்வதில்தான் இருக்கிறது.
உறுப்புகள் இழந்தும் உருகிய நன்றி
இறைநேசர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஸைத் (அபு கிலாபா) ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு மிகவும் உன்னதமானது.
ஒருமுறை ஒரு வழிப்போக்கர் பாலைவனத்தில் ஒரு கூடாரத்தைக் கண்டார்கள். உள்ளே ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு இரு கைகளும் இல்லை, இரு கால்களும் இல்லை, பார்வையும் இல்லை. ஆனால் அவரது நாவு மட்டும், "யா அல்லாஹ்! நீ பலருக்குக் கொடுக்காத ஒரு பாக்கியத்தை எனக்குத் தந்து சிறப்பித்திருக்கிறாய், அதற்காக உனக்கு நன்றி" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வழிப்போக்கர் கேட்டார், "உங்களுக்குக் கை, கால், கண் எதுவுமே இல்லையே! எதற்காக நன்றி சொல்கிறீர்கள்?"
அபு கிலாபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) சொன்னார்கள்: "அல்லாஹ் எனக்குத் தன்னை நினைவு கூர ஒரு 'இதயத்தையும்', புகழப் பாட ஒரு 'நாவையும்' தந்திருக்கிறானே! அதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?"
நம்மிடம் எல்லாம் இருந்தும் நாம் நன்றி சொல்லத் தயங்குகிறோம். ஆனால், இழந்தவற்றைப் பார்க்காமல் இருப்பவற்றைப் பார்த்து மகிழ்வதே 'விலாயத்' (இறைநேசம்).
'சோதனைக்கு' நன்றி
தாபியீன்களில் சிறந்தவரான ஹஸன் அல்பஷரி(ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், ஒருமுறை கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவர்களை ஒருவர் நலம் விசாரித்தார்.
"எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள்: "அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த நோய் என் பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. இதைத் தராத அல்லாஹ்வுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?"
துன்பங்களை சோதனையாகப் பார்க்காமல், பாவங்கள் மன்னிக்கப்படும் வாய்ப்பாகப் பார்த்து நன்றி கூறுதல். (நூல்): ஹில்யதுல் அவ்லியா (Hilyat al-Awliya) அபூ நுஐம் அல்-அஸ்பஹானி.
நன்றியுணர்வுள்ள குதிரையும் - ரூமியின் பாடமும்
ஒருமுறை மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பக்தாத் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பாலைவனப் பகுதியில் ஒரு வணிகனைச் சந்தித்தார்கள். அந்த வணிகன் ஒரு அழகான குதிரையை மிகவும் அன்போடு கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்த வணிகன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கூறினான்: "மௌலானா அவர்களே! இந்த குதிரை சாதாரணமானதல்ல. ஒருமுறை நான் கொள்ளையர்களால் சூழப்பட்டபோது, இந்த குதிரை தன் உயிரைப் பணையம் வைத்து, என்னை அவர்களிடமிருந்து பாதுகாத்து ஓடியது. அப்போது அதற்கு அம்பு காயம் ஏற்பட்டது. ஆனால், அது வலியையும் பொறுத்துக்கொண்டு என்னை பத்திரமாக ஊர் சேர்த்தது."
அந்த குதிரையின் நன்றியுணர்வை ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வியந்து பார்த்தார்கள்.
அந்தக் குதிரையை நோக்கிக் கொண்டிருந்த ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், தன் சீடர்களை நோக்கி மிக அழகான ஒரு ஆன்மீக விளக்கத்தைக் கூறினார்கள்:
"இந்தப் பாருங்கள்! ஒரு விலங்கு, தனக்குக் கொஞ்சம் புல்லும், அன்பும் கொடுத்த எஜமானனுக்காக தன் உயிரையே தியாகம் செய்கிறது. ஆனால், நம்மைப் படைத்த அல்லாஹ், நமக்கு ஆரோக்கியம், உணவு, வாழ்வு என அனைத்தையும் வாரி வழங்கியிருக்கும்போது, நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றி என்ன?”
நூல் :மஸ்னவி விரிவுரை மனாகிபுல் ஆரிஃபீன்
நன்றி மறந்தால்
1. மஆரிப் அணை (The Dam of Ma'rib)
யெமன் தேசத்தில் இருந்த ஸபா நாட்டின் செழிப்புக்குக் காரணம் 'மஆரிப்' (Ma'rib) எனப்படும் பிரம்மாண்டமான அணை. இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்ட இந்த அணை, மழைக் காலங்களில் நீரைத் தேக்கி வைத்து, அந்த நாட்டின் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இது அக்காலத்தில் உலகிலேயே மிகச் சிறந்த நீர் மேலாண்மைத் திட்டமாகக் கருதப்பட்டது.
சொர்க்கத்தைப் போன்ற தேசம் (பல்ததுன் தையிபா
لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ ۖ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ ۖ كُلُوا مِن رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ ۚ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ
فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَىْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ
உண்ணுங்கள் உங்கள் இறைவனுடைய உணவிலிருந்து; அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள்; (உங்களுக்கு இருப்பது) மணமிக்க, பரிசுத்தமான நகரம் (பல்ததுன் தையிபா); இன்னும் (உங்களை மன்னிக்கும்) மிக்க மன்னிப்பாளனாகிய இறைவன் (இருக்கின்றான்)." (ஸூரா ஸபா: 15) நூல் : தஃப்ஸீர் இப்னு கஸீர்
அல்லாஹ் அந்த நாட்டைப் பற்றி குர்ஆனில் "பல்ததுன் தையிபா" (பரிசுத்தமான நகரம்) என்று
குறிப்பிடுகிறான். அதன் சிறப்புகள்:
* பழத்தோட்டங்கள்: ஊரின் வலது புறமும் இடது புறமும் அடர்த்தியான பழத்தோட்டங்கள் இருந்தன.
ஒருவன் தலையில் ஒரு கூடையை வைத்துக்கொண்டு அந்தத் தோட்டங்களின் வழியாக நடந்தாலே போதும்; மரங்களை உலுக்க வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே கனிந்த பழங்கள் விழுந்து கூடை நிறைந்துவிடும்.
அந்த நாட்டின் தூய்மையான காற்று மற்றும் அல்லாஹ்வின் அருளால் அங்கே ஈக்கள், கொசுக்கள், பேன்கள், தேள்கள் அல்லது பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களோ, தொல்லை தரும் பூச்சிகளோ இருக்கவில்லை. வெளியூர்க்காரர்கள் பேன்களுடன் அந்த ஊருக்குள் நுழைந்தால், அங்கிருந்த தூய்மையான காற்றினால் அந்தப் பேன்கள் செத்து விழுந்துவிடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:-
ஸபா நாட்டு மக்கள் முதலில் நேர்வழியில் இருந்தனர். ஆனால், காலப்போக்கில் அவர்கள் ஷைத்தானின் வழியில் சென்று சூரியனை வணங்கத் தொடங்கினர்.
இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் சுத்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) போன்ற விரிவுரையாளர்களின் கூற்றுப்படி, அந்த மக்களுக்கு நேர்வழி காட்ட 13 நபிமார்கள் அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்கள் அந்த நபிமார்களைப் புறக்கணித்து, அவர்களுடன் வாதிட்டு, சத்தியத்தை ஏற்க மறுத்தனர்.
ஸைலுல் அரிம் (மகா வெள்ளம்)
அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தபோது (குப்ருந் நிஃமத்), அல்லாஹ் அந்த மஆரிப் அணையை ஒரு சிறிய "பெருச்சாளியைக்" கொண்டு உடைக்கச் செய்தான்.
அணையின் சுவரைக் குடைந்த பெருச்சாளிகளால் அணை பலவீனமடைந்து உடைந்தது.
செழிப்பாக இருந்த தேசம் வெள்ளக்காடானது. இனிப்பான பழங்கள் தந்த மரங்களுக்குப் பதிலாக, கசப்பான 'அராக்' மரங்களும், இலந்தை மரங்களும் முளைத்தன.
இருப்பதை நினைத்து சந்தோஷம் படனும் அப்போது தான் நன்றி உணர்வு வரும் ஆனால் நாம் இல்லாததை தான் கூறுவோம்.
"அன்பிற்குரியவர்களே! நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்: ஈமான் என்பது வெறும் வார்த்தையல்ல, அது செயலும் நன்றியுணர்வும் கலந்தது.
நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு மூச்சும், நாம் உண்ணும் ஒவ்வொரு கவளம் உணவும் அல்லாஹ்வின் கிருபை. தாவூத் (அலை) அவர்கள் இரும்பை மெழுகாக மாற்றும் ஆற்றல் பெற்றிருந்தும், மலைகளும் பறவைகளும் அவர்களோடு சேர்ந்து தஸ்பீஹ் செய்தும், ஒருபோதும் அவர்கள் ஆணவம் கொள்ளவில்லை. 'யா அல்லாஹ்! உனக்கு நன்றி சொல்லும் தகுதியை நான் அடைந்துவிட்டேனா?' என்று அழுது கேட்டார்கள்.
ஆனால், ஸபா தேசத்து மக்களோ, அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய 'பல்ததுன் தையிபா' எனும் சொர்க்கபுரி போன்ற வாழ்க்கையைத் தங்களின் சொந்தத் திறமை என்று நினைத்தார்கள். 13 நபிமார்கள் வந்து எச்சரித்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. விளைவு, ஒரு சிறிய பெருச்சாளியைக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரமான அணை உடைக்கப்பட்டு, அவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.
எனவே, நம் வாழ்வில் மகிழ்ச்சி வரும்போது 'ஷுக்ர்' (நன்றி) செலுத்துவோம், சோதனை வரும்போது 'ஸப்ர்' (பொறுமை) காப்போம், அல்லாஹ் எதை விதித்தாலும் அதை மனப்பூர்வமாக 'ரிளா' (பொருந்துதல்) கொள்வோம். அப்போதுதான் நாமும் 'அன்தும் முஃமினூன ஹக்கா' - உண்மையான முஃமின்கள் என்ற நபிமொழியின் நற்செய்திக்குத் தகுதியானவர்களாவோம்."
"யா அல்லாஹ்! புகழுக்கும் நன்றிக்கும் உரியவனே!
எங்களுக்கு நீ வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்காக (நிஃமத்களுக்காக) உனக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
யா அல்லாஹ்! நபிமார்களுக்கு வழங்கிய அந்தப் பணிவான உள்ளத்தை எங்களுக்கும் வழங்குவாயாக! நாவால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்வதோடு, உள்ளத்தாலும் உனக்கு அடிபணியும் பாக்கியத்தைத் தருவாயாக!
யா அல்லாஹ்! ஸபா தேசத்து மக்களைப் போல உனது அருட்கொடைகளை அனுபவித்துவிட்டு, உனக்கே மாறு செய்யும் நன்றி கெட்டவர்களாக எங்களை ஆக்கிவிடாதே! உனது கோபத்திலிருந்தும், திடீர் சோதனைகளிலிருந்தும், அருட்கொடைகள் எங்களை விட்டு நீங்குவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்.
யா அல்லாஹ்! எங்கள் வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது பொறுமையையும், இன்பங்கள் வரும்போது நன்றியையும், உன் கழா-கத்ரின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையையும் (ரிளா) எங்களுக்குத் தருவாயாக!
யா அல்லாஹ்! எங்களை உண்மையான முஃமின்களாக வாழச் செய்து, உண்மையான முஃமின்களாகவே மரணிக்கச் செய்வாயாக! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! ஆமீன், யாரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜஸாகுமுல்லாஹ்
பதிலளிநீக்கு