செவ்வாய், 9 ஜூலை, 2024

ஐயோ... டாக்டர் இது அந்த குதிரை இல்லை. (கதை).


ஒரு ஊரில், ஒருவன் தேவை இல்லாமல் வீண் கற்பனை செய்துக்கொண்டு, ஏதாவது உளரிக்கொண்டும், தன் நிம்மதியை தானே கெடுத்துக்கொண்டும் இருந்தான். 

அவன் அப்படி இருப்பதால் அவனின் குடும்பத்தினருக்கும் கவலையாக இருந்தது. மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.


அவனை சோதித்து பார்த்த மருத்துவர், ”எப்போதிலிருந்து தேவை இல்லாமல் இப்படி கவலையில் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்.


”டாக்டர், நான் ஒரு பெரிய குதிரையை விழுங்கியதில் இருந்து இப்படி எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டானது” என்றான்.


“என்ன? குதிரையை விழுங்கினிர்களா? என்ன சொல்கிறீர்கள்? அதெல்லாம் சாத்தியம் இல்லை.” என்று மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் அந்த நபர் கேட்பதாக இல்லை. சரி. இவன் போக்கிலேயே போக வேண்டியதுதான் என்று முடிவு செய்த மருத்துவர், 

அவனுக்கு மயக்க ஊசியை போட்டு, ஒரு மணிநேரம் படுக்க வைத்தார். 


அவனுக்கு மயக்கம் தெளிவதற்குள் ஒரு நிஜ குதிரையை பிடித்து வந்து மருத்துவமனை வாசலில் கட்டி வைத்தார். அவனுக்கு மயக்கம் தெளிந்தது. உடனே மருத்துவர் அவனிடம், ”உங்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, நீங்கள் விழுங்கிய குதிரையை வெளியே எடுத்துவிட்டேன். வாசலுக்கு சென்று பாருங்கள் நீங்கள் விழுங்கிய குதிரை இருக்கிறது.” என்றார்.


அவனும் வாசலுக்கு வந்து பார்த்தான். உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவரின் அறைக்கு ஓடி வந்தான். “அய்யோ டாக்டர், அது நான் விழுங்கிய குதிரை இல்லை. நான் விழுங்கிய குதிரை கருப்பு நிறம். நீங்கள் காட்டும் குதிரையோ வெள்ளை. 

அப்படி என்றால்? அய்யய்யோ என் வயிற்றில் இரண்டு குதிரைகள் இருந்திருக்கிறது. ஏன் நீங்கள் கருப்பு குதிரையை எடுக்கவில்லை? ஏதாவது பிரச்சனையா?“ என கேட்க,


அதற்கு டாக்டர், “என்னால முடியல இன்னிக்கு ஆஸ்பத்திரி லீவு.” என்று சொல்லி, வீட்டுக்கு கிளம்பினார்.


 மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே தங்களின் மனதை கட்டுப்படுத்திட யோகா, தியானம், வழிபாடு என சிந்தனையை நல்வழிப்படுத்த பழகி கொள்ள வேண்டும். 

என்னதான் மருத்துவரிடம் அழைத்து சென்றாலும், நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லை என்றால் மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது.

1 கருத்து:

  1. மனதில் தூய என்னங்களை பதிக்க வேண்டும்,.அதுவே நம்மை தெளிந்த நீரோடை போல் எல்லாவித சக்தி உணர்வுகளை கொடுக்கும் .
    மனம் சஞ்சலமின்றி இருக்க அதனை அடிக்கடி ஒருநிலைப் படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு