திங்கள், 9 மார்ச், 2026

இஸ்திகாமத் சொர்க்கத்திற்கான பாதை.

 


‌தராவீஹ் பயான் பிறை – 20


தலைப்பு : “இஸ்திகாமத் சொர்க்கத்திற்கான பாதை”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا

تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا

وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ

“நிச்சயமாக ‘எங்கள் இறைவன் அல்லாஹ்’ என்று கூறி அதில் நிலைத்தவர்களிடம் மலக்குகள் இறங்கி: ‘நீங்கள் பயப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம்; உங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட சுவர்க்கத்தின் நற்செய்தியை பெறுங்கள்’ என்று கூறுவார்கள்.”


இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸூரத்துல் ஹாமீம் ஸஜ்தா அத்தியாயத்தில் முக்கியமான வசனங்களில் மேற்சொன்ன வசனங்களில் அல்லாஹ் நமக்கு கூறுவது :- ஒரு முஃமினின் வாழ்வில் மிக முக்கியமான இரண்டு அம்சங்களை விளக்குகிறது: 1)ஈமான் (நம்பிக்கை) மற்றும் 2)இஸ்திகாமத் (உறுதி/நிலைத்தன்மை).


ஈமானுக்குப் பிறகு மிக முக்கியமானது

சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கேட்ட கேள்விக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த சுருக்கமான, ஆனால் ஆழமான பதில் இது:

قُلْ: آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ

"அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று கூறுவீராக! பின்னர் அதில் உறுதியாக (இஸ்திகாமத்துடன்) இருப்பீராக!"(நூல்: முஸ்லிம்)


எங்கள் இறைவன் அல்லாஹ்" (ஈமான்)

இது வெறும் வாய்மொழிச் சொல் மட்டுமல்ல. அகிலத்தைப் படைத்து, காத்து, நிர்வகிக்கும் அந்த ஏக இறைவனை மட்டுமே வணங்குவேன் என்றும், அவனது கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவேன் என்றும் மனதார ஏற்பதாகும்.


அதில் நிலைத்திருக்க வேண்டும்" (இஸ்திகாமத்)

இந்த வசனத்தின் மிக முக்கியமான பகுதி இதுதான். 'இஸ்திகாமத்' என்றால் இன்பத்திலும் துன்பத்திலும், சோதனையான காலங்களிலும் ஈமானை விட்டுக்கொடுக்காமல் மரணம் வரை நேர்வழியில் நிலைத்திருப்பது.


இஸ்திகாமத் என்பது ஒரு பயணம்

"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று சொல்வது ஒரு நுழைவுச்சீட்டு (Entry Pass) போன்றது. ஆனால், அந்தப் பாதையில் இறுதிவரை பயணிக்க உறுதி தேவை. சோதனைகள் வரும்போது ஈமான் தடுமாறலாம்.வசதிகள் பெருகும்போது ஈமான் மறக்கடிக்கப்படலாம்.

ஆனால் இஸ்திகாமத் உள்ளவர், "எந்த நிலை வந்தாலும் என் இறைவனின் கட்டளை மாறாது" என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

சைத்தான் மனிதனை ஈமான் கொள்ளாமல் தடுக்கப் பார்ப்பான். அதில் தோற்றுவிட்டால், அவன் செய்யும் அடுத்த வேலை: ஈமான் கொண்டவனை அந்த வழியில் நிலைக்க விடாமல் தடுப்பது.

"இன்று ஒரு நாள் மட்டும் தொழுகையை விடு", "இந்த ஒரு முறை மட்டும் பொய் சொல்" எனச் சிறுகச் சிறுக நம் உறுதியைக் குலைப்பான்.

இந்தச் சலனங்களை வென்று நிற்பதே உண்மையான இஸ்திகாமத்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எதுவெனில், அது குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாகச் செய்யப்படுவதாகும்." (நூல்: புகாரி)


ஒரே நாளில் 100 ரக்அத்கள் தொழுதுவிட்டு, அடுத்த ஒரு மாதம் தொழாமல் இருப்பதை விட, தினமும் ஐந்து நேரத் தொழுகையை அதன் நேரத்தில் உறுதியாகக் கடைப்பிடிப்பதே இஸ்திகாமத். இந்தத் தொடர்ச்சிதான் ஒரு மனிதனை இறைவனுக்கு நெருக்கமானவனாக மாற்றுகிறது.


கோபம் வரும்போது தவறான வார்த்தைகள் பேசாமல் இருப்பது.

எவ்வளவு வறுமை வந்தாலும் ஹராமான (தடுக்கப்பட்ட) வழியில் செல்லாமல் இருப்பது.

சோம்பல் வரும்போது அதைக் கடந்து இறைவனை வணங்குவது.



உஹுத் போர்க்களத்தில் ஹள்ரத் அனஸ் பின் நள்ர் (ரலி)


ஈமான் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு செயல் என்பதை நிரூபித்தவர்கள் உஹுத் போரின் ஒரு கட்டத்தில், "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்" என்ற தவறான செய்தி பரவியது. இதைக் கேட்ட பல சஹாபாக்கள் அதிர்ச்சியில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமர்ந்துவிட்டனர். 


அப்போது அனஸ் பின் நள்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு வந்து, "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டால், அவர்களுக்குப் பிறகு நீங்கள் உயிரோடு இருந்து என்ன செய்யப்போகிறீர்கள்? 


எழுந்து போர் புரியுங்கள்! அவர்கள் எதற்காக மரணித்தார்களோ, அதற்காக நீங்களும் மரணியுங்கள்!" என்று கூறிவிட்டு போர்க்களத்தில் பாய்ந்தார்கள். அவர்கள் உடலில் 80-க்கும் மேற்பட்ட காயங்களுடன் ஷஹீதானார்கள். (உயிர்த்தியாகம் செய்தார்கள்).நூல்: புகாரி


இஸ்திகாமத் (உறுதி) என்பது இக்கட்டான சூழலிலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதே


பிஃர் மஊனா துரோகத்தின் வரலாறு 


நஜ்த் பகுதியைச் சேர்ந்த அபூ பரா ஆமிர் இப்னு மாலிக் என்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தன் மக்களுக்கு இஸ்லாத்தைப் போதிக்க சில குர்ஆன் விரிவுரையாளர்களை அனுப்பி வைக்குமாறு கோரினார். தன் தோழர்களுக்கு ஏதும் ஆபத்து நேரிடுமோ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஞ்சியபோது, "அவர்களுக்கு நான் பொறுப்பு (தஞ்சம்)" என்று அபூ பரா உறுதியளித்தார்.


இதையடுத்து, குர்ஆனை நன்கு கற்றறிந்த 70 சிறந்த ஸஹாபாக்களை (குர்ராக்கள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்தத் தூதுக்குழுவில் ஹராம் பின் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களும் ஒருவராக இருந்தார். (இவர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் தாய்மாமா ஆவார்கள்).


ஹராம் பின் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தூதுக்குழு 'பிஃர் மஊனா' எனும் கிணற்றடிக்கு வந்தடைந்தபோது, அங்கிருந்து ஹராம் பின் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தை நஜ்த் பகுதியின் தலைவனான ஆமிர் இப்னு துஃபைலிடம் கொண்டு சென்றார்கள்.


ஆனால், அந்தத் துரோகி கடிதத்தைப் படிக்கக்கூட இல்லை. கடிதத்தைக் கொண்டு வந்த தூதரைத் தாக்கத் திட்டமிட்டான்.


ஹராம் பின் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆமிர் பின் துஃபைல் ஒருவனுக்கு ஜாடை காட்டினான். 


அந்த நபர் பின்னால் இருந்து வந்து ஹராம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முதுகில் ஈட்டியால் பலமாக குத்தினான். அந்த ஈட்டி மார்புப் பகுதியைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தது.


உயிர்ப் போகும் அந்த விநாடியில், ரத்தம் பீய்ச்சி அடித்தபோது ஹராம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்த செயல் அங்கிருந்தவர்களை உறைய வைத்தது


அவர் தன் கைகளால் ரத்தத்தை அள்ளித் தன் முகம் மற்றும் தலையில் தடவிக் கொண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன் உரத்த குரலில்: "ஃபுஸ்து வ ரப்பில் கஃபா!" (கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்!) என்று முழங்கினார்கள்.


ஹராம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் குத்திய ஜப்பார் பின் ஸல்மா என்பவருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. "நான் இவரை ஈட்டியால் குத்திக் கொல்கிறேன், இவரோ தான் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறுகிறாரே! இதில் என்ன வெற்றி இருக்கிறது?" என்று குழம்பினார்.

பின்னர் அவர் மற்றவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, "அவர் இறைவழியில் 'ஷஹீத்' (உயிர்த்தியாகி) ஆகிவிட்டதால் அவருக்குக் கிடைக்கவிருக்கும் சொர்க்கத்தையே அவர் வெற்றி என்று குறிப்பிட்டார்" எனத் தெரிந்துகொண்டார். 


ஹராம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அந்த ஒற்றை வார்த்தையும் உறுதியும் ஜப்பார் பின் ஸல்மாவை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது. அவர் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றார்.


மீதமுள்ள சஹாபாக்களின் நிலை இதனைத் தொடர்ந்து, துரோகிகள் மற்ற 70 சஹாபாக்களையும் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அம்ரு பின் உமையா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் காயமடைந்து உயிருடன் தப்பிய ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் அங்கு ஷஹீதாக்கப்பட்டார்கள்.


இந்தத் துயரச் செய்தி கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த கவலையடைந்தார்கள். ஒரு மாதம் வரை அந்தத் துரோகிகளுக்காக 'குனூத் நாஸிலா' ஓதி இறைவனிடம் முறையிட்டார்கள். நூல்: புகாரி 


ஈமான் கொண்ட ஒருவருக்கு மரணம் என்பது முடிவல்ல, அது இறைவனைச் சந்திக்கும் ஒரு மாபெரும் 'வெற்றி' என்பதை ஹராம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிரூபித்தார்கள். இதுதான் உண்மையான இஸ்திகாமத் (உறுதி) ஆகும். 

ரோமச் சிறையில் ஒரு சிங்கம்


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் (ஹிஜ்ரி 19-இல்) ரோமானியர்களுடனான போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளிட்ட சில முஸ்லிம்கள் ரோமப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். 


"இவர்கள் சாதாரண வீரர்கள் அல்ல, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர்கள்" என்பதை அறிந்த ரோம அரசன் (சீசர்), அவர்களைத் தன் முன்னே கொண்டுவரச் செய்தான்.


அரசனின் ஆசைவார்த்தைகளும் இஸ்திகாமத்தும்

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் உறுதியைச் சோதிக்க அரசன் பல சலுகைகளை வழங்கினான்:


அரசன்: "நீ கிறித்தவனாக மாறினால் உன்னை விடுவித்து விடுவேன்."

அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு: "மாட்டேன். மரணம் எனக்கு இதைவிட மேலானது."

அரசன்: "நீ மதம் மாறினால் என் ஆட்சியில் பாதியையும், என் மகளையும் உனக்குத் தருகிறேன்."

அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ உன்னுடைய முழு ஆட்சியையும், அரேபியாவின் ஒட்டுமொத்த ஆட்சியையும் எனக்குக் கொடுத்தாலும், ஒரு நொடி கூட நான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கத்தை விட்டு விலகமாட்டேன்."


ரோம அரசன் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு தனி அறையில் அடைக்க உத்தரவிட்டான். அவர்களுக்கு எவ்வித உணவோ, தண்ணீரோ வழங்கப்படவில்லை.

தொடர்ந்து மூன்று நாட்களாக அவர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரோ, ஒரு பருக்கை உணவோ கொடுக்கப்படவில்லை. அவர்கள் பசியாலும் தாகத்தாலும் மிகக் கடுமையாக வாடினார்கள். அவர்கள் மரணத்தின் விளிம்பிற்குச் சென்றிருப்பார்கள் என்று அரசன் கருதினான்.


நான்காவது நாள், அரசன் அவர்களுக்கு முன்னால் மிகச் சிறந்த முறையில் சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியையும், உயர்தரமான மதுவையும் அனுப்பி வைத்தான். "பசியின் கொடுமையால் அவர் நிச்சயமாக இதனை உண்டுவிடுவார், அதன் மூலம் அவருடைய உறுதியை உடைத்துவிடலாம்" என்பதே அரசனின் தந்திரமாக இருந்தது.


உணவு வைக்கப்பட்டும் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைத் தொடவே இல்லை. பல மணிநேரம் கடந்தும் அவர் அந்த ஹராமான உணவை நெருங்கவில்லை என்பதைக் கேள்விப்பட்ட அரசன் வியப்படைந்து, அவர்களைத் தன் முன்னால் அழைத்து வரச் செய்தான்.


அரசன்: "ஏன் உண்ணவில்லை? உனக்குத்தான் பசி உயிர் போகிறதே?"

அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில்:

"நிச்சயமாக எனக்குக் கடும் பசி இருக்கிறது. மார்க்கச் சட்டப்படி (ஷரீஅத்), இது போன்ற உயிருக்குப் போராட்டமான சூழலில் (ழரூரா), உயிர் காக்க அந்தப் பன்றி இறைச்சியும் மதுவும் எனக்கு 'ஹலால்' (அனுமதிக்கப்பட்டது) தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உன்னைப் போன்ற ஒரு இறைநிராகரிப்பாளன் (காஃபிர்), இஸ்லாத்தையும் அதன் வீரர்களையும் பார்த்து ஏளனம் செய்வதற்கும், பலவீனமானவர்கள் என்று எள்ளி நகையாடுவதற்கும் நான் ஒருபோதும் வாய்ப்பளிக்க விரும்பவில்லை. அதனால்தான் நான் உண்ணவில்லை!"


இஸ்திகாமத்தின் உச்சம் தன்னுடைய உயிர் போவதைக் காட்டிலும், இஸ்லாத்தின் கௌரவம் (இஸ்ஸத்) குறைந்துவிடக் கூடாது என்பதில் அவர் காட்டிய அந்த உறுதிதான் அவரை வரலாற்றில் ஒரு 'சிங்கமாக' மாற்றியது. இதைக் கண்டுதான் அரசன் அடுத்தகட்டமாக கொதிக்கும் எண்ணெய் சோதனையைச் செய்தான்.


அரசன் கோபமடைந்து, ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயைக் கொதிக்க வைத்தான். மற்றொரு முஸ்லிம் கைதியைக் கொண்டு வந்து, அந்தப் பாத்திரத்தில் தூக்கிப் போட்டான். கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீரரின் சதை உருகி, எலும்புகள் மட்டும் மிஞ்சின.


அடுத்து அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "இப்போதாவது மதம் மாறுகிறாயா?" என்று கேட்டான். அவர் மறுக்கவே, அவரை எண்ணெயில் போட வீரர்கள் தூக்கிச் சென்றனர். அப்போது அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள்.


அரசன் அவர்கள் பயந்துவிட்டதாக நினைத்து அழைத்தான். ஆனால் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன பதில் அரசனை அதிர வைத்தது:

"நான் மரணத்திற்கு பயந்து அழவில்லை. என் உடலில் ஒரே ஒரு உயிர் தான் இருக்கிறது, அது இப்போது போகப்போகிறது. என் உடலில் இருக்கும் ஒவ்வொரு ரோமத்தின் அளவுக்கும் உயிர்கள் இருந்து, அவை அனைத்தும் ஒவ்வொன்றாக இந்த இறைவழியில் இப்போதே பிரியக் கூடாதா என்று எண்ணித்தான் அழுதேன்!"


அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த அபாரமான ஈமானைக் கண்டு அரசன் வியந்து போனான். அவன் ஒரு நிபந்தனை விதித்தான்: "நீ என் நெற்றியில் ஒருமுறை முத்தமிட்டால், உன்னை நான் விடுவித்து விடுகிறேன்."


அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு தந்திரமான மற்றும் மனிதாபிமான நிபந்தனை போட்டார்: "என்னை மட்டும் விடுவித்தால் போதாது, என்னுடன் சிறையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் விடுவிக்க வேண்டும்." 


அரசன் அதற்குச் சம்மதித்தான். தன் தோழர்களைக் காப்பதற்காக அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அரசனின் நெற்றியில் முத்தமிட்டார்கள். அனைவரும் விடுதலையாகினார்கள்.


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாராட்டுமதீனா திரும்பிய அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். "அப்துல்லாஹ்வின் நெற்றியில் முத்தமிடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். நானே அதைத் தொடங்கி வைக்கிறேன்" என்று கூறி, எழுந்து சென்று அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.


நூல் ஆதாரங்கள்: ஸியரு அஃலாமின் நுபலா (Siyar A'lam al-Nubala - இமாம் தஹபி).

அல்-இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா (Al-Isaba - இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி).

தாரீக் அல்-இஸ்லாம் (Tarikh al-Islam - இமாம் தஹபி).


இஸ்திகாமத்: உலகமே எதிர்த்து நின்றாலும், மரணமே கண்முன் தெரிந்தாலும் சத்தியத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது. தன் தன்மானத்தை விட, சக முஸ்லிம் கைதிகளின் விடுதலை முக்கியம் என்று கருதிய அவரின் பெருந்தன்மை.

அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்

இஸ்திகாமத் என்பது ஒரு செயலைத் தொடர்ச்சியாகச் செய்வதைக் குறிக்கும்:

أَحَبُّ الأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ

"அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எதுவெனில், அது குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாக (உறுதியுடன்) செய்யப்படுவதாகும்." நூல்: புகாரி

யார் இன்று கஃபாவில் குர்ஆனை ஓதுவது ?

ஒருநாள் நபித்தோழர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசினார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் இதுவரை இந்த குர்ஆனைப் பகிரங்கமாக ஓதக் கேட்டதில்லை. யாராவது ஒருவர் முன்வந்து அவர்களுக்கு முன்னால் இதனை ஓதிக் காட்டத் தயாரா?" என்று கேட்டனர்.

அப்போது மெலிந்த தேகம் கொண்ட இளைஞரான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு எழுந்து, "நான் தயாராக இருக்கிறேன்" என்றார். மற்ற சஹாபாக்கள், "வேண்டாம், அவர்கள் உன்னைத் தாக்கக்கூடும்; உன்னைப் பாதுகாக்கப் பலமான கோத்திரம் உள்ள ஒருவர் போவதே நலம்" என்று தடுத்தனர். ஆனால் இப்னு மஸ்ஊத் (ரலி) உறுதியாக, "என்னை விட்டுவிடுங்கள், அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.


மறுநாள் நண்பகல் வேளையில், குறைஷிகளின் தலைவர்கள் கஃபாவைச் சுற்றி அமர்ந்திருந்தபோது இப்னு மஸ்ஊத் (ரலி) அங்கே சென்றார். 'மகாமு இப்ராஹீம்' அருகே நின்று கொண்டு, மிக அழகான குரலில் ஸூரத்துர் ரஹ்மானை ஓதத் தொடங்கினார்:

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ. الرَّحْمَٰنُ. عَلَّمَ الْقُرْآنَ

(அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்... அந்த ரஹ்மான், அவனே குர்ஆனைக் கற்றுக்கொடுத்தான்...)


குறைஷிகள் திகைத்துப் போனார்கள். "இவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான்? முஹம்மது நபி கொண்டு வந்த வசனங்களையா ஓதுகிறான்?" என்று கத்தினார்கள். ஆத்திரமடைந்த அவர்கள், இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் முகத்தில் பலமாக அடிக்கத் தொடங்கினார்கள். அபூ ஜஹ்ல் அவர்களின் முகத்தில் அடிக்க அதில் அவர்களின் காது கிழிந்து ரத்தம் வழிந்த போதிலும், இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதுவதை நிறுத்தவில்லை. தான் ஓத நினைத்த பகுதியை முழுமையாக முடிக்கும் வரை அந்த அடியைத் தாங்கிக் கொண்டு நின்றார்கள்.


இஸ்திகாமத்தின் வெளிப்பாடு ரத்தம் தோய்ந்த முகத்துடன் தோழர்களிடம் திரும்பிய இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டு சஹாபாக்கள் வருத்தப்பட்டனர். "நாங்கள் பயந்தது இதுதான்" என்றனர். ஆனால் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பதில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை போல இருந்தது.


"அல்லாஹ்வின் எதிரிகளான அவர்கள், இன்றைய தினத்தை விட இவ்வளவு அற்பமாக எனக்குத் தெரிந்ததே இல்லை. நீங்கள் விரும்பினால், நாளைக்கும் நான் இதே போன்று கஃபாவிற்குச் சென்று குர்ஆனை ஓதுவேன்!"

நூல்:ஸீரத் இப்னு ஹிஷாம் (Seerat Ibn Hisham - 


மெலிந்த தேகம் கொண்டவராக இருந்தாலும், ஈமான் தந்த வலிமையால் மாபெரும் தலைவர்களை எதிர்த்து நின்றார். தன் உடல் காயப்படுவதை விட, சத்திய வசனங்கள் மக்களின் காதுகளில் விழுவது முக்கியம் என்று கருதினார்கள்.


முதல் முறையே அடி விழுந்தும், மீண்டும் அதே செயலைச் செய்யத் துணிந்த அந்த உறுதிதான் இஸ்திகாமத்தின் அடையாளம்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வளவு மெலிந்தவர் தெரியுமா? ஒருமுறை அவர்கள் ஒரு மரத்தில் ஏறும்போது அவர்களின் மெலிந்த கால்களைப் பார்த்து சிலர் சிரித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "மறுமையில் மீஸான் தராசில் இவருடைய கால்கள் உஹுத் மலையை விட கனமானவை" என்று கூறினார்கள்.

அப்படி மெலிந்தவராக இருந்தாலும் மார்க்கத்தை பேணிக்காக்க இஸ்திகாமத்தோடு உறுதியோடு இருந்தார்கள்.


இப்படி உறுதியாக இருப்பவர்களிடம் மலக்குகள் வருவார்கள் என்பதற்கு மூன்று கட்டங்கள் கூறப்படுகின்றன:


மரணம் உயிர் பிரியும் நேரத்தில் ஏற்படும் பயத்தைப் போக்க மலக்குகள் வருவார்கள்.

மண்ணறை அங்கே ஏற்படும் தனிமையையும் அச்சத்தையும் போக்க வருவார்கள்.

மறுமையில் எழுப்பப்படும் நாளில் பாதுகாப்பளிப்பார்கள்.


வானவர்கள் மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறார்கள்:


أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُواوَأَبْشِرُوا


பயப்படாதீர்கள்: நீங்கள் சந்திக்கவிருக்கும் மறுமையைப் பற்றி அச்சம் கொள்ளாதீர்கள்.


கவலைப்படாதீர்கள்: நீங்கள் உலகில் விட்டுச் செல்லும் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து கவலைப்படாதீர்கள் (நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம்).


நற்செய்தி பெறுங்கள்: உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் இதோ தயார் நிலையில் உள்ளது.


பயம் (அல்-கவ்ஃப் - Khawf)பயம் என்பது 'எதிர்காலத்தைப்' பற்றியது.


இனிமேல் நடக்கப்போகும் ஒரு விஷயம் தனக்குத் தீங்காக முடிந்துவிடுமோ என்ற அச்சமே பயம். உதாரணமாக:-

"மரணத்திற்குப் பின் என் நிலை என்னவாகும்?"

"மறுமையில் நான் தண்டிக்கப்படுவேனா?"

"என் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?"

மலக்குகளின் ஆறுதல்: "நீங்கள் சந்திக்கப் போகும் மறுமையைப் பற்றியோ, அல்லாஹ்வின் விசாரணையைப் பற்றியோ பயப்படாதீர்கள். அல்லாஹ் உங்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறான்" என்று அவர்கள் எதிர்கால அச்சத்தைப் போக்குகிறார்கள்.


கவலை (அல்-ஹுஸ்ன் - Huzn) என்பது 'கடந்த காலத்தைப்' பற்றியது அல்லது 'விட்டுச் சென்றவைகளைப்' பற்றியது.

ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு கசப்பான சம்பவம் அல்லது நாம் இழந்துவிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்து வருந்துவது 'ஹுஸ்ன்' எனப்படும்.உதாரணம்:- "நான் செய்த பாவங்களை நினைத்து வருந்துவது."

"உலகில் நான் விட்டுச் செல்லும் என் மனைவி, பிள்ளைகள், சொத்துக்கள் என்னவாகும் என்று வருந்துவது."

"இழந்த இளமையையோ அல்லது வாய்ப்பையோ நினைத்து ஏங்குவது."

மலக்குகளின் ஆறுதல்: "நீங்கள் உலகில் விட்டுச் சென்ற எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்கள் குடும்பத்தை அல்லாஹ் பாதுகாப்பான், உங்கள் பாவங்களை அவன் மறைத்துவிட்டான்" என்று அவர்கள் கடந்த காலச் சுமையைக் குறைக்கிறார்கள்.


ஏன் இந்த இரண்டுமே முஃமினுக்குத் தேவையில்லை?

ஒரு உண்மையான முஃமின் (நம்பிக்கையாளர்) 'இஸ்திகாமத்' எனும் உறுதியோடு இருக்கும்போது:

அவன் தன் எதிர்காலத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவதால் அவனுக்கு பயம் இருப்பதில்லை.

நடந்தவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடந்தது என்று ஏற்றுக்கொள்வதால் அவனுக்கு கவலை இருப்பதில்லை.

இதனால்தான் சுவனவாசிகளின் பண்பைச் சொல்லும்போது அல்லாஹ், 


 مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏

எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:62)


உளவியல் ரீதியான ஒரு உண்மை:


மனித மன அழுத்தம் (Stress) உருவாவதே இந்த இரண்டு விஷயங்களால்தான். ஒன்று, 

முடிந்துபோனதை நினைத்து வருந்துவது (Depression); அல்லது நடக்கப்போவதை நினைத்துப் பதற்றமடைவது (Anxiety). குர்ஆன் இந்த இரண்டு நோய்களுக்கும் ஒரே வசனத்தில் (அள்ளா தகாஃபூ வலா தஹ்ஸனூ) மருந்தளிக்கிறது.


இஸ்திகாமத் (உறுதி) இருந்தால் மட்டுமே இந்த மன அமைதி கிடைக்கும். 


இஸ்திகாமத் வருவதற்கு நாம் செய்ய வேண்டிய பயிற்சி 


தினமும் 10 நிமிடம் குர்ஆன் ஓதுவது, அல்லது உறங்கச் செல்லும் முன் 2 ரக்அத்கள் தொழுவது போன்ற ஒரு சிறிய நன்மையை ஒருநாள் கூட விடாமல் தொடர்ந்து செய்யுங்கள். இந்தத் 'தொடர்ச்சி' தான் மனதிற்கு உறுதியைத் தரும்.


வீணான விவாதங்கள், புறம் பேசுதல், பொய்யான புகழ்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள். "நல்லதைப் பேசுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்" என்ற நபிமொழியைத் தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். நாவைக் கட்டுப்படுத்துபவன் தன் உள்ளத்தைக் கட்டுப்படுத்துகிறான்.


தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். ஒரு வேலையில் இருக்கும்போது பாங்கு சத்தம் கேட்டால், அந்த வேலையை ஒத்திவைத்துவிட்டு இறைவனை நோக்கிச் செல்வது நம்முடைய 'இஸ்திகாமத்'திற்கு ஒரு மிகப்பெரிய உடற்பயிற்சி போன்றது.


தினமும் உங்கள் துஆவில் இந்த முக்கியமான துஆவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்:

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

"(உள்ளங்களை மாற்றுபவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைக்கச் செய்வாயாக!)


அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிக்கடி ஓதக்கூடிய பிரார்த்தனையாக இது இருந்தது. நான் அவரிடம், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஏன் இந்த துஆவை இவ்வளவு அதிகமாக ஓதுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்:

"ஆதமுடைய மகனின் உள்ளம் அல்லாஹ்வின் விரல்களில் இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கிறது. அவன் நாடினால் அதை (நேர்வழியில்) நிலைநிறுத்துகிறான்; அவன் நாடினால் அதை (தடம் புரளச் செய்து) சாய்த்துவிடுகிறான்." நூல்: திர்மிதி


ஈமான் (நம்பிக்கை) என்பது ஒரு விதையைப் போன்றது என்றால், இஸ்திகாமத் (உறுதிப்பாடு) என்பது அந்த விதை விருட்சமாக வளர்ந்து பலன் தருவதற்குத் தேவையான நீர் மற்றும் சூரிய ஒளி போன்றது. நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான்:

"வெற்றி என்பது வெறும் நம்பிக்கையில் மட்டும் இல்லை; அந்த நம்பிக்கையில் இறுதி மூச்சு வரை நிலைத்திருப்பதில்தான் இருக்கிறது.”


யா அல்லாஹ் எங்கள் ஆயுளின் இறுதிப் பகுதியை மிகச் சிறந்ததாகவும், எங்கள் செயல்களில் இறுதியை மிகச் சிறந்ததாகவும், உன்னைச் சந்திக்கும் நாளை எங்கள் நாட்களிலேயே மிகச் சிறந்த நாளாகவும் ஆக்குவாயாக!)


ஒரு முஃமினின் வெற்றியே அவனது இறுதி முடிவில்தான் (காதீமா) இருக்கிறது. " அல்லாஹ்" நம் முடிவை சிறந்த முடிவாக ஆக்குவானாக.

யா அல்லாஹ் மார்க்கத்தில் இஸ்திகாமத் (உறுதி) ஆக இருக்கச் செய்வாயாக.


யா அல்லாஹ் எங்கள் ஈமானையும், எங்கள் குடும்பத்தாரின் ஈமானையும் இறுதிவரை பாதுகாப்பானாக. ஆமீன். யா ரப்பல் ஆலமீன்.



தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக