வியாழன், 5 மார்ச், 2026

ஹுத் ஹுத்தின் தூது ”

 


‌தராவீஹ் பயான் பிறை – 16


தலைப்பு : “ ஹுத் ஹுத்தின் தூது ”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد



وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏

அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.(அல்குர்ஆன் : 27:20)



இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸூரத்துன் நம்ல் அத்தியாயத்தில் முக்கியமான வசனங்களில் ஒன்று தான் ஹுத் ஹுத் பறவை பற்றிய வரலாற்று நிகழ்வுகளை கூறும் 20 இருந்து 30 வரை உள்ள வசனங்கள் ஆகும்.


வரலாற்று தகவல்கள் 


நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், ஹுத் ஹுத் பறவைக்கும் இடையே நடந்த அந்த உரையாடல் குர்ஆனில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு பேரரசருக்கும், ஒரு சிறிய பறவைக்கும் இடையே நடந்த இந்தத் தர்க்கம், அறிவும் உண்மையும் ஒருவரிடம் மட்டுமே இருப்பதில்லை என்பதை உலகுக்கு உணர்த்துகிறது.


ஹுத்ஹுத் பறவையை இன்று காணவில்லையே என்று தேடிகொண்டிருந்த சுலைமான் (அலை) அவர்கள் அது வருவதில் தாமதமானதால் அப்பறவை மீது கோபம் கொண்டார்கள்.


நீண்ட நேரம் கழித்து வந்த ஹுத் ஹுத் பறவை, ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கோபத்தைக் கண்டதும் சற்றும் அஞ்சாமல், தான் கொண்டு வந்த செய்தியின் முக்கியத்துவத்தை முதலில் முன்வைத்தது. 

ஹுத் ஹுத்: "உமக்குத் தெரியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்திருக்கிறேன். 'சபா' தேசத்திலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன்." (அல்குர்ஆன் 27:22)


இது ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கவனத்தை உடனே ஈர்த்தது. ஒரு மாபெரும் மன்னரிடம், "உமக்குத் தெரியாதது எனக்குத் தெரியும்" என்று சொன்னது அதன் துணிச்சலைக் காட்டுகிறது.

தொடர்ந்து அந்தப் பறவை தான் கண்ட அரசியலையும், ஆன்மீக நிலையையும் விளக்கியது: "நிச்சயமாக நான் அங்கு ஒரு பெண்ணைக் கண்டேன்; அவர் அவர்களை ஆட்சி செய்கிறார்; அவருக்கு (தேவையான) ஒவ்வொன்றும் வழங்கப்பட்டுள்ளது; அவருக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் இருக்கிறது." (அல்குர்ஆன் 27:23)


ஷிர்க்கைக் கண்டு எழுந்த ஆதங்கம்

பறவை செய்திகளை மட்டும் சொல்லாமல், அங்கு நடந்த தவறான கொள்கையையும் சுட்டிக்காட்டியது: "அவரும் அவருடைய சமூகத்தாரும் அல்லாஹ்வையன்றிச் சூரியனுக்கு ஸஜ்தா செய்வதை நான் கண்டேன்... வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸஜ்தா செய்ய வேண்டாமா?" (அல்குர்ஆன் 27:24-25)


ஒரு பறவை "தவ்ஹீது" (ஏகத்துவம்) குறித்து இவ்வளவு ஆழமாகப் பேசியது ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நிதானமான பதில்

பறவை சொன்னதைக் கேட்டதும் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு உடனே நம்பிவிடவில்லை. ஒரு தலைவனுக்குரிய நிதானத்துடன் பதிலளித்தார்கள்: ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்): "நீ உண்மையைச் சொல்கிறாயா அல்லது பொய்யர்களில் ஒருவனாக இருக்கிறாயா என்று நாம் (விரைவில்) கவனிப்போம்." (அல்குர்ஆன் 27:27)


ஸுலைமான் (அலை) அவர்கள் கொடுத்த கடிதத்தை தனது அலகில் கவ்விக்கொண்டு, சுமார் 1500 முதல் 2000 கி.மீ தூரம் பறந்து சபா தேசத்தை (ஏமன்) சென்றடைந்தது ஹுத் ஹுத்.


பில்கிஸ் ராணியின் அரண்மனை சாதாரணமானது அல்ல; அது பலத்த பாதுகாப்பு கொண்டது. ஆனால், ஒரு சிறிய பறவையை யார் தடுப்பார்?

ராணி தனது அந்தப்புரத்தில் (தனியார் அறையில்) ஆழ்ந்த உறக்கத்திலோ அல்லது ஓய்விலோ இருந்தபோது, ஹுத் ஹுத் ஜன்னல் வழியாக சத்தமின்றி உள்ளே நுழைந்தது.


அது கடிதத்தை ராணியின் மார்பின் மீது அல்லது அவருக்கு மிக அருகில் போட்டுவிட்டு, ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கட்டளையிட்டது போலவே சற்றுத் தள்ளி ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து கவனித்தது.


கண்விழித்துப் பார்த்த ராணிக்கு அதிர்ச்சி! பாதுகாப்பான அறைக்குள் இந்தக் கடிதம் எப்படி வந்தது? கடிதத்தைப் பிரித்துப் பார்த்த அவருக்கு அதன் முதல் வரியே அதன் கண்ணியத்தைப் புரிய வைத்தது:


"இன்னஹூ மின் ஸுலைமான, வ இன்னஹூ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..."

(நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; மேலும் இது அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறது...)

ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சும்மா கடிதத்தைக் கொடுத்து அனுப்பவில்லை. "அவர்களை விட்டும் சற்று விலகி இருந்து, அவர்கள் என்ன பதில் பேசுகிறார்கள் என்று கவனி" என்று சொல்லியிருந்தார்கள்.


 ராணி தனது அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். "நமக்கு ஒரு கண்ணியமான கடிதம் வந்திருக்கிறது, இதற்கு என்ன முடிவு எடுக்கலாம்?" என்று கேட்டார்கள்.


அமைச்சர்கள் போர் புரியலாம் என்று ஆக்ரோஷமாகப் பேசினார்கள். ஆனால் ராணி பில்கிஸ் நிதானமாகச் சிந்தித்து, "அரசர்கள் ஒரு நாட்டிற்குள் நுழைந்தால் அதைச் சீரழித்து விடுவார்கள்... எனவே முதலில் பரிசுகளை அனுப்பி அவரைச் சோதிப்போம்" என்று கூறினார்கள்.


இந்த உரையாடல்கள் அனைத்தையும் ஹுத் ஹுத் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.


அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஹுத் ஹுத், மின்னல் வேகத்தில் மீண்டும் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து, சபா தேசத்தின் ராணியும் அமைச்சர்களும் எடுத்த முடிவைத் துல்லியமாகத் தெரிவித்தது.


பில்கிஸ் ராணி அனுப்பிய பரிசுகளும், அதற்கு நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அளித்த பதிலும்

பில்கிஸ் ராணி மிகவும் புத்திசாலி. அவர்கள் நினைத்தார்கள்: "இந்த ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் என்பவர் வெறும் உலகாயுத லாபத்திற்காக ஆசைப்படும் ஒரு மன்னராக இருந்தால், நான் அனுப்பும் பரிசுகளைக் கண்டு மகிழ்ந்து போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவார். ஒருவேளை அவர்கள் உண்மையான இறைத்தூதராக இருந்தால், இந்தப் பரிசுகள் அவரை அசைக்காது."


அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட செங்கற்கள், விலையுயர்ந்த வைரங்கள், முத்துக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அடிமைகளை மிகப் பிரம்மாண்டமான முறையில் அனுப்பி வைத்தார்கள்.


பில்கிஸ் ராணியின் தூதுக்குழுவினர் இந்தப் பரிசுகளுடன் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சபைக்கு வந்தபோது, அவர்கள் கண்ட காட்சி அவர்களை மிரள வைத்தது. ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மாளிகையின் தரைப்பகுதியே தங்கத்தால் மின்னியது (அவரது அதிகாரம் அந்த அளவுக்குப் பிரம்மாண்டமாக இருந்தது).


ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அந்தப் பரிசுகளைப் பார்த்துச் சொன்னார்கள்:

"நீங்கள் எனக்கு செல்வத்தைக் கொண்டு உதவி செய்கிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பவை (நபித்துவம் மற்றும் அதிகாரம்), அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதை விட மிகச் சிறந்தவை. மாறாக, உங்கள் பரிசுகளைக் கண்டு நீங்களே மகிழ்ச்சியடைந்து கொள்ளுங்கள்!" (அல்குர்ஆன் 27:36)


அதாவது, "நான் செல்வத்திற்காக ஆசைப்படுபவன் அல்ல, நீங்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதே என் நோக்கம்" என்பதைத் தெளிவாக உணர்த்தினார்.


இந்த இடத்தில்தான் ஹுத் ஹுத் பறவையின் பணி முழுமை பெறுகிறது.

 * முதலில் ஹுத் ஹுத் சொன்ன தகவல் உண்மை என்பது உறுதியானது.

 * கடிதத்தின் நோக்கம் (அழைப்புப்பணி) வெற்றியடைந்தது.

 * ராணிக்கு ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வலிமையும், நேர்மையும் புரிந்தது.


தனது பரிசுகள் நிராகரிக்கப்பட்டதை அறிந்த பில்கிஸ் ராணி, ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு சாதாரண மன்னர் அல்ல என்பதைப் புரிந்து கொண்டார்கள். "நேரில் சென்று அவரைச் சந்திப்பதே முறை" என்று முடிவெடுத்து தனது படைகளுடன் பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்டார்கள்.


இந்த நிகழ்ச்சி நமக்கு பல படிப்பினைகளை தருகின்றன 


விழிப்புணர்வு (Observation & Concern)

ஒரு பறவைக்குத் தன் உணவைத் தேடுவது, கூடு கட்டுவது மட்டுமே இயல்பான வேலை. ஆனால் ஹுத் ஹுத் பறவை சபா தேசத்திற்குச் சென்றபோது, அங்குள்ள மக்கள் அல்லாஹ்வை வணங்காமல் சூரியனை வணங்குவதைக் கண்டது.


ஒரு சிறிய பறவையாக இருந்தாலும், "படைத்தவனை விட்டுவிட்டு படைப்பையா வணங்குவது?" என்ற கவலை (Concern) அதற்கு ஏற்பட்டது.

தஃவாப் பணிக்கு மிக முக்கியமான தேவை "சுற்றியுள்ள தவறுகளைக் கண்டு வருந்துவது". அந்தப் பண்பு இந்தப் பறவையிடம் இருந்தது.


துல்லியமான தகவல் (Precision in Reporting) அது ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து சொல்லும்போது, மொட்டையாகச் சொல்லவில்லை. மிகத் தெளிவாகச் சொன்னது:


"நிச்சயமாக நான் அங்கு ஒரு பெண்ணைக் கண்டேன்; அவர் அவர்களை ஆட்சி செய்கிறார்; அவருக்கு ஒவ்வொன்றும் வழங்கப்பட்டுள்ளது; அவருக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் இருக்கிறது." (குர்ஆன் 27:23)


ஒரு தஃவா செய்பவர் தான் சொல்ல வரும் விஷயத்தில் எவ்வளவு தெளிவோடும், ஆதாரத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்கு இது உதாரணம்.


பறவை பேசிய வார்த்தைகள் ஆச்சரியமானவை:

"வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸஜ்தா செய்ய வேண்டாமா?" (குர்ஆன் 27:25)


ஒரு பறவைக்கு அல்லாஹ்வைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் இவ்வளவு ஆழமான அறிவு (Knowledge) இருந்தது என்பது நமக்கு ஒரு பெரிய பாடம். தஃவா என்பது வெறும் பேச்சு அல்ல, அது அல்லாஹ்வின் மகத்துவத்தை உள்ளத்தில் சுமப்பதாகும்.


ஹுத் ஹுத் செய்த அந்தச் சிறிய முயற்சி (செய்தி கொண்டு வந்தது) பின்னாளில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?

ஸுலைமான் (அலை) கடிதம் அனுப்பினார்கள்.பில்கிஸ் ராணி இஸ்லாத்தை ஏற்றார்.அந்த முழு சபா தேசமே நேர்வழி பெற்றது.


ஒரு சிறிய பறவை நினைத்ததாலேயே ஒரு நாடு இஸ்லாத்திற்கு வந்தது என்றால், ஆறறிவுள்ள மனிதர்கள் நாம் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்!

ஒரு சிறிய பறவையால் ஒரு தேசத்தை மாற்ற முடியும் எனில், ஒரு சாதாரண மனிதராலும் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியும்.




உறுதியான செய்தி

இந்த உரையாடலில் ஹுத் ஹுத் பறவை தான் கூறவந்த செய்தியை கூற ஆரம்பிக்கும் பொழுதே உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். என்றது, எனினும் அதுகூறிய செய்திகேட்டு சுலைமான் (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகளை பாருங்கள் “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” இதில் தான் நமக்கு மாபெரும் படிப்பினை உள்ளது


எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை நிலை அறியாமல் முடிவுவெடுத்துவிட கூடாது,என்பதே அப்படிபினையாகும்.

இக்காலத்தில் பல செய்திகள் நம் காதுகளில் வந்து விழும் போதும்,


சமூகவளைதலங்களில்சில செய்திகள் பரப்ப படுகிற போதும் சர்வ சாதாரணமாக அவைகளை சற்றும் ஆராயாமல் அதை நாம் பிறருக்கு அதை பகிர்கிறோம். அதனால் இந்த சமூகத்தில் ஏற்பட போகும் விளைவுகளை யாரும் துளியும் சிந்திபதில்லை


பகிரப்படும் பல செய்திகள் ஊர்ஜீதபடுத்தபடுத்த படாதவைகளே ஆகும்.


பகிர்வு பொத்தானை அழுத்தும் முன்பு அச்செய்தியின் உண்மை நிலை என்ன சற்று ஆராய்ந்தால் பல வதந்திகள் தவிர்க்கபடும் .


மேலும் ஒரு சம்பவம் நபிகளாரின் காலத்தில் நடந்தது.


ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு என்றொரு நபி தோழர் ஒரு கிராமத்திலிருந்து வருகிறார்கள்.நல்ல குணமுடையவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரங்களில் இஸ்லாத்தை ஏற்று தான்னுடைய செல்வத்திலிருந்து ஜகாத் தொகையை கணக்கிட்டு நபிகாளாரிடம் ஒப்படைக்கிறார்.


பிறகு அவர் தன் கிராமம் சென்றார். பிறகு அவரின் போதனையால் அந்த கிராமமே இஸ்லாத்தை தழுவியது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கிராமத்தில் யாரெல்லாம் இஸ்லாத்தை தழுவியுல்லார்களோ அவர்களிடம்

ஜகாத் தொகையை வசூளிக்க வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற சஹாபியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பினார்கள்.


அவர்கள் வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் அல்லாஹுவின் தூதர் அனுப்பிய தூதர் வருகிறார் வாருங்கள் வரவேற்போம்” என்று அந்த கிராம மக்கள் அனைவரும் அந்த ஊர் நுழைவு வாயிலில் தங்களின் ஜகாத் தொகைகளை கையில் வைத்துகொண்டு குழுவினர்கள்.


அக்கிராம மக்களின் பெரும் கூட்டத்தை பார்த்த வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் 

“நமக்கு எதிராக இம்மக்கள் போர் தொடுக்க அல்லவா வந்துள்ளனர்” என்று எண்ணிக்கொண்டு அவர்களின் அருகில் கூட நெருங்காமல் அப்படியே திரும்பிவிடுகிறார்.


நபிகளாரிடம் வந்து “அந்த கிராமம் நமக்கு எதிராக போர் தொடுக்க நின்று கொண்டுள்ளனர் என்று தவறான செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முன்வைக்கிறார் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் நல்ல குணமுடையவர்,அந்த கிராம மக்கள் பற்றியும் நல்லவிதமாக தான் பேசப்படுகிறது, என்று எண்ணினார்கள் ,


எனினும் வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியா செய்தியால் ஹாலித் இப்னு வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அப்போதைய இஸ்லாமிய படைத்தளபதி ஆவர்கள். அவர்களை அழைத்து அந்த கிராமத்திற்கு படையோடு செல்லுங்கள்.ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களின் உண்மையான நிலை அறியாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் அவர்களாக தாக்குதல் நடத்தினால் திருப்பி சண்டையிருங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.


ஹாலித் இப்னு வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தலைமையில் பத்தாயிரம் பேர்கொண்ட படை அந்த கிராமம் நோக்கி செல்கிறது.

அந்த கிராம மக்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவியுள்ள செய்தி அறிந்த ஹாலித் இப்னு வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபிகளுக்கு செய்தி அனுப்பினார்கள்.


“வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொண்டுவந்த செய்தி தவறானது இங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களேவலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழையவே இல்லை” என்ற செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுப்பினர்கள்


இப்படி பட்ட சம்பவங்கள் நமக்கு பல படிப்பினைகளை கூறுகிறது.இது சிலருக்கு வேடிக்கையாக நடந்துவிட்டது என எண்ணலாம், ஆனால் வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்று உண்மை என நம்பி அவர்களின் மீது போர் தொடுத்திருந்தால் ,இஸ்லாமிய வராலற்றில் ஒரு மாபெரும்

பிழை நிகழ்திருக்கும் .


ஒருவர் கூறும் ஊர்ஜிதமற்ற செய்தியால் ஒரு போரே மூண்டிருக்கும் .

இப்போதிய காலகட்டத்தில் பல சர்வதேச செய்தியாலனாலும் சரி இஸ்லாமிய செய்திகலானாலும்,நம் ஊரிலேயே நடக்கும் செய்திகள் எவையானாலும் அவைகள்ஆராய படவேண்டும் .


கூறவது யாராக இருந்தாலும் கூறப்படும் செய்தி அதன் தரம் பற்றி ஆராய வேண்டும் . வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரப்பப்படும் முன் கவனிக்க வேண்டும்.




வாய்ப்பைப் பயன்படுத்துதல்: 

ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தண்ணீர் தேடியபோது, தான் பார்த்த அந்தத் தஃவா விஷயத்தைச் சொல்ல ஹுத் ஹுத் தயங்கவில்லை. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியது.


ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸஹாபாக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு நற்செய்தியைச் சொன்னார்கள்:

"எனது உம்மத்தில் (சமுதாயத்தில்) 70,000 பேர் எந்தவிதக் கணக்கு விசாரணையும் இன்றி நேரடியாகச் சொர்க்கம் செல்வார்கள்" என்று கூறினார்கள்.

இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் அங்கிருந்த அனைவரும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். "யார் அந்த பாக்கியசாலிகள்?" என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் யோசித்துக் கொண்டிருந்தனர்.


உக்காஷா (ரலியல்லாஹு அன்ஹு) யின் மின்னல் வேகச் செயல்

அந்தச் சபையில் எத்தனையோ மூத்த ஸஹாபாக்கள் இருந்தனர். ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த வாக்கியத்தை முடித்த அடுத்த நொடியே, எதைப் பற்றியும் யோசிக்காமல் ஹலரத் உக்காஷா இப்னு மிஹ்சன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து நின்றார்கள்.


அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் மிகுந்த பணிவோடும் ஆசையோடும் கேட்டார்கள்:

"யா ரசூலுல்லாஹ்! அந்த எழுபதாயிரம் பேரில் ஒருவனாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்!"

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் புன்னகைத்துவிட்டுச் சொன்னார்கள்: "உக்காஷாவே! நீங்கள் அவர்களில் ஒருவர் தான்!"

தவறிய மற்றவர்களின் வாய்ப்பு

உக்காஷா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் அங்கீகாரத்தைக் கண்டவுடன், மற்றொரு ஸஹாபி உடனே எழுந்து, "யா ரசூலுல்லாஹ்! எனக்காகவும் துஆ செய்யுங்கள்" என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

"உக்காஷா உங்களை முந்திவிட்டார்." அதாவது, அந்த வாய்ப்பு திறந்திருந்த அந்த ஒரு நொடியில் உக்காஷா (ரலியல்லாஹு அன்ஹு) காட்டிய வேகம் அவருக்கு அந்தப் பெரும் பதவியைப் பெற்றுத் தந்தது. 


ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் கூட அந்த வாய்ப்பு நழுவியிருக்கலாம்.


கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


 "உண்மை பேசும் துணிச்சல்" (Courage to speak the truth) ஈடிணையற்றது.


நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தார்கள். "ஹுத் ஹுத் எங்கே? அது வராவிட்டால் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன் அல்லது அறுத்துவிடுவேன்" என்று எச்சரித்திருந்தார்கள். அத்தகைய ஒரு மாபெரும் மன்னர் மற்றும் நபியின் முன்னிலையில், ஒரு சிறிய பறவை வந்து சொன்ன அந்த முதல் வார்த்தையே அதன் தைரியத்தைப் பறைசாற்றுகிறது: "உமக்குத் தெரியாததை நான் அறிந்து வந்திருக்கிறேன்"குர்ஆன் அந்த வார்த்தையை இப்படிப் பதிவு செய்கிறது: "அஹத்த்து பிமா லம் துஹித் பிஹீ..." (பொருள்: நீர் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்திருக்கிறேன்.) (அல்குர்ஆன் 27:22)

 

உலகிலேயே மிகப்பெரிய அறிவாளியாகவும், ஜின்கள், மனிதர்கள், பறவைகளின் மொழிகளை அறிந்தவராகவும் இருந்த ஒரு பேரரசரிடம் போய், ஒரு சிறிய பறவை "உங்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியும்" என்று சொல்வது சாதாரணமான விஷயம் அல்ல. இது அந்தப் பறவைக்குத் தன் செய்தியின் மீது இருந்த உண்மைத் தன்மையையும் (Confidence), அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது.


தவறு செய்தவர்கள் வழக்கமாகத் தப்பிக்கப் பொய் சொல்வார்கள் அல்லது புகழ்ச்சி பாடுவார்கள். ஆனால் ஹுத் ஹுத்:

 * தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் பொய் சொல்லவில்லை.

 * பயந்து நடுங்கி உண்மையை மறைக்கவில்லை.

 * மாறாக, தான் கண்ட அந்த ஷிர்க் (இணைவைப்பு) எனும் மாபெரும் பாவத்தைப் பற்றி மிக ஆணித்தரமாகப் பேசியது.


அது வெறும் வதந்தியைச் சொல்லவில்லை. "நிச்சயமாக நான் கண்டேன்" (இன்னி வஜத்து) என்று அடித்துச் சொன்னது.

 * ஒரு பெண்ணை (பில்கிஸ் ராணி) கண்டேன்.

 * அவருக்குப் பெரும் சிம்மாசனம் இருப்பதைக் கண்டேன்.

 * அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டுச் சூரியனை வணங்குவதைக் கண்டேன்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் 100% உண்மையாக இருந்ததால், ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கோபம் தணிந்தது.

 *எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும், அவர்களிடம் உண்மையைச் சொல்லத் தயங்கக் கூடாது.

 * அறிவு ஒருவரிடம் மட்டுமே இல்லை: ஒரு பேரரசருக்குத் தெரியாத விஷயம் ஒரு சிறிய பறவைக்குத் தெரிந்திருக்கலாம். எனவே, சிறியவர்கள் சொல்லும் உண்மையான விஷயங்களையும் பெரியவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்கு ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் எதிர்வினை ஒரு பாடம். * உண்மை நம்மைக் காக்கும்: ஹுத் ஹுத் உண்மையைச் சொன்னதால் மரணத் தண்டனையிலிருந்து தப்பியது மட்டுமன்றி, ஒரு தேசமே நேர்வழி பெறக் காரணமாகவும் அமைந்தது.


ஸைத் இப்னு அர்கம்[ரலியல்லாஹு அன்ஹு] அவர்கள் அறிவித்தார்கள்;

 

ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கூறிவிட்டார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்த போது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை' என்று அவர்கள் சாதித்தார்கள்.

 

அப்போது இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை' என்று கூறினார்கள். அப்போது,

 

'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)' என்று கூறினார்கள். நூல்; புஹாரி 


உண்மை சொல்லும் போது எப்போதும் அதற்கு வெற்றி தான் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு ஆதாரம் அல்லாவே அதற்கு உறுதுணையாக இருப்பான்.

 

 "ஈமானியக் கவலை" (Spiritual Concern) எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த இலக்கணம்.

ஹுத் ஹுத் பறவை ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்து ஷிர்க்கைப் (இணைவைப்பை) பற்றிப் பேசிய விதம் குர்ஆனில் இவ்வாறு பதிவாகியுள்ளது:


 "அவர்களும் அவர்களுடைய சமூகத்தாரும் அல்லாஹ்வையன்றிச் சூரியனுக்கு ஸஜ்தா செய்வதை நான் கண்டேன்; ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை (நேர்) வழியிலிருந்தும் தடுத்துவிட்டான் - ஆகவே அவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள்." (அல்குர்ஆன் 27:24)


ஒரு பறவைக்குத் தீனி கிடைத்தால் போதும், தண்ணீர் கிடைத்தால் போதும் என்று அது இருந்திருக்கலாம். ஆனால், அந்தப் பறவைக்கு ஒரு தெளிவு இருந்தது:

 "வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்" (27:25) என்று அது அல்லாஹ்வைப் புகழ்ந்தது.


ஒரு தேசமே படைத்தவனை விட்டுவிட்டு, அவன் படைத்த ஒரு சூரியனை வணங்குவதைப் பார்த்ததும் அதற்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அவர்கள் செய்வது தவறு என்பதை அவர்கள் உணரவிடாமல் ஷைத்தான் தடுத்துவிட்டான் என்பதை ஒரு பறவை உணர்ந்து சொன்னது வியப்பிற்குரியது.


ஹுத் ஹுத் தனது பேச்சை முடிக்கும்போது ஒரு மாபெரும் உண்மையை உரக்கச் சொன்னது: "அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் மகத்தான அர்ஷுக்கு உடையவன்." (அல்குர்ஆன் 27:26)


ஒரு நாட்டில் அநியாயமோ அல்லது இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலோ நடப்பதைப் பார்க்கும்போது, "நமக்கு என்ன?" என்று ஒதுங்கிப் போகாமல், அதற்காகக் கவலைப்படுபவரே உண்மையான விசுவாசி.

உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் அல்லாஹ்வைத் துதிக்கிறது என்பதை இந்தப் பறவையின் பேச்சு உறுதிப்படுத்துகிறது. ஒரு பறவைக்கே "ஷிர்க்" என்பது பிடிக்கவில்லை எனில், மனிதர்களாகிய நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தான் கண்ட தவறைக் கண்டிக்கத் தனக்கு அதிகாரம் இல்லை என்றாலும், அதிகாரம் உள்ளவர்களிடம் (ஸுலைமான் நபியிடம்) அதைக் கொண்டு போய் சேர்த்தது. இதுவே தஃவாவின் அடிப்படை. ஒரு சிறிய பறவைக்கு இருந்த அந்த "ஈமானிய ரோஷம்" (Self-respect for Faith) இன்று நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதுதான் சிந்திக்க வேண்டிய விஷயம்.


யூதச் சிறுவன் மற்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வருகை

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் இருந்தபோது, அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்த ஒரு யூதச் சிறுவன் இருந்தான். ஒருமுறை அந்தச் சிறுவன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் இருப்பதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குத் தெரிய வந்தது.


தன் மீது அன்பாக இருந்த அந்தச் சிறுவனை நலம் விசாரிக்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நேரில் சென்றார்கள்.

அந்த கடைசி நிமிட உரையாடல்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்தச் சிறுவனின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டார்கள். அவனது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதைக் கண்ட அவர்கள், அவன் நரக நெருப்பிலிருந்து தப்ப வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள்.


அவனைப் பார்த்து மென்மையாகச் சொன்னார்கள்:

"மகனே! 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை) என்று சொல்!"

தந்தையின் அனுமதி

அந்தச் சிறுவன் தனது தந்தையின் முகத்தைப் பார்த்தான். அவன் ஒரு யூதராக இருந்ததால், தந்தை என்ன சொல்வாரோ என்ற தயக்கம் அவனிடம் இருந்தது. அவனது தந்தை, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நற்பண்புகளை அறிந்தவராக இருந்தார்கள்.

அவன் தந்தை சொன்னார்:

"அபுல் காஸிம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நட!"

ஈமானின் வெற்றி தந்தையின் அனுமதி கிடைத்தவுடன், அந்தச் சிறுவன் தயக்கமின்றி கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். அவன் கலிமாச் சொன்ன சில நிமிடங்களிலேயே அவனது உயிர் பிரிந்தது.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மகிழ்ச்சி

அந்த இடத்தை விட்டு வெளியே வரும்போது நபி (ஸல்) அவர்களின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. அவர்கள் கூறினார்கள்:

"நரக நெருப்பிலிருந்து அவனைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!”


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு யாரும் நரகத்திற்கு செல்லக்கூடாது என்று பேராசை அவர்களுக்கு இருந்தது அவர்களின் உம்மத்துக்கள் எல்லோரும் ஈமான் கொண்டும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு முழுமையாக இருந்தது. 


அந்த செயலை நாமும் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நான்கு உயிரினங்களைக் கொல்வதைத் தடுத்தார்கள் :-

 * எறும்பு * தேனீ * ஹுத் ஹுத் (Hoopoe) * ஸுரத் (Surad - ஒரு வகை பறவை) 

 (நூல்: அபூதாவூத் )


ஏன் இந்தத் தடை? (காரணங்கள்)

இஸ்லாமிய அறிஞர்கள் இந்தப் பறவையைக் கொல்லக்கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கும்போது ஹுத் ஹுத்தின் சிறப்புகளைப் பட்டியலிடுகிறார்கள்:

 * ஏகத்துவத் தூதுவர்: ஒரு மாபெரும் இறைத்தூதரின் (ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தூதுவராகச் செயல்பட்டு, ஒரு தேசமே நேர்வழி பெறக் காரணமாக இருந்ததால் இதற்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது.

 * உண்மை பேசும் பண்பு: உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும், மன்னரின் முன் உண்மையைச் சொன்ன அதன் தைரியம் போற்றத்தக்கது.

 * ஷிர்க்கிற்கு எதிரான போர்: அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கப்படுவதைக் கண்டு அது காட்டிய "ஈமானியக் கவலை" (Faithful concern) மனிதர்களுக்கே முன்மாதிரியாக இருக்கிறது.

மற்ற பறவைகளைப் போலவே இதுவும் இறைவனைத் துதிக்கும் பணியில் ஈடுபடுகிறது, அதிலும் குறிப்பாகத் தவ்ஹீதை (ஏகத்துவத்தை) நிலைநாட்ட உதவியது.

இன்றைய அறிவியலும் பாதுகாப்பும்

இன்று உலகளாவிய ரீதியில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் இந்தப் பறவையைப் பாதுகாக்கின்றன. இருப்பினும், 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் இதைப் பாதுகாக்கக் கட்டளையிட்டது அதன் தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது.

 * இந்தப் பறவைகள் விவசாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்பதன் மூலம் "இயற்கை விவசாயத் தோழனாக" விளங்குகின்றன.

 * இவற்றைக் கொல்லாமல் பாதுகாப்பது சூழலியல் சமநிலைக்கும் (Ecological Balance) அவசியமானது.


ஹுத்ஹுத் பறவை பற்றிய சில தகவல்கள் 


ஹுத் ஹுத் என்ற பெயரில் இப்பறவை சுலைமான் நபியவர்கள் காலத்திலிருந்தே திரிபுபடாமல் அழைக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவத்தை அல்லாஹ் நபியவர்களுக்குக் கூறியதிலிருந்து, அல்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக இப்பெயர் நிலைத்திருப்பதும் அற்புதம்தான். இதன் அறிவியற் பெயர் Upupa epops என்பதாகும். ஆங்கிலத்தில் “Hoopoe” என்றும் தமிழில் “கொண்டலாத்தி” என்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் Hoopoe என்ற இப்பெயர் வரக் காரணம் அதன் குரலெழுப்பும் சப்தம்தான். இவை சப்தமிடும்போது ஹுப்… ஹுப்… என்ற ஒலியே வெளிப்படும். இதனாலயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவியலில் விலங்கினங்களின் குரலொலியை வைத்துப் பெயரிடும் முறை Onomatopoetic எனப்படுகின்றது. தமிழில் கொண்டலாத்தி என்பதற்குக் காரணம் அது தன் தலைமேல் இருக்கும் கொண்டையை விரித்து நடனமாடுவதாலாகும்.


வாழிடப் பிரதேசங்கள்.


ஹுத் ஹுத் பறவைகள் ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் வாழ்கின்றன. இந்தியா மற்றும் இலங்கையில் இவற்றை காணலாம். பலஸ்தீன் நாட்டில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் தேசிய பறவையும் இதுதான். ஆறு, குளம், ஓடை, வயல், பள்ளத்தாக்கு போன்ற பிரதேசங்களில்தான் இவை வாசம் செய்கின்றன. காரணம் இந்த இடங்களில்தான் இவற்றுக்கு உணவைப் பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும். இங்கு அருகில் இருக்கும் மரங்களைத் தம் அழகினால் துளையிட்டு பொந்துகள் செய்து அவற்றினுள் கூடுகளை அமைத்து வாழ்கின்றன.


தோற்ற அமைப்பு


ஹுத் ஹுத் பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவை. பழுப்பு நிற உடலும் அதில் பளிச்சென்ற கருப்பு, வெள்ளை, சாம்பள் இறகுகளும் நீண்ட சற்று கீழ்நோக்கி வளைந்த அலகும் கொண்டது இப்பறவை. இதன் விஷேட அம்சமே தலையில் இருக்கும் கிரீடம் அல்லது விசிறி போன்ற சிறகுதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்கவைப்பதால் அவை கொண்டைபோன்ற தோற்றத்தை அளிக்கும். எனினும் எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. தேவைப்படின் விரிக்கும், இல்லாதவிடத்து மடித்துக்கொள்ளும். அப்படி கொண்டையோடு காணும்போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்போன்றே இருக்கும்.


ஹுத் ஹுத் பறவை தோற்றத்தில் அழகுபோன்றே அது பறந்து செல்லும் விதமும் அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும் பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும். இவற்றின் நீண்ட அலகைப் பார்த்து சிலர் இவற்றை மரங்கொத்தி என்று தவறாகக் நினைத்துவிடுகின்றனர். உண்மையில் இவை மரங்கொத்தி, மீன்கொத்தி வகையைச் சேர்ந்தவை என்றாலும் அவற்றிலிருந்து வேறுபட்டவை.


 வழ்க்கை முறை


இவை கூட்டாக வாழ்வதில்லை. தனியாகவே தென்படும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஆண் பெண் ஹுத் ஹுத்கள் ஒன்று சேரும். ஆண், பெண் இரு பறவைகளும் ஒரே தோற்றத்தைக் கொண்டவை. இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர்வதற்காக தனது தலையின் மீதுள்ள விசிறிபோன்ற கொண்டையை சிலிர்த்துக்கொண்டு, இறக்கையை விரித்துக்கொண்டு நடனமாடும். பின்பு இனை சேரும். அதன் பின் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து தமக்கான கூட்டைத் தெரிவுசெய்யும். உயரமான மரப் பொந்துகளிலோ, செங்குத்தான மேட்டுப் பகுதிகளிலோ துளைகளையிட்டு குப்பை கூழங்களால் அதனுல் கூட்டை அமைக்கும். எனவே இவற்றின் கூடு துர்நாற்றம் வீசக்கூடியதாகவே இருக்கும். 


வருடத்தில் இருமுறை பெண்பறவை குஞ்சு பொறிக்கும். ஒரு தடவையில் ஏழு முட்டைகளையிடும். முட்டைகளைத் தொடர்ந்தும் தாய்ப்பறவையே அடைகாக்கும். அப்போது அதற்கான உணவை தந்தைப் பறவையே கொண்டுவந்து கொடுக்கும். மூன்று வாரங்களில் முட்டை பொறிந்து குஞ்சுகள் வெளிவரும். இனி ஆண் பறவை குஞ்சுப் பறவைகளுக்கும் சேர்த்து உணவு கொண்டுவரும். இவற்றின் உணவு வெட்டுக்கிழி, கரப்பான் பூச்சி, வண்டு, கரையான் போன்ற பூச்சிகளும் பல்லி, ஓனான், தவளை, மண் புழு, பூரான் போன்றவையும்தான். தனது நீண்ட அலகினால் நிலத்தைக் கிளறிக் கொத்தி இவ்வுணவுகளைக் கொண்டுவந்து கொடுக்கும். இவ்வாறு பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்த குஞ்சுகள் நான்கு மாதங்கள் சென்றதும் சுயமாக வாழ்க்கையை ஆரம்பிக்க பறந்துசென்றுவிடும். ஒரு பறவை 11 வருடங்களுக்கு மேல் வாழக் கூடியது.


ஒரு பறவை காரணமாக ஒரு நாடே இஸ்லாத்தை ஏற்றது என்பது வரலாற்றின் அதிசயம். அந்தப் பறவைக்குக் கிடைத்த கௌரவம் - அதை யாரும் கொல்லக்கூடாது என்பது.


நாம் சிந்திக்க வேண்டியது: ஒரு சிறிய பறவை தன் ஆயுட்காலத்தில் இவ்வளவு பெரிய ஒரு நற்காரியத்தைச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறது. 


ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம், அல்லாஹ்வின் பூமியில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம்? ஹுத் ஹுத் பறவைக்கு இருந்த அந்த "ஈமானிய ரோஷம்" நம்மிலும் ஏற்படுமானால், நம்மைச் சுற்றியுள்ள உலகம் நிச்சயம் நேர்வழி பெறும்.


"நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக என்னிடம் வாருங்கள்" என்ற அந்தப் பறவையின் குரல் இன்றும் வரலாற்றில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


"யா அல்லாஹ்! ஹுத்ஹுத் பறவைக்கு இருந்த அந்த மார்க்கப் பற்றையும், தவ்ஹீத் உணர்வையும் எங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்படுத்துவாயாக. பிறர் வழிகேட்டில் இருப்பதைப் பார்த்து கவலைப்படும் மனப்பக்குவத்தை எங்களுக்குத் தருவாயாக."


"யா அல்லாஹ்! சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஆட்சியில் இருந்தது போன்ற ஒழுக்கத்தையும், நிர்வாகத்தையும், ஒற்றுமையையும் எங்கள் சமுதாயத்தில் நிலவச் செய்வாயாக. தீய சக்திகளிடமிருந்து எங்களைக் காத்தருள்வாயாக."


"யா அல்லாஹ்! ஸபா நாட்டு அரசி நேர்வழி பெற்றது போல, உலக மக்கள் அனைவரும் உனது ஏகத்துவத்தை ஏற்க அருள் செய்வாயாக. எங்கள் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை எங்களுக்கு நசீபாக்குவாயாக.”

ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக