சனி, 14 மார்ச், 2026

இந்த தீய குணம் உள்ளவரை நண்பராக்க வேண்டாம்



‌தராவீஹ் பயான் பிறை – 25


தலைப்பு : “இந்த தீய குணம் உள்ளவரை நண்பராக்க வேண்டாம்”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ (10) هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ (11) مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ (12) عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ (13) أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ (14) إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ (15) سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ (16)


அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்.அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி. கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் . நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான். விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.(அல்குர்ஆன் : 68:10…16)


لا يدخل الجنات قتات

வலீத் இப்னு முஃகீரா 


காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை ஆகும்.


மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்.

தாயிஃப்பில் இரட்டை தோட்டம் இருந்தது. இரண்டும் ஒரே அமைப்பில் இருக்கும்.

கோடை காலம் மற்ற காலம் அவருக்கு கணிகள் வரும்.

பத்து ஆண் குழந்தை இருந்தார்கள்.

பெண் குழந்தையும் இருந்தது.

கிஸ்வா அனியும் பணி இவருடையது முன் காலம் கஃபாவிற்கு கிஸ்வா அணியும் போது மக்கா வாசிகள் அனைவரும் நோன்பு இருந்து முஹர்ரம் 10வது நாள் ஆடை போர்த்தப்படும். 

அரஃபா தினத்தில் இப்போது போர்த்த படுகின்றது. அந்த நாட்டின் மன்னர் கிஸ்வா துணியைத் தூக்கி வந்து போர்த்துகிறார்கள்.

ஊர் முழுவதும் வசூல் செய்து உயர்ந்த துணி கொண்டு செய்வார்கள்.

அதை தன் சொந்த பணத்தில் வலீத் இப்னு முஙீரா இவர் வந்து துணி போர்த்துவார்.

மிகுந்த செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.

மக்களிடம் பெரிய மரியாதை. ஒரு நீதிபதி போல் இருந்தார் மக்கள் எல்லாம் அவரிடம் சென்று தீர்ப்பு.


இந்த நேரத்தில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகை ஏகத்துவ கொள்கையை போதித்தார்கள்… மிக ரகசியமாக சில நேரங்களில் வெளிப்படையாகவும் பேசினார்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதி மக்களை அழைத்தபோது, மக்கத்து குறைஷிகள் கலக்கமடைந்தனர். "இவரை எப்படித் தடுப்பது? மக்களிடம் இவரைப் பற்றி என்ன சொல்வது?" என்று ஆலோசித்தனர். அப்பொழுது, குறைஷிகளின் மூத்த தலைவரான வலீத் இப்னுல் முஃகீரா, "நானே நேராகச் சென்று அவரிடம் பேசிவிட்டு வருகிறேன்" என்று கூறி நபிகளாரிடம் சென்றார்.அவரின் ஒரு எண்ணம் இருந்தது பணம் மயங்காதவர் யார் உண்டு ?


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்த வலீத், "முஹம்மதே! நீர் கொண்டு வந்திருக்கும் இந்தச் செய்தியை எனக்கு ஓதிக் காண்பியும்" என்றார். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸூரத்துல் முஃமின் (அல்-காஃபிர்) அல்லது ஸூரத்துல் ஃபுஸ்ஸிலத் ஆகிய அத்தியாயங்களின் சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.


அந்தக் கம்பீரமான அரபு நடை மற்றும் அர்த்தங்களைக் கேட்ட வலீத், அப்படியே உறைந்து போனார். அவருடைய உள்ளம் நடுங்கியது.


திரும்பி வந்த வலீத், தன் கூட்டத்தாரிடம் குர்ஆனைப் பற்றி இப்படிக் கூறினார்:

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது ஓதிய அந்த வார்த்தைகளில் ஒரு தனி இனிமை இருக்கிறது. அதில் ஒரு தனி அழகு மிளிர்கிறது. அதன் கிளைகள் கனிகள் நிறைந்தவை; அதன் வேர்கள் ஆழமானவை. அது மற்ற எல்லா வார்த்தைகளையும் விட மேலானது. அதற்கு மேல் உயர்ந்து நிற்க எதாலும் முடியாது. நிச்சயமாக இது ஒரு மனிதனின் சொல் அல்ல!"


வலீத் இவ்வாறு புகழ்ந்ததைக் கேட்ட அபூ ஜஹ்ல் அதிர்ச்சியடைந்தான். "வலீத் இஸ்லாத்தை ஏற்றுவிடுவாரோ?" என்று அஞ்சினான். உடனே வலீத்தின் வீட்டிற்குச் சென்று, "வலீதே! முஹம்மதிடம் நீர் ஏதோ உதவி (பணம்) கேட்கப் போனதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இது உமது கௌரவத்திற்கு இழுக்கு இல்லையா?" என்று கூறி அவரது ஈகோவைத் தூண்டினான்.


தன் கௌரவம் பாதிக்கப்படுவதை விரும்பாத வலீத், "நானே மக்காவின் பெரும் செல்வந்தன், நான் ஏன் அவரிடம் பணம் கேட்கப் போகிறேன்?" என்றார். பிறகு, "அப்படியானால் முஹம்மதை ஒரு மந்திரவாதி (ஸாஹிர்) என்று சொல்லுங்கள்" என்று அபூ ஜஹ்ல் வற்புறுத்தினான்.


சிறிது நேரம் யோசித்த வலீத், குர்ஆன் வசனங்கள் மனிதர்களின் உறவுகளை (தந்தை-மகன், கணவன்-மனைவி) பிரிக்கிறது என்பதால், "இது ஒரு கற்றுக்கொள்ளப்பட்ட சூனியம் (மந்திரம்) தான்" என்று பொய்யாக அறிவித்தார்.


வலீத் இப்னுல் முஃகீராவின் இந்தத் தடுமாற்றத்தையும், உண்மையை அறிந்தும் பொய்யுரைத்த கர்வத்தையும் பற்றி அல்லாஹ் ஸூரத்துல் கலமில் இவரை குறித்து விரிவான தகவல்கள் கூறுகிறான்.


வலீத் இப்னுல் முஃகீரா மக்காவில் பெரும் செல்வந்தராகவும், பத்து ஆண் பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் இருந்ததால் மிகுந்த கர்வம் கொண்டிருந்தார். அவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்பினார். அப்போது அல்லாஹ் நபிகளாருக்கு ஆறுதல் கூறவும், வலீத்தின் தீய குணங்களை அம்பலப்படுத்தவும் இந்த வசனங்களை இறக்கினான்.


இப்போது தான் ஸூரா கலம் இறங்கியது.


இவரை போல் ஒரு மனிதர் உங்ளிடம் செல்வாக்கு செலுத்தி விட கூடாது.

இவரிடம் பத்து தீய பண்புகள் இருக்கிறது என்று அல்லாஹ் வெளிப்படுத்தி காட்டுகிறான் இதுவரை அவன் மறைத்து வந்த அந்த பண்புகளை குறித்து அல்லாஹ் பேசுகிறான். 


நீங்கள் ஏதாவது முடிவெடுக்கக்கூடிய சமயத்தில் அவருடைய வார்த்தைக்கு மயங்கி விடாதீர்கள் அவரிடம் நீங்கள் எந்த கருத்தையும் கேட்டு விட வேண்டாம். 


வலீத் இப்னு முஃகீரா விடம் இருந்த தீய பண்புகளில் இரண்டு…


وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ‏

அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;


ஹல்லாஃப் (حَلَّافٍ): "அதிகம் சத்தியம் செய்பவன்." ஒருவன் உண்மையானவனாக இருந்தால் அடிக்கடி சத்தியம் செய்யத் தேவையில்லை. தான் சொல்லும் பொய்களை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே வலீத் அடிக்கடி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்.


மஹீன் (مَّهِينٍ): "இழிவானவன் / அற்பமானவன்." மன உறுதி இல்லாத, மரியாதைக்குத் தகுதியற்ற, உள்ளத்தால் சிறுமையானவன் என்பது இதன் பொருள்.


ஒருவன் உண்மையை அறிந்திருந்தும், தனது சுயநலத்திற்காகவோ அல்லது பதவி ஆசைக்காகவோ அதை மறைப்பானானால், அவன் உள்ளத்தால் மிக இழிவானவன். வலீத் குர்ஆனின் உண்மையை உணர்ந்தும், அபூ ஜஹ்லின் பேச்சைக் கேட்டு உண்மையை மறுத்ததால் அவர் "இழிவானவர்" என அழைக்கப்பட்டார்.


செல்வம் ஒருவருக்குக் கண்ணியத்தைத் தந்துவிடாது; மாறாக, நற்பண்புகளே ஒருவரை உயர்ந்தவராக்கும். வலீத்திடம் செல்வம் இருந்தது, ஆனால் கண்ணியம் (Izzah) இல்லை.


இந்த வசனம் நமக்குப் புகட்டும் பாடம்

இந்தச் சொற்கள் வலீத்தைப் பற்றி பேசினாலும், இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்:


சத்தியம் என்பது ஒரு புனிதமான விஷயம். அதைத் தற்காப்பிற்காகவும், ஏமாற்றுவதற்காகவும் அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இறைவனிடம் இழிவானவர்களாகக் கருதப்படுவார்கள்.


உண்மையை ஏற்றுக்கொள்வதில் தான் ஒருவனின் வீரம் இருக்கிறது. வலீத் உண்மையை உணர்ந்தும் பணியாததால், அவனது செல்வம் அவனை இழிவிலிருந்து காப்பாற்றவில்லை.


உலகம் ஒருவனைத் தலைவனாகப் பார்த்தாலும், அவனிடம் தீய குணங்கள் இருந்தால் இறைவனின் பார்வையில் அவன் "அற்பமானவன்" (மஹீன்) மட்டுமே.


"நிச்சயமாக, யார் அல்லாஹ்வின் பெயரால் அற்பமான விலைக்குச் சத்தியம் செய்கிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் யாதொரு நற்பேறுமில்லை." (திருக்குர்ஆன் 3:77)


வலீத் இப்னுல் முஃகீரா இழைத்த மிகப்பெரிய தவறு, குர்ஆன் இறைவார்த்தை என்று தெரிந்தே, தன் கௌரவத்திற்காக அதை மறுத்ததுதான். அந்த ஒரு தருணம் அவரை வரலாற்றில் என்றென்றும் 'இழிவானவன்' என்ற முத்திரையுடன் நிலைநிறுத்திவிட்டது.


சத்தியம் செய்வதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் 


ஒருமுறை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் "எனது தந்தையின் மீது சத்தியமாக!" என்று சத்தியம் செய்வதைக் கேட்டார்கள்.


விளக்கம்: உடனே அவரைத் தடுத்த இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, "அல்லாஹ்வைத் தவிர வேறு எவர் மீதும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வைத் தவிர வேறு எவர் மீதும் சத்தியம் செய்கிறாரோ அவர் இறைநிராகரிப்பு (குஃப்ரு) அல்லது இணைவைத்தல் (ஷிர்க்) செய்துவிட்டார்'." (நூல்: திர்மிதி).


நாம் விளையாட்டாகக்கூட "தாய் மீது சத்தியம்", "பிள்ளை மீது சத்தியம்" அல்லது "தலை மீது சத்தியம்" என்று சொல்லக்கூடாது. சத்தியம் என்பது உயர்வானது, அது அல்லாஹ்வின் பெயரால் மட்டுமே அமைய வேண்டும்.


அடுத்து இரண்டு தீய குணங்கள்….

هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِيْمٍۙ‏


(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.


1. ஹம்மாஸ் (هَمَّازٍ) - குறைகூறித் திரிபவன்

'ஹம்ஸ்' என்றால் ஒருவரை நேருக்கு நேர் கேலி செய்வது, ஜாடைகள் மூலம் இழிவுபடுத்துவது அல்லது பிறருடைய குறைகளைத் துருவித் துருவி ஆராய்ந்து அவர்களை அவமானப்படுத்துவது என்று பொருள்.


வலீத் இப்னுல் முஃகீரா, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காணும்போதெல்லாம் கண் ஜாடைகளாலும், ஏளனமான பேச்சுகளாலும் கேலி செய்து வந்தார்.


ஒரு மனிதனின் கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் முகத்திற்கு நேராகக் குறைகளைச் சொல்லி அவமானப்படுத்துபவர்களை இது குறிக்கும். இதைப் பற்றி அல்லாஹ் மற்றொரு இடத்தில் "குறைகூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்" (ஸூரத்துல் ஹுமஸா) என்று எச்சரிக்கிறான்.


மஷ்ஷாஇன் பி நுமீம் (مَّشَّاءٍ بِنَمِيْمٍ) - கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்

'நுமீம்' அல்லது 'நமீமத்' என்றால் ஒருவரிடம் பேசியதை, அவரிடத்தில் பகையை உண்டாக்கும் நோக்கில் மற்றொருவரிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும். 'மஷ்ஷா' என்றால் அதற்காகவே அதிகம் நடப்பவன்/திரிபவன் என்று பொருள்.


வலீத் மக்களிடையே சென்று, "முஹம்மது உங்கள் உறவுகளைப் பிரிக்கிறார், உங்கள் தெய்வங்களை இழிவுபடுத்துகிறார்" என்று திரித்துக் கூறி, மக்களுக்கும் நபிகளாருக்கும் இடையே பகைமையை வளர்த்தார்.


சமூகத்தில் இரு நபர்களுக்கோ அல்லது இரு தரப்பினருக்கோ இடையே சண்டையை மூட்டிவிடுவதற்காகவே செய்திகளைத் தூக்கிக்கொண்டு அலைபவர்களை இச்சொல் குறிக்கிறது.


இந்த இரு குணங்கள் குறித்த இஸ்லாமிய எச்சரிக்கை:


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "கோள் சொல்பவன் (நம்மாம்) சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்." (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).


ஒருமுறை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது, "இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும்போது சரியாக சுத்தம் செய்வது இல்லை . மற்றொருவர் கோள் சொல்லித் திரிந்தார்" என்று கூறினார்கள்.


ஒருவரை நேருக்கு நேர் குறை சொல்வது (ஹம்ஸ்) ஒருவனின் தனிமனித மாண்பைக் கெடுக்கும்; கோள் சொல்வது (நமீமத்) ஒட்டுமொத்த சமூகத்தின் அமைதியைக் கெடுக்கும்.


சல்லடை ஊசியை பார்த்துச் சொன்னது உன் பின்னால் ஒரு ஓட்டை இருக்கிறது என்று . சிலருக்கு அதில் ஒரு இன்பம் இருக்கிறது.


பதனி…..பதனி …

அடுத்தவர் சந்தோஷம் பிடிக்காது கனவன் மனைவி சகோதரர்கள் நண்பர்கள் மத்தியில் …


ஷைத்தானுக்குக் கிடைக்கவில்லையா?


ஒரு மனிதர் வஹ்ப் இப்னு முனப்பிஹ் அவர்களிடம் வந்து, "இன்னார் உங்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார்" என்று கோள் சொன்னார். அதாவது ஒருவரிடம் கேட்டதை இன்னொருவரிடம் கொண்டு வந்து பகையைத் தூண்ட 

முயன்றார்.


அதற்கு வஹ்ப் இப்னு முனப்பிஹ் அவர்கள் பதற்றப்படாமல், மிக நிதானமாக அந்த மனிதரைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள்:

"உன்னைத் தவிர வேறு ஒரு தூதுவனை ஷைத்தானுக்குக் கிடைக்கவில்லையா? உன்னைத் தான் அவன் தூதுவனாகத் தேர்ந்தெடுத்தானா?”


ஒரு சமுதாயத்தில் கோள் சொல்லுபவன் இருந்தால் அந்த சமுதாயத்தில் பரக்கத் இருக்காது. எல்லாரும் பிறரை சார்ந்து தான் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு செல்வந்தர்கள் வேண்டும் செல்வந்தர்களுக்கு வேலை செய்யக்கூடிய ஏழைகள் வேண்டும்.


எவரைப் பற்றியும் எங்கும் புறம் பேசியதில்லை.


பதினைந்து ஆண்டுகள் ஊர் ஊராக நாடு நாடாக அலைந்து மூன்று இலட்சம் நபிகளாரின் நன்மொழிகளைச் சேகரித்து அவற்றில் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு இலட்சம் பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்து அவைகளிலும் அதிக ஆதாரமுள்ள 7275 அரிய அருளுரைகளைத் தொகுத்து ""ஜாமியுஸ் ஸஹீஹ் புகாரி'' என்ற நூலை வெளியிட்ட இமாம் முஹம்மது இப்னு இஸ்மாயில் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்நாளில் எவரைப் பற்றியும் எங்கும் புறம் பேசியதில்லை.


வலீத் இப்னுல் முஃகீராவிடம் இருந்த அடுத்த மூன்று மிக மோசமான குணங்களை பற்றி….


مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏


(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.


மன்னாயின் லில் கைர் (مَّنَّاعٍ لِّلْخَيْرِ) - நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன். 'கைர்' என்றால் நன்மை. வலீத் இப்னுல் முஃகீரா நன்மைகளைத் தடுப்பதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார்.


வலீத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது பிள்ளைகளோ இஸ்லாத்தை நோக்கிச் செல்ல முயன்றால், அவர்களை மிரட்டித் தடுத்தார். "நீங்கள் முஹம்மதைப் பின்பற்றினால் எனது சொத்தில் உங்களுக்குப் பங்கு கிடையாது" என்று பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுத்தார்.


மக்காவிற்கு வரும் அந்நியர்களிடம் "முஹம்மது ஒரு சூனியக்காரர், அவரை நெருங்காதீர்கள்" என்று பிரச்சாரம் செய்து, அவர்கள் நேர்வழி பெறுவதைத் தடுத்தார்.


ஏழைகளுக்கு உதவி செய்வதையும், தர்மம் செய்வதையும் இவர் தடுத்தார்.


முஃததின் (مُعْتَدٍ) - வரம்பு மீறியவன்

'இஃதிதா' என்றால் ஒரு எல்லை அல்லது சட்டத்தை மீறுதல் என்று பொருள்.

வலீத் மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், அநீதி இழைப்பதிலும் எல்லையைத் தாண்டினார்.


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சொல்லால் மட்டுமல்லாமல், செயல்களாலும் தொல்லைகளைக் கொடுத்து இறைவனின் வரம்புகளை மீறினார்.


அஸீம் (أَثِيمٍ) - பெரும் பாவி

'இஸ்ம்' என்றால் பாவம். 'அஸீம்' என்றால் பாவங்களிலேயே ஊறிப்போனவன் என்று பொருள்.


வலீத்தின் அன்றாட வாழ்க்கை மது, மாது, சிலை வணக்கம் மற்றும் அநீதிகளால் நிறைந்திருந்தது.


உண்மையை அறிந்த பிறகும் அதைப் பொய்ப்பித்ததால், அவர் இறைவனிடம் 'பெரிய பாவி'யாகக் கருதப்பட்டார்.


நன்மைக்குத் துணையாக இரு: நாம் ஒரு நன்மையைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மற்றவர்கள் செய்யும் நன்மையைத் தடுப்பவராக ஒருபோதும் இருக்கக்கூடாது. அது 'வலீத்' போன்ற இறைவனின் சாபத்திற்குரிய குணமாகும்.

செல்வம் என்பது ஒரு சோதனை. வலீத் தனது செல்வத்தைப் பயன்படுத்தி நன்மைகளைத் தடுத்தார். ஆனால் அதே செல்வம் அவருக்குப் பாதுகாப்பாக அமையவில்லை.


அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பிறர் மீது அநீதி இழைப்பது (முஃததின்) ஒருவனை இழிந்த நிலைக்குத் தள்ளும்.


வலீத் இப்னுல் முஃகீராவுக்கு இத்தனை செல்வத்தையும், ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தும், அவர் அதை நன்மையை அழிக்கப் பயன்படுத்தியதால், குர்ஆன் அவரை மிகக் கடுமையாகச் சாடுகிறது.


வலீத் இப்னுல் முஃகீராவிடம் இருந்த அடுத்த இரண்டு மிக மோசமான குணங்களை பற்றி….

 عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍ

 "கொடூரமானவர்; அதற்கும் அப்பால் 'ஜனீம்' (தந்தைக்கே பிறக்காதவன்)."


இங்கு 'ஜனீம்' என்ற சொல்லுக்கு அரபு மொழியில் "ஒரு கூட்டத்தில் அங்கத்தவர் போல் தெரிபவர், ஆனால் உண்மையில் அந்த வம்சத்தைச் சேராதவர்" (அதாவது முறையற்ற உறவில் பிறந்தவர்) என்று பொருள்.


இந்த வசனம் இறங்கிய செய்தியை அறிந்த வலீத் இப்னுல் முஃகீரா ஆத்திரமடைந்தார். ஏனெனில், குர்ஆன் இதுவரை அவரது குணம், செல்வம், பொய்கள் பற்றிப் பேசியது. ஆனால், இந்த வசனம் அவரது பிறப்பைப் பற்றிப் பேசியது. உடனே அவர் தனது தாயிடம் சென்று வாளை உருவி மிரட்டினார்.


வலீத் கேட்ட கேள்வி:

"தாயே! முஹம்மது என்னை 'ஜனீம்' என்று கூறுகிறார். குர்ஆன் இதுவரை சொன்ன எதையும் நான் பொய் என்று கண்டதில்லை. இப்போது என் பிறப்பைப் பற்றி அது கூறுகிறது. உண்மையைச் சொல், நான் யாருக்குப் பிறந்தவன்? 


உண்மையைச் சொல்லாவிட்டால் உன்னை வெட்டிவிடுவேன்" என்று மிரட்டினார்.


தாய் அளித்த பதில்:

அதற்கு அவரது தாய் திடுக்கிட்டு உண்மையை ஒப்புக்கொண்டார்:

"மகனே! உன் தந்தை (முஃகீரா) ஒரு பெரும் செல்வந்தர், ஆனால் அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவர் இறந்தால் சொத்துக்கள் எல்லாம் மற்றவர்களுக்குப் போய்விடுமே என்று பயந்து, ஒரு மேய்ப்பனுடன் தொடர்பு கொண்டு உன்னைப் பெற்றெடுத்தேன். முஹம்மது சொல்வது உண்மைதான்" என்று கூறினார். நூல்: தஃப்சீர் அல்-குர்துபி


குர்ஆன் ஏன் இதை வெளிப்படுத்தியது?

உலகமே வலீத்தை 'முஃகீராவின் மகன்' என்று ஒரு கௌரவமான வம்சத்தில் வைத்துப் பார்த்தது. அந்த கர்வத்தில்தான் அவர் நபிகளாரை இழிவுபடுத்தினார். ஆனால், அல்லாஹ் இந்த ஒரு வார்த்தையின் மூலம்:

வலீத் கொண்டிருந்த போலியான கௌரவத்தை உடைத்தான்.

குர்ஆன் இறைவேதம் என்பதையும், மனிதர்களுக்குத் தெரியாத ரகசியங்கள் கூட அல்லாஹ்வுக்குத் தெரியும் என்பதையும் நிரூபித்தான்.

உண்மையை அறிந்தும் கர்வத்தால் மறுப்பவர்களுக்கு இது போன்ற இழிவு ஏற்படும் என்பதை உலகிற்கு உணர்த்தினான்.


'உதுல்' (عُتُلٍّ) என்பதன் விளக்கம்

இந்த வசனத்தில் வரும் 'உதுல்' என்ற சொல்லுக்கு "கொடூரமானவர்" என்று பொருள்.

எவ்வளவு நற்போதனைகள் சொன்னாலும் கேட்காத, இரக்கமே இல்லாத கல்நெஞ்சக்காரர்களை இது குறிக்கும்.

வலீத் ஏழைகளிடம் கடுகடுப்பாக நடப்பவராகவும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறரைத் துன்புறுத்துபவராகவும் இருந்தார்.


இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வலீத் இன்னும் அதிகக் கோபமடைந்தார். இருப்பினும், குர்ஆனின் இந்தத் துல்லியமான வெளிப்பாட்டைக் கண்டு மக்கா நகரமே அதிர்ந்தது. ஒரு மனிதனின் பிறப்பு ரகசியத்தைக்கூட குர்ஆன் வெளிச்சமிட்டுக் காட்டியது அதன் இறைத்தன்மையைப் பறைசாற்றியது.


வலீத் இப்னுல் முஃகீராவிடம் இருந்த அடுத்த இரண்டு மிக மோசமான குணங்களை பற்றி….

اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِيْنَ‏

 "செல்வமும், பிள்ளைகளும் அவனுக்கு இருப்பதன் காரணத்தினாலேயே (அவன் இவ்வாறு கர்வம் கொள்கிறான்)."


இதற்கு முந்தைய வசனங்களில் அவனது 9 தீய குணங்களைச் சொன்ன அல்லாஹ், அவன் ஏன் இவ்வளவு மோசமாக மாறினான்? ஏன் உண்மையை மறுக்கிறான்? என்பதற்குக் காரணமாக அவனது பொருளாதாரத்தையும், ஆள்பலத்தையும் இங்கே குறிப்பிடுகிறான்.


மால் (செல்வம்): வலீத் இப்னுல் முஃகீரா மக்காவின் ஆகப்பெரும் செல்வந்தர். "அல்-வஹீத்" (ஒப்பற்றவன்) என்று அழைக்கப்படும் அளவுக்கு அவரிடம் தங்கம், வெள்ளி மற்றும் தாயிஃப் நகரில் பிரம்மாண்டமான திராட்சைத் தோட்டங்கள் இருந்தன.


பனூன் (பிள்ளைகள்): அவருக்குப் பத்து ஆண் பிள்ளைகள் இருந்தனர். அரபுச் சமூகத்தில் ஆண் பிள்ளைகள் என்பது ஒரு மனிதனின் வீரத்திற்கும், பாதுகாப்புக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. அந்தப் பத்து பிள்ளைகளும் எப்போதும் அவரோடே இருந்து அவருக்குப் பலமாகத் திகழ்ந்தனர்.


வழக்கமாக ஒரு மனிதனுக்குச் செல்வம் பெருகும்போது அவன் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால், வலீத் போன்றவர்கள்: இந்தச் செல்வமும் பிள்ளைகளும் தனது சொந்தத் திறமையால் வந்தது என்று எண்ணினார்கள். "இவ்வளவு வசதிகள் கொண்ட எனக்குக் கிடைக்காத 'நுபுவ்வத்' (நபித்துவம்), ஏழையாக இருக்கும் முஹம்மதுக்கு எப்படிக் கிடைக்கும்?" என்று ஏளனம் செய்தார்.


தனது ஆள்பலத்தைக் கண்டு, தன்னை யாராலும் தண்டிக்க முடியாது என்ற மமதையில் இருந்தார்.


அடுத்த ஒரு தீய குணம் …


اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏

"நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக்காட்டப்பட்டால், 'இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே' என்று அவன் கூறுகிறான்."


அதாவது, அல்லாஹ் இவ்வளவு அருட்கொடைகளை அவனுக்குக் கொடுத்திருந்தும், அதற்கு நன்றிக்கடனாக உண்மையை ஏற்பதற்குப் பதிலாக, குர்ஆனைப் "பழங்காலக் கதைகள்" என்று இழிவுபடுத்தினான்.


செல்வம் ஒரு சோதனை: செல்வம் ஒரு மனிதனை நற்பண்பாளராக மாற்ற வேண்டும். மாறாக, அது கர்வத்தைத் தந்தால் அந்தச் செல்வம் இறைவனின் சாபத்திற்குக் காரணமாகிவிடும்.


வலீத் தனது பிள்ளைகளைத் தன் கர்வத்திற்குப் பயன்படுத்தினார். ஆனால், அல்லாஹ் அதே பிள்ளைகளில் பலரை இஸ்லாத்தை ஏற்கச் செய்து, அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தான்.


ஒருவன் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், சத்தியத்தை மறுக்கும்போது அவனது தகுதிகள் அனைத்தும் குர்ஆனால் "இழிவானவை" என முத்திரை குத்தப்படும்.


வலீத் இப்னுல் முஃகீரா தனது செல்வத்தாலும் பிள்ளைகளாலும் கர்வமடைந்து, இறுதியாக ஒரு போரில் (பத்ருப் போரில்) அவமானமான முறையில் மரணித்தார்.


முந்தைய வசனத்தில் அவன் செல்வம் மற்றும் பிள்ளைகளால் கர்வமடைந்திருந்தான் என்று பார்த்தோம். அந்தத் திமிரின் விளைவாக, அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் (ஆயத்துகள்) அவனுக்கு ஓதிக் காட்டப்படும்போது, அவற்றின் உண்மையை ஆராயாமல் நேரடியாக நிராகரித்தான்.


அஸாதீருல் அவ்வலீன் (اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ) - முன்னோர்களின் கட்டுக்கதைகள்

'அஸாதீர்' என்பது 'உஸ்தூரா' என்ற சொல்லின் பன்மை. இதற்கு "கற்பனைக் கதைகள்", "கட்டுக்கதைகள்" அல்லது "பதிவு செய்யப்பட்ட பழைய கதைகள்" என்று பொருள்.

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதும்போது, அதில் வரும் ஆது, ஸமூது போன்ற முந்தைய சமுதாயங்களின் வரலாற்றைக் கேட்டுவிட்டு, "இதெல்லாம் ஒன்றும் இறைச்செய்தி அல்ல; முஹம்மது பழைய ஆட்களிடம் கேட்டுக் குறித்து வைத்திருக்கும் கதைகள்" என்று மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்தார்.

ஆரம்பத்தில் குர்ஆனைக் கேட்டபோது, "இது மனிதனின் சொல்லே அல்ல" என்று புகழ்ந்த அதே வலீத், தனது தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே அதனை "கட்டுக்கதை" என்று இழிவுபடுத்தினார்.


குர்ஆன் மனிதனின் ஆன்மாவுக்குப் பல உண்மைகளைச் சொன்னது. ஆனால், வலீத் போன்றவர்களுக்குக் குர்ஆனின் சட்டங்களுக்குக் கட்டுப்படுவது கடினமாக இருந்தது.


வட்டி மற்றும் அநீதியான வருமானத்தைக் குர்ஆன் தடுத்தது.


வலீத்தின் இந்த ஆணவமான பேச்சுக்கு அல்லாஹ் மிகக் கடுமையான எச்சரிக்கையை அடுத்த வசனத்தில் வழங்குகிறான்:


 سَنَسِمُهٗ عَلَى الْخُرْطُوْمِؕ

 "விரைவில் நாம் அவனது தும்பிக்கையின் (மூக்கின்) மீது அடையாளமிடுவோம்."


 குர்ஆனின் அற்புதங்களையும், அதன் ஆழமான பொருளையும் புரிந்துகொள்ள மறுப்பவர்கள் இன்றும் அதனை ஏதோ ஒரு கற்பனை என்று கூறுகின்றனர். வலீத்தின் வாரிசுகள் இன்றும் அத்தகைய வாதங்களை முன்வைக்கிறார்கள்.


அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை (செல்வம், அறிவு) கொண்டு அல்லாஹ்வின் வசனங்களை ஏளனம் செய்வது ஒரு மனிதனை எத்தகைய அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு வலீத் ஒரு சாட்சி.



'தும்பிக்கை' (அல்-குர்தூம்) என்ற சொல் ஏன்?

அரபு மொழியில் 'குர்தூம்' என்பது யானையின் தும்பிக்கையைக் குறிக்கும். அல்லாஹ் வலீத்தின் மூக்கை 'மூக்கு' (அன்ஃப்) என்று சொல்லாமல் 'தும்பிக்கை' என்று சொன்னதற்கு இரண்டு காரணங்கள் உண்டு:


 வலீத் தனது அழகிய மூக்கையும், முகத்தையும் கண்டு கர்வமடைந்திருந்தார். அவனது அந்த கர்வத்தை அடக்க, மனித மூக்கை ஒரு மிருகத்தின் தும்பிக்கையோடு ஒப்பிட்டு அல்லாஹ் அவனை இழிவுபடுத்தினான்.


அரபியில் "மூக்கு உயர்ந்துள்ளது" என்றால் "அவன் கர்வமாக இருக்கிறான்" என்று பொருள். அவனது கர்வத்தின் இருப்பிடமான அந்த மூக்கிலேயே அடிப்பேன் என்று அல்லாஹ் எச்சரித்தான்.


இந்த எச்சரிக்கை எப்படி நிறைவேறியது? (வரலாற்றுச் சம்பவம்)

குர்ஆன் இந்த எச்சரிக்கையை விடுத்த சில ஆண்டுகளில் பத்ரு போர் நடைபெற்றது. வலீத் இப்னுல் முஃகீரா அந்தப் போரில் நேரடியாகப் பங்கெடுக்கவில்லை என்றாலும் (அவர் அதற்குப் பிறகுதான் மரணித்தார்), அவர் போரில் காயமடைந்த விதம் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன.


இருப்பினும், தஃப்ஸீர் அறிஞர்கள் ஒரு முக்கிய நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்:

 * பத்ரு போரில் அல்லது அதற்குப் பிந்தைய ஒரு மோதலில், வலீத் இப்னுல் முஃகீராவின் மூக்கில் வாளால் ஒரு பலமான வெட்டு விழுந்தது.


 * அந்தக் காயம் ஆறிய பிறகு, அவரது மூக்கில் ஒரு தழும்பு (அடையாளம்) நிரந்தரமாகப் பதிந்துவிட்டது.


 * அவர் எங்குச் சென்றாலும், மக்கள் அந்தத் தழும்பைப் பார்த்து, "இதோ குர்ஆன் எச்சரித்த அடையாளம் இவன் மூக்கில் இருக்கிறது" என்று பேசிக் கொண்டனர்.

 * அவர் மரணிக்கும் வரை அந்த 'இழிவு' அவரோடே இருந்தது.


சில விரிவுரையாளர்கள், இந்த அடையாளம் அவருக்கு மறுமையிலும் இருக்கும் என்று கூறுகிறார்கள். நரகவாசிகள் மத்தியில் அவர் இனம் காணப்படுவதற்கு அவரது மூக்கில் ஒரு கருப்பு அடையாளம் (Sealing) இடப்படும்.


வலீத் இப்னுல் முஃகீரா பத்ருப் போருக்குப் பிறகு மக்காவிலேயே மரணித்தார். ஒருமுறை அவரது காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயம் (முள் குத்தியது அல்லது பழைய காயம்) விஷமாக மாறி, அவரது உடல் வீங்கி மிகவும் அவமானமான முறையில் அவர் உயிரிழந்தார். அவரது அழுகிய உடலை மக்கள் நெருங்கவே பயந்தனர்.


செல்வம், பிள்ளைகள், பதவி மற்றும் ஆள்பலம் ஆகியவற்றைக் கண்டு எவன் ஒருவன் இறைவசனங்களை ஏளனம் செய்கிறானோ, அவனை அல்லாஹ் உலகிலேயே இழிவுபடுத்திக் காட்டுவான்.


அதே சமயம், அவரது மகனான காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்று, "அல்லாஹ்வின் வாள்" (ஸைஃபுல்லாஹ்) என்று புகழப்பட்டது இறைவனின் மற்றொரு அற்புதம். தந்தை இஸ்லாத்தை அழிக்க முயன்றார், மகனோ இஸ்லாத்தைக் காக்கும் மாபெரும் தளபதியாக மாறினார்கள்.



வலீத் இப்னுல் முஃகீராவின் 10 தீய குணங்கள்


1 ஹல்லாஃப் (حَلَّاف) அதிகம் சத்தியம் செய்பவர் தனது பொய்களை மறைக்க அடிக்கடி அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்துபவர்.


2 மஹீன் (مَهِين) இழிவானவர் உள்ளத்தால் பலவீனமானவர், அற்பமான சுபாவம் கொண்டவர்.


3 ஹம்மாஸ் (هَمَّاز) குறைகூறித் திரிபவர் பிறரை நேருக்கு நேர் இழிவுபடுத்துபவர் மற்றும் ஜாடைகளால் கேலி செய்பவர்.


4 மஷ்ஷாஇன் பி நுமீம் (مَشَّاءٍ بِنَمِيْم) கோள் சொல்லிக் கொண்டு நடப்பவர் மக்களிடையே பகைமையை உண்டாக்கச் செய்திகளைத் திரித்துக் கூறுபவர்.


5 மன்னாயின் லில் கைர் (مَنَّاعٍ لِّلْخَيْر) நன்மையைத் தடுப்பவர் மக்கள் இஸ்லாத்தை ஏற்பதையும், தர்மம் செய்வதையும் தீவிரமாகத் தடுத்தவர்.


6 முஃததின் (مُعْتَد) வரம்பு மீறியவர் பிறருடைய உரிமைகளைப் பறிப்பவர் மற்றும் அநீதி இழைப்பவர்.


7 அஸீம் (أَثِيم) பெரும் பாவி பாவச் செயல்களில் ஊறிப்போனவர்.


8 உதுல் (عُتُلّ) கொடூரமானவர் இரக்கமே இல்லாத கல்நெஞ்சக்காரர்; கடின சுபாவம் கொண்டவர்.


9 ஜனீம் (زَنِيْم) அநாமதேயன் / பிறப்பு ரகசியம் ஒரு வம்சத்தைச் சேர்ந்தவர் போலத் தெரிந்து, உண்மையில் வேறு வம்சத்தில் பிறந்தவர்.


10 அஸாதீருல் அவ்வலீன் (أَسَاطِيرُ الْأَوَّلِين) கட்டுக்கதை கூறுபவர் இறைவசனங்களைக் கேட்டுவிட்டு, "இவை பழங்காலக் கதைகள்" என்று ஏளனம் செய்தவர்.


வலீத் இப்னுல் முஃகீராவின் வரலாறு என்பது வெறும் ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல; அது அகந்தைக்கும் சத்தியத்திற்கும் இடையே நடந்த ஒரு மாபெரும் போராட்டத்தின் சான்று.


வலீத்திடம் செல்வம் இருந்தது, ஆள்பலம் இருந்தது, அறிவாற்றல் இருந்தது. ஆனால், "நான்" எனும் கர்வம் அவரிடம் இருந்த உண்மையை ஏற்கும் பக்குவத்தை அழித்துவிட்டது.


குர்ஆன் அவரைப் பற்றிச் சொன்ன ஒவ்வொரு ரகசியமும், எச்சரிக்கையும் அவர் வாழ்நாளிலேயே நிறைவேறியது. இது குர்ஆன் காலங்களைக் கடந்து நிற்கும் இறைவேதம் என்பதைக் காட்டுகிறது.


இஸ்லாத்தின் பரம எதிரியான வலீத்தின் வயிற்றிலிருந்தே, இஸ்லாத்தைக் காக்கும் மாபெரும் தளபதி காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ் வெளிப்படுத்தினான். இது "உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை அல்லாஹ் வெளிப்படுத்துவான்" என்ற தத்துவத்திற்குச் சான்றாகும்.


 அல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் கர்வத்தையும், அகந்தையையும் ஏற்படுத்தி விடாதே. உண்மையை உண்மையாகக் கண்டு அதைப் பின்பற்றும் பாக்கியத்தையும், பொய்யைப் பொய்யாகக் கண்டு அதிலிருந்து விலகி இருக்கும் நேர்வழியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!"


"செல்வமோ, பிள்ளைகளோ, அதிகாரமோ எங்களை உன்னிடமிருந்து தூரமாக்கி விடாமல், உன்னை நெருங்குவதற்கான வழிகளாக அவற்றை ஆக்கித் தருவாயாக. 


இழிவான நிலையிலிருந்து எங்களைப் பாதுகாத்து, உனது திருப்தியைப் பெற்ற நல்லடியார்களாக எங்களை மரணிக்கச் செய்வாயாக! ஆமீன்.”


தொகுத்தவர்.


மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக