வெள்ளி, 6 மார்ச், 2026

சிறந்த முஸ்லிம் ”

தராவீஹ் பயான் பிறை – 17


தலைப்பு : “சிறந்த முஸ்லிம் ”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ‌ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‌ ‏

“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

(அல்குர்ஆன் : 31:17)

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ‏

“(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 31:18)


இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸூரத்துல் லுக்மான் அத்தியாயத்தில் முக்கியமான வசனங்களில் மேற்சொன்ன வசனத்தில் ஹழ்ரத் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மகனுக்கு வழங்கிய உன்னதமான அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒரு மனிதன் இறைவனிடமும், சமூகத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த வழிகாட்டுதலாகும்.


ஐந்து விஷயம் சிறந்த முஸ்லிம்களின் அடையாளம் 


என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக…”


"நன்மையை ஏவுவாயாக, 


தீமையை விட்டும் விலக்குவாயாக…”


"உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக…”


"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே!”



1)லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் மகனுக்கு வழங்கிய அறிவுரைகளில் "தொழுகையை நிலைநாட்டுதல்" என்பது மிக முக்கியமான முதல் கடமையாகும். 


"நிலைநாட்டுதல்" (Aqi-mis-Salah) என்பதன் பொருள்

திருக்குர்ஆனில் "தொழுங்கள்" என்று மட்டும் சொல்லாமல், பெரும்பாலும் "நிலைநாட்டுங்கள்" என்றே அல்லாஹ் கூறுகிறான். இதன் உட்பொருள்கள்:


ஐவேளைத் தொழுகைகளையும் அந்தந்த நேரங்களில் தவறாமல் நிறைவேற்றுவது.

ஒளு (சுத்தம்), ருகூஃ, ஸஜ்தா போன்ற அதன் கட்டாயக் கடமைகளை (ருக்ன்) நபிகளார் காட்டிய முறைப்படி பூர்த்தியாகச் செய்தல்.

உடல் மட்டும் தொழுகையில் இருந்தால் போதாது; உள்ளமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும்.

ஒருநாள் தொழுதுவிட்டு மறுநாள் விடுவதல்ல; மரணம் வரை அதை ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொள்வது.


ஏன் இதை முதலில் லுக்மான் (அலை) அறிவுறுத்தினார்கள்?

ஒரு தந்தை தன் மகனுக்கு உலகியல் விஷயங்களைச் சொல்வதற்கு முன் ஏன் தொழுகையைச் சொன்னார்கள்  


தொழுகை என்பது அடியானுக்கும் ரப்புக்கும் (படைத்தவனுக்கும்) இடையிலான நேரடி உரையாடல். இந்தத் தொடர்பு சரியாக இருந்தால் மட்டுமே மற்ற அறிவுரைகள் (நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல்) பலன் தரும்.


அடுத்த கட்டமாக லுக்மான் (அலை) அவர்கள் சமூகப் பணிகளைப் (நன்மையை ஏவுதல்) பற்றிப் பேசுகிறார்கள். சமூகப் பணியில் ஈடுபடுபவருக்கு மன உறுதி தேவை. அந்த மன உறுதியைத் தொழுகை வழங்குகிறது.


"நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான மற்றும் தீய காரியங்களிலிருந்து விலக்கும்" (29:45) என்ற குர்ஆன் வசனத்தின்படி, மகனைத் தீமைகளிலிருந்து காக்கத் தொழுகையே சிறந்த கவசம்.

"என் அருமை மகனே!" அழைப்பின் நுணுக்கம் இந்த வசனத்தில் லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் மகனை அழைக்கும் விதம் கனிவானது.

அதிகாரத்துடன் கட்டளையிடாமல், பாசத்துடன் இந்த உயர்வான கடமையை முன்வைக்கிறார்கள். பிள்ளைகளுக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்கும்போது பெற்றோர்கள் மென்மையையும் அன்பையும் கையாள வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.


தொழுகை என்பது வெறும் சடங்கு அல்ல; அது ஒரு மனிதனின் ஆன்மீக ரீசார்ஜ் (Spiritual Recharge). லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் மகன் ஒரு சிறந்த மனிதனாக வளர வேண்டும் என்பதற்காக, அவனது அடித்தளத்தைத் தொழுகையின் மூலம் பலப்படுத்துகிறார்கள்.


அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உள்ளச்சம்


அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்குத் தயாராகி, ஒளுச் செய்யும்போது அவர்களின் முகம் மஞ்சள் நிறமாக மாறிவிடும், உடல் நடுங்கும். யாராவது ஏன் இப்படி ஆகிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் கூறுவார்கள்:

"விண்ணுலகமும் மண்ணுலகமும் சுமக்க மறுத்த ஒரு மிகப் பெரிய பொறுப்பை (அமானிதத்தை) இப்போது நான் என் ரப்பிற்கு முன்னால் சுமக்கப் போகிறேன். அதை என்னால் சரியாக நிறைவேற்ற முடியுமா என்ற அச்சமே என்னை இப்படி ஆக்குகிறது.” நூல்: இஹ்யா உலூமித்தீன் 


2)"நன்மையை ஏவுவாயாக, மஃரூஃப்" (நன்மை) என்பதன் பொருள்


குர்ஆன்"கைர்" (நன்மை) என்ற பொதுவான வார்த்தையைப் பயன்படுத்தாமல், இங்கே "மஃரூஃப்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது.

அர்த்தம்: 'மஃரூஃப்' என்றால் "அனைவராலும் அறியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட நல்ல விஷயம்" என்று பொருள்.


இஸ்லாம் எதை நன்மையெனக் கூறுகிறதோ, எது மனித புத்திக்கு நல்லதாகத் தெரிகிறதோ (உண்மை பேசுதல், உதவி செய்தல், நீதி பேணுதல் போன்றவை) அவை அனைத்தும் இதில் அடங்கும்.


ஏன் தொழுகைக்கு அடுத்து இது வருகிறது?

தொழுகை என்பது ஒரு மனிதனைத் தனிப்பட்ட முறையில் பரிசுத்தப்படுத்துகிறது. ஆனால், இஸ்லாம் ஒரு மனிதன் தான் மட்டும் நல்லவனாக இருந்தால் போதாது, தன் குடும்பத்தையும் சமூகத்தையும் நல்லதாக மாற்ற முயல வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.


"நான் தொழுதால் போதும், மற்றவர்கள் எப்படியோ போகட்டும்" என்ற எண்ணத்தை இது உடைக்கிறது.


ஒரு சமுதாயம் அழிவிலிருந்து தப்ப வேண்டுமானால், அங்கு நன்மையை ஏவும் பணி நடந்துகொண்டே இருக்க வேண்டும்.


நன்மையை ஏவும் முறைகள் (பண்புகள்)

நன்மையை ஏவுவது என்பது ஏதோ ஒரு அதிகாரத்தைக் கையில் எடுப்பதல்ல. அதற்குச் சில ஒழுக்கங்கள் உள்ளன:

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மகனிடம் காட்டிய அதே அன்புடன் மக்களிடம் நன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்.

எதை மற்றவர்களுக்குச் சொல்கிறோமோ, அதை முதலில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

மக்களின் நிலையைப் புரிந்து, அவர்களுக்குப் புரியும் மொழியில் பக்குவமாகச் சொல்ல வேண்டும்.


நன்மையை ஏவுவதால் கிடைக்கும் நன்மைகள்


"மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயங்களில் நீங்களே சிறந்தவர்கள்; (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள்..." (அல்குர்ஆன் 3:110).


நன்மையை ஏவுபவர்கள் இருக்கும் ஊரை அல்லாஹ் எளிதில் அழிப்பதில்லை.


தொடர் நன்மை (ஸதக்கத்துல் ஜாரியா): நீங்கள் ஒருவருக்கு ஒரு நன்மையைச் செய்யச் சொல்லி, அவர் அதைச் செய்தால், அவருக்குக் கிடைக்கும் அதே நன்மை உங்களுக்கும் கிடைக்கும்.


"நன்மையை ஏவுவது என்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது பிறர் மீது நாம் காட்டும் உண்மையான அன்பு" 


சிறுவர்களின் உயரிய அணுகுமுறை


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரக்குழந்தைகளான ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் சிறுவர்களாக இருந்தபோது, ஒருமுறை மஸ்ஜிதுந் நபவிக்கு வந்தார்கள். அங்கே ஒரு முதியவர் ஒளுச் (உறுப்புக்களைச் சுத்தம் செய்தல்) செய்து கொண்டிருந்தார். 


ஆனால், அவர் சில உறுப்புகளைச் சரியாகக் கழுவாமல் தவறு செய்வதை இந்தச் சிறுவர்கள் கவனித்தனர்.

அந்தப் பெரியவர் ஒரு முதியவர் என்பதால், அவரிடம் நேரடியாகச் சென்று "நீங்கள் செய்வது தவறு" என்று சொன்னால் அவர் சங்கடப்படலாம் அல்லது கோபப்படலாம் என்று அந்தச் சிறுவர்கள் யோசித்தனர்.


எனவே, அவர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டனர். அந்த முதியவரிடம் சென்று, “ நாங்கள் இருவரும் ஒளுச் செய்கிறோம். எங்களில் யார் மிகச் சரியாக ஒளுச் செய்கிறோம் என்பதை நீங்கள் நடுவராக இருந்து பார்த்துச் சொல்ல முடியுமா?" என்று பணிவாகக் கேட்டனர்.


அந்த முதியவர் சம்மதித்தார். இரு சிறுவர்களும் மிகத் துல்லியமாக, நபிகளார் காட்டிய முறைப்படி ஒளுச் செய்து காட்டினர். இதைப் பார்த்த அந்த முதியவர் தன் தவறை உணர்ந்து கொண்டார். புன்னகையுடன் அந்தச் சிறுவர்களிடம் சொன்னார்:


"என் அருமைப் பிள்ளைகளே! உங்கள் இருவரின் ஒளுவுமே சரியாக இருக்கிறது. நான்தான் இதுவரை தவறாகச் செய்து கொண்டிருந்தேன். இப்போது உங்களிடமிருந்து சரியான முறையைக் கற்றுக்கொண்டேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!” நூல் : இஹ்யா உலூமித்தீன் 



3) தீமையை விட்டும் மனிதர்களை விலக்குவாயாக…”(வந்ஹ அனில் முன்கர்) என்பதாகும். 


1. "முன்கர்" (தீமை) 'முன்கர்' என்றால் மார்க்கத்தாலும், மனித அறிவாலும் வெறுக்கத்தக்க, அங்கீகரிக்கப்படாத காரியங்கள் என்று பொருள்.

இதில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் (ஷிர்க்), பொய், திருட்டு, வட்டி, அநியாயம், ஆபாசம் போன்ற அனைத்துப் பாவங்களும் அடங்கும்.


தீமையைத் தடுக்கும் முறைகள் (நபிகளாரின் வழிகாட்டுதல்)

தீமையைத் தடுப்பதற்கென்று ஒரு படிநிலை உள்ளது. 


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்:

"உங்களில் யாராவது ஒரு தீமையைக் கண்டால், அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும்; அதற்குச் சக்தியில்லையெனில் தனது நாவால் (எடுத்துச் சொல்லி) தடுக்கட்டும்; அதற்கும் சக்தியில்லையெனில் தனது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் (இறைநம்பிக்கையின்) மிகக் குறைந்த நிலையாகும்." (நூல்: முஸ்லிம்).


ஒரு சமுதாயத்தில் தீமை நடக்கும்போது அதைக் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருந்தால், அந்தத் தீமையின் பாதிப்பு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அழித்துவிடும்.


ஒரு தந்தை தன் மகனுக்குத் தைரியத்தை ஊட்டுகிறார். தீமையைக் கண்டு அஞ்சாமல், அதைத் தட்டிக்கேட்கும் மனப்பக்குவம் ஒரு முஃமினுக்குத் தேவை என்பதை இங்கே வலியுறுத்துகிறார்கள்.


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்டிப்பும் கனிவும்

தீமையைத் தடுப்பதில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகவும் உறுதியானவர்கள். 

ஒருமுறை அவர்கள் கடைவீதியில் ரோந்து சென்றபோது, ஒரு வியாபாரி தனது பொருளில் கலப்படம் செய்திருப்பதைக் கவனித்தார்கள்.


அவர்கள் உடனடியாக அந்தத் தீமையைத் தடுத்ததோடு, "எங்கள் சந்தையில் கலப்படம் செய்பவர் எங்களைச் சார்ந்தவர் அல்ல" என்ற நபிகளாரின் பொன்மொழியை நினைவுபடுத்தி அந்த வியாபாரியைத் திருத்தினார்கள்.


அதிகாரத்தால் தீமையைத் தடுக்கும் அதே வேளையில், அதற்குப் பின்னாலுள்ள அறநெறியையும் அவர்கள் போதித்தார்கள்.


தீமையைத் தடுப்பவருக்குத் தேவைப்படும் பண்புகள்

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது இஹ்யா உலூமித்தீன் நூலில் தீமையைத் தடுப்பவருக்கு மூன்று பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார்:


கல்வி (இல்ம்): எது நன்மை, எது தீமை என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.


இறையச்சம் (தக்வா): தீமையைத் தடுக்கும்போது வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்.


நற்பண்பு (ரிஃப்க்): மென்மையாகவும், பக்குவமாகவும் சொல்ல வேண்டும்.

நேர்மையான சிறுமி

இரவில் மக்களின் நிலையை அறிவதற்காக மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தாய்க்கும் மகளுக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்டார்கள்.

தாய்: "மகளே! விடியப்போகிறது, சீக்கிரம் பாலில் கொஞ்சம் தண்ணீரைக் கலந்து வை. அப்போதுதான் அதிக லாபம் கிடைக்கும்."

மகள்: "அம்மா! அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்கள் பாலில் தண்ணீர் கலப்பதைத் தடை செய்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியாதா?"

தாய்: "இந்த நள்ளிரவில் உமர் எங்கே பார்க்கப்போகிறார்? அவர் தூங்கிக் கொண்டிருப்பார். நீ தைரியமாகக் கலக்கு."

மகள்: "அம்மா! உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்க்காவிட்டாலும், உமருடைய ரப் (அல்லாஹ்) பார்த்துக் கொண்டிருக்கிறான். உமர் முன்னிலையில் ஒரு மாதிரியாகவும், அவர் இல்லாதபோது வேறு மாதிரியாகவும் என்னால் நடக்க முடியாது. இந்தத் தீமையை என்னால் செய்ய முடியாது."

வெளியே நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தச் சிறுமியின் இறை அச்சத்தைக் கண்டு வியந்தார்கள். மறுநாள் அந்த நேர்மையான சிறுமியைத் தனது மருமகளாக (தனது மகன் ஆஸிம் என்பவருக்கு மணமுடித்து) ஏற்றுக் கொண்டார்கள். இந்தச் சிறுமியின் வழித்தோன்றலில் தான் பிற்காலத்தில் நீதியான அரசர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பிறந்தார்கள்.நூல்:ஸியர் அஃலாமுன் நுபலா 

4) உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக…”

ஏன் இந்த இடத்தில் பொறுமை (ஸப்ர்) வருகிறது?

ஒரு மனிதன் தனிப்பட்ட முறையில் தொழுதால் அவனுக்குப் பெரிய எதிர்ப்பு வராது. ஆனால், அவன் சமுதாயத்தில் இறங்கி "நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கத்" தொடங்கும்போது, அவனுக்குப் பல முனைகளிலிருந்து எதிர்ப்புகள் வரும்

மக்கள் அவனைக் கேலி செய்வார்கள்.

அவதூறுகளைப் பரப்புவார்கள்.

உடல் ரீதியான அல்லது பொருளாதார ரீதியான கஷ்டங்களைக் கொடுப்பார்கள்.

இத்தகைய சூழலில் அந்தப் பணியைக் கைவிட்டு விடாமல் இருப்பதற்கே "பொறுமை" அவசியம் என லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இமாம்கள் பொறுமையை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்கள்:

1)வணக்க வழிபாடுகளில் பொறுமை: சோம்பல் வரும்போது அதை அடக்கித் தொழுகையை நிலைநாட்டுதல்.

2)பாவங்களைத் தவிர்ப்பதில் பொறுமை: மனம் தீமையைத் தூண்டும்போது அதைத் தடுத்துக் கட்டுப்படுத்துதல்.

3)சோதனைகளின் போது பொறுமை: அல்லாஹ்விடமிருந்து வரும் கஷ்டங்கள் மற்றும் மனிதர்களால் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக் கொள்ளுதல்.

 "நிச்சயமாக இதுவே உறுதியான செயல்களில் உள்ளதாகும்"

இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் "இது மிக உறுதியான செயல்" (அஸ்மில் உமூர்) என்கிறான்.

கஷ்டம் வரும்போது திருப்பித் தாக்குவது எளிது. ஆனால், இறைவனுக்காகத் துன்பத்தைச் சகித்துக் கொண்டு, தன் இலட்சியத்தில் உறுதியாக இருப்பதுதான் உண்மையான வீரம். அதனால்தான் அல்லாஹ் இதனைப் புகழ்கிறான்.

குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதித் தருணமும் பொறுமையும்

மக்கத்துக் காஃபிர்கள் குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சதி செய்து பிடித்துச் சென்று, மக்காவின் 'தன்யீம்' என்ற இடத்தில் சிலுவையில் ஏற்றித் தூக்கிலிடத் தீர்மானித்தனர். அவர் கொல்லப்படுவதற்கு முன்பு அவரிடம் காஃபிர்கள் ஒரு கேள்வியைக் கேட்டனர்:

"முஹம்மது இப்போது உனக்கு பதிலாக இந்தச் சிலுவையில் இருப்பதையும், நீ உனது குடும்பத்துடன் நிம்மதியாக வீட்டில் இருப்பதையும் நீ விரும்புவாயா?"

இதைக் கேட்ட குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், மரண பயம் ஏதுமின்றி உறுதியாகச் சொன்னார்கள்:

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எனது குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பதையும், அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு முள் தைப்பதையும் கூட நான் விரும்ப மாட்டேன்!"

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த காஃபிர்கள் அவர்களை ஈட்டிகளால் குத்தித் துன்புறுத்தினார்கள். உடல் சிதைக்கப்பட்ட அந்த மரண வேதனையிலும் அவர் காட்டிய பொறுமை ஈடு இணையற்றது. அவர்கள் மரண தருவாயில் பாடிய கவிதை வரிகள் இன்றும் வரலாற்றில் அழியாதவை:

"நான் ஒரு முஸ்லிமாகக் கொல்லப்படும்போது, எனது உடல் எந்தப் பக்கத்தில் சாய்ந்து விழுகிறது என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். இவை அனைத்தும் அல்லாஹ்வின் பாதையில் ஏற்படுபவை. அவன் நாடினால் சிதைக்கப்பட்ட எனது உடல் உறுப்புகளின் மீது பரக்கத் செய்வான்.” நூல் :புகாரி 

5) "(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே!

துஸஇர்" (Tusa'ir) - வார்த்தையின் பொருள்

இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள 'துஸஇர்' என்ற வார்த்தை 'ஸஅர்' (Sa'ar) என்ற அரபுச் சொல்லிலிருந்து வந்தது.

ஒட்டகங்களுக்கு ஏற்படும் ஒருவித கழுத்து நோய்க்கு 'ஸஅர்' என்று பெயர். அந்த நோய் வந்தால் ஒட்டகத்தின் கழுத்து ஒரு பக்கமாகத் திரும்பிவிடும், அதால் நேராகப் பார்க்க முடியாது.

ஒரு மனிதன் தற்பெருமையால் தன் முகத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொண்டு, மற்றவர்களை அலட்சியமாகப் பார்ப்பதை இந்த நோய்க்கு அல்லாஹ் ஒப்பிடுகிறான். அதாவது, பெருமை கொள்வது என்பது ஒரு மன நோய் என்பதை இந்த வார்த்தை உணர்த்துகிறது.

முகத்தைத் திருப்புதல் என்பதன் சமூகப் பாதிப்புகள்

மற்றவர்களிடம் பேசும்போது முகத்தைத் திருப்பிக் கொள்வது அல்லது முகத்தைச் சுளிப்பது பின்வரும் தீய குணங்களைக் காட்டுகிறது

எதிரே இருப்பவர் ஏழை என்றோ அல்லது வசதி குறைந்தவர் என்றோ கருதி அவரை மதிக்காமல் இருப்பது.

"நான் பெரியவன், எனக்கு இவர்களோடு பேசத் தகுதியில்லை" என்ற எண்ணம்.

மற்றவர்கள் மீதுள்ள பொறாமை அல்லது பகையினால் முகத்தைக் கடுகடுப்பாக வைத்திருப்பது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரிடம் பேசினால், வெறும் முகத்தை மட்டும் திருப்ப மாட்டார்கள்; தனது முழு உடலையும் அவர் பக்கம் திருப்பி, அவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பார்கள்.

ஒரு சிறிய குழந்தை பேசினாலும் அதன் உயரத்திற்கு இறங்கி நின்று கவனிப்பார்கள்.

இதுதான் லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் மகனுக்குக் கற்றுத்தந்த "பெருமையற்ற" அணுகுமுறை.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்டிப்பு

ஒருமுறை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு இளைஞன் தனது பிடரியை (கழுத்தை) ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொண்டு, மிகவும் பவ்யமாக நடப்பதைக் கண்டார்கள். அவர் ஏதோ பெரிய ஆன்மீகவாதி போலக் காட்டிக்கொள்ள அப்படி நடந்தார்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடம் சென்று, "உமது கழுத்தை நேராக நிமிர்த்தி நடப்பீராக! உமது உள்ளத்தில்தான் அச்சம் (தக்வா) இருக்க வேண்டுமே தவிர, உமது கழுத்தில் அல்ல" என்று கடிந்து கொண்டார்கள். வணக்கத்தில்கூட "செயற்கையான" குனிவு அல்லது கோணலாக இருப்பது பெருமையின் ஒரு வடிவம் என்பதை அவர்கள் உணர்த்தினார்கள்.நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்

லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு தந்தையாகத் தன் மகனுக்குச் சொன்ன இந்த அறிவுரைகள், இன்று ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடங்களாகும்.

"உள்ளத்தால் இறைவனுக்கும், செயலால் சமூகத்திற்கும், பண்பால் மனிதர்களுக்கும் பயனுள்ளவராக வாழ்வதே லுக்மான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் காட்டிய வழி.”

யா அல்லாஹ்! எங்களை ஐவேளைத் தொழுகையை அதன் முறைப்படி பேணித் தொழும் நல்லடியார்களாக ஆக்குவாயாக! எங்கள் தொழுகையில் உள்ளச்சத்தையும், உறுதியையும் தருவாயாக!

ரஹ்மானே! நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, உனது பாதையில் பாடுபடும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக எங்களை மாற்றுவாயாக! அந்தப் பணியில் எங்களுக்கு ஏற்படும் சோதனைகளையும், கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளும் 'ஸப்ர்' எனும் பொறுமையை எங்களுக்குக் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களிலிருந்து தற்பெருமை, ஆணவம், அகங்காரம் ஆகிய நோய்களை வேரோடு அகற்றுவாயாக! மனிதர்களிடம் பணிவாகவும், இன்முகத்துடனும் பழகும் நற்பண்புகளை எங்களுக்கு வழங்குவாயாக! பூமியில் பெருமையாக நடப்பதையும், அலட்சியமாக முகம் திருப்புவதையும் விட்டும் எங்களைக்காப்பாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன் 


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.



முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக