செவ்வாய், 28 ஏப்ரல், 2020

மே (உழைப்பாளர் தினம்)


மே தினம் 1-ம் நாள் உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் மேன்மையை உணர்த்தவும், உழைப்பாளர்கள் உயர்வானவர்கள் என்பதைப் பிரகடனப் படுத்துவதாகவும் மே தினம் திகழ்கிறது.
மே தினத்தன்று உழைப்பாளர் சிலைக்கு மாலையணிவிப்பதோடு - இதழ்களில் வாழ்த்துச் செய்தி தெரிவிப்பதோடு மட்டும் தம் 'கடமையுணர்வை' அரசியல் வாதிகள் வெளிப்படுத்திக் கொண்டாலும் தங்களை நினைவு கூற ஒரு தினம் உள்ளது என்பதையெண்ணி உழைப்பாளர் வர்க்கம் பூரிப்படைகிறது.

இஸ்லாம் மறுமைக்கு வழிகாட்டும் வாழ்வியல் நெறியைக் கொண்டது தான் மறு உலகை மையமாகக் கொண்டு செயல்படும் மார்க்கம் தான்! ஆனாலும் உலக வாழ்வுக்குத் தேவையான பொருட்களை வரம்புகளுடன் தேடிக் கொள்வதற்காக உழைப்பதை உதாசீனப் படுத்தவில்லை. ஊக்கப்படுத்துகிறது.

 وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ
அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ளவற்றிலிருந்து (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக் கொள் மேலும் இவ்வுலகில் உனது பங்கையும் நீ மறந்து விடாதே (அல்குர்ஆன் 28:77)

பகல் - தொழிற்களம்

 وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
பகலை வாழ்க்கைக் குரியதை தேடிக் கொள்ளும்) நேரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 78:1)

ஒரு நாளை இரு பாதியாகப் பிரித்து பகலை உழைப்புக்கு உகந்த நேரமாகவும், இரவை ஓய்வுக்குரிய நேரமாகவும் அல்லாஹ் தேர்வு செய்துள்ளதை மேற்காணும் வசனம் தெளிவு படுத்துகிறது.


அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் தொழில் துறையில் ஈடுபடும் விசுவாசியை நேசிக்கின்றான் நூல் : தப்ரானி

யாசிப்பதைத் தவிர்த்துக் கொள்வதற்காக, குடும்பத் தேவைகளை நிறைவேற்ற அண்டை அயலாருடன் நட்புறவுடன் வாழ்வதற்காக எவர் ஹலாலான முறையில் பொருள் தேடுவாரோ அவர், பவுர்ணமி இரவின் சந்திரனைப் போல முகம் பிரகாசித்தநிலையில் அல்லாஹ்வை சந்திப்பார்  (நூல்: பைஹகீ

பெரிய வணக்கசாலி

நபி ஈஸா (அலை) அவர்களை ஒருவர் சந்தித்தார். "நீ என்ன தொழில் செய்கிறாய்? எனக் கேட்ட போது 'இறை வணக்கத்தில் பொழுதுகளைக் கழிக்கின்றேன்என்றார். உன் தேவைகளையும், குடும்பத் தேவைகளையும் கவனித்துக் கொள்வது யார்? என வினவிய போது அதை என் சகோதரர் பார்த்துக் கொள்வார் என்றார் அதற்கு நபி ஈஸா (அலை) 'அப்படியானால் அவர் தான் உன்னை விட பெரிய வணக்கசாலி என்றார்கள். (நூல் : இஹ்யா)

வணக்கவழிபாட்டில் ஈடுபட்டிருப்பவரை விடவும் மற்ற தொழில் துறைகளையும் கவனித்துக் கொண்டு இபாதத்திலும் ஈடுபட்டிருப்பவர் அதிக நன்மைக்குரியவராகிறார். வணக்கசாலி இபாதத்துக்குரிய நன்மைகளை மட்டுமே பெறுகிறார். இபாதத்தையும், தொழிலையும் கவனித்துக் கொள்பவர் இபாதத்தின் நன்மைகளையும். தன் செல்வத்தின் மூலம் உழைப்பின் மூலம் மற்றவருக்கு உதவி செய்த நன்மையையும் பெற்று அவரே பெரிய வணக்கசாலியாகிறார்.

உட்கார வேண்டாம்

குந்தித் தின்றால் குன்றும் மாளும்' என்பார்கள். இதே கருத்தை உமர் (ரலி அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்

இறைவா! எனக்கு ரிஜ்க் (இரணம்) வழங்கியருள் என பிரார்த்தனை மட்டும் செய்து கொண்டு உங்களில் எவரும் பொருள் தேடாமல் உட்கார்ந்து விட வேண்டாம் உங்களுக்கு தெரியும் வானம் தங்கத்தையோ, வெள்ளியையோ மழையாகப் பொழியாது" என்றார்கள் (நூல் : இஹ்யா

ரிஜ்க் சம்பந்தமாக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் நம் கடமை முடிந்து விட்டது என எண்ணாமல் அவை வரும் வழிகளை அறிந்து அவற்றில் ஹலாலான முறையில் முனைய வேண்டுமென்பதை உமர் (ரலி உணர்த்துகிறார்கள்

ஏழை எளியோரே! உங்கள் சிரசை உயர்த்துங்கள். வியாபாரத்தில் ஈடுபடுங்கள் அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஜனங்களின் பால் தேவையுள்ளவர்களாக நீங்கள் ஆகிவிட வேண்டாம்" எனவும் உமர் (ரலி அவர்கள் யாசிப்பதிலிருந்து வியாபாரத்தின் பால் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புகிறார்கள், நூல்:தஸ்பீஹ்.

தன் நாயகம் இ அவர்கள் கூறுகிறார்கள் : வியாபாரத்தில் ஈடுபடுங்கள் ஏனெனில் ரிஜ்கின் பத்து பங்குகளில் ஒன்பது பங்குகள் அதில் தான் உள்ளது. (நூல் : ஹில்யா)

காரண உலகம்.

நாம் வசிக்கும் உலகம் 'ஆலமுல் அஸ்பாப் காரண உலகமாகும். ஒரு நிகழ்வை மற்றொரு நிகழ்வுக்கு காரணமாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்

மனித உடலுக்குள் ஏற்படும் நிகழ்வுகளில் பசியும் ஒன்று அல்லாஹ் நாடியிருந்தால் சுவன வாழ்க்கையைப் போல உலக வாழ்விலும் பசியை ஏற்படாமலிருக்கர் செய்திருக்கவாம். அல்லது பசியைப் போக்கும் உணவை வேளா வேளைக்கு வானிலிருந்து இறக்கியருளச் செய்திருக்கலாம். அல்லாஹ்வுக்கு இவை சாத்தியமே..!

ஆனால் பசியை அல்லாஹ் ஏன் ஏற்படுத்துகிறான்? பசிக்குரிய உணவை உற்பத்தி செய்து உண்ணும் நியதியை ஏன் உண்டாக்கினான்

ஆம்! பசி ஏற்படுவதினால் தானே அதனை போக்கும் வழிமுறைகளை மனிதன் ஆராய்கிறான். அதனால் தானே ஒரு ஜாண் வயிற்றுப் பசி போக்க எண் ஜாண் உடலை வருத்தி சிரமப்பட்டு உழைக்கிறான்

பசியே இல்லையென்றாலோ, வானிலிருந்து உணவு இறங்கியிருந்தாலோ உலகில் என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் உலகில் அன்றாடம் இயங்க வேண்டிய இயக்கங்களும், பணிகளும் நடைபெறாமல் போகும். ஒவ்வொருவரும் தத்தமது வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு வெறுமெனே இருந்து விடுவார்கள் உலகமே ஸ்தம்பித்துப் போய்விடும். அல்லாஹ் மிகுந்த ஞானவான். ஒவ்வொருவரின் உழைப்பின் மூலம் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறான். மனிதர்களின் உழைப்புக்கு மூல காரணியாக அமைந்திருப்பது வயிற்றுப் பசி உலக தேவைகள்

உணவின் பயணம்

நாம் வாயில் வைத்து சுவைக்கும் உணவு பயணித்த வரலாற்றை சற்று பினனோக்கிப் பாருங்கள், எத்தனை இடங்களில் எத்தனை மனிதர்களின் உழைப்ப அதில் கலந்துள்ளது. யாருக்கோ உரிய வயலில் விவசாமிகள் கூலி வேலைக்காக உழவு உழுது வித்துக்களையிட்டு நீர் பாய்ச்சுகிறார்கள். உரமிட்டு சற்று வளர்ந்ததும் யார்? யாரோ வந்து களை எடுக்க, களத்து மேட்டில் அடித்தெடுத்த தானியங்கள் சுத்தம் செய்யப்பட்டு விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன

விவசாமி கையிலிருந்து உணவு தானியங்கள் வியாபாரி கைக்கு மாறுகிறது அரவைக்குச் செல்கிறது. அங்கும் பல தொழிலாளர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். அரைத்து பேக்கிங் செய்யப்பட்டு குடோனுக்குப் போய் கடைக்கு வந்து வீட்டுக்கு வாங்கிப் போய் சமைத்து வாயில் வைத்து ருசிக்கும் வரை அப்பப்பா. எத்தனை நபர்கள் அதற்காக வியர்வை சிந்தியுள்ளார்கள், உடல் நோக உழைத்துள்ளார்கள்

உணவின் இந்த தொடர் பயணத்தை உணர்ந்து பார்க்கும் மனிதன் அல்லாஹ்வின் பெருங்கிருபையை மறுக்க முடியுமா? சிரமப்பட்டு உழைத்து சம்பாதித்த ஊழியத்திலிருந்து உண்டு ருசிக்கும் உணவே இனிமையானது. உணவு பயணிக்கும் பாதை நெடுகிலுமுள்ள தொழிலாளர்களின் உயரிய உழைப்பு உணவின் சுவையை மெரு கூட்டுகிறது. ஒரு கவளம் உணவுக்குள் ஒரு நூறு சரித்திரத்தை அல்லாஹ் புதைத்து வைத்துள்ளான். இது அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றலை உணர்ந்து பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதுவே காரண உலகின் தத்துவமாகும்.

உழைப்பாளியின் வியர்வை

உழைப்பாளர் வர்க்கத்தின் சிறப்பை மேம்படுத்தும் வகையில் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்: உழைப்பாளிக்கு அவரின் வியர்வை உலரும் முன் அவருக்குரிய ஊதியத்தை வழங்கி விடுங்கள்,
(நூல் : இப்னு மாஜா)

பகல் முழுவதும் உழைத்துக் களைத்துப் போன தொழிலாளி ஊதியத்தை கையில் வாங்குகிற பொழுது மகிழ்ச்சியில் களைப்பை மறந்து விடுகிறான். தன் குடும்பத் தேவைகளை நிறைவு செய்யும் செல்வத்தைக் கண்டு மகிழ்வடைகிறான், தொழிலாளியின் மகிழ்வில் முதலாளி பங்கெடுக்க வேண்டுமென்பதற்காகவே உடனடி ஊதியம் வழங்க நாயகம் ஸல் அவர்கள் பணிக்கிறார்கள்

நாட்சென்ற கொடை நடை கூலி' என்பார்கள், பல நாட்கள் அலைய விட்டுக் கொடுக்கிற தர்மம் கூட அலைச்சலுக்குரிய கூலியாகத்தான் கணிக்கப்படுகிறது. தர்மம் கொடுப்பதிலேயே கூட அலைய விடக் கூடாது என்ற நியதி பின்பற்றப்பட வேண்டுமென்கிறபோது உழைப்பாளிக்குரிய உரிமையான ஊதியத்தை தர தாமதிப்பது கொடுமையிலுங் கொடுமையாகும்.

உரிய நேரத்தில் ஊதியம் தராமல் இழுத்தடிப்பதால் உழைப்பாளிக்கு முதலாளி கடன்காரனாகி விடுகிறான்

தமிழகத்தின் மார்க்க அறிஞர்களின் வரிசையில் அணிவகுத்திருந்த மறைந்த மாமேதை ஒருவர் 50 ஆண்டுகளுக்கு முன் கீழ் திசை நாடுகளுக்கு பயணம் செய்திருந்த போது ஒரு பெரிய நிறுவனத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அவர்களை அழைத்துச் செல்ல ஊழியர்கள் சிலர் வந்தனர். அவர்களின் வாடிய முகங்களைக் கண்ட மெளலானா, அவர்களிடம் பேச்சுக் கொடுத்து காரணத்தை அறிய முற்பட்ட போது தயங்கிய படியே தம் நிலைகளைக் கூறினர். நிறுவனம் நல்லபடியாக இயங்கிய போதும் சம்பளம் தாமதமாகத் தரப்படுகிறது. சில நேரங்களில் 6.7 மாதங்கள் சேர்த்துத்தான் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதனால் ஊரில் குடும்பத்தினர் மிகுந்த அல்லலுக்குள்ளாகிறார்கள் என விவரித்தனர்.

விருந்து முடிந்ததும் முதலாளிமார்களை தனியே சந்தித்த மெலானா அவர்கள் கூறினார்கள். "வேலைக்காரர்களின் வியர்வையில் தான் நாம் வாழ்கிறாம் எனவே அவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதிக்கக் கூடாது. உரிய நேரத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லையெனில் நீங்கள் அவர்களுக்கு கடன்கார்களாகவோ, அல்லது தொழில் பங்கு தாரர்களாகவோ ஆகிவிடுகிறீர்கள். சம்பளபாக்கியை கொடுப்பதுடன் லாபத் தொகையையும் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே ஊதிய விஷயத்தில் தொழிலாளிகளின் நம்பிக்கையைப் பெறுவது முதலாளிகளின் கடமை.

இதன் பின்னர் அந்த கம்பெனியில் மெளலானாவின் வழிகாட்டுதலால் சம்பளப் பட்டுவாடா சரியான நேரத்தில் செய்யப்பட்டிருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. மெலானாவின் தொடர்பை அம்முதலாளிகள் அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள், பின் நஷ்டம் ஏற்பட்ட போது கம்பெனியையே நிறுத்திவிட்டார்கள்.

கூலி நிர்ணயம்

ஒவ்வொரு தொழிலாளருக்கும் யூனியன் மூலம் ஒரு நாளுக்கான கூலி நிர்ணயம் செய்யப்பட்டு அதன் படியே பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கூலியை முன்பே பேசிக் கொள்வது தான் இரு தரப்பினருக்கும் ஏற்றமானதாகும். நியாயமான ஊதியத்தை முறைப்படி பேசிக் கொண்டு முழுமையாக வழங்கினால் தான் சரியான வேலையை எதிர்பார்க்க முடியும். கூலியில் குறைவு ஏற்படும் போது தொழிலாளி திருடுவதற்கும், வேலையில் குளறுபடி செய்வதற்கும் வாய்ப்பை நாம் வழங்கியது போலாகும்.

முதலாளி - தொழிலாளி இருதரப்பும் பாதிப்பில்லாமல் செயல்பட இஸ்லாம் வழி வகுக்கிறது. நாயகம் ஸல் அவர்கள் கூறுகிறார்கள்: கூலிக்காக ஆட்களை நியமிக்கின்ற போது அவருக்குரிய ஊதிய விகிதத்தை தெளிவு படுத்திக் கொள்ளட்டும் (நூல் : இப்னு மாஜா

உலகின் முதல் தொழில்

பூமியின் மேற்பரப்பில் நடந்த முதல் தொழில் விவசாயத் தொழிலாகும். உழவுததொழில் மனித சமுதாயத்தின் உயிர் தொழிலாகும். உழவும் - நெசவும் திராவிட சமூகத்தின் பூர்வீக தொழில் என திராவிட வரலாறு கூறுகிறது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அதையே அல்லாஹ் உலகின் ஆதி தொழிலாகவும் ஆக்கியுள்ளான்

முதல் விவசாயி ஆதம் (அலை ஆவார்கள், பூமிக்கு வந்ததும் பசி ஏற்பட்டது சுவனத்தின் சுகந்தங்களுக்கு பழக்கப்பட்டு பசி என்றால் என்னவென்று அறியாத அவர்களுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது

கஃபுல் அஹ்பார் (ரலி அறிவிக்கிறார்கள்: ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு அனுப்பிய போது வானவர் மீகாயீல் (அலை) கோதுமை வித்துக்களை கொண்டு வந்து "இது தான் உமது உணவும், உம் வாரிசுகளின் உணவுமாகும். பூமியை உழுது கோதுமையை விதைத்து பயிர் செய்யுங்கள்" எனக் கூறிச் சென்றார்

தொழில்களின் தந்தை

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

அவன் பொருட்களின் பெயர்களனைத்தையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்'   அல்குர்ஆன் 2: 31) என்ற வசனத்தின் விரிவுரை தொடரில் முபஸ்ஸிரீன்கள் இவ்வாறு விளக்கம் தருகிறார்கள்

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்களை பயிற்று வித்தான், பின்னர் கூறினான்: ஆதமே உம் வாரிசுகளுக்கு கூறு உலகின் ஜீவிய தேவைகளை நாடினால் இந்தத் தொழில் மூலம் தேடிக்கொள்ளட்டும், மார்க்கத்தைக் கொண்டோ, அதன் சட்ட நெறிகளைக் கொண்டோ உலகைத் தேட வேண்டாம்

தொழில் துறைகளில் ஈடுபட்ட நபிமார்களின் பட்டியலைக் காண்போம்

நபி ஆதம் (அலை விவசாயத்திலும்
நபி நூஹ் அலை) தச்சுத் தொழிலிலும்
நபி இத்ரீஸ் (அலை தையல் கலையிலும்
நபி ஸாலிஹ் அலை) வியாபாரத் துறையிலும்
நபி தாவூது (அலை) இரும்புக் கவசங்கள் தயாரிப்பதிலும்
நபி சுலைமான் (அலை) ஜன்பீல் எனும் பானம் தயாரிப்பிலும்
நபி மூஸா (அலை, ஷூஜப் (அலை, முஹம்மது ஆடுகளை மேய்க்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். (நூல்: ரூஹுல் பயான்)

நாயகம் ஸல் திருமணத்திற்கு முன் வியாபாரப் பிரதிநிதியாகவும், மதீனாவில் யஹுதிகளின் மூலம் விவசாயப் பணிகளிலும் செயல்பட்டுள்ளார்கள்

இமாம்களில் பலரும் தொழில் துறைகளில் சிறந்து திகழ்ந்துள்ளனர், கஸ்ஸாமீ, ஹல்வானி, கஜ்ஜாலீ போன்ற அடை மொழிகள் அவர்களின் தொழில் முறைப் பெயர்களாகும். ஆலம்கீர் அவ்ரங்களஸீப் பாதுஷா அவர்களும் தன் கரத்தினால் தொப்பிகள் தயாரித்தும், குர்ஆன் பிரதிகள் எடுத்தும் விற்பனை செய்தே தம் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார்கள்

தன்மானமிக்க தாவூது (அலை)

நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தன் கரத்தினால் உழைத்து உண்ணும் உணவை விட சிறந்த வேறு எதையும் சாப்பிட மாட்டார், அல்லாஹ்வின் தூதர் நபி தாவூது அலை/ தன் இரு கரத்தினால் உழைத்த ஊதியத்திலிருந்து உணவு உண்பவர்களாக இருந்தார்கள். (நூல் : புகாரி

وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا ۖ يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ

தாவுது (அலை அவர்கள் குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
அவருக்கு நாம் இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
(அல்குர்ஆன் 34-10)

وَعَلَّمْنَاهُ صَنْعَةَ لَبُوسٍ لَكُمْ لِتُحْصِنَكُمْ مِنْ بَأْسِكُمْ ۖ فَهَلْ أَنْتُمْ شَاكِرُونَ

உங்கள் யுத்தத்தில் உங்களைத் தற்காத்துக் கொள்ள போர் கவசங்கள் செய்வதை உங்களுக்காக அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம். (அல்குர்ஆன் 21: 80)

தாவூது அலை அவர்களுக்கு அல்லாஹ் தொழில் கற்றுக் கொடுத்த பின்னணி சுவாரஸ்யமானது.

இரவில் மாறு வேடத்தில் நகர் வலம் வரும் நபி தாவூது அலை) எதிர்படும் பிரஜைகளிடம் தன்னைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்கள் ஆட்சியின் மாட்சியை மக்களும் புகழ்ந்துரைப்பர். இரு வானவர்களை அல்லாஹ் மனித உருவில் அன்று அனுப்பி வைக்கிறான். எதிர்பட்ட அவர்களிடம் 'இந்நாட்டின் அரசர் தாவூதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என நபி கேட்ட போது, மனித தோற்றத்து வானவர்கள் 'அவர் மிக மிக நல்லவர். ஒரு சிறு குறை மட்டும் உள்ளது' என்றனர் அது என்னவென்று ஆவலாகக் கேட்டபோது தாவூதும் அவர் குடும்பத்தினரும் பொது மக்களுக்குரிய அரசு கஜானாவிலிருந்து உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். உடலுழைப்பின் மூலம் கிடைக்கும் பொருளிலிருந்து அதை நிறைவேற்றினால் அவரின் சிறப்புக்கள் முழுமை பெறும்' என வானவர்கள் பதிலளித்தனர்.

இது கேட்டதிர்ந்த தாவூது (அலை) இறையில்லம் மீண்டு வந்து மிஹ்ராபில் அமர்ந்து கொண்டு கண்ணீர் விட்ட நிலையில் அல்லாஹ்விடம் வேண்டினார்கள் ரப்பே பொதுமக்களின் கருவூலத்தில் கை வைக்காமல் சொந்த உழைப்பின் மூலம் என் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள எனக்கொரு தொழிலைக் கற்றுக் கொடு என கோரினார்கள். இரும்பை உருக்கி போர் கவசம் செய்யும் தொழில் நுட்பத்தை அவர்களுக்கு அல்லாஹ் போதித்தான். அதனைத் தயாரித்து விற்பனை செய்து தன் குடும்பத் தேவைகளை நிறைவு செய்ததுடன் ஒரு பகுதியை தர்மமும் செய்தாரகள்

உழைப்பாளியின் மேன்மை

நாயகம் , அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவரின் பணியாள் வெப்பத்தையும், புகையையும் தாங்கிக் கொண்டு உணவு சமைத்துக் கொண்டு வந்தால் அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர் உண்ணட்டும். (நூல் : முஸ்லிம்)

தொழிலாளியின் உயர்வை எங்ஙணம் போற்ற வேண்டுமென்பதை மேற்கண்டவாறு நாயகம் ஸல்  அவர்கள் கூறுகிறார்கள். வேலைக்காரனை உடன் அமரை வைத்து உரையாடியபடி சாப்பிடுவதைப் போல உயர்ந்த அங்கீகாரம் அவனுக்கு வேறெதுவும் கிடையாது

பல கோடிகளுக்குச் சொந்தக்காரனான முதலாளியும், தெருக்கோடியிலுள்ள வேலைக்காரனும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் அதிசயம் அரபு நாடுகளைத் தவிர வேறெங்கும் காண முடியாது, உயர்ந்த அந்தஸ்திலுள்ள அரபியும், அவர் வீட்டு டிரைவரும் ஒரே தட்டில் உணவுண்ணுவது அங்கே சாதாரண நிகழ்ச்சியாகும்.

அடுத்தவன் குடித்த டம்ளரை தொடுவதே பாவம் எனக் கருதும் பழக்கம் நம் நாட்டில் தான். இங்கே வேலைக்காரனுக்கும், சமையல்காரனுக்கும் எச்சில் இலையும், மிச்ச மீதி உணவு மட்டுமே கிடைக்கும். வேலைக்காரர்களை நாயகம் நடத்திய உயர்ந்த பண்பாடு அரபு நாடுகளில் இன்றும் தொடர்வதை காண்கின்றோம்.

உழைக்கும் கரம்

உழைத்து காய்த்துப் போன கரம் ஒவ்வொாரு நாட்டின் தேசிய அடையாளச் சின்னமாகும். எனவே தான் நாயகம் அவர்கள் உழைத்து காய்ப்பேறிய கரத்தை தன் அதரத்துடன் சேர்த்து முத்தமிட்டு அபிமானத்தை வெளிப்படுத்தினார்கள்.

கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷா தன் அமைச்சரவை சகாக்களுடன் இறைநேச் செல்வர் ஃபுழைலுப்னு இயாழ் (ரஹ் அவர்களைக் காண அவர்கள் குடிலுக்கு வந்தார். இரவு நேரமது. விளக்கொளியில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள் அமைச்சர் கதவைத் தட்டியதும் கதவைத் திறந்த போது விளக்கு அணைந்து விட்டது, இறைநேசரின் கரம் பற்றி முஸாபஹா செய்ய கலீபா இருட்டில் தட்டுத்தடுமாறிய போது, கலீபாவின் மிருதுவான கை ஃபுழைல் (ரஹ்) அவர்களின் கரத்தில் பட்டது கலீபாவின் மிருதுவான கரம் அவரின் உழைப்பில்லாத சொகுசு வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஃபுழைல் (ரஹ்) கூறினார்கள்.

இவ்வளவு மிருதுவான கை நரக வேதனைக்குத் தப்ப வேண்டுமே! அமீருல் முஃமினீன்! உமது (உழைக்காமல் சொகுசு வாழ்வு காணும்) மிருதுவான கரம் பற்றி அல்லாஹ்விடம் பதில் கூறியாக வேண்டுமே

இது கேட்டதும் கலீபா தேம்பியழுது விட்டார். ஆக உழைத்துக் காய்ப்பேறிய கரம் உயர்வான கரம். மிருதுவான கரம் சொகுசு வாழ்வின் அடையாளம்


மெளலனா M.S. அஹ்மது மீரான் பைஜிஇமாம்-தைக்கால் பள்ளி கூத்தாநல்லூர்

MANARUL HUDA JUMADHAL UKHRA - 1432 MAY - 2011.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக