புதன், 8 ஏப்ரல், 2020

கரும்பு தின்னக் கூலியா...?







مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

ஒருவன் ஒரு நற்காரியத்தைச் செய்தல், அதுபோன்ற பத்து நற்காரியங்கள் செய்த கூலி அவனுக்கு உண்டு ஒருவன் ஒரு தீய காரியத்தைச் செய்தால் அந்த அளவே தவிர தண்டனை வழங்கப்பெறமாட்டான் அல்குர் ஆன்: (6 : 160)



இஸ்லாம் ஐம்பெருங் கடமைகளை முஸ்லிம்களின் மீது  கடமையாக்கியுள்ளது. அந்தக் கடமைகள் ஒவ்வொன்றையும் செய்பவர்களுக்கு அளவிட முடியாத கூலியையும் அது வாக்களித்துள்ளது


ஆனால், சற்று ஆழமாக சிந்தனை செய்தால், அந்தக் கடமைகளைச் செய்வதற்கு கூலியே தேவையில்லை. கரும்பு தின்னக் கூலியா? என்றொரு வழக்குச் சொல் உண்டு அது போன்றே இந்த ஐந்து கடமைகளும் நமது உடலுக்கு, உள்ளத்துக்கு, ஆன்மாவுக்கு எண்ணி லடங்கா நன்மைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. இவைகள் தவிர வேறு கூலியே இறைவன் தர வேண்டிய தேவை இல்லை


திருக் கலிமா

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பற்றுகோல் தேவைப்படுகிறது. துன்பம் ஏற்படும்போது துவண்டு போகாமல் இருப்பதற்கு ஒரு தூண் தேவைப்படுகிறது தன்னைச் சார்ந்தோரிடம் சொல்லி ஆறுதல் பெறுவதற்கு ஒரு சக்தி தேவைப்படுகிறது தனக்கு மேலால் ஒரு சக்தி காரியமாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த சக்தியின் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்றுமனிதன் நம்பும்போது, தான் விரும்பியவாறு காரியம் ஆகாவிட்டால் அவன் மனம் தளர்ந்து விடாமல் அவனை அந்த எண்ணம் பாதுகாக்கிறது 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்தின் போது தவ்ரு குகையில் அவர்கள் மறைந்திருந்த நிகழ்வை உதாரணமாகக் கூறலாம். எதிரிகள் குகையின் தலைவாயிலை எட்டிவிட்டார்கள். அவர்கள் குனிந்து பார்த்தால் மறைந்திருப்பவர்களைக் கண்டு கொள்வார்கள். இந்த நிலையை உணர்ந்த ஹளரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் கலக்கமடைந்து விட்டார்கள் கலக்கம் தனக்காக அல்ல, அந்த எதிரிகள் தனது தலைவர் மீது ஒரு துருப்பைக் கிள்ளி போட்டால் கூட தன்னால் தாங்கிக் கொள்ள இயலாதே! என்பதை நினைத்துத்தான் 

நண்பரின் கலக்கத்தைக் கண்டு கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்; அல்லாஹ் நம்மோடிருக்கையில் கலக்கம் எதற்கு? என்று கூறினார்கள். இந்த வார்த்தைகளைச் செவியுற்றதும் ஹளரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் மனதை சாந்தம் தழுவிக் கொண்டது

இவ்வாறு தனக்கு மேலால் ஒருவன் துணையிருக்கிறான் என்று நம்பிக்கை வைப்பது மனிதனை துவண்டுவிடாமல் காக்கிறது

அல்லாஹ் கூறுகிறான்:

 اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ

மனித மனங்கள் அனைத்தும் பலகீனமானவையாகவே படைக்கப் பெற்றிருக்கின்றன   அல்குர்ஆன் : (30 : 54)

இதில் இறைவனை நம்பியவன், நம்பாதவன் என்ற பாரபட்சம் கிடையாது எந்தளவு நாத்திகவாதம் புரியக் கூடியவனாக இருந்தாலும், அவனுடைய மனதும் மானசீகமான அந்த சக்தியின் பால் ஏக்கம் கொண்டதாகவே இருக்கிறது

தனக்கு மேலால் உள்ள சக்தியின் பால் நபிக்கை கொண்டதால்வான் மனிதர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இல்லையானால் சில்லரைப் பிரச்சினைகளுக்காகவெல்லாம் மனம் ஒடிந்து அவ்வப்போதே உயிரை விட்டிருப்பார்கள்

இவ்வாறு சிந்திக்கும் வேளையில் லாஇலாஹ இல்லல்லாஹுஎன்ற இறை நம்பிக்கை எந்தளவுக்கு ஊக்கமளிக்கிறது. அழிவிலிருந்து காக்கிறது என்று அறிய முடிகிறது. இது உயிர் காக்கும் மிகப் பெரும் பலனல்லவா, இது தவிர வேறு கூலியும் வேண்டுமா....?

தொழுகை.

மனித சரீரம் சீராக இயங்குவதற்கு உடற்பயிற்சி தேவைப்படுகிறது. பலர் அந்த உடற் பயிற்சியை வழமையாகச் செய்து வருகிறார்கள். அந்த உடற்பயிற்சியின் தேவையை தொழுகை சிறப்பாக ஈடு செய்கிறது

கையை தக்பீருக்காக உயர்த்தும் போதும்; தக்பீர்கட்டும் போதும் புவியீர்ப்பு சக்தியால் எப்போதும் ஈர்க்கப்பட்டு வந்த கையை விடுவித்து வேறு அமைப்பை மாற்றிக் கொடுக்கிறோம் இதனால் கையின் இரத்த ஓட்டம் சீராகின்றது. பின்னர் 90 டிகிரி வளைவில் முதுகை வளைத்து ருகூஉ செய்யும் போது முதுகு பகுதியின் இரத்த ஓட்டம் சிரடைகின்றது. தலையை தரையில் வைத்து ஸுஜூது செய்யும் போது இரத்த ஓட்டம் மூளை நரம்புகளுக்கு சீராகச் செல்ல ஆக்கம் கொடுக்கப்படுகின்றது

இவ்வாறு சீரான எளிதான உடற்பயிற்சியை சிறிது நேர இடைவேளைக்குப் பின் திரும்பத் திரும்ப ஐவேளை தொழுகை மூலம் செய்யப்படுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள் கணக்கிலடங்கா. சீரான இரத்த ஓட்டம், நரம்பு, தசைகளின் முறையான பரிணாமம், ஐவேளை ஒழுச் செய்வதின் மூலம் சுத்தம், தொழுகைக்காக அகத்தத்தை நீக்குவதன் மூலம் சுகாதாரம் போன்ற பலன்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பஜ்ருத் தொழுகைக்குச் செல்லும்போது அந்நேரத்தில் பரவும் ஓசோன் பிராண வாயுவை சவாசிக்கச் செய்யவும், லுஹர் வேளையில் தொழுகச் செல்வது சூரிய கதிர் வீச்சுக்களின் பலனை அடையவும், அஸர், மஃரிபு, இஷா வேளைகளில் அவ்வப்போது உலகில் பரவும் சக்திகளைப் பெறவும் துணை செய்கிறது

இது தவிர தொழுகையை வழமையாகத் தொழுது வருபவர் நல்ல மனித தோரணையில் மாறி விடுவதால் அவர் பாவங்கள் செய்ய துணிவதில்லை அருவருக்கத்தக்க காரியங்களின் பால் அவர் சிந்தனை செல்வதில்லை, அடிதடி காரியங்களில் அவர் ஈடுபடுவதில்லை. மதுபானங்களை தீண்டுவதிலிருந்து காக்கப்படுகின்றார். இதனால் அத்தகைய பாவங்களினால் ஏற்படும் பின்விளைவுகளை சந்திக்கத் தேவையில்லாதவராகின்றார்

திருக்குர்ஆன் கூறுகிறது:


 اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

அருவருக்கத்தக்க காரியங்களிலிருந்தும், மார்க்கத்தால் தடைசெய்யப்பட்ட காரியங்களிலிருந்தும் தடுத்து நிறுத்துகிறது திண்ணமாக தொழுகை அறிவால் அல்குர் ஆன் : (29 : 45)

தொழுகையால் மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்போது அதற்கு மேலும் நன்மை அளிப்பது அவசியமா...?

 நோன்பு

உலகிலுள்ள எல்லா கருவிகளுக்கும் ஓய்வு அவசியப்படுவதைப் போன்றே ஜீரண உறுப்புக்கள் என்ற கருவிகளுக்கும் ஒய்வு தேவைப்படுகிறது. அதற்கு ஓய்வு தரும்போதுதான் அதன் நீடித்த உழைப்பை ஊர்ஜிதம் செய்ய இயலும் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு தருவதற்குள்ள ஒரே யுக்தி நோன்பு நோற்பதன்றி வேறில்லை

இலையுதிர் காலத்தில் இலை உதிர்வது மீண்டும் மரம் இளந்தளிர் விட்டு பூத்துக் குலுங்குவதற்கு அறிகுறியாக இருப்பதைப் போன்றே, நோன்பு நோற்கும் போது ஏற்படும் சோர்வு உடல் செழிப்படையப் போவதற்கு முன்னறிவிப்பாகும்

மனிதன் நோன்பின் மூலமாக பெறற்கரிய பலன்களைப் பெறும் போது இறைவன் அவனுக்கு கூலி வேறு கொடுக்க வேண்டுமா...?

ஜகாத்

மனிதன் இரக்க சுபாவத்துடன் படைக்கப் பெற்றிருக்கிறான். மிகவும் வறிய நிலையில் உள்ள ஒருவனைக் கண்டால் அவனுள்ளத்தில் இரக்கம் சுரக்கிறது. அவனுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய ஆவல் கொள்கிறான் அப்படி உதவி விட்டால் மன நிறைவைக் காணுகிறான். அவன் நினைத்தவாறு உதவ வில்லையாயின் அவனது கண்களை தூக்கம் ஆட்கொள்ள மறுக்கிறது வறிய நிலையில் அவன் கண்ட முகமே திரும்பத் திரும்ப தோற்றம் தருகிறது

ஜனாதிபதி ஹளரத் உமர் (ரலி) அவர்கள் நாட்டு நடப்புகளை தெரிவதற்காக ஊர் உறங்கும் நேரத்தில் உலா வருகிறர்கள். அப்போது ஒரு பெண் திறந்த வெளியில் எதையோ சமைத்துக் கொண்டிருக்கிறாள். அவளின் காலடியில் சில குழந்தைகள் ஏக்கத்துடன் அந்த சமையல் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் சமைத்து முடிக்காததைக் கண்ணுற்ற ஹளரத் உமர் (ரலி) அவர்கள் அருகில் சென்று அப்பெண்ணிடம் விசாரிக்கிறார்கள்

தன் குடும்பம் மிக்க ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், குழந்தைகளின் பசியை ஆற்றுவதற்கு தம்மிடம் ஏதும் இல்லாததால் வெறும் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி எதையோ சமைப்பது போன்று பாசாங்கு செய்வதாகவும் அதைப் பார்த்துக் கொண்டே குழந்தைகள் பசியை மறந்து தூங்கி விடவேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு செய்வதாகவும் அந்தப் பெண் கூறினாள். இதைச் செவியுற்ற ஹளரத் உமர் (ரலி) அவர்களுக்கு அந்த குடும்பத்தின் மீது இரக்கம் சுரக்கிறது. ஏனம்மா உங்களின் ஏழ்மை நிலையை நாட்டின் ஜனாதிபதியிடம் முறையிட்டாலென்ன? என்று கேட்டார்கள். தனது நாட்டு மக்களில் ஒருவரின் நிலைபற்றி அறியாதவரெல்லாம் ஆளத் தகுதி பெற்றவரா? என்று அந்தப் பெண் திருப்பிக் கேட்டபோது, உமர் (ரலி) அவர்கள் அதிர்ந்து நின்றார்கள். பின்னர் தனது கருவூலத்துக்குச் சென்று ஒரு மூட்டை கோதுமையை தனது முதுகில் சுமந்து வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து குழந்தைகளுக்கு சிறிது சமைத்துக் கொடுக்க சொல்கிறார்கள். அவள் சமைக்கும் வரை அங்கு காத்திருந்து, அந்தக் குழந்தைகள் உண்ணுவதைப் பார்த்து அவர்கள் மனம். நிறைந்து திரும்பினார்கள். இது போன்று பிறருக்கு உதவுவதில் சிலர் இன்பம் காணுகிறார்கள். வேறு சிலர் தனது முற்கால வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை நினைத்து தற்போது வழங்குவதில் நிறைவு காணுகிறார்கள்

சுருங்கக் கூறுமிடத்து மனிதர்கள் அனைவரிடத்திலும் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற மனப்பான்மையும் அவ்வாறு வழங்கும் போது மன நிறைவை அடைவதும் நிறைந்து காணப்படுகிறது. இதில் மதவாதிகள் மற்றவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. நாத்திகனிடமும் இத்தகைய உணர்வு காணப்படுகிறது

ஜகாத் வழங்குவதன் மூலம் மனிதன் பெறும் மன நிறைவே அவனுக்குசிறந்த கூலியாகும் போது அது தவிர வேறு எந்த கூலியும், அவசியமில்லை

ஹஜ்.

சுற்றுப் பயணம் செய்வது என்பது மனிதனுக்கு தேவையான ஒருஅம்சமாகும். அதன் மூலம் அவனுக்கு அறிவு வளருகிறது. பல அனுபவங்கள் கிடைக்கின்றன. நாலு ஊர் சென்று நாலு விஷயங்களை தெரிந்து வருபவனே மக்களால் பாராட்டப்படுகின்றான்.

فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ

 "பூமியிலே சுற்றி வாருங்கள் பொய்யர்களின் முடிவு என்னவானது எனக் கண்டு வாருங்கள் ' (16 ; 36)

என்று கூறி திருகுர்ஆனும் சுற்றுப்பயணத்தின் மூலம் அறிவு வளர்வதை ஒப்புக் கொள்கிறது இதனால்தான் மேலை நாட்டினர் சுற்றுப் பயணத்தை தனது வாழ்நாளின் லட்சியமாகக் கருதி பெருமைப் படுகின்றனர். சில நாடுகளில் அரசாங்கமே சுற்றுப் பயணம் செய்வதற்கு ஆர்வம் உண்டாக்கி நிதி உதவியும் அளிக்கிறது

மனித இதயத்துக்கு அத்தியாவசியமான கற்றுப் பிரயாண அனுபவம் ஹஜ்ஜின் முலம் நிறைவேறும்போது அதைவிட வேறொரு பலன் அவசியமா மொழி, தேச உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அரபாத் பெருவெளியில் மனித வெள்ளத்தில் அவன் சங்கமமாகும் பாக்கியம் பெற்றதே போதுமே! வேறு பலன் வேண்டுமோ..?

இஸ்லாம் கூறும் ஐம்பெரும் கடமைகளும் இறைவன் கூலிதரவே தேவையில்லாத அளவு பெரும் நன்மையைப் பயக்குகின்றன அது மட்டுமின்றி மனிதனுக்கு இறைவன் ஏற்கனவே அளித்து விட்ட அருட் கொடைகளே அதிகம் இவைகளுக்கு நன்றி செய்யவே மனிதன் பெற்ற ஆயுள் போதாது

أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ

وَلِسَانًا وَشَفَتَيْنِ

இரண்டு கண்களையும் நாவையும், இரு உதடுகளையும் அவனுக்கு நாம் ஆக்க வில்லையா? என்பன போன்ற எண்ணற்ற உபகாரங்களை திருகுர் ஆன் நினைவூட்டுகிறது.(90 : 8,9)

ஹளரத் பைலாவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:- நாம் கூலி அனைத்தையும் முன்னதாக பெற்றுவிட்ட கூலிக்காரனைப் போன்றாவோம். நாம் எத்துணை நல் அமல்கள் புரிந்தாலும் பட்ட கடனே தீராதே! புதிதாக எப்படி கூலி எதிர்பார்க்க முடியும்

ஒன்றுக்குப் பத்து

இவ்வளவுக்குப் பிறகும் மனிதன் அணுவளவு நன்மை செய்தாலும் இறைவன் அதற்கும் கூலி தருகிறான் அவனுடைய தயாளத்தை எந்த வார்த்தைகளால் விளங்கிட இயலும்? திருக்குர்ஆன் கூறுகிறது; "நிச்சயமாக அல்லாஹ் நல்லோர்களின் கூலியை வீணடிப்பதில்லை அல்குர் ஆன்: (7:170)

அதுவும் ஒரு நற்செயலுக்கு பத்து முதல் 700 வரையிலும், இன்னும் அதற்கு மேலும் இறைவன் அதிமடங்கான கூலியைத் தருகிறான்

மனிதன் தனது வேலையாள் நன்மை செய்து விட்டால் அதை மூடி மறைக்கவும், தீமை செய்து விட்டால் ஒன்றுக்கு பத்தாக பெருக்கவும் செய்வான் வேலையாள் நன்மை செய்ததை பாராட்டினால் அவன் கூலியை அதிகமாக எதிர்பார்க்க கூடும், தீமை செய்தால் அதை ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லாவிட்டால் அவன் தீமையை விட்டும் திருந்த மாட்டான் என்ற அச்ச உணர்வே அதற்குக் காரணம் ஆனால் இறைவன் மனிதனைப் போன்றுகஞ்சனும் அல்ல; அற்பனும் அல்ல அடிமை நன்மை செய்து விட்டால் அதை மூடி மறைப்பதற்குப் பதிலாக, இறைவன் ஒன்றுக்குப் பத்தாக, பன்மடங்காக கூலியைக் கொடுத்து மேலும் நன்மைசெய்ய ஊக்கமளிப்பான். அடியான் தீமை செய்து விட்டால் அதை ஒன்றுக்குப் பத்தாக பெருக்குவதற்குப் பதிலாக ஒன்றாகவே கணக்கில் வைப்பான். சிற்சில சமயங்களில் அதையும் தன் பெருந்தன்மையால் மன்னித்து மறந்து விடுகிறான்

அந்த இறைவனின் கருணையைக் கூற வார்த்தைகள் ஏது 



இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக