وَالسَّابِقُونَ
الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ
முஹாஜிர்கள் அன்சாரிகளில் ஆரம்பகால கட்டத்தில் உள்ளவர்களும், சிறந்த
முறையில் அவர்களைப் பின்பற்றியவர்களும், அல்லாஹ் அவர்களைப் மனநிறைவு
கொள்கிறான் அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி மனநிறைவு கொள்கிறார்கள்.
அல்குர் ஆன் : (9 : 100)
வெளியூர் சென்றிருந்த தந்தை வீடு திரும்பும்போது தனது
குழந்தைகளுக்கு தின்பண்டங்களும், ஆடை அணிகலன்கள்களும் வாங்கி வருகிறார்.
அறியாப் பருவத்தினராகிய சிறு குழந்தைகள் தங்களுக்கென தந்தை வாங்கிக் கொணர்ந்த
பொருட்களை ஆசையோடு பறித்துச் செல்கின்றன.
ஆய்! எனக்கு பொம்மை! எனக்கு சட்டை! எனக்கு மிட்டாய் என்று கூவி குதூகலிக்ககின்றனர்.
அந்தக் காட்சியைக் கண்ட தந்தையின் மனம் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விடுகிறது.
அதே வேளையில் விபரம் புரிந்துவிட்ட பருவத்தினராகிய பெரிய
பிள்ளைகள் தந்தை வாங்கி வந்த பொருட்களை அதிருப்தியோடு
நோக்குகின்றனர். தனது தாயிடம் சென்று அப்பொருட்கள் நல்ல தரத்தைச் சார்ந்ததில்லை
எனவும், தங்களின்
தந்தை கஞ்சத்தனத்தால் உயர் தரத்துப் பொருட்களை வாங்கி வரவில்லை எனவும் குறை கூறுகின்றனர்.
அந்த வார்த்கைளைச் செவியுற்ற தந்தையின் முகம் வாட்டமடைகிறது.
இது நாம் அன்றாடம் சந்திக்கும் உண்மை நிகழ்வாகும். கிடைத்ததைக் கொண்டு
திருப்தியடைபவர்களை தலைவன் அன்பொழுக நோக்குவதும் அதிருப்தி அடைபவர்களைக் கண்டு
அவன் மனம் நோகுவதும் இயற்கையே தனது அடியார்களின் மன நிலைகளைக் காணும்போது இறைவனும்
இதேஉணர்வையே பிரதிபலிக்கிறான்
தான் பெற்றெடுத்த மகன் வளர்ந்து ஆளாகி கல்வி, தகுதிகளைப் பெற்று ஆஜானுபாகுவான
தோற்றத்துடன் வீட்டிலிருந்து செல்வதை தாய் பின்னால் நின்றவாறே கண்டுகளித்து
இன்புறுவாள். அது போன்று உலகத்தின் தாய்மார்களின் பாசத்தைப் போன்று நுறு மடங்கு
பாசத்துக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ் தனது அடியார்கள் தான் கொடுத்த பாக்கியங்களை
மனநிறைவோடு அனுபவிக்கும்போது பார்த்து மகிழ்கிறான்.
இந்த நிலைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்துகிறார்கள்
இன்னல்லாஹ யுஹிப்பு அன்யரா அதர நிஃமத்திஹி அலா அப்திஹி"
(தான் அளித்த
பாக்கியங்களின் அடையாளம் தன து அடியான் மீது
காணப்படுபதை அல்லாஹ் மிகவும் விரும்புகிறான்.)
அறிவிப்பவர் : ஹள்ரத் அம்ரு பின் ஷுஜப் (ரலி), நூல் : திர்மிதி
தான் அளித்த பாக்கியங்களைக் கொண்டு அடியார்கள் மனநிறைவு
கொள்வதைக் கண்டதும் அல்லாஹ் மிகவும் மகழிந்து, மேலும், மேலும் பாக்கியங்களை
அள்ளிக் கொட்டுகிறான்.
ஆனால் மனித நிலை
ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இறைவன் தந்ததைக் கொண்டு மனநிறைவு கொள்வதில்லை.
நாமென்ன தாய் வயிற்றிலிருந்து வெளிவரும்போது இந்த பாக்கியங்களைக் கொண்டா வந்தோம்!
நாம் அல்லாஹ்விடம் கொடுத்தா வைத்திருக்கிறோம்! இதையும் தான் அவன் தராதிருந்தால்
அவனிடம் ஆட்சேபனை செய்ய முடியுமா? அதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது..?
நம் தரத்துக்கு இறைவன் தந்திருப்பது அதிகமல்லவா! என்றெல்லாம் அவர்கள் யோசித்துப்
பார்ப்பதில்லை. இறைவன் எவ்வளவு தந்தாலும் "என்னத்தைத் தந்தான்” என்று கூறியே அலுத்துக்
கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் குடியிருக்க ஒரு வீடு இல்லையே
கவலைப்படுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வீட்டைத் தந்தால் வீட்டைக் கவனிக்க
வேலைக்காரன் இல்லையே! “என்னத்தைத்
தந்தான்?" என்று
கருதுகிறார்கள்.
வேலைக்காரர்களையும் வைத்துக் கொள்ள இறைவன் தகுதியைத் தந்தால், அவர்களுக்குச்
சம்பளம் தர சொந்தத் தொழில் இல்லையே! என்ற கூறுகிறார்கள். சொந்த தொழிலும்
அமைந்துவிட்டால், தொழிற்சாலைக்குச்
சென்றுவர வாகன வசதி இல்லையே என்பார்கள். அல்லாஹ் அவரை ஒரு காருக்குச் சொந்தக்காரராக
ஆக்கிவிட்டால் ஒரு கார் போதவில்லையே என்று அலுத்துக்கொள்கிறார்கள். அலுவலகத்தின்
வேலையாக, அல்லது
விட்டு வேலையாக அந்தக் கார் சென்று விடுகிறது. தான் நினைத்தபோது பயன்படுத்தவே
இன்னொரு கார் கேட்கிறேன் என்று காரணமும் கூறுகிறார்கள்.
இன்னொரு காரையும் இறைவன் தந்துவிட்டால் அப்போதாவது மன
நிறைவு கொள்வார்களா? பெட்ரோல்
விற்கும் விலையில் ஒரு பெட்ரோல் பங்குக்கு, தான் சொந்தக்காரனாக ஆனால் தான்
கட்டுபடியாகும் என்றுரைப்பார்கள். அதற்கும் அதிபதியாக அவரை அல்லாஹ் ஆக்கினால் வேலைக்காரர்களுக்கு
வீடுகள் இல்லையே என்பார்கள். அதுவும் கிடைத்துவிட்டால் எனக்கே வயதாகிறது. இவற்றை
நிர்வகிக்க திறமை படைத்த மகன் இல்லையே என்பார்கள். இத்தியாதி! இத்தியாதி...
இறைவன் எவ்வளவு கொடுத்தாலும் மனநிறைவு கொள்ளாது "அவனுக்கு அள்ளிக்
கொடுத்திருக்கிறான். எனக்கு என்னத்தைத் தந்தான் இறைவன்' என்று அலுத்துக்கொள்ளும்
மனப்பான்மையில் தான் இன்று பலரும் வாழ்கிறார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்
"ஆதமின்
மைந்தனுக்கு ஓர ஆற்று ஓடை அளவு தங்கம் இருந்தாலும் இரு ஒடையளவு தங்கம் தனக்கிருக்க
வேண்டுமென அவன் எதிர்பார்ப்பான்.
அறிவிப்பவர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி
அன்று வாழ்ந்தோர் பெற்ற மன நிறைவு
தனக்கு இறைவன் தந்திருப்பதைக் கொண்டு நிறைவு கொள்பவனே
பாராட்டுக்குரியவன், மேலும்
இறையருள் பெறும் பாக்கியசாலியும் அவனே இஸ்லாத்தின் முன்னோடிகளான நாயகத் தோழர்கள்
அத்தகைகைய மனப்பக்குவத்தைப் பெற்றிருந்த்தை மேற்காணும் இறை வசனம் எடுத்தோதுகிறது.
அந்த மனப்பக்குவத்தால் அவர்கள் இறைவனுடைய மனநிறைவைக் கூலியாகப் பெற்று விட்டார்கள்
என்பதையும் அந்த வசனம் குறிப்பிடத் தவறவில்லை. இறை திருப்தியைப் பெற்றுவிட்டால்
அதைவிட உயர்ந்த பாக்கியம் (வரில்வானும்
மினல்லாஹி அக்பர்” ("அல்லாஹ்வின்
மன நிறைவே மிகப்பெரியதாகும்")என திருமறை கூறகிறது.அல்குர் ஆன்: (9 : 72.)
மனிதப் பிறவி எடுத்ததன் லட்சியமே அதுதானே.
நாயகத்தோழர்கள் அடைந்த மனநிறைவுக்கான சான்றுகள் அவர்களின் சரித்திரங்களில்
நிறைந்து காணப்படுகின்றன. ஹள்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள்
ஒருநாள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு திறக்கும் வேளையில் அவர்களின் மகனார்
நோன்புக் கஞ்சி கொண்டு வருகிறார்கள் நோன்பு திறப்பதெற்கென்று தனிக் கஞ்சி
தயாரிக்கப்பட்டுள்ளதைக் கண்டு
அவர்கள் கண் கலங்குகிறார்கள். "முஸ்அப் பின் உமைர்-ரலி போன்ற
தனதுநண்பர்களெல்லாம் இவ்வுலகில் துன்பத்தைத் தவிர வேறெதையும் காணவில்லை அவர்கள்
உயிர் துறக்கும்போது முறையான கபன் துணி கூட இருக்கவில்லை தலையைப் போர்த்தினால்
கால் வெளித்தெரிகிறது. காலைப் போர்த்தினால்
தலை வெளித் தெரிகிறது. இறுதியில் தலையைப் போத்தப்பட்டு காலில் புல் வைத்து
மறைக்கப்பட்டது.
அப்படியிருக்கையில் எனக்கு எல்லாப் பாக்கியத்தையும் எனது இறைவன் தந்துள்ளான்.
அவன் எனக்குத் தந்திருக்கும்
பாக்கியங்களை கணக்கிட்டால் மறுமையில் தர வேண்டிய நற்கூலிகள் அனைத்தையும்
இம்மையிலேயே எனக்குத் தந்து கணக்கை முடித்துக் கொள்கிறானோ? என நான்
அஞ்சுகிறேன்" என்று அவர்கள் கூறினார்கள்.
மனநிறைவை அடைய மனப் பயிற்சி
இன்று நம்மில் பலரின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. இறைவன் நமக்களித்த
அருட்கொடைகளைக் கொண்டு நாம் மனநிறைவு கொள்கிறோமா...? நம்மை நமது
இறைவன் பொருந்திக் கொண்டானா...?
இஸ்லாத்தின் முதல் குடிமக்களைப் போன்று நாமும் மனநிறைவு அடைய விரும்பினால்
அதற்காக சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வசதி வாய்புக்களில் நமக்கு கீழ் நிலையில் உள்ளவர்களோடு
நம்மை ஒப்பு நோக்க வேண்டும்.
துன்பங்களில் நம்மை விட அதிக துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களை கவனத்துக்குக்
கொண்டு வர வேண்டும், சுருக்கமாகக்
தகூறினால்
இறைவனை நம் மனதுள் இருத்த வேண்டும்.
காலில் அணிய செருப்பில்லாதவன் காலே இல்லாதவனைப் பார்த்து நம் தகுதிக்கு
அல்லாஹ் தந்திருப்பது அதிகம் தான் என்பதை உணரவேண்டும் மண் குடிசையில் குடியிருப்பவர்கள் வானமே கூரையாக, பூமியே
மெத்தை விரிப்பாக
உறங்கும் எண்ணற்ற அடியார்களைப் பார்த்து மனநிறைவு கொள்ளவேண்டும்
காலே இல்லாதவர்களும், மண் குடிசை
கூட இல்லாதவர்களும் தங்களுக்கு தங்கள் இறைவனால் தரப்பட்ட விலை மதிக்க
முடியாத உயிரையும், அறிவையும், இன்பம்
காணும் மனத்தையும் தந்துள்ளதைப் பார்த்து மனப் பூரிப்பு அடைய வேண்டும். மெத்தையில்
படுத்துறங்குபவர்களுக்கு கிடைக்காத மன நிம்மதி தரையில் படுத்துறங்கும் தங்களுக்கு
கிடைக்கிறதே
என்பதை அவர்கள் எண்ணிப் பார்த்தால் தாங்கள் பெற்ற பாக்கியம் தரத்தில் குறைந்ததல்ல
என்பதை கண்டு கொள்ள முடியும்.
ஹள்ரத் ஹப்பாப் பின். அரத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "ஒரு
நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவின் நிழலில் உரத்த
போர்வை ஒன்றை தலைக்கு வைத்த வண்ணம் ஒருக்களித்துப்
படுத்திருந்தார்கள் குறித்து கவலை தெரிவித்தோம் செய்யக்கூடாதா? இறை உதவி தேடக்
கூடாதா? எனக் கேட்டோம்.
அப்போது அவர்கள் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களில் ஒருவரை
பிடிக்கப்படும் பின்னர் பூமியில் பள்ளம் தோண்டி அதில் அவரை நிறுத்தப்படும் அப்போது
நாங்கள் எங்களின் ஏழ்மை நிலை
தாங்கள் எங்களுக்காக துஆச் உங்களுக்கு முன் வாழ்ந்த நன்மக்கள் பற்றி கொஞ்சம்
நினைத்துப் பாருங்கள். அவர்களில் ஒருவரை பிடிக்கப்படும் பின்னர் பூமியில் பள்ளம்
தோண்டி அதில் அவரை நிறுத்தப்படும். அவரின் உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுக்கப்படும்.
தலையிலிருந்து கால் வரை இறுகூறுகளாக அவர்களைப் பிளக்கப்படும் இரும்பினாலான சீப்பு
கொண்டு ஒருவரின் மேனியில் பிராண்டப்படும் அவர்களின் தசைகளை கிழித்தெடுக்கும் இத்தகைய
தாங்கொணா துன்பங்கள் அவர்களுக்குத் தரப்பட்ட போதிலும் அத்துன்பங்களால் அவர்களை
அவர்களின் மார்க்கத்தை விட்டும் அசைக்கக் கூட முடியவில்லை” என்று
அளுளினார்கள். நூல் : புகாரி.
துன்பத்தின் போது மேலே பார்
ஒருவன் தன் வாழ்க்கையில் தன்னை இடர்கள் சந்திப்பதாகக்
கருதினால், அவனைவிட அதிக
இடர்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்களைக் காணச் செல்ல வேண்டும். அவ்வாறு காணச்
செல்வது இறைவன் தனக்குத் தந்த சோதனை குறைவுதான் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.
இதனாற்றான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு ஆற்ற
வேண்டிய கடமைகளுள் நோய் நலம் விசாரிக்கச் செல்வதை ஒன்றாகக் குறிப்பிட்டார்கள்.
நலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் சந்திக்கும்போது அச்சந்திப்பு “அல்லாஹ்
நம்மை மேன்மைப்படுத்தியே வைத்திருக்கிறான் என்ற மனநிறைவைத் தரும்
அன்னை ஹள்ரத் ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் “மரணநேரத்தில்
ஒருவர் மிகச் சிரமப்பட்டால் அவர் என்ன பாவம் செய்தாரோ! என்று நான் நினைப்பதுண்டு.
ஆனால் எனது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்தின் போது அவர்களுக்கு ஏற்பட்ட
நிலையைக் கண்ட போது நான் என் நினைவை மாற்றிக் கொண்டுவிட்டேன். பக்கத்திலிருக்கும்
பாத்திரத்திலுள்ள தண்ணீரில் கையை முக்கி அடிக்கடி முகத்தை ஈரமாக்கிக் கொண்டார்கள்.
குல்அவூது பிரப்பில் பலக், குல் ஆவூது
பிரப்பின்னாஸ் சூராவை ஒதி என்னை அவர்கள் மேனியில் ஊதச் சொல்லுவார்கள் அவர்கள் பட்ட
சிரமங்களைப் பார்த்த பின் தான் பாவத்திற்கும் ஸகராத்து சிரமத்துக்கும் எந்த
சம்பந்தமுமில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்
நூல் : புகாரி
அண்ணலார் பட்ட துன்பத்தை நாம் நினைவில் கொண்டால் நம்மைச் சூழும் துன்பம்
பெரிதாகக் தோன்றாது என்ற உண்மை மேற்காணும் அறிவிப்பிலிருந்து நமக்கு
அறியக்கிடைக்கிறது
இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அறிவிக்கிறார்கள். "நான் எனது
அடியான் ஒருவனின் கண்ணொளியைப் போக்கிவிட்டால், அவன் அதை மன நிறைவோடு
ஏற்றுக்கொண்டால் அதற்குப் பகரமாக நான் அவனுக்கு சுவனத்தைத் தருவேன்
அறிவிப்பவர் : ஹள்ரத் அனஸ் (ரலி), நூல் : புகாரி
உள்ளத்தில் அல்லாஹ்வை வைக்க
அல்லாஹ் நமக்கு அளித்திருக்கும் பாக்கியங்களைக் கொண்டு நாம் மன நிறைவு
கொள்வதற்கு முக்கியமான வழி அல்லாஹ்வை நம் மனதுள் இடம் பெறச் செய்வதாகும். மனித
மனத்தின் நிலை, நரகத்தின்
நிலைக்கு ஒப்பானதாகும்.
நரக நிலைபற்றி இறைவன் கூறுகிறான்
يَوْمَ
نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ
"அந்த நாளையில் நீ நிரம்பிவிட்டாயா என நாம் நரகத்திடம் வினவுவோம் அது
இன்னும் கொஞ்சம் இருக்கிறதாவெனக் கேட்கும்"
அவ்குர் ஆன்: (50 : 30)
அப்போது இறைவன் தனது பாதத்தால் அந்த நரகத்தை மிதிப்பான்
அப்போது தான் அது போதும்! போதும்! என்று கூறும் என நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்
தெரிவிக்கிறார்கள். அது போன்று, நிறைவையே அடையாத மனித மனதுள்ளும் இறைவனை வைக்காத வரை அது ஒரு காலமும் நிறைவு பெறாது
எனவே அவன் நமக்குச் செய்திருக்கும் உபகாரங்கள் ஒவ்வொன்றாக
எண்ணிப்பார்க்க வேண்டும். ஒளி பொருந்திய இந்த கண்களைத் தந்தது யார் ஓடியாடித்திரிய
உரமிக்க இந்த கால்களைத் தந்தது யார்? உழைத்துண்ண உறுதி மிக்க இந்த
கரங்களைத் தந்தது யார்? நான்
பிறப்பதற்கு முன்பே தந்தை மனதில் பாசத்தையும், தாயின் மார்பில் பாலையும்
சுரக்கச் செய்தது யார்? நான் வசிக்கும்
இந்த வீடு, நான்
அனுபவிக்கும் வசதி வாய்ப்புக்களை யார் தந்தார் என் மனைவி, என் மக்கள்
எல்லாம் எனது இறைவன் எனக்கு இட்ட
பிச்சைதானே! இவ்வாறே ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால் நமக்கு இறைவனைப் பற்றி
மனநிறைவு ஏற்படும்.
நபி ஹள்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் ஒரு தேவை குறித்து பிராத்தனை
செய்யப் புகுந்த போது
الْحَمْدُ
لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ ۚ إِنَّ
رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ
"அல்லாஹ்வுக்கே
புகழனைத்தும்! அவன் முதுமை என்னைத் தொட்ட பின்னும் எனக்கு இஸ்மாயீல் இஸ்ஹாக் என்ற
இரு
மகவுகளைத் தந்தானே (அல்குர்ஆன் 14 : 39) என்று நினைவு
கூறுகிறார்கள்.
நபி ஹள்ரத் ஜகரிய்யா (அலை) அவர்கள் தனக்கு ஒரு குழந்தை
வேண்டுமென இறைவனிடம்
வேண்டும் போது
قَالَ
رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ
أَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
"எனது இறைவா! இதுவரை உன்னிடம் நான் கேட்டு கிடைக்காது திரும்பியதில்லை” அல்குர்ஆன் (19 :04) என்றுரைக்கிறார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி இறைவன் கேட்கிறான்
أَلَمْ
يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
وَوَجَدَكَ
ضَالًّا فَهَدَىٰ
وَوَجَدَكَ
عَائِلًا فَأَغْنَىٰ
உம்மை அனாதையாகப் பெற்றுக் கொண்ட போது அவன் உமக்கு
ஆதரவு தரவில்லையா? நேர் வழி
அறியாதவராகப் பெற்று அவன்
உம்மை நேர்வழி சேர்க்கவில்லையா ? வசதி வாய்ப்புக் குறைந்தவராகப் பெற்று அவன்
நும்மை செல்வந்தராக ஆக்கவில்லையா அல்குர்ஆன் :
(93 : 6,
7, 8)
அண்ணலாரின் சமூகத்தார்கள் தங்களுக்கு தங்கள் இறைவன் அளித்த அருட்கொடைகளை
ஒவ்வொன்றாக நினைவில் கொண்டு வரவேண்டும். என்பதற்கு
பயிற்சியாக இறைவன் தனது நபிக்கு தான் செய்த உபகாரங்களை வரிசைப்படுத்துகிறான்.
இறை உபகாரத்தை நினைவு கூறுவது நமக்கு அவன் மீது பிரியத்தை ஏற்படுத்தும்.
அந்தப் பிரியம் வளரும் போது சதாவும் அவனை நினைத்துக் கொண்டிருக்கச் செய்யும். சதாவும் அவனை நம் மனதுள்
இடம் பெறச் செய்துவிட்டால்
அவனும் நம்மைப் பற்றி மன நிறைவு கொள்ளும் நிலை தோன்றும்.
இந்நிலை தோன்ற ("அல்லாஹும்மர்லினா, வர்ல அன்னா")
இறைவா! எங்களை மன நிறைவடையச் செய்வாயாக! நீயும் எங்களைக் கொண்டு மன நிறைவடைவாயாக" என்று துஆச் செய்து
கொண்டே இருப்போம்
இது
மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம்
பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ
உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற
நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை
அவர்களுக்கு எல்லா வளமும் நலமும் அல்லாஹ்
நிறைவாக தந்தருள்வானாக.
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
அல்ஹம்துலில்லாஹ்
பதிலளிநீக்கு