மௌலவி, முஹம்மது ஃபாரூக் காஷிஃபி
கொலை, விபத்து போன்றவற்றில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றன. இது போன்ற நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களைப் பின் வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
கேள்வி : மரணித்தவரின் தலை மட்டும் கிடைக்கப் பெற்றால்...?
பதில்: மரணித்தவரின் தலையோ, அல்லது உடலில் பாதி பகுதியைவிட குறைவான பகுதியோ கிடைக்குமேயானால், அதை குளிப்பாட்டாமல் தொழுகை நடத்தாமல் சுத்தமான துணியில் பொதிந்து அடக்கிவிட வேண்டும்
(துர்ருல்முக்தார்:2/86)
கேள்வி : மரணித்தவரின் பாதியளவு உடற்பகுதி கிடைக்கப் பெற்றால்...?
பதில்: மரணித்தவரின் உடலில் பாதியளவைவிட அதிகமாக கிடைக்குமேயானால், (தலையுடன் சேர்த்து இருந்தாலும் சரி, தலையின்றி இருந்தாலும் சரி,) அதனை முறைப்படி குளிக்கவைத்து கஃபன் அணிவித்து தொழுகை நடத்தி அடக்க வேண்டும்
ஆனால், வெறும் பாதி உடல் பமட்டும் கிடைத்தால் அப்போது அந்தப் பகுதியுடன் தலை இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்க வேண்டும்
தலையிருந்தால் அதனை முறையாகக் குளிப்பாட்டி கஃபன் அணிவித்து தொழுகை நடத்தி அடக்கம் செய்ய வேண்டும் தலையில்லாவிட்டால் அவ்வுடலை சுத்தமான துணியில் பொதிந்து தொழுகை நடத்தாமல் - அடக்கிவிட வேண்டும்
(ஆலம்கீர்:1/19 துர்ருல்முக்தார்3/63)
(ஷாஃபி: 1,2, இரண்டிலும் முறைப்படி குளிப்பாட்டி தொழுகை நடத்திய பிறகே அடக்கம் செய்ய வேண்டும். சிறு விரலாக இருப்பினும் சரியே!)
கேள்வி : கடலில் பிரயாணம் செய்யும்போது மரணித்தால்...?
பதில்: கடலில் பிரயாணம் செய்யும்போது ஒருவர் மரணித்துவிட்டால், அவரை முறைப்படி குளிப்பாட்டி, கஃபன் அணிவித்து தொழவைக்கவேண்டும். பின்னர் கடற்கரை அருகில் இருந்தால் (அதாவது கரையை அடைவதற்குள் உடல் கெடாது என்றிருப்பின்) கரை சென்று மணவில் அடக்கம் செய்ய வேண்டும்
கரையை அடையும்முன் உடல் கெட்டுவிடும் என்ற அச்சமிருப்பின் உடல் தண்ணீரில் மிதக்காமல் இருக்க கனமான பொருளை மய்யித்துடன் வைத்து மய்யித்தை கடலில் இறக்கிவிட வேண்டும்
கேள்வி : உடல் எரிந்து கரிக்கட்டையாக ஆகிவிட்டால்....?
பதில்: ஒருவர் தீ விபத்தில் சிக்கி உடல் கரிந்துவிட்டால், குளிப்பாட்டாமல் தொழுகை நடத்தாமல் அப்படியே சுத்தமான துணியில் பொதிந்து அடக்கம் செய்துவிட வேண்டும்
(ஷாஃபிஈ : உடல் கரிந்துவிட்டால் தயம்மும் செய்வித்து, தொழுவித்து அடக்க வேண்டும்)
கேள்வி : மரணித்தவரின் எலும்பு கூடு மட்டும் கிடைத்தால்...?
பதில்: மரணித்தவரின் உடல் சதைகள் அனைத்தும் பிரிந்து எலும்புக்கூடு மட்டும் கிடைத்தால், அதைக் குளிப்பாட்டுவதும், சுன்னத்தான முறைப்படி கஃபன் அணிவிப்பதும் அவசியமில்லை. மேலும், அதற்கு தொழுகை நடத்தாமல் சுத்தமான துணியில் சுற்றி அடக்கம் செய்துவிட வேண்டும்
கேள்வி : உடல் ஊதி உப்பி வெடித்துவிட்டால்....?
பதில்: மரணித்தவரின் உடல் உப்பிய நிலையில் கிடைக்கப்பெற்றால் அதாவது கைவைக்க முடியாதவாறு தொட்டாலே உதிர்ந்துவிடும் என்றிருப் பின், அதன்மேல் தண்ணீர் ஊற்றி குளிப்பை நிறைவேற்ற வேண்டும். பின்னர் முறைப்படி கஃபன், தொழுகை, அடக்கம் ஆகியவற்றை செய்ய வேண்டும்
(ஷாஃபி: இந்தளவு குளிப்பும் நிறைவேற்ற இயலாது என்றால், முகம் கைகளில் தயம்மும் செய்வித்து கஃபன், தொழுகை, அடக்கம் செய்ய வேண்டும்)
கேள்வி : இஹ்ராம் அணிந்த நிலையில் மரணமடைந்தால்...?
பதில்: ஹஜ் அல்லது உம்ராவின் இவஹ்ராமுடைய நிலையில் மரணமடைந்தவரையும் மற்றவர்களைப் போன்றே குளிக்கவைத்து, கஃபன், அடக்கம் செய்ய வேண்டும். மேலும், நறுமணம் போன்றவை பூசலாம்
(ஷாஃபிஈ: இஹ்ராம் அணிந்த நிலையில் மரணமடைந்தவருக்கு உடலிலும், கஃபனிலும் நறுமணம் பூசுவது கூடாது. அதுபோல் குளிப்பாட்டும் போதும் நறுமணப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது. மேலும் கஃபனில் ஆண் மய்யித்தாக இருப்பின் தலையை மறைப்பதும், பெண் மய்யித்தாக இருப்பின் முகத்தை மறைப்பதும் கூடாது. இஹ்ராமுடைய சட்டங்கள் மரணத்திற்குப் பிறகும் நீடிக்கும்
கேள்வி : இடிபாடுகளிடையே சிக்கி புதையுண்டுவிட்டால்..?
பதில்: கட்டடம் இடிந்து அல்லது பூகம்பம் ஏற்பட்டு யாரேனும் இடிபாடுகளுக்கிடையே புதைந்து பல முயற்சிகளுக்குப் பின்னும் அவரின் உடலை வெளியாக்க முடியவில்லையென்றிருப்பின், உடல் ஊதிப் பெருத்து வெடித்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் இருந்தால் மேலேயே இருந்து அவருக்காக ஜனாஸா தொழுகை தொழலாம்
ஷஃபிஈ: மய்யித் குளிப்பாட்டப்பட்டு அல்லது தயம்மும் செய்விக்கப் பட்டு சுத்தமாக இருப்பது ஜனாஸா தொழுகையின் நிபந்தனையாகும் இங்கு அந்த நிபந்தனை பெற்றுக்கொள்ளப்படாததால் தொழவைப்பது கூடாது.
கேள்வி : விபத்து போன்றவற்றில் மரணித்த முஸ்லிம்களுடன் பிறர்
கலந்துவிட்டால்...?
பதில்: ஏதேனும் விபத்தில் முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் அனைவரும் இறந்து அவர்களுக்கிடையே முஸ்லிம்களை அடையாளங்கள் காண இயலாது என்றிருப்பின், மேலும் மரணித்தோரில் அதிகமானோர் முஸ்லிம்கள் என்ற எண்ணம் மிகைத்திருப்பின், அனைவருக்கும் -குளிப்பாட்டி, கஃபனிட்டு தொழவைக்க வேண்டும். முஸ்லிம்கள்மீது மட்டும் தொழுவதாக நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் அனைவரையும் முஸ்லிம்களின் அடக்கத்தலத்திலேயே (கப்ருஸ்தான்) அடக்கம் செய்ய வேண்டும்
(ஷாஃபிஈ: இவ்வாறு மரணித்தோரில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. மாறாக, பலர் இறந்திருக்க அதில் ஒருவர்தான் முஸ்லிம் என்றாலும், அனைவரையும் குளிப்பாட்டி, கஃபனிட்டு, ஜனாஸா தொழவைக்க வேண்டும். முஸ்லிமின் மீது தொழுவதாக நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவர்களை முஸ்லிம்கள் கப்ருஸ் தானுக்கும் மற்றவர்களின் கப்ருஸ்தானுக்கும் மத்தியின் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்
கேள்வி : பிரேதப் பரிசோதனை (போஸ்ட் மார்டம்) செய்வது கூடுமா...?
பதில்: ஒரு மனிதர் இறந்தபின்னர் அவரது உடலை அறுத்து ஆராய்வதற்கே பிரேதப் பரிசோதனை (போஸ்ட் மார்டம்) என்று சொல்லப்படும். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. அதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். எனினும், அரசு சட்டரீதியான பிரச்சினை இருக்கும் பட்சத்தி அது குற்றமாகாது
கேள்வி : பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மய்யித்தின் கஃபன் தஃபன் முறை என்ன..?
பதில்: நிர்பந்தத்தால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடலை மற்ற மய்யித்தைப் போல் குளிப்பாட்டி, கஃபன் அடக்கம் செய்ய வேண்டும். குளிப்பாட்டினால் தண்ணீர் மய்யித்தின் உட்பகுதிக்கு செல்லும் என்ற அச்சமிருப்பினும் குளிப்பாட்ட வேண்டும்
கேள்வி : மய்யித்தின் மீது கட்டுகள் - பிளாஸ்டர்கள் போடப்பட்டிருந்தால்...?
பதில்: ஒரு மனிதரின் உடலில் கட்டுகள் கட்டப்பட்டு அல்லது காயத்தின் மீது பிளாஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்து அதே நிலையில் மரணித்து விட்டால் அந்த கட்டுகளையும், பிளாஸ்டர்களையும் எடுத்த பின்னர் குளிப்பாட்ட வேண்டும்
(ஃபதாவா மஹ்மூதிய்யா, 8/500)
கேள்வி : தண்ணீரில் மூழ்கி இறந்தவரை குளிப்பாட்ட வேண்டுமா...?
பதில்: ஒருவர் நீரில் மூழ்கி இறந்து அவரது உடல் கிடைக்கப்பெற்றால் அவரையும் மற்ற மய்யித்தைப் போன்றே குளிப்பாட்ட வேண்டும் தண்ணீரில் மூழ்கி இறத்தல் குளிப்பாட்டுவதற்குப் பகரமாக ஆகாது எனினும், தண்ணீரைவிட்டும் உடலை எடுக்கும் முன்னர் குளிப்பாட்டும் நிய்யத்துடன் உடலை பல முறை அசைத்து எடுத்தால், அது மார்க்கத்தில் குளிப்பாட்டியதாகக் கருதப்படும்.
மனாருல் ஹுதா 2008 மார்ச் மாத இதழிலிருந்து....
மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக