வெள்ளி, 3 ஏப்ரல், 2020

பொறுப்புள்ள கிராம ஜமா அத்




மனித குலத்தோரே! உங்களை ஒரு ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம் உங்களில் பக்திமிக்கோரே, அல்லாஹுவிடம் சிறந்தோராவார் என்பதை நீங்கள் அறிந்து கொள்தற்காக உங்களை பல  கிளைகளாகவும்  குடும்பங்களாகம் குடும்பங்களாகவும் நாம் ஆக்கியுள்ளோம்
அல்குர்ஆன் : (49 : 13).

எல்லோரையும் நல்லோராக்குவதே இறை மறையின் குறிக்கோள் அந்தக் குறிக்கோளைச் செயல்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளவர்களில் ஜமா அத்என்ற சமுதாய அமைப்பும் ஒன்றாகும்

அல்லாஹ்வுக்குப் பயப்படாதவன் கூட, சமுதாயத்துக்குப் பயப்படுவான் தனிமையில் குற்றம் செய்பவன், அல்லாஹ் பார்ப்பனே எனக்கருதி  குற்றத்திலிருந்து விடுபடுவது மிகக் குறைவு. ஆனால் நாலு பேர் நம்மைப்பார்ப்பார்களே என்ற உணர்வு ஏற்பட்டு குற்றத்தை மறைத்தவர்கள் அதிகம்.

இதனால்தான் அல்லாஹ் சமுதாயத்தை எடுத்துக் காட்டி மனிதர்களைப் பாவங்களிலிருந்து எச்சரிக்கிறான், உனது ஊரார் முன்னிலையில் கேவலப்படுவதை நீ விரும்பவில்லையே, அப்படியானால் மறுமையில் கோடானு கோடி மானுடர் முன்னால் நீ கேவலப்படுவதை எங்ஙனம் பொறுத்துக் கொள்வாய்? இந்த தோரணையை திருக்குர் ஆனில் காணலாம்

நீ தொழுகாதவனாக இருந்தால் மறுமையில் உன்னை நான் குருடனாக எழுப்புவேனே! அப்போது, எனது இறைவா! உலகில் பார்வை உள்ளவனாகத் தானே நான் இருந்தேன். என்னை ஏன் குருடனாக எழுப்பி அவமானப் படுத்துகிறாய்? என்று நீ கேட்பாய். நான் கூறுவேன். ஆம்! எனது உபதேசம் உன்னிடத்தில் வந்த போது நீ என்னை மறந்தாய். அதுபோன்றே தற்போது நான் உன்னை மறந்தேன்.
                        (கருத்து ) அல்குர்ஆன் : (20 : 125).



நீ ஜக்காத் கொடுக்காதவனாக இருந்தால், உனது சேமிப்புத்
தொகைக்கான தங்கம், வெள்ளிகளை பழுக்கக் காய்ச்சி உனக்கு சூடு
போடப்படும் (கருத்து) அல்குர் ஆன் : (9 : 35)

நீ ஜக்காத் கொடுக்கத் தவறிய ஆடு, மாடு, ஒட்டகங்களை உயிர்
பெற்றெழுந்து வரச் செய்து உன் கழுத்தைச் சுற்றி மாலை போன்று விடப்படும் (கருத்து ) அல்குர் ஆன் : (3 : 180)

வட்டியை உண்பவர்கள் பேய் பிடித்தவர்கள் போன்று எழுவார்கள்
அல்குர் ஆன் : (2 : 275)

அன்றைய தினம் இறை மறுப்போரின் கோலங்களைக் கண்டு ஈமான்
கொண்டோர் கைகொட்டி சிரிப்பார்கள் அல்குர் ஆன் : (83 : 34)

மறுமையில், மனிதன் கேவலப்படுத்தப்படும் இது போன்ற நிகழ்வுகளை அல்லாஹ் எடுத்துக் கூறுவது "மனிதன் சமுதாயத்தின் முன்னால் கேவலப்பட்டு நிற்பதை விரும்பமாட்டான் என்பதை நன்கு உணர்த்துகிறது 

சமுதாயம் நம்மைக் கேவலப்படுத்திவிடும் என்ற பயம் மனிதனை தீமையைவிட்டும் தடுக்க வல்ல சக்தி மிக்க ஆயுதமாகும்.


சமுதாயம் நினைத்தால் காதித்திட இயலும்..!

ஒரு மனிதன் தொழுகச் செல்லும் போது, அந்த ஊர்க்காரர்கள் அவ்லியா போறாரப்பா, அப்படியே அல்லாஹ்வை பிடிச்சுட்டு வரப்போகிறார் என்று கிண்டல் செய்தார்களானால், அரை குறை தொழுகையாளியும் ஒன்றுமில்லாமற் போய்விடுவார்.

ஒரு மனிதன் தொழுகாமற் செல்வதைப் பார்த்த ஊர்க்காரர்கள் இவனுக்கு கொஞ்சமாவது நன்றியுணர்வு இருக்கிறதா? அல்லாஹ்வை மறந்து போகிறானே! பாங்கு சப்தம் காதில் விழுந்தும் தொழுகாமற் செல்கிறானே! பள்ளி வாசலைப் பார்த்தால் யாருக்காவது தொழுகாமற் செல்ல மனம் வருமா' என்ற ரீதியில் இடித்துரைத்தார்களானால், அவன் வழமையாகத் தொழுகத் தலைப்பட்டுவிடுவான்.

இது போன்றே குடிப்பதை நியாயப்படுத்தும் ஊர்க்காரர்கள் மத்தியில்
வாழுபவன் மொடாக் குடியனாகவே உருவாகுவதையும், குடிப்பவனைக் கவுரவிக்காத ஊர்க்காரர்கள் மத்தியில் வாழுபவன் திருந்தி விடுவதையும் கண்கூடாகக் காணுகிறோம். பொது மக்கள் நல்லது செய்பவனுக்கு ஊக்கமளித்தால் அவன் மேலும் நல்லவனாகி விடுவான். தவறு செய்பவனுக்கு மதிப்பளித்தால் அவன் தாராளமாக தவறு செய்ய வழி பிறக்கிறது.

எனவே தனி மனிதனை நேர்வழிப்படுவதற்கு சமுதாயம் மிகச் சிறந்த ஆயுதமாகும் என்பது நிரூபணமாகிறது. சமுதாயம் நினைத்தால் ஒருவனைக் கெடுத்து விடவும் முடியும், ஒருவனைத் திருத்திவிடவும் முடியும்.

கலீபா உமரின் ஆட்சிப் பின்னணியிலே..!

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது ஜனதிபதியான ஹளரத் உமர் (ரலிஅவர்களின் வெற்றியின் ரகசியத்தில் அக்காலத்து சமுதாயத்தவர்களான ஸஹாபாக்களுக்கும் பங்குண்டு.

அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் பதவிப் பிரமாணம் செய்கிறார்கள் அப்போது அவர்கள் மக்களை நோக்கி "நான் உண்மைக்கு மாறாக நடந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்விக்கணை தொடுக்கிறார்கள் கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து தன் உறைவாளை உருவி அவர்களை நோக்கிக் காட்டி நீங்கள் உண்மைக்குப் புறம்பாக நடந்தால் நாங்கள் பேச மாட்டோம்! இந்த வாள் உங்களிடம் பசும்" என்றார். அதைச் செவியுற்ற ஹளரத் உமர் (ரலி) அவர்கள் நண்பரே! நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதை அறிந்துதான் பேசுகிறீர்களாஎன்று கேட்டார்கள். "ஆம்! அறிந்துதான் பேசுகிறேன், அமீருல் முஃமினாக தேர்வு செய்யப்பட்ட கத்தாபுடைய மகன் உமரிடம் பேசுகிறோம் என்பதை அறிந்துதான் பேசுகிறேன்என்றார் அவர் அந்த பதில் ஹளரத் உமர் (ரலி) அவர்களை மெய்சிலிர்க்க வைத்தது தவறைத் தட்டிக் கேட்கும் ஒரு நபர் இந்த சமுதாயத்தில் இருக்கும் வரை நான் வழி தவறிட மாட்டேன் என்ற அவர்களின் நாவு உரைத்தது அவர்களின் உள்ளமோ தன்னை துணிச்சலுடன் எச்சரித்த அம்மனிதருக்காக துஆச் செய்தது.

அவர்கள் ஒரு முறை ஜும்ஆப் பேருரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள் அப்போது ஒருவர் எழுந்து அமீருல் முஃமினீன் அவர்களே! இடையூறு செய்வதற்காக பொறுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு ஒரு ஐயம் ஏற்பட்டது அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே இடை மறிக்கிறேன். சில தினங்களுக்கு முன் பொதுப் பங்கீடு செய்யப்பட்ட துணியிலிருந்து தானே தாங்கள் அணிந்திருக்கும் ஜுப்பா தைக்கப்பட்டது என்று வினவினார்.

"ஆம்" என ஜனாதிபதி பதிலளித்தார்கள். அப்படியானால் அன்று
ஒருவரின் பங்காகக் கிடைத்த அளவு, ஜுப்பாவுக்குப் போதுமானதல்லவே அப்படியிருக்க தங்களுக்கு மட்டும் எப்படி ஜுப்பா தைக்க முடிந்தது என்று அவர் தனது ஐயத்தை வெளிப்படுத்தினார். என் மகன் அப்துல்லாஹ்விடம் இதுபற்றிக் கேளுங்கள் என ஜனாதிபதி பதிலளித்தார்கள். ஹளரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் அது பற்றி விசாரிக்கப்படுகிறது. "எனது தந்தை ஒட்டுப் போட்ட ஜுப்பா அணிந்திருந்தார்கள். அது கண்டு மனம் கசிந்த நான் எனது பங்குக்கு கிடைத்த துணியை தந்தைக்குத் தந்தேன். எனது பங்கும், எனது தந்தை பங்கும் சேர்ந்து ஒரு ஜுப்பாவானது" என அப்துல்லாஹ் (ரலி) பதிலுரைத்தார்கள் "அப்படியானால் நீங்கள் முறையாகவே நடந்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. தற்போது தாங்கள் ஆற்றிக் கொண்டிருந்த உரையைத் தொடருங்கள்என்று அவர் கூறி வழி விட்டார்.

பிரிதொரு சமயம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆப் பேருரை
ஆற்றுகிறார்கள். அவர்களின் உரையின் மத்தியில் பெண்களே! நீங்கள் அதிக மஹர் தொகை கேட்காதீர்கள்.  அதனால் ஆண்கள் மணமுடிக்க சிரமப்படுகிறார்கள்.என்று கூறினார்கள். அப்போது ஒரு மாது குறுக்கிட்டு "அமீருல் முஃமினின் அவர்களே!" அல்லாஹ் திருக்குர்ஆனில் "அவர்களில் ஒருவருக்கு நீங்கள் பெரும் பொற்குவியலையே மஹராகக் கொடுத்தாலும் அதைத் திரும்பப் பெறாதீர்கள்!" (4:20) என்று கூறுகிறான். அந்த கூற்று பெண்கள் அதிக மஹர் பெறுவதை அனுமதிக்கிறது. நீங்கள் அதைத் தடுக்கிறீர்கள். உங்களின் கட்டளையை ஏற்பதா? அல்லாஹ்வின் அனுமதியை மதிப்பதா? என்று வினவினார்

அம்மாதுவின் ஆட்சேபனையைச் செவியுற்றதும் ஹளரத் உமர் (ரலி)
அவர்கள் அந்தப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்தார்கள். தான் தவறு செய்து விட்டதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள். அல்லாஹ் அனுமதித்த்தையே ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்கள்

இவைபோன்ற சம்பவங்கள் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் நீதி
வழுவா ஆட்சியின் பெருமையில் பொதுமக்களுக்கும் பங்குண்டு என்பதை உணர்த்துகின்றன.

கொடியோன்ஃபிர்அவ்ன்.

பொதுமக்களின் நெறிபிறழா நிலையின் பலனை ஹளரத் உமர் (ரலி)
அவர்களின் ஆட்சியின் நிகழ்வுகளைக் கொண்டு விளங்க முடிந்தது
அதைப்போன்று பொதுமக்களின் பாரா முகத்தின் பலாபலனை பிர்அவ்னின் ஆட்சியின் நிகழ்வுகளைக் கொண்டு அறிய முடியும். பிர்அவ்ன் தனது குடிமக்களில் ஒரு பிரிவினருக்கு தாழ்த்தப்பட்டவர் என்ற முத்திரைகுத்தி அவர்களுக்கு கொடுமைகள் பல செய்து வந்தான். அவனது சமுதாயத்தவர் அவன் தவறு செயவதைக் கண்டு கொள்ளவே இல்லை அவன் செய்யும் தவறுகளுக்கு பக்கபலமாகவே இருந்துவந்தார்கள்.

ஹளரத் மூஸா நபி (அலை) அவர்கள், அவனை நேர்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட போதும் கூட அந்த மக்கள் பிர்அவ்னுக்கே ஆதரவு தந்தார்கள்.

திருக்குர்ஆன் கூறுகிறது :பிர்அவ்ன், தனது சமுதாயத்தைக்
கூவி அழைத்தான். எனதருமைச் சமுதாயத்தோரே! இந்த எகிப்து
நாடு எனக்கு சொந்தமல்லவா இந்த நதிகள்கூட என் ஆணையின்
பேரில் ஓடவில்லையா? நீங்கள் நன்கு சிந்தியுங்கள். இதோ! இந்த
தாழ்ந்தவன்ஒழுங்காகப் பேசக்கூடத் தெரியாதவன். இவனைவிட நான் சிறந்தவனல்லவா? (இவன் இறைத்தூதர் என்பது உண்மையென்றால் அதற்கு ஆதாரமாக) இவனுக்கு தங்கத்தாலான அணிகலன்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமோ? அல்லது மலக்குகள் இவனுடன்   உறவாடிக் கொண்டு வர வேண்டாமோ  இப்படியாக பிர்அவ்ன் மூஸாவை அற்பமாக்கிக் காட்டினான். அந்த மக்கள் அவனுக் கே வழிப்பட்டார்கள். நிச்சயமாக அவர்களும் வரம்பு மீறியோர் ஆவார்கள்
                                            அல்குர் ஆன் : (43 : 51-55)

பிர்அவ்ன், மூஸா(அலை) அவர்களை குறை கூறியதோடு மட்டும்
நில்லாமல் அவர்களின், இறைவனைக் கொலை செய்யப் போவதாகவும் கொக்கரித்தான். அப்போதும் அந்த சமுகத்ததவர்கள் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள்

திருக்குர் ஆன் கூறுகிறது: "பிர்அவ்ன், கூறினான்
சமுதாயத்தோரே! உங்களுக்கு என்னைத் தவிர்த்து வேறு கடவுள்
இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! செங்கற் சூளை ஒன்று
வைத்து, அதைக் கொண்டு ஒரு உயரமான ஸ்தூபியைக் கட்டு, நான்
அதன் மீது ஏறி மூஸாவின் இறைவனைக் காணப் போகிறேன். மூஸா பொய்யர்களின் இனத்திலுள்ளவர் என்று நான் நம்புகிறேன் என்று கூறினான் எனது உறுதியாகவே
                                          அல்குர்ஆன் : (28 : 38)

இறுதியில் பிர்அவ்ன் தன்னை கடவுளாகப் பிரகடனப் படுத்திய போதும் கூட, அவர்கள் மெளனமே சாதித்தார்கள். திருக்குர்ஆன் கூறுகிறது. "அவன் தனது சமூக மக்களை ஒன்று திரட்டினான். நான் தான் உங்களின் பெரிய இறைவன் என்று பிரகடனப்படுத்தினான்
அது பற்றிக் அல்குர்ஆன் : (79 : 24)


தவறு செய்யும் ஒருவன் மேலும் மேலும் தவறு செய்வதற்கு
பொதுமக்களின் பாராமுகமும் ஒரு காரணம் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

சமுதாயத்தின் கவலையளிக்கும் போக்கு.

சமுதாயம் தட்டிக் கேட்கத் தவறும் போது ஏற்படும் விளைவுகளுக்கு
இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய நிகழ்வுகளே சிறந்த சான்றுகளாகும் வரதட்சணை என்ற கொடுமை சவூதி அரேபியா போன்ற பிற நாடுகளில் இல்லாமல், இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் மலிந்திருப்பதற்கு சமுதாய அமைப்பே காரணம் வரதட்சணை பெறுபவனைப் பார்த்து சமுதாயம் முகம் சுளிக்காததன் விளைவே அது. இஸ்லாமியர்களிடையே விதவைகளை மணக்கும்
நிலை இன்னும் பெருகாததற்கு, முழு மதுவிலக்கு கடைபிடிக்காது போனதற்கும் குற்றங்கள் புரிபவர்கள் நல்ல மனிதன் போல் சபையேறத் தகுதி பெறுவதற்கும்சமுதாயமே பொறுப்பாகும்.

சமுதாயக் கேட்டின் விளைவு.

சமுதாயம் தீமையைக் கண்டும் காணாதது போன்று விட்டு விட்டால் அதனால் விளையும் விபரீதம் சமுதாயம் அனைத்தையும் சூழ்ந்து கொள்ளும் நபிகள்

நாயகம் (ஸல்) நவின்றார்கள். நல்லதை ஏவி, தீயதை விலக்கி வாருங்கள். இல்லையானால் அல்லாஹ் உங்களின் மீது வேதனையை இறக்கிடுவான். அப்போது நீங்கள் துஆச் செய்தாலும் உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படாது

அறிவிப்பவர் : ஹளரத் ஹுதைபா (ரலி). நூல் : திர்மிதி

ஒரு கப்பலில் மேல் தளத்தில் மக்கள் பிரயாணம் செய்கிறார்கள்
கீழ்த்தளத்திலுள்ளவர்கள் தங்களுக்குத் தண்ணீர் தேவைப்படும் போது
மேற்றளத்திலிருந்து எடுக்க வர, அதை மேற்தளத்திலுள்ளவார்கள்
ஆட்சேபித்தார்கள். இதனால் வெறுப்படைந்த கீழ்த்தளத்திலுள்ள சிலர் கோடாரியால் கப்பலில் ஓட்டை போட்டார்கள். எங்களுக்கு தண்ணீர தேவைப்படுகிறது. மேலுள்ளவர்கள் தண்ணீர் தர மறுக்கிறார்கள், எனவே எங்களுக்குத் தேவயான தண்ணீரை கப்பலில் ஓட்டை போட்டு எடுத்துக்கொள்கிறோம். என்று அவர்கள் கூறி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் ஆரம்பித்தார்கள்.

மற்றவர்கள் அதைத் தடுத்து நிறுத்தினால் தப்பிக்க இயலும்
தடுக்காவிட்டால் அனைவரும் சேர்ந்து அழிய வேண்டியதுதான்
அல் ஹதீஸ் அறிவிப்பவர் : ஹளரத் நுஃமான் (ரலி). நூல் : புகாரி.

பெருமானார் (ஸல்) அவர்கள் கோடிட்டுக் காட்டிய உவமை போன்று
தவறு நடக்கும் போது தட்டிக் கேட்காத சமுதாயம் அழிவின் பாதை நோக்கிச் சென்றிருக்கிறது.

பனூ இஸ்ரவேலர்கள் சனிக்கிழமை மீன் பிடிக்கலாகாது என்ற
இறைக்கட்டளையை மீறியபோது, குரங்கு பன்றிகளாக மாற்றப்பட்டார்கள் அப்போது, அக்குற்றத்தை தடுக்காமல் மவுனம் சாதித்தவர்களும் உருமாற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அது போன்றே பிர்அவ்னின் கொடுமைகளை பார்த்துக் கொண்டிருந்த
சமுதாயமும் அவனுடன் சேர்ந்தே மூழ்கடிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்றுப் பின்னணி.

சமுதாயத்தின் பணி சாத்வீகமாகவே நடைபெற வேண்டும்.

தனிமனிதனைப் பண்படுத்துவதில் சமுதாயத்துக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது என்று கூறுவதால், தனி மனிதன் குற்றவாளியாக இருந்தால் சமுதாயம் அவனிடத்தில் சண்டையிட வேண்டுமென்பது பொருளல்ல சண்டையிட்டுக் கொண்டு பின் விளைவை சந்திக்கும்படியாக ஷரீஅத் கூறவில்லை. ஷரீ அத் பார்வையில் குற்றவாளியாக இருப்பவனுக்கு மரியாதை அளித்தலாகாது என்பதே பொருள்.

மதிப்பளிப்பதற்கு பணம் உரைகல்லல்ல, பக்தியே உரைகல்லாகும்
தலைப்பில் கூறிய திருவசனம் இக்கருத்தையே "ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றிய உங்களை பலகிளைகளாக பிரித்திருக்கிறோம். அவற்றுள் இறையச்சத்துக்கே மதிப்பளிக்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறது

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றுள்ளார்கள் : "உங்களில் ஒருவர்
தீமையைக் கண்டால் தனது கரத்தால் தடுக்க வேண்டும். அது பின் விளைவைத் தருமானால், நாவினால் தடுக்க வேண்டும்
ஏற்படுத்துமானால் மனதால் தடுக்க வேண்டும். (தனது வெறுப்பைக் காட்ட வேண்டும்) கடைசி தரம் பலகீனமான ஈமானின் அறிகுறியாகும் அதுவும், பாதிப்பை
நூல் : முஸ்லிம்
அறிவிப்பவர் : ஹளரத் அபூஸயீத் (ரலி).

எல்லோரும் எல்லோரையும் கரத்தால் தடுத்திடமுடியாது. எல்லோரும் எல்லோரையும் நாவினாலும் திருத்த முடியாது. இடம், பொருள், ஏவல் பார்த்துச் செய்யவேண்டும். ஆனால் எல்லோரும் எல்லோரையும் மனதால் வெறுப்பைக் காட்டி திருத்திட இயலும்.

எது சமுதாயம்.

சமுதாயத்துக்கு பொறுப்புள்ளது என்று கூறுவதால், தனி மனிதனுக்குப் பொறுப்பில்லை என்பது பொருளல்ல. சமுதாயத்திடம் பொறுப்புச் சாட்டி விட்டு தனி மனிதன் தப்பித்துக் கொள்ளவும் முடியாது பல தனி மாரங்களைக் கொண்டதற்கே தோப்பு என்று கூறப்படும். அது போன்றே பல தனிமனிதர்களின் ஒன்று சேர்க்கையே சமுதாயம் எனப்படும்.

எனவே சமுதாயம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தன்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் தனித்தனி மனிதர்களாக பெருவாரியான மக்கள் மாறி விட்டார்களானால் சமுதாயம் மாறிவிட்டதாகக் கொள்ளமுடியும். அப்போது எஞ்சிய மனிதர்களையும் இனிவரும் மக்களையும் இலகுவில் மாற்றிட இயலும்.

துன்பத்தின் இடையே இன்பத்தின்நிழல்.

சட்டம் ஒழுங்கு அமைதியாக இல்லாத இக்காலத்திலும் இஸ்லாமிய
சமுதாயம் ஓரளவு நேர்மையாக வாழுவதற்கு கிராம பஞ்சாயத்து முக்கியமான காரணமாகும். சில பகுதிகளில் ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் அது மகத்தான சேவை செய்து வருகிறது. அரசாங்கத்திலும், காவல் நிலையங்களிலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு உரிய மதிப்பளிக்கப்படுவது கண்கூடு.

எனவே இன்றைய நிலையில் அந்த கிராம பஞ்சாயத்துக்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இல்லாத ஊர்களிலும் அந்த அமைப்பை உருவாக்கப்பாடுபட வேண்டும்.

அந்த கிராம ஜமா அத் வெறுமனே ஊர் விவகாரங்களில் மட்டும்
சேவையாற்றாமல் அனைத்து நன்மைகளைப் பரப்புவதிலும், அனைத்து திமைகளைக் களைவதிலும் ஈடுபட வேண்டும். அப்படி செயல்பட்டால் ஒரு சமுதாய விடியலை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஜமாஅத் என்ற கூட்டமைப்பின் மீது அல்லாஹ்வின் கரம் உள்ளது, (யதுல்லாஹி அலல் ஜமா அத்) என்ற நாயக நற்செய்திக்கு ஒப்ப அல்லாஹ் ஜமா அத்தின் சேவைகளுக்கு நற்பலன் தருவானாக.


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக