ثُمَّ جَعَلْنَاكَ عَلَىٰ شَرِيعَةٍ مِنَ الْأَمْرِ
فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ
சர்வ காரியத்திலும் உம்மை ஒரு ஷரீ அத்தின் மீது நாம் ஆக்கியிருக்கிறோம்.
அதைப் பின்பற்றி ஒழுகுவீராக
அல்குர்ஆன் : (45 : 18)
அல்குர்ஆன் : (45 : 18)
நாம் காணும் பொருட்கள், நமது எண்ணங்கள், செயல்பாடுகள்
அனைத்திலும் உயர்தரம், இடைத்தரம், கடைத்தரம் என்று
பல தரங்கள் இருப்பதைக் காணுகிறோம் அந்த நியதிக் கேற்ப இறைப்பாதையில் நடைபோடும்
போதும் அதில் நான்கு தரங்களைக் காணலாம்.
1. ஷரீ அத், 2 தரீக்கத், 3. மஃரிபத், 4. ஹகீகத்
நமது உறுப்புகளை இறைவன் அனுமதித்த வழிகளில் நடைபோடச் செய்த இறைவன்
அனுமதிக்காதவற்றிலிருந்து கட்டுப் படுத்திக்கொள்வதற்கு ஷரீ அத் (சட்டம்) என்றும்
நமது உள்ளங்களை மேற்கூறிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு
தரீக்கத் (உண்மையான பாதை) என்றும் கூறப்படும்
உள்ளத்தை அந்த நிலையிலிருந்து சற்று முன்னேறச் செய்து அல்லாஹ்
அல்லாத எந்த பொருளையும் நினைவில் இருத்தாது பழக்குவதற்கு மஃரிபத் (இறைவனை
அறிந்துகொள்ளுதல்) என்றும்
இன்னும் சற்று முன்னேறி ஹக் ஒருவனைத் தவிர தன்னையே கூட ஒரு பொருளாக
நினைக்காமல், இறையன்பில் தோய்ந்து போவதற்கு ஹகீகத் என்றும் கொள்ளல்
வேண்டும்
இந்த நான்கும் ஒன்றன் பின் ஒன்றாக அடையும் நிலைகளாகும். இவை
ஒரு தளத்தின் மீது எழுப்பப்படும் மற்றொரு தளத்தைப் போன்றாகும். கீழ் தளத்தைக்
கட்டாது மேற்தளத்தைக் கட்ட இயலாது. ஷரீஅத்தைப் பின்பற்றாது தரீக்கத்தில் நடைபோட
இயலாது. தரீகத்தைப் பேணாமல் மஃரிபத்தை அடைய முடியாது. மஃரிபத்தைக் கடக்காமல் ஹகீகத்தைதைக் காண முடியாது.
உவமை கூறி இந்த நான்கின் எதார்த்தத்தையும் புரிய வைப்பதாக
இருந்தால் ஷரீஅத்தைப் பால் என்றும், அடுத்த நிலைகளை
முறையே தயிர் வெண்ணெய், நெய் என்றும் நயம்பட உரைக்கலாம். ஷரீ அத்தை தேங்காய் மட்டை
என்றும், அடுத்த நிலைகளை முறையே தேங்காய் ஒடு, தேங்காய் தேங்காய்
எண்ணெய் என்றும் பகுத்துணரலாம். ஷரீ அத்தை மரம் என்றால் தரீக்கத் கிளை, மஃரிபத் இலை, ஹகீகத் பழம்
என்றும் கொள்ளல் வேண்டும்.
தராதர வேறுபாடு
நாம் செய்யும் ஒவ்வொரு அமல்களிலும் இந்த நான்கு நிலைகளையும்
பகுத்துணரலாம். தொழுகையை உவமைக்காக நாம் எடுத்துக்கொள்வோம். ஒரு மனிதன் தக்பீர்
கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள செயல்பாடுகள் அனைத்தையும் முறையாகச்
செய்தான். முறையாக கிராஅத் ஓதினான், ருகூஉ ஸுஜுது
செய்தான். அத்தஹிய்யாத்து ஒதினான். ஆனால் உள்ளம் மட்டும் அவன் சற்று முன் பறிகொடுத்து விட்ட பணப்பையைப் பற்றியே ஏங்கிக்கொண்டிருந்தது. ஷரீ அத் முறைப் பிராகரம் இவன் தொழுகை
செல்லத்தக்கதாக் ஆகிவிடும்.
மற்றொரு மனிதன் மனதை அடக்கிப் பயிற்சி பெற்றவன். அவன் தனது கவனத்தை
வேறெதிலும் செலுத்தாது கிராஅத்திலும், ருகூஉ ஸுஜுதில் ஒதப்படும்
தஸ்பிஹ்களிலும், அத்தஹிய்யாத்திலும் மனதை நிலைபெறச் செய்தயான். இவன் தரீகத்
முறையில் தொழுதவனாகக் கருதப்படுவான்.
இன்னொரு மனிதன் இறை அன்பில் தோய்ந்தவன் நீதிபதிக்கு முன்னால் நிற்கும் குற்றவாளியைப் போன்று, மன ஓர்மையுடன்
இறைவன் முன்னால் நிற்கிறான். தொழுகையின் ஒவ்வொரு செயல்களிலும் 'இறைவா! நீ என்னை
அங்கீகரிக்க வேண்டும். எனக்கு நீ வேண்டும். இதோ நான் உன் பக்கம் வருகிறேன் என்று
அவன் கெஞ்சுவதைப் போன்றிருக்கிறது. இவனது நிலைக்கு மஃரிபத் என்று கூறலாம்.
நான்காமவனின் நிலை காதலியைக் கண்டுவிட்ட காதலனின் நிலைக்கு ஒத்ததாக
இருந்தது. அவன் என்னென்னவோ செய்கிறான். என்னென்னவோ பேசுகிறான் அனைத்திலும் அவளைத்
திருப்திப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. அது போன்று தொழும் ஒருவனின் நினைவு
இறைவனைச் சுற்றியே வட்டமிடுகிறது. இறைவன் குனி என்றால் இவன் குனிகிறான். நிமிரு
என்றால் நிமிருகிறான். ஒது என்றால் ஒதுகிறான். மெளனியாக இரு என்றால் மெளனியாக இருக்கிறான். திரும்பு என்றால் திரும்புகிறான்.
ஒடு என்றால் ஓடுகிறான். அந்த நேரத்தில் அவன், தான் எங்கே
இருக்கிறோம் என்பதை மறந்தான். தனது கவுரவத்தை மறந்தான். ஏன்? அவன் தன்னையே கூட
மறந்தான். தன்னை ஒரு பொருளாகவே கருதவில்லை. அவனது ஒவ்வொரு அசைவிலும் இறைவன்தான்
தென்படுகிறான். இவனைத்தான் ஹக்கைக் கண்டு கொண்டவன் என்று குறிப்பிடப்படுகிறது.
ஷரீஅத் போதுமா
வியாபாரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அதில் முன்னேற்றம்
கண்டு கடைகளை கடல்களாக்க முனைகிறார்கள். அறிவியல் துறையில் ஈடுபடுவோர் சாதனை
படைக்க முயலுகிறார்கள். விவசாயம் செய்பவர் பசுமைப் புரட்சி ஏப்படுத்த முயலுகிறார்.
அவை போன்றே இறை பாதையிலும் முன்னேற்றம் காணுவதுதானே அறிவுடைமையாக இருக்கும்
மனத்தூய்மைக்கே முதலிடம்
ஷரீஅத் முறைப் பிராகாரம் தொழுதவன், அவன் தன் மீதுள்ள
கடமை நீங்கப் பெற்றாலும், அவன் உள்ளத்தை ஒன்றச் செய்த அளவே கூலி அளிக்கப்படுவான்
ஒரு சமயம் ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் கூபா நகரின்
பள்ளிவாசலொன்றில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு
கிராமவாசி
அப்பள்ளி வாசலுக்கு வந்து விரைவாகத் தொழுது விட்டுத்
திரும்பினார் அதைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் அந்தக் கிராமவாசியைக்
கூவி அழைத்தார்கள் "நண்பரே! தொழுகையை இவ்வளவு அவசரமாகத் தொழுகலாகாது” என்று கூறி, அவருக்கு ஒவ்வொரு
செயல் முறைகளையும் நிதானமாகச் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள்
அவரைத் திரும்பவும் தொழுது வருமாறு பணித்தார்கள். அந்தக்
கிராமவாசியும் ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் காட்டித்தந்ததைப் போன்றே தொழுது திரும்பினார்.
அப்போது ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் "நண்பரே! பாராட்டுக்கள் இப்போதுதான் நீர்
முறையாகத் தொழுதீர்” என்று கூறினார்கள். அதைச் செவியுற்ற அந்த கிராமவாசி அமீருல்
முஃமினீன் அவர்களே! நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால்
எனது கணிப்பில் நான் தொழுத முதல் தொழுகையே சிறந்ததாகப்படுகிறது. ஏனெனில் அது அல்லாஹ்வுக்காக
மட்டும் தொழுகப்பெற்றது. எனது இரண்டாவது தொழுகை தாங்கள் குறைகண்டுவிடக் கூடாதே!
என்ற எண்ணத்தில் நிறைவேற்றப்பட்டது என்று அக்கிராமவாசி கூறினார். அவர்
மனத்தூய்மைக்கு முதலிடம் அளித்ததை அறிந்த ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் வாயடைத்துப்
போனார்கள்.
இதனாற்றான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
"அமல்களெல்லாம்
எண்ணங்களைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது" என்று
கூறினார்கள்
நூல் : புஹாரி , அறிவிப்பவர்:
ஹள்ரத் உமர் (ரலி)
அனைத்துக்கும் ஆபத்து உண்டு
தரீகத் கூறுவதைப் போன்று உள்ளத்தைப் பண்படுத்தாவிடில்
நல்லமல்களும் பாழாகும் ஆபத்து உள்ளது. நல்லமல் செய்த ஒருவர்
பெருமை கொள்ளும்போது அவர் செய்த நல்லமல்களின் பலா பலன்கள் அனைத்தும் பாழய்ப்
போய்விடுகின்றன. பிறர் போற்ற வேண்டும் என்று எண்ணிச் செய்யும் கருமங்கள் அனைத்தும்
கானல் நீராக மாறி விடுகின்றன. ஒரு உபகாரத்தைச் செய்துவிட்டு அதைச்
சொல்லிக் காட்டுவதும், அந்த உபகாரம் பெற்றவரை வேதனைப்படுத்தும் வார்த்தைகளைக்
கொண்டு சீண்டிவிடுவதும் உபகாரத்தின் நன்மையைக் கெடுத்துவிடும். இவைகளெல்லாம்
திருக்குர்ஆனின் அறிவிப்புக்களாகும். தரீக்கத் மூலம் மனப் பயிற்சி பெறாதவர்க்கே
இத்தகைய கெடுதிகள் ஏற்படுகின்றன.
தீமைக்குக் காரணம் திருந்தா உள்ளமே
உள்ளத்தின் சீர்கேடே எல்லா தீமைக்கும் காரணமாகும். கோபத்தை
அடக்கிப் பழகாதவன் அடுத்தவர்களுக்கு அநியாயம் செய்துவிடுகிறான்
ஆசையை அடக்கத் தெரியாதவன் பல தவறுகளுக்கு ஆளாகிவிடுகிறான் கஞ்சத்தனத்தில் ஊறிப்போன
உள்ளம் ஜக்காத், ஹஜ் கடமைகளைத் தள்ளிப்போடுகிறது. அதனால் சில வேளைகளில்
அவற்றைச் செய்ய சந்தர்ப்பமே கிடைக்காமல் போய்விடுகிறது.
மனம் ஒரு குரங்கு' என்று
கூறப்படுவதை நாம் செவியுற்றிருக்கிறோம் அந்த மனத்தை துர்க்குணங்களிலிருந்து இறக்கி, நற்குணங்களுக்கு
பயிற்சி அளிக்கும் தரீக்கத் முறைப் பயிற்சி ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாததாகும்
தரீக்கத் பயிற்சி
தரீக்கத்தின் நோக்கம் மனதைப் பண்படுத்துவது. அல்லாஹ்வைப்
பற்றிய பயத்தை மனத்துள் நிலைபெறச் செய்வது. அதற்குச் சிறந்த வழி அல்லாஹ்வை அடிக்கடி
திக்ருச் செய்தாகும். நினைத்த போதெல்லாம் ஒரு பாடத்தை நினைவில் கொண்டு வர எண்ணும்
மாணவன் முதலில் அந்தப் பாடத்தை ஒன்றுக்கு நூறு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறி
மனதில் பதிய வைக்கிறான் அதன் பின்னர் அவன் அந்தப் பாடத்தை நினைத்த போதெல்லாம், நாவு தயங்காமல்
சொல்கிறது. அது போன்றே இறைவனைப் பற்றிய எண்ணம் எல்லா நேரத்திலும் உள்ளத்தில் இடம்பெற வேண்டுமேயானால், முதலில் அவனது
திருநாமத்தை ஒன்றுக்கு நூறு தடவைகள் திரும்பத் திரும்ப பல நாட்கள் கூறி மனதில்
ஏற்ற வேண்டும். இத்தகைய முயற்சியே தரிக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது
وَأَنْ لَوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ
لَأَسْقَيْنَاهُمْ مَاءً غَدَقًا
அல்லாஹ் கூறுகிறான்: "அவர்கள் தரிக்கத்தின் மீது நிலை
பெற்று நின்றால் (இறைநேயமென்னும்) மதுரமான நீரை நாம் அவர்களுக்கு புகட்டுவோம்
அல்குர்ஆன் : (72:16)
மஃரிபத்தின் மேன்மை
உலகில் நாம் காணும் பொருட்கள் அனைத்தும் சக்தியற்றவை.
அவைகளுக்கு அல்லாஹ்தான் சக்தியளிக்கிறான். அவைகளோடு அல்லாஹ்வின்
சம்பந்தம் இல்லையாயின் அவைகளால் ஒரு பயனுமில்லை அதற்கு மின் சாரத்தை உவமையாகக்
கொள்ளலாம்; மின் சாரமின்றி உபகரணங்களால் பயனொன்றுமில்லை அல்லவா? ஆனால்
அல்லாஹ்வன்றி அந்த மின்சாரத்தாலும் பயனில்லை. இந்த உண்மையைப் புரிய வைப்பதற்கு மஃரிபத்
என்று கூறப்படுகிறது
தரீக்கத் பயிற்சியின் மூலமாக சதாவும் அல்லாஹ்வை நினைக்க
பழகிக்கொண்டவனுக்கு, அந்த அல்லாஹ்வின் வல்லமையை போதிப்பதும் பொருள்களின் கையாலாகா
தன்மை உணர்த்துவதும்
இன்றியமையாததாகும்
நபி ஹள்ரத் மூஸா (அலை) அவர்களுக்கு ஒரு சமயம் வயிற்று நோவு கண்டது.
அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட பச்சிலையை பறித்துண்ணும்படியாக
இறைவன் கூறினான். அது போன்றே அவர்களும் செய்தார்கள். வயிற்று நோவு குணமாகியது சிறிது
காலங்களுக்குப் பிறகு திரும்பவும் அது போன்றே நோவு ஏற்பட்டது. உடனே அவர்கள் முன்பு
சாப்பிட்ட பச்சிலையை பறித்து உண்டார்கள். ஆனால் வயிற்று நோவு தீரவில்லை.
ஆச்சரியமடைந்த ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் இது பற்றிக் கேட்டார்கள்.
அதுபோது அல்லாஹ் கூறினான்
"மூஸாவே! முன்பு எனது உத்தரவுக்கிணங்க அந்த பச்சிலையை நீர்
உண்டீர்! குணம் கிடைத்தது ஆனால் தற்போது எனது உத்தரவைப்
பெறாமலையே அந்த பச்சிலையை நீர் உண்டீர்! எனவே குணம்
கிடைக்கப்பெறவில்லை. மூஸாவே! அறிந்து கொள்வீராக! எல்லாப் பொருட்களும் எந்த சக்தியும்
அற்றவையே! அதற்கு நான் சக்தியைக் கொடுத்தால் அது சக்தியை வெளிப்படுத்தும் நான்
அதற்கு சக்தியைத் தராவிட்டால் வெறுமையாகிவிடும்
இந்த உண்மையை திருக்குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது
ஹள்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கட்டியிருந்த கயிற்றை சுட்டெரித்துவிட்ட
நெருப்பால் அவர்களின் உரோமத்தைக்கூட சுட முடியவில்லை. பாறையை பொடிப் பொடியாக்கிய
கத்தியால் குழந்தை ஹள்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் மலர் போன்ற கழுத்தைப் பதம்
பார்க்க முடியவில்லை. ஹள்ரத் மூஸா நபி (அலை) அவர்களையும், அவர்களின் லட்சோபலட்ச உம்மத்துக்களையும், அவர்களின்
கணுக்காலைக்கூட நனைக்க முடியாத நைல் பெரு நதி ஃபிர் அவ்னையும், அவனது லட்சோபலட்ச
தொண்டர்களையும் மூழ்கடித்து வேடிக்கை பார்த்தது
இந்த வரலாற்று உண்மைகளை அள்ளித் தரும் திருக்குர் ஆன்
وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ إِنَّ
اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
"அல்லாஹ் நாடாமல் நீங்கள் நாட்டம் கொள்ளக்கட
முடியாது"என்று நமது கையாலாகாத தன்மையையும் அறியத் தருகிறது( 76: 30)
மனிதன் ஒரு மணித்துளியில் உள்ளத்தால் உலகையே அளந்து
வருகிறான் என்பது உண்மையென்றாலும் கூட, நாம்
வேண்டினாலும்
வேண்டாவிட்டாலும் அல்லாஹ் துணையிருப்பதால்தான் அதுவும்
முடிகிறது ஆம்! நாம் காணும் பொருட்களெல்லாம் வெறும் மாயை அதில் அல்லாஹ்தான் சக்தியாகிறான்.
இந்த உண்மையை புரிந்து கொள்ளுவதற்கே மஃரிபத் நிலை என்று கூறப்படுகிறது. இந்த
மஃரிபத் நிலையை அறிவதற்கே மனிதன் படைக்கப் பெற்றுள்ளான்
திருக்குர் ஆன்கூறுகிறது:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
"மனிதனையும், ஜின் இனத்தையும் என்னை அறிவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை அல்குர் ஆன் : (51: 56)
ஹகீகத் ஒரு விளக்கம்
உள்ளது ஒன்று, மற்றது அன்று' என்று
இறைநேசர்கள் குறிப்பிடுவார்கள் பொருள்களின் மாயத் தோற்றத்தைப் புரிந்து கொண்ட
ஒருவன், இறைவன் மீது அன்புகொண்டு அந்த அன்பிலேயே தோய்ந்து, உருகி, இரண்டறக் கலந்து
அந்த அன்பனை விட்டு தன்னை வேறுபடுத்திப் பார்க்காத நிலையை அடைவதற்கு ஹகீகத் நிலை என்று கூறப்படும் அத்தகைய நிலையை அடைந்தவர்கள் செய்ததை
இறைவன், தான் செய்ததாகவே அறிவிக்கிறான்.
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ
وَلَٰكِنَّ اللَّهَ رَمَ
நீர் எறிந்தபோது நீர் எறியவில்லை. என்றாலும் அல்லாஹ்வே எறிந்தான் அல்குர்ஆன் : (8 : 17)
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَٰكِنَّ اللَّهَ قَتَلَهُمْ
நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. எனினும் அல்லாஹ்வே
அவர்களைக் கொன்றான் அல்குர் ஆன் : (8 : 17)
إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ
فَوْقَ أَيْدِيهِمْ
உம்மிடம் பைஅத் செய்து கொண்டவர் அல்லாஹ்விடம் பைஅத் செய்து கொண்டவராவார்
அல்குர் ஆன் : (48 : 10)
يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ
அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரத்தின் மீதிருந்தது
அல்குர்ஆன் : (46 : 17)
வல்ல ரஹ்மான் நமக்கு தரீக்கத்தில் நடந்து, மஃரிபத்தில்
மிதந்து
ஹக்கை காணும் பாக்கியத்தைத் தந்தருள்புரிவானாக
இது
மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம்
பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ
உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற
நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை
அவர்களுக்கு எல்லா வளமும் நலமும் அல்லாஹ்
நிறைவாக தந்தருள்வானாக.
BY. A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ
பள்ளிவாசல்.
அசநெல்லி
குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக