அவன் ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்திருக்கிறான்
ஏற்றத்தாழ்வு காணுகிறாயா..? மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்து. குறைகாணும் முயற்சியால் உனது பார்வை தோல்வியுற்றே திரும்பும்.
அல்குர் ஆன் : (67 : 3, 4).
அறிவியல் வானில் மனிதன் சிறகடித்தப் பறக்கும் காலம் இது
இஸ்லாமும் மனிதனை அவ்வானில் சிறகடித்துப் பறக்கவே ஏவுகிறது. மனிதன் ஆய்வுகளில் வெற்றி காணுகிறான் என்பது உண்மை. ஆனால் அவனால் அந்த ஆய்வை செயல்படுத்த முடியவில்லை, எனவே அவனது ஆய்வின் விளைவு
தோல்வியையே சந்திக்கிறது.
இஸ்லாம் அறிவியல் வினோதங்களை இறையச்சம் என்ற தேனில் குளைத்து மனிதனுக்கு ஊட்டுகிறது. எனவே அந்த வினோதங்கள்
செயலாக்கப்பட்டு வெற்றியையே சந்திக்கின்றன. இஸ்லாம் செயலாக்கத்தை கட்டாயப்படுத்துவதால், அது தான் அறிவியலை முக்கியப்படுத்துகிறது என்று கொள்ளலாம் சாதாரண நடைமுறை நிகழ்வுகளை சிந்தித்தாலே இந்த உண்மையை உணர முடியும்.
1. மதுபானம்.
மது பானத்தின் தீமை பற்றி அறிவியல் துறை விளக்குகிறது. மதுபானம் அருந்துவதால் உறுப்புக்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் சிறு மூளை பாதிப்பு அடைகிறது
கத்தியின் கூர்மைப்பகுதியை மீண்டும் மீண்டும் மொட்டையாக்குவது கத்தியின் தன்மையை போக்கிவிடுவது போன்று, மீண்டும் மீண்டும் மதுபானம் அருந்துவதால் சிறு மூளை செயலற்றுவிடுகிறது. ALCHOL மனித உயிருக்கு ஆதாரமாக உள்ள PROTOPLASM என்ற பொருளைக் கெட்டி ஆக்கிறது முட்டைக் கருவில் ALCHOL விட்டால் கட்டியாகுவதைக் காணலாம். அந்த பொருள் உறைந்து விடுவதால் மனிதனுக்கு உயிரிழப்பு விரைவில் ஏற்பட்டுவிடும்.
இப்படியெல்லாம் மதுவின் தீமையைப் பற்றி ஆய்வு செய்யும்
விஞ்ஞானிக்கே 200 மில்லி போடவில்லையாயின் மூளை வேலை செய்வதில்லை.
நாம் இன்னாட்டின் குடிமக்கள்! நாம் யார்க்கும் அஞ்சோம்” என்ற
சொற்றொடருக்கு விபரீதமான பொருள் செய்யப்படுகிறது.
நன்மை விரும்பி ஒருவன் ஊர் ஊராகச் சென்று மதுபானத்தின்
கெடுதியை விளக்கி வந்தான். அவன் அதற்காக தேர்ந்தெடுத்துக் கொண்ட பாணியே தனி. இரு பீங்கான் கிளாசில் ஒன்றில் தண்ணீரும், மற்றொன்றில் மது பானமும் ஊற்றிக்கொள்வான். அத் தண்ணீர் குவளையில் சில பூச்சிகளைவிட்டிருப்பான் அவை தண்ணீரில் துள்ளிக் கு தித்து விளையாடிக்கொண்டிருக்கும். பின்னர் அந்தப் பூச்சிகளைப் பிடித்து மதுபானக் கிண்ணத்தில் போடுவான். அவை சற்று நேரத்தில் செத்து மிதக்கும்.
நன்மை விரும்பி கூறுவான் "பார்த்தீர்களா? சகோதரர்களே! தண்ணீரில் துள்ளிக் குதித்து விளையாக் கொண்டிருந்த பூச்சிகளை இந்த மது சாடித்து விட்டது. இது போன்றே குடிப்பழக்கம் உங்களையும் கொன்றுவிடும். உங்கள் குழந்தைகளை அனாதைகளாக்கும். உங்கள் மனைவியை விதவையாக்கும், குடி
குடியை கெடுக்கும் என்பான்"
இவ்வாறு செயல்வடிவில் மதுவின் தீமையை விளக்கி வந்த அவனுக்கு இந்த உண்மையை மக்கள் வாயினாலே சொல்ல வைத்தால் நல்ல எபக்டிவ் ஆகுமே! என்று எண்ணம் ஒருநாள் தோன்றியது. உடனே ஒரு கிராமத்தில் தனது செயல் முறையைச் செய்து காட்டி விட்டு “நண்பர்களே! இதிலிருந்து
என்ன தெரிகிறது” என்று கேட்டான். சற்றும் யோசிக்காமல் ஒரு கிராமவாசி இந்த மதுவைக் குடித்தால் நம் வயிற்றிலுள்ள கிருமிகள் செத்து விடுமென்று தெரிகிறது" என்ற கூறினார். அப்போதுதான் அந்த நலம் விரும்பிக்கு இந்த குடிமக்களை திருத்தவே முடியாது என்று தோன்றியது.
குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கடைப்பிடிக்கும் வழி இதோ...
மது அருந்துபவன் மது அருந்தும் நேரத்தில் முஃமினாக
இருப்பதில்லை” (அல் ஹதீஸ்).
மது அருந்துபவனே! உன் உடம்பு கெடுவதைப் பற்றிக் கவலைப்பட
மாட்டாய். ஆனால் அதனால் உனது ஈமான் அல்லவா பறிபோய்விடுகிறது ஈமான் பறி போனால் நீ மோட்சமே அடைய முடியாதே! என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.
இந்த எச்சரிக்கை பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் நூறு
சதவீத மக்களைத் திருத்தியது என்றால், .இக் காலத்திலும் அது பலன் கொடுக்காமல் இருக்கவில்லை. சதவீதத்தில் வேண்டுமானால் சற்று வித்தியாசம் இருக்கலாம், இந்த குடியுகத்தில் மற்றவர்களோடு இணைத்துப் பார்க்கும் போது இஸ்லாமியர்களில் போதைக்கு அடிமையானவர்கள் குறைவே போதையில் உள்ளவனை முச்சந்தியில் நிற்க வைத்து 80 கசையடிகள் கொடுக்க
வேண்டும். அந்த அடிபடும் போது அவன் இறந்தாலும் பாதகமில்லை
லைலத்துல் கத்ரு போன்ற புனிதம் பெற்ற இரவுகளிலும் கூட போதைக்காரனுக்கு மன்னிப்பு கிட்டாது என்பன போன்ற எச்சரிக்கைகள் இஸ்லாம் அறிவியலுக்கு அளிக்கும் முக்கியதுவத்தையே காட்டுகிறது.
2. விபச்சாரம்
அறிவியல் உலகம் விபச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. AIDS என்ற ஆட்கொல்லி நோய் பரவுவதற்குக் காரணம் விபச்சாரம் என்று இனங்காட்டுகிறது.
இன்று இந்தியாவில் மட்டும் பத்துலட்சம் நபர்கள் அந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். இந்த பெருமைமிக்க பாரத தேசத்தில் ஒரு இரவில் மட்டும் ஒரு லட்சம் பேர் அந்நோயின் கிருமியாகிய H.I.V.யைச் சந்திக்கிறார்கள்
அவர்களில் குறைந்த பட்சம் ஒரு நூறு நபர்களாவது அந்நோய்க்கு
ஆளாகிறார்கள். ஒரு இரவில் ஒரு நூறு என்றால் ஒரு மாதத்தில் மூவாயிரம் ஒரு ஆண்டில் முப்பத்தி ஆறாயிரம் என்ற கணக்கில் பெருகி, சில ஆண்டுகளுக்குள்ளாகவே இது பாரத தேசமாக இருக்காமல் எய்ட்ஸ் ஆதிக்கம் பெற்ற பரத்தயர்) தேசமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த புள்ளி விபரங்களைத் தருபவர்கள் அறிவியலார்தான். ஆனால் அந்த அறிவியலாருக்குக் கூட ஒரு நாளைக்கு ஒரு பெண்ணின் கற்பை அழிக்காவிட்டால் நிம்மதி கிடைப்பதில்லை.
நாங்கள் தான் அறிவியலார் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும்
வல்லரசுகளின் நாட்டு நடப்பை கவனத்தில் கொண்டால் இந்த உண்மை பட்டெனப் புரியவரும். அறிவியல் வல்லுனர்களாக இருப்பார்கள். நியாயத்தின் உறைவிடமாகக் கூட இருப்பார்கள், ஆனால் விபச்சாரம் இன்றேல் அன்றைய பொழுதை அபச்சாரமாகக் கருதுவார்கள்.
இஸ்லாம் அதன் தீமையை இப்படி ஒழிக்கிறது. விபச்சாரம் புரிந்தவன் உலகில் வாழ்ந்தால் அவனால் பல பேருக்கு நோய் தொற்றிக் கொள்ளும் எனவே அவனுக்கு உலகில் வாழும் உரிமை அளிக்காமல் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும். மணமுடிக்காதவன் இத்தகைய பாதகச் செயலைச்
செய்துவிட்டால், அவன் உடலில் வலு சற்று அதிகமாக இருக்குமென்பதால் அவனுள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே அவனை உலகில் வாழ அனுமதித்தால், இந்தக் கிருமி அதிகமாகப் பரவக் காரணமாக அவன் அமையமாட்டான். அவன் பிழைத்து விட்டுப் போகட்டும் முச்சந்தியில் நிற்க
வைத்து ஒரு நூறு கசையடி கொடுங்கள் போதும் என்று இஸ்லாம் கூறுகிறது.
நோய் பரவுகிறது, நோய் பரவுகிறது என்று கூறிக் கொண்டே வாழ
அனுமதிப்போர், அறிவியலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைவிட
ஒழித்துக்கட்டக் கோரும் இஸ்லாம், அறிவியலுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பெரிதல்லவா.
3. நாய்.
அறிவியல் கூறுகிறது, நாய் ஒரு கொடிய விலங்கு நாய் கடித்து
விட்டால் “ராபிஸ்” என்ற கொடிய வெறிநோய் உண்டாகிறது. அதனால் கடிபட்டவன் கொடூரமாக இறக்கிறான். இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பேர் நாய் கடியால் இறக்கிறார்கள். இது அறிவியலார் தரும் புள்ளி விவரம். ஆனால் நாயின் தீமையை சுட்டிக்காட்டும் அவர்கள் நாயை வளர்ப்பதற்கும் அதைக் குழந்தை போன்று செல்லமாக தோளில் போட்டுக்கொண்டு திரிவதற்கும் வழி காட்டிகளாகத் திகழுகிறார்கள் ஒரு விட்டிலுள்ளவர்கள் நாகரீகத்தைக் கற்றுக் கொண்டால், அங்கே நாய் நுழைந்ததைப் போன்று நாயும் நுழைந்து விடுகிறது. நாயின்றி நாகரீகமா..?
இஸ்லாம் நாயின் தீமைபற்றி கடுமையாக எச்சரிக்கிறது. நாய் ஒரு பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால் அந்த பாத்திரத்தை ஏழுதடவை கழுக வேண்டும் என்று கூறுகிறது. நாயின் வாயிலுள்ள கிருமி பாத்திரத்தில் தொற்றிக் கொள்ளும் தன்மை படைத்தது தொற்றிக் கொண்ட அகற்றவில்லையாயின் நமது உடம்பில் அது பற்றிக் கொண்டு நோயை உண்டாக்கும் அபாயம் உள்ளதை இஸ்லாம் எச்சரித்து அக் கிருமியை அகற்றும் வழியையும் கற்றுத் தருகிறது.
பாத்திரத்தில் ஒட்டிய கிருமி ஆறுதடவை கழுவியும் அகலாதிருந்ததையும், ஏழுதடவைகள் கழுவிய பின்னரே அகன்றதையும் ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இஸ்லாமாகிய வரலாறு ஈலாஹுல் புகாரி' என்ற நூலில் எடுத்துக் கூறப்படுகிறது.
இவ்வாறு நோய் பரவுவதற்கு காரணமாக உள்ள நாயை வீட்டில் ஒட்டவிடக் கூடாது என்றும், அப்படி வளர்த்தால் அந்த வீட்டினுள் மலக்குகள் அருள் கொண்டு வரமாட்டார்கள் என்றும் இஸ்லாம் எச்சரிக்கிறது. மலக்குகள் இறையருள் கொண்டு வரமாட்டார்களென்பது எவ்வளவு கொடிய தண்டனை
தெரியுமா? இவ்வளவு பெரிய தண்டனையைக் கூறி இஸ்லாம் அறிவியலை வளர்க்கிறது.
4. பன்றி -
பன்றியால் மூளைக் காய்ச்சல் ஏற்படுகிது. மூளைக்காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகள் வெகு விரைவாக மரணத்தைத் தழுவுகிறர்கள். மேலும் பன்றியின் மூலமாக ஒரு வகையான TAPE WORM நாடாப்புழு மனித உடம்பில் தொற்றுகிறது. அந்தப் புழு வினோதமானை இனத்தைச் சார்ந்தது. அதைவேகவைத்தால் அது பெருகும். உடம்பில் புகுந்தால் உடம்பின் உஷ்ணத்தால் பல்கிப்
பெருகி பெறு வாழ்வு வாழும். அந்த நாடாப்புழு இரத்தத்தை உற்பத்திசெய்யும் அணுக்களை அழிக்கிறது. இதனால் இரத்த சோகை நோய் ஏற்பட்டு மனிதன் பலவீனமடைகிறான். அவன் உடலில் ஆறாத கொப்பளங்கள் தோன்றுகின்றன
இவைகள் அறிவியல் உலகம் விடும் எச்சரிக்கை. ஆனால் எச்சரிக்கை விடும் அவர்களே பன்றி இறைச்சியை உண்ணுவதற்கு ஆர்வம் காட்டுவது வியப்பாகவே இருக்கிறது. மேலை நாடுகளின் உணவு விடுதிகளில் அந்த அந்த இறைச்சி சிறப்பு உணவாக படைக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் அந்த பெயரையே உச்சரிக்க அருவறுப்பாக கருதும் அளவு, இஸ்லாம் அவர்களை பண்படுத்திவிட்டது. கட்டைக்கால் பிராணி என்றுதான் அதைக் கூறுவார்கள்.
முஸ்லிம்கள் எவ்வளவு தான் நாகரீக போக்கால் அலைக்களிக்கப்பட்டாலும், உணவு வகைகளில் இஸ்லாத்தின் தடையை அவர்கள் மீறுவதே இல்லை இது இஸ்லாமிய அறிவியல் பெற்ற மகத்தான
வெற்றியாகும்
5. சிறுநீர் -
கந்தையானாலும் கசக்கிக் கட்டு,
கூழானாலும் குளித்துக் குடி. என்று தமிழ்ப் பண்பாடு சுத்தத்தை வலியுறுத்துகிறது.
இந்தியரிடம் சுத்தத்தை அதிகமாக எதிர்பார்க்க முடியாது என்று மேலைநாட்டவர் தப்புக் கணக்கப் போட்டுள்ளார்கள். அதைச் சுட்டிக் காட்டும் வகையில்மேலை நாட்டவரால் ஒரு கற்பனைக் கதை புனையப்பட்டுள்ளது. நாற்றம் பிடித்தஆடு ஒன்றை மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது இந்தியன், அமெரிக்கன், ரஷ்யன் மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது
அந்த ஆட்டை பிடித்து வர வேண்டும். அமெரிக்கன் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் திரும்பி வந்து விட்டான். ரஷ்யன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் அதன் நாற்றம் தாங்காமல் திரும்பி ஓடி வந்து விட்டான். இந்தியன் மூன்று கிலோ மீட்டார் தூரம் சென்றான். ஆனால் இவன் நாற்றம் தாங்காமல் ஆடு ஓடிவிட்டது.
இப்படி இந்தியாவைப் பற்றி குறைத்து மதிப்பிடும் மேலை நாட்டவர் உணவைக்கூட கையினால் தொடக்கூடாது, கரண்டி, கருவிகளால்தான்உட்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். பாத்திரத்தில் வாய் வைத்துக் குடிக்கக் கூடாது கிருமி தொற்றிக் கொள்ளும், அதைத் தொட்டாலும் கை கழுவிக் கொள்ளவேண்டும். இதை தொட்டாலும் கை கழுவிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். சுத்தத்தின் உயர்ந்த பண்பாடுகளே அவை.
ஆனால் அப்படிக் கூறும் அவர்கள் சிறுநீர் கழித்தால் மட்டும் அதை
தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று ஏன் கூற மறுக்கிறார்கள் அதனால் கிருமி தொற்றிக் கொள்ளாதா..? அல்லது சிறநீரில் கிருமிகள் இல்லையா? ஆடையில் பட்டால் நாற்றம் எடுக்காதா? மேற்கூறிய ஆட்டின் நாற்றத்தை விட சிறுநீர் அதிகநாற்றமடிக்குமே
நின்று கொண்டே சிறுநீரைக் கழிக்க வகைசெய்யும் வகையில்
ஆடைகளை அவர்கள் அணிகிறார்கள். அதற்கு ஏற்ப கழிவறைகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள் ஆடையி ல், உடலின் பிற பகுதிகளில் சிறுநீர் திவலைகள் படுவதால் ஏற்படும், தீங்கு உணவை கையினால் எடுத்து சாப்பிடுவதை விட பயங்கரமானதல்லவா.
இஸ்லாம் சிறுநீரின் கிருமிகளையும், அது தொற்றுவதால் ஏற்படும்
நோய்களையும் கடுமையாக எச்சரிக்கிறது. தண்ணீர் விட்டுக் கழுவியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இறைவன் சன்னிதானத்தில் மனிதன் செய்யும் மாபாதகச் செயல்களைவிட, சிறுநீரில் கவனக் குறைவாக இருந்த குற்றத்தையே முதன் முதலில் விசாரிக்கப்படுவதாகவும், அதில் குறை செய்திருந்தால் இறந்த உடன் மண்ணறையிலேயே வேதனை தரப்படுவதாகவும்
சுட்டிக்காட்டுகிறது.
"மண்ணறையில் செய்யப்படும் வேதனைக்கு பெரும்பாலும் சிறுநீரை சுத்தம் செய்யாததே காரணமாக இருக்கும்" என நபிகள் நாயகம் (ஸல்) நவின்றுள்ளார்கள்.
அவர்கள் குதிரை மீதேறி ஓரிடத்துக்குச் சென்ற போது குதிரை அவர்களை கீழே சறுக்கி விடுகிறது. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்த போது, அங்கு இருண்டு மண்ணறை இருப்பதைக் கண்டார்கள் இந்த மண்ணறைவாசிகள் வேதனை செய்யப்படுகிறார்கள். அதைக்கண்டதால் தான் குதிரை மிரண்டிருக்கிறது. ஒருவர் சிறுநீர் சுத்தத்தில் குறை செய்ததால் வேதனைக்கு ஆளானர், மற்றவர் கோள் மூட்டித் திரிந்த குற்றத்துக்காக வேதனை படுத்தப்படுகிறார்" என்றுரைத்தார்கள். பின்னர் அங்கு கிடந்த ஒரு பேரித்த மட்டையை எடுத்து இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு மண்ணறையிலும் ஒன்றை நட்டார்கள். இந்த மட்டை காய்ந்து போகும் வரை இந்த மண்ணறைவாசிகளுக்கு வேதனை இராது என்றார்கள்
அறிவியலார் புறக்கணிக்கும் சிறு நீர் அசுத்தத்தின் விளைவு
சாமானியமானதல்ல. அந்த அசுத்தத்தால் அவன் உடல், உடையில் கிருமி தொற்றி, அந்தக் கிருமிகள் அவனது மூளையை தாக்கி நோய் பெருகுவதோடு இறைத் தண்டனையையும் பெறும் இழி நிலைக்கும் அவனைக் கொண்டு சென்று விடுகிறது
இறையச்சத்தை கருவியாகக் கொண்ட அறிவியலை செயலாக்கும் இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு இன்னும் எத்தனையோ உவமைகளைக் கூறலாம். ஆம்! இஸ்லாம்தான் அறிவியல்
இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக.
BY. A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக