வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஜனாஸா ஒழுக்கங்கள்.



ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
பின்னர் அல்லாஹ் மனிதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான். (திருக்குர்ஆன் 8:21)

மனிதனின் அனைத்து காரியங்களிலும் சட்டத் திட்டங்களை அமைத்து வாழ்க்கை நெறியை வகுத்து தருகிறது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனுடைய இறப்பு நேரத்திலும், அதன் பிறகும் சில ஒழுக்கங்களை பிற மனிதர்கள் கடை பிடிப்பது அவசியமாகும்.


மரண தருவாயில் அருகிலிருந்து ஓத வேண்டியவை

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லை) எனும் கலிமாவை நினைவுப் படுத்துங்கள்
அறிவிப்பாளர். அபூ சயீத் அல்குத்ர் (ரலி) நூல். முஸ்லிம்-1672, திர்மிதி-976

மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று ஆறுதலாக அவருக்கு அருகில் அமர்ந்து திருக் கலிமவை நினைவு படுத்துவது நபிவழியாகும்

எந்த மனிதனின் இறுதிப் பேச்சு லாஇலாஹ இல்லல்லாஹு" என்ற திருக் கலிமா வாக அமைந்து விட்டதோ அவர் சொர்க்கம் சென்று விடுவார்" என்கிறது ஒரு நபிமொழி (திர்மிதி-977) இருப்பினும் அவரை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ கூடாது. இறுதி கட்டத்தில் உள்ள ஒருவர் எத்தகைய துன்பத்தில் இருக்கிறார் என்று நமக்கு தெரியாது. நாம் கலிமாவை சொல்லுமாறு வற்புறுத்த அவர் எரிச்சலடைந்து அதை வெறுத்து விடக்கூடும்.

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் மரணத்தை நெருங்கி விட்டவர் மீது "யாசீன்" அத்தியாயத்தை ஓதுங்கள். (நூல்: அபூதாவூத் 3121, திர்மிதி)

இம்மையின் சுகவாழ்வு நிரந்தரமில்லாததும் அழியக்கூடியதுமாகும். மறுமையின் சுவன வாழ்வு நிரந்தரமும், மகிழ்ச்சியும் உடையதுமாகும் என்பன போன்ற கருத்துக்கள் யாசீன் அத்தியாயத்தில் பரவலாக இடம் பெற்றிருக்கின்றன. மரணிக்கக் கூடியவரின் முன்பாக அமர்ந்து கொண்டு இதை ஓதப்படும் போது அல்லாஹ் அதன் கருத்துக்களை அவருக்கு புரிய வைக்கலாம்.

அப்போது இம்மை வாழ்விலிருந்து மறுமை வாழ்வுக்கு செல்ல வேண்டும் என்ற செயலாகும். உணர்வு அவரை தட்டி எழுப்பும். இந்த உணர்வு எழும்போது அல்லாஹ்விடம் போய் சேரவேண்டும் என்று ஆர்வம் கொள்வார்.

அந்நேரம் மரண வேதனையை மறந்து மறுமையுடைய சுகவாழ்வின் எண்ணத்தில் மூழ்கி விடுவார். இதனால் தான் மரண தருவாயில் படுத்துக் கொண்டிருக்கின்ற மனிதரின் அருகில் அமர்ந்து யாசீன் அத்தியாயத்தை ஒதுங்கள் என்று தூண்டப்படுகின்றது என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ் அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

மரணித்த பின்...

ஸைத் (ரலி, ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி, அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி ஆகியோரின் மரணத் தகவலை மக்களுக்கு அண்ணல் நபி ஸல் அவர்கள் கூறிவிட்டு அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்கள்
(நூல் : முஸ்னது அஹமது.

இறந்தவருக்காக உயிருடன் இருப்பவர்கள் செய்யும் நற்செயலில் ஒன்று அவருக்காக அதிகமாக இறைவனிடம் பிரார்த்திப்பதாகும். பிள்ளைகள், மறைந்த பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடுவதே அவர்களுக்கு செய்யும் சிறந்த நற்செயலாகும்.

எங்கள் இறைவா! எங்களையும் நீ மன்னிப்பாயாக! எங்களுக்கு முன்
இறை நம்பிக்கை கொண்ட எங்களுடைய சகோதரர்களையும்
மன்னிப்பாயாக.  (திருக்குர்ஆன் 59:10)

ஆயிஷா (ரலி அவர்கள் கூறியதாவது: அண்ணல் நபி அவர்களின் மரண செய்தியை செவியுற்ற அபூபக்ர் (ரலி அவர்கள் வந்து எவரிடமும் பேசாமல் அணணவாரின் புனித உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று அண்ணலாரின் மீது. போர்த்தப்பட்டிருந்த போர்வையை சற்று நீக்கி விட்டு முத்தமிட்டு அழுதார்கள்  (நூல்: புகாரி-1241

ஒருவர் மரணமடைந்த பின்பு பிரேதத்தை சற்று நேரம் மூடி வைப்பதும் பிறர் பார்ப்பதும் மார்க்கம் அனுமதித்தவையாகும். ஆனால் தீதார் என்ற பெயரில் ஒரு ஆண் பிரேதத்தை அந்நியப் பெண்கள் பார்ப்பதும், ஒரு பெண் பிரேதத்தை அந்நிய ஆண்கள் பார்ப்பதும் அனுமதிக்கப்படாத செயலாகும். இந்த தவறு சமுதாயத்தில் புரையோடிப் போய் விட்டது.

துக்கத்தினால் அழல்

உசாமா பின் ஸைத் (ரலி அவர்கள் கூறியதாவது : அண்ணல் ஸல் அவர்கள் மரண தருவாயில் படுத்துக் கொண்டிருக்கின்ற தனது பேரக் குழந்தையை (ஸைனப் (ரலி) அவர்களின் மகனார்) பார்க்கச் சென்றார்கள். குழந்தையின் மூச்சு திணறிக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அண்ணலார் அவர்கள் கண்ணீர் சொரிந்தார்கள்,. சஅத் பின் உபாதா (ரலி அவர்கள் நாயகமே! என்ன இது (ஏன் அழுகிறீர்கள்) என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார் ஸல் அவர்கள் இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். "நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்
என்றார்கள் (நூல்: புகாரி-1284, முஸ்லிம்-1682)

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது எனது தந்தை கொல்லப்பட்டு கிடந்த போது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றி விட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னை தடுத்தார்கள், ஆனால் அருமை நாயகம் ஸல் அவர்கள் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
(நூல் : புகாரி-1244)

பற்றும் பாசமும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தினர் மற்றும் உறவினர் ஆகியோரில் எவரேனும் மரணித்து விடும்போது மனிதன் கவலையில் துன்பத்தில் மூழ்கி விடுவது இயற்கையே! அவ்வேளையில் அவன் சோகத்தினால் கண்ணீர் விட்டு அழுகிறான். இது தவறாகாது. "உள்ளத்தாலும், கண்களாலும் சோகத்தை வெளிப் படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும்." என்கிறது ஒரு நபிமொழி (நூல் : முஸ்னது அஹமது)

நாம் அழுதால் மய்யித்தை பாதிக்குமா...?

அழக் கூடாது என்ற கருத்தில் காணப்படும் நபிமொழிகள் கண்ணீர் விடுவதையும் சப்தமின்றி அழுவதையும் குறிப்பிடவில்லை. மாறாக முகத்திலும் கன்னத்திலும் அடித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஆடைகளை கிழித்துக் கொண்டும், மார்க்கம் அனுமதிக்காத வார்த்தைகளை சொல்லிக் கொண்டும் அழுவதையே குறிப்பிடுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: குடும்பத்தினர் அழுதால் மண்ணறையில் இருப்பவருக்கு வேதனை செய்யப்படமாட்டாது. காரணம் ஓர் ஆத்மாவின்(பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. (35.16) என்ற திருமறை வசனம் சான்றாகும்
(நூல் : முஸ்லிம் -1694, திர்மிதி-1004)

குடும்பத்தினர் அழும் காரணத்தினால் அந்த பிரேதம் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறது (முஸ்லிம்-1687) என்ற நபிமொழிக்கு இமாம் நவவி (ரலி அவர்கள் கூறுகின்ற விளக்கமாவது அரபு மக்களின் வழக்கப்படி இறப்பதற்கு முன்பே ஒருவர் தாம் இறந்த பின் தமக்காக ஒப்பாரிவைத்து அழ வேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்து போக அதன்படி அவரது உறவினர் ஒப்பாரி வைத்து அழுதால் வேதனை செய்யப்படுவார். இந்த ஒப்பாரிக்கு அவரது தூண்டுதலே காரணமாக இருக்கிறது என்பதே இதற்கு காரணம். அல்லது இறந்தவருக்காக நீங்கள் அழ வேண்டாம் நீங்கள் அழுகின்ற குரல் கேட்டு இறந்தவர் துக்கப்படுகிறார். இவ்வாறு துக்கப்படுவதின் மூலம் இறந்தவர் வேதனை அடைகிறார் என்பது கருத்தாகும். (நூல்: அல்மின்ஹாஜ்.

மய்யித்தின் வீட்டில் சாப்பிடலாமா..?

ஜாஃபர் (ரலி அவர்கள் மரணமடைந்த செய்தி அருமை நாயகம் அவர்களுக்கு எட்டியது. அப்போது அண்ணலார் அவர்கள் "ஜாஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள். ஏனெனில் இதை செய்ய முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது." என்று கூறினார்கள்  (நூல்: அபூதாவூத்-3132, திர்மிதி-998)

இறந்தவரின் வீட்டினர் சோகத்தில் ஆழ்ந்திருப்பதால் உறவினரோ, அண்டை வீட்டினரோ உணவு சமைத்து கொண்டு வந்து கொடுத்து அவ்வீட்டினருக்கு ஆறுதல் கூறி அவர்களை உண்ண செய்ய வேண்டும். மாறாக துக்கம் விசாரிக்க வந்தவர்கள் இறந்தவரின் வீட்டில் உணவு உண்டு விட்டு செல்வது உகந்த செயல் அல்ல

துக்கம் அனுஷ்டிப்பது எத்துனை நாட்கள்...?

ஸைனப் பின்த் அபி சலமா (ரலி அவர்கள் கூறியதாவது: அபூ சுஃப்யான் (ரலி  அவர்களுடைய மரண செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரது மகள்) உம்மு ஹபீபா (ரலி அவர்கள் மஞ்சள் நிற வாசனை திரவியத்தை வரவழைத்து தமது கன்னங்களிலும், முழங்கைகளிலும் தடவிக் கொண்டார்கள்

மேலும் இறை நம்பிக்கை கொண்டுள்ள ஒரு பெண் தனது கணவன் இறந்தாலே தவிர வேறு எவர் இறந்தாலும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது. கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும் என அண்ணல் நபி ஸல் அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டிராவிட்டால் இந்த வாசனை திரவியமானது எனக்கு தேவையற்றது தான் என்று கூறினார்கள்    
( நூல்: புகாரி-1280)

துக்கம் அனுஷ்டிப்பது என்றால் மகிழ்ச்சி தரும் முறையில் தன்னை அலங்கரித்து கொள்வதை தவிர்ப்பது தானே தவிர உண்ணுவது பருகுவது போன்ற சுயத்தேவைகளை செய்து கொள்வதுக கூடாது என்று அர்த்தமல்ல, கணவர் அல்லாத வேற உறவினரில் எவர் இறந்தாலும் அதற்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பது மார்க்கத்திற்கு முரணானதாகும்.

ஆனால் கணவனை இழந்த பெண் மட்டும் நான்கு மாதங்கள் பத்து நாள்கள் இத்தா என்ற துக்கம் கடைபிடிக்க வேண்டும். இத்தா நாள்களில் வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது. அதற்காக இத்தா நாள்கள் முழுவதும் குளிக்கக்கூடாது என்றெண்ணி அருவருப்பான கோலத்தில் இருப்பதும், வெண்ணிற ஆடைகள் மட்டும் தான் அணிய வேண்டும் என்று எண்ணுவதும் எவரிடமும் பேசாமல் வீட்டில் இருட்டான ஒரு மூலையில் தான் அடைந்து கிடக்க வேண்டும் என்று எண்ணுவதும், இறந்தவரின் வீட்டினர் ஒரு வருடத்திற்கு எந்த பெருநாள்களையும் மற்ற விஷேசங்களையும் கொண்டாடக் கூடாது என்று எண்ணுவதும் தவறாகும்

நல்லதையே சொல்லுவோம்

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் : நீங்கள் நோயாளியையோ
இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் கூறும் வார்த்தைக்கு வானவர்கள் ஆமீன். (அப்படியே ஆகட்டும்) கூறுகிறார்கள்.
(அறிவிப்பாளர்: உம்மு சல்மா (ரலி நூல் முஸ்லிம்-1677

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அருமை நாயகம் அவர்களை
கடந்து) பிரேதம் ஒன்று கொண்டு செல்லைப்பட்டது. அது குறித்து நல்ல விதமாக புகழ்ந்து) பேசப்பட்டது. அதை செவியுற்ற அண்ணல் நபி அவர்கள் "உறுதியாகி விட்டது" என்று மூன்று முறை கூறினார்கள், பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாக பேசப்பட்டது. அப்போதும் அண்ணலார் "உறுதியாகிவிட்டது" என்று மூன்று முறை கூறினார்கள், அப்போது உமர் (ரலி அவர்கள் நாயகமே உறுதியாகி விட்டது என்று தாங்கள் கூறியதின் பொருள் என்ன என்று வினவினார்கள்.

அருமை நாயகம் ஸல் அவர்கள் நீங்கள் யாரைப் பற்றி நல்லவிதமாக பேசினீர்களோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாக பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. நீங்கள் பூமிமில் அல்லாஹ்வின் சாட்சியாளர்களாக ஆவீர்கள் என்று முன்று முறை கூறினார்கள்
(நூல் : புகாரி-2642. முஸ்லிம்-1731

நாம் யாரைப் பற்றி பேசினாலும் தவறாக பேசக் கூடாது குறிப்பாக இறந்தவரின் வீட்டுக்குச் சென்றாலும், அல்லது பிரேதத்தை நல்லடக்கம் செய்யும் போகும் இறந்தவரின் நற்குணம் மற்றும் நற்செயலைப் பற்றி மட்டுமே பேச வேண்டும், அவர் தீயவராக இருந்தாலும் சரியே! நாம் பேசும் வார்த்தைக்கு வானவர்கள் ஆமீன் கூறுகிறார்கள், அதனால் அவர் பாதிக்கப்படலாம். நம் எல்லோரிடமும் ஏதேனும் சில கெட்டகுணம் மற்றும் கெட்ட செயல் இருக்கலாம். இறந்தவரைப் பற்றி நாம் விமர்ச்சனம் செய்தால் நாம் இறந்த பின்னர் பிறர் நம்மைப் பற்றி விமர்சனம் செய்யும் நிலை ஏற்படலாம். நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது தானே! சிந்திப்போமா...

விரைவுப்படுத்துவது

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் : பிரேதத்தை துரிதமாக கொண்டு செல்லுங்கள். ஏனெனில் அந்த பிரேதம் நற்செயல்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்காக) நன்மையின் பக்கம் அதை விரைவுப் படுத்துகிறீர்கள். வேறு விதமாக இருந்தால் ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள்,
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி நூல்: புகாரி-1315, முஸ்லிம்-1721

ஒருவர் இறந்தவுடன் அவரை நல்லடக்கம் செய்வதற்கு விரைவுபடுத்த வேண்டும். குடும்பத்தினர் மற்றும் உறவினர் இறந்தவரை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் அல்லது இருநாள் வரையிலும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு நல்லடக்கம் செய்வதற்கு தாமதைப்படுத்துவது தவறாகும்

பிரேதத்தை தோளில் சுமந்து மிக வேகமாக ஓடாமலும், மிக மெதுவாக செல்லாமலும் நடுநிலையை கடைபிடித்து பிரேதம் ஆடாமல் அசையாமல் கொண்டு செல்ல வேண்டும். பிரேதத்தை தூக்கி கொண்டு ஓட்டமாக ஓடினால் பிறர் பார்வைக்கு கேலிக் கூத்தாகிவிடும்.

அதிக நன்மை

எவர் (ஜனாஸா) பிரேதத் தொழுகையில் பங்கேற்கிறாரோ அவருக்கு ஒரு கீராத்" நன்மையுண்டு. நல்லடக்கம் செய்யப்படும் வரை எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு "கீராத்" நன்மையுண்டு என அண்ணல் அவர்கள் கூறினார்கள். அப்போது கீராத்கள் என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு அண்ணலார் (மிஸ்லுல் ஜபலைனில் அளீமைனி) இரண்டு பெரிய மலைகளைபோன்ற அளவு (நன்மை) என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் புகாரி-1325, முஸ்லிம்-1723)

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்வுக்காக எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்-1730)

ஒரு முஸ்லிம் இறந்து விடும் போது அவருக்காக இறுதித் தொழுகை நடத்தப்பட வேண்டியது ஃபர்ளு கிஃபாயா எனும் கட்டாயக் கடமையாகும். இக்கடமையை சமுதாயத்தில் ஒருவர் செய்து முடித்தாலும் சமுதாயத்தின் மீதுள்ள கடமை நீங்கிவிடும். இந்த கடமையை எவரும் செய்யவில்லையெனில் அதன் பாவம் சமுதாயம்முழுமைக்கும் சாரும்

இறுதி மரியாதை

ஜனாஸா (பிரேதம்) தொழுகை நோக்கம் என்னவெனில் இறந்தவரின் நலவாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகும். ஒருவரது பிரேதத் தொழுகையில் பலர் கலந்து கொள்வது அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்பதற்கு அவருக்காக இறைவனிடம் அவர்கள் சாட்சியம் அளிப்பதைப் போன்று உள்ளது. அத்துடன் அவர்களெல்லாம் அவருக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்கின்றனர். ஆகவே அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்

நம் நினைத்த நேரத்தில் எல்லாம் தொழ முடியாத தொழுகைகளில் ஒன்று ஜனாஸா தொழுகை, பிற உபரியான (நஃபில்) தொழுகைகளை விட ஜனாஸா தொழுகைக்கு அதிக நன்மைகள் உண்டு. ஏனெனில் நஃபில் தொழுகைகள் தொழுவதின் மூலம் நமக்கு மட்டும் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால் ஒருவரது ஜனாஸா தொழுகையில் நாம் கலந்து கொள்வதின் மூலம் நமக்கும் மலைய நன்மைகள் கிடைக்கின்றன. இறந்தவருக்கும் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது, எனவே அத்தொழுகையில் கலந்து கொள்வதில் சோம்பல் இருக்கக் கூடாது

நாம் இறந்தவருக்கு அனைத்து மரியாதையும் செய்து கண்ணியமாக அவரை வழியனுப்புவோம். இறையருளைப் பெறுவோம்


மெளலவி மு. முஹம்மது ஹைதர் அலி இம்தாதி, நீலாங்கரை, சென்னை-41

2010  ம் வருட செப்டம்பர் மாத மனாருல் ஹுதா இதழிலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக