வியாழன், 24 செப்டம்பர், 2026

அல்லாஹ்வின் நான்கு வாக்குறுதிகள்

 


அல்லாஹ்வின் நான்கு வாக்குறுதிகள்


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ •

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ •

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ •

          وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُون •


عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ«يَا غُلاَمُ، إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ: احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ:


புனித அல்குர்ஆனில் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகள் ஒருபோதும் மாறாதவை. "நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிகளில் மாறு செய்யமாட்டான்" (3:9) என்பது இறைமறையின் பிரகடனம். மனிதனின் ஆன்மீக மற்றும் உலகியல் வாழ்வை உறுதிப்படுத்தும் அந்த நான்கு மகத்தான வாக்குறுதிகளையும், அவற்றின் விளக்கங்களை விரிவாகக் காண்போம்.


ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

1)"என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்."(அல்குர்ஆன் 40:60)


فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ

2)"என்னை நீங்கள் நினையுங்கள்; நானும் உங்களை நினைப்பேன்."

(அல்குர்ஆன் 2:152)

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ

3)"நீங்கள் நன்றி செலுத்தினால், நிச்சயமாக உங்களுக்கு (என் அருளை) அதிகப்படுத்துவேன்."(அல்குர்ஆன் 14:7)


وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

4)"அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான்." (அல்குர்ஆன் 8:33)


1. துஆவிற்கான வாக்குறுதி: "கேளுங்கள், தருகிறேன்"

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

"நீங்கள் என்னிடம் துஆ செய்யுங்கள்; நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்! நிச்சயமாக எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கிறார்களோ, அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.':ஸூரா காஃபிர் (40:60)


இறைவனிடம் கையேந்துவது பலவீனத்தின் அடையாளம் அல்ல; மாறாக அது அவன் மீதான முழுமையான நம்பிக்கையின் வெளிப்பாடு. மனிதன் கேட்கத் தயங்குவான், ஆனால் படைத்த இறைவன் கேட்காதபோதுதான் கோபப்படுகிறான். ஒரு அடியான் மனமுருகிப் பிரார்த்திக்கும்போது, அல்லாஹ் ஒன்று உடனே அதைத் தருகிறான், அல்லது அதைக் கொண்டு வரவிருந்த ஒரு தீமையைத் தடுக்கிறான், அல்லது மறுமைக்காகச் சேமித்து வைக்கிறான்.


இவ்வசனத்தில் இறைவன் «ادْعُونِي» (என்னிடம் பிரார்த்தியுங்கள்) என்ற கட்டளைக்குப் பிறகு உடனடியாக «أَسْتَجِبْ لَكُمْ» (நான் பதிலளிக்கிறேன்) என்ற வாக்குறுதியை எந்த நிபந்தனையும் இன்றி இணைத்துக் கூறுகிறான்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

"துஆ (பிரார்த்தனை) என்பதே வணக்கமாகும்."(நூல்: சுனன் அபூதாவூத்,)


துஆ என்பது மனிதனின் இயலாமையை (عَجْز) ஒப்புக்கொண்டு, இறைவனின் பேராற்றலை (قُدْرَة) மனதார ஏற்கும் உன்னத வெளிப்பாடு. இறைவன் ஒருபோதும் கையேந்திய அடியானை வெறுங்கையோடு திருப்பி அனுப்புவதில்லை:


«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ»

"நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவனாகவும், தாராள குணம் கொண்டவனாகவும் இருக்கிறான். அடியான் தன்னிடம் கையேந்தும்போது, அவனது கைகளை வெறுமையாகவும் நஷ்டமடைந்ததாகவும் திருப்பியனுப்ப அவன் வெட்கப்படுகிறான்."(நூல்: ஜாமிவுத் திர்மிதி, சுனன் அபூதாவூத்)


பத்ருப் பெருவெளியில் நபிகளாரின் கண்ணீர்ப் பிரார்த்தனை


ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு, ரமழான் மாதம் 17-ஆம் நாள். இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையான களம்.முஸ்லிம்களின் எண்ணிக்கை: வெறும் 313 பேர். அவர்களிடம் போதிய ஆயுதங்களோ, போர்க் குதிரைகளோ இல்லை.

எதிரிகளின் எண்ணிக்கை: தலைமுதல் கால் வரை இரும்புக் கவசமிட்ட 1,000-க்கும் மேற்பட்ட குறைஷிப் படை.


போர்க்களத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கூடாரத்தில் (العَرِيش) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிப்லாவை நோக்கி நின்றார்கள். கைகளை எவ்வளவு உயரே உயர்த்தினார்கள் என்றால், அவர்களின் தோள்களிலிருந்த மேலாடை கீழே விழுந்தது; அக்குள்களின் வெண்மை தென்பட்டது. உள்ளம் உருகி, கண்ணீர் வடித்து அல்லாஹ்விடம் மன்றாடினார்கள்:

اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي، اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي، اللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الإِسْلاَمِ لاَ تُعْبَدْ فِي الأَرْضِ

"யா அல்லாஹ்! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக! இறைவா, எனக்கு நீ வாக்களித்ததை வழங்குவாயாக! இறைவா, இஸ்லாமியர்களின் இந்தக் குழுவை இன்று நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை வணங்குவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள்!"


நபிகளாரின் பேராவலையும் உள்ளக்குமுறலையும் கண்ட அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபிகளாரின் மேலாடையை எடுத்து அவர்கள் தோளில் அணிவித்துவிட்டு, கனிவோடு கூறினார்கள்:

يَا نَبِيَّ اللهِ، كَفَاكَ مُنَاشَدَتُكَ رَبَّكَ، فَإِنَّهُ سَيُنْجِزُ لَكَ مَا وَعَدَكَ

"அல்லாஹ்வின் நபியே! உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்றாடியது போதும்; நிச்சயமாக அவன் உங்களுக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவான்!"

இறைவனின் பதில் உடனே இறங்கியது:

அந்த உன்னதப் பிரார்த்தனையை வானத்து இறைவன் உடனே ஏற்றுக்கொண்டான். அல்குர்ஆன் அந்நிகழ்வை விவரிக்கிறது:

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ

"உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடியபோது, 'வரிசையாகப் பின்தொடரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்' என்று உங்களுக்கு அவன் பதிலளித்தான்." (ஸூரா அல்-அன்ஃபால் 8:9)


வானவர்கள் இறங்கினார்கள்; முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றி கிட்டியது. மனிதக் காரணிகள் பூஜ்ஜியமாக நின்றபோது, நபிகளாரின் ஒரு துஆ வரலாற்றுப் போக்கையே மாற்றியமைத்தது.நூல்:ஸஹீஹ் முஸ்லிம்


மனிதனால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு (முஸ்லிம்கள் போர்க்களம் வந்தனர்), முடிவை அல்லாஹ்விடமே ஒப்படைக்க வேண்டும். துஆ என்பது மனித பலவீனத்தின் தொடக்கம் அல்ல, சாதனையின் ஆணிவேர்.


வெறும் உதட்டசைவாக அன்றி, தன் தேவையையும் ஆதங்கத்தையும் கொட்டி, கண்ணீர் சிந்தி கெஞ்சுவதே உண்மையான பிரார்த்தனை.


படைப்புகள் கைவிட்டாலும், முழுமையான இக்லாஸுடன் (மனத்தூய்மையுடன்) கேட்கப்படும் குரலுக்கு வானத்து வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களின் நிலைகள்

இன்றைய நவீன சூழலில் முஸ்லிம் சமுதாயத்திடம் துஆ தொடர்பான சில பலவீனமான நிலைகளைக் காண்கிறோம்:


சில நாட்கள் دعا செய்துவிட்டு, உடனே பலன் தெரியவில்லை என்றதும், "நான் இவ்வளவு கேட்டும் அல்லாஹ் என் துஆவை ஏற்கவில்லை" என்று சலிப்படைந்து பிரார்த்தனையையே கைவிட்டு விடுகிறார்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي»

"உங்களில் ஒருவர் அவசரப்பட்டு, 'நான் பிரார்த்தித்தேன், ஆனால் அது ஏற்கப்படவில்லை' என்று கூறாதவரை அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது" —நூல்: புகாரி).


தொழுகைக்குப் பிறகு கைகளைத் தூக்குவதும், இமாம் ஓதும் துஆவிற்கு அர்த்தமே புரியாமல் உள்ளம் வேறு எங்கோ சுற்றிக்கொண்டிருக்க "ஆமீன்" சொல்வதுமான இயந்திரத்தனமான வழக்கமாக மாறிவிட்டது. பராமுகமான உள்ளத்தின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்பதில்லை.


உணவு, உடை, சம்பாத்தியம் ஆகியவற்றில் ஹலால்–ஹராம் பேணாத நிலை. நபிகளார் குறிப்பிட்டது போல, ஒருவன் தலைவிரி கோலமாக நின்று "யா ரப்!" என்று دعا செய்கிறான்; ஆனால் அவனது உணவும் பானமும் ஹராமாக இருக்கும்போது அவனது துஆ எவ்வாறு ஏற்கப்படும்? அது ஏற்கப்படாது.


நாம் கேட்ட பொருளே கையில் கிடைப்பது மட்டுமே துஆ ஏற்கப்பட்டதன் அடையாளம் என எண்ணுவது தவறு. நபிகளாரின் வழிகாட்டலின்படி துஆவிற்கு மூன்று வழிகளில் பதில் கிடைக்கிறது:


கேட்டது கிடைப்பது.


வரவிருந்த ஒரு பெருந்துன்பம் அதைக் கொண்டு தடுக்கப்படுவது.


மறுமை நாளின் பெரும் நன்மையாகச் சேமிக்கப்பட்டு, அன்று அவனுக்கு வழங்கப்படுவது.


தாஇஃப் களமும், அத்-தாஸ் ரலியல்லாஹு அன்ஹு 

அவர்களின் இஸ்லாமிய ஏற்பும்.

மக்காவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்த பெரிய தந்தை அபூதாலிபும், அன்பு மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் அடுத்தடுத்து மரணித்த ஆண்டு 'துக்க ஆண்டு' (ஆம் அல்-ஹுஸ்ன்) எனப்பட்டது. குறைஷிகளின் அட்டூழியங்கள் எல்லை மீறியபோது, இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜைத் இப்னு ஹாரிஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் மக்காவிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவிலுள்ள தாஇஃப் நகரத்திற்கு நடந்தே சென்றார்கள்.

தாஇஃப்பின் தலைவர்கள் நபிகளாரின் வார்த்தைகளை ஏளனம் செய்து நிராகரித்ததோடு நில்லாமல், அந்நகரத்துப் போக்கிரி இளைஞர்களையும் சிறுவர்களையும் ஏவிவிட்டனர்.

சாலையின் இருபுறமும் நின்றுகொண்டு அண்ணலாரைக் கல்லால் அடித்தனர்.

நபிகளாரின் திருமேனி முழுவதும் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்தோடி, அவர்களின் காலணிகள் இரத்தத்தால் உறைந்து ஒட்டிக்கொண்டன.

ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரைத் தன் உடலால் தடுத்துப் பாதுகாத்ததில் அவர்களின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உடலும் உள்ளமும் காயப்பட்டு, இரத்த வெள்ளத்தில் தாஇஃபை விட்டு வெளியேறி, 'கர்னுஸ் ஸஆலிப்' என்ற இடத்திலுள்ள ஒரு திராட்சைத் தோட்டத்தில் சாய்ந்து அமர்ந்தார்கள். மனித ஆதரவுகள் அனைத்தும் முறிந்துபோன அந்த உச்சக்கட்டத் தளர்ச்சியில், நபிகளார் அண்டசராசரங்களின் அதிபதியான அல்லாஹ்விடம் கையேந்தி ஒரு துஆ கேட்டார்கள்.

اللَّهُمَّ إِلَيْكَ أَشْكُو ضَعْفَ قُوَّتِي، وَقِلَّةَ حِيلَتِي، وَهَوَانِي عَلَى النَّاسِ، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ! أَنْتَ رَبُّ الْمُسْتَضْعَفِينَ، وَأَنْتَ رَبِّي، إِلَى مَنْ تَكِلُنِي؟ إِلَى بَعِيدٍ يَتَجَهَّمُنِي؟ أَمْ إِلَى عَدُوٍّ مَلَّكْتَهُ أَمْرِي؟ إِنْ لَمْ يَكُنْ بِكَ عَلَيَّ غَضَبٌ فَلاَ أُبَالِي، وَلَكِنَّ عَافِيَتَكَ هِيَ أَوْسَعُ لِي، أَعُوذُ بِنُورِ وَجْهِكَ الَّذِي أَشْرَقَتْ لَهُ الظُّلُمَاتُ، وَصَلَحَ عَلَيْهِ أَمْرُ الدُّنْيَا وَالآخِرَةِ، مِنْ أَنْ تُنْزِلَ بِي غَضَبَكَ، أَوْ يَحِلَّ عَلَيَّ سَخَطُكَ، لَكَ الْعُتْبَى حَتَّى تَرْضَى، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِكَ

"யா அல்லாஹ்! என் சக்தியின் பலவீனத்தையும், எனது உபாயக் குறைவையும், மக்கள் மத்தியில் நான் இழிவடைந்து நிற்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களெல்லாம் மகா கருணையாளனே! ஒடுக்கப்பட்ட பலவீனர்களின் இறைவன் நீயே; நீயே என் ரட்சகன்! என்னை யாரிடம் ஒப்படைத்துவிட்டாய்? என்னைக்கண்டு முகம் சுளிக்கும் அந்நியனிடமா? அல்லது என் காரியங்களுக்கு அதிகாரியாக்கப்பட்ட எதிரியிடமா? என் மீது உனக்குக் கோபம் இல்லை என்றால், (இந்தத் துன்பங்களை) நான் ஒரு பொருட்டாகவே கருதமாட்டேன்! ஆயினும் உனது பாதுகாப்பும் மன்னிப்பும் எனக்கு மிகவும் விசாலமானது. இருள்களையெல்லாம் வெளிச்சமாக்கி, இம்மை–மறுமையின் காரியங்களைச் சீராக்கிய உனது முகத்தின் ஒளியைக் கொண்டு, உன் கோபம் என் மீது இறங்குவதிலிருந்தும், உன் அதிருப்தி என்னை வந்தடைவதிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ பொருந்திக்கொள்ளும் வரை உன்னிடமே மன்றாடுவேன். உன்னைத் தவிர மாற்றமோ ஆற்றலோ வேறு யாருக்கும் இல்லை!"


இறைவனின் உடனடிப் பதில்: வானங்களின் அசைவு

அந்த உள்ளத்துடிப்போடு கூடிய துஆவை அல்லாஹ் ஒரு கணமும் தாமதிக்காமல் ஏற்றுக்கொண்டான். அதன் வெளிப்பாடாக இரு மகத்தான பதில்கள் நிகழ்ந்தன:


நபிகளார் தலைநிமிர்ந்து பார்த்தபோது ஒரு மேகம் அவர்களுக்கு நிழலிட்டது. அதில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தோன்றினார்கள். அவர்களுடன் மலைகளுக்கான வானவரும் நின்றிருந்தார்.


மலைகளுக்கான வானவர் சலாம் கூறி, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமூகம் உங்களுக்குச் செய்ததை அல்லாஹ் செவியுற்றான். நீங்கள் விரும்பினால், மக்காவைச் சுற்றியுள்ள 'அல்-அக்ஷபைன்' என்ற இரு பெரும் மலைகளையும் ஒன்றோடொன்று மோதி இவர்களைப் பூண்டோடு அழித்துவிடுகிறேன்" என்றார்.

ஆனால் ரஹ்மத்துன் லில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, பழிவாங்க மறுத்து:

«بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا»

"வேண்டாம்; இவர்களின் சந்ததிகளிலிருந்தாவது அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனுக்கு எதையும் இணையாக்காத ஒரு சமுதாயத்தை அல்லாஹ் உருவாக்குவான் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறி கருணை காட்டினார்கள்.


அந்தத் தோட்டத்தின் உரிமையாளர்களான உத்பா, ஷைபா ஆகியோர் தங்களது 'அத்-தாஸ்' என்ற கிறிஸ்தவ அடிமையிடம் சில திராட்சைப் பழங்களைக் கொடுத்து நபிகளாரிடம் அனுப்பினர். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் «بِسْمِ اللَّهِ» (பிஸ்மில்லாஹ்) கூறி உண்டதைக் கண்டு வியந்த அத்-தாஸ், நபிகளாரோடு உரையாடி, அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்பதை உணர்ந்து, நபிகளாரின் காயம்பட்ட பாதங்களிலும் கைகளிலும் முத்தமிட்டு உடனே இஸ்லாத்தைத் தழுவினார். முழு ஊரும் கல் எறிந்து விரட்டியடித்த இடத்தில், ஒரு தனி மனிதரின் ஈமானை வழங்கி அல்லாஹ் நபிகளாரின் துஆவிற்கு ஆறுதலளித்தான்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 


கடுமையான துன்பம் வந்தபோதும் நபிகளார் மக்களைக் குறை கூறவில்லை; மாறாக "என் பலவீனத்தை உன்னிடம் முறையிடுகிறேன்... உன் கோபம் என் மீது இல்லையென்றால் எனக்கு எந்தக் கவலையுமில்லை" என்று தன் நிலையையே இறைவனிடம் சமர்ப்பித்தார்கள்.


மனிதர்களிடம் புலம்புவது பலவீனம்; படைத்தவனிடம் தன் இயலாமையைக் கொட்டுவது துஆவின் உச்சகட்ட பலம்.


துன்பத்தின் உச்சத்திலும் எதிரிகளை அழிக்க ஆணையிடாமல், எதிர்காலத் தலைமுறையின் ஹிதாயத்திற்காக (நேர்வழிக்காக) மனமுருகி துஆ செய்த பெருந்தன்மை.


இன்று ஒரு சிறிய நஷ்டமோ துன்பமோ வந்துவிட்டால் உடனே விதியை நோகத் தொடங்குகிறோம். நபிகளாரின் தாஇஃப் பிரார்த்தனை, பேரிழப்புகளின் போதும் இறைவனின் கருணையின் மீது நம்பிக்கை இழக்காமல் கையேந்தக் கற்றுத்தருகிறது.


பிறர் நமக்குத் தீங்கு இழைத்துவிட்டால் உடனடியாக அவர்களுக்கு அழிவை வேண்டிப் பிரார்த்திக்கும் மனநிலை இன்று பலரிடம் உள்ளது. ஆனால், நபிகளாரோ தன்னை கல்லால் அடித்தவர்களுக்கும் நேர்வழி வேண்டி دعا செய்தார்கள்.


உலகம் கதவுகளை அடைக்கும்போது, வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்பதை இந்த தாஇஃப் நிகழ்வு மனித குலத்திற்கு என்றென்றும் பறைசாற்றுகிறது.


2. திக்ருக்கான வாக்குறுதி: "நினையுங்கள், நினைப்பேன்"


 فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

"என்னை நீங்கள் நினையுங்கள்; நானும் உங்களை நினைப்பேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்." ஸூரா அல்-பகரா (2:152)


அகிலங்களின் அதிபதியான அல்லாஹ், அற்பமான மனிதனை நினைவுகூருவது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத மாபெரும் பாக்கியம். ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்: "அடியான் என்னை ஒரு சபையில் நினைவுகூர்ந்தால், அதைவிடச் சிறந்த வானவர்களின் சபையில் நான் அவனை நினைவுபடுத்துகிறேன்." திக்ர் என்பது வெறும் நாவசைவு மட்டுமல்ல; உள்ளத்தால் அவனை உணர்வதும், அவனது கட்டளைகளுக்கு அடிபணிவதும் திக்ரே ஆகும்.


அண்டசராசரங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் ரப்புல் ஆலமீன், அற்பமான ஒரு மனிதனை நினைவுகூருவது என்பது அவன் மனித குலத்திற்கு வழங்கிய ஆகப்பெரும் கௌரவமாகும். இங்கு நினைவுகூருதல் (திக்ர்) என்பது இருவழியில் நிகழ்கிறது: அடியான் பூமியில் இறைவனைப் போற்றுகிறான்; அதற்குப் பகரமாக இறைவன் வானுலகில் தன் மலக்குகளுக்கு மத்தியில் அந்த அடியானைப் போற்றிப் புகழ்கிறான்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த ஒரு மகத்தான ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்:

«أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ»

"என் அடியான் என்னை எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவுகூரும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால், நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த (வானவர்களின்) சபையில் நான் அவனை நினைவுபடுத்துகிறேன்."(நூல்: ஸஹீஹுல் புகாரி)


ஸயீத் இப்னு ஜுபைர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கையில்: "நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து என்னை நினையுங்கள்; நான் உங்களுக்கு மன்னிப்பையும் அருளையும் தந்து உங்களை நினைப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


ஸவ்ர் குகை – மரண வாயிலில் இறைவனின் நினைவு:

மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற வரலாற்றுத் திருப்புமுனை. குறைஷிகள் நபிகளாரைத் தேடிக் குகை வாசல் வரை வந்துவிட்டனர். எதிரிகளின் காலடிகள் தெரியும் அளவுக்கு ஆபத்து மிக அருகில் இருந்தது.

அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அஞ்சி, "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கால்களைச் சற்றுக் குனிந்து பார்த்தால் கூட நம்மைக் கண்டுவிடுவார்களே!" எனக் கலங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எவ்விதப் பதற்றமும் இன்றி இறைவனை நினைவுகூர்ந்து கூறினார்கள்:

«يَا أَبَا بَكْرٍ، مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا؟ لاَ تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا»

"அபூபக்கரே! அல்லாஹ் எவருடன் மூன்றாவதாக இருக்கிறானோ அந்த இருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்!"(ஸூரா அத்-தவ்பா 9:40; ஸஹீஹுல் புகாரி)


அந்த மரண பயத்தின் விளிம்பிலும் அவர்கள் இறைவனை மறக்காமல் நினைவுகூர்ந்ததால், அல்லாஹ் அமைதியை (ஸகீனத்) இறக்கி, எதிரிகளின் பார்வைகளை மறைத்துக் குகையைக் காத்தான்.


வானுலகில் உச்சரிக்கப்பட்ட ஒரு மனிதரின் பெயர்:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து:

"நிச்சயமாக அல்லாஹ், உமக்கு 'லம் யகுனில் லதீன கஃபரூ' (ஸூரா அல்-பய்யினா) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்றார்கள்.

அப்போது மெய்சிலிர்த்துப்போன உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆச்சரியத்தோடு கேட்டார்கள்:

  وَسَمَّانِي لَكَ؟ يا رسول الله

(யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ் என் பெயரைச் சொல்லி உங்களிடம் குறிப்பிட்டானா?)

அதற்கு நபிகளார், «نَعَمْ» (ஆம், உம் பெயரைச் சொல்லியே குறிப்பிட்டான்!) என்றார்கள். அகிலங்களின் இரட்சகன் அற்பமான தன் பெயரை வானுலகில் நினைவுகூர்ந்ததைக் கேட்டு, உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரானந்தத்தால் கண்ணீர் விட்டு அழுதார்கள் (நூல்:ஸஹீஹுல் புகாரி,)


இரவும் பகலும் குர்ஆனையும் இறைவனையும் நினைத்து வாழ்ந்த ஒரு சஹாபிக்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் கௌரவம் இது.


பிரச்சினைகளும் நெருக்கடிகளும் சூழும்போது உலகப் புகலிடங்களைத் தேடுவதை விட, இறைவனின் திக்ர் மட்டுமே இதயத்திற்கு உண்மையான அமைதியைத் தரும்.

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ‏

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!(அல்குர்ஆன் : 13:28)


இறைவனை நினைப்பவர் ஒருபோதும் தனிமையில் இருப்பதில்லை; அவனுடன் அல்லாஹ்வின் பாதுகாப்பும் கருணையும் எப்போதும் துணை நிற்கிறது.


பூமியில் பிரபலமாக இல்லாத ஓர் எளிய அடியான் கூட, திக்ரின் மூலமாக வானுலக வானவர்களிடையே மிகவும் அறியப்பட்ட விஐபியாக (VIP) மாற முடியும்.


இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள், ரீல்ஸ்கள் மற்றும் உலக விவகாரங்களில் மணிக்கணக்கில் மூழ்கியிருக்கும் நாம், நாவால் ஒரு நிமிடம் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்குக் கூடப் பொழுதில்லாமல் அலட்சியத்தில் உழல்கிறோம்.

நோய், தேர்வு, நிதி நெருக்கடி அல்லது இழப்பு ஏற்படும்போது மட்டுமே இறைவனை நினைப்பதும், வசதியான சூழல் வந்தவுடன் அவனை அடியோடு மறந்துவிடுவதுமான ஒரு சார்பு நிலை இன்று பரவலாக உள்ளது.


திக்ர் செய்யும்போது அதன் பொருளை உணராமலும், உள்ளத்தில் இறைவனைப் பற்றிய பயமும் சிந்தனையும் இன்றியும் ஒரு இயந்திரத்தனமான பழக்கமாக ஓதுவது.

மீன் வயிற்றில் ஒலித்த திக்ர்

நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைனுவா நகர மக்களை இறைவழியில் அழைக்க முயன்றார்கள். அவர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால், இறைவனின் அனுமதியை முழுமையாக எதிர்பார்ப்பதற்கு முன்பே கோபமுற்று ஊரை விட்டு வெளியேறினார்கள். கடலில் கப்பல் புயலில் சிக்கியபோது, மாலுமிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கடலில் வீசினர். அப்போது அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒரு பெரும் திமிங்கலம் அவர்களை உயிருடன் விழுங்கியது.


யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடலின் ஆழத்தில், திமிங்கலத்தின் கருமையான வயிற்றில், இரவின் இருளில் சிக்கிக் கொண்டார்கள். எவ்விதப் புறக் காரணிகளும் எட்ட முடியாத அந்த நிர்க்கதியான சூழலில், அவர்கள் இறைவனை நினைவுகூர்ந்து திக்ர் செய்யத் தொடங்கினார்கள்.


فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

"அவர் பல இருள்களிலிருந்து கூப்பிட்டுப் பிரார்த்தித்தார்: 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகத் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநீதியிழைத்தோரில் ஒருவனாகிவிட்டேன்!'"(ஸூரா அல்-அன்பியா 21:87)


அவர்கள் நாவாலும் உள்ளத்தாலும் தவ்ஹீதையும் (ஏகத்துவம்), தஸ்பீஹையும் (தூய்மைப்படுத்துதல்), இஸ்திஃபாரையும் (மன்னிப்புக் கோருதல்) இணைத்து இடைவிடாது இறைவனை நினைவுகூர்ந்தார்கள்.


யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழக்கமாக நல்வாழ்விலும் நிம்மதியான சூழலிலும் இறைவனை அதிகமாகத் திக்ர் செய்யக்கூடிய அடியாராக இருந்தார்கள். அவர்கள் திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து திக்ர் செய்தபோது, அந்த மெல்லிய குரல் வானுலகத்தை எட்டியது.

இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோர் அறிவிக்கும் தகவல்:- வானவர்கள் அந்தக் குரலைக் கேட்டுவிட்டு அல்லாஹ்விடம் வியப்புடன் கூறினார்கள்:

يَا رَبِّ، صَوْتٌ مَعْرُوفٌ مِنْ أَرْضٍ غَرِيبَةٍ ضَعِيفٌ

"எங்கள் இறைவனே! அறிமுகமான ஒரு குரல், ஆனால் ஓர் அந்நியமான, வெகுதூரத்துப் பலவீனமான இடத்திலிருந்து கேட்கிறதே! அது யார்?"

அதற்கு அல்லாஹ் கூறினான்:

ذَاكَ عَبْدِي يُونُسُ

"அது என் அடியார் யூனுஸ்!" வானவர்கள் உடனே இறைவனிடம் மன்றாடினார்கள்: "எங்கள் இறைவனே! துன்பத்திலும் இன்பத்திலும் எப்போதும் உன்னை நினைவுகூர்ந்து நற்செயல்களை உன்னிடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்த உன் நல்லடியார் யூனுஸா? அந்த நற்செயல்களின் காரணத்தினால் அவருக்கு நீ அபயமளித்துக் காப்பாற்ற மாட்டாயா?"

அல்லாஹ் கூறினான்: «نَعَمْ» (ஆம், காப்பாற்றுகிறேன்).

உடனே அல்லாஹ் அந்த மீனிற்கு உத்தரவிட்டான்: "யூனுஸின் எலும்புகளை முறித்துவிடாதே, சதையைக் கிழித்துவிடாதே; ஏனெனில் அவர் உனக்கு உணவல்ல, உன் வயிறு அவருக்குச் சிறைக்கூடமே!"


பின்னர், மீன் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு வெட்டவெளி கடற்கரையில் பத்திரமாகக் கக்கியது. இறைவன் அவர்களுக்காகப் படரும் சுரைக்கொடியை முளைக்கச் செய்து நிழலும் உணவும் வழங்கிப் பாதுகாத்தான்.

இறைவன் அல்குர்ஆனில் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்தத் திக்ரைக் குறித்துத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்கிறான்:

فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ ۝ لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

"அவர் (முன்பிருந்தே) அல்லாஹ்வைத் துதிப்பவர்களில் (திக்ர் செய்பவர்களில்) ஒருவராக இல்லாதிருந்தால், மக்கள் உயிர்ப்பிக்கப்படும் மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்!"(ஸூரா அஸ்-ஸாஃப்பாத் 37:143–144)


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பொன்மொழி:

تَعَرَّفْ إِلَى اللَّهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ فِي الشِّدَّةِ

"நீ வளமான (மகிழ்ச்சியான) காலங்களில் அல்லாஹ்வை அறிந்துகொள் (நினைவுகூரு); அவன் உன் நெருக்கடியான (துன்பக்) காலங்களில் உன்னை நினைவுகூர்ந்து கவனிப்பான்."(நூல்: முஸ்னத் அஹ்மத், அல்-முஃஜமுல் கபீர்)


யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழக்கமாகவே இறைவனைத் திக்ர் செய்பவராக இருந்ததால், பேரிடரின் போது அவர்களின் குரல் வானுலகில் உடனடியாக அடையாளம் காணப்பட்டது.


பூமியின் எந்தவொரு மூலையிலும், கடலின் ஆழத்திலோ, தனிமையின் இருளிலோ ஒரு மனிதன் இறைவனை நினைத்தால், வானுலகின் அதிபதியான அல்லாஹ் அதை உடனடியாகச் செவியுறுகிறான்; தன் மலக்குகளிடையே அந்த அடியானைப் பிரஸ்தாபிக்கிறான்.


யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் திக்ர் (தஸ்பீஹ் யூனுஸ்) சோதனைகளை விரட்டும் உன்னதமான கேடயம். நபிகளார் கூறினார்கள்: "எந்தவொரு முஸ்லிமும் தனது கஷ்டத்தின் போது இந்த வார்த்தைகளைக் கூறி துஆ செய்தால், அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்காமல் இருப்பதில்லை" (திர்மிதி).


இன்று பெரும்பாலான மனிதர்கள் செல்வம், ஆரோக்கியம், வேலைவாய்ப்பு இருக்கும்போது அல்லாஹ்வை அடியோடு மறந்துவிடுகிறார்கள். நோய், நஷ்டம், மரண பயம் வரும்போது மட்டுமே அவசர அவசரமாகத் திக்ரும் வழிபாடுகளும் நினைவுக்கு வருகின்றன. ஆனால், யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு நமக்குக் கற்றுத்தருவது: "வளமாக இருக்கும்போதே இறைவனை நினை; அதுவே இக்கட்டான நாளில் உன்னைக் காப்பாற்றும்."


இன்று மனிதர்கள் மனிதர்களின் பாராட்டுக்காகவும், 'லைக்ஸ்' மற்றும் 'ஃபாலோவர்ஸ்'களுக்காகவும் தங்களை அடையாளப்படுத்தப் போராடுகிறார்கள். ஆனால், பூமியில் எவராலும் அறியப்படாத ஓர் அடியான் தனிமையில் அமர்ந்து செய்யும் திக்ர், வானுலக வானவர்களிடையே அவனைப் பெரும் புகழ்பெற்றவனாக மாற்றுகிறது என்பதை நாம் உணர்வதில்லை.


3) ஷுக்ருக்கான வாக்குறுதி:நன்றி செலுத்தினால், அதிகப்படுத்துவேன்


وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

"உங்கள் இறைவன் பிரகடனப்படுத்தியதை நினைவுகூருங்கள்: 'நீங்கள் நன்றி செலுத்தினால், நிச்சயமாக உங்களுக்கு (என் அருட்கொடைகளை) அதிகப்படுத்துவேன்; நீங்கள் மாறுசெய்து நன்றி மறந்தால், நிச்சயமாக எனது வேதனை மிகக் கடுமையானது!'"ஸூரா இப்ராஹீம் (14:7)


அரபு இலக்கண அமைப்பில் இவ்வசனம் மிக உறுதிமொழியைத் தாங்கி நிற்கிறது. «لَئِن» (நிச்சயமாக நீங்கள்...), மற்றும் «لَأَزِيدَنَّكُمْ» (நிச்சயமாக, உறுதியாக நான் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்) என்ற வார்த்தைகளில் உள்ள 'லாம்' மற்றும் அழுத்தமான 'நூன்' (நூனுத் தவ்கீத்) ஆகியவை இறைவனின் இந்த வாக்குறுதி எக்காலத்திலும் எள்முனையளவும் மாறாத விதி (சுன்னத்துல்லாஹ்) என்பதை நிரூபிக்கின்றன.


அறிஞர்கள் நன்றியை (شُكْر) மூன்று வழிகளில் வகைப்படுத்துகின்றனர்:

உள்ளத்தால் உணர்தல் (الشُّكْرُ بِالْقَلْبِ): நமக்குக் கிடைத்த அனைத்து பாக்கியங்களும் மனித சாமர்த்தியத்தால் வந்தவை அல்ல, முற்றிலும் இறைவனின் தனிப்பெரும் கருணையால் மட்டுமே கிடைத்தன எனப் பணிவோடு ஏற்பது.


நாவால் பிரகடனப்படுத்துதல் (الشُّكْرُ بِاللِّسَانِ): இறைவனைப் போற்றித் துதிப்பதும், அவனது அருட்கொடைகளை மற்றவர்களிடம் பெருமையின்றி வெளிப்படுத்துவதும் (வஅம்மா பினிஃமதி ரப்பிக ஃபஹத்தித்).


உறுப்புகளால் செயல்படுத்துதல் (الشُّكْرُ بِالْجَوَارِحِ): இறைவன் தந்த உடல், செல்வம், அதிகாரம் போன்ற அருட்கொடைகளை அவனது கட்டளைக்கு உட்பட்டு, நல்வழிகளில் செலவழிப்பது.


அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

 النِّعْمَةَ مَوْصُولَةٌ بِالشُّكْرِ، وَالشُّكْرُ مُتَعَلِّقٌ بِالْمَزِيدِ، وَلَنْ يَنْقَطِعَ الْمَزِيدُ مِنَ اللَّهِ حَتَّى يَنْقَطِعَ الشُّكْرُ مِنَ الْعَبْدِ

"நிச்சயமாக அருட்கொடை நன்றியறிதலுடன் இணைக்கப்பட்டுள்ளது; நன்றியறிதல் அருட்கொடைகள் மென்மேலும் அதிகமாவதோடு பிணைக்கப்பட்டுள்ளது; அடியான் நன்றி செலுத்துவதை நிறுத்தும் வரை அல்லாஹ் தன் அருளை அதிகப்படுத்துவதை நிறுத்துவதில்லை!"


பனீ இஸ்ராயீல் சமூகத்தில் கடுமையான குறைகளோடு மூவர் வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் அவர்களைச் சோதிக்க நாடி ஒரு மலக்கை (வானவரை) மனித உருவில் அனுப்பியபோது நிகழ்ந்த உரையாடல்கள்:


1. வெண்குஷ்ட நோயாளி (الأَبْرَص):

வானவர் அவரிடம் சென்று, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" எனக் கேட்டார்.

அதற்கு அவன், "நல்ல நிறமும் அழகான தோலும் வேண்டும்; என்னை மக்கள் அருவருப்பாகப் பார்ப்பது நீங்க வேண்டும்" என்றான். வானவர் அவன் மீது தடவியதும் அவனது நோய் நீங்கி, அழகான நிறமும் தோலும் கிடைத்தன. பின்னர், "எந்தச் செல்வம் உனக்கு மிகவும் பிரியம்?" எனக் கேட்டதற்கு, "ஒட்டகம்" என்றான். சினையான ஓர் ஒட்டகம் அவனுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் அவன் செல்வம் கொழித்து, ஒரு பள்ளத்தாக்கு நிறைய ஒட்டகங்களின் அதிபதியானான்.


2. வழுக்கைத் தலையர் (الأَقْرَع):

வானவர் அவரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டார். அவர், "அழகான தலைமுடி வேண்டும்; இந்த வழுக்கை நீங்க வேண்டும்" என்றார். வானவர் தடவியதும் அழகிய முடி வளர்ந்தது. "எந்தச் செல்வம் வேண்டும்?" எனக் கேட்டதற்கு "மாடு" என்றார். சினையான ஒரு பசு வழங்கப்பட்டது. அது பெருகி ஒரு பள்ளத்தாக்கு நிறைய மாடுகளின் உரிமையாளரானார்.


3. பார்வையற்றவர் (الأَعْمَى):

வானவர் அவரிடம் வந்தபோது, "அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தர வேண்டும்; மக்களை நான் கண்குளிரப் பார்க்க வேண்டும்" என்றார். வானவர் தடவியதும் கண்பார்வை மீண்டது. "எந்தச் செல்வம் வேண்டும்?" என்றதற்கு "ஆடு" என்றார். சினையான ஓர் ஆடு வழங்கப்பட்டு, அதுவும் பெருகி ஒரு பள்ளத்தாக்கு நிறைய ஆடுகளின் எஜமானரானார்.

சோதனையின் களம்: யார் நன்றி செலுத்தினார்? யார் மாற செய்தார்?

நீண்ட காலத்திற்குப் பிறகு, அந்த மூவரும் செல்வந்தர்களாக வாழ்ந்து கொண்டிருந்தபோது, அதே வானவர் அவர்களின் பழைய நிலையை நினைவூட்டும் தோற்றத்தில் (ஏழைப் பயணியாக) ஒவ்வொருவரிடமும் வந்தார்.


வானவர் அந்தப் பழைய வெண்குஷ்ட நோயாளியிடம் சென்று, "நான் வழிப்போக்கன்; பயணம் தொடர ஒரு ஒட்டகம் தந்து உதவுங்கள்" என்று கேட்டார்.

அதற்கு அவன் கர்வம் கொண்டு:

«الْحُقُوقُ كَثِيرَةٌ»

(எனக்குச் செலவுகளும் கடமைகளும் அதிகம் உள்ளன; தர முடியாது) என்று முகத்தைத் திருப்பினான்.

வானவர், "நீ வெண்குஷ்ட நோயாளியாகவும் ஏழையாகவும் இருந்தபோது அல்லாஹ் உனக்கு அருளினானே, அதை மறந்துவிட்டாயா?" எனக் கேட்டார்.

அதற்கு அவன் ஆணவத்துடன் பொய் கூறினான்:

«إِنَّمَا وَرِثْتُ هَذَا الْمَالَ كَابِرًا عَنْ كَابِرٍ»

"இந்தச் செல்வம் எனக்குப் பரம்பரை பரம்பரையாக வழிவழியாக வந்தது! (என் சொந்த உழைப்பால் சம்பாதித்தது)!"

வானவர் கூறினான்: "நீ பொய் சொல்பவனாக இருந்தால், உன்னை அல்லாஹ் பழைய நிலைக்கே திருப்பட்டும்!"

அவ்வாறே அவன் உடனடியாகத் தன் அருட்கொடைகள் அனைத்தையும் இழந்து, பழைய நோயாளியாகத் தெருவுக்கு வந்தான்.

இரண்டாவது வழுக்கைத் தலையனும் அதேபோன்று நன்றிகெட்ட வார்த்தைகளைக் கூறி மலக்கை விரட்டியடித்தான். அவனுக்கும் அதே சாபம் ஏற்பட்டு, செல்வங்கள் அழிந்து பழைய நிலைக்குத் திரும்பினான்.


மூன்றாவதாக, பார்வை மீண்டவரிடம் சென்று வானவர் அதேபோன்று உதவி கேட்டார். அப்போது அந்த நல்லடியார் உள்ளம் உருகிக் கூறிய வார்த்தைகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை:

«قَدْ كُنْتُ أَعْمَى فَرَدَّ اللَّهُ إِلَيَّ بَصَرِي، وَفَقِيرًا فَقَدْ أَغْنَانِي، فَخُذْ مَا شِئْتَ، فَوَاللَّهِ لاَ أَجْهَدُكَ الْيَوْمَ بِشَيْءٍ أَخَذْتَهُ لِلَّهِ عَزَّ وَجَلَّ»

"நிச்சயமாக நான் பார்வையற்றவனாக இருந்தேன்; அல்லாஹ் எனக்குப் பார்வையைத் தந்தான்! ஏழையாக இருந்தேன்; அல்லாஹ் என்னைச் செல்வந்தனாக்கினான்! இதோ, இந்த ஆட்டு மந்தையில் உமக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள், வேண்டியதை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவனுக்காக நீர் எதை எடுத்துக்கொண்டாலும் இன்று நான் உங்களைத் தடுக்கவே மாட்டேன்!"

வானவர் புன்னகைத்து அவரிடம் கூறினார்:

«أَمْسِكْ مَالَكَ، فَإِنَّمَا ابْتُلِيتُمْ، فَقَدْ رَضِيَ اللَّهُ عَنْكَ، وَسَخِطَ عَلَى صَاحِبَيْكَ»

"உமது செல்வத்தை நீரே வைத்துக்கொள்ளும்! நிச்சயமாக நீங்கள் மூவரும் சோதிக்கப்பட்டீர்கள். அல்லாஹ் உம்மைப் பொருந்திக்கொண்டான்; உமது தோழர்கள் இருவர் மீதும் கோபமுற்று (அவர்களை நாசமாக்கி) விட்டான்!"

அந்த நல்லடியாரின் நன்றியறிதல், அவரது அருட்கொடைகளைத் தக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், இறைவனின் நீங்காத திருப்பொருத்தத்தையும் ஈருலக உயர்வாக அதிகப்படுத்திக் கொடுத்தது.


வெற்றி அல்லது செல்வம் வரும்போது "இது என் சாமர்த்தியம், என் படிப்பு, என் குடும்பப் பாரம்பரியம்" என்று ஆணவம் கொள்வது குஃப்ரானுந் நிஃமத் (அருட்கொடைகளை மறுக்கும் நன்றி கெட்டத்தனம்). அது வந்த வழியே பாக்கியங்களைப் பறித்துவிடும்.


இப்னுல் கையிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுவார்கள்: 

الشُّكْرُ قَيْدُ النِّعَمِ الْمَوْجُودَةِ، وَصَيْدُ النِّعَمِ الْمَفْقُودَةِ

"ஷுக்ர் என்பது உள்ள பாக்கியங்களைப் பாதுகாக்கும் கயிறாகவும், இல்லாத பாக்கியங்களை இழுத்து வரும் காந்தமாகவும் இருக்கிறது."நூல்:உத்தத்துஸ் ஸாபிரீன் வ தகீரத்துஷ் ஷாகிரீன்


தனக்குக் கிடைத்த நன்மைகளிலிருந்து பிற ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குவதே இறைவன் முன் சமர்ப்பிக்கப்படும் மெய்யான நன்றியாகும்.


சமூக வலைதளங்களில் பிறரின் ஆடம்பரமான வாழ்க்கை, வீடு, வாகனம், ஆடை ஆகியவற்றைத் தொடர்ந்து பார்த்துவிட்டு, தங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கும் லட்சக்கணக்கான நன்மைகளை அற்பமாகக் கருதி, "எனக்கு மட்டும் அல்லாஹ் ஒன்றும் தரவில்லையே" என்று புலம்பும் மனநிலை பரவிவிட்டது.


இறைவன் கொடுத்த ஆரோக்கியத்தைக் கொண்டு அவனது கட்டளைகளைப் புறக்கணிப்பது, அவன் தந்த செல்வத்தைக் கொண்டு ஆடம்பர வீண்விரயங்களிலும் பாவமான காரியங்களிலும் ஈடுபடுவது போன்ற நன்றி மறந்த நிலைகள் சாதாரணமாகிவிட்டன.


வறுமை அல்லது நோய் வரும்போது அழுதுவிட்டு, மீண்டும் வசதியும் ஆரோக்கியமும் கிட்டியவுடன், "எல்லாம் தானாகச் சரியாகிவிட்டது" என்று இறைவனின் கருணையை மறப்பது இன்றைய மனிதனின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.


ஷுக்ர் (நன்றி உணர்வு) என்பது அருட்கொடைகளைத் தக்கவைக்கும் கயிறு மட்டுமல்ல, அவற்றை மென்மேலும் பெருக்கும் திறவுகோல். வாய்மொழியால் "அல்ஹம்துலில்லாஹ்" கூறுவதுடன், இறைவன் தந்த உடல், செல்வம், அறிவு ஆகிய அருட்கொடைகளை அவன் விரும்பும் நல்வழியில் பயன்படுத்துவதே முழுமையான நன்றியறிதலாகும்.


சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த ஆட்சி, அதிகாரம் மற்றும் ஆற்றல் மனித வரலாற்றில் எவருக்கும் வழங்கப்படாத ஒன்று. காற்று அவர்களின் வசப்பட்டது, ஜின்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டன, பறவைகள் மற்றும் விலங்குகளின் மொழிகளைப் பேசும் ஞானம் வழங்கப்பட்டது.


ஒரு சமயம் ஓர் எறும்பு பிற எறும்புகளிடம், "சுலைமானும் அவரது படைகளும் உங்களை அறியாமல் மிதித்துவிடாதபடி உங்கள் புற்றுக்குள் நுழையுங்கள்" என்று எச்சரித்ததைக் கேட்டு சுலைமான் அலைஹிஸ்ஸலாம் புன்னகைத்தார்கள். அந்த மாபெரும் அதிகாரத்திலும் அவர்கள் கர்வம் கொள்ளவில்லை. மாறாக கையேந்திப் பிரார்த்தித்தார்கள்:

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் : 27:19)


அவர்களின் இந்த அடக்கமும் நன்றியுணர்வும் காரணமாக அல்லாஹ் அவர்களின் நற்பெயரையும் மாட்சிமையையும் வரலாற்றில் நிலைநிறுத்தினான்.


ஸபா (سبأ) நாட்டு மக்களின் செழிப்பும், நன்றி மறந்ததால் ஏற்பட்ட பெருவெள்ள அழிவும் (ஸைலுல் அரிம்).

ஸபா தேசத்தின் இரு சோலைகளும் 'மஃரிப்' அணையும் பண்டைய யமன் தேசத்தில் வாழ்ந்த சக்திவாய்ந்த, நாகரிகம் மிகுந்த சமூகம் 'ஸபா' மக்கள். அல்லாஹ் அவர்களுக்குப் பூலோகச் சொர்க்கம் போன்ற வளமான வாழ்வை அருளினான்.


அந்நாட்டின் மலைகளுக்கு இடையே மழைநீரைத் தேக்கி வைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்தும் வண்ணம் 'ஸத்து மஃரிப்' (மஃரிப் அணை) என்ற பிரம்மாண்டமான அணையை அவர்கள் கட்டியிருந்தார்கள்.


அல்லாஹ் அவர்களின் பள்ளத்தாக்கின் வலப்புறமும் இடப்புறமுமாக பசுமையான இரு பெரும் தோட்டங்களை உருவாக்கினான்.மரங்கள் கனிகளால் நிரம்பி வழிந்தன.

ஒரு பெண் தலையில் ஒரு கூடையை வைத்துக்கொண்டு அந்தத் தோட்டத்தின் வழியாக நடந்து சென்றால், மரங்களைத் தொடாமலேயே தானாக உதிரும் பழுத்த கனிகளால் அந்தக் கூடை நிரம்பிவிடும் அளவுக்குக் கனிகள் செறிந்திருந்தன.


தூய்மையான காற்று, பூச்சிகளோ நச்சுயிரிகளோ இல்லாத தூய சுற்றுச்சூழல், சுற்றிலும் அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த வணிகப் பாதைகள் என அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.


அல்லாஹ் அவர்களின் நபிமார்கள் மூலம் அவர்களுக்கு வழங்கிய ஒரே வழிகாட்டல்:

كُلُوا مِن رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ ۚ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ

"உங்கள் இறைவனின் வாழ்வாதாரத்திலிருந்து உண்ணுங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (உங்களுக்குக் கிடைத்தது) மிகத் தூய்மையான நகரம்; மேலும் (உங்களைப் படைத்தவன்) மிக்க மன்னிப்பவனான இறைவன்!"(ஸூரா ஸபா 34:15)


நன்றி மறப்பும் (குஃப்ரான்), தலைகீழான வீழ்ச்சியும்

இறைவனின் அருட்கொடைகளை அனுபவித்த அந்த மக்கள், காலப்போக்கில் நன்றியை மறந்தார்கள்.

செல்வச் செருக்கால் அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு, சூரியனையும் சிலைகளையும் வணங்கத் தொடங்கினார்கள்.

சமுதாயத்தில் ஏழை–பணக்கார ஏற்றத்தாழ்வை உருவாக்க விரும்பினார்கள். சுலபமாக இருந்த பயணப் பாதைகளைக் கடினமாக்க வேண்டும் என்று ஆணவத்தோடு விநோதமான கோரிக்கையை வைத்தார்கள்:

فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنفُسَهُمْ

"அவர்கள் கூறினார்கள்: 'எங்கள் இறைவனே! எங்கள் பிரயாணங்களின் தூரங்களை அதிகப்படுத்துவாயாக!' இவ்வாறு அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்."(ஸூரா ஸபா 34:19)

செல்வமும் வளமும் தங்களின் திட்டமிடலாலும், அறிவாலும் உருவானது என்று எண்ணி இறைவனின் அருளை மறுத்தார்கள் (குஃப்ரானுந் நிஃமத்).


ஸைலுல் அரிம் (அணையை உடைத்த எலி)

நன்றி செலுத்தினால் அருட்கொடைகள் பெருகும்; நன்றி மறந்தால் இறைவனின் வேதனை இறங்கும் என்பதற்கு ஏற்ப, அல்லாஹ் அவர்களின் அணைக்கட்டை உடைக்க 'அல்-ஜுரத்' என்ற ஒரு சிறிய வகை எலியை (வளை தோண்டும் பெருச்சாளியை) அனுப்பினான்.


அந்த எலி அணையின் அடித்தளப் பாறைகளைச் சிறுகச் சிறுகக் குடைந்து பலவீனப்படுத்தியது. ஒரு பெரும் மழைக் காலத்தில், அணை உடைந்து 'ஸைலுல் அரிம்' (அணைக்கட்டுப் பெருவெள்ளம்) அந்நகரத்தை முழுமையாக மூழ்கடித்தது.


அல்குர்ஆன் அவர்களின் இறுதி முடிவை இவ்வாறு விவரிக்கிறது:

﴿فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ ۝ ذَٰلِكَ جَزَيْنَاهُم بِمَا كَفَرُوا ۖ وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ﴾

"ஆனால் அவர்கள் (நன்றி செலுத்துவதைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே நாம் அவர்களின் மீது அணையை உடைக்கும் பெருவெள்ளத்தை அனுப்பினோம்; அவர்களுடைய செழிப்பான இரு தோட்டங்களுக்குப் பகரமாக கசப்பான கனி தரும் மரங்களும், சவுக்கு மரங்களும், சில இலந்தை மரங்களும் கொண்ட இரு பாழ்ந்தோட்டங்களை மாற்றிக் கொடுத்தோம். அவர்கள் நன்றி மறந்ததன் காரணமாகவே நாம் அவர்களுக்கு இந்தத் தண்டனையை வழங்கினோம். நன்றி கெட்டவர்களுக்கு அன்றி (வேறு யாருக்கு) நாம் இத்தகைய தண்டனை வழங்குவோம்?(ஸூரா ஸபா 34:16–17)


பூலோகச் சொர்க்கமாகத் திகழ்ந்த ஸபா நாடு, நொடிப்பொழுதில் வறண்ட முட்புதர் காடாகவும், உலக மக்கள் பேசிக்கொள்ளும் ஒரு எச்சரிக்கைக் கதையாகவும் மாறிப்போனது.


இறைவனின் அருட்கொடைகள் எத்தனை பெரிய சாம்ராஜ்யமாக இருந்தாலும், நன்றி கெட்டத்தனம் நுழையும் போது ஒரு சிறிய எலியைக் கொண்டு கூட அல்லாஹ் அதைத் தரைமட்டமாக்கி விடுவான்.


ஸபா மக்கள் தங்களுக்குக் கிடைத்த அமைதியான, எளிதான வாழ்வின் அருமை தெரியாமல், "எங்கள் பயணத் தூரங்களை அதிகப்படுத்து" என்று வீண் ஆடம்பரத்தை நாடினார்கள். கிடைத்த நன்மைகளில் மனநிறைவு கொள்ளாமல் பேராசை கொள்வது அழிவுக்கே வழிவகுக்கும்.


ஒரு நாட்டுக்கோ, குடும்பத்திற்கோ பொருளாதார வளம் கிடைப்பது பாவங்களில் மூழ்குவதற்காக அல்ல; மாறாக இறைவனுக்கு மேலும் தலைவணங்கி நன்றி செலுத்துவதற்காகவே.


இறைவன் நமக்குத் தந்திருக்கும் குடிநீர், உணவு, தூய காற்று போன்ற பெரும் பாக்கியங்களை உணராமல், அவற்றை வீணடிப்பதும் பாழ்படுத்துவதும் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. தண்ணீர் பஞ்சம் வரும்போது மட்டுமே நீரின் அருமையை உணர்கிறோம்.


நாடுகளும் சமுதாயங்களும் தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் சிறந்து விளங்கும் போது, "இது மனிதனின் விஞ்ஞான சாதனை" என்று மார்தட்டுகின்றனரே தவிர, இயற்கைச் சீற்றங்கள் (வெள்ளம், நிலநடுக்கம்) ஏற்படும் போது மனிதனின் பலவீனம் வெளிப்படுவதை உணர்வதில்லை.


எவ்வளவு நன்மைகள் கிடைத்தாலும் போதாது என்ற அதிருப்தியும், சமூகத்தில் தங்களை உயர்த்திப் பிடிப்பதற்காக ஆடம்பரச் செலவுகளில் ஈடுபடுவதும் இன்றைய வாழ்வின் பெரும் நோயாகிவிட்டது. "இருப்பதை வைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்" என்ற மனநிலை அருகிவிட்டது.


4. இஸ்திஃபாருக்கான வாக்குறுதி: "மன்னிப்புக் கேளுங்கள், 

தண்டிக்க மாட்டேன்"

وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ ۚ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

"நீர் அவர்களிடையே இருக்கும் வரை அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான்; மேலும், அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான்." ஸூரா அல்-அன்ஃபால் (8:33)


இஸ்திஃபார் என்பது சோதனைகளையும் வேதனைகளையும் விரட்டும் கேடயம். அது பாவங்களை அழிப்பதுடன், இவ்வுலகில் வாழ்வாதாரத் தடையை நீக்கி, மழையைப் பொழியச் செய்து, சந்ததிச் செல்வத்தையும் மனநிம்மதியையும் அதிகப்படுத்துகிறது.


மக்கத்து இணைவைப்பாளர்கள் நபிகளாரின் அழைப்பை நிராகரித்து, ஆணவத்துடன்:

 "وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَ لِيْمٍ‏

(இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்). (அல்குர்ஆன் : 8:32)


அதற்குப் பதிலாக அல்லாஹ் இரண்டு பெரும் பாதுகாப்பு அரண்களை இவ்வுலகிற்கு அறிவித்தான். இது குறித்து அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அபூமூஸா அல்-அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் கூறிய விளக்கம்:

 فِيهِمْ أَمَانَانِ: نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالِاسْتِغْفَارُ، فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَقِيَ الِاسْتِغْفَارُ

"மனிதர்களுக்கு மத்தியில் இரண்டு பாதுகாப்புக் கேடயங்கள் இருந்தன: ஒன்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றொன்று இஸ்திஃபார் (பாவமன்னிப்புத் தேடுதல்). நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்; ஆனால் இரண்டாவது கேடயமான இஸ்திஃபார் மறுமை நாள் வரை உங்களிடம் எஞ்சியிருக்கிறது!"(நூல்: முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்)


இஸ்திஃபார் என்பது வெறும் வாயால் உச்சரிக்கும் சொல் மட்டுமல்ல; செய்த தவறுகளுக்காக மனதார வருந்துவதும் (நதாம்), பாவங்களிலிருந்து உடனடியாக விலகுவதும், எதிர்காலத்தில் செய்ய மாட்டேன் என்று உறுதிபூணுவதும் ஆகும். ஒரு சமுதாயத்திலோ தனிமனிதனிடமோ இந்த இஸ்திஃபார் உயிர்ப்புடன் இருக்கும் வரை, பொதுவான பேரழிவுகளிலிருந்தும் இறைவனின் தண்டனையிலிருந்தும் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு உண்டு.


யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகம் தப்பித்த அற்புதம்

இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் பல்வேறு சமுதாயங்கள் (ஆது, ஸமூது, லூத் சமூகம், ஃபிர்அவ்னின் படை) இறைவேதனை வந்தபோது முழுமையாக அழிக்கப்பட்டன. ஆனால், இறைவேதனை தலைக்கு மேல் சூழ்ந்துவிட்ட பின்னரும், ஒரே ஒரு சமுதாயம் செய்த கூட்டுப் பாவமன்னிப்பின் காரணமாக அந்த வேதனை தடுத்து நிறுத்தப்பட்டது. அதுதான் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகம் (நைனுவா மக்கள்).


அல்குர்ஆன் இதனைத் தனித்துவமாகப் போற்றுகிறது:

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ

"யூனுஸுடைய சமூகத்தாரைத் தவிர, வேதனை வரும் முன் ஈமான் கொண்டு, அதனால் பயனடைந்த மற்றோர் ஊர் இருந்ததில்லை! அவர்கள் ஈமான் கொண்டபோது (பாவமன்னிப்புக் கோரியபோது), இவ்வுலக வாழ்வில் அவர்களை இழிவுபடுத்தும் வேதனையை நாம் அவர்களை விட்டும் நீக்கினோம்; மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை சுகமனுபவிக்கச் செய்தோம்." (ஸூரா யூனுஸ் 10:98)


யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சமூகத்தார் தொடர்ந்து அசத்தியத்தில் நிலைத்திருந்ததால், "மூன்று நாட்களில் உங்கள் மீது இறைவேதனை இறங்கும்" என்று எச்சரித்துவிட்டு நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.


மூன்றாவது நாள் நெருங்கியது. வானம் கருமை பூசியது; கரிய புகையும் நெருப்பு மூட்டமும் போன்ற வேதனையின் அறிகுறிகள் நைனுவா நகரின் தலைக்கு மேல் சூழ்ந்தன. இறங்கப்போவது அல்லாஹ்வின் தண்டனை என்பதை மக்கள் உறுதியாக உணர்ந்துகொண்டார்கள்.


நகர மக்கள் தங்களின் தலைவர்களோடு ஒரு திறந்த பாலைவெளி மைதானத்திற்குத் திரண்டனர்.

தாய்மார்களிடமிருந்து அவர்களின் பச்சிளம் பாலகர்களைப் பிரித்து வைத்தனர்.

கால்நடைகளிடமிருந்து அவற்றின் கன்றுகளைப் பிரித்து நிறுத்தினர்.

ஆடம்பர ஆடைகளைக் களைந்துவிட்டு, சாக்கு ஆடைகளை (கம்பளி ஆடைகளை) உடுத்திக்கொண்டு மண்ணில் தலையை வைத்துப் புரண்டார்கள்.


மனிதர்களின் கதறலும், குழந்தைகளின் அழுகைக் குரலும், விலங்கினங்களின் உறுமலும் அந்த மைதானத்தையே உலுக்கியது. தங்கள் இணைவைப்பு மற்றும் அநீதிகளுக்கு உள்ளமுருகி இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) தேடினார்கள்:

يَا حَيُّ حِينَ لَا حَيَّ، وَيَا حَيَّ مُحْيِيَ الْمَوْتَى، وَيَا حَيُّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

"எந்த உயிரும் இல்லாதபோதே உயிருடன் இருந்தவனே! மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனே! என்றென்றும் ஜீவித்திருப்பவனே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; எங்களை மன்னித்தருள்வாயாக!"


அவர்களின் உள்ளத்துடிப்பையும், உண்மையான இஸ்திஃபாரையும் கண்ட அல்லாஹ், அவர்கள் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பேரழிவை அகற்றி, வானத்தைத் தெளிவாக்கி, அமைதியை அருளினான். இஸ்திஃபார் என்ற கேடயம் ஒரு முழு சமுதாயத்தின் அழிவையே தடுத்து நிறுத்தியது.


ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களின் தீர்வு:- தாபியீன்களின் தலைசிறந்த அறிஞர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபைக்கு நான்கு பேர் வெவ்வேறு பிரச்சனைகளுடன் வந்தனர்:


முதலாமவர்: "மழையின்றி வறட்சி நிலவுகிறது" என்றார்.

இமாம்: «اسْتَغْفِرِ اللَّهَ» (அல்லாஹ்விடம் இஸ்திஃபார் செய்) என்றார்.

இரண்டாமவர்: "கடும் ஏழ்மையில் தவிக்கிறேன்" என்றார்.

இமாம்: «اسْتَغْفِرِ اللَّهَ» (இஸ்திஃபார் செய்) என்றார்.

மூன்றாமவர்: "குழந்தைப் பேறு இல்லை" என்றார்.

இமாம்: «اسْتَغْفِرِ اللَّهَ» (இஸ்திஃபார் செய்) என்றார்.

நான்காமவர்: "என் தோட்டம் வறண்டு விளைச்சலே இல்லை" என்றார்.

அதற்கும் இமாம்: «اسْتَغْفِرِ اللَّهَ» (இஸ்திஃபார் செய்) என்றே பதிலளித்தார்.

அங்கிருந்த மக்கள், "வெவ்வேறு பிரச்சனைகளுக்கு ஒரே பதிலையா கூறுகிறீர்கள்?" என்று கேட்டபோது, இமாம் அவர்கள் ஸூரா நூஹின் வசனங்களை (71:10–12) ஓதிக்காட்டினார்கள்:

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏

يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏

وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا ‏


"உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்; அவன் மிக்க மன்னிப்பவன். அவன் உங்களுக்கு வானத்திலிருந்து தொடர்மழையை அனுப்புவான்; உங்கள் செல்வங்களையும், பிள்ளைகளையும் அதிகப்படுத்துவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் நதிகளையும் உண்டாக்குவான்!"


இறைவனின் கோபத்தையும் உலகியல் சோதனைகளையும் தடுத்து நிறுத்தும் ஆகச்சிறந்த ஆன்மீகக் கேடயம் இஸ்திஃபார் மட்டுமே.


சமுதாயத்தில் பஞ்சம், கொள்ளைநோய், அநீதி போன்ற பொதுவான சோதனைகள் ஏற்படும்போது, சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இஸ்திஃபார் செய்வதும் திருந்துவதும் வேதனையை மாற்றும் வழிகளாகும்.


இஸ்திஃபார் மறுமைப் பாவங்களை அழிப்பது மட்டுமல்லாமல், இவ்வுலகில் மழை, சந்ததி, பொருளாதார வளம் மற்றும் மன அமைதியை அள்ளித் தரும் பொக்கிஷமாகும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாவங்களற்ற மாசற்ற நபியாக இருந்தும் நாளொன்றுக்கு எழுபதுக்கும் நூறு முறைக்கும் மேல் இஸ்திஃபார் செய்தார்கள். ஆனால், பாவங்களில் மூழ்கிக்கிடக்கும் நாம் ஒரு நாளில் சில முறைகூட மனமுருகி "அஸ்தஃக்ஃபிருல்லாஹ்" சொல்வதில்லை.


சோதனைகளுக்கான உண்மையான காரணத்தை அறியாமை:

பொருளாதார நெருக்கடி, அமைதியின்மை, குடும்பச் சீர்குலைவு ஏற்படும்போது மனித மற்றும் புறக் காரணிகளை மட்டுமே தேடுகிறோமே தவிர, "நம்முடைய பாவங்களின் காரணமாக இறைவனின் அதிருப்தி இறங்கியிருக்குமோ?" என்று உணர்ந்து இஸ்திஃபார் செய்ய முன்வருவதில்லை.


உள்ளத்தில் குற்ற உணர்ச்சியோ, பாவங்களை கைவிடும் எண்ணமோ இன்றி, மற்றவர்களுடன் பேசிக்கொண்டே விரல்களால் தஸ்பீஹ் மணியை உருட்டி "அஸ்தஃக்ஃபிருல்லாஹ்" என்று இயந்திரத்தனமாக உச்சரிக்கும் மேலோட்டமான நிலையே காணப்படுகிறது.


'ரமதா' (சாம்பல்) பஞ்சம்

வரலாற்றுப் பெருநிகழ்வு: 'ஆமுர் ரமதா' – மதீனாவை உலுக்கிய கொடும் பஞ்சம்

ஹிஜ்ரி 18-ஆம் ஆண்டு, அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலம். அரபு தீபகற்பம் முழுவதும் வரலாறு காணாத கொடும் பஞ்சம் தாக்கியது.தொடர்ந்து ஒன்பது மாதங்கள் வானம் மழையை நிறுத்தியது. பூமி காய்ந்து கருகி, தூசியும் சாம்பலும் போலக் காற்றில் பறந்ததால் அந்த ஆண்டுக்கு 'ஆமுர் ரமதா' (சாம்பல் ஆண்டு) என்று பெயரிடப்பட்டது.


கால்நடைகள் அனைத்தும் செத்து மடிந்தன; தொலைதூரக் கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவும் தண்ணீரும் தேடி மதீனாவை நோக்கித் தஞ்சம் புகுந்தனர்.


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழை எளிய மக்களின் துயரத்தைக் கண்டு கண்ணீர் வடித்தார்கள். மக்கள் நெய்யும் இறைச்சியும் உண்ணும் வரை தானும் அதை உண்ண மாட்டேன் என்று சத்தியம் செய்து, வெறும் காய்ந்த ரொட்டியையும் ஆலிவ் எண்ணெயையும் மட்டுமே உண்டு வாழ்ந்ததால் அவர்களின் தேக நிறமே கறுத்துப் போனது.


பிரச்சினை எல்லை மீறியபோது, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களை மதீனாவின் திறந்த வெளி மைதானத்திற்கு (முஸல்லாவுக்கு) அழைத்துச் சென்றார்கள். அந்தப் பெரும் சபையில் வானங்களை நோக்கி இரு கைகளையும் ஏந்தி நின்றார்கள்.


அவர்கள் அங்கு நின்றுகொண்டு மிக நீண்ட உபந்நியாசங்களோ, புதிய வார்த்தைகளையோ பேசவில்லை; மாறாக அவர்களின் முழுப் பிரார்த்தனையும் இஸ்திஃபாரை (பாவமன்னிப்பை) மட்டுமே சுற்றி அமைந்திருந்தது.

அவர்கள் அழுதுகொண்டே உரக்கக் கூறினார்கள்:


اللَّهُمَّ إِنَّا نَسْتَغْفِرُكَ وَنَسْتَسْقِيكَ، اللَّهُمَّ إِنَّهُ لَمْ يَنْزِلْ بَلَاءٌ إِلَّا بِذَنْبٍ، وَلَمْ يُكْشَفْ إِلَّا بِتَوْبَةٍ

"யா அல்லாஹ்! நாங்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் (இஸ்திஃபார் செய்கிறோம்); உன்னிடமே மழை வேண்டுகிறோம். இறைவா! எந்த ஒரு சோதனையும் பாவத்தின் காரணமாகவே அன்றி இறங்குவதில்லை; அது பாவமன்னிப்பின் மூலமாகவே அன்றி நீங்குவதும் இல்லை!"


பின்னர் மக்களை நோக்கித் திரும்பி, புனித அல்குர்ஆனின் ஸூரா நூஹ் (71:10) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا ۝ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا

"உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான். அவன் உங்களுக்கு வானத்திலிருந்து தொடர்மழையை அனுப்புவான்!"


தொழுகை முடிந்து மக்கள் கலைந்தபோது, சிலர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து:

"அமீருல் முஃமினீன் அவர்களே! நீங்கள் மழையைக் குறித்து எதையுமே அதிகமாகக் கேட்கவில்லையே; உங்கள் பிரார்த்தனை முழுவதும் இஸ்திஃபாராகவே இருந்ததே?" என்று வினவினர்.

அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தப் பதிலை அளித்தார்கள்:

لَقَدْ طَلَبْتُ الْغَيْثَ بِمَجَادِيحِ السَّمَاءِ الَّتِي يُسْتَنْزَلُ بِهَا الْمَطَرُ

"வானத்திலிருந்து மழையை இறக்கக்கூடிய ஆகச்சிறந்த திறவுகோல்களைக் (நட்சத்திரங்களைத்) தேடியே நான் பிரார்த்தித்தேன்; அதுதான் இஸ்திஃபார் (பாவமன்னிப்பு)!"நூல்:அல்-முஸன்னஃப் — இப்னு அபீ ஷைபா (ரஹ்)


அதே களத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை ஹழ்ரத் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்து உயர்த்தி, அவர்களின் நற்குணத்தையும் நபித்துவக் குடும்பத் தொடர்பையும் முன்னிறுத்திப் பிரார்த்தித்தார்கள்:


"யா அல்லாஹ்! நாங்கள் எங்கள் நபியின் காலத்தில் அவர்களின் துஆவைக் கொண்டு உன்னிடம் மழை வேண்டினோம்; நீ எங்களுக்கு மழை தந்தாய். இப்போது நபிகளாரின் பெரிய தந்தையைக் கொண்டு உன்னிடம் கையேந்துகிறோம்; எங்களுக்கு மழையைத் தருவாயாக!"

அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தன் தாடி நனையும் வரை அழுது அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டார்கள்.


மக்கள் மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே வானம் கரிய மேகங்களால் சூழ்ந்தது. பெருமழை கொட்டித் தீர்த்தது; பூமி புத்துயிர் பெற்றது; காய்ந்த நதிகள் நிரம்பி வழிந்தன. மக்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தழுவி, "நபிகளாரின் பெரிய தந்தைக்கு நல்வாழ்த்துகள்; இஸ்திஃபாரின் மூலம் அல்லாஹ் நமக்கு மறுவாழ்வு தந்துவிட்டான்!" என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். நூல்: அல்-பிதாயா வந்-நிஹாயா


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வார்த்தைகளின்படி, வானத்தின் கதவுகளைத் திறந்து நன்மைகளைப் பொழியச் செய்யும் ஒரே சாவி மனிதனின் உள்ளத்திலிருந்து பிறக்கும் மெய்யான இஸ்திஃபார் மட்டுமே.


மக்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்படும்போது, "என் பாவத்தின் காரணமாக மக்களுக்கு இந்த சோதனை வந்துவிட்டதோ" என்று கலங்கி நின்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பொறுப்புணர்வே ஒரு சமூகத்தைப் பேரழிவிலிருந்து காக்கும்.


இறைவனின் தண்டனையோ, பஞ்சமோ தன்னிச்சையாக வருவதில்லை; மனிதர்களின் அநீதிகளும் பாவங்களும் பெருகும்போதே வானத்தின் அருட்கொடைகள் தடுக்கப்படுகின்றன. இஸ்திஃபார் அந்தத் தடைகளைத் தகர்த்து விடுகிறது.


பஞ்சம், வறட்சி, வெப்ப அலை, திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது, புவி வெப்பமயமாதல் (Global Warming) மற்றும் வானிலை மாற்றங்களை மட்டுமே விவாதிக்கிறோமே தவிர, இவற்றுக்கெல்லாம் பின்னால் மனிதனின் பாவங்களும் இறைவனின் எச்சரிக்கையும் இருக்கின்றன என்பதை உணர்ந்து பொதுமன்னிப்புத் தேடும் பழக்கம் சமுதாயத்தில் அருகிவிட்டது.


பணவீக்கம், வேலையின்மை, பசி, வறுமை வரும்போது பொருளாதாரக் கொள்கைகளை மட்டும் ஆராய்கிறோம். ஆனால், இஸ்திஃபார் மட்டுமே வானத்தின் பரக்கத்துகளையும் வாழ்வாதாரத்தையும் திறந்துவிடும் என்ற இறைவாக்கின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை குறைந்துவிட்டது.


"நான் என்ன பெரிய பாவமா செய்துவிட்டேன்?" என்று பாவங்களை நியாயப்படுத்தும் மனோபாவம் அதிகரித்துவிட்டது. உமர் ரலியல்லாஹு அன்ஹு போன்ற உன்னத சஹாபிகளே சாக்கு ஆடையணிந்து மண்ணில் விழுந்து அழுதார்கள் என்றால், நம்முடைய பாவங்களுக்கு நாம் எந்த அளவிற்கு இஸ்திஃபார் செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.


كُنْ مَعَ اللهِ، يَكُنْ مَعَكَ

 "அல்லாஹ்வோடு நீங்கள் இருங்கள்; அவன் உங்களுடன் இருப்பான்" 

மனித வாழ்வின் அக மற்றும் புறப் போராட்டங்களுக்கு இறைவனே அமைத்த நான்கு மாபெரும் தூண்களாக இந்த இறைவாக்குறுதிகள் திகழ்கின்றன:


தேவைகளும் ஏக்கங்களும் நெஞ்சை அடைக்கும்போது கையேந்த துஆ 

தனிமையும், பயமும், குழப்பங்களும் வாட்டும்போது அமைதிபெற திக்ர் 

அருட்கொடைகளும் வெற்றிகளும் சூழும்போது பணிவோடு நிலைநிறுத்த ஷுக்ர் 

தடுமாற்றங்களும் சோதனைகளும் சூழ்ந்துநிற்கும்போது பாதுகாப்புக் கேடயமாக இஸ்திஃபார் 

அடியான் தன் பலவீனத்தை உணர்ந்து அல்லாஹ்வை நோக்கி ஒரு முழம் நெருங்கினால், இறைவன் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கி வருகிறான். எனவே, எந்த நிலையிலும் இறைவனோடு உள்ள ஆன்மீகத் தொடர்பை அறுத்துவிடாமல், அவனது இந்த மாறாத வாக்குறுதிகளைப் பற்றிக்கொண்டு வாழ்வதே ஈருலக ஈடேற்றத்திற்கான வழியாகும்.


யா அல்லாஹ்! எங்களை எப்போதும் உன்னிடமே கையேந்திப் பிரார்த்திக்கும் பாக்கியவான்களாக ஆக்குவாயாக! எங்கள் துஆக்களை உன் தனிப்பெரும் கருணையால் ஏற்று அருள் புரிவாயாக!


யா ரஹ்மான்! எங்களது நாவுகளையும் உள்ளங்களையும் எப்போதும் உன்னை நினைவுகூரும் (திக்ர் செய்யும்) ஈர்ப்பில் நிலைநிறுத்துவாயாக! வானுலகில் உன் மலக்குகளுக்கு மத்தியில் எங்களை நல்லடியார்களாக நீ நினைவுகூரும் பாக்கியத்தைத் தருவாயாக!


யா கரீம்! நீ எங்களுக்கு வழங்கியுள்ள எண்ணற்ற அருட்கொடைகளுக்கு உள்ளத்தாலும், நாவாலும், உடலாலும் மெய்யான நன்றி செலுத்தும் (ஷுக்ர் செய்யும்) தவ்பீக்கை அருள்வாயாக! எங்கள் நன்றிகெட்டத்தனத்தால் எந்த ஓர் அருளையும் எங்களை விட்டும் பறித்துவிடாதே!


யா கஃப்பார்! நாங்கள் அறிந்து செய்த, அறியாமல் செய்த, மறைமுகமான, பகிரங்கமான அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இடைவிடாது இஸ்திஃபார் செய்யும் தவ்பீக்கைத் தந்து, எங்களை உலக சோதனைகளிலிருந்தும் நரக வேதனையிலிருந்தும் பாதுகாப்பாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக