வியாழன், 3 செப்டம்பர், 2026

நவீன உலகிலும் நபியின் வழிகாட்டல்

 


நவீன உலகிலும் நபியின் வழிகாட்டல் 

بِسْمِ اللهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، الَّذِي هَدَانَا إِلَى الْإِسْلَامِ وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، الَّذِي بَلَّغَ الرِّسَالَةَ، وَأَدَّى الْأَمَانَةَ، وَنَصَحَ الْأُمَّةَ، وَجَاهَدَ فِي اللهِ حَقَّ جِهَادِهِ، وَعَلَى آلِهِ الطَّيِّبِينَ وَأَصْحَابِهِ الْغُرِّ الْمَيَامِينِ، مَا اتَّصَلَتْ عَيْنٌ بِنَظَرٍ، وَوَعَتْ أُذُنٌ بِخَبَرٍ، وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا، أَمَّا بَعْدُ.

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

أَحِبُّوا اللَّهَ لِمَا يَغْذُوكُمْ مِنْ نِعَمِهِ، وَأَحِبُّونِي بِحُبِّ اللَّهِ

مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ بِي

 * நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதோ ஒரு பழைய காலகட்டத்திற்கு மட்டும் வாழ்ந்து வழிகாட்டியவர்கள் அல்ல.

 * நபிகளாரின் வரலாற்றை நாம் படிக்கப் படிக்க அது தொடர்ந்து இன்றைக்கும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது.

 * நபிகளாரின் வாழ்க்கை என்பது ஒரு கடல் போன்றது; அதை முழுமையாகப் படித்து முடித்துவிட்டதாக எவரும் கூறிவிட முடியாது.

 * 21-ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின் வரும் 30-ஆம் நூற்றாண்டிலும் ஏற்படக்கூடிய சவால்களுக்குத் தேவையான அறிவையும் தீர்வுகளையும் நபிகளாரின் வாழ்க்கை தருகிறது.

 * சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் நவீனப் பிரச்சனைகள் அனைத்திற்கும் நபிகளாரின் வாழ்க்கையில் தெளிவான வழிகாட்டல்கள் உள்ளன.

 * உளூவில் பிடரிக்கு மஸஹ் செய்வதன் மூலம் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீராகி, நவீன காலத்தில் மனிதனை அச்சுறுத்தும் மன அழுத்தமும் புத்திசுவாதீனமும் தடுக்கப்படுகிறது.

 * தாய், தந்தையருக்கு மாற்றமான நிறத்தில் குழந்தை பிறப்பது குறித்து ஒட்டகத்தை உதாரணமாகக் கூறி, நவீன 21-ஆம் நூற்றாண்டின் மரபணுவியல் (Genetics) தத்துவத்தை நபிகளார் அன்றே தெளிவுபடுத்தினார்கள்.

 * வானத்தில் சுழலும் கோள்கள் தம் வட்டப்பாதையை விட்டு விலகினால் ஒரு குழியில் மாட்டிக்கொள்ளும் எனக் கூறி, நவீன அறிவியல் பேசும் 'பிளாக் ஹோல்' (Black Hole - கருங்குழி) பற்றி அன்றே குறிப்பிட்டார்கள்.

 * வானில் பறக்கும் பறவைகள் எவ்வாறு சிறகுகளை அசைத்துப் பறக்கின்றன என்ற இயற்பியல் அறிவியலைத் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

 * மருத்துவத் துறையில் 'திப்புன் நபவி' என்ற தனித்துவமான சிகிச்சை முறைகள் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு வழிகளை வழங்கியிருக்கிறார்கள்.

 * விண்ணில் இருந்து தகவல் தொடர்புகளை இணைக்கும் தட்டுகள் போன்ற சாதனங்கள் (டிஷ் மற்றும் சாட்டிலைட் அமைப்புகள்) வரும் என்பதை முன்னறிவித்தார்கள்.

 * கடைவீதிகளுக்கு மக்கள் செல்லத் தேவையின்றி வீடுகளிலேயே வர்த்தகம் நடக்கும் 'குளோபல் வில்லேஜ்' மற்றும் ஆன்லைன் வர்த்தகச் சூழலை (தகாரபுல் அஸ்வாக்) முன்னறிவித்தார்கள்.

 * நவீனக் காலத்தில் மனிதர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இயந்திர வாகனங்களில் (மயாசிர்) பயணிப்பார்கள் என்பதை அடையாளப்படுத்தினார்கள்.

 * இறுதிக்காலத்தில் சிறிய பிள்ளைகளுக்குக் கூட கடுமையான கோப உணர்வு ஏற்படும் என்ற சமகால உளவியல் மாற்றத்தை எடுத்துரைத்தார்கள்.

 * ஒரு தந்தை, தாய், பிள்ளை, வியாபாரி, சமூகப் போராளி, ஆன்மீகவாதி, கல்வியாளர், ஆட்சியாளர் என அனைத்து நிலைகளுக்கும் முழுமையான வழிகாட்டலைத் தந்துள்ளார்கள்.

 * ஒரு தலைவரைப் பின்பற்றுவதற்குரிய முதல் தகுதியான 'தாரீகிய்யத்'—அதாவது 63 ஆண்டு கால வாழ்க்கையும் வரலாற்று ஆவணமாக முழு வெளிச்சத்தில் பதிவாகியுள்ளது.

 * இரண்டாவது தகுதியான 'ஜாமிய்யத்'—வாழ்க்கையின் எந்த ஒரு துறையையும் விடுத்துவிடாமல் மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளுக்கும் வழிகாட்டியுள்ளார்கள்.

 * மூன்றாவது தகுதியான 'காமிலிய்யத்'—அரைகுறையாக எதையும் விடாமல் எந்தவொரு துறையையும் அதன் இறுதி எல்லை வரை முழுமைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

 * நான்காவது தகுதியான 'அமலிய்யத்'—வெறும் கருத்துக்களோடு நின்றுவிடாமல் மது ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, வட்டி ஒழிப்பு போன்ற நன்மைகளைத் தம் வாழ்நாளில் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

 * நவீன காலத்து நாகரிகத்திற்காகவும் நிர்பந்தங்களுக்காகவும் சுன்னத்துகளைச் சமரசம் செய்துவிடக் கூடாது என்பதை உணர்த்தினார்கள்.

 * நபிகளாரின் சுன்னத்துகளை நவீன உலகில் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்றால், முதலாவதாக அவர்கள் மீது ஆழமான அன்பு (முஹப்பத்) கொண்டிருக்க வேண்டும்.

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலி

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பத்து வயதுடைய ஒரு சிறுவர் வந்தார். அவருடைய பெயர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் என்பதாகும்.

வந்த சிறுவர் பெருமானாரை நோக்கி, "தங்களின் கரத்தை நீட்டுங்கள், நான் கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.

அக்காலகட்டத்தில் எவரேனும் கலிமா கூறி இஸ்லாத்தைத் தழுவும்பொழுது, நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) பெறுவார்கள். 'கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு எவ்வாறு வாழ வேண்டும், பொய் பேசக் கூடாது, திருடக் கூடாது, புறம் பேசக் கூடாது, அடுத்தவர் மீது பழி சுமத்தக் கூடாது, மது அருந்தக் கூடாது, மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விலக்கப்பட்ட காரியங்களைச் செய்யக் கூடாது' என்பன போன்ற நற்பண்புகளுக்கான உடன்படிக்கையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

எனவே, அந்தப் பத்து வயதுச் சிறுவர், "தங்களின் கரத்தை நீட்டுங்கள்; நான் உறுதிமொழி அளித்துக் கலிமா கூறுகிறேன், எனக்குக் கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்" என்று கேட்டார்.

அப்பொழுது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீட்டிய தம்முடைய கரத்தை மீண்டும் மடக்கிக் கொண்டார்கள்.

அச்சிறுவரிடம், "நீ கலிமா கூறிவிட்டால், உன்னுடைய பெற்றோர்கள் எங்கு இருப்பார்கள்?" என்று வினவினார்கள். அதற்கு அவர், "இல்லை, என் பெற்றோர்கள் தங்களுடைய பழைய மதத்திலேயேதான் இருக்கிறார்கள்; நான் மட்டுமே விரும்பி இஸ்லாத்தை ஏற்க வந்துள்ளேன்" என்று பதிலளித்தார்.

அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "நீ கலிமா கூறிவிட்டால் என்னோடுதான் இருக்க வேண்டும்; உன்னுடைய பெற்றோர்களுடன் செல்ல முடியாது, இதற்குச் சம்மதிக்கிறாயா?" என்று கேட்டார்கள்.

"இல்லை, என்னால் அதற்கு உடன்பட முடியாது" என்று அந்தச் சிறுவர் கூறினார். "அப்படியானால், நீ சென்று நன்றாக யோசித்துவிட்டு வா" என்று கூறி அவரை நபிகளார் அனுப்பி வைத்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறுவரின் ஈமானுடைய (நம்பிக்கையின்) ஆழத்தைச் சோதித்துப் பார்க்கிறார்கள். எந்த ஒரு நிலையில் அவர் இஸ்லாத்திற்குள் வருகிறார்? உள்ளப்பூர்வமான உண்மையான எண்ணத்தோடு வருகிறாரா, அல்லது ஏதேனும் ஒரு நிர்ப்பந்தத்தினால் அல்லது சூழலினால் வருகிறாரா என்பதைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரீட்சிக்கிறார்கள். ஏனெனில் அவர் ஒரு சிறு பிள்ளை. பொதுவாக எல்லோரிடமும் அவ்வாறு சோதனை செய்வதில்லை. கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்க வருபவர்களையெல்லாம் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. கலிமா கூற விரும்பி வருபவர்களுக்கு அதனைச் சொல்லிக் கொடுத்து வரவேற்க வேண்டியதுதான் நமது கடமை. அது வெளிப்படையான காரியம்; உள்ளரங்கம் என்பது அவருக்கும் இறைவனுக்கும் உரியது, அதில் நாம் தலையிட வேண்டியதில்லை.

ஆனால், ஒருவர் கலிமா கூறி இஸ்லாத்திற்குள் நுழைந்த பின்னர், அவருடைய வாழ்வில் மார்க்கத்தைப் பற்றியும், இஸ்லாமிய நெறிமுறைகளைப் பற்றியும் அவருக்குக் கற்றுத் தர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வாசல் வரை வந்தவரை உள்ளே அழைத்து வந்து விட்டுவிட்டால் நமது பொறுப்பு முடிந்துவிட்டது என்று நாம் விலகிவிடக் கூடாது. அதற்குப் பிறகுதான் அவர்களைத் தொடர்ந்து கவனித்து, மார்க்கக் கடமைகளையும் விழுமியங்களையும் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் மீண்டும் வந்தார். வந்து, "யா ரஸூலல்லாஹ்! எனக்குக் கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள், நான் பைஅத் செய்கிறேன்" என்று கூறினார்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பொழுதும், "கலிமா கூறினால் உன் பெற்றோரைத் துறந்துவிட்டு வருவாயா?" என்று வினவினார்கள். அதற்கு அவர், "இல்லை, என்னால் அது இயலாது" என்றார்.

ஒருபுறம் தம் பெற்றோரைப் பிரிய முடியாத பாசம்; மறுபுறம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கலிமா கூறி, பெருமானாரோடு வாழ வேண்டும் என்ற பேராவல். ஏதோ ஒரு வகையில் அந்தச் சிறுவர் பெருமானாரின்பால் ஈர்க்கப்பட்டிருந்தார்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டாவது முறையும் அவரைச் சோதித்து, "அப்படியானால் அவசரப்பட வேண்டாம்; நன்றாகச் சிந்தித்து முடிவெடுத்து வாருங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவரும் திரும்பிச் சென்றார்.

சில காலங்கள் கழிந்த பின்னர், அவர் மூன்றாவது முறையாக வந்தார். அவர் வந்ததும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "உன் பெற்றோரை விட்டுவிட்டு என்னோடு வருவாயா?" என்று கேட்டார்கள். மூன்றாவது முறை அவர், "விட்டுவிட்டு வருகிறேன்" என்று உறுதியாகக் கூறினார். மேலும், "எனக்குக் கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்; இதற்கு மேலும் நான் இதனைத் தள்ளிப்போட விரும்பவில்லை. என் பெற்றோரை விட்டுவிட்டு வர வேண்டும் என்றாலும் நான் வருகிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அவரது மன உறுதியைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்குக் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள்; அவரும் கலிமா கூறி இஸ்லாத்தைத் தழுவினார். பத்து வயதுச் சிறுவர் என்ற போதிலும், அத்தகைய திடமான ஈமானை அவர் வெளிப்படுத்தினார்கள்.

"என்ன செய்யணும்?"ன்னு கேட்கிறார் அடுத்து. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க: "நான் என்ன சொன்னாலும் செய்யணும், செய்வியா?"ன்னு கேட்டாங்க. அடுத்து என்ன செய்யணும்னு கேட்கிறாரு... பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க: "நான் என்ன சொன்னாலும் செய்யணும். அதுதான் ஈமான்! அதுதான் ஈமான்! நான் சொல்லிட்டா செய்யணும், செய்வியா?"ன்னு கேட்டாங்க. "யா ரஸூலல்லாஹ், நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன்"என்றார். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் அவர்களிடம் பேசுகிறார்கள். அச்சிறுவர், "இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று வினவுகிறார். அதற்கு நபிகளார், "நான் என்ன கூறினாலும் நீ முழுமையாகக் கட்டுப்பட வேண்டும்; அவ்வாறு கட்டுப்படுவாயா?" என்று அவரிடம் கேட்டார்கள்.

"நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவர் மீண்டும் கேட்க, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உக்துல் அபாக்க"—"சென்று உன் தந்தையைக் கொன்றுவிட்டு வா" என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட மாத்திரத்தில், அவர் ஒரு கணம்கூடத் தயங்கி நிற்கவில்லை; உடனடியாகப் புறப்பட்டு மிக வேகமாகச் சென்றார். பள்ளிவாசலின் வாசல் வரை சென்ற அவரை, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவரைத் திரும்ப அழைத்து வாருங்கள்" என்று கூறி வரவழைத்தார்கள். அவரை அமரவைத்து, 

"«إِنِّي لَمْ أُبْعَثْ بِقَطِيعَةِ رَحِمٍ»

"குடும்ப மற்றும் இரத்த உறவுகளைத் துண்டிப்பதற்காக நான் அனுப்பப்படவில்லை; மாறாக, உறவுகளைப் பேணி, இணைந்து வாழ வேண்டும் என்று கட்டளையிடுவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன். எனவே, உறவுகளைத் துண்டிக்கும் காரியத்தை எக்காரணத்தைக் கொண்டும் நான் உங்களுக்குப் போதிக்க மாட்டேன்; உங்களின் ஈமானைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்" என்று விளக்கமளித்தார்கள்.

இதன் மூலம் தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அளப்பரிய அன்பையும், பேரருளையும், உயர்ந்த கண்ணியத்தையும் பெற்றார்கள். சிறிய வயதிலேயே நபிகளாருக்கு மிகவும் நெருக்கமான தோழராகத் திகழ்ந்தார்கள்.

அவ்வாறு வாழ்ந்து வந்த தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இளம் வயதிலேயே ஒருநாள் கடுமையான நோயுற்றுப் படுக்கையில் வீழ்ந்தார்கள்.

அப்பொழுது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "தல்ஹா எங்கே காணப்படவில்லை?" என்று விசாரித்தார்கள். அதற்குத் தோழர்கள், "அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றுக் கிடக்கிறார்" என்று தெரிவித்தார்கள். அதனைக் கேட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரிக்கப் புறப்பட்டார்கள்.

 தல்ஹாவை போய் பார்க்கப் போறாங்க. இப்ப தல்ஹாவினுடைய பெற்றோர்கள் முஸ்லிம் ஆயிட்டாங்க. போய் பார்க்கிற பொழுது அவர் மயக்கத்துல படுத்திருக்கிறார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், பெற்றோர்களைக் கூப்பிட்டு: "தல்ஹா இந்த இரவைக் கடப்பது என்பது சாத்தியமில்லை. ஒருவேளை இந்த இரவுக்குள் அவர் மரணித்துவிட்டால், கண்டிப்பாக என்னை நீங்கள் கூப்பிட வேண்டும். தல்ஹாவுக்கு நான்தான் குளிப்பாட்டுவேன், நான்தான் கஃபன் செய்வேன், நான்தான் தொழுகை நடத்துவேன், நான்தான் அடக்கம் செய்வேன்" என்று கூறினார்கள்.

தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு 15 வயசுப் பிள்ளை! "நான்தான் செய்வேன், என்னைக் கூப்பிட விடணும்"னு சொல்லிட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறப்பட்டு விடுகிறார்கள்.

சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து கண்விழித்த தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் குடும்பத்தாரிடம் கேட்டார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்களா?"

"ஆம், வந்து சென்றார்கள்" என்று குடும்பத்தார் கூறினர்.

"அவர்கள் என்ன கூறினார்கள்?" என்று தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு மீண்டும் ஆவலுடன் கேட்டார்கள்.

அதற்கு குடும்பத்தார், "உமது மரணம் நெருங்கிவிட்டது போல் தெரிகிறது; எனவே மரணம் நிகழ்ந்ததும் உடனடியாக தமக்குத் தெரிவிக்குமாறு கூறிச் சென்றார்கள்" என்றனர்.

இதைக் கேட்ட தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டார்கள் என்றால், நிச்சயமாக இந்த இரவை நான் கடக்க மாட்டேன்; இன்றிரவே நான் மரணித்துவிடுவேன். ஆனால், நான் ஒன்றை உங்களுக்கு வஸிய்யத்தாகக் (இறுதி விருப்பமாக) கூறுகிறேன்: நான் மரணித்துவிட்டால், தயவுசெய்து அல்லாஹ்வின் தூதருக்குச் செய்தி சொல்லாதீர்கள்; அவர்களை அழைக்காதீர்கள்!"

குடும்பத்தார் திகைத்துப்போய் நின்றனர். நபிகளார் தொழுகை நடத்துவதை விட ஒரு முஃமினுக்குப் பெரும் பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்? ஆனால், தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உள்ளத்தில் ஓடிய எண்ணம் முற்றிலும் வேறாக இருந்தது. அவர்கள் கூறினார்கள்:

"மதீனாவின் இந்த இரவு நேரம் காரிருள் சூழ்ந்தது; வழியில் விஷ ஜந்துக்கள் நடமாடக்கூடும். மேலும், யூதர்கள் போன்ற வஞ்சக எதிரிகள் நிறைந்த சூழல் இது. எனது இறுதித் தொழுகைக்காக இந்த இருள் நிறைந்த இரவில் என் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரமப்பட்டுப் புறப்பட்டு வந்து, அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறு தீங்கோ ஆபத்தோ நேர்ந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்!

என் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை; எங்கள் ரசூலுக்கு ஒரு சிறு முள் கூட தைத்துவிடக் கூடாது. அல்லாஹ்வின் தூதர் எனக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துவதை விடப் பெரும் பாக்கியம் எனக்கு வேறு எதுவும் இல்லைதான்; ஆயினும் என் கண்மணி நாயகத்தின் பாதுகாப்பிற்காக அந்தப் பெரும் பாக்கியத்தைக் கூட நான் மனமுவந்து விட்டுக்கொடுக்கிறேன். எனவே, இரவிலேயே என்னை அடக்கம் செய்துவிடுங்கள்; நபிகளாரை அழைத்து அவர்களுக்குச் சிரமம் தர வேண்டாம்!"

அவர்கள் கூறியபடியே, அன்றிரவே தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயிர் பிரிந்தது. அவரது இறுதி விருப்பப்படியே, நபிகளாருக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற பேரன்பின் காரணத்தால், இரவிலேயே அவரை அடக்கம் செய்துவிட்டனர்.

விடிந்தது. ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தாரைக் கண்டு,

"தல்ஹாவின் நிலை என்னவானது?" என்று விசாரித்தார்கள்.

அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் நேற்றிரவே மரணித்துவிட்டார்; நாங்கள் அவரை அடக்கமும் செய்துவிட்டோம்" என்றனர்.

நபிகளார் ஆச்சரியத்துடன், "அவர் மரணித்தால் எனக்குத் தெரிவிக்குமாறு நான் உங்களிடம் கூறியிருந்தேனே? ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை?" என்று கேட்டார்கள்.

அதற்கு அக்குடும்பத்தார், தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணப்படுக்கையில் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும், நபிகளாரின் பாதுகாப்பிற்காகத் தன் கடைசி ஆசையையும் துறந்த அந்தத் தூய அன்பையும் கண்ணீருடன் விவரித்தனர்.

தம் மீது ஒரு தோழர் வைத்திருந்த எல்லையற்ற பாசத்தைக் கேட்டு கண்மணி நபிகளாரின் கண்கள் நனைந்தன; உள்ளம் உருகியது. உடனே நபிகளார்,

"என்னை தல்ஹாவின் கப்ருக்கு அழைத்துச் செல்லுங்கள்!" என்று கூறினார்கள்.

நபிகளார் தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ருக்கு நேரில் சென்றார்கள். தம்முடன் இருந்த தோழர்களை வரிசையாக அணிவகுக்கச் செய்து, கப்ரின் முன்னே நின்று அவருக்காக ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

தொழுகை முடிந்ததும், நபிகளார் தமது திருக்கரங்களை வானை நோக்கி உயர்த்தி, உள்ளம் உருக இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:

«اللَّهُمَّ الْقَ طَلْحَةَ تَضْحَكُ إِلَيْهِ وَيَضْحَكُ إِلَيْكَ»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யா அல்லாஹ் நீ அவரை சந்திக்கிற பொழுது அவரைப் பார்த்து நீ சிரிக்க வேண்டும், அவர் உன்னைப் பார்த்து சிரிக்க வேண்டும்."

என்ன செய்து விட்டார்கள்? வாழ்நாளில் ஒரு 15 வயசு வரைக்கும் தான் வாழ்ந்தார்கள், அந்த வாழ்க்கையில பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் மீது அவர் கொண்டிருக்கிற அன்பினாலும் நேசத்தினாலும் இவ்வளவு உச்சத்தையும் உயரத்தையும் தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொட்டார்கள். (நூல்:அத்தப்ரானீயின் அல்-முஃஜமுல் கபீர், மஜ்மஉஸ் ஸவாயித்)

பள்ளியில் படுத்து இருந்தவரை நபி எழுப்பவில்லை 

பள்ளிவாசலில் படுத்துறங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவர் பள்ளிவாசலில் படுத்திருக்கிறார், அவரை எழுப்பி விடுங்கள்" என்று கூறினார்கள்.

அப்போது அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரிடம், "அல்லாஹ்வின் தூதரே! நன்மையான காரியங்களில் எப்போதும் நீங்கள்தானே முந்துவீர்கள்? அப்படியிருக்க இந்த நன்மையை என்னைச் செய்யச் சொல்கிறீர்களே, ஏன்?" என்று வினவினார்கள்.

அதற்கு அகிலத்தின் அருட்கொடையான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"இல்லை அலீ... நீங்கள் சென்று அவரை எழுப்பும் போது, அவர் உங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டால் கூட அதில் தவறொன்றுமில்லை; அது குற்றமாகாது. ஆனால், நானே நேரடியாகச் சென்று அவரைத் தட்டி எழுப்பி, அவர் என்னைப் பார்த்த பிறகும் அலட்சியமாக மீண்டும் படுத்துவிட்டால், அவர் இறைமறுப்பாளராக (காஃபிராக) மாறிவிடுவார். என்னுடைய சொல்லையும் ஏவலையும் மறுத்தால் அவர் நிராகரித்தவராகி விடுவார் அல்லவா!" என்று குறிப்பிட்டார்கள்.

நபி (ஸல்) பாங்கு சொன்னது இல்லை காரணம்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒருமுறை கூட பாங்கு சொன்னதில்லை. பாங்கு சொல்வதனுடைய மகத்துவம் மற்றும் சிறப்புகள் எத்தகையவை என்பதை நாம் பல நபிமொழிகளில் கண்டிருக்கிறோம். பாங்கு சொல்வதிலுள்ள நன்மைகளையும் சிறப்புகளையும் நீங்கள் உண்மையாகவே அறிந்துகொண்டால், ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் பாங்கு சொல்வதற்கு உங்களிடையே பெரும் போட்டியே ஏற்படும்; குலுக்கல் முறையில் சீட்டுப் போட்டுத்தான் ஒருவரைப் பாங்கு சொல்ல வைக்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால், அதன் மகத்துவத்தை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் பன்னிரண்டு ஆண்டுகள் முஅத்தினாகப் பணிபுரிகிறாரோ, அல்லது யார் ஏழு ஆண்டுகள் இமாமாகப் பணிபுரிகிறாரோ அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகிவிட்டது." பாங்கு சொல்வது என்பது அத்தனை மகத்தான பாக்கியம் நிறைந்த ஒரு நற்செயலாகும்.

அவ்வாறு இருந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் பாங்கு சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் என்ன? மார்க்க அறிஞர்கள் தங்கள் நூல்களில் அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுகிறார்கள்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தம் திருவாயால் பாங்கு கூறி, "ஹய்ய அலஸ் ஸலா" (தொழுகையின் பக்கம் வாருங்கள்) என்று நேரடியாக அழைப்பு விடுத்த பிறகு, ஒருவர் அந்த அழைப்பை ஏற்றுப் பள்ளிக்கு வரத் தவறினால், அவர் இறைமறுப்பாளராக (காஃபிராக) ஆகிவிடும் ஆபத்து நேரிடும். ஏனெனில், இறைத்தூதரின் நேரடிக் கட்டளையை மறுப்பவர் குஃப்ரின் நிலையை அடைந்துவிடுவார்.

தம்முடைய சமுதாயத்திற்கு அத்தகையதொரு கடுமையான நெருக்கடியும் சோதனையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பேரருளின் காரணமாகவே, இவ்வளவு மகத்தான சிறப்புகள் நிறைந்திருந்த போதிலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாளில் ஒருபோதும் பாங்கு சொல்லவில்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் ஒவ்வொரு காரியத்தைச் செய்வதற்கு முன்பும், 'இது என் உம்மத்திற்குச் சுமையாகிவிடுமோ' என்று மிக ஆழமாக யோசிப்பார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணையும் இரக்கமும் அத்தகையது.

ஒருமுறை ஹஜ்ஜின் சிறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, "வசதியுள்ளவர்கள் ஹஜ் செய்யுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள். அப்போது ஒரு நபித்தோழர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்.

அதற்குப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "லவ் குல்து நஅம், லவஜபத்" (நான் 'ஆம்' என்று சொல்லிவிட்டால், ஒவ்வோர் ஆண்டும் ஹஜ் செய்வது உங்கள் மீது கடமையாகிவிடும்) என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்கள்:

"நீங்கள் இங்கே என்னுடன் இருக்கிறீர்கள், உங்களால் செய்துவிட முடியும். ஆனால், என் உம்மத்தினர் உலகெங்கும் பல்வேறு திசைகளில் வாழ்வார்கள். வசதி இருக்கும் போதெல்லாம் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுக்கு வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அது என் சமூகத்திற்குப் பெரும் சிரமமாகிவிடாதா? எனவே, வஹீ (இறைச்செய்தி) இறங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். நான் கூறிவிட்டால் அதுவே இறைக்கட்டளையாக (வஹீயாக) மாறிவிடும்; என் நாவிலிருந்து ஒரு வார்த்தை வந்துவிட்டால் அதுவே மார்க்கச் சட்டமாக (ஷரீஅத்தாக) ஆக்கப்பட்டுவிடும்" என்று எச்சரித்தார்கள்.

அதனால்தான், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையின் மகத்துவத்தையும் நபித்தோழர்கள் மிக ஆழமாக உணர்ந்திருந்தார்கள்.

பிற்காலத்தில் தாபியீன்களின் காலத்தில் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்:-

 "எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்' என்று நாங்கள் கேள்விப்பட்டால், எந்த மறுப்பும் கேள்வியும் இன்றி உடனே அதற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு அதைச் செய்து முடிப்போம். ஆனால் உங்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்' என்று கூறினால், நீங்கள் என்ன கேட்கிறீர்கள் தெரியுமா? 'இது வாஜிபா (கடமையா), சுன்னத்தா (நபிவழியா), முஸ்தஹப்பா (விரும்பத்தக்கதா), அல்லது அதபா (ஒழுக்கமுறையா)?' என்று ஆராய்ந்து தரம் பிரிக்கிறீர்கள். நாங்களோ, எங்கள் ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள் அல்லது சொல்லியிருக்கிறார்கள் என்றால் அவ்வளவுதான்; அதை அப்படியே ஏற்போம்!"


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்கள் என்றால் நாங்க செய்வோம். அதுதான் ஷரீஅத், அதுதான் சுன்னத், அதுதான் சயின்ஸ், அதுதான் ஆரோக்கியம், எங்க வாழ்க்கை எல்லாமே அதுதான்! எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தை விட வாழ்க்கையில ஒரு உயர்ந்த ஒரு வாழ்க்கை நடைமுறை உலகத்துல யாரும் செய்துவிட முடியாது.

சொல்லித் தந்ததுவிட முடியாது. நாம் அதை சுன்னத்துகளாக செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த சுன்னத்துகளில் தான் இந்த உலகத்தினுடைய சயின்ஸ் அடங்கியிருக்கிறது, ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

உளூ செய்றதுல உள்ள ஒவ்வொரு சுன்னத்தின் மூலமாக ஏற்படுகிற மிகப்பெரிய மாற்றங்கள், ஆரோக்கியங்கள் நமக்கு தெரியாது. ரஸூலுல்லாஹ் சொன்னார்கள், நாம் செய்து கொண்டு போக வேண்டியதுதான். ஆனால் அதனுடைய ஆரோக்கியம் என்ன? நாம் விளங்கி இருக்கிறோமா?

உளுவின் நன்மைகளும் மருத்துவமும்

மௌலானா துல்ஃபிகார் அஹ்மத் நக்ஷபந்தி அவர்கள் தம்முடைய நூலில் ஓர் ஆச்சரியமான நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவ வல்லுநர்களால் ஒரு மாபெரும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. "மனிதன் ஏன் மனநிலை பிறழ்கிறான்? அவனது புத்திசுவாதீனம் ஏன் பாதிக்கப்பட்டு அவன் பைத்தியமாகிறான்?" என்பதுதான் அந்த ஆய்வின் முக்கியக் களம். உலகிலேயே மனநல மருத்துவமனைகள் அதிகமாக உள்ள இடங்களில் ஒன்று நியூயார்க். கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்து, உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் பலர் பல ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக் குழுவின் தலைமை மருத்துவர் ஒருவர், ஒருமுறை அமெரிக்காவிலுள்ள ஒரு பள்ளிவாசலைக் கடந்து சென்றார். அப்போது அங்கே ஒரு முஸ்லிம் உளூ (அங்கசுத்தி) செய்துகொண்டிருந்த விசித்திரமான காட்சியை அவர் கண்டார். மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட நேரம் அதை உற்று கவனித்துக் கொண்டிருந்த அந்த மருத்துவர், அவர் உளூ செய்து முடித்ததும் அவரிடம் சென்று, "நீங்கள் இப்போது என்ன செய்தீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அந்த முஸ்லிம், "நாங்கள் தொழுகைக்காக உளூ செய்தோம்" என்றார்.

"இதை ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்வீர்கள்?" என்று மருத்துவர் கேட்க, "ஐந்து வேளைத் தொழுகைக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை செய்வோம்" என்று பதிலளித்தார்.

"இதை உங்களுக்கு யார் கற்றுக்கொடுத்தது?"

"எங்கள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்."

"இதன் மருத்துவப் பயன்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று மருத்துவர் வினவினார்.

அதற்கு அந்த முஸ்லிம், "அதன் மருத்துவ நுணுக்கங்கள் எங்களுக்குத் தெரியாது. எனினும், இதில் ஏதேனும் நன்மைகளும் பயன்களும் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அதன் பயன்களை ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை; எங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், நாங்கள் உடனே செய்கிறோம், அவ்வளவுதான்!" என்றார்.

அப்போது அந்த மருத்துவர் வியப்புடன், "நீங்கள் உளூ செய்துகொண்டிருந்தபோது ஓர் அற்புதமான காட்சியை நான் கவனித்தேன். முகத்தைக் கழுவினீர்கள், கைகளைக் கழுவினீர்கள், தலைக்கு மஸஹ் செய்தீர்கள்... இதெல்லாம் வெளிப்படையாக உள்ள இடங்கள், புழுதி படியும் இடங்கள் என்பதால் கழுவுவது இயல்பு. ஆனால், இறுதியாகத் தண்ணீரைத் தொட்டு உங்களது பிடரிப் பகுதிக்கு (கழுத்தின் பின்புறம்) மஸஹ் செய்தீர்களே, அது எதற்காக என்று உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டார்.

அந்த முஸ்லிம், "இல்லை, எனக்குத் தெரியாது" என்றார்.

உடனே அந்த மருத்துவர் விளக்கத் தொடங்கினார்:

"மனநலம் பாதிக்கப்படுவதற்கான மூலக்காரணம் என்னவென்று உலகப் பெரும் மருத்துவர்கள் எல்லாம் கூடிப் பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டோம். நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு நாங்கள் ஒரு முக்கிய முடிவுக்கு வந்திருக்கிறோம்.

மனித உடலிலிருந்து மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில், மிக முக்கியமான ஒரு நரம்பு பிடரிப் பகுதியின் வழியாகத்தான் மூளைக்குச் செல்கிறது. பொதுவாக இந்தப் பிடரிப் பகுதியில் இயல்பாகவே ஒருவித வறட்சித் தன்மை ஏற்படுகிறது. அவ்வாறு பிடரிப் பகுதி வறண்டு காய்ந்துபோகும் போது, உள்ளிருக்கும் நரம்பு மண்டலமும் வறட்சியடைந்து, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது.

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது, மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு அறுபட்டு மனிதன் மனநிலை பாதிக்கப்படுகிறான். அதனால்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தலையின் பின்பகுதியிலும் பிடரியிலும் கை வைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த நரம்பில் ஏற்படும் பாதிப்பே இதற்கு முக்கியக் காரணம்.

பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இதற்கு ஒரு தீர்வையும் நாங்கள் கண்டுபிடித்தோம். அதாவது, அந்த இடத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது பிடரிப் பகுதியைத் நீரால் நனைத்து ஈரப்படுத்த வேண்டும் என்பதுதான் அது.

நாங்கள் பல கோடி ரூபாய்களைச் செலவழித்து, உலகத்து அறிஞர்களையெல்லாம் கொண்டு ஆய்வு செய்து இந்தத் தீர்வைக் கண்டுபிடித்தோம். ஆனால், நீங்கள் சர்வ சாதாரணமாக உளூ செய்யும்போதே இந்தப் பிடரியை ஈரப்படுத்தி விடுகிறீர்கள்! இதை உங்கள் நபி எப்போதோ கற்றுக்கொடுத்து விட்டார்களா!" என்று வியந்து பாராட்டினார்.

அப்போதுதான் அந்த முஸ்லிமிற்கு, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் இந்த உம்மத்திற்கு எவ்வளவு பெரிய அறிவியல் பொக்கிஷம் என்பது புரிந்தது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகள் ஒவ்வொன்றிலும் இப்படி ஆயிரமாயிரம் வாழ்க்கை ரகசியங்களும் நன்மைகளும் பொதிந்துள்ளன. நபித்தோழர்கள் சொல்வார்கள்: "எங்கள் நபி ஒரு காரியத்தைச் செய்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் வலுவான காரணம் இருக்கும். நாங்கள் அதன் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டோம்; மாறாக உடனே கட்டுப்பட்டுச் செயல்படுத்துவோம்."

ஸஹாபாக்களுக்கும் நமக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இதுவே. நபிகளாரின் சுன்னத்தை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் அப்படியே தழுவிக் கொண்டார்கள். எத்தனையோ புதிய நாகரிகங்களை அவர்கள் எதிர்கொண்டார்கள்; கடுமையான சூழ்நிலைகளையும் நிர்ப்பந்தங்களையும் சந்தித்தார்கள். எத்தனையோ விஷயங்களில் சமரசம் செய்துகொண்ட போதிலும், நபிகளாரின் சுன்னத் என்று வந்துவிட்டால் அவர்கள் அணுவளவும் சமரசம் செய்ததே இல்லை.

அவர்கள் நபிகளாரின் சுன்னத்துக்களை உயிராக மதித்து வாழ்ந்தவரை, உலகத்தார் மத்தியில் இந்த உம்மத் பெரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்தது. ஆனால், எப்போது இந்த சமுதாயம் சுன்னத்துகளுக்கான மதிப்பைக் குறைத்து, நபிகளாரின் வாழ்க்கை நெறியை ஒதுக்கிவிட்டு வேறு நாகரிகங்களை நாடத் தொடங்கியதோ, அன்றே மற்றவர்களின் பார்வையில் இந்த சமுதாயத்தின் கண்ணியம் குன்றி, அது கேலிக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

வழக்கமான அங்கசுத்தம் (உளூ): தொழுகைக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை முகம், கைகள், வாய், மூக்கு மற்றும் பாதங்களைக் கழுவுதல் நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழையும் முக்கிய துவாரங்களைத் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது.

கைகளைச் சுத்தப்படுத்துதல்: "உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தால், தம் கையை மூன்று முறை கழுவும் வரை பாத்திரத்தில் நுழைக்க வேண்டாம்; ஏனெனில், அவரது கை இரவில் எங்கே இருந்தது என்பதை அவர் அறிய மாட்டார்" (ஸஹீஹ் புகாரி). நவீன 'கை கழுவும் விழிப்புணர்வு' (Hand Hygiene Guidelines) கோட்பாடுகளுக்கு இது ஆரம்பப்புள்ளியாகும்.

பல் மற்றும் வாய் சுகாதாரம் (மிஸ்வாக்): "என் சமுதாயத்தினருக்கு சிரமமாகிவிடும் என்ற அச்சம் இல்லையெனில், ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் (பல் துலக்குவதை) செய்வதைக் கடமையாக்கியிருப்பேன்" (ஸஹீஹ் புகாரி). பற்களில் காரை (Dental Plaque) சேராமல் தடுப்பதன் மூலம் ஈறு நோய்கள் மற்றும் இதய இரத்த நாளத் தொற்றுகள் (Cardiovascular Risk via Oral Bacteria) தடுக்கப்படுவது நவீன மருத்துவத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய் பரவல் மேலாண்மை 

உலக சுகாதார அமைப்பு (WHO) பெருந்தொற்றுக் காலங்களில் வகுக்கும் கட்டுப்பாடுகள் நபிவழியில் மிகத் தெளிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் (Quarantine): கொள்ளைநோய் பரவிய பகுதிக்குச் செல்லாமல் இருப்பதும், அந்தப் பகுதியில் இருப்பவர்கள் வெளியேறாமல் இருப்பதும் சமூகப் பரவலைத் (Community Spread) தடுக்கும் சர்வதேச நெறிமுறையாகும்.

தும்மல் மற்றும் இருமல் ஒழுங்கு: நபி (ஸல்) அவர்கள் தும்மும் போது தங்கள் முகத்தைத் துணியாலோ அல்லது கைகளாலோ மூடிக்கொள்வார்கள்; சத்தத்தையும் குறைத்துக் கொள்வார்கள் (அபூதாவூத், திர்மிதீ). இது துளிவழித் தொற்றுகளை (Respiratory Droplets) காற்றில் பரவாமல் தடுக்கும் 'Cough Etiquette' ஆகும்.

பாத்திரங்களைப் பாதுகாத்தல்: "பாத்திரங்களை மூடி வையுங்கள்; தோல் பைகளின் வாய்களைக் கட்டி வையுங்கள். ஏனெனில் ஆண்டில் ஓர் இரவில் கொள்ளைநோய் இறங்குகிறது; மூடப்படாத பாத்திரத்தைக் கடக்கும்போது அதில் அந்த நோய் இறங்காமல் இருப்பதில்லை" (ஸஹீஹ் முஸ்லிம்). உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்க்கிருமிகளைத் தடுக்க இது நேரடி எச்சரிக்கை.

 மெட்டபாலிக் கோளாறுகளும் உணவுக் கட்டுப்பாடும் 

நீரிழிவு, இரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு (Fatty Liver) போன்ற வாழ்க்கைமுறை நோய்களுக்குத் தவறான உணவுப் பழக்கமே மூலகாரணம்.

வயிற்றின் அளவீடு (Portion Control): உணவுக்கு மூன்றில் ஒரு பங்கு, நீருக்கு ஒரு பங்கு, மூச்சுக்கு ஒரு பங்கு என வயிற்றைப் பிரிக்கும் நபிவழி, அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைத் (Caloric Restriction) தடுத்து உடல்பருமன் ஏற்படாமல் காக்கிறது.

அமர்ந்து நிதானமாக அருந்துதல்: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதைத் தடுத்தல், மூன்று மூச்சுகளில் நிதானமாக அருந்துதல், பாத்திரத்திற்குள் மூச்சு விடுவதைத் தவிர்த்தல் போன்றவை உணவுக்குழாய் மற்றும் இரைப்பையின் பாதுகாப்பிற்கும் உமிழ்நீர் மூலம் நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் உதவுகின்றன.

நோன்பு (Intermittent Fasting): வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு நோற்பதும், மாதத்தின் நடுநாட்களில் (அய்யாமுல் பீள்) நோன்பு நோற்பதும் உடலின் செல்கள் தங்களைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆட்டோபேஜி (Autophagy) செயல்முறையைத் தூண்டுகிறது.

தூக்கமும் உடலியக்க சுழற்சியும் 

மனித உடலின் ஹார்மோன் சமநிலையும் நோய் எதிர்ப்புச் சக்தியும் இயற்கையான தூக்க சுழற்சியைச் சார்ந்துள்ளன.

இரவின் ஆரம்பத்தில் உறங்குதல்: இஷா தொழுகைக்குப் பின் தேவையின்றிப் பேசிக் கொண்டிருப்பதை வெறுத்து, விரைவாக உறங்கச் செல்வதும் ஃபஜ்ருக்காக அதிகாலையில் விழிப்பதும் உடலின் உயிரியல் கடிகாரத்தை (Circadian Rhythm) சீராக வைக்கிறது.

வலதுபுறம் சாய்ந்து படுத்தல்: வலது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பது இடதுபுறம் அமைந்துள்ள இதயத்தின் மீது அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கவும், நுரையீரல் மற்றும் இரைப்பையின் செரிமானப் பாதையை இயல்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கைய்லூலா (நண்பகல் சிறு ஓய்வு): மதிய வேளையில் எடுக்கப்படும் சிறு தூக்கம் (Power Nap) இதயக் குழாய் அழுத்தத்தைக் குறைத்து, மூளையின் செயல்திறனை மீட்டெடுக்கிறது.

மனநலமும் தடுப்பு மருத்துவமும் 

உடல் நோய்களில் பெரும்பாலானவை மன அழுத்தத்தால் உருவாகும் மன உடலியக்கக் கோளாறுகளே (Psychosomatic Disorders).

கோபக் கட்டுப்பாடு: "உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்தால் அவர் நின்று கொண்டிருந்தால் உட்காரட்டும்; கோபம் தணியாவிட்டால் படுத்துக் கொள்ளட்டும்" (அபூதாவூத்). மேலும் உளூ செய்யுமாறும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டினார்கள். இது கோபத்தின் போது உடலில் பாயும் அட்ரினலின் (Adrenaline) அளவைக் குறைத்து இரத்த அழுத்த உயர்வைத் தடுக்கிறது.

திருப்தி மனப்பான்மை (கனாஅத்): உலக விவகாரங்களில் தமக்குக் கீழ் உள்ளவர்களைப் பார்க்கச் சொல்வதன் மூலம் தேவையற்ற மன உளைச்சல், பேராசை மற்றும் பதற்றம் (Anxiety) தடுக்கப்பட்டு மன அழுத்தம் குறைகிறது.

பாரசீகம் நாகரீகம்

அக்காலத்தில் பாரசீகப் பேரரசுதான் உலகிலேயே நாகரிகத்தின் உச்சமாகத் தங்களைக் காட்டிக்கொண்டது. "கலாச்சாரம் என்றால் அது நாங்கள்தான்" என்று பெருமை பேசிக்கொண்ட வல்லரசாக அது விளங்கியது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வல்லரசின் பேரரசனுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதத்தைக் கொண்டு செல்லுமாறு ஒரு நபித்தோழரைத் தூதராக நியமித்தார்கள். பாரசீகத்தின் அரசவை மரபுப்படி, பேரரசரைச் சந்திப்பதற்கு முன்னால் தூதர்களுக்கு அரச விருந்தளிக்கப்படுவது வழக்கம்.

அந்த அரசவையில் பெரும் மந்திரிகளும் அதிகாரிகளும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து மிடுக்கோடு அமர்ந்திருந்தனர். அல்லாஹ்வின் தூதரின் தூதரோ மிக எளிமையான ஆடையோடு அங்கு அமர்ந்திருந்தார். உணவு பரிமாறப்பட்டு அனைவரும் உண்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த நபித்தோழரின் தட்டிலிருந்து ஒரு கவளம் உணவு கீழே விழுந்துவிட்டது.

அதனைக் கண்ட அந்தத் தோழர், கீழே விழுந்த உணவை உடனே எடுத்து, அதிலிருந்த தூசியைத் தட்டித் துடைத்துவிட்டு மீண்டும் தம் வாயில் வைத்து உண்டார்.

அருகில் அமர்ந்திருந்த அரச அதிகாரி ஒருவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, "உலகமே வியக்கும் நாகரிகம் கொண்ட பேரரசின் அரசவையில் அமர்ந்திருக்கிறீர்கள்! கீழே விழுந்த உணவை எடுப்பது எவ்வளவு இழிவான காரியம்? அதை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே? இத்தனை பெரிய சபையில் அமர்ந்துகொண்டு இப்படியா அநாகரிகமாக நடந்துகொள்வது?" என்று ஏளனமாகக் கேட்டார்.

அப்போது அந்த நபித்தோழர் அரசவையே அதிரும் வண்ணம் கம்பீரமாக ஒரு வார்த்தையைக் கூறினார்:

"أَأَتْرُكُ سُنَّةَ حَبِيبِي لِهَؤُلَاءِ الْحُمَقَاءِ

"இந்த முட்டாள்களுக்காக என் ஆருயிர் நபியின் சுன்னத்தை நான் விட்டுக்கொடுக்க வேண்டுமா?"

உலகமே அஞ்சி நடுங்கும் வல்லரசின் அரசவையில், அவர்களின் முகத்திற்கு நேராகவே நின்று இந்த வார்த்தையைக் கூறினார். நபிகளாரின் வழிமுறையை (சுன்னத்தை) விட்டுக்கொடுப்பதை விட உலகத்தில் இழிவு வேறு எதுவும் இல்லை என்பதை அந்த நபித்தோழர் தம் சொல்லாலும் செயலாலும் நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் இன்றோ, வெறும் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கான வேலைக்காக "தாடியை மழித்துவிட்டு வா" என்றால், தன் தாடியை இழக்க இந்தச் சமுதாயம் தயங்காமல் துணிகிறது. அற்ப உலக ஆதாயங்களுக்காக நபிகளாரின் எந்தவொரு சுன்னத்தையும் தூக்கி எறியத் துணியும் நிலையில் இன்றைய முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் நபித்தோழர்களின் உறுதிப்பாடோ விண்ணளவுக்கு உயர்ந்து நின்றது.

நபித்தோழர்கள் தங்கள் வரலாற்றிலேயே ஒரேயொரு முறை நபிகளாரின் கட்டளையை (சுன்னத்தை) மீற நேரிட்டது. அது உஹதுப் போர்க்களத்தில் நடந்தது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலை உச்சியில் நிறுத்திய 50 வில்லாளிகளில், போர் முடிந்துவிட்டது என்ற தவறான கணிப்பில் சுமார் 35-க்கும் மேற்பட்ட தோழர்கள் மலையிலிருந்து கீழே இறங்கினார்கள். அந்த ஒரு தவறின் விளைவு என்ன தெரியுமா?

போர்க்களத்தில் எழுபது நபித்தோழர்கள் வீரமரணம் (ஷஹீத்) அடைந்தார்கள். நபிகளாரின் அன்பு மாமா ஹம்ஸா (ரலி) அவர்களின் திருவுடல் சின்னாபின்னமாக்கப்பட்டு, அங்கங்கள் துண்டாடப்பட்டன. பெருமானார் (ஸல்) அவர்களின் திருமுகத்தில் காயம் ஏற்பட்டு, பற்கள் உடைக்கப்பட்டு, கன்னத்தில் இரும்பு வளையங்கள் குத்தி இரத்த வெள்ளத்தில் மூழ்கினார்கள். எஞ்சிய நூற்றுக்கணக்கான தோழர்கள் பலத்த காயமடைந்து எழுந்து நிற்கவே நீண்ட காலம் தேவைப்பட்டது.

அப்போது வேதனையுடன் நபித்தோழர்கள், "குல்தும் அன்னா ஹாதா?" ("அல்லாஹ்வின் தூதரே நம்மோடு இருக்கும்போது இந்தத் துன்பம் எங்கிருந்து நமக்கு வந்தது?") என்று கேட்டார்கள்.

அதற்குத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு பதிலளித்தான்:

"வஅஸைதும் மின் பஃதி மா அராக்கும் மா துஹிப்பூன்..."

(நீங்கள் விரும்பிய (வெற்றியான)தை அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் மாறுசெய்தீர்கள்...) (ஸூரா ஆலு இம்ரான்: 152)

மேலும், "குல் ஹுவ மின் இந்தி அன்ஃபுஸிகும்" — "இது உங்கள் சொந்தத் தவறுகளால் வந்ததே என்று நபியே கூறுங்கள்!" (ஆலு இம்ரான்: 165) என்று அல்லாஹ் சுட்டிக்காட்டினான்.

நபிகளாரின் கட்டளையையும் சுன்னத்தையும் விட்டுவிட்டால் தோல்வியும் சோதனையும்தான் மிஞ்சும் என்பதை உஹதுப் போர்க்களம் காலத்திற்கும் ஒரு பாடமாக உணர்த்தியது.

இந்த உம்மத்திற்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் அருட்கொடை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் ஆகும். ஸஹாபாக்கள் எந்தவொரு நிர்ப்பந்தத்திலும் அந்த சுன்னத்தை விட்டுக் கொடுக்கவில்லை; காரணம், வெற்றியின் ரகசியம் அந்த சுன்னத்தில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் ஆழமாக உணர்ந்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றை வழிகாட்டிவிட்டால், "இது எனக்குப் பிடித்திருக்கிறதா அல்லது பிடிக்கவில்லையா?" என்ற கேள்விக்கே இடமில்லை. என் விருப்பம் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் அல்லாஹ்வின் தூதரின் விருப்பம் வேறொன்றாக இருந்தால், என்னுடைய சொந்த விருப்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நபிகளாரின் சொல்லுக்கு அடிபணிவதில்தான் உண்மையான வெற்றியும் நிம்மதியும் ஆரம்பமாகிறது. நபித்தோழர்களின் வாழ்வு இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.


சிறந்த வாழ்க்கை துணை

ஒருமுறை ஃபாத்திமா பின்த் கைஸ் ரலியல்லாஹு அன்ஹா என்ற நபித்தோழி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ஆலோசனை (மஷூரா) கேட்டார்கள்:

"அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டு நபித்தோழர்கள் என்னை மணமுடிக்க விரும்பிப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். ஒருவர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு மற்றொருவர் அபுல் ஜஹ்ம் ரலியல்லாஹு அன்ஹு. இவ்விருவரில் நான் யாருக்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும்?" என்று வினவினார்கள்.

திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது அனுபவமிக்க பெரியோர்களிடமும், அறிஞர்களிடமும் ஆலோசனை பெறுவது (மஷூரா செய்வது) இல்லறத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான அடிப்படையாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் எதையும் மஷூரா செய்யாமல் முடிவெடுத்ததில்லை.

ஃபாத்திமா பின்த் கைஸ் ரலியல்லாஹு அன்ஹா கேட்ட கேள்விக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடுநிலையோடு ஆலோசனை வழங்கினார்கள்:

"ஃபாத்திமா! நீ குறிப்பிட்ட அவ்விருவரைப் பற்றியும் நான் சொல்கிறேன்; அதன்பின் நீயே முடிவெடுத்துக்கொள். முதலில் நீ சொன்ன முஆவியா, அவர் வசதியில்லாத ஏழை; கையில் ஒன்றுமில்லாதவர் (குடும்பத்திற்குச் செலவழிப்பதில் சிரமப்படலாம்). அடுத்ததாக அபுல் ஜஹ்ம், அவர் பெண்களைக் கடினமாக நடத்தக்கூடியவர், கோபக்காரர்; தோளிலிருந்து தன் கைத்தடியை இறக்கி வைக்காதவர் (அடிக்கக்கூடிய சுபாவம் கொண்டவர்). எனவே இவ்விருவரும் உனக்கு ஏற்ற பொருத்தமாக இருக்க மாட்டார்கள்."

பொதுவாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருடைய குறைகளை மற்றவர்களிடம் பேசுபவர்கள் அல்ல; அடுத்தவர்களின் மானத்தையும் கண்ணியத்தையும் உயிராகப் பேணியவர்கள். ஆனால், திருமணப் பொருத்தம் (நிக்காஹ்) போன்ற வாழ்வின் அதிமுக்கியமான விஷயங்களில் உண்மை நிலையை வெளிப்படையாக எடுத்துரைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட நெறியாகும்.

அப்போது அந்தப் பெண்மணி வியப்புடன் நிற்கவே, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நான் உனக்கு ஒருவரைப் பரிந்துரைக்கட்டுமா? நீ உஸாமா பின் ஸைதை ரலியல்லாஹு அன்ஹு திருமணம் செய்துகொள்!" என்று கூறினார்கள்.

வெளிப்பார்வைக்கு அந்தப் பெண்மணிக்குப் பெருத்த தயக்கம் ஏற்பட்டது. ஏனெனில் ஃபாத்திமா பின்த் கைஸ் ரலியல்லாஹு அன்ஹா குறைஷி குலத்தின் உயர்குடியில் பிறந்த, பெரும் வசதி படைத்த பெண். ஆனால் உஸாமா பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ விடுதலை செய்யப்பட்ட அடிமையின் மகன் (கறுப்பு நிறமுடைய எளிய நபித்தோழர்). சமூக அந்தஸ்தின் பார்வையில் இருவருக்கும் எந்தப் பொருத்தமும் இல்லாதது போலத் தோன்றியது.

எனினும், ஃபாத்திமா பின்த் கைஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் யோசித்தார்கள்:

"என் அறிவுக்கு இது முரணாகத் தோன்றினாலும், எனக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பதை விட, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டுகிறார்கள் என்றால் அதில் நிச்சயமாக ஏதோவொரு மகத்தான நன்மை இருக்கும்!" என்று எண்ணி, தன் சொந்த விருப்பத்தைத் தூக்கியெறிந்துவிட்டு நபிகளாரின் கட்டளைக்குப் பணிந்து உஸாமா பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் திருமணம் செய்யச் சம்மதித்தார்கள்.

பிற்காலத்தில் அந்த அம்மையார் தம் இல்லற வாழ்வைப் பற்றிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நான் உஸாமாவை மணந்தேன். பின்னர் அல்லாஹ் எங்கள் வாழ்வில் அத்தனை பரக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொட்டினான். மதீனா நகரமே எங்களைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு எங்கள் தாம்பத்திய வாழ்க்கை அவ்வளவு அன்பும் நிம்மதியும் நிறைந்ததாக மாறியது!"

நபித்தோழர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இதைச் செய்' என்று சொல்லிவிட்டால், உலகத்தின் கண்ணோட்டமோ, சொந்தக் குடும்பத்துப் பெருமையோ, தங்களுடைய தனிப்பட்ட விருப்பமோ எதையுமே அவர்கள் பொருட்படுத்துவதில்லை; நபியின் சொல்லே அவர்களுக்கு முடிவானதாக இருந்தது.

ஈயைப்பற்றி இஸ்லாம் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவரின் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால், அதை அவர் முழுமையாக முக்கிப் பின் எடுத்து எறிந்துவிடட்டும். ஏனெனில், அதன் ஓர் இறக்கையில் நோயும், மற்றோர் இறக்கையில் அதற்கான நிவாரணமும் (மருந்தும்) இருக்கிறது."நூல்:ஸஹீஹ் புகாரி:


நவீன விஞ்ஞானம்: ஈக்கள் தங்களின் வெளிப்புற உடலில் கிருமிகளைச் சுமந்து திரிகின்றன என்பது ஆரம்பகால மருத்துவ அறிவியலின் வாதம். ஆனால், ஆஸ்திரேலியாவின் மாக்குவாரி பல்கலைக்கழகம் (Macquarie University) உள்ளிட்ட பல நவீன ஆய்வகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், ஈக்களின் இறக்கைகள் மற்றும் உடலின் மேற்பரப்பில் சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பொருட்கள் (Antimicrobial Peptides) மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய வைரஸ்கள் (Bacteriophages) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஈ திரவத்தில் விழும்போது தன் தற்காப்பிற்காக இந்த எதிர்பொருட்களை வெளிப்படுத்துகிறது; இது நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது.


மனித மூட்டுகளின் துல்லியமான எண்ணிக்கை (Anatomy of Human Joints)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"மனித உடலில் முன்னூற்று அறுபது (360) மூட்டுகள் (கீல்கள்) படைக்கப்பட்டுள்ளன. ஆகவே, எவர் அந்த மூட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இறைவனைத் துதித்து, நன்மைகளைச் செய்கிறாரோ அவர் அன்றைய தினம் நரகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார்."நூல்:(ஸஹீஹ் முஸ்லிம்: 

நவீன விஞ்ஞானம்: எக்ஸ்-ரே அல்லது உடற்கூறியல் (Anatomy) தொழில்நுட்பங்கள் இல்லாத 7-ஆம் நூற்றாண்டில் ஒரு மனித உடலின் எலும்புகளையோ மூட்டுகளையோ துல்லியமாக எண்ணுவது இயலாத காரியம். நவீன உடற்கூறியல் ஆய்வுகளின்படி, ஒரு மனிதனின் எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு, விலா எலும்புகள், தண்டுவடம், மூட்டுகள் ஆகியவற்றை முழுமையாக வகைப்படுத்தும்போது உடலில் உள்ள அசையும் மற்றும் அசையா மூட்டுகளின் மொத்த எண்ணிக்கை மிகச் சரியாக 360 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கருவின் பாலின மற்றும் உறுப்பு வளர்ச்சி - 42-வது நாள் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்:

"இந்திரியத் துளி (கருப்பையில் நிலைபெற்று) நாற்பத்திரண்டு (42) இரவுகள் கழிந்ததும், அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் அதற்கு உருவம் கொடுத்து, அதன் செவிப்புலன், பார்வைப் புலன், தோல், சதை, எலும்புகள் ஆகியவற்றை உருவாக்குகிறார்..."நூல்:ஸஹீஹ் முஸ்லிம்: 


நவீன விஞ்ஞானம்: நவீன கருவியல் (Embryology) அறிவியலின் முன்னோடியான பேராசிரியர் கீத் மூர் (Prof. Keith L. Moore - The Developing Human நூலின் ஆசிரியர்) உள்ளிட்ட ஆய்வாளர்கள், கருவின் 6-வது வாரம் (அதாவது 42 நாட்களுக்குப் பின்) வரை மனிதக் கருவுக்குத் தனித்துவமான மனித முக அடையாளமோ, பாலின உறுப்புகளோ தெளிவாக இருப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். சரியாக 42 நாட்களுக்குப் பிறகே (6-வது வாரத்தின் முடிவில்) எலும்புக்கூடு உருவாகத் தொடங்குவதும், காது, கண், தோல் மற்றும் பாலின வேறுபாடுகள் அமைப்பதற்கான செல்கள் முழு வீச்சில் திரள்வதும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


அரபு தேசத்தின் பசுமை மாற்றம் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"அரபு தேசம் மீண்டும் புல்வெளிகளாகவும், நதிகள் பாயும் சோலைகளாகவும் மாறாத வரை மறுமை நாள் ஏற்படாது."நூல்:ஸஹீஹ் முஸ்லிம்

நவீன விஞ்ஞானம்:

இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மாறாத வரை" என்று கூறாமல் "மீண்டும் மாறாத வரை" (تَعُودَ) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

புவியியல் உண்மை: நவீன புவியியல் (Geology) மற்றும் புதைபடிவ ஆய்வுகளின்படி (Paleoclimatology), பனியுகக் காலங்களில் (Ice Age) தற்போதைய சகாரா மற்றும் அரேபிய பாலைவனங்கள் அடர்ந்த காடுகளாகவும் ஆறுகள் ஓடும் வளமான நிலமாகவும் இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


வருங்கால மாற்றம்: பூமிப்பந்தின் தட்பவெப்பநிலை சுழற்சி மற்றும் பருவமழைப் பாதைகளின் நகர்வு காரணமாக, தற்காலத்தில் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடாப் பாலைவனங்களில் வரலாறு காணாத மழையும் பசுமைப் பரவலும் ஏற்பட்டு வருவதை செயற்கைக்கோள் படங்களும் தட்பவெப்ப அறிவியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.


தூங்கும் போது முடிச்சுப் போடுதல் - ஆழ்நிலை தூக்கமும் சோம்பலும் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் உறங்கும்போது அவரது தலையின் பின்பகுதியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான்... அவர் விழித்து இறைவனை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது; உளூச் செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்கிறது; தொழுதால் மூன்றாவது முடிச்சு அவிழ்கிறது. அவர் சுறுசுறுப்புடனும் நல்ல மனநிலையுடனும் காலையை அடைவார். இல்லையெனில், மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் விடியலை அடைவார்."நூல்:ஸஹீஹ் புகாரி: 


நவீன விஞ்ஞானம்: தூக்கத்திலிருந்து எழும்போது ஏற்படும் மந்தநிலையை நவீன நரம்பியல் 'Sleep Inertia' என்று அழைக்கிறது. மூளையின் ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் (Prefrontal cortex) விழிப்படைய சில நிமிடங்கள் பிடிக்கும்.

விழித்து நினைவுகூர்தல் (Cognitive Alertness): மூளையின் நரம்பு சமிக்ஞைகளை உடனே தூண்டுகிறது.


உளூ (Cold Water Stimulation): முகத்திலும் நரம்பு முனைகளிலும் குளிர்ந்த நீர் படும்போது இரத்த ஓட்டம் அதிகரித்து வேகஸ் நரம்பு (Vagus nerve) வழியாக உடல் விழிப்புணர்ச்சி பெறுகிறது.


தொழுகை (Physical Kinetic Movement): தசைகளை இயக்கி எண்டார்பின் மற்றும் டோபமைன் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து அன்றைய நாளுக்கான புத்துணர்ச்சியை அளிக்கிறது.


இதுவரை நாம் சிந்தித்த அத்தனை வரலாற்றுச் சான்றுகளும், மருத்துவ உண்மைகளும் நமக்கு உணர்த்தும் ஒரே செய்தி இதுதான்: நபிவழி என்பது ஏதோ 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான தற்காலிக வழிகாட்டல் அல்ல; அது உலகம் அழியும் நாள் வரை மனிதகுலத்திற்குத் தேவையான முழுமையான வாழ்வியல் நெறி!


இன்றைய நவீன உலகம் கோடானுகோடி ரூபாய்களைக் கொட்டி ஆராய்ச்சி செய்து, "இதைச் செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும், இதைச் செய்தால் பெருந்தொற்று பரவாது, இதைச் சாப்பிட்டால் மன அமைதி கிட்டும்" என்று இன்று எவற்றைத் தடுப்பு மருத்துவமாக முன்வைக்கிறதோ, அவற்றை அன்றே எந்தவித ஆய்வக வசதிகளும் இல்லாத பாலைவனத்தில், தன் உம்மத்தின் மீது கொண்ட பேரன்பினால் நடைமுறைப்படுத்திக் காட்டியவர்கள் நம் கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.


அவர்களின் வாழ்வியலில் ஆரோக்கியம் இருந்தது; தூய்மை இருந்தது; சமத்துவம் இருந்தது; மன அமைதிக்கான மருந்து இருந்தது. அதைவிட மேலாக, அந்த உத்தமத் தூதரின் சுன்னத்துகளைத் தங்கள் உயிரை விட மேலாக நேசித்த உன்னதத் தோழர்கள் இருந்தார்கள்.


நாமெல்லாம் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய தருணம் இது.

நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் நபிவழி இருக்கிறதா?

நமது தனிநபர் தூய்மையிலும் படுக்கையிலும் சுன்னத் இருக்கிறதா?

நவீன கலாச்சாரத்திற்கு அஞ்சி நபிகளாரின் பழக்கவழக்கங்களை நாம் ஒதுக்கி வைக்கிறோமா, அல்லது பெருமையோடு நடைமுறைப்படுத்துகிறோமா?

"பிறர் என்ன நினைப்பார்களோ" என்ற நாகரிகப் போலிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, நபிகளாரின் சிறிய சுன்னத்தானாலும் சரி, அதை நமது இல்லங்களிலும், நமது உணவிலும், நமது அன்றாடப் பழக்கங்களிலும் உயிர்ப்பிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.


அந்த வழிகாட்டலை நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டால், இவ்வுலகில் நோய்களற்ற, மன அழுத்தமற்ற ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்; 


எல்லாம் வல்ல அல்லாஹ், கண்மணி நபிகளாரின் சுன்னத்துகளை அறிந்து, அதனைத் தயக்கமின்றிப் பின்பற்றி, அவர்களின் உன்னதமான நேசத்தோடு வாழும் நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


வஆஹிரு தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக