வியாழன், 17 செப்டம்பர், 2026

இறைநேசர்களின் நெருக்கம் ஈமானுக்கு அவசியம்

 


இறைநேசர்களின் நெருக்கம் ஈமானுக்கு அவசியம் 


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ اما بعد… بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ


أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ۝ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ»


ரபீஉல் ஆகிர் மாதம் என்றதுமே உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் நினைவுக்கு வருவது 'சுல்தானுல் அவ்லியா' முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் தியாகமும் ஆன்மீக வழிகாட்டலும்தான்.


அவர்கள் இஸ்லாமிய மார்க்க நெறிகள் மங்கிப்போயிருந்த காலகட்டத்தில், தங்களின் ஆழமான மார்க்கக் கல்வி மற்றும் ஆன்மீகப் போதனைகள் மூலம் தீனுக்குப் புத்துயிர் அளித்த காரணத்தாலேயே 'முஹ்யித்தீன்' (மார்க்கத்திற்கு உயிரளித்தவர்) என்று அழைக்கப்பட்டார்கள்.


ஷரீஅத் நெறிகளை அணுவளவும் பிசகாமல் பின்பற்றுவதே உண்மையான தஸவ்வுஃப் (ஆன்மீகம்) என்பதைத் தங்களின் சொல், செயல் இரண்டின் மூலமும் உலகிற்கு நிலைநாட்டினார்கள்.


உலக ஆசைகளைத் துறந்து, உள்ளத் தூய்மையோடும், எளிய மனிதர்களுக்கு உணவளித்து ஆதரிக்கும் பெரும் தயாள குணத்தோடும் வாழ்ந்து காட்டினார்கள்.


இத்தகைய இறைநேசரின் நினைவு மாதமான இந்நாட்களில், அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து, அதிலுள்ள படிப்பினைகளை நம் வாழ்வில் செயல்படுத்துவதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.


இறைநேசர்கள் என்பவர்கள் தங்கள் உள்ளத்தையும் செயல்களையும் முற்றிலும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தவர்கள்.


அவர்களது உள்ளங்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு எதன் மீதும் அச்சமோ, உலகப் பொருட்கள் மீதான கவலையோ இருப்பதில்லை.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தை அடிபிறழாமல் பின்பற்றுவதே அவர்களின் தலையாய அடையாளம்.


அவர்களைக் காணும்போதெல்லாம் மனிதர்களுக்கு அல்லாஹ்வின் நினைவும் மறுமையின் சிந்தனையும் மேலோங்கும்.


அல்லாஹ்வை நேசிப்பதும், அவனது அடியார்களை நல்வழிப்படுத்துவதும் அவர்களின் வாழ்நாள் பணியாக இருக்கும்.


இத்தகைய நல்லடியார்களின் சேர்க்கையும் நட்பும் ஒரு முஃமினின் ஈமானைப் பலப்படுத்தி, பாவங்களிலிருந்து பாதுகாக்கும்.


முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலி 


கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த உலகத்தில் அவதரித்த காலத்தில் ஆயிரக்கணக்கான அரபுக் கல்லூரிகள் இயங்கின; உலக ஆட்சியில் மூன்று பேரரசுகளை முஸ்லிம்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள்; மிக உயர்தரமான செல்வந்தர்கள் இஸ்லாத்தில் திகழ்ந்தார்கள்; உலகத்தையே தம் பேச்சால் உலுக்கிய 'ஷைகுல் வாயிழீன்' அல்லாமா இப்னுல் ஜவ்ஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்ற மேதைகளும் வாழ்ந்தார்கள்.


இத்தகைய எண்ணற்ற வளங்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் தோன்றிய வள்ளல் பெருமகனார் கௌஸுல் அஃலம் அவர்கள்,, சடங்கு சம்பிரதாயங்களாக மாறிவிட்ட வணக்க வழிபாடுகளிலிருந்து அச்சமூகத்தை மீட்டெடுத்து, உயிரோட்டம் நிறைந்த உண்மை வழிபாடாக மாற்றுவதற்காகவே தம் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தார்கள்.


எந்தவிதத் தயவுதாட்சண்யமும் இன்றி அநீதிகளை எதிர்த்து நின்றார்கள். இறைவழியில் உண்மையை உரக்கக் கூறுகின்றபோது,

 "وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ

(அவர்கள் அல்லாஹ்வின் வழியில் பழிப்பவரின் பழிப்புரைக்கு அஞ்ச மாட்டார்கள்)

அல்குர்ஆன் (சூரா அல்-மாயிதா: 54)" — பழிப்பவர்களின் பழிப்பிற்கு அஞ்சாமல், ஆட்சியாளர்கள், அறிஞர்கள், பாமரர்கள் என்று யாரிடத்திலும் வேறுபாடு காட்டாமல், "அனைவரும் வாருங்கள்! இறை தர்பாரில் ஒன்றாக நிற்போம்!" என்ற உன்னதமான குரலோடு சமூகத்தில் களம் கண்டார்கள்.


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த உயிரோட்டம் நிறைந்த மார்க்கத்தைத் தந்தார்களோ, அந்த மார்க்கத்தைத் தம்மில் உயிர்ப்பித்துச் சமூகத்தில் மலரச் செய்த காரணத்தினால், 'முஹ்யித்தீன்' (மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என்ற சிறப்புப் பெயருடன், ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் இந்நிகழ்விலும் அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.

அவர்கள் அவ்வாறு நினைவு கூரப்படுவதன் காரணம் என்னவெனில், சடங்காக இருந்த வாழ்க்கை முறை மாற்றப்பட்டு, 'தவ்ஹீத்' எனும் ஏகத்துவ சிந்தனை மக்களின் இதயங்களில் ஆழமாக விதைக்கப்பட்டது. "அல்லாஹ் ஒருவனே; அவனே நமக்கான எல்லாமும் ஆவான்" என்ற சிந்தனையை வெறுமனே நாவால் சொல்வதோடு நின்றுவிடாமல், தம்முடைய நடைமுறை வாழ்க்கையிலும் அனுபவித்து வாழ்ந்து காட்டிய ஒரு மாபெரும் சமூகத்தை அவர்கள் உருவாக்கினார்கள்.


நம்பிக்கையே வாழ்வின் அஸ்திவாரம்:

நம்பிக்கைதான் வாழ்க்கையின் அஸ்திவாரமாகும். அந்த நம்பிக்கையை இறைவன் மீது நாம் வைக்கும்போது, நமக்கு ஓர் அலாதியான மகிழ்ச்சி உண்டாகிறது.


இதனைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்:

சுமார் 60 வயதுடைய ஒரு முதியவர் இருந்தார். அவர் தம் 15 வயதிலிருந்தே ஒரே சலூனுக்குச் சென்று சவரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் தம் தாடியைச் சரிசெய்வார். அவர் 15 வயதிலிருந்து 60 வயது வரை ஒரே கடை, ஒரே நபர்தான். கடைக்குள் நுழைந்தவுடனேயே நாற்காலியில் அமர்ந்துவிடுவார்; கடைக்காரர் மின்விசிறியை இயக்கியதும் இவர் தூங்கத் தொடங்கிவிடுவார். வேலை முடிந்ததும் முகத்தில் நீரைத் தெளித்து, "வேலை முடிந்துவிட்டது" என்று கூறுவார்; இவரும் பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்வார்.


ஆனால் ஒரு வாரம் கடைக்குச் சென்றபோது, கடை பூட்டப்பட்டிருந்தது. எனவே, வேறு வழியின்றி பக்கத்துக் கடைக்குச் சென்றார். கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நலக் குறைவால் தூக்கமும் இல்லை. வழக்கமாக அந்த நாற்காலியில் அமர்ந்தால் தூங்கிவிடும் பழக்கமுடையவர்தான்; ஆனால் அன்று புதிய கடை. அங்கு சென்று அமர்ந்ததும், கடைக்காரர் விவரங்களைக் கேட்டுவிட்டு வேலை செய்யத் தொடங்கினார். வழக்கமாக உறங்கும் இவர், அன்று கடைக்காரர் கத்தியை எடுத்தவுடன் துளியும் தூங்கவில்லை. அவருக்குத் தூக்கமே வரவில்லை; ஏனெனில் புதிய இடம், புதிய மனிதர். "எவ்வாறு செய்வாரோ, ஏதேனும் தவறாகி விடுமோ?" என்ற அச்சமும், அவர் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படாமையுமே இதற்குக் காரணம். தூங்க வேண்டிய கட்டாயம் இருந்தும் நம்பிக்கையின்மையால் அவருக்குத் தூக்கம் வரவில்லை.


இதைப்போலவே, நம் வீட்டில் நீண்ட காலமாகப் பணியாற்றுகின்ற ஒரு வாகன ஓட்டுநர் (Driver) இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மிகவும் நம்பிக்கைக்குரியவர்; அவரை நம்பி எங்கு வேண்டுமானாலும் குடும்பத்தை அனுப்பி வைக்கலாம். ஆனால் ஓர் அவசரத் தேவையின்போது அவர் வர இயலவில்லை. எனவே, வாடகைக்கு வேறு ஒரு புதிய ஓட்டுநரை அழைத்து நாம் பயணிக்கிறோம். வழக்கமாகப் பயணத்தின்போது முன் இருக்கையிலேயே அயர்ந்து தூங்கும் நாம், அன்று அந்தப் புதிய ஓட்டுநர் மீது முழுமையான நம்பிக்கை இல்லாத காரணத்தால் தூங்காமல் விழித்திருக்கிறோம்.

இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், "நம்பிக்கையே அசல்". இதயத்தில் அந்த நம்பிக்கையை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். இறை நம்பிக்கை ஆழமாக இதயத்தில் நிலைபெற்றுவிட்டால், மனிதனின் வாழ்வில் பதற்றமும் பரபரப்பும் இருக்காது; மாறாக மன அமைதி தானாகவே வந்துவிடும். 


இதனைத்தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுக்குப் போதித்தார்கள்.


سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْ لِي فِي الإِسْلاَمِ قَوْلاً لاَ أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ (وَفِي رِوَايَةٍ: غَيْرَكَ)، قَالَ «قُلْ: آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ»

ஹழ்ரத் சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்-ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தைப் பற்றி என்னிடம் ஒரு (முக்கியமான) விஷயத்தைக் கூறுங்கள்; அது குறித்து உங்களுக்குப் பின் (உங்களைத் தவிர) வேறு எவரிடமும் நான் கேட்கத் தேவையிருக்கக் கூடாது" என்று வேண்டினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

"நான் அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் (நம்பிக்கை கொண்டேன்) என்று கூறுவீராக! பின்னர் அதில் உறுதியாகவும் நிலையாகவும் இருப்பீராக!" என்று விடையளித்தார்கள். நூல்:ஸஹீஹ் முஸ்லிம்


அந்த நம்பிக்கையில் தளர்ச்சியோ, சோர்வோ அல்லது வீண் எண்ணங்களோ வந்துவிடாமல், "என் இரட்சகன் அல்லாஹ்; நான் அவனுடைய அடிமை. அடிமையான எனக்கு அவனே எஜமான்; எஜமானாகிய அவன் என்னை எவ்வாறு நடத்தினாலும் அதற்கு நான் கட்டுப்பட்டவன்" என்ற சிந்தனையை மனதிற்குள் ஓடவிட வேண்டும். இதைவிடச் சிறந்த செயல் வேறெதுவும் இல்லை; இதனைச் செய்தால் நாம் சொர்க்கம் செல்லலாம்.


ஆகவே, "அல்லாஹ்வை ஈமான் கொண்டேன்" என்று கூறி, அதில் நிலைத்தன்மையோடு (இஸ்திகாமத்) செயல்படுவதே மிகச் சிறந்த அமலாகும். எந்தச் சோதனைகள், இன்னல்கள் வந்தாலும் பிறரைக் குறை கூறாமல், அனைத்து நிலைகளிலும் "அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது" என்ற சிந்தனையை மனதிற்குள் உள்வாங்கி வைப்பதே ஈமானின் அஸ்திவாரமாகும்.

இத்தகைய உறுதிப்பாட்டைக் கொண்டுதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் உன்னதமான சமூகத்தை உருவாக்கினார்கள். அப்பணியைத் தங்களின் கைகளில் எடுத்துச் செயல்பட்டவர்களில் கௌஸுல் அஃலம் அவர்கள் முதன்மையானவர்கள். சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, ஓர் உயிரோட்டமான உம்மத்தை உருவாக்கினார்கள். அக்காலத்தில் வாழ்ந்த அவர்களின் சீடர்களில் ஒருவர் "அல்லாஹ்வே!" என்று அழைத்தாலே உடனே இறைவனின் உதவி வந்து சேரும் அளவிற்கு இறை நம்பிக்கையையும் ஆன்மீகப் பயிற்சியையும் (தர்பியத்) அவர்கள் ஊட்டினார்கள்.


எனவே, சமகால வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றிலிருந்து மீள்வதற்கு மிக முக்கியமான வழியாக அமைவது:

 * நல்லோர்களின் சஹவாசம் (நட்பும் தொடர்பும்),

 * மேன்மக்களின் வழிகாட்டுதல்,

 * அவர்களோடு கொள்ளும் ஆன்மீகப் பிணைப்பு.

இவற்றின் மூலம் நாம் அனுபவிக்கும் ஆன்ம இன்பங்கள் நம் ஈமானுக்கு உரமூட்டி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.


 இறைநேசர்கள் தொடர்பினால் விளையும் நன்மைகள்:


குகைத்தோழர்களின் நாய் பெற்ற சிறப்பு:

இமாம் குர்த்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தம் தஃப்ஸீரில், அஸ்ஹாபுல் கஹ்ஃப் (குகைத்தோழர்கள்) பற்றிய வரலாற்றைக் குறிப்பிடுகையில்..


அந்த ஏழு நல்லடியார்களுடன் ஒரு நாய் நட்பு கொண்டு உடன் சென்ற காரணத்தினால், புனித அல்குர்ஆனில் இடம்பெறும் அளவிற்கு அது உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றது. குர்ஆனில் அல்லாஹ், "வகல்புஹும் பாஸிதுன் திராஅய்ஹி பில் வஸீத்" என்று அந்த நாயைக் குறித்தும் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.நாயின் எச்சில் நம் மீது பட்டால் ஏழு முறை கழுவ வேண்டும் என்று கட்டளையிடப்பட்ட ஓர் அசுத்தமான (அய்ன் நஜீஸ்) பிராணி, அந்த நல்லோர்களின் தொடர்பினால் குகையில் அவர்களோடு 309 ஆண்டுகள் தங்கியிருந்த பெருமைக்குரியதாக மாறியது.


இறுதியாக இமாம் குர்த்துபீ அவர்கள், "நல்லோர்களோடு தொடர்பு கொண்டிருந்த ஒரு விலங்கிற்கே இத்தகைய உயர்ந்த கண்ணியத்தை அல்லாஹ் வழங்கினான் என்றால், அந்த நல்லடியார்களோடு தொடர்பில் இருக்கும் முஃமின்களான மனிதர்கள் எத்தகைய உயர் நிலையை அடைவார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்!" என்று முடிக்கிறார்கள்.


அல்லாமா இப்னுல் ஜவ்ஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தம் இறுதிக்காலத்தில் கூறினார்கள்:

   "இவ்வுலகில் உங்களுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கலாம்; ஆனால் அவர்களையெல்லாம் விடச் சிறந்த உற்ற தோழன் 'தக்வா' எனும் இறையச்சமாகும். அந்தத் தக்வாவை நீங்கள் எங்கிருந்து பெற வேண்டும்? எவருடைய இதயம் தக்வாவின் மையமாகவும் கேந்திரமாகவும் திகழ்கிறதோ, அந்த நல்லடியாரின் இதயத்திலிருந்தே நீங்கள் அதனைப் பெற வேண்டும். அல்லாஹ்வை உளமாற நேசித்து, இறைவனுக்காகவே வாழ்ந்து, அதனைத் தம் நடைமுறை வாழ்க்கையிலும் நிலைநிறுத்துகின்ற ஒரு நல்லடியாரின் இதயத்திலிருந்து தக்வாவை நீங்கள் பெற்றால், அது உங்களுக்கு இறைவனின் அன்பைப் பெற்றுத் தரும்."


 ஹதீஸ் கலைப் பேரறிஞர் இமாம் சுஃப்யானுஸ் ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:

"அபூ ஹாஷிம் அஸ்ஸூஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களோடு நான் சில காலம் தொடர்பில் இருந்தேன். அந்தத் தொடர்பில்தான் 'ரியா' (முகஸ்துதி) என்பதன் உள்ளீடுகளை நான் முழுமையாகப் புரிந்துகொண்டேன். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமல் செய்வது மட்டுமே முகஸ்துதி என நான் எண்ணியிருந்தேன். ஆனால், முகஸ்துதிக்கு உள்ளே இருக்கும் நுட்பமான 70,000 வகைகளை, அப்பெரியாரின் வழிகாட்டுதலுக்குப் பின்னரே அல்லாஹ் எனக்கு விளங்கச் செய்தான்.”


மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:-

أَرَدْتَ أَنْ تَكُونَ مَعَ اللَّهِ، فَكُنْ مَعَ أَوْلِيَاءِ اللَّهِ»

பாரசீக மூல வரிகள் (மஸ்னவியிலிருந்து):

«هر كه خواهد همنشینی با خدا

او نشيند در حضور اوليا»

(ஹர் கிஹ் ஹாஹத் ஹம்னிஷீனி பா குதா /

 ஊ நிஷீனத் தர் ஹுளூரி அவ்லியா)


"நீங்கள் அல்லாஹ்வோடு இருக்க விரும்பினால், அல்லாஹ்வோடு யார் இருக்கிறார்களோ அவர்களோடு இருங்கள்!”


أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ عَبْدًا دَعَا جِبْرِيلَ فَقَالَ: إِنِّي أُحِبُّ فُلَانًا فَأَحِبَّهُ، قَالَ: فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي السَّمَاءِ فَيَقُولُ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ القَبُولُ فِي الأَرْضِ»

(அல்லாஹ் ஒரு அடியானை நேசித்துவிட்டால், ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து: "நிச்சயமாக நான் இன்னாரை நேசிக்கிறேன்; எனவே நீரும் அவரை நேசிப்பீராக!" என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவரை நேசிப்பார்கள். பின்னர் வானத்தில், "நிச்சயமாக அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்!" என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் முழங்குவார்கள். வானத்தில் உள்ளவர்களும் அவரை நேசிப்பார்கள். பிறகு, பூமியிலுள்ள மனிதர்களின் உள்ளங்களிலும் அவருக்கு நல்ல அங்கீகாரமும் அன்பும் ஏற்படுத்தப்படுகிறது.) நூல்:ஸஹீஹ் புகாரி


ஹஜ்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்திக்க வந்த ஓர் இளைஞர், வழியில் ஓர் அந்நியப் பெண்ணை இச்சையுடன் பார்த்ததை, தம் அகப்பார்வையால் கண்டறிந்து கண்டித்தார்கள். "உங்களுக்கு இது எவ்வாறு தெரிந்தது?" என வியந்த அந்த இளைஞரிடம்,

"இது ஈமானின் ஒளி (நூருல் ஈமான்); கலிமாவின் வாழ்க்கை களத்தில் ஆடும் வெறும் வார்த்தையல்ல, அது உள்ளத்தில் மெய்யாகும்போது அல்லாஹ் அந்த ஞானப் பார்வையைத் தருகிறான்" என்று தெளிவுபடுத்தினார்கள்.

உள்ளத்தில் வஞ்சகம், பொறாமை, உலக ஆசை போன்ற அசுத்தங்களை வைத்துக்கொண்டு, பரிசுத்தமான அல்லாஹ்வின் அருள் எவ்வாறு நம் உள்ளத்தில் இறங்கும்? பிறர் எடுத்த வாந்தியை நாம் அருவருப்பாகப் பார்ப்பது போல, உள்ளத்தின் ஆன்மீக அசுத்தங்களை வெளியேற்றினால்தான் இறைவனின் அருள் பார்வை நமக்குக் கிட்டும்.


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவின் மிம்பரிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்த படைத்தளபதி சாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எச்சரிக்கை செய்ததும், பராஉ இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வேண்டியதும் உடனே நிறைவேறியது போன்றவை அனைத்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுக்கு அளித்த உள்ளத் தூய்மையின் (தஸ்கியாவின்) விளைவுகளேயாகும்.


உள்ள சுத்தம் அவசியம் 

ஹழ்ரத் அபூ உமாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஓர் இளைஞர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்!" என்று கேட்டார். அங்கிருந்த மக்கள் உடனே அவரை நோக்கித் திரும்பி, "வாயை மூடு! அமைதியாக இரு!" என்று அவரைக் கண்டித்து விரட்ட முற்பட்டனர்.

ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, "அவரை என் அருகில் வரவிடுங்கள்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் மென்மையாகக் கேட்டார்கள்: "இத்தகைய செயலை உனது தாய்க்கு நீ விரும்புவாயா?"அதற்கு அந்த இளைஞர்: "அல்லாஹ்வின் மீதாணையாக மாட்டேன்! என் உயிரை தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், நான் ஒருபோதும் அதை விரும்ப மாட்டேன்" என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அவ்வாறே மனிதர்களும் தங்கள் தாய்மார்களுக்கு அதை விரும்ப மாட்டார்கள்."

"உனது மகளுக்கு அதனை நீ விரும்புவாயா?"

"அல்லாஹ்வின் மீதாணையாக மாட்டேன்! என் உயிரை தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், விரும்ப மாட்டேன்" என்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அவ்வாறே மனிதர்களும் தங்கள் மகள்களுக்கு அதனை விரும்ப மாட்டார்கள்."

"உனது சகோதரிக்கு அதனை நீ விரும்புவாயா?"

"அல்லாஹ்வின் மீதாணையாக மாட்டேன்! என் உயிரை தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், விரும்ப மாட்டேன்" என்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அவ்வாறே மனிதர்களும் தங்கள் சகோதரிகளுக்கு அதனை விரும்ப மாட்டார்கள்."

"உனது தந்தையின் சகோதரிக்கு (அத்தைக்கு) அதனை நீ விரும்புவாயா?"

"அல்லாஹ்வின் மீதாணையாக மாட்டேன்! என் உயிரை தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், விரும்ப மாட்டேன்" என்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அவ்வாறே மனிதர்களும் தங்கள் அத்தைகளுக்கு அதனை விரும்ப மாட்டார்கள்."

"உனது தாயின் சகோதரிக்கு அதனை நீ விரும்புவாயா?"

"அல்லாஹ்வின் மீதாணையாக மாட்டேன்! என் உயிரை தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், விரும்ப மாட்டேன்" என்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அவ்வாறே மனிதர்களும் தங்கள் தாயின் சகோதரிகளுக்கு அதனை விரும்ப மாட்டார்கள்."

பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது புனிதக் கரத்தை அந்த இளைஞரின் மார்பில் வைத்து:

«اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ، وَطَهِّرْ قَلْبَهُ، وَحَصِّنْ فَرْجَهُ»

(இறைவா! இவருடைய பாவத்தை மன்னிப்பாயாக! இவருடைய உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!)

என்று துஆச் செய்தார்கள். அதன் பின்னர், அந்த இளைஞர் எந்தவொரு தவறான பக்கமும் திரும்பிப் பார்க்கவே இல்லை (அவரது உள்ளத்திலிருந்து அத்தீய இச்சை முற்றிலும் நீங்கிவிட்டது). நூல் :முஸ்னத் அஹ்மத் 


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரார்த்தனைகளின் மையப்புள்ளியாக உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதே திகழ்ந்தது.


இமாம் இப்னுல் கையிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி 

அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:


قول الإمام ابن القيم رحمه الله في مجالسة الصالحين

«لَا تَجْلِسْ إِلَّا مَعَ مَنْ يَدْعُوكَ مِنْ سِتٍّ إِلَى سِتٍّ:

مِنَ الشَّكِّ إِلَى الْيَقِينِ،

وَمِنَ الرِّيَاءِ إِلَى الْإِخْلَاصِ،

وَمِنَ الْغَفْلَةِ إِلَى الذِّكْرِ (وَالْيَقَظَةِ)،

وَمِنَ الرَّغْبَةِ فِي الدُّنْيَا إِلَى الرَّغْبَةِ فِي الْآخِرَةِ،

وَمِنَ الْكِبْرِ إِلَى التَّوَاضُعِ،

وَمِنَ الْغِلِّ (وَسُوءِ الظَّنِّ) إِلَى النَّصِيحَةِ»

நீங்கள் சாலிஹீன்களோடு (நல்லோர்களோடு) தொடர்பு கொள்ளும் போது, உங்களிடமிருக்கும் ஆறு தீய குணங்கள் வெளியேறி, அல்லாஹ் விரும்புகின்ற ஆறு நற்குணங்கள் உங்களுக்குள் குடியேறும்:


1) சந்தேகம் நீங்கி உறுதிப்பாடு (யகீன்) பிறக்கும்:

مِنَ الشَّكِّ إِلَى الْيَقِينِ:

مُجَالَسَةُ أَهْلِ الْحَقِّ وَالْمُرْشِدِينَ تُثَبِّتُ الْقَلْبَ، فَلَا تَتَزَعْزَعُ عَقِيدَةُ الْمُؤْمِنِ بِالشُّبُهَاتِ وَلَا يَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ.


தரீக்காவிலும் ஆன்மீக நெறியிலும் முழுமையான வழிகாட்டிகளோடு இருக்கும் நன்மக்களை எக்காலத்திலும் சந்தேகங்களால் வீழ்த்த முடியாது. அவர்கள் பிறரின் பழிப்புரைகளுக்கு அஞ்ச மாட்டார்கள்.


ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் மனிதனின் உள்ளத்தில் ஷைத்தான் விதவிதமான சந்தேகங்களை (வஸ்வாஸ்களை) விதைக்கிறான். மார்க்கத்தின் அடிப்படைகள், இறைவனின் வாக்குறுதிகள் மற்றும் ஆன்மீக நிலைகள் குறித்து எழும் இத்தகைய ஐயங்கள் ஒரு மனிதனை நிலைகுலையச் செய்துவிடும். ஆனால், ஒரு இறைநேசர் மற்றும் சாலிஹீன்களின் சகவாசம் (தொடர்பு) ஏற்படும்போது, அந்த சந்தேகப் புயல்கள் யாவும் விலகி உள்ளத்தில் அசைக்க முடியாத ‘யகீன்’ (ஆழமான உறுதிப்பாடு) சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.


இத்தகைய யகீன் உள்ளத்தில் குடியேறிவிட்டால், உலகம் முழுவதும் திரண்டு வந்து பழித்துப் பேசினாலும், அச்சுறுத்தினாலும் அவனது ஈமான் ஒருபோதும் தடுமாறுவதில்லை.


இமாம் அபூஹாமித் அல்-கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் 

மெய்ஞ்ஞான உறுதிப்பாடு

இஸ்லாமிய வரலாற்றில் அறிவுலகின் உச்சமாகத் திகழ்ந்தவர் ‘ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்’ இமாம் அபூஹாமித் அல்-கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள். பக்தாதின் புகழ்பெற்ற நிளாமிய்யா பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக விளங்கிய அவர்கள், தத்துவம், தர்க்கவியல், பிக்ஹ், கலாம் என அனைத்து அறிவுத் துறைகளிலும் ஈடு இணையற்ற அறிஞராகத் திகழ்ந்தார்கள்.


அறிவுக் கூர்மையும் சிந்தனையும் உச்சத்தில் இருந்தபோதிலும், ஒரு கட்டத்தில் அவர்களது உள்ளத்தில் தத்துவ ரீதியான மாபெரும் சந்தேகங்களும் தடுமாற்றங்களும் ஏற்பட்டன. புத்தக அறிவாலும், தர்க்க வாதங்களாலும் உள்ளத்திற்கு முழுமையான மன அமைதியையோ, அசைக்க முடியாத 'யகீன்' எனும் உறுதியையோ பெற முடியவில்லை என்பதை உணர்ந்தார்கள். வாக்குவாதங்களும் அறிவுசார் தர்க்கங்களும் சந்தேகங்களை அதிகப்படுத்தியதே தவிர, கல்புக்கு அமைதியைத் தரவில்லை.


இதன் விளைவாக, தனது தலைமைப் பேராசிரியர் பதவி, உலகப் புகழ், அந்தஸ்து அனைத்தையும் துறந்துவிட்டு தமஸ்கஸ் (திமிஷ்க்) மற்றும் பைத்துல் முகத்தஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நீண்ட காலம் தனிமையிலும், திக்ரிலும், தஸவ்வுஃப் எனும் மெய்ஞ்ஞானப் பாதையில் இருந்த இறைநேசர்கள் மற்றும் சாலிஹீன்களின் தொடர்பிலும் தங்களை ஆழ்த்திக்கொண்டார்கள்.


அறிவு தர்க்கங்களின் வழி கிடைக்காத அந்தப் பேரின்ப உண்மையும், அசைக்க முடியாத 'யகீன்' எனும் உறுதிப்பாடும் உள்ளத் தூய்மையின் மூலமும், இறைநேசர்களின் தொடர்பின் மூலமுமே அவர்களுக்குக் கிடைத்தது. இதனைத் தனது உலகப் புகழ்பெற்ற 'அல்-முன்கித் மினழ் ழலால்' (வழிகேட்டிலிருந்து விடுவிப்பவன்) என்ற சுயசரிதை நூலில் இமாமவர்கள் மிக அழகாகப் பதிவு செய்கிறார்கள்:

"நான் தேடிய அந்த அறுதியான உண்மை (யகீன்), வெறும் தர்க்க வாதங்களாலோ அல்லது வார்த்தைகளை அடுக்கி விவாதிப்பதாலோ எனக்குக் கிடைக்கவில்லை; மாறாக, அல்லாஹ் எனது உள்ளத்தில் வீசிய ஒரு பேரொளியின் (நூரின்) மூலமே சந்தேகங்கள் நீங்கி அந்த உறுதிப்பாடு பிறந்தது."


ஷைக் அபூ அலீ அல்-ஃபார்மதீ (ரஹ்): நைசாபூரில் வாழ்ந்த அக்காலத்தின் புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டி இவர்களிடம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஆன்மீகப் பயிற்சிகளையும், அதப்களையும் முறைப்படி பயின்றார்கள்.


அஹ்மத் அல்-கஸ்ஸாலி (ரஹ்): இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சொந்த தம்பியான இவர்கள், ஆன்மீகப் பாதையில் மிக உயரிய நிலையை அடைந்த ஓர் இறைநேசராகத் திகழ்ந்தார்கள். இமாம் கஸ்ஸாலி அவர்கள் உலகப் புகழைத் துறந்து சூஃபியாக மாறுவதற்கு இவர்களது ஆன்மீக வழிகாட்டலும் மிக முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.


வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே மனிதனின் சந்தேகங்களை முழுமையாகப் போக்கிவிட முடியாது; அனுபவபூர்வமான மெய்ஞ்ஞான வழிகாட்டிகளின் தொடர்பே உள்ளத்திற்கு உறுதியைத் தரும்.


இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் உலகின் மாபெரும் பதவியைத் துறந்து சாதாரண சூஃபியாக மாறியபோது சமகால மக்கள் அவர்களை ஏளனம் செய்தார்கள், பழித்துப் பேசினார்கள். ஆனால் யகீன் பிறந்த உள்ளம் என்பதால் எதற்கும் அஞ்சாமல் நின்று, இஸ்லாத்திற்கு புத்துயிர் தந்த 'இஹ்யா உலூமித்தீன்' எனும் பொக்கிஷத்தைப் படைத்தளித்தார்கள்.


சமூக வலைத்தளங்களிலும் தத்துவ தளங்களிலும் இஸ்லாத்தின் மீது எழும் அன்றாடக் கேள்விகளாலும் சந்தேகங்களாலும் தடுமாறும் இன்றைய இளைஞர்களுக்கு, இறையச்சமுடைய ஆலிம்கள் மற்றும் சாலிஹீன்களின் தொடர்பு மட்டுமே ஈமானைப் பாதுகாக்கும் இரும்புக் கோட்டையாகத் திகழும்.


2)முகஸ்துதி (ரியா) நீங்கி உளத்தூய்மை (இக்லாஸ்) ஏற்படும்:

مِنَ الرِّيَاءِ إِلَى الْإِخْلَاصِ:

التَّخَلُّصُ مِنْ حُبِّ الشُّهْرَةِ وَالثَّنَاءِ، فَتَكُونُ الْأَعْمَالُ وَالْأَقْوَالُ كُلُّهَا خَالِصَةً لِوَجْهِ اللَّهِ تَعَالَى وَحْدَهُ.

பெயருக்கும் புகழுக்கும் செய்யும் மாயையிலிருந்து விடுபட்டு, முழுமையாக அல்லாஹ்விற்காக மட்டுமே அமல்கள் செய்யும் பக்குவம் கிட்டும்.


நற்செயல்களைப் பாழாக்கும் கொடிய அகநோய் ‘ரியா’ எனப்படும் முகஸ்துதி. தொழுகை, தர்மம், கல்வி, திக்ர் எனப் பல நன்மைகளைச் செய்தாலும், “மக்கள் நம்மைப் புகழ வேண்டும், நல்லவர் என்று போற்ற வேண்டும்” என்ற அற்ப ஆசை உள்ளத்தில் நுழைந்துவிட்டால், அந்த நன்மைகள் அனைத்தும் சாம்பலாகிப் போய்விடும். இதனை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஷிர்க்குல் அஸ்ஃகர்’ (சிறிய இணைவைப்பு) என்று எச்சரித்தார்கள்.


சாதாரண மனிதனால் இந்த நுட்பமான நயவஞ்சக வலையிலிருந்து எளிதில் விடுபட முடியாது. ஆனால், உண்மையான இறைநேசர்களின் (ஸாலிஹீன்களின்) சகவாசத்தில் வாழும்போது, படைப்பினங்களின் பாராட்டும் பழிப்பும் ஒன்றுதான் என்ற பேருண்மை விளங்கும்; மக்களின் பார்வை மறைந்து, ரஹ்மானின் பார்வை மட்டுமே இலக்காக மாறும் பரிபூரண ‘இக்லாஸ்’ உள்ளத்தில் வேரூன்றும்.


 ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி 

அவர்களின் மறைமுக தர்மம்

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றலும், தாபியீன்களின் தலைசிறந்த வழிகாட்டியுமான இமாம் அலி பின் அல்-ஹுசைன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி– மக்கள் இவர்களை ‘ஜைனுல் ஆபிதீன்’ (வணக்கசாலிகளினுடைய அணிகலன்) என்று போற்றினர். புகழுக்கும் விளம்பரத்திற்கும் அஞ்சி, ஓர் இறைநேசர் தனது அமல்களை எப்படி மறைத்துச் செய்தார் என்பதற்கு இவர்களது வாழ்க்கை ஆகச்சிறந்த வரலாற்றுச் சான்றாகும்.


மதீனா நகரில் ஆதரவற்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு நாள் இரவும், மக்கள் அனைவரும் ஆழ்ந்து உறங்கும்போது, யாரோ ஒருவர் முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொண்டு, அவர்களின் வீட்டு வாசல்களில் மாவு மூட்டைகளையும், தானியங்களையும், காசுகளையும் வைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.


விடியற்காலையில் கதவைத் திறக்கும் ஏழைகள் அந்தப் பொருட்களை எடுத்துப் பசியாறுவார்கள். "யார் இந்த உதவியைச் செய்கிறார்?" என்று யாருக்குமே தெரியவில்லை. பல வருடங்களாக இந்த இரகசிய தர்மம் தொடர்ந்தது. அரசரோ, அதிகாரிகளோ, ஊர்ப் பெரியவர்களோ கூட இந்தக் கொடையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


ஹிஜ்ரி 94-ஆம் ஆண்டு இமாம் ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது உடலைக் குளிப்பாட்டுவதற்காகத் தயாரித்தபோது, அங்கு நின்றவர்கள் அவர்களின் முதுகிலும் தோள்பட்டையிலும் கறுத்துப் போயிருந்த பெரிய தழும்புகளைக் கண்டார்கள்.


உடலைக் குளிப்பாட்டியவர் வியப்புடன், "இது என்ன காயம்?" என்று கேட்டபோது, அவர்களின் குடும்பத்தார் கூறினார்கள்:

"இரவின் இருட்டில் மக்கள் உறங்கும்போது, மதீனாவின் ஏழை எளியவர்களுக்காக உணவு மூட்டைகளைத் தன் முதுகில் சுமந்து சென்று அவர்கள் வீட்டு வாசலில் வைத்துவிட்டு வருவார். அந்த மூட்டைகளின் கனத்தால் பல வருடங்களாகத் தோள்பட்டையில் படிந்த தழும்புகள்தான் இவை!"

அன்று இரவு முதல், மதீனாவின் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாசல்களுக்கு உணவு வருவது நின்றே போனது. அப்போதுதான் ஊர் மக்கள் உணர்ந்தார்கள்—இத்தனை காலம் தங்களுக்கு படியளந்தது வேறு யாருமல்ல, இமாம் ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்தான் என்பதை.


பிறர் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற உணர்வு இருக்கும் வரை அமல்களில் உயிரோட்டம் இருக்காது. இமாம் ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தம்மைப் பெற்ற மக்களிடமும், ஏன் தர்மம் பெற்ற ஏழைகளிடமும் கூடத் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மறைத்தார்கள்.


 “وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا، حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ»

ஒரு மனிதர் தர்மம் செய்கிறார்; அதை எந்தளவு இரகசியமாகச் செய்கிறார் என்றால், அவரது வலது கை என்ன செலவிடுகிறது என்பதை அவரது இடது கை கூட அறியாது.நூல்: ஸஹீஹ் புகாரி: 


அப்படியே தங்களின் நடைமுறை வாழ்க்கையாக மாற்றிக் காட்டினார்கள்.

இறைநேசர்களின் தொடர்பில் இருப்பவர்கள், தங்கள் நன்மைகளைப் பாவங்களை மறைப்பது போலப் பிறர் கண்களிலிருந்து மறைப்பார்கள்; அதன்மூலம் முகஸ்துதி அழிந்து அல்லாஹ்வுக்கு மட்டுமேயான 'இக்லாஸ்' அவர்களின் இதயங்களில் நிரந்தரமாய் நிலைத்துவிடும்


தாவூத் பின் அபீ ஹிந்த் (ரஹ்) அவர்களின் 40 ஆண்டு கால நோன்பு


صَامَ دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ أَرْبَعِينَ سَنَةً لَا يَعْلَمُ بِهِ أَهْلُهُ، وَكَانَ خَرَّازًا، يَحْمِلُ مَعَهُ غَدَاءَهُ مِنْ عِنْدِهِمْ، فَيَتَصَدَّقُ بِهِ فِي الطَّرِيقِ، وَيَرْجِعُ عَشِيًّا فَيَفْطُرُ مَعَهُمْ، فَيَظُنُّ أَهْلُ السُّوقِ أَنَّهُ قَدْ أَكَلَ فِي بَيْتِهِ، وَيَظُنُّ أَهْلُهُ أَنَّهُ قَدْ أَكَلَ فِي السُّوقِ»


தாபியீன்களில் புகழ்பெற்ற அறிஞரான தாவூத் பின் அபீ ஹிந்த் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தொடர்ந்து 40 ஆண்டுகள் நஃபில் நோன்பு நோற்றார்கள்.

காலையில் வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும்போது வீட்டில் உள்ளவர்கள் மதிய உணவுப் பொட்டலத்தைக் கட்டித் தருவார்கள்.


அதை வழியிலுள்ள ஏழைகளுக்குத் தர்மம் செய்துவிடுவார்கள்.

மாலையில் வீடு திரும்பியதும் வீட்டிலேயே நோன்பு துறப்பார்கள்.

கடைவீதியில் இருந்தவர்கள் இவர் வீட்டிலிருந்து சாப்பிட்டுவிட்டு வந்திருப்பார் என்று நினைத்தார்கள்; வீட்டில் உள்ளவர்களோ இவர் கடையில் சாப்பிட்டிருப்பார் என்று நினைத்தார்கள்.


தனது சொந்த மனைவி, பிள்ளைகளுக்குக் கூடத் தான் நோன்பு நோற்றிருப்பது தெரியாமல், 40 வருடங்களாகத் தன் வணக்கத்தைப் பிறர் கண்களிலிருந்து முழுமையாக மறைத்தார்கள்.நூல்: ஸியரு அஃலாமின் நுபலா 


هَذَا هُوَ قِمَّةُ الْإِخْلَاصِ وَالتَّجَرُّدِ لِلَّهِ تَعَالَى

(இதுவே அல்லாஹ்வுக்கான கலப்படமற்ற உளத்தூய்மையின் உச்சக்கட்டமாகும்.)


 3)கவனக்குறைவு (கஃப்லத்) நீங்கி விழிப்புணர்வு (யக்ழா) உண்டாகும்:

مِنَ الْغَفْلَةِ إِلَى الْيَقَظَةِ:

الْغَفْلَةُ مِنْ شِيَمِ الْخَاسِرِينَ؛ وَبِصُحْبَةِ أَهْلِ الذِّكْرِ يَحْيَا الْقَلْبُ وَيَسْتَيْقِظُ، فَيَذْكُرُ الْعَبْدُ رَبَّهُ فِي كُلِّ صَلَاةٍ وَآنٍ بِحُضُورِ قَلْبٍ.

கவனக்குறைவு என்பது நரகவாசிகளின் பண்பாகும். தொழுகையிலும் திக்ரிலும் விழிப்போடு இருந்து, கல்பு விழித்த நிலையில் இறைவனை நினைக்கும் பாக்கியம் கிடைக்கும்.


மனிதனின் ஆன்மாவை அரித்துத் தின்னும் கொடிய நோய்களில் ஒன்று 'கஃப்லத்' (பராமுகமும் கவனமின்மையும்). உடலளவில் உயிருடன் இருந்தாலும், இதயத்தளவில் அல்லாஹ்வை மறந்திருப்பதே ஆன்மீக மரணமாகும். அல்குர்ஆனில் அல்லாஹ் எச்சரிக்கிறான்:

وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ

கவனக்குறைவாக, பராமுகமாக இருப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

அல்குர்ஆன் (சூரா அல்-அஃராஃப்: 205)

வணக்க வழிபாடுகள், திக்ர், தொழுகை என அனைத்தும் கடமைக்காக மட்டுமே நடக்கும்போது உள்ளம் இறுகிப்போகிறது. ஆனால், உள்ளம் எப்போதும் விழிப்போடு இருக்கும் இறைநேசர்களின் (ஸாலிஹீன்களின்) சகவாசமும் தொடர்பும் கிடைக்கும்போது, உறங்கிக்கிடக்கும் கல்பு திடுக்கிட்டு விழிக்கிறது. ஒவ்வொரு மூச்சிலும் அல்லாஹ் தன்னைக் கண்காணிக்கிறான் என்ற 'யக்ழா' (ஆன்மீக விழிப்புணர்வு) உள்ளத்தில் சுடர்விடுகிறது.


இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களின் விழிப்புணர்வு

பல்க் (Balkh) நாட்டின் பேரரசராக விளங்கிய இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் உலகின் சகல ஆடம்பரங்களிலும் மூழ்கியிருந்தார்கள். பட்டு ஆடைகள், பொன் அணிகலன்கள், மெய்க்காவலர்கள் சூழ வாழ்ந்த அவர்கள், உலக இன்பங்களினால் ஏற்பட்ட கஃப்லத்தின் உச்சத்தில் இருந்தார்கள்.


ஒருநாள் இரவு அரண்மனைக் கட்டிலில் படுத்திருந்தபோது, மாளிகையின் கூரை மீது ஏதோ கனத்த காலடிச் சத்தங்கள் கேட்டன. திடுக்கிட்ட அரசர், "அங்கே கூரையில் யார் நடப்பது?" என்று அதட்டினார்.

மேலேயிருந்து ஒரு குரல் ஒலித்தது: "நான்தான், எனது ஒட்டகத்தைத் தொலைத்துவிட்டேன்; அதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்."

அரசர் ஏளனமாக, "அறிவில்லாத மனிதனே! அரண்மனைக் கூரையின் மீதா ஒட்டகத்தைத் தேடுவார்கள்?" என்று கத்தினார்.

"அரசே! தங்க ஆடையிலும், பட்டுப் படுக்கையிலும், உலக ஆடம்பர போதையிலும் மூழ்கிக்கொண்டு நீங்கள் அல்லாஹ்வைத் தேடுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிடவா அரண்மனைக் கூரையில் ஒட்டகத்தைத் தேடுவது முட்டாள்தனம்?!"

இவ்வார்த்தைகள் அரசரின் இதயத்தில் சம்மட்டியால் அடித்தது போல் இறங்கியது.


மறுநாள் தனது கவலையைப் போக்க குதிரையேறிப் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றார்கள். தூரத்தில் ஒரு மானைக் கண்டு அதை விரட்டிச் சென்றபோது, பரிவாரங்களை விட்டுப் பிரிந்து அடர்ந்த காட்டுக்குள் தனியாக மாட்டிக்கொண்டார்கள்.

மானை நோக்கி வில்லை வளைக்க முயன்ற கணத்தில், ஒரு கண்ணுக்குத் தெரியாத குரல் மிகக் கம்பீரமாக ஒலித்தது:

يَا إِبْرَاهِيمُ! أَلِهَذَا خُلِقْتَ؟ أَمْ بِهَذَا أُمِرْتَ؟

(இப்ராஹீமே! இதற்காகவா நீ படைக்கப்பட்டாய்? அல்லது இதைச் செய்யவா நீ கட்டளையிடப்பட்டாய்?)

يَا إِبْرَاهِيمُ! مَا لِهَذَا خُلِقْتَ، وَلَا بِهَذَا أُمِرْتَ

(இப்ராஹீமே! இதற்காக நீர் படைக்கப்படவுமில்லை, இதற்கு நீர் ஏவப்படவுமில்லை!)


அந்த எச்சரிக்கைக் குரல் அவர்களின் குதிரையின் சேணத்திலிருந்தும், சுற்றியிருந்த மரங்களிலிருந்தும் எதிரொலித்தது.

அந்த ஒரு கணத்தில், இத்தனை காலம் சூழ்ந்திருந்த கவனக்குறைவு (கஃப்லத்) என்ற அறியாமைத் திரை சுக்குநூறாக உடைந்தது. கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது. குதிரையிலிருந்து கீழே இறங்கினார்கள்.

அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் ஏழை இடையனைக் கண்டார்கள். தங்களின் விலையுயர்ந்த ராஜ உடைகள், வைர மாலைகள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்துவிட்டு, அவனது கிழிந்த கம்பளி ஆடையை வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். நாட்டை, மகுடத்தை, உலக ஆசைகளை அப்படியே துறந்துவிட்டு, முழுமையான ஆன்மீகப் பாதையில் பயணித்து அக்காலத்தின் மாபெரும் சுல்தானுல் ஆரிஃபீனாக உருவெடுத்தார்கள்.


«مِنَ الْغَفْلَةِ إِلَى الْيَقَظَةِ؛ فَالْغَفْلَةُ مَوْتُ الْقُلُوبِ، وَالْيَقَظَةُ حَيَاتُهَا»

(கவனக்குறைவு என்பது உள்ளங்களின் மரணம்; ஆன்மீக விழிப்புணர்வே அவற்றின் வாழ்வாகும்.)


தொழுகையில் நின்றாலும் உள்ளம் கடைவீதியிலும் உலகக் கவலைகளிலும் சுற்றிக்கொண்டிருப்பது கஃப்லத்தின் அடையாளம். ஸாலிஹீன்களின் தொடர்பில்தான் "அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான்" என்ற இஹ்ஸானிய விழிப்புணர்வு கிடைக்கும்.

மனிதனின் படைப்பின் நோக்கம் உலக இன்பங்களை வேட்டையாடுவது அல்ல; மாறாக படைத்தவனை அறிந்து, அவனை நினைவில் நிறுத்தி வாழ்வதே என்பதை உணர்வதே உண்மையான 'யக்ழா' ஆகும்.



 4)உலக ஆசை நீங்கி மறுமை நாட்டம் (ஆஹிரத்தின் மீது ஆர்வம்) பிறக்கும்:

مِنَ الرَّغْبَةِ فِي الدُّنْيَا إِلَى الرَّغْبَةِ فِي الْآخِرَةِ (الزُّهْدِ):

تَفْرِيغُ الْقَلْبِ مِنْ حُبِّ الدُّنْيَا وَجَعْلُ الْمَالِ فِي الْيَدِ لَا فِي الْقَلْبِ، كَمَا ضَرَبَ الْعَارِفُونَ أَرْوَعَ الْأَمْثِلَةِ فِي الْبَذْلِ وَالْإِنْفَاقِ لِوَجْهِ اللَّهِ دُونَ تَعَلُّقٍ بِهَا.

உள்ளத்திலிருந்து உலகத்தின் மீதான காதலை வெளியேற்றி, பொருளைக் கையில் மட்டுமே வைத்திருந்து இதயத்திற்குள் செல்ல விடாமல் தடுப்பதாகும். மெய்ஞ்ஞானிகள் (ஆரிஃபீன்கள்) உலகப் பொருட்களின் மீது பற்றோ மன இணைப்போ கொள்ளாமல், அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே வாரி வழங்குவதிலும் தர்மம் செய்வதிலும் மிக உன்னதமான முன்மாதிரிகளை நிலைநாட்டியுள்ளது போலாகும்.


துன்யா மீதான மோகம் மனித உள்ளத்தை ஆக்கிரமிக்கும்போது, மறுமையின் நினைவு மறக்கடிக்கப்பட்டு இதயம் மரத்துப்போகிறது. ஆனால், 'ஸுஹ்த்' (பற்றற்ற நிலை) என்பது கையில் ஒன்றுமில்லாமல் ஏழையாக வாழ்வது மட்டுமல்ல; செல்வம் கையில் இருந்தாலும் உள்ளத்தில் அதன் மீது பற்றோ, பேராசையோ இல்லாமல் இருப்பதே உண்மையான ஸுஹ்த் ஆகும்.


முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) 

அவர்களின் மெய்ஞ்ஞான ஸுஹ்த்

கௌஸுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் காலத்தில், மகரிப் தேசத்திலிருந்து (வட ஆப்பிரிக்கா) ஓர் ஆன்மீக நாட்டம் கொண்ட சீடர் பக்தாத் நகரை நோக்கிப் புறப்பட்டார்.


அந்த மனிதர் தன் உள்ளத்தில், "அவ்லியாக்களின் தலைவர், உலக ஆசைகளைத் துறந்த பெரும் துறவி கௌஸுல் அஃலம் அவர்கள் ஒருவேளை கிழிந்த கம்பளி ஆடையோடும், ஏழ்மையான குடிசையிலும்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்" என்று கற்பனை செய்துகொண்டு பக்தாத் வந்தார்.


ஆனால், அங்கே கௌதுல் அஃலம் அவர்களின் வாசலை அடைந்தபோது, அவர் கண்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது. அங்கே ஒரு ஒட்டகம் நின்றுகொண்டிருந்தது; அந்த ஒட்டகத்தின் கடிவாளமும் மூக்கணாங் கயிறும் பளபளக்கும் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அதைக் கண்ட அந்த மனிதரின் உள்ளத்தில் உடனே ஒரு சந்தேகம் எழுந்தது:

"இவ்வளவு பெரிய இறைநேசராகப் போற்றப்படும் ஒருவர், தன் ஒட்டகத்திற்குக் கூடத் தங்கக் கயிற்றைக் கட்டி வைத்திருக்கிறாரே! இவருக்கு உலகப் பொருட்களின் மீது இத்தனை ஆசையா?!"


அவர் தன் சந்தேகத்தை யாரிடமும் வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே மறைத்துக்கொண்டு கௌஸுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபைக்குள் சென்றார். உள்ளங்களின் நிலையை அல்லாஹ்வின் பேரொளியால் அறியும் ஆற்றல் பெற்ற அண்ணலார், அந்த மனிதரின் உள்ளக் குழப்பத்தை உடனே உணர்ந்தார்கள்.

அப்போது அந்தச் சபைக்கு ஒரு பரம ஏழை மனிதர் கண்ணீருடன் வந்தார். "உஸ்தாத் அவர்களே! எனது வீட்டில் உணவில்லை; உடுக்க உடையில்லை; என் குடும்பம் கொடிய வறுமையில் தவிக்கிறது. எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்!" என்று முறையிட்டார்.

கௌதுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சற்றும் தாமதிக்காமல், தன் பணியாளரை அழைத்து, சபையிலிருந்த மக்கள் அனைவரும் கேட்கும் வண்ணம் கட்டளையிட்டார்கள்:


"வெளியே வாசலில் நிற்கும் அந்த ஒட்டகத்தின் தங்கக் கயிற்றை உடனே அவிழ்த்து, இதோ இந்த ஏழை மனிதரிடம் கொடுத்துவிடுங்கள்! அவர் அதை விற்றுத் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்கிக் கொள்ளட்டும்!"

கண் இமைக்கும் நேரத்தில் அந்த விலையுயர்ந்த தங்கக் கயிறு அவிழ்க்கப்பட்டு, எவ்விதத் தயக்கமுமின்றி அந்த ஏழையிடம் ஒப்படைக்கப்பட்டது.


அந்த மனிதருக்குத் தான் தவறாக எண்ணியதை நினைத்து உடல் நடுங்கியது; உள்ளம் வெட்கித் தலைகுனிந்தது. அப்போது கௌஸுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து, தஸவ்வுஃபின் மிக ஆழமான தத்துவத்தை எடுத்துரைத்தார்கள்:

يَا هَذَا! إِنَّ الدُّنْيَا فِي أَيْدِينَا لَا فِي قُلُوبِنَا؛ وَإِنَّ السَّفِينَةَ مَا دَامَتْ عَلَى الْمَاءِ لَا تَغْرَقُ وَلَا بَأْسَ عَلَيْهَا، فَإِذَا دَخَلَ الْمَاءُ فِيهَا غَرِقَتْ وَهَلَكَتْ؛ كَذَلِكَ الدُّنْيَا، فَلْتَكُنْ فِي يَدِكَ، وَلَا تَدْخُلْ فِي قَلْبِكَ!


"மனிதனே! உலகச் செல்வங்களை நாங்கள் எங்கள் கைகளில் வைத்திருக்கிறோம்; ஆனால் அதை ஒருபோதும் எங்கள் கல்புகளுக்குள் (இதயத்திற்குள்) அனுமதிப்பதில்லை. ஒரு கப்பல் தண்ணீரின் மீது மிதக்கும் வரை அதற்கு ஆபத்தில்லை; ஆனால், தண்ணீர் கப்பலுக்குள் புகுந்துவிட்டால் கப்பல் மூழ்கிவிடும்! அதேபோல, துன்யா உங்கள் கைகளில் இருக்கலாம், உங்கள் இதயத்திற்குள் புகுந்துவிடக் கூடாது!"

இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த மனிதர் கௌதுல் அஃலம் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தனது சந்தேகங்கள் நீங்கி உண்மையான மறுமை நாட்டத்தைப் பெற்ற சீடராக மாறினார்.


கையில் செல்வம் - கல்பில் அல்லாஹ்: ஸாலிஹீன்கள் செல்வத்தை அல்லாஹ்வின் அமானிதமாகக் கருதுவார்கள். அதை இழக்கும்போது கவலைப்படுவதோ, அடையும்போது தற்பெருமை கொள்வதோ அவர்களிடம் இருக்காது.


நல்லோரின் சேர்க்கை ஏற்படும்போது, அற்பமான உலக இன்பங்களின் மீதான மோகம் தானாகவே உதிர்ந்து, நிரந்தரமான ஆஹிரத்தின் நன்மைகளை நோக்கி மனித உள்ளம் விரைந்து செல்லும்.


உள்ளத்தில் மறுமை நாட்டம் வேரூன்றிவிட்டால், கோடி ரூபாய் கைக்கு வந்தாலும் கர்வம் வருவதில்லை; அது ஒரே நாளில் பறிபோனாலும் இதயம் சோர்ந்து விழுவதில்லை.

உலக ஆசைகளிலிருந்து விடுதலை பெற்ற உள்ளமே எக்காலத்திலும் அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருக்க முடியும்.

அவர்கள் செல்வத்தைப் பயன்படுத்தினார்கள், ஆனால் அதைத் தங்கள் கல்பில் குடிவைக்கவில்லை. மறுமைக்கான முதலீடாக மட்டுமே உலகைப் பார்த்தார்கள்.


5)பெருமை நீங்கிப் பணிவு (தவாழுஃ) உண்டாகும்:

مِنَ الْكِبْرِ إِلَى التَّوَاضُعِ:

مُخَالَطَةُ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ تَكْسِرُ عُجْبَ النَّفْسِ وَتُزِيلُ الْغُرُورَ، فَيَكْتَسِي الْعَبْدُ حِلْيَةَ الْخُشُوعِ وَالتَّوَاضُعِ لِلَّهِ وَلِخَلْقِهِ.

மேன்மக்களின் தொடர்பு இதயத்தில் தலைக்கனத்தை உண்டாக்காது; மாறாகப் பணிவான நிலையைத் தரும்.


இப்லீஸை இறைவனின் கருணையிலிருந்து விரட்டியடித்த முதல் பெரும் பாவம் 'பெருமை'. கல்வி, செல்வம், பரம்பரை, சமூக அந்தஸ்து மற்றும் வணக்க வழிபாடுகள் கூட ஒரு மனிதனின் உள்ளத்தில் தற்பெருமையையும் தலைக்கனத்தையும் விதைத்துவிடக்கூடும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்:-


لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

எவரது உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம்


கல்வியோ பதவியோ மனிதனுக்கு எளிதில் தலைக்கனத்தை உண்டாக்கிவிடும்; ஆனால் மெய்யான இறைநேசர்களின் (ஸாலிஹீன்களின்) தொடர்பு ஏற்படும்போது, தன்னுடைய அற்ப நிலையும் இறைவனின் மகத்துவமும் ஒருவனுக்கு விளங்கும். "நான் ஒன்றுமே இல்லை" என்ற பூரணப் பணிவு (தவாழுஃ) அவன் உள்ளத்தில் மலரும்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜைத் பின் ஸாபித் (ரலி) 

அவர்களுக்குக் காட்டிய பணிவு

குர்ஆனைத் தொகுத்த தலைசிறந்த வஹீ எழுத்தாளரும், சட்டமேதையுமான ஹள்ரத் ஜைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை தனது குதிரை மீது ஏறிப் புறப்படத் தயாரானார்கள்.

அப்போது அங்கே விரைந்து வந்த இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏறுவதற்கு வசதியாக நின்றார்கள்; மேலும் அக்கடிவாளத்தைத் தன் கையால் பிடித்து முன்னால் இழுத்துச் செல்லத் தொடங்கினார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரத்த பந்தத்தைச் சேர்ந்த அஹ்லுல் பைத்; 'ஹப்ருல் உம்மா' (சமூகத்தின் பேரறிஞர்) என்று போற்றப்பட்டவர்கள். அத்தகைய மாபெரும் தலைவர் தன் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் கண்ட ஜைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதறிப்போய்,"அல்லாஹ்வின் தூதரின் சிறிய தந்தையின் மகனாரே! வேண்டாம், கடிவாளத்தை விட்டுவிடுங்கள்! தங்களின் கைகளால் இதைச் செய்யாதீர்கள்!" என்று தடுத்தார்கள்.அதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமைதியாகக் கூறினார்கள்:

«هَكَذَا أُمِرْنَا أَنْ نَفْعَلَ بِعُلَمَائِنَا وَكُبَرَائِنَا»

(எங்கள் அறிஞர்களுக்கும் பெரியார்களுக்கும் நாங்கள் இவ்வாறுதான் மரியாதை செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம்!)


இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தன்னலமற்ற பணிவைக் கண்ட ஜைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்கள் குளமாகின. உடனே அவர்கள், "இப்னு அப்பாஸே! உங்கள் கரங்களை என்னிடம் நீட்டுங்கள்" என்றார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது கையை நீட்டியதும், ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குதிரையிலிருந்து குனிந்து, இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கரத்தைப் பற்றி அதற்கு முத்தமிட்டார்கள்.

வியந்து நின்ற இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஜைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

هَكَذَا أُمِرْنَا أَنْ نَفْعَلَ بِأَهْلِ بَيْتِ نَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

எங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாருக்கு நாங்கள் இவ்வாறுதான் மரியாதை செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம்!நூல்:தபகாத் இப்னு ஸஅத் / அல்-முஃஜமுல் கபீர்)


நபிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும், குர்ஆனின் விரிவுரையாளராகத் திகழ்ந்தும் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கல்விக்கும் ஆலிம்களுக்கும் பணிவு காட்டினார்கள்.

ஒருவர் அறிவுக்குப் பணிவு காட்ட, மற்றவர் நபிகளாரின் குடும்பத்திற்குப் பணிவு காட்டினார். சாலிஹீன்கள் வாழும் சமூகத்தில் பெருமைக்கோ ஆணவத்திற்கோ இடமிருக்காது; ஒருவரை ஒருவர் மதிக்கும் நற்பண்பே மேலோங்கும்.


யார் அல்லாஹ்வுக்காகப் பணிகிறாரோ அவரை அல்லாஹ் உயர்த்துகிறான்

 (مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ. ஸாலிஹீன்களின் தொடர்பு மனிதனின் நப்ஸை அடக்கி, உள்ளத்தில் மாசற்ற தவாழுவை நிலைநிறுத்துகிறது.


நீதிமன்றத்தில் ஆஜரான பேரரசர்:

சுல்தான் நூருத்தீன் ஸங்கி அவர்களின் ஆட்சியில், ஒரு சாதாரண ஏழைப் பிரஜை சுல்தானின் மீது சொத்துப் பிரச்சனை தொடர்பாகப் புகார் அளித்தான். அன்றைய தலைமை நீதிபதியாக (காழியாக) இருந்தவர் மார்க்க அறிஞர் கமாலுத்தீன் (ரஹ்) அவர்கள்.

சுல்தானுக்கு நீதிபதியிடமிருந்து அழைப்பாணை (சம்மன்) சென்றது. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதியாக இருந்தபோதிலும், தனக்கு எவ்வித சிறப்புச் சலுகையும் கோராமல், மெய்க்காவலர்களின் ஆரவாரமின்றி ஒரு சாதாரணக் குடிமகனைப் போல நீதிபதியின் மன்றத்திற்கு நேரில் ஆஜரானார்கள்.

நீதிபதி கமாலுத்தீன் அவர்கள், சுல்தான் என்று பாராமல் இருவரையும் சமமாக நிற்க வைத்து வழக்கை விசாரித்தார். முடிவில் சுல்தானுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது; அந்த ஏழை மனிதனின் வாதம் தவறானது என்பது உறுதியானது.


வழக்கு முடிந்துவிட்டதாக நீதிபதி அறிவித்த அடுத்த கணம், சுல்தான் நூருத்தீன் ஸங்கி அவர்கள் அந்த ஏழை மனிதரைப் பார்த்து, "நீ கோரிய அந்தச் சொத்து மார்க்கச் சட்டப்படி எனக்குரியதுதான் என்பது நிரூபணமாகிவிட்டது. இருப்பினும், ஒரு சாதாரண ஏழையான நீ என்னிடம் கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை என் மனம் விரும்பவில்லை. எனவே, அந்தச் சொத்தை இப்போதே உனக்கு நான் அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்!" என்று எழுதிக் கொடுத்தார்கள்.


அங்கிருந்த நீதிபதியும் மக்களும் வியந்து போய், "அரசே! தீர்ப்பு வருவதற்கு முன்பே இதை அவனுக்குக் கொடுத்திருக்கலாமே, நீதிமன்றத்திற்கு நேரில் வந்து ஏன் நிற்க வேண்டும்?" என்று கேட்டனர்.

அதற்கு சுல்தான் நூருத்தீன் ஸங்கி அவர்களின் வார்த்தைகள்:-

"நான் நீதிமன்றத்திற்கு வராமல் முன்பே கொடுத்திருந்தால், சுல்தான் சட்டத்திற்கு அஞ்சிப் பணிய மறுக்கிறார் என்றோ அல்லது தன் அதிகாரப் பெருமையால் நீதிபதியை மதிக்கவில்லை என்றோ மக்கள் கருதியிருப்பார்கள். அல்லாஹ்வின் சட்டத்திற்கு முன்னால் ஓர் அரசனும் எளிய குடிமகனும் ஒன்றுதான் என்பதை என் பணிவின் மூலம் நிலைநாட்டவே நான் நேரில் வந்து நின்றேன்!”


6)கெட்ட எண்ணங்கள் நீங்கி நலம் நாடும் பண்பு (நஸீஹத்) ஏற்படும்:

مِنْ سُوءِ الظَّنِّ (وَالْغِلِّ) إِلَى النَّصِيحَةِ:

طَهَارَةُ الْقَلْبِ مِنْ سُوءِ الظَّنِّ بِالْمُسْلِمِينَ، وَامْتِلَاؤُهُ بِالْمَحَبَّةِ وَالسَّلَامَةِ وَإِرَادَةِ الْخَيْرِ لِجَمِيعِ خَلْقِ اللَّهِ

பிறரைப் பற்றிய தவறான எண்ணங்கள் மறைந்து, அனைவருக்கும் நன்மையையே விரும்பும் உயரிய குணம் மலரும்.


மனித இதயத்தை நஞ்சாக்கும் கொடிய நோய்களில் ஒன்று பிறரைப் பற்றி தவறாக எண்ணுவதும் (ஸூவுள்ளன்), உள்ளத்தில் பொறாமை, குரோதம் போன்றவற்றைச் சுமந்து திரிவதும் ஆகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

«إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ»

தவறான எண்ணம் கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களிலேயே மிகவும் பொய்யானது தவறான எண்ணமாகும்.நூல்:ஸஹீஹ் புகாரி

ஸாலிஹீன்களின் சகவாசமும் தொடர்பும் ஏற்படும்போது, இந்தத் தீய எண்ணங்கள் அடியோடு மறைந்து, "எல்லா மக்களும் ஈடேற்றம் பெற வேண்டும்; எவருக்கும் தீங்கிழைக்கக் கூடாது" என்ற தூய 'நஸீஹத்' (நலம் நாடும் பண்பு) உள்ளத்தில் ஊற்றெடுக்கிறது.


சொர்க்கவாசி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 

அவர்களால் நற்செய்தி கூறப்பட்ட நபித்தோழர்

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களோடு அமர்ந்திருந்தபோது,

«يَطْلُعُ عَلَيْكُمْ الآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ»

(இதோ இப்போது உங்கள் முன்னால் சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் வரப்போகிறார்) என்று கூறினார்கள்.

அடுத்த கணம், அன்ஸாரிகளில் ஒரு எளிய மனிதர் வந்தார். அவர் இப்போதே உளூச் செய்துவிட்டு வந்தது போல் அவரது தாடியிலிருந்து உளூவின் நீர்ச் சொட்டுகள் வடிந்து கொண்டிருந்தன; தன் இடது கையில் செருப்பை ஏந்தியபடி சாதாரணமாக அவைக்குள் நுழைந்தார்.


வியப்பளிக்கும் வகையில், அடுத்த நாளும் நபிகளார் இதே நற்செய்தியைக் கூற, அதே மனிதர் அதே நிலையில் வந்தார். மூன்றாம் நாளும் நபிகளார் அதே வார்த்தைகளைக் கூற, அதே நபித்தோழரே வந்தார்.


அந்த மனிதரிடம் இருக்கும் அந்த விசேஷமான அமல் என்ன என்பதை அறிய ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விரும்பினார்கள். அந்தத் தோழரிடம் சென்று, "எனக்கும் என் தந்தைக்கும் இடையே சிறு மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது; மூன்று நாட்கள் உங்கள் வீட்டில் நான் தங்கிக்கொள்ள அனுமதிப்பீர்களா?" என்று கேட்டு அவரோடு தங்கினார்கள்.


அவர் இரவெல்லாம் விழித்து நின்று பெரும் தஹஜ்ஜுத் தொழுகை எதையும் நிறைவேற்றவில்லை; படுக்கையில் புரளும்போதெல்லாம் திக்ர் செய்வார், ஃபஜ்ருக்கு எழுவார். பகலில் தொடர் நஃபில் நோன்புகள் எதையும் நோற்கவில்லை. வாயைத் திறந்தால் நல்ல வார்த்தைகளைத் தவிர வேறெதையும் பேசவில்லை. மூன்று நாட்கள் முடிந்ததும் அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவரிடம் உண்மையை உடைத்துக் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் அடியாரே! எனக்கும் என் தந்தைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை உங்களை 'சொர்க்கவாசி' என்று நற்செய்தி கூறினார்கள். நீங்கள் அப்படி என்ன அமல் செய்கிறீர்கள் என்று பார்க்கவே வந்தேன். ஆனால் நீங்கள் பெரிதாக எந்த நஃபில் வணக்கங்களையும் செய்வதாகத் தெரியவில்லையே! உங்களை இந்த உச்சக்கட்ட நிலைக்கு உயர்த்தியது எது?"


அப்போது அந்த நபித்தோழர் அமைதியாகக் கூறினார்கள்: "நீங்கள் பார்த்ததைத் தவிர என்னிடம் அதிகப்படியான வணக்கங்கள் எதுவும் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்டு:

«مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ، غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا، وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ»

நான் இரவில் படுக்கைக்குச் செல்லும்போது, எந்தவொரு முஸ்லிமின் மீதும் என் உள்ளத்தில் கடுகளவும் கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ சுமந்து கொண்டு தூங்குவதில்லை. அல்லாஹ் பிறருக்குக் கொடுத்திருக்கும் எந்தவொரு அருட்கொடையைக் கண்டும் என் உள்ளத்தில் பொறாமை கொள்வதில்லை; மாறாக அனைவருக்கும் நன்மையையே நாடுகிறேன்!"

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு வியந்துபோய் கூறினார்கள்:"இதுதான் உங்களை அந்த மாபெரும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது! எங்களால் எளிதில் செய்ய முடியாத மாபெரும் பண்பும் இதுதான்!"நூல்:— முஸ்னத் அஹ்மத்: 


வெறும் உடலளவிலான சடங்குகளை விட, சக மனிதர்கள் மீது கெட்ட எண்ணம் கொள்ளாமல், பிறர் நலம் நாடும் உள்ளத் தூய்மையே மனிதனை மிக விரைவாகச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இறைநேசர்களின் உள்ளத்தில் எவர் மீதும் குரோதமோ, பழிவாங்கும் உணர்வோ தங்காது; அவர்கள் துரோகம் செய்தவர்களுக்கும் ஹிதாயத்தையும் நன்மையையுமே துஆச் செய்வார்கள்.


இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்கள் மன்னிப்பு 

'குர்ஆன் படைக்கப்பட்டது' என்ற தவறான கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால், அப்பாஸிய ஆட்சியாளர்களால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். கடுமையான வெயிலில் கட்டி வைக்கப்பட்டு, தோலுரியும் அளவிற்குச் சவுக்கால் விளாசப்பட்டார்கள்.

அவர்களை அடித்துச் சித்திரவதை செய்த காவலர்களில் ஒருவன் கொடூரமாக நடந்து கொண்டான்; இமாம் அவர்களின் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வழியும் வரை இடைவிடாமல் அடித்தான்.


பல ஆண்டுகளுக்குப் பின் அந்தக் குழப்பம் ஓய்ந்து, இமாம் அவர்கள் விடுதலையாகித் தனது கல்விச் சபையை மீண்டும் நடத்தினார்கள். ஒருநாள், அவர்களின் அவைக்கு முகத்தை மூடியபடி நடுக்கத்தோடு ஒரு மனிதன் வந்தான்.

அவன் இமாமின் முன்னால் மண்டியிட்டு அழுதுகொண்டே தனது முகத்திரையை விலக்கினான். அவன் வேறு யாருமல்ல; சிறையில் இமாம் அவர்களை ஈவுஇரக்கமின்றிச் சவுக்கால் அடித்த அதே காவலன்!

அவன் கண்ணீருடன் கூறினான்:

"இமாம் அவர்களே! நான் அன்று ஆட்சியாளரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு உங்களுக்குக் கொடிய அநீதி இழைத்துவிட்டேன். நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் மறுமையில் நரக நெருப்பிலிருந்து நான் தப்ப முடியாது. எனக்காக அல்லாஹ்விடம் பழிவாங்கிவிடாதீர்கள், என்னை மன்னித்துவிடுங்கள்!"


இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன் உடலின் தழும்புகளைப் பார்க்கவோ, அவனைக் கடிந்து பேசவோ இல்லை. மாறாக, அவனை எழுப்பித் தழுவிக்கொண்டு அமைதியாகக் கூறினார்கள்:

"என் சகோதரனே! அன்றே உன்னை நான் முழுமையாக மன்னித்துவிட்டேன். என்னை அடித்தவர்கள் அனைவரையும் அல்லாஹ்வின் முகத்திற்காக நான் அப்போதே மனப்பூர்வமாகப் பொருத்துக்கொண்டுவிட்டேன்."

அங்கிருந்த மாணவர்கள் வியப்புடன், "இமாம் அவர்களே! உங்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்று அடித்த கொடூரனை இவ்வளவு எளிதாக மன்னித்துவிட்டீர்களா?" என்று கேட்டார்கள்.

அதற்கு இமாம் அவர்கள் அல்குர்ஆனின் வசனத்தை நினைவுகூர்ந்து 

«فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ»

எவர் மன்னித்துச் சமாதானம் செய்து கொள்கிறாரோ, அவருக்குரிய கூலி அல்லாஹ்விடமே உண்டு — சூரா அஷ்-ஷூரா: 40)

"மறுமை நாளில் எனது சக முஸ்லிம் சகோதரன் ஒருவன் எனக்கு இழைத்த அநீதிக்காக நரகத்தில் வேதனை செய்யப்படுவதை என் உள்ளம் எப்படி விரும்பும்? மறுமை நாளில் என் காரணத்தால் ஒரு முஸ்லிமும் தண்டிக்கப்படக் கூடாது; எல்லாரும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே என் உள்ளத்தின் நாட்டம்!"

நூல்: மனாஃகிபுல் இமாம் அஹ்மத் பின் ஹன்பல்


பிறர் தனக்கு இழைத்த கொடூரமான தீங்கிற்குப் பிறகும், அவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காக இரக்கம் காட்டுவதே 'நஸீஹத்'தின் உச்சக்கட்ட நிலையாகும்.


பிறரைப் பற்றித் தவறாக நினைப்பதோ, அவர்களுக்குக் கேடு வர வேண்டும் என்று உள்ளத்தில் குரோதம் வளர்ப்பதோ இறைநேசர்களின் பண்பல்ல; அவர்கள் எப்போதும் அடியார்களின் நன்மையையே விரும்புவார்கள்.


நல்லோர்களோடு அமரும்போதுதான், பழிவாங்கும் மிருகத்தனமான குணம் மறைந்து, அனைவரையும் அரவணைக்கும் கருணை உள்ளம் ஒரு முஃமினுக்குள் பிறக்கிறது.


இமாம் இப்னுல் கையிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்ட இந்த ஆறு மாற்றங்களும் சாலிஹீன்களின் சேர்க்கையினால் மட்டுமே ஒரு மனிதனுக்குள் படிப்படியாக மலர்கின்றன.


இறைநேசர்களோடு தொடர்பில் இருப்பது என்பது வெறும் வாய்மொழிப் புகழாரங்களோடு முடிந்துவிடுவதல்ல.

நம்மிடமிருக்கும் சந்தேகங்கள் நீங்கி யகீன் பிறக்க வேண்டும்,

முகஸ்துதி (ரியா) அழிந்து இக்லாஸ் மலர வேண்டும்,

கவனக்குறைவு அகன்று விழிப்புணர்வு (யக்ழா) ஏற்பட வேண்டும்,

துன்யாவின் பேராசை நீங்கி மறுமை நாட்டம் மேலோங்க வேண்டும்,

அகந்தை அழிந்து அடிபணியும் தவாழுஃ உள்ளத்தில் நிலைக்க வேண்டும்,

சக மனிதர்கள் மீதான கெட்ட எண்ணங்கள் நீங்கி நலம் நாடும் நஸீஹத் பிறக்க வேண்டும்.

இந்த உயரிய பண்புகளை நம் வாழ்வில் கொண்டுவருவதே இறைநேசர்களுக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய நல்லடியார்களின் வரிசையில் நம் அனைவரையும் சேர்த்து அருள்வானாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக