வியாழன், 16 ஜூலை, 2026

நன்மைகளும் தீமைகளும்

 


“நன்மைகளும் தீமைகளும்”


الْحَمْدُ للهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَرْسَلَهُ رَبُّهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا، وَدَاعِيًا إِلَى اللهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا.

صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَبَارَك وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ‏وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏


.وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ


إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ، أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ مِنْ عِنْدِهِ


நன்மைகளும் தீமைகளும் எதையும் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.


நாம் செய்யக்கூடிய நல்லறங்களில் எந்த நல்லறம் நம்முடைய உயர்வுக்குக் காரணமாக அமையும் என்பதும் நமக்குத் தெரியாது; அதேபோல நாம் செய்யக்கூடிய தவறுகளில் எந்தப் பாவம் நம்மை அழிக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனவே, எந்த நல்லறத்தையும் சாதாரணமாக, அற்பமாகக் கருதிவிடவும் கூடாது. 


எந்தவொரு பாவத்தையும் "இது என்ன?" என்று லேசாக நினைத்துவிடவும் கூடாது.

இந்த ஒரு அடிப்படையைத் தான் அல்லாஹ் 'இதா ஜுல்ஸிலத்' என்ற சூராவில் சொல்கிறான்:


"ஃபமன் யஃமல் மிஸ்கால தர்ரதின் கைரன் யரஹ். வமன் யஃமல் மிஸ்கால தர்ரதின் ஷர்ரன் யரஹ்."

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ‏

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.(அல்குர்ஆன் : 99:7)


وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏

அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் : 99:8)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனங்களைப் பற்றிச் சொல்லும்போது, 


"அல்-ஆயதுல் ஜாமிஅதுல் ஃபத்தாஹ்" என்று சொல்வார்கள். இந்த இரண்டு வசனங்கள் இருக்கிறதே, இது எல்லா நன்மைகளையும் உள்ளடக்கிய வசனம்; 


எல்லாத் தீமைகளையும் உள்ளடக்கிய வசனம். இவை குர்ஆனிலேயே தனித்துவ வசனங்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.


எந்த நன்மை நம்முடைய உயர்வுக்குக் காரணம் என்று தெரியாது. 


أَنَّ مِسْكِينًا اسْتَطْعَمَ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَبَيْنَ يَدَيْهَا عِنَبٌ، فَقَالَتْ لِإِنْسَانٍ: خُذْ حَبَّةً فَأَعْطِهِ إِيَّاهَا، فَجَعَلَ يَنْظُرُ إِلَيْهَا وَيَعْجَبُ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَتَعْجَبُ! كَمْ تَرَى فِي هَذِهِ الْحَبَّةِ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ؟

ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரேயொரு திராட்சைப் பழத்தைத் தர்மம் செய்தார்கள். ஒரேயொரு திராட்சைப் பழம்! அப்போது கேட்கப்பட்டது, "இந்த ஒரு திராட்சைப் பழம் இதற்கு நன்மை உண்டா?" என்று. அப்போது அன்னை சொன்னார்கள்: "இல்லை, இந்த ஒரு திராட்சையில் எத்தனையோ நன்மையான அணுக்கள் இருக்கிறது (ஃபீஹா மஸாகீலு தர்ரதின் கைரா), எத்தனையோ நன்மைகள் இருக்கிறது" என்று சொன்னார்கள்.


அதேபோல ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரேயொரு பேரீச்சம்பழத்தைத் தர்மம் செய்தார்கள். சொன்னார்கள்: "இந்த ஒரு பேரீச்சம்பழத்தில் எத்தனையோ நன்மைகள் இருக்கிறது" என்று சொன்னார்கள்.


எந்த நன்மையையும் நாம் லேசாக நினைக்கக் கூடாது. பல நேரங்களில் யாராவது யாசகம் கேட்டால், நம்ம பாக்கெட்டை பார்க்கிறோம்; கொஞ்சமாக இருக்கிறது என்று கொடுக்காமல் நம்ம போயிடுறோம். 


நீங்கள் ஒரு ரூபாய் இருந்தாலும் சரி, யாசிக்கிறவன் – அதை அற்பமாக நினைத்தாலும் சரி, ஆனால் உங்களிடத்தில் பாக்கெட்டில் இருக்கிற இந்த ஒரு ரூபாய் இருக்கிறதே, அதுகொண்டு அல்லாஹ் உங்களை உயர்த்திடலாம். 


எந்த நன்மை நம்மை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று தெரியாது, 


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ»

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் முள் கிளையொன்று கிடக்கக் கண்டார். உடனே அவர் அதனை (மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறு இல்லாதவாறு) அங்கிருந்து அகற்றினார். அல்லாஹ் அவரது இந்த நற்செயலை ஏற்றுக்கொண்டு, அவரை மெச்சி (அவரது பாவங்களை) மன்னித்தான்."(நூல்: புகாரி, )


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعُ بِهِ؟ أَوْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مُرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ؟ قَالَ: «اعْزِلِ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ

ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள்: "யா ரஸுலல்லாஹ் நான் (நபிகளாரிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுங்கள்" அல்லது "அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கக்கூடிய ஒரு நற்செயலை எனக்கு ஏவுங்கள்" என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், "முஸ்லிம்கள் (மக்கள்) செல்லும் பாதையிலிருந்து தொந்தரவு தரக்கூடிய (இடையூறான) பொருளை நீக்கிவிடு" என்று கூறினார்கள்.(நூல், முஸ்னத் அஹ்மத்)


நம்மில் எத்தனை பேர் நம்ம நடக்கிற பாதையில் பல கண்ணாடித் துகள்களைப் பார்த்திருக்கலாம், அல்லது மக்களுடைய பாதங்களைச் சேதப்படுத்துகிற எத்தனையோ பொருளைப் பார்த்திருக்கலாம். நாமம் வாக்கிங் போகின்ற நேரத்திலோ அல்லது நாம் வீட்டுக்குப்போகின்ற நேரத்திலோ பார்த்திருக்கலாம். நாம் என்றைக்காவது இந்த ஹதீஸ்களின்படி அதை எடுத்து நாம் அகற்றி இருக்கிறோமா?


நான்கு ரக்அத் தொழுதால் நன்மை இருக்கிறது என்பதை நாம் நம்புகிறோம், அதை நாம் கடைபிடிக்கிறோம். ஆனால் பாதையில் கிடக்கிற இந்தப்பாறைகளைப் பொருள்களை அகற்றினால், அல்லாஹ் அதற்கு இந்த நன்மை கொடுக்கிறான் என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை இல்லை. எனவே, அதை வாழ்நாள் முழுக்க நாம் வீணாக்குறோம்.


விலங்கினங்களிடம் காட்டிய கருணையும் அதன் விளைவும்


தாகத்திலிருந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டிய பெண்மணி

அரபி வாசகம் 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَمَا كَلْبٌ يُطِيفُ بِرَكِيَّةٍ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ، إِذْ رَأَتْهُ بَغِيٌّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ، فَنَزَعَتْ مُوقَهَا فَسَقَتْهُ فَقُفِرَ لَهَا بِهِ»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள்; ஒரு பெண்மணி, அந்தப் பெண்ணிடம் எந்த நன்மையும் இருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுட்டிக்காட்டவில்லை. அந்தப் பெண் ஒரு தவறான பெண். ஆனால் அந்தத் தவறான பெண், ஒரு தாகத்தில் தவிக்கிற ஒரு நாய்க்கு உதவி செய்தார்கள்; அல்லாஹ் அந்தப் பெண்ணைச் சொர்க்கத்துக்கு அனுப்பினான். இப்போது அந்த நாய் மீது காட்டிய கருணை, அந்தப் பெண்ணுடைய மன்னிப்புக்குக் காரணமானது. நூல்: புகாரி 


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لَا هِيَ أَطْعَمَتْهَا وَلَا سَقَتْهَا إِذْ حَبَسَتْهَا، وَلَا هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணை வணக்கசாலி என்று அடையாளப்படுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண் வீட்டில் ஒரு பூனையைக் கட்டி வைத்து, அந்தப் பூனைக்குத் தானும் தீனி போடவில்லை, அதை வெளியே விட்டுருந்தால் தானாக இரை தேடி இருக்கும், அதற்கும் வழிவிடவில்லை; அல்லாஹ் அந்தப் பெண்ணை நரகத்தில் போட்டுத் துன்புறுத்தினான் என்று சொன்னார்கள். நூல்: புகாரி 


அப்போ நன்மைகளில் எது நம்மை உயர்த்தும், பாவத்தில் எது நம்மைத் தாழ்த்தும் என்பதை நம்ம யாருமே கணிக்க முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து நமக்கு உணர்த்துகிறான். எனவே அருமையானவர்களே, எல்லாப் பாவங்களையும் சாதாரணமாக எதையும் நினைத்துவிடக் கூடாது. நாமம் வந்து பாவங்களில் சிறிய பாவம், பெரிய பாவம் என்றெல்லாம் பிரித்திருக்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் சொன்னார்கள்:

"«لَا تَنْظُرْ إِلَى صِغَرِ الْمَعْصِيَةِ، وَلَكِنِ انْظُرْ إِلَى مَنْ عَصَيْتَ»

பாவம் சின்னது என்று பார்க்காதே; ஆனால் நீ எந்த ரப்புக்கு மாறு செய்கிறாயோ அவனுடைய கண்ணியத்தைப் பார் என்று சொன்னார்கள்.


பாவம் சின்னது என்று பார்க்கக் கூடாது. எத்தனையோ பாவங்களை நாமம் அப்படித்தான் நினைக்கிறோம், சின்னது என்று சொல்லி. நீ யாருக்கு மாறு செய்கிறாய், அவனைப் பார் என்று சொன்னார்கள்.


தாகத்தால் துடித்த ஒட்டகத்தின் கண்ணீரும் நபிகளாரின் எச்சரிக்கையும்

விலங்குகளைப் பட்டினி போடுபவர்களுக்கும், அவற்றின் சக்திக்கு மீறி வேலை வாங்குபவர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்த ஒரு வரலாற்றுத் தகவல் 


ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அன்ஸாரித் தோழரின் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அங்கே ஒரு ஒட்டகம் இருந்தது. நபியவர்களைக் கண்டதும் அந்த ஒட்டகம் மெதுவாக சப்தமிட்டு, அதன் கண்கள் கண்ணீரை வடித்தன.

உடனே நபியவர்கள் அந்த ஒட்டகத்தின் அருகில் சென்று, அதன் திமிலையும் அதன் பிடரியையும் தடவிக் கொடுத்து அதை அமைதிப்படுத்தினார்கள். பின்னர், "இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? இந்த இளைஞர் யார்?" என்று கேட்டார்கள். அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு இளைஞர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது எனக்குரியதுதான்" என்றார்.அப்போது நபியவர்கள் அவரிடம் கூறினார்கள்:


 تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا؟ فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ 

"அல்லாஹ் உனக்கு உடமையாக்கியுள்ள இந்த மிருகத்தின் விஷயத்தில் நீ அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டாமா? நீ அதைத் பட்டினி போடுவதாகவும், அதன் சக்திக்கு மீறி வேலை வாங்கி அதைத் துன்புறுத்துவதாகவும் அது என்னிடம் முறைையிடுகிறது!" என்று கடுமையாக எச்சரித்தார்கள். நூல்: ஸூனன் அபூதாவூத்


நாம பேசுகிற வார்த்தைகளில் கவனம்

நாம் பேசுகிற சாதாரணமாக நாம் சொல்லக்கூடிய வார்த்தைகள், யாராவது மனிதர்களில் சில பேரை நாம் அலட்சியப்படுத்துகிற வார்த்தைகள் – சொல்றோமா இல்லையா? பல மனிதர்களுடைய தோற்றம், அதை நாம் விளையாட்டாகக்கூடச் சொல்லி விடுகிறோம்; உயரம், நெட்டை, குட்டை என்று சொல்லியறோம்; கருப்பு, சிவப்பு என்று சொல்லி விடுகிறோம். நாம் சொல்லுகிற அந்த நோக்கத்தில எதாவது பரிகாசம் நோக்கமாக இருந்தால்... ஒரு ஆளை அடையாளப்படுத்தச் சொல்லலாம், உயரமான ஆளு சொல்லலாம். ஒரு மனிதரை அடையாளப்படுத்துவதற்குச் சொல்லலாம், கொஞ்சம் கருப்பா இருப்பார் என்று சொல்லி. ஆனால் அவருடைய தோற்றத்தை உருவக்கேலி செய்கிற நோக்கம் கொஞ்சம் இருந்தால் போதும்.


கடல் நீரையே கெடுக்கும்

அன்னை ஸஃபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தோற்றத்தில் சற்றே குட்டையாக இருந்தார்கள். ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகளாரிடம் பேசும்போது, தன் கையால் சைகை செய்து, "உங்களுக்கு ஸஃபிய்யாவிடம் உள்ள இந்த (குட்டையான) குணமே போதுமானது" (அதாவது அவர் குட்டையானவர் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ற தொனியில்) கூறினார்கள்.


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அங்கே சண்டையிடவோ அல்லது பெரிய அளவில் திட்டவோ இல்லை. வெறும் சைகையோடு "குட்டை" என்ற ஒரேயொரு வார்த்தையைத்தான் சொன்னார்கள். ஆனால், ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதனை லேசாக எடுத்துக்கொள்ளவில்லை.


உடனே நபியவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைக் கண்டித்து, "ஆயிஷாவே! நீ இப்போது ஒரு வார்த்தையைச் சொன்னாய். அது எவ்வளவு பயங்கரமானது என்றால், அந்த வார்த்தையை (அதன் தீய விளைவை அல்லது வாடையை) இந்த பரந்த கடலில் கலந்தால் கூட, அது ஒட்டுமொத்த கடல் நீரையும் மாசடையச் செய்து, அதன் சுவையையும் நிறத்தையும் கெடுத்துவிடும்!" என்று கூறினார்கள்.

விஞ்ஞான ரீதியாகவும், நடைமுறையிலும் கடல் நீர் என்பது தன்னை நோக்கி வரும் எத்தனையோ அசுத்தங்களை உள்வாங்கித் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் பிரம்மாண்டமான ஆற்றல் கொண்டது. ஆனால், ஒரு மனிதரின் உருவத்தையோ அல்லது குறையையோ மறைமுகமாகக் கேலி செய்து பேசும் "புறம்பேசுதல்" என்ற பாவத்தின் அசுத்தம், ஒட்டுமொத்த கடல் நீரையே கெடுக்கும் அளவுக்கு வீரியம் மிக்கது என்று நபிகளார் எச்சரிக்கிறார்கள்.


நாமும் அப்படி எத்தனை பேரை அவர்களுடைய உருவத்தைக் கேலி செய்யும் விதமாக, அவர்களுடைய பேச்சைக் கேலி செய்யும் விதமாக, அவர்கள் நடக்கிறதைக் கேலி செய்கிற விதமாக எத்தனை வார்த்தைகள் சொல்லியிருக்கிறோம்?


மறுமையின் விசாரணையும் பதிவேடுகளும்


 யாரையுமே, "இவன் நரகத்துக்குப் போவான்" என்று சொல்லிடக் கூடாது. "



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كَانَ رَجُلَانِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ، فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ، وَالْآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ، فَكَانَ لَا يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الْآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ: أَقْصِرْ، فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ فَقَالَ لَهُ: أَقْصِرْ، فَقَالَ: خَلِّنِي وَرَبِّي، أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا؟ فَقَالَ: وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ، أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ، فَقَبَضَ أَرْوَاحَهُمَا، فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ، فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ: أَكُنْتَ بِي عَالِمًا، أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا؟ وَقَالَ لِلْمُذْنِبِ: اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ بِرَحْمَتِي، وَقَالَ لِلْآخَرِ: اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ»

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முந்தைய சமுதாயமான பனூ இஸ்ரவேலர்களின் காலத்தில் வாழ்ந்த இரு மனிதர்களைப் பற்றி இந்த வரலாற்றைக் கூறினார்கள். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக (நண்பர்களாக) பழகி வந்தனர்.


அவர்களில் ஒரு மனிதர் தொடர்ச்சியாகப் பாவங்கள் செய்யக்கூடியவராக இருந்தார்; இன்னொருவரோ தன் வாழ்நாள் முழுவதையும் வணக்க வழிபாடுகளில் அர்ப்பணித்த மாபெரும் 'முஜ்தஹித்' (வணக்கசாலி) ஆக இருந்தார்.


அந்த வணக்கசாலி தன் நண்பர் பாவம் செய்வதைப் பார்க்கும் போதெல்லாம், "பாவத்தை நிறுத்திக் கொள், அல்லாஹ்வைப் பயந்து கொள்" என்று அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார். ஒருநாள், அந்த நபர் ஒரு பாவத்தைச் செய்து கொண்டிருப்பதை மீண்டும் கண்ட வணக்கசாலி, சற்றே ஆவேசத்துடன், "உன் பாவத்தை நிறுத்து!" என்றார்.

அதற்கு அந்தப் பாவம் செய்த மனிதர், "என்னை என் ரப்பிடம் விட்டுவிடு! (என் விஷயத்தில் தலையிடாதே). நீ என் மீது கண்காணிப்பாளராகவா அனுப்பப்பட்டிருக்கிறாய்?" என்று சற்றே எரிச்சலுடன் மறுமொழி கூறினார்.


பாவம் செய்தவரின் அந்தப் பதில், அந்த வணக்கசாலியின் கோபத்தைக் கிளறியது., ஆத்திரத்தினாலும் எல்லையைக் கடந்த அவர், கூறினார்.


"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான்! அல்லது அல்லாஹ் உன்னைச் சொர்க்கத்தில் நுழைவிக்கவே மாட்டான்!"

அவர் இந்த ஒற்றை வார்த்தையைக் கூறி முடித்த சில காலத்திற்குப் பிறகு, அல்லாஹ் அவ்விருவரின் உயிர்களையும் ஒரே நேரத்தில் கைப்பற்றினான்.


மறுமையில் அவ்விருவரும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். அப்போது அல்லாஹ் அந்த வணக்கசாலியைப் பார்த்து மிகவும் கடுமையான ஒரு கேள்வியைக் கேட்டான்:

"நீ என்னைப்பற்றி முழுமையாக அறிந்தவனாக இருந்தாயா? அல்லது என் கையில் இருக்கும் அதிகாரத்தை (மன்னிப்பதையும் தண்டிப்பதையும்) தீர்மானிக்கக் கூடிய ஆற்றல் உனக்கு வழங்கப்பட்டிருந்ததா?"


பின்னர் அல்லாஹ், பாவம் செய்த மனிதனைப் பார்த்து, "நீ போ, என்னுடைய ரஹ்மத்தைக் (கிருபையைக்) கொண்டு சொர்க்கத்தில் நுழைந்து விடு" என்று கூறினான். அதே சமயம், தன் வாழ்நாள் முழுவதும் பாவமே செய்யாமல் இரவெல்லாம் தொழுது வணங்கிய அந்த வணக்கசாலியைப் பார்த்து, "இவனை நரக நெருப்பிற்கு இழுத்துச் செல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான்.


இந்த ஹதீஸை அறிவிக்கும் போதெல்லாம் ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உள்ளம் நடுங்கி,. அவர்கள் அழுதுகொண்டே கூறுவார்கள்:

"என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அந்த வணக்கசாலி தன் நாவிலிருந்து வீசிய அந்த ஒரேயொரு வார்த்தை, அவனுடைய துனியாவையும் (இவ்வுலக நன்மைகளையும்) நாசமாக்கிவிட்டது; அவனுடைய ஆகிரத்தையும் (மறு உலகச் சொர்க்கத்தையும்) ஒட்டுமொத்தமாக நாசமாக்கிவிட்டது!”


நம்மிடமிருந்து நிகழக்கூடிய பாவங்கள், அந்தப் பாவத்தில் சின்னது பெரியது என்றெல்லாம் பார்க்கக் கூடாது; அல்லாஹ்வுக்கு நாம் மாறு செய்கிறோம் என்று சொல்லி. 


 ஃபுழைல் இப்னு இயாள் ரஹ் அவர்களின் அழுகை:

தாபியீன்களின் காலத்தில் வாழ்ந்த மாபெரும் அறிஞரான இமாம் ஃபுழைல் இப்னு இயாள் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை இந்த வசனத்தை ஓதிக்கொண்டே வந்தார்கள்.

«مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا»

என்ற இடத்தை அடைந்ததும், அவர்களால் அதற்கு மேல் ஓத முடியாமல் நெஞ்சு உருகி, தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்கள். அவர்கள் அழுதுகொண்டே தன் தோழர்களிடம் கூறினார்கள்:

"மக்களே! இந்த ஆயத்தை எண்ணிப் பாருங்கள்! மக்கள் மறுமையில் தங்களின் பெரும் பாவங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக, தங்களின் சிறிய பாவங்களைப் பற்றித்தான் முதன்முதலில் கவலைப்பட்டு அழத் தொடங்குவார்கள்! அல்லாஹ் இந்த ஆயத்தில் முதலில் 'ஸகீரா' (சிறிய பாவம்) என்பதைத்தான் குறிப்பிடுகிறான். பெரிய பாவங்கள் மட்டுமல்ல, நாம் அலட்சியமாகச் செய்த சின்னஞ்சிறு பாவங்களையும் அல்லாஹ் விட்டுவைக்காமல் பதிந்து வைத்துள்ளான்!”


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "நாம் ஒரு பெரிய மரக்கட்டையைத் தீயிட்டு எரிக்க வேண்டும் என்று நினைத்தால், நேரடியாக அந்தப் பெரிய கட்டையில் நெருப்பை வைக்க முடியாது. முதலில் காய்ந்த சின்னச் சின்னச் சுள்ளிகளையும், இலைகளையும் ஒன்று சேர்த்து எரிய வைப்போம். அந்தச் சுள்ளிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பெரிய நெருப்புப் பிழம்பாக மாறிய பிறகுதான், அதன் நடுவே பெரிய மரக்கட்டையைத் தூக்கி உள்ளே வைப்போம். உடனே அந்தப் பெரிய கட்டையும் எரிந்து சாம்பலாகிவிடும்."


அதேபோலத்தான், மனிதன் செய்யும் சின்னச் சின்னப் பாவங்கள் இருக்கிறதே, அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பார்க்கும்போது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அந்தச் சிறிய பாவங்களைத் தொடர்ந்து செய்து, அவற்றை ஒன்று சேர்க்கும்போது, அது மறுமையில் நரக நெருப்பின் பெரிய பிழம்பாக மாறி, மனிதனை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்.


«إِيَّاكُمْ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ؛ فَإِنَّمَا مَثَلُ مُحَقَّرَاتِ الذُّنُوبِ كَقَوْمٍ نَزَلُوا فِي بَطْنِ وَادٍ، فَجَاءَ ذَا بِعُودٍ، وَجَاءَ ذَا بِعُودٍ حَتَّى أَنْضَجُوا خُبْزَهُمْ، وَإِنَّ مُحَقَّرَاتِ الذُّنُوبِ مَتَى يُؤْخَذْ بِهَا صَاحِبُهَا تُهْلِكْهُ»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "மிகச்சிறியவை என்று நீங்கள் அலட்சியப்படுத்தும் பாவங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன்! ஏனெனில், அலட்சியப்படுத்தும் சிறிய பாவங்களுக்கு உவமையாவது: ஒரு கூட்டத்தினர் ஒரு பள்ளத்தாக்கில் தங்கி, ரொட்டி சமைக்க விரும்பினர். அப்போது ஒருவர் ஒரு சிறிய குச்சியை (சுள்ளியை) கொண்டு வந்தார்; மற்றொருவர் ஒரு குச்சியைக் கொண்டு வந்தார். இப்படியாக ஒரு பெரிய விறகுக்குவியலை ஒன்று சேர்த்துப் பெரிய நெருப்பை மூட்டித் தங்கள் ரொட்டியைச் சமைத்து முடித்தனர். (அதேபோல) அலட்சியமாகச் செய்யப்படும் சிறிய பாவங்கள் அனைத்தும் ஒரு மனிதனிடம் ஒன்று சேர்ந்து, அதற்காக அவன் அல்லாஹ்வினால் விசாரிக்கப்படும் போது, அது அவனை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்!”எந்தப் பாவத்திற்கு கடுமையான விசாரணை உண்டு, அது நமக்குத் தெரியாது .(நூல்: முஸ்னத் அஹ்மத் )



இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தினுடைய பெரிய துன்பம் பாவங்கள் விஷயத்தில் நாம் காட்டுகிற அலட்சியம்தான்.இன்றைக்கு இந்தச் சமுதாயம் ஒரு இழிநிலையை அடைந்திருக்கிறது. 


இமாம் அல்-ஹஸன் அல்-பஷரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: "பாவமன்னிப்புத் தேடாமல் தொடர்ந்து செய்யப்படும் எந்தச் சிறிய பாவமும் சிறியதாக இருப்பதில்லை; அது பெரிய பாவமாக மாறிவிடுகிறது.”


தவறான முறையில் சம்பாதிப்பது, எல்லாப் பாவங்களிலும் அலட்சியம்;


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கிற நேரத்தில்


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இறுதிப் பிரயாணத்தை எதிர்நோக்கி, மரணப் படுக்கையில் இருந்தார்கள். காய்ச்சலின் கொடுமையால் கொஞ்ச நேரம் மயக்கமடைவார்கள்; பின்னர் கொஞ்ச நேரம் தெளிவடைவார்கள். அந்தத் தெளிவடையும் சில நிமிடங்களில் கூட, துனியாவின் எந்தச் சிந்தனையும் அவர்களுக்கு வரவில்லை; மாறாக, வீட்டில் இருக்கும் அந்த ஆறு தீனாரைப் பற்றிய தவிப்பு மட்டுமே இருந்தது. அன்னை ஆயிஷா (ரcontentி) அவர்களிடம், "ஆயிஷா! அந்தத் தங்கம் என்னவானது? அதை ஏழைகளுக்குத் தர்மம் செய்துவிடு" எனக் கூறிவிட்டு மீண்டும் மயங்கி விழுந்தார்கள்.


அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகளாரின் உடல்நிலையைக் கவனிப்பதிலேயே முழுமையாக இருந்ததால், அந்த நாணயங்களைத் தர்மம் செய்ய மறந்துவிட்டார்கள். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுந்த நபியவர்கள், நாணயங்களைப் பற்றி விசாரித்தார்கள். அவை இன்னும் தர்மம் செய்யப்படவில்லை என்பதை அறிந்ததும், "அந்த நாணயங்களை என்னிடம் கொண்டு வா" என்றார்கள்.


ஆறு நாணயங்களையும் தன் கரத்தில் ஏந்திய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முஹம்மது தன் வீட்டில் இந்தத் தங்க நாணயங்களைச் சேர்த்து வைத்திருக்கும் நிலையில், தன் ரப்பைச் சந்தித்தால், அவனைக் குறித்து அல்லாஹ்வின் எண்ணம் என்னவாக இருக்கும்? ஆயிஷாவே! இதை உடனே தர்மம் செய்துவிடு!"


அந்த நாணயங்கள் அனைத்தும் தர்மம் செய்யப்பட்டு, வீடு முழுமையாகத் தூய்மையான பின்னரே நபிகளாரின் உள்ளம் அமைதியடைந்தது.


தீனாரின் மதிப்பு :- தீனார் என்பது 'ஆறு காசு' என்ற அளவில் சாதாரணமாகத் தோன்றினாலும், அன்றைய காலகட்டத்தில் அது தூய தங்க நாணயமாகும். இஸ்லாமிய சட்ட வரம்புகளின்படி, ஒரு தங்க தீனார் என்பது 4.25 கிராம் தூய தங்கத்தைக் குறிக்கும். அந்த அடிப்படையில், ஆறு தீனார் என்பது சுமார் 25.5 கிராம் தங்கம், அதாவது இன்றைய கணக்கில் ஏறத்தாழ 3 பவுன் (3 சவரன்) தங்கம் ஆகும். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒட்டுமொத்த இல்லத்திலும் இருந்த ஒற்றைச் சொத்து அது மட்டும்தான்.


ஒரு ஆறு தீனாருக்கு அல்லாஹ்வின் தூதருக்கே இந்த நிலை என்றால், நம் வீடுகளில் லட்சக்கணக்கில் பணமும், பீரோக்களில் கிலோ கணக்கில் தங்க நகைகளும், கணக்கில் வராத சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றதே! அவற்றையெல்லாம் சுமந்து கொண்டு நாம் மரணித்தால், மறுமையில் நம் ரப்பை எந்த முகத்தோடு சந்திப்போம் என்ற அச்சம் நம் உள்ளங்களில் வர வேண்டும்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க ஒரு குதிரை வளர்த்தாலும் கூட, அந்தக்குதிரைக்குள்ள ஹக்கு இருக்குதா இல்லையா? எல்லாப் பொருள்களுக்குமான ஹக்கு இருக்குது. அவங்க சொன்னாங்க: 


மரண நேரத்திலும் கவலை

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمَّا حَضَرَتْ أَبَا بَكْرٍ الْوَفَاةُ قَالَ: انْظُرِي مَا زَادَ فِي مَالِي مُنْذُ دَخَلْتُ فِي الْإِمَارَةِ فَلْتَبْعَثِي بِهِ إِلَى الْخَلِيفَةِ مِنْ بَعْدِي، فَإِنِّي قَدْ كُنْتُ أَسْتَحِلُّهُ، فَلَمَّا مَاتَ نَظَرْنَا فَإِذَا عَبْدٌ سَائِسٌ، وَنَاضِحٌ كَانَ يَسْقِي نَخْلًا لَهُ، وَقَطِيفَةٌ. فَبَعَثْنَا بِهِ إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ عُمَرُ: «رَحِمَ اللَّهُ أَبَا بَكْرٍ، لَقَدْ أَتْعَبَ مَنْ بَعْدَهُ أَنْ يَقْتَدِيَ بِهِ»

அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபாவாகப் பொறுப்பேற்பதற்கு முன்னால் மாபெரும் துணி வியாபாரியாகவும், பெரும் செல்வந்தராகவும் இருந்தார்கள். ஆனால், கலீஃபா பொறுப்பேற்றவுடன் சமுதாயப் பணிகளுக்காகத் தன் வியாபாரத்தை முழுமையாகக் கைவிட வேண்டியிருந்தது. இதனால் சஹாபாக்கள் ஒன்றிணைந்து, அவர்களின் குடும்பப் பராமரிப்பிற்காக பைத்துல் மாலிலிருந்து (பொது நிதியகம்) மிகக் குறைந்த அளவு உதவித்தொகை மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.


அவர்கள் மரணிக்கும் தருவாயில், தன் மகள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து, "மகளே! நான் கலீஃபாவாகப் பொறுப்பேற்றதிலிருந்து என் தனிப்பட்ட சொத்தில் பைத்துல் மாலின் காரணமாக என்ன பொருள்கள் சேர்ந்திருக்கிறது என்று பார். நான் உலகை விட்டும் பிரியும் முன்பாக அதை எனக்குப் பின் கலீஃபாவாக வரவிருக்கும் உமரிடம் ஒப்படைத்துவிடு" என்று கட்டளையிட்டார்கள்.


ஒரு மேலங்கி (قطيفة - கதீஃபஹ்): சமுதாயப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது அரசாங்க முறைப்படி அணிவதற்காக வழங்கப்பட்ட எளிய கம்பளி ஆடை.

பால் கறக்கும் அல்லது தண்ணீர் பாய்ச்சும் ஒட்டகம் (ناضح - நாழிஹ்): வீட்டின் அத்தியாவசியத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஒட்டகம்.

பணிவிடை செய்யும் அடிமை (عبد سائس - அப்துன் ஸாயிஸ்): ஒட்டகத்தைப் பராமரிக்கவும், கலீஃபாவின் பணிகளுக்கு உதவவும் வழங்கப்பட்ட ஒரு பணியாளர். ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னை ஆயிஷாவிடம், "அஸ்ரிஈ பிஹா இலா உமரிப்னில் கத்தாப்" (இதைக் கத்தாபின் மகன் உமரிடம் கொண்டு சேர்ப்பதில் மிக விரைவாகச் செயல்படு!) என்று அவசரப்படுத்தினார்கள். 


ஏனெனில், தன் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டால், அதற்குப் பிறகு அந்தப் பொருட்களை; தன் வாரிசுகள் தவறுதலாகப் பயன்படுத்திவிட்டால், மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் தான் குற்றவாளியாக நிற்க நேரிடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள். அவை விலைமதிப்பற்ற ஆடம்பரப் பொருட்கள் அல்ல, மிகச் சாதாரணமானவை; எனினும் பொதுச் சொத்தின் ஒரு துளி கூடத் தன் வீட்டில் தங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.


அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணத்திற்குப் பிறகு அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த மூன்று பொருட்களையும் புதிய கலீஃபாவான ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். அந்த எளியப் பொருட்களைக் கண்டதும் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. அவர்கள் தேம்பி அழுதுகொண்டே கூறினார்கள்: "அல்லாஹ் அபூபக்கர் மீது கருணை பொழியட்டும்! தனக்குப் பின்னால் வரக்கூடிய ஆட்சியாளர்களுக்கு (அவரைப் பின்பற்றி நடப்பதில்) மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டாரே!”


மரண நேரத்துல வீட்ல இருக்கிற சாதாரணப் பொருள்கள், அந்தப் பொருளைப் பற்றிக் கவலைப் பட்டார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய நிலைமை என்ன? நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் எந்த வழியில சம்பாதித்தோம், எப்படிச் சம்பாதித்தோம், என்னென்ன பாவங்கள் செய்கிறோம்? அல்லாஹ்வுடைய தூதர் எத்தனை பாவத்தைச் சபித்தார்கள், 


 பல பாவங்கள் சபிக்கப்பட்டவை. 


வட்டி வாங்குபவர்கள் மட்டுமல்லாது, அதனோடு தொடர்புடைய பலரையும் நபிகளார் சபித்தார்கள்.

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ»، وَقَالَ: «هُمْ سَوَاءٌ»


ஹஜ்ரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வட்டியை உண்பவனையும் (வாங்குபவன்), வட்டி ஊட்டுபவனையும் (கொடுப்பவன்), வட்டிப் பத்திரத்தை எழுதுபவனையும், அதற்குச் சாட்சியாக இருக்கும் இருவரையும் சபித்தார்கள். மேலும், அவையனைத்திலும் 'அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்களே!' என்றும் கூறினார்கள்.”


நமது சமுதாயத்தில் இன்றைக்கு மிகவும் அலட்சியப்படுத்தப்பட்டு, பல வடிவங்களில் வியாபித்திருக்கும் ஒரு கொடிய பாவம் தான் "வட்டி" (ரிபா - Riba). அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு பாவத்தைச் சபித்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பாவத்தின் விபரீதம் எவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


'லஃனத்' (சாபம்) என்றால் "அல்லாஹ்வின் ஒட்டுமொத்தக் கருணையிலிருந்து (ரஹ்மத்திலிருந்து) ஒரு மனிதன் தூரமாக்கப்படுவது" என்று அர்த்தம். ஒரு மனிதனை நோக்கி அல்லாஹ்வும் அவனது தூதரும் சாபத்தை வீசுகிறார்கள் என்றால், அந்த மனிதன் செய்யும் எந்த வழிபாடும் (தொழுகை, நோன்பு, ஹஜ்) அவனுக்கு மறுமையில் எவ்விதப் பலனும் தராது. வட்டிப் பணம் கலந்த உணவை உண்பவனின் துஆக்களை அல்லாஹ் ஏற்பதே இல்லை.


பொதுவாக இஸ்லாமியச் சட்டத்தில் பாவம் செய்பவருக்குத்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால், வட்டியின் கொடுமை எவ்வளவு பயங்கரமானது என்றால், வட்டி வாங்குபவன் மட்டுமல்லாது:


கடனுக்காக வட்டிப் பணத்தைக் கொடுப்பவன், அந்த வட்டிப் பரிவர்த்தனைக்கான கணக்குகளையோ அல்லது ஆவணங்களையோ எழுதுபவன்/பதிவு செய்பவன்,

அதற்குச் சாட்சியாக நிற்கும் இருவர், என அந்த அநீதிக்குத் துணைபோகும் அத்தனை பேரையும் நபிகளார் சபித்துள்ளார்கள். வட்டி வங்கியிலோ அல்லது வட்டி நிறுவனங்களிலோ வேலை பார்ப்பதும், அதற்குத் துணை போவதும் இந்தச் சாபத்தின் வரம்பிற்குள்ளேயே வரும் என்பதை இந்த ஹதீஸ் எச்சரிக்கிறது.


திருக்குர்ஆனில் விபச்சாரம், திருட்டு, கொலை போன்ற பெருங்குற்றங்களுக்குக் கூடப் பயன்படுத்தப்படாத ஒரு கடுமையான எச்சரிக்கை வட்டிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது:


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏


"விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால், வட்டியில் எஞ்சியிருப்பதை (வாங்குவதை) விட்டுவிடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் 'போர் பிரகடனத்தை' எதிர்பார்த்துக் கொள்ளுங்கள்!" (ஸூரத்துல் பகரா: 278-279)


வட்டித் தொழிலில் ஈடுபடும் ஒரு மனிதன், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வோடும் அவனது தூதரோடும் நேரடியாகப் போர் செய்யக் களம் இறங்குகிறான் என்று குர்ஆன் எச்சரிக்கிறது. அல்லாஹ்வோடு போர் செய்து வென்றவன் வரலாற்றில் எவனுமே இல்லை!


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "வட்டியில் 73 வாசல்கள் (வகைகள்) உள்ளன. அவற்றில் மிகச் சிறியது, ஒரு மனிதன் தன் சொந்தத் தாயுடன் விபச்சாரம் செய்வதற்கு ஒப்பானதாகும்." (நூல்: இப்னு மாஜா, ஹாகிம்).


மறுமை நாளில் வட்டி வாங்குபவர்கள் நரகத்தில் உள்ள லோஹித் (இரத்த ஆறு) ஒன்றில் நீந்துவார்கள்; அவர்கள் கரையேற முயலும் போதெல்லாம் கரையில் இருக்கும் மலக்குகள் அவர்களின் வாயில் பாறாங்கற்களை எறிந்து மீண்டும் அந்த இரத்த ஆற்றினுள்ளேயே தள்ளுவார்கள் என்று நபிகளார் தங்களின் மிஃராஜ் பயணத்தின் போது கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்கள் (நூல்: புகாரி).


நாமும் சமுதாயத்தில் பல நேரங்களில், வியாபாரக் கடன்களுக்காகவோ, ஆடம்பரத் தேவைகளுக்காகவோ மிக எளிதாக வட்டி நிறுவனங்களை நாடிச் சென்றுவிடுகிறோம். "எல்லாரும் தான் வட்டி வாங்குறாங்க, இதனால் என்ன?" என்று அலட்சியமாக நினைக்கிறோம்.


பெண்களுக்கு எச்சரிக்கப்பட்ட பாவங்கள்

عَنْ عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ، وَالنَّامِصَاتِ وَالْمُتَنَمِّصَاتِ، وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ»،


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"(அழகுக்காக உடம்பில்) பச்சை குத்துகின்ற பெண்களையும், பச்சை குத்திக் கொள்கின்ற பெண்களையும், புருவ முடிகளைப் பிடுங்குகின்ற (அழகுபடுத்துகின்ற) பெண்களையும், புருவ முடிகளைப் பிடுங்கிக் கொள்கின்ற பெண்களையும், அழகுக்காகப் பற்களுக்கிடையே இடைவெளி ஏற்படுத்திக் கொள்பவர்களையும், (ஆக) அல்லாஹ்வின் படைப்பை மாற்றி அமைப்பவர்களை அல்லாஹ் சபிப்பானாக!”


இந்த விஷயம் பனூ அஸத் குலத்தைச் சேர்ந்த 'உம்மு யஃகூப்' என்ற பெண்ணுக்கு எட்டியது. அவள் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "நீங்கள் இன்னின்னவாறு சபித்ததாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளதே?" என்று கேட்டாள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரைச் சபித்தார்களோ, மேலும் குர்ஆனில் யாருக்குச் சாபம் உள்ளதோ, அவரை நான் ஏன் சபிக்கக் கூடாது?" என்று கேட்டார்கள்.


அதற்கு அந்தப் பெண், "நான் குர்ஆன் பிரதி முழுவதையும் ஓதிப் பார்த்தேன், நீங்கள் கூறும் இந்தச் சாபத்தை நான் அதில் காணவில்லையே?" என்றாள். அதற்கு இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு, "நீ குர்ஆனை (விளங்கி) ஓதியிருந்தால், நிச்சயமாக இந்த எச்சரிக்கையைக் கண்டிருப்பாய். அல்லாஹ் தன் குர்ஆனில், 'இறைத்தூதர் உங்களுக்கு எதனைக் கொடுக்கின்றாரோ அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எதை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்' (ஸூரத்துல் ஹஷ்ர்: 7) என்று கூறவில்லையா?" எனக் கேட்டார்கள். அந்தப் பெண் "ஆம்" என்றாள். "அப்படியெனில், நிச்சயமாக நபியவர்கள் இந்தச் செயல்களை விட்டும் தடுத்துள்ளார்கள்" என்று விளக்கமளித்தார்கள்.


இஸ்லாம் பெண்களை அழகுபடுத்திக் கொள்ளத் தடை விதிக்கவில்லை. மாறாக, கணவனுக்காகத் தன்னை அழகுபடுத்திக் கொள்ள அது தூண்டுகிறது. நகைகளுக்குப் பதிலாக மருதாணி அணிவது, கணவனுக்காகக் கண்ணில் சுர்மா இடுவது, நல்ல ஆடைகளை அணிவது போன்றவை அனுமதிக்கப்பட்டவை. ஆனால், படைப்பை மாற்றும் பச்சை குத்துதல், புருவம் இழைத்தல், ஒட்டுமுடி (Wig) வைப்பது போன்ற போலி அலங்காரங்களை மட்டுமே அது சபிக்கிறது.


இன்றைக்கு நிறையப் பெண்கள் அழகு நிலையங்களுக்குப் போகிறார்கள். எல்லாப் பாவத்தையும் செய்கிறார்கள். சாபத்திற்குரிய இந்தப் பாவங்கள் அத்தனையும் இன்று சர்வ சாதாரணமாக நடக்கின்றது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-


ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :- 'முஹாஜிர்களின் கூட்டத்தாரே! ஐந்து சோதனைகள் உள்ளன; அவசியமானால் நீங்கள் அவற்றில் சிக்கிக் கொள்வீர்கள். (உங்களுக்கு அந்த நிலை ஏற்பட்டு) நீங்கள் அவற்றை அடைவதிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (அவற்றில் முதலாவது): எந்தவொரு சமுதாயத்திலும் மானக்கேடான விஷயங்கள் பரவி, அதை அவர்கள் பகிரங்கமாக (வெளிப்படையாகச்) செய்யத் துவங்கினால், அவர்களுக்கு மத்தியில் 'தாயூன்' (காலரா/பிளேக் போன்ற கொள்ளை நோய்களும்), அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் கண்டிராத புதுவிதமான வேதனைகளும் (விசித்திரமான நோய்களும்) பரவாமல் இருப்பதில்லை!' “


இன்றைக்குச் சமுதாயப் பெண்கள் புர்காவும் அணிந்துகொண்டு இஸ்லாமியப் பெண்களுக்குப் பொருத்தமில்லாத பல விஷயத்தைச் செய்கிறார்கள். 


வாய்ப்புக் கிடைத்தால் அந்நிய ஆண்களோடு பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள் . அந்நிய ஆண்களுக்கு மத்தியில உட்கார்ந்து போட்டோ எடுக்கிறார்கள் . ஒரு நடிகனுக்குப் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடுறதை ஒரு முஸ்லிம் பெண் பெருமையா நினைக்கின்றார்கள் . நடிகர்களோடு போட்டோ எடுப்பதை பெருமையாக நினைக்கின்றார்கள். பெண்கள் தங்களின் ஆடைகளில் சுருக்கம் ஏற்படுத்தி, அரைகுறை ஆடைகளுடன் வலம் வருவது,சமூக வலைத்தளங்களில் (Social Media) பெண்கள் தங்களின் வெட்கத்தை இழந்து நடனமாடுவதும், ரீல்ஸ் (Reels) போடுவதும், ஆண்-பெண் இலவசக் கலப்பும், அந்நிய ஆடவர்களுடன் பெண்கள் எல்லையைக் கடந்து பழகுவதும்,

ஆபாசப் படங்கள், ஆபாசப் பேச்சுக்கள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியதாக மாறுவது, என வெட்கமின்மையை நோக்கி இட்டுச் செல்லும் அனைத்து ஒழுக்கச் சீர்கேடுகளுமே மானக்கேடான விஷயங்கள் தான்.


இதைவிட அசிங்கம் வேறு என்ன இருக்க முடியும்? இதைவிட மானக்கேடான விஷயம் என்ன இருக்க முடியும்? அப்போ எந்தச் சமுதாயத்தில மானக்கேடான விஷயங்கள் பரவுகிறதோ, அந்தச் சமுதாயத்தை அல்லாஹ் காலரா நோய்களைக் கொண்டு, முன்னால் இல்லாத பல நோய்களைக் கொண்டு சோதிப்பான் என்று சொன்னார்கள்.


வியாபார மோசடியும் அதன் தண்டனைகளும்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 


عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ، وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ.وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ، إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ، وَشِدَّةِ الْمَئُونَةِ، وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ 

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்க நோக்கி முன்னோக்கி அமர்ந்து கூறினார்கள்: 'முஹாஜிர்களின் கூட்டத்தாரே! ஐந்து சோதனைகள் உள்ளன; நீங்கள் அவற்றில் சிக்கிக் கொள்வதிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (அவற்றில் இரண்டாவது): எந்தவொரு சமுதாயமும் அளவிலும் நிறுவையிலும் மோசடி செய்யத் துவங்கினால், அல்லாஹ் அவர்களைப் பசிப் பட்டினி (பஞ்ச வறட்சி), கடுமையான செலவினங்கள் (விலைவாசி உயர்வு மற்றும் வாழ்வாதார நெருக்கடி), மற்றும் ஆட்சியாளர்களின் அநியாயத்தைக் கொண்டு தண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை


சமுதாயத்தில் வியாபார நேர்மை சீர்குலையும் போது அல்லாஹ் கொடுக்கும் மூன்று மிக முக்கியமான தண்டனைகள்

1. பசிப் பட்டினி மற்றும் வறட்சி 

வியாபாரிகள் நுகர்வோர்களை ஏமாற்றி அநியாய லாபம் ஈட்ட முற்படும்போது, அல்லாஹ் இயற்கையின் சமநிலையைக் கெடுத்து விடுகிறான். மழை பொய்ப்பது, நிலத்தடி நீர் வற்றுவது, விவசாய விளைச்சல் குறைவது போன்ற வறட்சிச் சோதனைகள் ஏற்படுகின்றன. நாம் நினைக்கிறோம் வியாபாரத்தில் தந்திரம் செய்து சம்பாதித்து விடலாம் என்று; ஆனால் அல்லாஹ் வானத்தின் பரகத் கதவுகளை மூடி, சமுதாயத்தில் பசிப் பட்டினியையும் பஞ்சத்தையும் சோதனையாக இறக்குகிறான்.


2. ஷித்ததுல் மஊனா (செலவினங்கள் மற்றும் விலைவாசி உயர்வு):

இந்த வார்த்தையின் உன்னதமான பொருள், நாம் நமது அன்றாடப் பயான்களில் கேட்பது போல "எதுக்குப்போனாலும் காசு செலவாவது" என்பதாகும். ஒரு மனிதன் ஹராமான முறையில் வியாபார மோசடி செய்து லட்சக்கணக்கில் பணத்தைச் சேர்க்கலாம். ஆனால், அல்லாஹ் அவனது வாழ்வில் 'பரகத்' என்ற நிம்மதியைத் தூக்கிவிடுவான்.பணம் இருக்கும், ஆனால்:எதிர்பாராத மருத்துவச் செலவுகள்,

குடும்பத்தில் திடீர் நெருக்கடிகள்,அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வு,என எதைத் தொட்டாலும் பல்லாயிரக்கணக்கில் பணம் கரன்சி நோட்டுகளாகக் கரைந்து கொண்டே போகும். உழைப்பில் பரகத் இல்லாததால், எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறையும், மன உளைச்சலும் மட்டுமே மிஞ்சும்.


3. ஜவ்ரிஸ் சுல்தான் (ஆட்சியாளர்களின் அநியாயம்):

வியாபாரத்தில் அநீதி இழைக்கும் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுக்கும் இறுதித் தண்டனை, இரக்கமில்லாத கொடூரமான ஆட்சியாளர்களை அவர்கள் மீது சாட்டுவதாகும். அந்த ஆட்சியாளர்கள் மக்களின் சொத்துக்களை வரியென்ற பெயரிலும், அநியாயமான சட்டங்களின் மூலமும் பறிமுதல் செய்வார்கள். சமுதாயத்தின் அநீதிக்கு அல்லாஹ் ஆட்சியாளர்களின் அநீதியைக் கொண்டு கூலி வழங்குகிறான்.


மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் கேட்டார்கள்:-


 أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ: بَلَغَنِي أَنَّ مُوسَى عَلَيْهِ السَّلَامُ قَالَ: يَا رَبِّ أَنْتَ فِي السَّمَاءِ وَنَحْنُ فِي الْأَرْضِ، فَمَا عَلَامَةُ غَضَبِكَ مِنْ رِضَاكَ؟ قَالَ: «إِذَا اسْتَعْمَلْتُ عَلَيْكُمْ خِيَارَكُمْ فَذَلِكَ مِنْ رِضَايَ عَلَيْكُمْ، وَإِذَا اسْتَعْمَلْتُ عَلَيْكُمْ شِرَارَكُمْ فَذَلِكَ مِنْ غَضَبِي عَلَيْكُمْ»

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒருமுறை 'தூர்' மலையில் அல்லாஹ்விடம் உரையாடும் போது, சமுதாயத்தின் நடப்பு நிலையை வைத்து அல்லாஹ்வின் எண்ணத்தை எப்படி அறிவது என்ற மாபெரும் கேள்வியைக் கேட்டார்கள்:

"என் ரப்பே! நீ வானத்தில் (உயரத்தில்) இருக்கிறாய், நாங்களோ பூமியில் இருக்கிறோம். நீ எங்களை நேசிக்கிறாயா அல்லது எங்கள் மீது கோபமாக இருக்கிறாயா என்பதை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்வது? அதற்கான அடையாளம் என்ன?


அல்லாஹ் அதற்கு மிக எளிமையான பதிலை அளித்தான். ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கோபமும் திருப்தியும், அச்சமுதாயத்தை ஆளும் ஆட்சியாளர்களின் குணத்தைப் பொறுத்தே அமைகிறது என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தினான்.


"மூஸாவே! அது மிக எளிய விஷயம். நான் உங்கள் மீது நல்ல ஆட்சியாளர்களை (மக்களுக்கு நன்மை செய்பவர்களை) பொறுப்பாளராக ஆக்கினால், நான் உங்கள் மீது திருப்தியாக (பொருத்தமாக) இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக, உங்கள் மீது கெட்டவர்களை (இரக்கமற்ற தீயவர்களை) ஆட்சியாளர்களாக அமர்த்தினால், நான் உங்கள் மீது அதிருப்தியில் (கோபத்தில்) இருக்கிறேன் என்று அர்த்தம்.”



இமாம் ஹஸன் அல்-பஷரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அநியாயக்கார ஆட்சியாளர்களைப் பற்றிக் கூறும்போது: "நிச்சயமாக அநியாயக்கார ஆட்சியாளர்கள் என்பவர்கள், சமுதாயத்தின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் இறக்கும் அவனது தண்டனையாகும் (ஆதாப்). அல்லாஹ்வின் தண்டனையை உங்களின் வாட்களைக் கொண்டு எதிர்க்க முற்படாதீர்கள்; மாறாக இறையச்சத்தோடும் (தக்வா), பாவமன்னிப்போடும் (இஸ்திக்ஃபார்) அல்லாஹ்விடம் கையேந்தி அதை மாற்றுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.


ஆட்சியாளர்களைக் குறை கூறுவதை விடுத்து, நாமும் நமது இல்லங்களும் அல்லாஹ்விற்கு அஞ்சி, பாவங்களை விட்டும் விலகித் தூய்மையடையும் போது, அல்லாஹ் தன் கோபத்தைத் தணித்து, நமக்கு நல்லாட்சியையும் சமுதாய பாதுகாப்பையும் நிச்சயம் வழங்குவான்.


வாக்குறுதி மீறுதல் 


عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ، وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ: ... وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ، إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ، فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை நோக்கி முன்னோக்கி அமர்ந்து கூறினார்கள்: 'முஹாஜிர்களின் கூட்டத்தாரே! ஐந்து சோதனைகள் உள்ளன; நீங்கள் அவற்றை அடைவதிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (அவற்றில் நான்காவது): எந்தவொரு சமுதாயமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கொடுத்த வாக்குறுதிகளையும் (உடன்படிக்கைகளையும்) முறித்துக் கொள்ளத் துவங்குகிறார்களோ, அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் மாற்று மதத்தைச் சேர்ந்த (அந்நிய) எதிரியை அவர்கள் மீது சாட்டிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை! அந்த எதிரி அவர்கள் கைகளில் (வசமிருக்கும் செல்வங்கள், நிலங்கள் மற்றும் உரிமைகளில்) சிலவற்றைப் பறித்துக் கொள்வான்!' " நூல்: இப்னு மாஜா


மனிதர்கள் பிறக்கும் போதே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குவோம் என்றும், அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்படுவோம் என்றும் 'அலஸ்து பிரப்பிகும்' என்ற நாளில் ரூஹுகளின் உலகத்தில் ஒரு மாபெரும் வாக்குறுதியைக் கொடுத்துள்ளனர்.

முஸ்லிமாக மாறும் போது, நபிகளாரின் வழிகாட்டுதலை மட்டுமே பின்பற்றுவோம் என்ற உடன்படிக்கையைச் செய்கிறார்கள். சமுதாயமாக முஸ்லிம்கள் எப்போது இந்த ஈமானிய வாக்குறுதிகளை மீறி, அல்லாஹ்வின் வரம்புகளைத் தகர்த்து, சுன்னத்துகளைப் புறக்கணிக்கத் துவங்குகிறார்களோ, அப்போது இந்தத் தண்டனை இறங்குகிறது. (தனிமனித வாழ்வில் மனிதர்களுக்கு மத்தியில் செய்யும் வாக்குறுதி மீறல்களும் இதில் அடங்கும்).


முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வாக்குறுதியை மீறும்போது, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் தண்டனை என்னவெனில், அவர்களுக்குச் சம்பந்தமில்லாத, மாற்று மதத்தைச் சேர்ந்த பிற இனத்து எதிரிகளை அவர்கள் மீது ஆட்சியாளர்களாகவோ அல்லது ஒடுக்குமுறையாளர்களாகவோ அமர்த்துவதாகும். அந்த எதிரிகளின் உள்ளங்களிலிருந்து முஸ்லிம்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் தூக்கிவிடுவான்.


வாக்குறுதி மீறும் சமுதாயத்தின் மீது சவாரி செய்யும் அந்த எதிரிகள், சும்மா இருக்க மாட்டார்கள். முஸ்லிம்களின் வசம் இருக்கும்:

வாழ்வாதாரச் செல்வங்கள் மற்றும் வர்த்தக உரிமைகளைப் பறிப்பார்கள்,

அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பூர்வீக நில ஆக்கிரமிப்புகளைச் செய்வார்கள், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளைக் கூடச் சட்டங்களின் மூலம் பிடுங்கிக் கொள்வார்கள்.

தீமையை தடுக்க வேண்டும் 


மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மறைவுக்குப் பிறகு பனூ இஸ்ரவேல் சமுதாயம் மீண்டும் தங்களின் பழைய பழக்கமான பாவங்கள், அநீதிகள் மற்றும் வரம்பு மீறல்களில் ஈடுபடத் துவங்கியது. அப்போது அந்தச் சமுதாயத்தை வழிநடத்திக் கொண்டிருந்த நபி யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வஹீயின் மூலம் ஒரு செய்தியை அறிவித்தான்:


"யூஷஃ அவர்களே! உங்களது சமுதாயத்திலிருந்து 40,000 நல்லவர்களையும், 60,000 தீயவர்களையும் (ஆக ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் பேரை) நான் ஒரே நேரத்தில் அழிக்கப் போகிறேன்!"


அல்லாஹ்வின் இந்த அறிவிப்பைக் கேட்டு திடுக்கிட்ட நபி யூஷஃ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் ஆச்சரியத்துடனும், நடுக்கத்துடனும் ஒரு கேள்வியைக் கேட்டார்கள்:

"என் ரப்பே! தீயவர்கள் 60,000 பேரை அவர்களின் பாவங்களின் காரணமாக, உனக்கு மாறு செய்ததற்காக நீ அழிப்பது நியாயம்தான், அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், எந்தப் பாவமும் செய்யாமல் உன்னை வணங்கி வாழ்ந்த அந்த 40,000 நல்லவர்களை எதற்காக அழிக்க வேண்டும்?"

அதற்கு அகிலங்களின் இறைவனான அல்லாஹ் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமே ஒரு பதிலை அளித்தான்:

"யூஷஃ அவர்களே! அந்த 40,000 நல்லவர்களும் நான் வெறுத்த பாவங்களை அந்தத் தீயவர்கள் பகிரங்கமாகச் செய்த போது, என் கோபத்திற்காக அவர்கள் கோபப்படவில்லை! தீமைகளைக் கண்டு அவர்களின் உள்ளங்கள் உருகவில்லை; மாறாக, பாவம் செய்பவர்களோடு சாதாரணமாக உட்கார்ந்தார்கள், அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டார்கள், குடித்தார்கள், தங்களின் நட்பு வட்டங்களை வளர்த்துக் கொண்டார்கள்! தீமைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கூட்டுப் பொறுப்பாக இருந்ததால், அழிவு வரும் போது அவர்களையும் சேர்த்தே அழிக்கப் போகிறேன்!” நூல்:கிதாபுஸ் ஸுஹ்த்



«أَوْحَى اللَّهُ تَعَالَى إِلَى نَبِيٍّ مِنَ الْأَنْبِيَاءِ: قُلْ لِأَوْلِيَائِي: لَا تَأْكُلُوا فِي بُيُوتِ أَعْدَائِي، وَلَا تَجْلِسُوا مَعَ أَعْدَائِي، وَلَا تُجَالِسُوهُمْ؛ فَإِنَّكُمْ إِنْ فَعَلْتُمْ ذَلِكَ أَهْلَكْتُكُمْ كَمَا أَهْلَكْتُهُمْ»


முந்தைய காலத்து நபிமார்களில் ஒருவருக்கு அல்லாஹ் வஹீயின் மூலம் தன் நல்லடியார்களான 'அவ்லியாக்களைக்' குறித்து இந்த உன்னதமான வழிகாட்டுதலை அறிவித்தான். அல்லாஹ் தன் கட்டளைகளை மீறி, ஹராமான முறையில் வியாபாரம் செய்து, வட்டி, மோசடி மற்றும் அநியாயங்களின் மூலம் சம்பாதிப்பவர்களைத் தன் "எதிரிகள்" (அவ்தா) என்று இந்த வஹீயில் பிரகடனப்படுத்துகிறான்.

"என்னுடைய தூதரே! என் மீது அன்பு செலுத்தும் நல்ல அடியார்களுக்குச் சொல்லுங்கள்: ஹராமான முறையில் சம்பாதிக்கும் என் எதிரிகளின் வீடுகளுக்குச் சென்று நீங்கள் சாப்பிட வேண்டாம்! ஹராமான வருமானம் உள்ள என் எதிரிகளோடு ஒன்றாக அமர்ந்து உண்ணவோ, குடிக்கவோ செய்யாதீர்கள்! அவர்களோடு சபைகளில் அமர்வதையோ, எழுந்து பழகுவதையோ முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!"

இந்த வஹீயின் இறுதிப் பகுதியில் அல்லாஹ் எச்சரிக்கையைத் தருகிறான்.


"நல்லோர்களே! நீங்கள் அந்த ஹராமான வருமானம் உடையவர்களோடு சகஜமாகப் பழகி, அவர்களின் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களோடு சபைகளில் அமர்ந்தால்... அந்த ஹராமான சம்பாத்தியத்தின் காரணமாக என் எதிரிகளை நான் எப்படி அழிப்பேனோ, அதேபோல (அதைத் தடுக்காமல் அவர்களோடு இணக்கமாக இருந்ததற்காக) உங்களையும் அவர்களோடு சேர்த்தே நான் அழித்துவிடுவேன்!”


ஒரு சொந்தக்காரர் அல்லது நண்பர் ஹராமாகச் சம்பாதிப்பது தெரிந்தால், உறவு கெட்டுவிடும் என்று அஞ்சி அவரோடு இணக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

ஹராமான வருமானம் உள்ளவர்களின் வீடுகளில் போய் சாப்பிட்டால், அல்லாஹ் அந்தப் பாவிகளுக்கு இறக்கும் ஒட்டுமொத்த அழிவிலும், சோதனையிலும் நாமும் நம் குடும்பத்தாரும் சிக்கிக் கொள்ள நேரிடும்.


ரொட்டிக்காரரை நினைவு கூறுங்கள்"


அபு மூஸா அல்-அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை மிக அழகான முறையில் ஓதக்கூடிய ஒரு சிறந்த ஸஹாபியாவார். அவர்கள் தனது மரணத் தருவாயில், மயக்கமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலையில் இருந்தார்கள். அப்போது அவர்கள் தன் பிள்ளைகளை நோக்கி, "சாஹிபுர் ரகீஃப்-ஐ (ரொட்டிக்காரரை) நினைவு கூறுங்கள்" என்று அடிக்கடி கூறினார்கள்.


மரணிக்கப் போகும் நேரத்தில் தந்தை ஏன் ஒரு ரொட்டிக்காரரை நினைவு கூறச் சொல்கிறார் என்று பிள்ளைகளுக்குப் புரியவில்லை. அவர்கள் தந்தையிடமே அதன் விளக்கத்தைக் கேட்டபோது, அபு மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தைக் கூறினார்கள்:


முந்தைய சமுதாயத்தில் இறைவணக்கத்திலேயே எப்போதும் மூழ்கியிருந்த ஒரு பெரிய வணக்கசாலி இருந்தார். அவர் சுமார் 70 ஆண்டுகள் ஒரு மடத்தில் தங்கி இறைவனை மட்டுமே வழிபட்டு வந்தார். அவர் வாரத்தில் ஒரே ஒரு நாள் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியே வருவார்.


ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியே வந்தபோது, ஒரு பெண்ணைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி, அவளோடு ஒரு வார காலம் தவறான வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்.


ஒரு வாரத்திற்குப் பிறகு தான் செய்த தவறை உணர்ந்து, "70 ஆண்டுக்கால எனது வணக்கங்கள் எல்லாம் வீணாகிவிட்டதே!" என்று கதறி அழுதார்.


மடத்தை நோக்கி அவர் திரும்பியபோது, ஒவ்வொரு எட்டு எடுத்து வைக்கும் போதும் இரண்டு ரக்அத்கள் தொழுது, சஜ்தாவில் விழுந்து அழுது பாவமன்னிப்புத் தேடினார்.


இப்படியே அழுதுகொண்டே இரவு நேரத்தில் ஒரு இடத்தை வந்தடைந்தார். அங்கு 12 ஏழைகள் (மிஸ்கீன்கள்) தங்கியிருந்தனர். அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு பாதிரியார், தினமும் இரவு நேரத்தில் அந்த 12 ஏழைகளுக்கும் ஆளுக்கு ஒரு ரொட்டி வீதம் கொடுத்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


அன்று ரொட்டி கொடுப்பவர் வந்து ஏழைகளுக்கு ரொட்டியைப் பகிர்ந்து அளிக்கும்போது, அங்கு இடையில் வந்து அமர்ந்திருந்த இந்த வணக்கசாலிக்கும் ஒரு ரொட்டியைக் கொடுத்துவிட்டார். இதனால், வழக்கமாக வாங்கும் 12 ஏழைகளில் ஒருவருக்கு ரொட்டி கிடைக்காமல் போனது.


அவர் "எனக்கு இன்று ரொட்டி கிடைக்கவில்லை" என்று கேட்டபோது, ரொட்டி கொடுத்தவர் "நான் எப்போதும் போலத்தான் கொடுத்தேன்" என்றார். இதை கவனித்த வணக்கசாலி, தான் இடையில் வந்ததால் ஒரு ஏழையின் உணவு பறிபோனதை உணர்ந்தார். உடனடியாகத் தன்னிடம் இருந்த ரொட்டியை அந்த ஏழையிடம் கொடுத்து, "நான் பசியோடு இருந்தாலும் பரவாயில்லை, என்னால் உனக்கு பசி ஏற்பட்டுவிடக் கூடாது" என்று தர்மம் செய்தார். அந்த ரொட்டியைக் கொடுத்த அடுத்த கணமே அவர் மரணமடைந்தார்.


மறுமை நாளில் அவர் இறைவனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டபோது: அவரின் 70 ஆண்டுக்கால வணக்கங்கள் ஒரு தட்டிலும், அவர் அந்தப் பெண்ணோடு வாழ்ந்த ஒரு வார கால பாவம் மறுதட்டிலும் வைக்கப்பட்டன. அப்போது, அந்த ஒரு வார கால பாவம் அவரின் 70 வருட வணக்கங்களை அழித்து, தராசுப் பாவம் பக்கம் சாய்ந்தது.


பின்னர், அவர் பசியோடு இருந்த ஏழைக்குக் கொடுத்த அந்த ஒரு ரொட்டியின் தர்மம் ஒரு தட்டிலும், அந்த ஒரு வார கால பாவம் மறுதட்டிலும் வைக்கப்பட்டன. அப்போது, அந்த ஒரு ரொட்டியின் தர்மம் அந்த ஒரு வார கால பாவத்தை விடப் பாரமாகி, அதனை அழித்துவிட்டது.


இதன் காரணமாக அவர் சொர்க்கம் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


அபு மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த வரலாற்றைக் கூறி, "எந்த நற்செயல் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்றோ, எந்தப் பாவம் உங்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்றோ உங்களால் கணிக்க முடியாது. எனவே, எந்த ஒரு சிறிய நன்மையையும் அலட்சியப்படுத்தாமல் செய்யுங்கள்; எந்த ஒரு சிறிய பாவத்தையும் சாதாரணமானது என்று நினைத்துச் செய்துவிடாதீர்கள்" என்ற மிக முக்கியப் பாடத்தைத் தன் பிள்ளைகளுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் உணர்த்தினார்கள்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக! பாவங்களைச் சிறியது பெரியது என்றெல்லாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. 


எல்லாப் பாவங்களும் ஒரு மனிதனுடைய அழிவுக்குக் காரணமானவை தான். எல்லாப் பாவங்களையும் விடுகிற போதுதான் இந்தச் சமுதாயத்திற்கு அல்லாஹ் உயர்வைத் தருகிறான். 


எந்த சிறு நன்மையும் விடாமல் செய்யும் பாக்கியத்தையும் அல்லாஹ் நமக்கு தருவானாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் பாவங்களிலிருந்தும் மீண்டு, உண்மையான முஸ்லிம்களாக வாழக்கூடிய தவ்ஃபீகைத் தருவானாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.



தொகுத்தவர்.


மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக