வேண்டாம் வீண் விரயம்
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ.
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَعَنْ جِسْمِهِ فِيمَا أَبْلَاهُ(سنن الترمذي)
இன்று வீண் விரயம் எல்லா வகையிலும் வந்துவிட்டது. பொருளில், உணவில், நீரில், நேரத்தில், பேச்சில் , என் அத்துனையிலும் சர்வ சாதாரணமாக வீண் விரயம் வந்து விட்டது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:-உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை (அல்-அஃராஃப்: 31).
தேவைக்கு மீறி பொருளை வீணடிப்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள் (அல்-இஸ்ரா: 27).
வீண் அரட்டைகள் பேசுவது, செல்வத்தை வீணடிப்பது (இழாஅத்துல் மால்), தேவையின்றி யாசிப்பது ஆகிய மூன்றையும் இறைவன் வெறுக்கிறான் (புகாரி).
மறுமை நாளில் மனிதனிடம் விசாரிக்கப்படும் 4 முக்கியக் கேள்விகளில் அவனது ஆயுள், இளமை, உடல் நலம், மற்றும் செல்வத்தைச் செலவழித்த விதம் ஆகியவை அடங்கும் (திர்மிதி).
சில நொடிகள் வெளிச்சத்திற்காகவும் சத்தத்திற்காகவும் பணத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கும் அறியாமை.
"ஊரார் மெச்ச வேண்டும்" என்ற போலி கௌரவத்திற்காகக் கடன் வாங்கிச் செய்யப்படும் மேடை அலங்காரங்கள் மற்றும் தகுதிக்கு மீறிய செலவுகள்.
தேவைக்காக அன்றி, அடுத்தவருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தவணை முறையில் (EMI) விலையுயர்ந்த ஆடைகள், மொபைல் போன்கள் வாங்குவது.
ரீல்ஸ், மீம்ஸ், ஷார்ட்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் பொழுதைக் கழித்து மூலதனமான ஆயுளைக் கரைப்பது.
தேநீர்க் கடைகளிலும் தெரு முனைகளிலும் அமர்ந்து விவாதிக்கும் வெட்டிப் பேச்சுகள்.
குர்ஆன் ஓதவும், தொழவும், குடும்பத்தைக் கவனிக்கவும் நேரமில்லை என்று கூறிவிட்டு மொபைல் திரையில் நேரத்தை அழிப்பது.
விசேஷங்களிலும் வீடுகளிலும் தட்டுகளில் உணவைக் குவித்து வைத்துவிட்டு, மீதத்தைக் குப்பைத் தொட்டியில் எறிவது.
முகம் கழுவும்போதும், குளிக்கும்போதும், பாத்திரங்கள் கழுவும்போதும் குழாய்களை இடைவிடாமல் ஓடவிடுவது.
ஓடும் நதிக்கரையில் அமர்ந்து ஒழுச் செய்தாலும் கூட அங்கே தண்ணீரை வீணடிக்கக் கூடாது (இப்னு மாஜா).
இரவுத் தூக்கமின்மை, துரித உணவுகள் (Fast Food), புகை மற்றும் போதைப் பழக்கங்கள் மூலம் இறைவன் தந்த ஆரோக்கியமான உடலை விஷமாக்குவது.
ஆற்றலும் துடிப்பும் உள்ள வயதில் லட்சியமும் உழைப்பும் இன்றி பொழுதைக் கழிப்பது.
புறம், கோள் மூட்டுதல், அடுத்தவர் குறைகளைப் பேசுதல் மற்றும் பொய் பரப்புரைகள் மூலம் சம்பாதித்த நன்மைகளை அழிப்பது.
: إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
"நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாவர்; ஷைத்தானோ தன் இறைவனுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்." (அல்-இஸ்ரா: 27)
ஓடும் நதியில் ஒழுச் செய்தாலும் விரயம் செய்யாதீர்:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ، فَقَالَ:«مَا هَذَا السَّرَفُ؟»فَقَالَ: أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ؟ قَالَ: نَعَمْ، وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ(سنن ابن ماجه
ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒழுச் செய்து கொண்டிருந்தபோது நபி ﷺ அவர்கள் கடந்து சென்று, "என்ன இந்த வீண் விரயம்?" என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு "ஒழுவிலும் வீண் விரயம் உண்டா?" எனக் கேட்க, நபி ﷺ அவர்கள்: "ஆம், நீர் ஓடும் நதிக்கரையில் இருந்தாலும் சரியே!" என்றார்கள். (நூல்:இப்னு மாஜா)
பொருளாதார & ஆடம்பர விரயம்:
அடுத்தவர் மெச்ச வேண்டும் என்பதற்காகத் திருமணங்களிலும் விசேஷங்களிலும் செய்யப்படும் மிதமிஞ்சிய செலவுகள்.
தகுதிக்கு மீறிய வாழ்க்கை முறை, பிராண்ட் மோகம் மற்றும் வீண் பெருமைக்கான கொள்முதல்கள்.
சில நொடிகள் வெளிச்சத்திற்காகவும், காதை பிளக்கும் சத்தத்திற்காகவும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை காற்றில் கரியாக்கும் செயல்.
இது செல்வத்தை அழிக்கும் நேரடி விரயம் மட்டுமல்ல; சுற்றுப்புறச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் குற்றம்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ் மூன்று காரியங்களை உங்களுக்கு வெறுக்கிறான்:1.வீண் பேச்சுகள் (அரட்டைகள்) 2.செல்வத்தை வீணடிப்பது (இழாஅத்துல் மால்) 3.அதிக அளவில் (தேவையின்றி) பிறரிடம் யாசிப்பது."* (புகாரி,)
பட்டாசாகக் கொளுத்திச் சாம்பலாக்கும் அதே தொகையில், எத்தனை ஏழை வீடுகளில் பல நாட்களுக்கு அடுப்பு எரியும்? எத்தனை எளிய மாணவர்களின் கல்விக் கட்டணம் தீரும்?
பிற சமுதாய மக்கள் தங்களுடைய மத நம்பிக்கையின் அடிப்படையிலும் கலாச்சாரத்தின் அடிப்படையிலும் பண்டிகைகளைக் கொண்டாடுவதும், வழிபாடுகளை மேற்கொள்வதும் அவர்களுடைய உரிமை. அதில் குறை சொல்வதோ தலையிடுவதோ ஒரு முஸ்லிமின் வேலையல்ல.
"ஆனால், ஓர் ஏகத்துவவாதியாக... குர்ஆனையும் நபிகளாரின் சுன்னாவையும் வழிகாட்டியாக ஏற்ற ஒரு முஸ்லிம், அடுத்தவர்களைப் பார்த்து அந்தப் பழக்கத்தை நாம் கொண்டு வரலாமா?”
"நமது சந்தோஷம் ஏழைகளுக்கு உணவளிப்பதிலும், உறவுகளைப் பேணுவதிலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு சுஜூது செய்து நன்றி செலுத்துவதிலுமே இருக்க வேண்டும்; காசைக் கரியாக்குவதிலோ, நச்சுப் புகையை பரப்புவதிலோ இருக்கக் கூடாது.”
இறைவனின் நேசத்திற்குரிய அடியார்களின் குணம்:
وَالَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًا
"அவர்கள் எத்தகையோரென்றால், செலவு செய்தால் வீண் விரயம் செய்ய மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். மாறாக, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான பாதையையே மேற்கொள்வார்கள்." (அல்-ஃபுர்கான்: 67)
அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் வாழ்வில்…
நான்கு பெரும் மத்ஹபுகளின் இமாம்களில் ஒருவரான அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஹதீஸ் கலை அறிஞராகவும், கடுமையான வறுமையிலும் வாழ்ந்த மாபெரும் இறையச்சமுடையவராகவும் திகழ்ந்தார்கள்.
இமாம் அவர்கள் மார்க்கக் கல்வி கற்பித்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர்களின் மனைவி ஒரு சிறிய துண்டு காய்ந்த ரொட்டியையும், சிறிது ஆலிவ் எண்ணெயையும் உணவாகக் கொண்டுவந்து வைத்தார்கள். அப்போது அவர்களின் மகன், "தந்தையே! நமது உணவில் சுவை கூட்ட இன்னும் கொஞ்சம் நெய்யோ அல்லது இறைச்சியோ சேர்த்திருக்கலாமே?" என்று கேட்டார்.
இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புன்னகைத்துவிட்டுச் சொன்னார்கள்: "மகனே! வயிற்றை நிரப்புவது பசியைப் போக்குவதற்கே தவிர, நாவிற்கு நளினம் காட்டுவதற்காக அல்ல. நாம் தேவையற்ற சுவைக்காகவும் பகட்டிற்காகவும் செலவிடும் ஒவ்வொரு கூடுதல் வெள்ளிக் காசும், நாளை மறுமையில் 'இதை எதற்காக வாங்கினாய்?' என்ற நீண்ட கேள்விக்கு வழிவகுக்கும். உடல் இபாதத் செய்வதற்கு இந்த எளிய உணவே போதுமானது; இதில் வீண் விரயம் என்ற பயமில்லை."
உலகம் புகழும் அறிஞராக இருந்தும், நாவின் ருசிக்காகவும் தட்டுகளின் அலங்காரத்திற்காகவும் வீண் செலவு செய்ய அஞ்சியவர்கள் நம் முன்னோர்கள். இன்று நாம் உணவகங்களிலும் விசேஷங்களிலும் தட்டுகளில் வீசி எறியும் உணவுகளையும், வீண் பெருமைக்காக வாங்கும் ஆடம்பர உணவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ஹஸன் அல்-பஸரி (ரஹ்)
தாபியீன்களின் தலைசிறந்த வழிகாட்டியும், மாபெரும் ஆன்மீக ஞானியுமான ஹஸன் அல்-பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், வீண் பகட்டையும் ஆடம்பரக் கட்டுமானங்களையும் கடுமையாகக் கண்டித்து வந்தார்கள்.
பஸ்ரா நகரில் ஒரு செல்வந்தர் தன் வீட்டிற்கு மிக ஆடம்பரமாக வர்ணம் பூசி, பெரிய அலங்கார வளைவுகளையும் தூண்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட ஹஸன் அல்-பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அங்கு நின்று வேதனையோடு அந்த வீட்டைப் பார்த்தார்கள்
அங்கிருந்த மக்களைப் பார்த்து அவர்கள் கூறினார்கள்: "மனிதன் எவ்வளவு விசித்திரமானவன்! மண்ணால் படைக்கப்பட்ட இந்த உடலை மண்ணுக்குள் புதைக்கப் போகிறோம் என்பதை அறிந்திருந்தும், அதே மண்ணை எடுத்து வானளவு உயர்த்தி பெருமை பாராட்டுகிறான்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபித்தோழர்கள் வாழ்ந்தபோது, தலைக்கு ஒரு கூரையும் மழைக்கு ஒரு பாதுகாப்பும் கிடைத்தால் போதும் என்று நினைத்தார்கள். ஆனால் நீங்களோ, வாழ்வது சில நாட்கள், கட்டுவதோ பல தலைமுறைகளுக்கு; இது வெறும் செல்வ விரயமும் வீண் பெருமையும் அன்றி வேறில்லை!"
தேவைக்கான வீட்டை இஸ்லாம் எதிர்க்கவில்லை; ஆனால் அடுத்தவர் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காகவே கோடிக்கணக்கில் செலவழித்து, தேவைக்கு அதிகமான அறைகளையும் அலங்காரங்களையும் கட்டி வீண் பெருமை அடிப்பது பொருளாதார விரயம் என்பதை இது உணர்த்துகிறது.
"அரச உடையும் எளிய கம்பளியும்"
பல்க் (Balkh) நாட்டின் பேரரசராக இருந்து, அரச போகங்கள், பட்டாடைகள், தங்கப் பாத்திரங்கள் மற்றும் மாளிகை ஆடம்பரங்கள் அனைத்தையும் துறந்து இறைநேசராக மாறியவர்.
அரண்மனையில் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள் இரவு மாளிகையின் கூரையில் யாரோ நடப்பது போன்ற சத்தம் கேட்டது. இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், "யாரது கூரையில்?" எனக் கேட்க, கூரையில் இருந்தவர், "தொலைந்துபோன எனது ஒட்டகத்தைத் தேடுகிறேன்" என்றார். அரசர் கோபத்துடன், "முட்டாளே! மாளிகைக் கூரையிலா ஒட்டகம் இருக்கும்?" என்றார். அதற்கு அந்த மனிதர், "அரசரே! நீங்கள் பட்டு மெத்தையிலும், நவரத்தின மாளிகையிலும், ஆடம்பர போதையிலும் இருந்துகொண்டு இறைவனைத் தேடுவதை விடவா கூரையில் ஒட்டகம் தேடுவது ஆச்சரியம்?" என்றார்.
அந்த ஒரு வார்த்தை அவர்களின் இதயத்தைத் தைத்தது. செல்வமும் பொன்னும் ஆடம்பரமும் தன்னை இறைவனை விட்டும் தூரமாக்குகிறது என்பதை உணர்ந்து, அரச கிரீடத்தையும் ஆடம்பர உடைகளையும் கழற்றிவிட்டு எளிய கம்பளி ஆடையை உடுத்திக்கொண்டு வெளியேறினார்கள்.
"உங்களிடம் செல்வம் இருந்தால் அதை அல்லாஹ்வின் பாதையில் வாரி இறைத்துவிடுங்கள்; உங்களை அலங்கரிக்க அதை ஆடையாகவும் மாளிகையாகவும் மாற்றாதீர்கள். ஏனெனில் செல்வம் பெருமை சேர்க்கும்போது இறை அச்சம் விடைபெற்றுவிடும்.
மனிதன் ஆடம்பரத்தாலும், பிராண்ட் மோகத்தாலும் தன்னை அலங்கரிக்க நினைக்கும்போது மனம் கடினமாகிவிடும். எளிய வாழ்க்கையும் மன நிறைவுமே (கனாஅத்) உண்மையான இறைநேசர்களின் பண்பு.
"பயனற்ற பேச்சும் விரயமே"
பக்தாத் நகரின் மாபெரும் ஆன்மீக வழிகாட்டியான மஃரூஃப் அல்-கர்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், நேர விரயத்தையும் வீண் பேச்சையும் பெரும் ஆபத்தாகக் கருதினார்கள்.
அவர்களது அவையில் அமர்ந்திருந்த சிலர், ஊரில் நடந்த ஒரு விவாதத்தைப் பற்றியும், யார் அதிக வசதியானவர் என்பது பற்றியும் தேவையின்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மஃரூஃப் அல்-கர்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அவர்களை இடைமறித்துக் கூறினார்கள்:
"ஓர் அடியானை விட்டு அல்லாஹ் தனது அருட்பார்வையைத் திருப்பிவிட்டான் (அவனை வெறுத்துவிட்டான்) என்பதற்குரிய அடையாளம் என்ன தெரியுமா? அவனுக்குப் பயனற்ற விஷயங்களில் அவன் நேரத்தையும் பேச்சையும் செலவிடுவதே ஆகும்."
பொருளாதார விரயத்தை விட மோசமானது ஆயுளின் விரயம். காசை இழந்தால் சம்பாதித்துவிடலாம்; ஆனால் பேச்சிலும் வெட்டி அரட்டைகளிலும் வீணாகும் காலத்தை மீண்டும் பெற முடியாது.
நேர விரயம்:
பயனுள்ள காரியங்கள் இன்றி சமூக வலைத்தளங்களிலும் வீண் பேச்சுகளிலும் பொழுதைக் கழிப்பது.
மறுமைக்கு உதவாத வெட்டி அரட்டைகள்.
காலத்தின் மீது சத்தியம் செய்து அல்லாஹ் கூறுகிறான்:-
وَالْعَصْرِ ۙ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
"காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் பெரும் நஷ்டத்தில் இருக்கிறான்." (அல்-அஸ்ர்: 1-2)
காலத்தை இறைவன் சத்தியம் செய்து கூறுவதே அதன் புனிதத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. நன்மைகளின்றி கழியும் ஒவ்வொரு நொடியும் மனிதனை நஷ்டவாளியாக்குகிறது.
ஏமாந்துபோகும் இரண்டு அருட்கொடைகள்
> عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
> «نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالْفَرَاغُ»
"மனிதர்களில் பெரும்பாலோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் ஏமாந்து விடுகிறார்கள் (அதன் அருளை உணர்வதில்லை):
1) ஆரோக்கியம் 2)ஓய்வு (நேரம்)."* (ஸஹீஹுல் புகாரி)
இஸ்லாத்தின் அழகு (வீணானதை விடுவது):
> قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
> «مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
"தனக்குத் தொடர்பில்லாத (பயனற்ற) காரியங்களை விட்டுவிடுவதே ஒரு மனிதனின் இஸ்லாமிய அழகுகளில் ஒன்றாகும்." (திர்மிதி: 2317)
சமூக வலைத்தளங்களும் வெட்டி அரட்டைகளும்
சில நிமிடங்கள் பார்க்கத் தொடங்கும் ரீல்ஸ் (Reels), ஷார்ட்ஸ் (Shorts), மீம்ஸ்கள் (Memes) மணிக்கணக்கில் தொடர்கின்றன.
"டைம்பாஸ்" (Time pass) என்று நாம் எளிதாகச் சொல்லும் இந்தச் செயல், உண்மையில் நமது "ஆயுளைப் பாஸ்" (Life pass) செய்கிறது. ஆயுள்தான் மனிதனின் மூலதனம்; அதை வீணடிப்பதில் எவ்வித அறிவார்ந்த நன்மையும் இல்லை.
வெட்டி அரட்டைகள் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்கள்:
தேநீர்க் கடைகளிலும், தெரு முனைகளிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் அரசியலையோ அல்லது அடுத்தவர் குடும்ப விவகாரங்களையோ மணிக்கணக்கில் காரசாரமாகப் பேசிப் பொழுதைக் கழிப்பது.
இதில் பொய், புறம், கோள் மூட்டுதல், பரிகாசம் போன்ற பெரும் பாவங்கள் அறியாமலேயே கலந்துவிடுகின்றன.
தொழுகைக்கு நேரமில்லை, குர்ஆன் ஓத நேரமில்லை, குடும்பத்தை கவனிக்க நேரமில்லை என்று கூறுவோர், சமூக வலைத்தளங்களுக்கும் அரட்டைகளுக்கும் பல மணிநேரங்களை தாராளமாக ஒதுக்குகின்றனர்.
"ரொட்டியைத் தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்ட அறிஞர்"
இஸ்லாமிய வரலாற்றின் மிக பிரம்மாண்டமான நூல்களில் ஒன்றான 'கிதாபுல் ஃபுனூன்' (சுமார் 800 பாகங்கள் கொண்டது) என்ற மாபெரும் நூலை எழுதிய இமாம் அபூ வஃபா இப்னு அகீல் அல்-ஹன்பலீ (ரஹ்).
இமாம் இப்னு அகீல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சாப்பிடும் நேரத்தைக் கூட குறைத்து, அதை வாசிப்பிலும் எழுதுவதிலும் பயன்படுத்த நினைத்தார்கள். அவர்கள் கூறுவார்கள்:
"காய்ந்த ரொட்டியைக் கடித்து மென்று தின்பதற்கும், அதைத் தண்ணீரில் நனைத்து விழுங்குவதற்கும் இடையே சில நிமிடங்கள் வித்தியாசம் இருப்பதை நான் கவனித்தேன். அந்தச் சில நிமிடங்களில் குர்ஆனின் 50 வசனங்களை ஓதிவிடலாம் அல்லது சில மஸ்அலாக்களை (மார்க்கச் சட்டங்களை) எழுதிவிடலாம். எனவே, மென்று தின்னும் நேரத்தைக் குறைப்பதற்காக நான் ரொட்டியைத் தண்ணீரில் நனைத்து அவசரமாக விழுங்கிவிட்டு, எஞ்சிய நேரத்தைப் படிப்பிலும் எழுத்திலும் கழிப்பேன்!"
«إِنِّي لَا يَحِلُّ لِي أَنْ أُضَيِّعَ سَاعَةً مِنْ عُمْرِي، حَتَّى إِذَا تَعَطَّلَ لِسَانِي عَنْ مُذَاكَرَةٍ وَمُنَاظَرَةٍ، وَبَصَرِي عَنْ مُطَالَعَةٍ، أَعْمَلْتُ فِكْرِي فِي حَالِ رَاحَتِي وَأَنَا مُنْطَرِحٌ، فَلَا أَنْهَضُ إِلَّا وَقَدْ خَطَرَ لِي مَا أُسَطِّرُهُ»
"எனது ஆயுளில் ஒரு விநாடி கூட வீணாகக் கழிவதை நான் அனுமதிக்க மாட்டேன்; நாவால் பேசவும் கண்களால் பார்க்கவும் முடியாத களைப்பு ஏற்படும் போது மட்டுமே படுத்து ஓய்வெடுப்பேன். மீண்டும் புத்துணர்ச்சி வந்ததும் வாசிக்கத் தொடங்கிவிடுவேன்."
ஒரு நிமிடத்தைக் கூட இறை வழியில் உபயோகிக்கத் துடித்தார்கள் நம் முன்னோர்கள். நாமோ சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் திரையை உருட்டிக் கொண்டிருக்கிறோம் (Infinite Scrolling).
"சூரியனை நிறுத்திவிட்டுப் பேசு!
பஸராவைச் சேர்ந்த தாபியீன்களில் மாபெரும் வணக்கசாலியாகவும், நேரத்தை மிகக் கச்சிதமாகப் பாதுகாத்தவராகவும் திகழ்ந்த இமாம் ஆமிர் பின் அப்தில் கைஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை இவர் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் நின்ற ஒரு மனிதர் அவரை வழிமறித்து, "வாருங்கள், சிறிது நேரம் நின்று பேசிவிட்டுப் போகலாம்" என்று அரட்டைக்கு அழைத்தார்.
அதற்கு ஆமிர் பின் அப்தில் கைஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சற்றும் தாமதிக்காமல் சொன்னார்கள்:
«أَمْسِكِ الشَّمْسَ حَتَّى أُكَلِّمَكَ»
"அப்படியானால் ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சூரியனை ஒரு விநாடி நிறுத்தி வை; நான் உன்னோடு பேசுகிறேன்!"
அந்த மனிதர் புரியாமல் திகைக்க, இமாம் அவர்கள் விளக்கினார்கள்: "காலம் அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது; அது ஒருபோதும் எனக்காக நிற்காது. நான் உன்னோடு வெட்டிப் பேச்சுப் பேசினால் அந்த நேரம் எனது ஆயுளிலிருந்து நஷ்டமாகப் போய்விடும். நஷ்டமடையும் நேரத்தை மீட்டுத் தர உன்னால் முடியுமா?" என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.
நேரம் என்பது நதி நீர் போல; ஓடிய நீரை மீண்டும் தொட முடியாது. அடுத்தவர்களின் வெட்டிப் பேச்சுகளுக்குப் பலியாகி நம் ஆயுளைக் கரைத்துவிடக் கூடாது என்பதற்கு இது சிறந்த பாடம்.
"விருந்தாளிகளிடம் நேர விரயத்தைத் தவிர்த்த உத்தி"
நூற்றுக்கணக்கான நூல்களை இயற்றிய இமாம் அப்துர் ரஹ்மான் இப்னுல் ஜவ்ஸீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பார்க்கப் பலர் வருவார்கள். அவர்களில் சிலர் பயனற்ற அரட்டைகளில் ஈடுபடுவார்கள். அவர்களை விரட்டவும் முடியாது (விருந்தோம்பல் சுன்னத் என்பதால்), அதே நேரம் தன் பொன்னான நேரத்தை வீணடிக்கவும் இமாம் விரும்பவில்லை.
இமாம் அவர்கள் சொன்னார்கள்: "சிலர் என்னிடம் வந்து நீண்ட நேரம் வீண் பேச்சுகள் பேசுவார்கள். நான் அந்த நேரத்தை வீணாக்காமல் இருக்க ஒரு வழி செய்தேன். பேனாக்களைச் சீவுவது, காகிதங்களை ஒழுங்குபடுத்துவது, புத்தகங்களைத் தைப்பது போன்ற மூளையின் சிந்தனை அதிகம் தேவையில்லாத வேலைகளை இத்தகைய விருந்தினர்கள் வரும் நேரத்திற்காக ஒதுக்கி வைப்பேன். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் இந்த வேலைகளை முடித்துவிடுவேன்; என் நேரமும் விரயமாகாது, அவர்களின் மனமும் புண்படாது."
நட்பின் பெயராலும், உறவின் பெயராலும் கூடும் இடங்களில் கூட நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற நம் முன்னோர்கள் வழி தேடினார்கள்.
நேரத்திற்கு பட்ஜெட் போடுங்கள்: பணத்திற்கு வரவு-செலவு கணக்குப் பார்ப்பது போல், ஒரு நாளின் 24 மணிநேரத்திற்கு கணக்குப் பாருங்கள்.
தேவையற்ற நோட்டிஃபிகேஷன்களை அணைத்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மொபைல் திரையைப் பார்ப்பதில்லை என உறுதி பூணுங்கள்.
வாகனப் பயணங்கள், காத்திருக்கும் நேரங்கள் போன்ற வெற்று நேரங்களை சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், இஸ்திஃபார், ஸலவாத் போன்ற திக்ருகளால் நிரப்புங்கள்.
உணவு மற்றும் நீர் விரயம்:
விருந்துகளிலும் வீடுகளிலும் தட்டுகளில் உணவை வீசி எறிவது.
குளிக்கும்போதும் ஒழுச் செய்யும்போதும் தண்ணீரைத் தாராளமாக வீணாக்குவது.
> كُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
"உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அவன் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை." (அல்-அஃராஃப்: 31)
* கீழே விழுந்த உணவையும் வீணாக்காத சுன்னத்:
> عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
> «إِذَا وَقَعَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيَأْخُذْهَا، فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى وَلْيَأْكُلْهَا، وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ، وَلَا يَمْسَحْ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَ أَصَابِعَهُ، فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ الْبَرَكَةُ»
"உங்களில் ஒருவரது உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால், அவர் அதில் படிந்துள்ள தூசியைத் துடைத்துவிட்டு அதை உண்ணட்டும்; அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், தனது விரல்களைச் சூப்பும் வரை கைக்குட்டையால் துடைக்க வேண்டாம். ஏனெனில், உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் இருக்கிறது என்பதை அவர் அறிய மாட்டார்." (ஸஹீஹ் முஸ்லிம்: )
நபி ﷺ அவர்களின் தண்ணீர் பயன்பாடு (முத் மற்றும் ஸாஉ):
> عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ، إِلَى خَمْسَةِ أَمْدَادٍ»
"நபி ﷺ அவர்கள் ஒரு 'முத்' (சுமார் 650 மில்லி லிட்டர்) தண்ணீரைக் கொண்டு ஒழுச் செய்வார்கள்; ஒரு 'ஸாஉ' (சுமார் 2.5 முதல் 3 லிட்டர்) தண்ணீரைக் கொண்டு குளிப்பார்கள்." (ஸஹீஹுல் புகாரி: 201, ஸஹீஹ் முஸ்லிம்: 325)
தட்டுகளில் மலைபோல் உணவைக் குவித்து வைத்து, இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு அப்படியே குப்பைத் தொட்டியில் கொட்டுவது.
பல நூறு மனிதர்களின் உழைப்பும், அல்லாஹ்வின் பெரும் அருட்கொடையும் நள்ளிரவில் கழிவு லாரிகளில் ஏற்றப்படும் பரிதாபம்.
உலகில் பல கோடி மக்கள் ஒருவேளை உணவின்றி பசியால் வாடும் நிலையில், நாம் உணவைக் குப்பையில் எறிவது அல்லாஹ்வின் கோபத்தை வரவழைக்கும் நன்றிகெட்ட செயல்.
குழாய்களைத் திறந்து வைத்துத் தண்ணீர் வீணடித்தல்:
முகம் கழுவும்போதும், பல் துலக்கும்போதும், பாத்திரங்கள் கழுவும்போதும் குழாய்களை இடைவிடாமல் ஓடவிடுவது.
பள்ளிவாசல்களில் ஒழுச் செய்யும்போது தேவையை விட பல மடங்கு நீரை வீணடிப்பது.
"ஓடும் நதிக்கரையில் இருந்தாலும் ஒழுவில் விரயம் செய்யாதீர்" என்ற நபிமொழியை மறந்துவிட்டு, தொட்டியில் நீர் இருக்கிறது என்பதற்காக வாரி இறைப்பது.
"அல்லாஹ்வின் அருளை மதித்தல்"
ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்த நபி ﷺ அவர்கள், தரையில் ஒரு காய்ந்த பேரீச்சம்பழத் துண்டு கிடப்பதைக் கண்டார்கள்.
அதை அலட்சியமாகக் கடந்து செல்லாமல், கீழே குனிந்து அதை எடுத்து, அதில் படிந்திருந்த தூசியைத் துடைத்துவிட்டுத் தம் வாயில் இட்டுக் கொண்டார்கள்.
> قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا عَائِشَةُ، أَحْسِنِي جِوَارَ نِعَمِ اللَّهِ؛ فَإِنَّهَا قَلَّ مَا نَفَرَتْ مِنْ قَوْمٍ فَبِدَارَتْ إِلَيْهِمْ»
"ஆயிஷாவே! அல்லாஹ்வின் அருட்கொடைகளை கண்ணியமாக நடத்து (அவற்றை நேசித்துப் பாதுகாத்துக்கொள்). நிச்சயமாக ஓர் அருட்கொடை ஒரு கூட்டத்தாரை விட்டும் விரண்டு வெளியேறிவிட்டால், அது அவர்களிடம் மீண்டும் திரும்புவது மிக அரிது!" (இப்னு மாஜா:)
ஒரு சிறிய பேரீச்சம்பழத் துண்டைக்கூட உதாசீனப்படுத்தக் கூடாது என்று போதித்த நபி ﷺ அவர்களின் உம்மத்தினர் இன்று தட்டு நிறைய பிரியாணியைக் குப்பையில் வீசுவது எத்தகைய பாவம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
"மறுமையின் விசாரணை"
கடும் பசி காரணமாக ஒரு நாள் நபி ﷺ, அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய மூவரும் வெளியேறி, அபூ அய்யூப் அல்-அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்காகப் பேரீச்சம்பழக் குலை, எளிய உணவு மற்றும் குளிர்ந்த தண்ணீர் பரிமாறப்பட்டது.
வயிறார உண்டுவிட்டு குளிர்ந்த நீரையும் குடித்த பிறகு, நபி ﷺ அவர்களின் கண்கள் கலங்கின. அவர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கிப் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:
> ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
"பின்னர், அந்நாளில் (உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்." (அத்-தகாஸுர்: 8)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த குளிர்ந்த நிழல், இந்தத் தரமான பேரீச்சம்பழம், இந்தத் தூய குளிர்ந்த நீர் என ஒவ்வொன்றைப் பற்றியும் மறுமையில் அல்லாஹ் உங்களிடம் விசாரிப்பான்!" (ஸஹீஹ் முஸ்லிம்: )
பசியோடு இருந்தபோது கிடைத்த ஒரு மிடக்கு தண்ணீருக்கும், பேரீச்சம்பழத்திற்கும் இறைவனிடம் கணக்கு உண்டு என்றால், அறுசுவை உணவை வீசி எறியும் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?
உணவை வீணடிப்பதை விட, தேவைப்பட்டால் இரண்டாவது முறை போட்டுக் கொள்வது மேலானது.
விசேஷங்களில் மீதமாகும் உணவுகளைத் தரமாகப் பேக் செய்து எளிய மக்களுக்கும் அநாதை இல்லங்களுக்கும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தல்.
குழாய்களைப் பாதியாகத் திறப்பது: ஒழுச் செய்யும் இடங்களில் வாட்டரை (water aerator / regulator) சீரமைத்து, தண்ணீர் வேகமாகப் பீறிட்டு வீணாவதைத் தடுத்தல்.
ஆரோக்கியம் மற்றும் இளமை விரயம்:
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் போதை பழக்கங்கள் மூலம் உடல் நலனை அழிப்பது.
இளமையின் ஆற்றலை நற்காரியங்களில் ஈடுபடுத்தாமல் சோம்பேறித்தனத்தில் கழிப்பது.
عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَعَنْ جِسْمِهِ فِيمَا أَبْلَاهُ»
(سنن الترمذ)
மறுமை நாளில் ஓர் அடியான் தன் ஆயுளை எப்படிக் கழித்தான், இளமைப் பருவத்தின் வலிமையை எதில் கரைத்தான், உடலின் ஆற்றலை எதில் தேய்த்தான் என்று விசாரிக்கப்படும் வரை ஒரு அடியும் நகர முடியாது என்று நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள் (திர்மிதி).
* ஐந்து விஷயங்களை முந்திக் கொள்ளுங்கள்:
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ:
«اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ:
شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ،
وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ،
وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ،
وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ،
وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ»
(المستدرك على الصحيحين للحاكم
நபி ﷺ அவர்கள் ஓர் உபதேசத்தில் கூறினார்கள்: ஐந்து நிலைகள் வருவதற்கு முன் ஐந்து நிலைகளை நற்பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்:
* முதுமை வருவதற்கு முன் இளமை
* நோய் வருவதற்கு முன் ஆரோக்கியம்
* வறுமை வருவதற்கு முன் செல்வம்
* வேலைப்பளு வருவதற்கு முன் ஓய்வு
* மரணம் வருவதற்கு முன் வாழ்வு (ஹாகிம்).
சுய அழிவுக்குத் தடை (குர்ஆன் எச்சரிக்கை):
> وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
"உங்களை நீங்களே உங்கள் கைகளால் அழிவின் பக்கம் தள்ளாதீர்கள்." (அல்-பகரா: 195)
உடலுக்குத் தீங்கு தரும் பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது இறைவனின் இந்தக் கட்டளைக்கு முரணானது.
இரவு நேரத்தை தூங்குவதற்காகவும் ஓய்விற்காகவும் அமைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது. ஆனால் இன்று நள்ளிரவு தாண்டி திரைகளைப் பார்ப்பதும், விடியற்காலை வரை அரட்டைகளில் இருப்பதும் உடலின் இயற்கை அமைப்பைச் சீர்குலைக்கிறது.
இதன் விளைவாக ஃபஜ்ர் தொழுகை பாழாவதுடன், பகல் முழுவதும் சோம்பலும் சோர்வும் தொற்றிக்கொள்கிறது.
கட்டுப்பாடற்ற துரித உணவுகள் (Fast Food), உடலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப் பானங்கள் போன்றவற்றால் இளமையிலேயே நீரிழிவு, இதய நோய்கள், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நபிகளார் வயிற்றை மூன்று பங்குகளாகப் பிரித்து (உணவு, நீர், மூச்சுக்காற்று) உண்ணுமாறு வழிகாட்டினார்கள். அளவுக்கதிகமாக உண்டு உடலை மந்தமாக்குவதும் ஆரோக்கியத்தின் விரயமே.
புகைப்பிடித்தல், புகையிலை, மது மற்றும் நவீன போதைப்பொருட்கள் மூலம் இறைவன் தந்த விலைமதிப்பற்ற உடலையும், சிந்திக்கும் ஆற்றலையும், நரம்பு மண்டலத்தையும் மனிதன் தன் கைகளாலேயே விஷமாக்குகிறான். இது பொருளாதார இழப்பு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் அப்பட்டமான துரோகம்.
இளமையின் சோம்பேறித்தனம்:
சுறுசுறுப்பும் ஆற்றலும் கொப்பளிக்கும் வயதில், எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் நாட்களைக் கடத்துவது.
கல்வியிலோ, நன்மையான பணிகளிலோ, சமூக ஆக்கப்பூர்வ வேலைகளிலோ தங்களை ஈடுபடுத்தாமல் வெறும் மாயைகளில் மூழ்கியிருப்பது.
"வீணடிக்கப்படாத இளமை லட்சியம்"
நபி ﷺ அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னறிவித்திருந்தார்கள்: "நிச்சயமாக கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படும்; அதை வெற்றி கொள்ளும் படைத்தளபதி எத்துணை சிறந்த தலைவர்! அந்தப் படை எத்துணை சிறந்த படை!" (அஹ்மத்).
பல நூறு ஆண்டுகள் எவராலும் வெல்ல முடியாத அரண்களைக் கொண்ட கான்ஸ்டாண்டிநோபிள் நகரை, தனது 21-வது வயதில் திட்டமிட்டு, மாபெரும் கப்பல்களை நிலத்தின் வழியே நகர்த்தி வியக்கத்தக்க வியூகத்துடன் வெற்றி கொண்டார் சுல்தான் முஹம்மது அல்-ஃபாத்திஹ். ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்
இவர்கள் தனது இளமைப் பருவத்தில் வீண் அரட்டைகளிலோ சோம்பேறித்தனத்திலோ பொழுதை வீணடிக்கவில்லை. பல மொழிகளைக் கற்றறிந்தார்; அறிவியல், பொறியியல் மற்றும் போர்க் கலைகளில் வல்லுநரானார்; தவறாமல் தஹஜ்ஜுத் தொழுது ஆன்மீக பலத்தைப் பெற்றார்.
இளமை என்பது வெறும் உடல் வலிமை மட்டுமல்ல; நற்காரியங்களிலும் சமூக முன்னேற்றத்திலும் முத்திரை பதிக்கும் காலம் என்பதற்கு இவரது வரலாறு சான்றாகும்.
இளமைக் கால உழைப்பு
இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் அஷ்-ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இளம் வயதிலேயே தந்தையை இழந்து மிகுந்த வறுமையில் வளர்ந்தார்கள்.
காகிதம் வாங்குவதற்குக் கூட காசில்லாத நிலையிலும், அவர்களின் இளமை வீணாகக் கழியவில்லை. தெருக்களில் கிடக்கும் தட்டையான எலும்புத் துண்டுகளையும், தோல் துண்டுகளையும், பனை ஓலைகளையும் சேகரித்து, அதில் ஹதீஸ்களையும் மார்க்க சட்டங்களையும் இரவு பகலாக எழுதிக் கற்றார்கள். மிக இளம் வயதிலேயே (சுமார் 15 வயதில்) மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கும் அளவிற்குத் தகுதி பெற்றார்கள்.
எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள இக்கால இளைஞர்கள் தங்களின் இளமை ஆற்றலைத் தூக்கத்திலும் வெட்டி அரட்டைகளிலும் கரைத்துவிடுவது பெரும் இழப்பாகும். இஷா தொழுகைக்குப் பின் தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு சீக்கிரம் உறங்குவது, ஃபஜ்ரில் எழுந்து அன்றைய நாளை சுறுசுறுப்புடன் தொடங்குவது.
இளைஞர்கள் தங்களை தஃவா களங்கள், கல்விப் பணிகள் மற்றும் ஏழை எளியோருக்கு உதவும் பொதுச் சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் தீய பழக்கவழக்கங்களை விட்டும் தப்ப முடியும்.
பேச்சு விரயம் (நாவின் விரயம்):
புறம், கோள், தேவையற்ற வாக்குவாதங்கள் என நாவை வீணடிப்பது. "யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்" என்ற நபிமொழியை நினைவூட்டுதல்.
* பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வார்த்தையும்:
> مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
"மனிதன் எந்த ஒரு சொல்லை மொழிந்தாலும், அவனிடம் அதைக் கண்காணித்துப் பதிவு செய்யக்கூடிய வானவர் தயாராக இல்லாமல் இருப்பதில்லை." (சூரா காஃப்: 18)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
> «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்." நூல்:புகாரி:
நரகத்தில் தலைகீழாக வீழ்த்தும் நாவு:
முஆத் பின் ஜபல் /ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசும் பேச்சுக்களுக்காகவுமா தண்டிக்கப்படுவோம்?" எனக் கேட்டார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள் தம் நாவைப் பிடித்துக்கொண்டு கூறினார்கள்:
"உமது தாய் உம்மை இழக்கட்டும் முஆதே! மனிதர்களை நரகத்தில் முகங்குப்புற வீழ்த்துவது அவர்களின் நாவுகள் அறுவடை செய்த (பாவப்) பேச்சுகளன்றி வேறென்ன?" (திர்மிதி:
புறம் பேசுவது அருவருப்பான செயல்:
இறைவன் தன் குர்ஆனில், ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது குறை பேசுவதை (கீபத்), "இறந்துபோன தன் சொந்தச் சகோதரனின் மாமிசத்தைப் புசிப்பதற்குச் சமம்" (அல்-ஹுஜுராத்: 12) என்று எச்சரிக்கிறான்.
கோள் மூட்டுபவன் சுவனம் நுழைய மாட்டான்:
> قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
> «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ»
"கோள் மூட்டுபவன் (நமீமத் பேசுபவன்) சொர்க்கத்தில் நுழைய மாட்டான்." (புகாரி:
ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமல் குழுக்களில் பகிர்வது. நபிகளார் கூறினார்கள்: "ஒருவன் பொய்யன் என்பதற்கு, அவன் தான் கேள்விப்பட்டதையெல்லாம் பிறருக்குக் கூறுவதே போதுமானதாகும்." (முஸ்லிம்).
தனிநபர் அந்தரங்கங்களை விவாதிப்பது, ட்ரோல் (Troll) செய்வது, அடுத்தவர்களின் குறைகளைப் படங்களாகவும் காணொளிகளாகவும் பரப்பிப் பரிகாசம் செய்வது.
பல மனிதர்கள் ஒன்றாகக் கூடினால் அங்குப் பெரும்பாலும் பிறர் குறைகளும், ஊர் வம்புகளுமே பேசப்படுகின்றன.
நல்ல விஷயங்களைப் பேச நேரமில்லாத நாவு, பிறரைப் பற்றிப் பேசும்போது மட்டும் மணிக்கணக்கில் சோர்வடையாமல் இயங்குகிறது.
அமல்களின் அழிவு (முஃப்லிஸ் - திவாலான மனிதன்):
தொழுது, நோன்பு நோற்று, தான தர்மங்கள் செய்துவிட்டு, நாவினால் பிறரைத் திட்டி, புறம்பேசி, அவதூறு சுமத்திய மனிதனின் நன்மைகள் அனைத்தும் மறுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கே பிரித்துக் கொடுக்கப்பட்டு, அவன் நிர்க்கதியாக நரகில் தள்ளப்படுவான்.
"நாவைப் பிடித்துக் கண்ணீர் வடித்த கலீஃபா"
கலீஃபா உமர் பின் அல்-கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறைக்குள் நுழைந்தார்கள். அப்போது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் சொந்த நாவைக் கைகளால் பிடித்து இழுத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரின் தோழரே! என்ன செய்கிறீர்கள்? அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவானாக!" என்றார்கள்.
அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நடுங்கும் குரலில் சொன்னார்கள்:
«إِنَّ هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ»
"இந்த நாவுதான் என்னை எத்தனையோ ஆபத்தான சோதனைக் களங்களுக்கு இழுத்துச் சென்றுவிட்டது! நான் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் இறைவனிடம் கணக்குக் காட்ட வேண்டுமே என்ற பயம் என்னை நடுங்க வைக்கிறது."
சொர்க்கவாசி என நபிகளாரால் நற்செய்தி சொல்லப்பட்ட, சித்தீக் என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஒரு உத்தமத் தோழர் தன் நாவைக் குறித்து இவ்வளவு நடுங்கினார் என்றால், தினமும் ஆயிரக்கணக்கான வீண் வார்த்தைகளையும் புறங்களையும் பேசித் திரியும் நாம் எத்தகைய அச்சத்தில் இருக்க வேண்டும்?
"நாவை உப்பினால் கழுவுங்கள்"
தாபியீன்களின் தலைசிறந்த மார்க்க அறிஞரும், கனவுகளுக்கு விளக்கம் அளிப்பதில் புகழ்பெற்றவருமான முஹம்மது பின் சீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அவையில் ஒருவர் அமர்ந்து, ஊரில் உள்ள ஒருவரைப் பற்றி, "அவர் சற்று குட்டையானவர், அவருக்கு நடையில் கோளாறு உண்டு" என்று சாதாரணமாகக் கேலி பேசினார்.
இமாம் இப்னு சீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் முகம் மாறியது. உடனே அந்த மனிதரைப் பார்த்து, "எழுந்திருங்கள்! உடனே சென்று உங்கள் வாயை தண்ணீரிலும் உப்பிலும் கழுவுங்கள்; ஏனெனில் நீங்கள் ஒரு முஸ்லிமின் உடலை உங்கள் பற்களால் குதறி, அதன் மாமிசத்தைச் சாப்பிட்டுவிட்டீர்கள் (புறம் பேசிவிட்டீர்கள்)" என்று கடிந்துகொண்டார்கள்.
உடல் அமைப்பையோ அல்லது மனிதர்களின் பலவீனங்களையோ விளையாட்டாகக் கூடப் பேசுவது மார்க்கத்தில் கடுமையான பாவம் என்பதற்கு இது தெளிவான சான்று.
"புறம் பேசியவருக்குப் பரிசளிக்கப்பட்ட பேரீச்சம்பழம்"
மாபெரும் தாபியீ இமாம் ஹஸன் அல்-பஸரி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களிடம் ஒருவர் வந்து, "இன்னாருடைய அவையில் உங்களைப் பற்றி ஒருவர் மிகவும் மோசமாகப் புறம்பேசிக் கொண்டிருந்தார்" என்று கூறினார்.
ஹஸன் அல்-பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சற்றும் கோபப்படவில்லை. மாறாக, வீட்டிலிருந்த ஒரு தட்டு நிறைய உயர்ந்த ரக பேரீச்சம்பழங்களை எடுத்துக்கொண்டு, ஒரு பணியாளரிடம் கொடுத்து அந்த மனிதரிடம் அனுப்பி வைத்தார்கள்.
இமாம் அவர்கள் அந்த மனிதருக்குச் சொல்லி அனுப்பிய செய்தி இதுதான்: "எனது சகோதரரே! நீங்கள் உங்கள் அவையில் அமர்ந்து, நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த உங்கள் நன்மைகளை எனக்கு இலவசமாகப் பரிசளித்ததாகக் கேள்விப்பட்டேன் (புறம் பேசியதன் மூலம் நன்மைகள் எனக்கு வந்து சேர்ந்தன). அதற்குப் பிரதிபலனாக என்னால் உங்களுக்கு நன்மைகளைத் தர முடியாது; எனவே இந்த இனிப்பான பேரீச்சம்பழங்களை என் நன்றிக் காணிக்கையாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!"
நாம் ஒருவரைப் பற்றிப் புறம் பேசினால், நமது வணக்க வழிபாடுகளின் நன்மைகள் அவருக்கே போய்ச் சேரும் என்பதை இமாம் அவர்கள் மிக நுட்பமாக உணர்த்தினார்கள்.
பேசும் முன் யோசியுங்கள்—"நான் பேசும் இந்த வார்த்தையால் எனக்கு நன்மையா, பாவமா?" பதில் நன்மை என்றால் பேசுங்கள், சந்தேகம் என்றால் மௌனமாக இருங்கள்.
ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றித் தீயதாகப் பேசப்பட்டால், அதைத் தடுத்து நிறுத்துங்கள்; முடியாவிட்டால் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிடுங்கள்.
நாவினால் பிறர் மனம் புண்பட்டிருந்தால், அவதூறு பேசியிருந்தால், காலம் தாழ்த்தாமல் உடனே அவரிடம் மன்னிப்புக் கேட்டுப் பிழையைச் சரிசெய்து கொள்ளுங்கள்.
நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வாய் உணவும், குடிக்கும் ஒவ்வொரு மிடக்கு நீரும், கையில் வைத்திருக்கும் பணமும், ஓடிக்கொண்டிருக்கும் இந்த நொடிகள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் அமானிதங்கள்.
ஒரு காலத்தில் செல்வத்தை இழந்தால் உழைத்துச் சம்பாதித்துவிடலாம்; ஆனால் விரயமாக்கப்பட்ட ஆயுளின் ஒரு விநாடியைக் கூட கோடானுகோடிப் பணம் கொடுத்தாலும் மீட்டெடுக்க முடியாது.
திருமணங்களில் "ஊரார் என்ன சொல்வார்களோ" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். அடுத்தவர் மெச்ச வேண்டும் என்பதற்காக பட்டாசு வெடித்து பணத்தைக் கரியாக்குவதையும், மேடை அலங்காரங்களில் பணத்தைக் கொட்டுவதையும், உணவுகளைக் குப்பையில் வீசுவதையும் இன்றோடு நம் வீடுகளில் நிறுத்துவோம்.
நம் நாவை வீண் அரட்டைகள், புறம், கோள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து, செல்போன் திரைகளில் கரையும் நேரத்தைக் குறைத்து, நற்பணிகளில் முதலீடு செய்யத் தொடங்குவோம்.
«فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ» "எனவே உங்களால் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்." (அத்-தகாபுன்: 16)
நாம் தெரிந்தும் தெரியாமலும் இதுவரை விரயம் செய்த செல்வத்திற்காகவும், வீணடித்த காலத்திற்காகவும், புறம்பேசிய நாவுகளுக்காகவும் இப்போதே உள்ளத்தால் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்போம். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்க்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் தவ்ஃபீகை தந்தருள்வானாக ஆமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.
