வியாழன், 8 அக்டோபர், 2026

வானம் திறந்த தருணங்கள்!

 


வானம் திறந்த தருணங்கள்!


اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْنَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِيْنَ.

 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ:

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ»

மனித வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக நகர்வதில்லை. சில நேரங்களில் எதிர்பாராத சோதனைகளும், தாங்க முடியாத துயரங்களும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

பேச நா எழும், ஆனால் நியாயத்தைக் கேட்க மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

அழத் தோன்றும், ஆனால் கண்ணீரைத் துடைக்க ஆதரவான கரங்கள் எட்டாது.

நாம் உண்மையைச் சொன்னாலும் உலகம் நம்மைப் பொய்யராகப் பார்க்கும்.

பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், காலடி வைக்க இடமில்லாதது போல உள்ளம் இறுகிச் சுருங்கிவிடும்.

இப்படிப்பட்ட இக்கட்டான தருணங்களில் ஒரு மனிதன் என்ன செய்வான்? மனிதர்களிடம் சென்று மன்றாடிப் பார்ப்பான்; தன் பலவீனங்களை வெளிப்படுத்துவான். ஆனால், மனிதர்களுக்கு ஒரு எல்லை உண்டு. 

மனிதர்களின் கதவுகள் யாவும் சத்தத்தோடு அடைபடும்போதுதான், ஒரு முஃமினுடைய கண்கள் வானத்தை நோக்கி உயர்கின்றன.

மனிதர்களின் கதவுகள் மூடப்படலாம்; ஆனால் அர்ஷை ஆளும் ரப்புல் ஆலமீனின் கதவு ஒருபோதும் மூடப்படுவதில்லை!

மனிதர்கள் கைவிட்டபோது, உலகம் புறக்கணித்தபோது, சாட்சிகள் இல்லாத இக்கட்டில் சிக்கித் தவித்தபோது, ஏழு வானங்களுக்கு அப்பாலிருந்து அல்லாஹ் நேரடியாகத் தலையிட்டு தீர்ப்புகளை வழங்குவான்!

வரலாற்றில் அப்படி தீர்ப்பு வழங்கப்பட்டகள் யாரிடமும் அதிகார பலம் இல்லை; படை பலம் இல்லை; வாதிட வக்கீல்கள் இல்லை. இவர்களிடம் இருந்தது இரண்டே விஷயங்கள்தான்:

உள்ளத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டு வந்த உண்மைத்தன்மை.

"அல்லாஹ் என்னைக் கைவிட மாட்டான்" என்ற அசைக்க முடியாத தவக்குல்.

வானங்களை அதிரவைத்த அந்த அடியார்களின் கண்ணீரும், உலக முடிவு வரை ஓதப்படும் இறைவேதத்தின் வசனங்களாக அல்லாஹ் வழங்கிய அந்த அற்புத நிவாரணங்களும் என்ன என்பதை இப்போது நாம் பார்ப்போம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ؟»

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நம்முடைய இரட்சகனாகிய அல்லாஹ் ஒவ்வோர் இரவிலும் மூன்றில் ஒரு பகுதி எஞ்சியிருக்கும் போது கீழ் வானத்திற்கு இறங்கி வந்து இவ்வாறு கூறுகிறான்:

'என்னை அழைப்பவர் எவரேனும் உண்டா? அவருடைய அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன்! என்னிடம் கேட்பவர் எவரேனும் உண்டா? அவருக்கு நான் தருகிறேன்! என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரேனும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்!'"நூல்: ஸஹீஹுல் புகாரி

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«ثَلَاثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ»

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:"மூன்று பிரார்த்தனைகள் தட்டப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன; அவற்றில் துளியும் சந்தேகமில்லை:பாதிக்கப்பட்ட (அநீதி இழைக்கப்பட்ட) மனிதனின் பிரார்த்தனை, பயணியின் பிரார்த்தனை,பிள்ளைக்காகத் தந்தை (பெற்றோர்) செய்யும் பிரார்த்தனை.”


ழிஹார் (Zihar) விவாகரத்து 


அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா காலத்தில்) அரபிகளிடையே மனைவியை நிரந்தரமாக விலக்க "ழிஹார்" எனும் கொடிய வழக்கம் இருந்தது. கணவன் தன் மனைவியைப் பார்த்து, "நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்" என்று கூறிவிட்டால், அவள் அவனுக்குத் தாயைப் போன்று தடுக்கப்பட்டவளாகி விடுவாள்; ஆனால் அவளுக்கு வேறு திருமணம் செய்யும் உரிமையோ, முழு விவாகரத்துப் பாதுகாப்போ கிடைக்காது.


ஒருநாள் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கோபத்தில் தன் மனைவி கவ்லாவிடம் ரலியல்லாஹு அன்ஹாவிடம் "நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்" என்று கூறி ழிஹார் செய்துவிட்டார்கள். பின்னர் தன் செயலுக்கு வருந்தி கவ்லாவை அணுகியபோது, கவ்லா ரலியல்லாஹு அன்ஹா" அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தீர்ப்பளிக்கும் வரை என்னை நெருங்க விடமாட்டேன்" என்று கூறிவிட்டு, நேராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள்.


கவ்லா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறி, "அல்லாஹ்வின் தூதரே! நான் இளமையாக இருந்தபோது என் செல்வத்தையும் அழகையும் என் கணவர் அனுபவித்தார்; இப்போது எனக்கு வயதாகிவிட்ட நிலையில், என் பிள்ளைகளைத் தூக்கி எறிந்துவிட்டு என்னை ழிஹார் செய்துவிட்டார். குழந்தைகளை அவரிடம் விட்டால் பாழாகிவிடுவார்கள்; நானே வைத்துக்கொண்டால் உணவின்றிப் பசியால் வாடிவிடுவார்கள்" என்று வேதனையோடு முறையிட்டார்கள்.


அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இதுவரை எனக்கு இதுபற்றி எந்த இறைக்கட்டளையும் வரவில்லை; எனவே நீ அவருக்கு ஹராமாகி (தடுக்கப்பட்டு) விட்டாய் என்றே கருதுகிறேன்" என்றார். ஆயினும் கவ்லா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் திருப்தியடையாமல், "அல்லாஹ்விடம் எனது வறுமையையும், தனிமையையும், சிறு குழந்தைகளின் நிலையையும் முறையிடுகிறேன்" என்று அழுது மன்றாடினார்கள்.


கவ்லா ரலியல்லாஹு அன்ஹா தொடர்ந்து நபிகளாரிடம் வாதிட்டு, அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அதே வேளையில், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் மூலம் இந்த வசனம் இறங்கியது:

"நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான்":

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

«الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَسِعَ سَمْعُهُ الْأَصْوَاتَ، لَقَدْ جَاءَتْ خَوْلَةُ بِنْتُ ثَعْلَبَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو زَوْجَهَا، وَأَنَا فِي نَاحِيَةِ الْبَيْتِ، وَإِنَّهُ لَيَخْفَى عَلَيَّ بَعْضُ كَلَامِهَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ}»

"எல்லா ஒலிகளையும் செவியேற்கும் அல்லாஹ்வின் செவிப்புலன் மிகவும் மகத்தானது. கவ்லா பின்த் ஸஃலபா நபியிடம் தன் கணவரைப் பற்றி முறையிட்டபோது, நான் அதே அறையின் ஒரு மூலையில் இருந்தேன். கவ்லா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பேசிய சில வார்த்தைகள் என் காதுகளுக்கே கேட்கவில்லை; ஆனால் வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் அவருடைய முழு வாதத்தையும் செவியேற்று இவ்வசனத்தை இறக்கினான்." நூல்:சுனனுன் நஸயீ


அல்லாஹ் வழங்கிய தீர்வு (கஃப்பாரா - பரிகாரம்):


قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ ‌ وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا‌ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ بَصِيْرٌ‏

(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (அல்குர்ஆன் : 58:1)


இந்த வசனத்தைத் தொடர்ந்து வந்த 2, 3, மற்றும் 4 ஆகிய வசனங்களில் ஜிஹார் என்பது முற்றிலும் தவறான, அருவருப்பான பொய் என்று கண்டித்த அல்லாஹ், குடும்பத்தை உடைக்காமல் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான பரிகாரங்களை (கஃப்பாரா) விதித்தான்:


ஒரு அடிமையை விடுதலை செய்வது.அதற்கு சக்தியற்றவர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பது.அதற்கும் உடல் பலமில்லாதவர் 60 ஏழைகளுக்கு உணவளிப்பது. நபிகளார் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இயலாமையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கி 60 ஏழைகளுக்கு உணவளிக்க உதவி செய்து, இருவரையும் மீண்டும் கணவன்-மனைவியாகச் சேர்த்து வைத்தார்கள்.


இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் பெண்களைப் பந்தாடிய கொடிய விவாகரத்து வழக்கமான 'ழிஹார்' முறியடிக்கப்பட்டு, பெண்கள் மதிக்கப்பட்டனர்.

ஆதரவற்ற ஒரு பெண்ணின் உள்ளக் குமுறலையும் ஏக இறைவன் நேரடியாக ஏற்றுக்கொண்டு குர்ஆனில் நிரந்தரச் சட்டமாகப் பதிவு செய்துள்ளான்.


கவ்லா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அந்தஸ்து: 

عَنْ أَبِي يَزِيدَ الْمَدَنِيِّ قَالَ: لَقِيَتِ امْرَأَةٌ عُمَرَ بْنَ الْخَطَّابِ يُقَالُ لَهَا: خَوْلَةُ بِنْتُ ثَعْلَبَةَ، فَاسْتَوْقَفَتْهُ فَوَقَفَ لَهَا وَأَصْغَى إِلَيْهَا وَوَضَعَ يَدَهُ عَلَى مَنْكِبِهَا حَتَّى قَضَتْ حَاجَتَهَا، فَقَالَ لَهُ رَجُلٌ: «يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، حَبَسْتَ رِجَالَاتِ قُرَيْشٍ عَلَى هَذِهِ الْعَجُوزِ؟!»

فَقَالَ عُمَرُ:

«وَيْحَكَ! وَتَدْرِي مَنْ هَذِهِ؟» قَالَ: لَا،

قَالَ: «هَذِهِ امْرَأَةٌ سَمِعَ اللَّهُ شَكْوَاهَا مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ، هَذِهِ خَوْلَةُ بِنْتُ ثَعْلَبَةَ، وَاللَّهِ لَوْ لَمْ تَنْصَرِفْ عَنِّي إِلَى اللَّيْلِ مَا انْصَرَفْتُ عَنْهَا حَتَّى تَقْضِيَ حَاجَتَهَا، إِلَّا أَنْ تَحْضُرَ صَلَاةٌ فَأُصَلِّيَهَا، ثُمَّ أَرْجِعَ إِلَيْهَا حَتَّى تَقْضِيَ حَاجَتَهَا».

பிற்காலத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலிஃபாவாக இருந்தபோது, மக்கள் கூட்டத்தில் கவ்லா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வழிமறித்துப் பல அறிவுரைகளைக் கூறினார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமைதியாக நின்று அதைக் கேட்டார்கள். ஒருவர், "ஒரு கிழவிக்காக ஏன் இவ்வளவு நேரம் நிற்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்: "இவர் யார் தெரியுமா? ஏழு வானங்களுக்கு அப்பாலிருந்து இவருடைய குரலை அல்லாஹ் செவியேற்றான்; அத்தகைய கவ்லா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பேசுவதை உமர் கேட்காமல் கடந்து செல்வானா?" என்று பதிலளித்தார்.


அழகிய பொறுமையே எனக்குரியது


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதேனும் ஒரு போருக்குப் புறப்படும்போது, தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் பார்ப்பது வழக்கம். பனூ முஸ்தலக் போரின்போது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பெயர் வந்தது. போர் முடிந்து மதீனா திரும்பும் வழியில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் படை இரவில் முகாமிட்டது. விடியற்காலை புறப்படுவதற்கு சற்று முன்பு, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா இயற்கை உபாதையைக் கழிக்க முகாமை விட்டு சற்றுத் தொலைவிற்குச் சென்றார்கள்.


இயற்கை தேவையை முடித்துவிட்டுத் திரும்பியபோது, தன் கழுத்திலிருந்த 'யமன் நாட்டு மணிமாலை' நழுவி விழுந்திருப்பதை உணர்ந்தார்கள். அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் நேரம் கடந்துவிட்டது.


அக்காலத்தில் பெண்கள் ஒட்டகத்தின் மீது அமைக்கப்பட்ட "ஹவ்தஜ்" (பல்லக்கு போன்ற மூடு கூண்டு) உள்ளேயே அமர்வார்கள். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மெலிந்த தேகம் கொண்டவராக இருந்ததால், வீரர்கள் கூடாரத்தை தூக்கி ஒட்டகத்தின் மீது கட்டியபோது, அதற்குள் அவர் இல்லை என்பதை உணரவில்லை. படை நகர்ந்துவிட்டது.


மாலை கிடைத்ததும் முகாமிற்கு வந்த ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, அங்கு யாருமில்லாமல் வெறிச்சோடி இருப்பதைக் கண்டார்கள். "நான் காணாமல் போனதை உணர்ந்தால் நிச்சயம் என்னை இங்கே தேடி வருவார்கள்" என்ற நம்பிக்கையில் தன் போர்வையைப் போர்த்திக்கொண்டு அங்கேயே படுத்து உறங்கிவிட்டார்கள்.


படை புறப்பட்ட பிறகு, வழியில் ஏதேனும் பொருட்கள் விடுபட்டுள்ளதா என்று கவனித்து எடுத்து வரும் பொறுப்பு ஸஃப்வான் இப்னு முஅத்தல் ரலியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.


விடியற்காலையில் அந்த இடத்திற்கு வந்த ஸஃப்வான் ரலியல்லாஹு அன்ஹு தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு உருவத்தைக் கண்டார். பர்தா சட்டங்கள் அருளப்படுவதற்கு முன் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பார்த்திருந்ததால், அவர்களை அடையாளம் கண்டுகொண்டார். திடுக்கிட்ட அவர், உரத்த குரலில்:

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அவனிடமே மீளக்கூடியவர்கள்) என்று கூறினார்.

அந்தக் குரலைக் கேட்டு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விழித்து முகத்தை மூடிக்கொண்டார்கள். ஸஃப்வான் ரலியல்லாஹு அன்ஹு வேறு ஒரு வார்த்தை கூட பேசாமல், தன் ஒட்டகத்தை மண்டியிடச் செய்தார். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அதில் ஏறியதும், ஸஃப்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு கால்நடையாகவே வழிநடத்தி நண்பகலில் மதீனாவை அடைந்தார்கள்.


முனாஃபிக்குகளின் (நயவஞ்சகர்களின்) தலைவனான அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல், இதைப் பார்த்ததும் இஸ்லாமியக் கட்டமைப்பையும் நபிகளாரின் குடும்ப மாண்பையும் சிதைக்க அருமையான வாய்ப்பாக இதைப் பயன்படுத்தினான். அவன் ஒரு கொடிய அவதூறைப் பரப்பத் தொடங்கினான்.

அறியாமையினால் சில மூத்த நபித்தோழர்களும் (ஹஸ்ஸான் இப்னு ஸாபித், ரலியல்லாஹு அன்ஹு மிஸ்தஹ் இப்னு உஸாஸா, ரலியல்லாஹு அன்ஹு ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹு) இந்தப் பேச்சில் சிக்கிக்கொண்டனர்.


மதீனா வந்தடைந்த ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நோய்வாய்ப்பட்டு ஒரு மாதம் படுக்கையில் இருந்தார்கள். இதனால் ஊருக்குள் பரவிய இந்த அவதூறு அவர்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும், வழக்கமாக நோய்வாய்ப்படும்போது நபிகளார் காட்டும் மிகுந்த பாசத்தை விட, வெறும் "எப்படி இருக்கிறாய்?" என்ற அளவிலேயே விசாரித்த விதம் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குள் ஏதோ மாற்றத்தை உணர்த்தியது.


ஒரு நாள் இரவு இயற்கை தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பவருடன் வெளியே சென்றபோது, அவர் கால் இடறி விழ நேரிட்டது. அப்போது அவர் தன் மகனான மிஸ்தஹைத் திட்டியபோது, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பத்ரு போரில் கலந்துகொண்ட ஒருவரை ஏன் திட்டுகிறீர்கள் எனக் கேட்டார்கள். அப்போதுதான் உம்மு மிஸ்தஹ், மதீனாவில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றிப் பரப்பப்படும் இழிவான அவதூறை விவரித்தார்கள்.


இதைக் கேட்ட அதிர்ச்சியில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நோய் தீவிரமடைந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி பெற்றுத் தன் பெற்றோரின் இல்லத்திற்குச் சென்றார்கள். அங்கு தாயாரிடம் விபரம் கேட்டபோது, "அழாதே மகளே! அழகான, தன் கணவருக்கு விருப்பமான மனைவியாக இருக்கும் பெண்களைப் பற்றி மற்ற மனைவிகளும் மற்றவர்களும் பேசுவது இயல்புதான்" என்று தேற்றினார்கள்.


ஆனால், அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா தொடர்ந்து இரண்டு இரவுகளும் ஒரு பகலும் இடைவிடாது அழுதுகொண்டே இருந்தார்கள்; அவர்கள் கண்களில் கண்ணீர் வற்றிப்போகும் நிலை உருவானது.


வஹீ (இறைச்செய்தி) வராத இந்த ஒரு மாத காலம் நபிகளாருக்கும் மிகக் கடுமையான சோதனைக் காலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு, உஸாமா இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் ஆலோசனை கேட்டார்கள்.


உஸாமா (ரலி): "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் குடும்பத்தாரிடம் நன்மையைத் தவிர வேறெதையும் நாங்கள் அறியவில்லை" என்றார்.


அலி (ரலி): "அல்லாஹ் உங்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்தவில்லை; பெண்கள் பலர் உள்ளனர். பணிப்பெண்ணான பரீராவிடம் கேட்டுப்பாருங்கள்" என்றார். 


பரீரா (ரலி) விசாரிக்கப்பட்டபோது, "ஆயிஷாவிடம் எந்தக் குறையும் இல்லை; மாவு பிசைந்து வைத்துவிட்டுத் தூங்கிவிடுவார், வீட்டு ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அந்த அளவிற்கு அவர்கள் கள்ளம் கபடமற்ற இளம் பெண்" என்று சாட்சியளித்தார்கள்.


பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இல்லத்திற்கு வந்து ஆயிஷாவிடம் அமர்ந்து:

"ஆயிஷாவே! உன்னைப் பற்றி எனக்கு இன்னின்ன செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னை விடுவிப்பான். 


ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேள்" என்றார்கள்.இதைக் கேட்டதும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா தன் பெற்றோரிடம், "நபிகளாருக்குப் பதில் கூறுங்கள்" என்றார். அவர்களோ, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை" என்றனர்.அப்போது கண்ணீருடன் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:-

وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَقَدْ سَمِعْتُمْ هَذَا الحَدِيثَ حَتَّى اسْتَقَرَّ فِي أَنْفُسِكُمْ وَصَدَّقْتُمْ بِهِ، فَلَئِنْ قُلْتُ لَكُمْ: إِنِّي بَرِيئَةٌ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ، لاَ تُصَدِّقُونِي بِذَلِكَ، وَلَئِنِ اعْتَرَفْتُ لَكُمْ بِأَمْرٍ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي مِنْهُ بَرِيئَةٌ، لَتُصَدِّقُنِّي، فَوَاللَّهِ لاَ أَجِدُ لِي وَلَكُمْ مَثَلًا إِلَّا أَبَا يُوسُفَ حِينَ قَالَ: {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ}»

"நான் அப்பாவி என்று சொன்னால் நீங்கள் என்னை நம்பப்போவதில்லை; இல்லாத ஒன்றை நான் ஒப்புக்கொண்டால் அதை நம்பிவிடுவீர்கள். யூசுஃபுடைய தந்தை (யாகூப் அலை) கூறிய வார்த்தையைத் தவிர எனக்கு வேறு அடைக்கலம் இல்லை: 'ஆகவே, அழகிய பொறுமையே எனக்குரியது; நீங்கள் புனைந்து கூறுவதற்கு எதிராக அல்லாஹ்விடமே உதவி தேடப்பட வேண்டும்'."


அல்லாஹ்வின் பதில்: வான்மறையின் 10 வசனங்கள் (சூரா அந்-நூர்: 24:11-20)

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா பேசி முடித்துத் தன் படுக்கையில் சாய்ந்த அதே நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ இறங்கத் தொடங்கியது. கடுமையான குளிரிலும் நபிகளாரின் நெற்றியிலிருந்து முத்துக்களைப் போன்ற வியர்வைத் துளிகள் வழிந்தோடின. வஹீ நிலை விலகியதும் நபிகளார் சிரித்த முகத்துடன்:

"ஆயிஷாவே! நற்செய்தி பெற்றுக்கொள்! அல்லாஹ் உன்னை நிரபராதி எனத் தூய்மைப்படுத்திவிட்டான்!" என்றார்கள்.


அப்போது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயார், "எழுந்து நபிகளாருக்கு நன்றி கூறு" என்றார். ஆனால் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா பெருமிதத்தோடும் ஈமானிய உறுதியோடும்: "இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக, நான் நன்றி கூற மாட்டேன்; என்னை விடுதலை செய்த அல்லாஹ்வுக்கே நன்றி செலுத்துவேன்" என்றார்கள்.


அல்லாஹ் சூரா அந்-நூரின் 11 முதல் 20 வரையிலான வசனங்களை இறக்கி வைத்தான்:

اِنَّ الَّذِيْنَ جَاۤءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

"நிச்சயமாக எவர்கள் இந்த அவதூறை இட்டுக்கட்டினார்களோ, அவர்கள் உங்களிலிருந்தே உருவான ஒரு கூட்டத்தினர் ஆவர். இதை உங்களுக்கு ஒரு கெடுதி என்று நீங்கள் எண்ண வேண்டாம்; மாறாக, அது உங்களுக்கு ஒரு நன்மையாகும்! அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் உண்டு; அவர்களில் எவன் இதில் பெரும்பங்கை வகித்தானோ (முனாஃபிக்கின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை), அவனுக்கு மகத்தான வேதனை உண்டு."

(அல்குர்ஆன் 24:11)

لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًا ۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏

"இதை நீங்கள் கேள்விப்பட்டபோது, நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தம்மைப் போன்றவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டு, 'இது அப்பட்டமான அவதூறு' என்று கூறியிருக்க வேண்டாமா?"(அல்குர்ஆன் 24:12)


لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ‏

"இதற்கு அவர்கள் நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வராதபோது, அல்லாஹ்வின் பார்வையில் அவர்கள்தான் பொய்யர்கள்!"(அல்குர்ஆன் 24:13)


وَلَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَا ۖ سُبْحٰنَكَ هٰذَا بُـهْتَانٌ عَظِيْمٌ‏

"அதை நீங்கள் கேட்டபோது, 'இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகுமானதல்ல; (இறைவா!) நீ மகா தூய்மையானவன்; இது மிகப் பெரும் அவதூறாகும்' என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா?"(அல்குர்ஆன் 24:16)


நிரபராதிப் பெண்கள் மீது அவதூறு கூறி, அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டுவராதவர்களுக்கு 80 கசையடிகள் கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் (24:4) நடைமுறைப்படுத்தப்பட்டது. அவதூறு பரப்பிய மிஸ்தஹ், ரலியல்லாஹு அன்ஹு ஹஸ்ஸான், ரலியல்லாஹு அன்ஹு ஹம்னா ரலியல்லாஹு அன்ஹு ஆகியோருக்குக் கசையடித் தண்டனை வழங்கப்பட்டது. (அப்துல்லாஹ் இப்னு உபைக்கு மறுமையில் மகத்தான வேதனை காத்திருக்கிறது என்று அல்லாஹ் குறிப்பிட்டான்).


ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்னாளில் கூறினார்கள்:

«وَلَشَأْنِي فِي نَفْسِي كَانَ أَحْقَرَ مِنْ أَنْ يَتَكَلَّمَ اللَّهُ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَلَكِنْ كُنْتُ أَرْجُو أَنْ يَرَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ رُؤْيَا يُبَرِّئُنِي اللَّهُ بِهَا»

"என் விவகாரத்தில் நபிகளாருக்கு ஓர் உண்மைக் கனவு காட்டப்பட்டு அதன் மூலம் நான் தூய்மைப்படுத்தப்படுவேன் என்றே நான் எதிர்பார்த்தேன். ஆனால், தொழுகைகளிலும் மஸ்ஜிதுகளிலும் உலக முடிவு வரை ஓதப்படும் இறைவேதத்தின் வசனங்களாக எனக்காக அல்லாஹ் இறக்குவான் என்ற உயர்வை நான் ஒருபோதும் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை.” நூல்: முஸ்லிம் 


மன்னிப்பு வசனம் இறங்கியது 

தபூக் போரில் பின்தங்கிய மூவரின் தவ்பா

ஹிஜ்ரி 9-ல் மிகக் கடுமையான வெயில் காலத்திலும் பஞ்சம் நிலவிய சூழலிலும் நிகழ்ந்த தபூக் போருக்கு நபிகளார் அழைப்பு விடுத்தபோது, உண்மையான நம்பிக்கையாளர்களான கஅப் இப்னு மாலிக், ரலியல்லாஹு அன்ஹு முராரா இப்னு ரபீஆ, ரலியல்லாஹு அன்ஹு ஹிலால் இப்னு உமய்யா ரலியல்லாஹு அன்ஹு ஆகிய மூவர் எந்த நியாயமான காரணமும் இன்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்டனர்.


போரிலிருந்து திரும்பிய நபிகளாரிடம் முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) பொய் காரணங்களைக் கூறி தப்பித்துக் கொண்டனர். ஆனால், கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளிட்ட மூவரும் நபிகளாரிடம் துளியும் பொய் சொல்லாமல், "எங்களிடம் எந்தக் காரணமும் இல்லை; அறுவடை காரணமாக பின்தங்கிவிட்டோம்" என்று உண்மையை ஒப்புக்கொண்டனர்.


இதன் விளைவாக, அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு வரும்வரை அவர்களுடன் யாரும் பேசக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகப் புறக்கணிப்பு உத்தரவிட்டார்கள். 50 நாட்கள் முழு மதீனாவும் அவர்களுடன் பேசுவதை நிறுத்தியது; அவர்களின் மனைவியரும் பிரிந்தனர். கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: "பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் என்னை நெருக்குவது போல் குறுகிவிட்டது; என் உயிரே எனக்குப் பாரமாகிவிட்டது."


மனிதர்களிடம் அடைக்கலம் தேடாமல், அல்லாஹ்விடமே அழுது பாவமன்னிப்புக் கோரிய 50-வது நாள் விடியற்காலையில் வானத்திலிருந்து சூரா அத்தவ்பாவின் வசனம் இறங்கியது:

وَّعَلَى الثَّلٰثَةِ الَّذِيْنَ خُلِّفُوْا حَتّٰۤى اِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوْبُوْا ‌ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏

அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 9:118)


விடியற்காலைத் தொழுகைக்குப் பின் இந்த வசனத்தை நபிகளார் அறிவித்ததும், ஒருவர் குதிரையில் விரைந்தும் மற்றொருவர் மலையிலிருந்து சத்தமிட்டும் கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நற்செய்தி கூறினர்.


அல்லாஹ் மிக ரோஷமானவன்

சூரா அந்-நூரின் தொடக்கத்தில், ஒழுக்கமுள்ள பெண்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்திவிட்டு அதற்கு நான்கு நேரில் கண்ட சாட்சிகளைக் கொண்டுவராதவர்களுக்கு 80 கசையடிகள் வழங்க வேண்டும் என்ற தண்டனைச் சட்டம் (ஹத்துல் கத்ஃப் - 24:4) அருளப்பட்டது.

இந்தச் சட்டம் அருளப்பட்டதும் அன்ஸாரிகளின் தலைவர்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு நபிகளாரிடம் ஆச்சரியத்துடன் ஒரு கேள்வியைக் கேட்டார்:

"அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியோடு மற்றொருவன் இருப்பதை நேரில் கண்டாலும் கூட, நான்கு சாட்சிகளைத் தேடிப் பிடிக்கும் வரை அவன் அமைதியாக இருக்க வேண்டுமா? நான் சாட்சிகளைத் தேடிச் செல்வதற்குள் அவன் தன் காரியத்தை முடித்துவிட்டு ஓடிவிடுவானே! அவனைக் கண்ட இடத்திலேயே நான் வாளால் வெட்டிவிடக் கூடாதா?"

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஸஅத்தின் ரோஷத்தைக் கண்டு வியக்கிறீர்களா? நிச்சயமாக அவரை விட எனக்கு ரோஷம் அதிகம்; என்னை விட அல்லாஹ்வுக்கு ரோஷம் அதிகம். எனினும், சாட்சியின்றித் தண்டனை நிறைவேற்ற மார்க்கத்தில் அனுமதி இல்லை" என்று கூறினார்கள்.

ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களின் வருகை

ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய சில நாட்களிலேயே அத்தகையதொரு சோதனைக்களம் உருவானது. ஹிலால் இப்னு உமய்யா ரலியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர், தன் மனைவி ஷரீக் இப்னு சஹ்மா என்பவனுடன் முறைகேடாக இருப்பதைத் தன் சொந்தக் கண்களால் கண்டு, தன் காதுகளாலேயே கேட்டார்.

இரவு முழுவதும் அமைதியாகக் காத்திருந்து, விடியற்காலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நடுங்கும் குரலில் நடந்ததை முறையிட்டார்.

அப்போது நடப்பிலிருந்த குர்ஆனிய சட்டத்தின்படி, நான்கு சாட்சிகள் இல்லாத அவதூறுக்குக் கணவனும் விதிவிலக்கல்ல. எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம்:

البَيِّنَةُ أَوْ حَدٌّ فِي ظَهْرِكَ "நான்கு சாட்சிகளைக் கொண்டு வா! இல்லையெனில் உன் முதுகில் அவதூறுக்கான கசையடி தண்டனை விழும்!" என்றார்கள்.


ஹிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வேதனையோடு கூறினார்கள்: 

فَقَالَ هِلَالٌ: بَعَثَكَ بِالحَقِّ إِنِّي لَصَادِقٌ، وَلَيُنْزِلَنَّ اللَّهُ مَا يُبَرِّئُ ظَهْرِي مِنَ الحَدِّ»

"அல்லாஹ்வின் மீதாணையாக! எவனை உண்மையான மார்க்கத்துடன் உங்களை அனுப்பினானோ அவன் மீது சத்தியமாக, நான் உண்மை பேசுகிறேன். என் முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் தீர்ப்பை (வஹீயை) அல்லாஹ் நிச்சயம் வானத்திலிருந்து இறக்குவான்!"

அங்கிருந்த அன்ஸாரித் தோழர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்; "நம்மில் ஒருவர் தன் கண்ணால் கண்ட உண்மையைக் கூறியதற்காக இப்போது கசையடி வாங்கப் போகிறாரே" என்று கலங்கினர்.

அல்லாஹ்வின் பதில்: (சூரா அந்-நூர்: 24:6-9)

ஹிலால் ரலியல்லாஹு அன்ஹு அழுது முறையிட்டுக் கொண்டிருந்த அதே தருணத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ இறங்கத் தொடங்கியது. வஹீயின் பாரத்தால் நபிகளாரின் முகம் மாறியது; வியர்வைத் துளிகள் வழிந்தன. வஹீ நிலை விலகியதும் நபிகளார்:

"ஹிலாலே! நற்செய்தி பெற்றுக்கொள்; அல்லாஹ் உனக்குத் தீர்வையும் நிவாரணத்தையும் வழங்கிவிட்டான்!" என்றார்கள்.

وَالَّذِيْنَ يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۭ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ‏

"தங்கள் மனைவியர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தி, தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாதிருக்கிறார்களே அத்தகையோர் — அவர்களில் ஒருவரின் சாட்சியமாவது, தான் நிச்சயமாக உண்மையாளர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியமளிப்பதாகும்." (அல்குர்ஆன் 24:6)

وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِيْنَ‏

"ஐந்தாவது முறையாக, தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் (என்று கூற வேண்டும்)." (அல்குர்ஆன் 24:7)

وَيَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۭ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِيْنَ‏

"ஆனால், அவன் நிச்சயமாகப் பொய்யர்களில் உள்ளவன் என்று அவள் அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியமளிப்பது அவளை விட்டும் அந்தத் தண்டனையைத் தடுத்துவிடும்." (அல்குர்ஆன் 24:8)

وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَيْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِيْنَ‏

"ஐந்தாவது முறையாக, அவன் உண்மையாளர்களில் உள்ளவனாக இருந்தால், தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும் (என்று அவள் கூற வேண்டும்)." (அல்குர்ஆன் 24:9)

வசனங்கள் இறங்கியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருவரையும் அழைத்தார்கள்:

ஹிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து நான்கு முறை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தான் உண்மையாளர் என்று கூறினார். ஐந்தாவது சாபப் பிரமாணத்தைக் கூறும் முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; மறுமையின் வேதனை உலகத்தின் தண்டனையை விடக் கடுமையானது" என்று எச்சரித்தார்கள். ஆயினும் ஹிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "இறைவன் எவ்வாறு என் முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றினானோ, அவ்வாறே மறுமையிலும் என்னை வேதனை செய்யமாட்டான்" என்று கூறி, ஐந்தாவது சாபத்தையும் கூறி முடித்தார்கள்.

அடுத்து அந்தப் பெண் எழுந்து நான்கு முறை தன் கணவன் பொய்யன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினார். ஐந்தாவது சாபத்தைக் கூற வரும்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளையும் தடுத்து நிறுத்தி, "இது அல்லாஹ்வின் கோபத்தை இறக்கிவிடும்; யோசித்துக் கொள்" என்றார்கள். அவள் சிறிது நேரம் அமைதியாகத் தயங்கி நின்றாள்; மக்கள் அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போகிறாள் என்று கருதினர். ஆனால் அவள், "என் கூட்டத்தாரை நான் எக்காலத்திற்கும் தலைகுனிய வைக்க மாட்டேன்" என்று கூறி, ஐந்தாவது முறையாகத் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும் என்று கூறிவிட்டாள்.

இருவரும் லிஆன் செய்து முடித்ததும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருவரையும் நிரந்தரமாகப் பிரித்து வைத்தார்கள். அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தந்தைவழிப் பெயரின்றி, தாயின் பெயரையே சூட்ட உத்தரவிட்டார்கள்.

பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنْ جَاءَتْ بِهِ أَبْيَضَ سَبْطًا فَهُوَ لِزَوْجِهَا، وَإِنْ جَاءَتْ بِهِ أَكْحَلَ جَعْدًا فَهُوَ لِلَّذِي رَمَاهَا بِهِ»،

فَجَاءَتْ بِهِ عَلَى النَّعْتِ المَكْرُوهِ (أَيْ كَشَرِيكِ بْنِ سَحْمَاءَ).

"இவளைக் கவனித்துக் கொண்டே இருங்கள்: இவள் பெற்றெடுக்கும் குழந்தை சுருள் முடியும், கரிய விழிகளும், பருத்த பின்னங்கால்களும் கொண்டதாகப் பிறந்தால், அது ஷரீக் இப்னு சஹ்மாவுக்குப் பிறந்தது (அதாவது ஹிலாலின் குற்றச்சாட்டு உண்மை). மாறாக, வெளிறிய நிறத்தில் மெலிந்த உடலுடன் பிறந்தால் அது ஹிலாலுக்குப் பிறந்தது."

குழந்தை பிறந்தபோது, நபிகளார் அடையாளப்படுத்தியபடியே ஷரீக் இப்னு சஹ்மாவின் அத்தனை அங்க அமைப்புகளோடும் பிறந்தது. அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

«لَوْلاَ مَا مَضَى مِنْ كِتَابِ اللَّهِ لَكَانَ لِي وَلَهَا شَأْنٌ»

"இறைவேதத்தின் சட்டம் மட்டும் ஏற்கனவே (லிஆன் மூலம்) முடிவடைந்திருக்காவிட்டால், அவளுக்கு எதிராகக் கடுமையான தண்டனையை நான் நடைமுறைப்படுத்தியிருப்பேன்" என்று கூறினார்கள்.

ஒரு கணவன் அந்நியப் பெண்கள் மீது அவதூறு கூறினால் 4 சாட்சிகள் கட்டாயம் தேவை; ஆனால் தன் மனைவியின் ஒழுக்கமின்மையைக் காணும்போது 4 சாட்சிகள் தேவையில்லை, 'லிஆன்' மூலம் அவன் தன்னை நிரூபிக்கலாம்.

கணவன் பொய் சொன்னாலும் கூட, மனைவி தன் மீதான அவதூறை 5 சத்தியப் பிரமாணங்கள் மூலம் முறியடித்து விபச்சாரக் கல்லெறித் தண்டனையிலிருந்து தப்பலாம்.

லிஆன் செய்யப்பட்ட கணவனும் மனைவியும் மறுபடி ஒருபோதும் திருமணம் செய்துகொள்ள முடியாது; அவர்கள் நிரந்தரமாகப் பிரிக்கப்படுவார்கள்.


நீதிக்கே முன்னுரிமை என்பதைப் பிரகடனம்

மதீனாவில் அன்ஸாரிகளில் 'பனூ ளுஃபர்' என்ற கிளையைச் சேர்ந்த உபைரிக் என்பவரின் மகன்களான பிஷ்ர், பஷீர், முபஷ்ஷிர் ஆகிய மூவர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் பஷீர் என்பவன் நயவஞ்சகனாகவும் (முனாஃபிக்கு), கவிதைகள் மூலம் நபித்தோழர்களை இழிவாகப் பேசிவிட்டு, வேறொருவர் பெயரில் அதை வெளியிடுபவனாகவும் இருந்தான்.

மதீனாவில் வாழ்ந்த மற்றொரு நபித்தோழர் ரிஃபாஆ இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு (இவர் கத்தாதா இப்னு அந்-நுஃமான் ரலி அவர்களின் பெரிய தந்தை). அவர் ஷாம் தேசத்திலிருந்து வணிக ஒட்டகங்கள் வந்தபோது, தன் குடும்பத் தேவைக்காக ஒரு மூட்டை மாவு மற்றும் ஒரு தோல் பையில் தம் வாள், கவசம் போன்ற ஆயுதங்களை வாங்கி, வீட்டின் நிலவறை போன்ற ஓர் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

பஷீர் இப்னு உபைரிக் இரவோடு இரவாக அந்த வீட்டின் சுவரைத் துளையிட்டு, மாவு மூட்டையையும் ஆயுதங்களையும் திருடிச் சென்றார்.

மாவு மூட்டையில் ஒரு சிறு ஓட்டை இருந்ததால், திருடன் நடந்து சென்ற பாதை முழுவதும் மாவு தரையில் சிந்தி ஒரு சுவடை ஏற்படுத்தியிருந்தது.

மறுநாள் காலையில் ரிஃபாஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருட்டுப் போனதை உணர்ந்து, தன் சகோதரர் மகன் கத்தாதாவிடம் கூறினார். இருவரும் மாவு சிந்திய தடத்தைத் தேடிச் சென்றபோது, அந்தத் தடம் பனூ உபைரிக்கின் வீட்டு வாசல் வரை சென்று நின்றது.

அதை உணர்ந்த பஷீரும் அவன் சகோதரர்களும் பதற்றமடைந்தனர். உடனே அவர்கள் மாவை எடுத்துக்கொண்டு, மீதமிருந்த ஆயுதங்களை ஸைத் இப்னு அஸ்-ஸமீன் என்ற அப்பாவி யூதரின் வீட்டிற்குள் சென்று, அவருக்குத் தெரியாமல் பதுக்கி வைத்தனர் (சில அறிவிப்புகளில்: "இதை அமானிதமாக உன்னிடம் வை" என்று கூறி யூதனிடம் கொடுத்தனர்).

கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பனூ உபைரிக்கிடம் வினவியபோது, அவர்கள் திட்டமிட்டுப் பழிபோட்டனர்:

"அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் திருடவில்லை; யூதனான ஸைத் இப்னு அஸ்-ஸமீன்தான் திருடினான்; வேண்டுமென்றால் அவன் வீட்டைச் சோதித்துப் பாருங்கள்!"

மக்கள் யூதனின் வீட்டில் தேடியபோது, ஆயுதங்கள் கிடைத்தன. யூதன் நடுங்கி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நான் திருடவில்லை; பஷீர் இப்னு உபைரிக்தான் என் வீட்டில் கொண்டு வந்து வைத்தான்" என்று கதறினான். ஆனால், அவனது சொல்லை யாரும் நம்பத் தயாராக இல்லை.

பனூ உபைரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பெரும் கூட்டமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அவர்கள் நபிகளாரிடம் பச்சாதாபம் தேடும் வகையில் வாதாடினர்:

فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُنَاسٌ مِنْ بَنِي ظُفَرٍ فَقَالُوا:

«يَا رَسُولَ اللَّهِ، إِنَّ قَتَادَةَ بْنَ النُّعْمَانِ وَعَمَّهُ عَمَدَا إِلَى أَهْلِ بَيْتٍ مِنَّا أَهْلِ إِسْلَامٍ وَصَلَاحٍ، يَرْمُونَهُمْ بِالسَّرِقَةِ مِنْ غَيْرِ بَيِّنَةٍ وَلَا ثَبَتٍ!»

"அல்லாஹ்வின் தூதரே! எங்கள் குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள். ஆனால் அந்த யூதனோ உங்கள் எதிரி; இணைவைப்பாளன். கத்தாதாவும் ரிஃபாஆவும் எந்த ஆதாரமும் இன்றி நன்மக்களான எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். அந்த யூதனின் வீட்டில்தான் பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே அந்த யூதனே குற்றவாளி என்று தீர்ப்பளித்து எங்கள் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள்!"

வெளிப்படையான சூழ்நிலைச் சான்றுகளும் யூதனின் வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அந்த முடிவுக்குத் தள்ளின. 

கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரிடம் மீண்டும் முறையிட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கத்தாதாவை நோக்கிக் கடிந்து:

فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«عَمَدْتَ إِلَى أَهْلِ بَيْتٍ يُذْكَرُ مِنْهُمْ إِسْلَامٌ وَصَلَاحٌ، تَرْمِيهِمْ بِالسَّرِقَةِ عَلَى غَيْرِ ثَبَتٍ وَلَا بَيِّنَةٍ؟!»

உறுதியான சான்றுகள் இல்லாமல், இஸ்லாத்தை ஏற்று வாழ்வதாகக் கூறப்படும் ஒரு குடும்பத்தின் மீது திருட்டுப் பழியைச் சுமத்துகிறாயா?" என்று கேட்டார்கள்.

கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மனம் உடைந்து அழுதபடி திரும்பி, தன் பெரிய தந்தை ரிஃபாஆவிடம், "நான் நபிகளாரிடம் பேசியிருக்கவே கூடாது; அல்லாஹ்வின் தூதர் என் மீது கோபப்பட்டு விட்டார்கள்" என்றார். ஆனால் முஃமினான ரிஃபாஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்"அல்லாஹுல் முஸ்தஆன்" (அல்லாஹ்வே உதவிக்குரியவன்) என்று அமைதி காத்தார்.

அல்லாஹ்வின் பதில்: (சூரா அந்-நிஸா: 4:105-113)

மனிதக் கண்களுக்கு யூதன் குற்றவாளியாகவும், பனூ உபைரிக் யோக்கியர்களாகவும் தோன்றிய அந்த இக்கட்டான கணத்தில், ஏழு வானங்களுக்கு அப்பாலிருந்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி உண்மையை வெட்டவெளிச்சமாக்கினார்கள்.

 நீதியை நிலைநாட்டும் கட்டளை

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَاۤ اَرٰٮكَ اللّٰهُ‌ ؕ وَلَا تَكُنْ لِّلْخَآٮِٕنِيْنَ خَصِيْمًا

"நிச்சயமாக நாம் மனிதர்களிடையே அல்லாஹ் உமக்குக் காட்டியதைக் கொண்டு தீர்ப்பளிப்பதற்காக உண்மையைக் கொண்ட இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம். ஆகவே, (பனூ உபைரிக் போன்ற) துரோகிகளுக்காக வாதாடுபவராக நீர் இருக்க வேண்டாம்!" (அல்குர்ஆன் 4:105)

وَّاسْتَغْفِرِ اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا

"மேலும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான்." (அல்குர்ஆன் 4:106) (

وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًا

"தமக்குத்தாமே துரோகம் இழைத்துக் கொண்டார்களே அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் துரோகியாகவும் பெருங்குற்றவாளியாகவும் இருப்பவனை நேசிப்பதில்லை." (அல்குர்ஆன் 4:107)

يَسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا

"அவர்கள் மனிதர்களிடமிருந்து (தம் குற்றங்களை) மறைக்க முனைகிறார்கள்; ஆனால் அல்லாஹ்விடமிருந்து அவர்களால் மறைக்க முடியாது. அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களை அவர்கள் இரவில் இரகசியமாகத் திட்டமிட்டபோது அவன் அவர்களுடனேயே இருந்தான். அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் முழுமையாகச் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்." (அல்குர்ஆன் 4:108)

وَمَنْ يَّكْسِبْ خَطِيْٓـئَةً اَوْ اِثْمًا ثُمَّ يَرْمِ بِهٖ بَرِيْٓــٴًـا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا

"எவன் ஒரு தவறை அல்லது பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதனை ஒரு நிரபராதியின் மீது சுமத்துகிறானோ, அவன் நிச்சயமாகப் பெரும் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் தன்மீது சுமந்து கொண்டான்!" (அல்குர்ஆன் 4:112)

வசனங்கள் இறங்கியதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தத் திருட்டுப் பொருட்களைப் பறிமுதல் செய்து ரிஃபாஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைத்தார்கள். ரிஃபாஆ ரலியல்லாஹு அன்ஹு அந்த ஆயுதங்களை அல்லாஹ்வின் பாதையில் (போராட்டத்திற்காக) அன்பளிப்பாக வழங்கினார்.

 அந்த அப்பாவி யூதர் முழுமையாக நிரபராதி என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

தன் சதி அம்பலமானதைக் கண்ட திருடன் பஷீர் இப்னு உபைரிக், மதீனாவை விட்டு மக்காவிற்குத் தப்பியோடி, இஸ்லாத்தை விட்டு வெளியேறி முர்தத் (மதவிலகல்) ஆனான். மக்காவில் சுலாஃபா பின்த் ஸஅத் என்பவளின் வீட்டில் தஞ்சம் புகுந்தான். அப்போதுதான் அல்லாஹ் அவனைக் குறித்து பின்வரும் வசனத்தை இறக்கினான்:


"எவன் தனக்கு நேர்வழி தெளிவாகத் தெரிந்த பின்னரும், இத்தூதரை விட்டு மாறுபட்டு, இறைநம்பிக்கையாளர்களின் வழியல்லாத வேறு வழியைப் பின்பற்றுகிறானோ, அவன் செல்லும் வழியிலேயே அவனை நாம் விட்டுவிடுவோம்; பின்னர் அவனை நரகத்தில் புகுத்துவோம்..." (4:115).


 பின்னர் அங்கும் அவனது தவறான நடத்தை தெரிந்ததால் அவன் துரத்தப்பட்டு, இழிவான முறையில் ஒரு மதில் சுவர் இடிந்து விழுந்து செத்து மடிந்தான். நூல்: ஸுனன் திர்மிதி அறிவிப்பாளர்: கத்தாதா இப்னு அந்-நுஃமான் (ரலி).

தவறு செய்தவன் முஸ்லிமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டவன் மாற்று மதத்தவனாக (யூதனாக) இருந்தாலும் அவனுக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்ற இஸ்லாமியப் பொதுநீதியை இது ஆழமாகப் பதிக்கிறது.

தான் செய்த குற்றத்தை மறைக்க ஒரு நிரபராதியின் மீது பழிபோடுவது அல்லாஹ்வின் பார்வையில் மன்னிக்க முடியாத கொடிய துரோகமாகும்.


தயம்மம் (மண்ணைக் கொண்டு தூய்மை அடைதல்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள் ( வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் முஹத்திஸீன்களின் கூற்றுப்படி இது பனூ முஸ்தலக் அல்லது முரைஸீஃ போர் முடிந்து திரும்பிய சமயம்). இந்தப் பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் உடன் சென்றிருந்தார்கள்.

பயணத்தின் போது அணிவதற்காக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், தம் மூத்த சகோதரியான அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து மணிகளால் கோர்க்கப்பட்ட யமன் நாட்டு மாலை ஒன்றை இரவலாக வாங்கி அணிந்திருந்தார்கள்.

மதீனாவை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், 'பைதா' (Al-Bayda) அல்லது 'தாத்துல் ஜைஷ்' (Dhat al-Jaysh) என்ற பாலைவனப் பகுதியை அடைந்தபோது, ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கழுத்திலிருந்த அந்த மாலை நழுவி எங்கோ விழுந்துவிட்டது.

மாலை தவறிப் போனதை உணர்ந்த ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விபரத்தைக் கூறினார்கள். இரவலாகப் பெற்று வந்த பொருளை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, நபிகளார் ஒட்டுமொத்தப் படையையும் அங்கேயே முகாமிட்டு நிறுத்தினார்கள்.

நபிகளாரும் தோழர்களும் அந்தப் பாலைவன மணலில் மாலையைத் தேடத் தொடங்கினர். ஆனால் நெடுநேரம் தேடியும் மாலை கிடைக்கவில்லை. இரவு கடந்து விடியற்காலை நெருங்கியது.

அப்போதுதான் அந்தப் பெரும் நெருக்கடி வெளிப்பட்டது:

அந்த முகாமில் எந்தவொரு கிணறோ, நீரூற்றோ இல்லை.

முந்தைய நாளே படையினரிடமிருந்த தண்ணீர்க் குடுவைகள் அனைத்தும் காலியாகியிருந்தன.

சுபுஹ் (விடியற்காலை) தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது; ஆனால் அங்கிருந்த எவரிடமும் உளூச் செய்வதற்கு ஒரு துளித் தண்ணீரும் இல்லை.

தண்ணீரின்றித் தவித்த மக்கள், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தையான அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று முறையிட்டனர்:

"ஆயிஷா செய்த காரியத்தைப் பார்த்தீர்களா? மக்களிடம் தண்ணீர் இல்லை; தங்குமிடத்திலும் நீர்நிலைகள் இல்லை. இப்படிப்பட்ட ஒரு வறண்ட இடத்தில் ஒட்டுமொத்தப் படையையும் நிறுத்திவிட்டாரே!"

மக்கள் குறைபட்டுக் கொண்டதைக் கேட்டு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு மிகுந்த மனவருத்தமும் கோபமும் அடைந்தார். அவர் நேராக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா தங்கியிருந்த கூடாரத்திற்குள் நுழைந்தார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மடி மீது தலை சாய்த்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபிகளார் தூங்குவதைக் கண்ட அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, கடுமையான சொற்களால் மகளைக் கடிந்தார்:

"மக்களைத் தண்ணீர் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டாயே! மக்களிடமும் தண்ணீர் இல்லை; இந்த இடத்திலும் தண்ணீர் இல்லை!"

அல்லாஹ் நாடிய வார்த்தைகளால் மகளைக் கோபித்துக் கொண்ட அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, தன் கையால் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இடுப்புப் பகுதியில் பலமாகக் குத்தினார்.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:

«فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي»

"அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள்; அல்லாஹ் நாடிய சொற்களையெல்லாம் (கோபத்தில்) கூறினார்கள்."

"மேலும், தம் கையால் என் இடுப்புப் பகுதியில் பலமாகக் குத்தலானார்கள்."

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தொடை (மடி) மீது தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்த அந்த நிலையைத் தவிர வேறெதுவும் என்னை அசையாமல் தடுத்து வைத்திருக்கவில்லை (அதாவது நபிகளாரின் தூக்கம் கலைந்துவிடக் கூடாதென்பதற்காகவே வலியைத் தாங்கிக்கொண்டு அசையாமல் இருந்தேன்)."

விடியலும் அல்லாஹ்வின் வானளாவிய தீர்வும்

விடியற்காலை நேரம் வந்தது. நபிகளார் விழித்தெழுந்தார்கள். தொழுகைக்குத் தண்ணீர் இன்றித் தோழர்கள் திகைத்து நின்ற அந்த இக்கட்டான சூழலில், ஏழு வானங்களுக்கு மேலிருந்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக அல்லாஹ் "தயம்மம்" சட்டத்தை உள்ளடக்கிய வசனத்தை அருளினான்:

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏

"...நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் மலசலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்து (உடலுறவு கொண்டு), அப்போது உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணைத் தொட்டுத் தையம்மம் செய்து, உங்களுடைய முகங்களையும் உங்களுடைய கைகளையும் (அதனால்) தடவிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெரும் பிழைபொறுப்பவனாகவும், மிக்க மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்." (அல்குர்ஆன் 4:43 — மேலும் சூரா அல்-மாயிதா 5:6-லும் இச்சட்டம் விவரிக்கப்பட்டுள்ளது).

இந்த வசனம் அருளப்பட்டதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அனைத்துத் தோழர்களும் சுத்தமான பூமியின் மண்ணைத் தொட்டுத் தயம்மம் செய்து நிம்மதியுடன் சுபுஹ் தொழுகையை நிறைவேற்றினர்.

நெருக்கடி நீங்கி, எளிய மார்க்கச் சலுகை கிடைத்த மகிழ்ச்சியில் அன்ஸாரிகளின் தலைவர்களில் ஒருவரான உஸைத் இப்னு ஹுளைர் ரலியல்லாஹு அன்ஹு ஓடிவந்து அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் முன்னிலையில் நெகிழ்ந்து கூறினார்:

مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ 

அபூபக்கரின் குடும்பத்தாரே! இது உங்களால் இந்த உம்மத்திற்கு (முஸ்லிம் சமுதாயத்திற்கு) கிடைத்த முதல் பரகத் (அருள்வளம்) அல்ல! (இதற்கு முன்பும் உங்களால் எத்தனையோ நன்மைகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன)."

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது கோபம் கொண்டு அவரைக் குத்திய அதே அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தன் மகளால் இந்த உம்மத்திற்கு உலக முடிவு வரை தொழுகையை எளிதாக்கும் ஒரு மாபெரும் இறைச்சலுகை கிடைத்ததைக் கண்டு ஆனந்தமும் பெருமிதமும் அடைந்தார்.

தொழுகை முடிந்து படை புறப்படுவதற்குத் தயாரானது. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பயணம் செய்வதற்காக அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது, அந்த ஒட்டகம் படுத்திருந்த இடத்திலேயே, அதன் வயிற்றுக்குக் கீழே அந்த மாலை பத்திரமாகக் கிடந்தது!

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: 

«فَبَعَثْنَا البَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ، فَوَجَدْنَا القِلاَدَةَ تَحْتَهُ»

"நாங்கள் ஒட்டகத்தை எழுப்பியபோது, அதன் அடியிலேயே மாலை கிடப்பதைக் கண்டோம்."

அதாவது, ஒட்டகத்தின் அடியிலேயே இருந்த ஒரு சாதாரண மணிமாலையைத் தேட வைத்ததன் மூலம், உலக முடிவு வரை வாழப்போகும் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்குத் தண்ணீர் கிடைக்காத நேரத்திலும், நோயுற்ற நேரத்திலும் தொழுகையை விடாமல் நிறைவேற்றுவதற்கான எளிய வழியை அல்லாஹ் தன் ஞானத்தினால் ஏற்படுத்திக் கொடுத்தான்.

இஸ்லாம் ஒருபோதும் அடியார்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குவதில்லை; தண்ணீர் இல்லாதபோது மண்ணையே தூய்மையாக்கும் சாதனமாக ஆக்கியதன் மூலம் வழிபாட்டின் தொடர்ச்சியை உறுதிசெய்தது.

ஒரு தொலைந்த மாலை மூலமாக உம்மத்திற்கே ஒரு சட்ட நிவாரணம் கிடைக்கக் காரணமாக அமைந்ததன் மூலம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் உயர்வை அல்லாஹ் நிலைநாட்டினான்.

தந்தை கோபித்துக் குத்தியபோதும் நபிகளாரின் உறக்கம் கலையக்கூடாது என்று அமைதி காத்த ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நற்பண்பும் இதில் வெளிப்படுகிறது.

பூமியின் கதவுகள் அனைத்தும் அடைபடும் போதுதான், வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன!

உங்கள் வீட்டில் உங்களை எவரும் புரிந்து கொள்ளவில்லையா? கவ்லா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வாதத்தைக் கேட்ட அதே அல்லாஹ் உங்களின் அழுகையையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்.


இல்லாத பழியை உங்கள் மீது உலகம் சுமத்துகிறதா? அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தூய்மையை உலகறியச் செய்த அல்லாஹ், உங்கள் நிரபராதித் தன்மையையும் வெளிப்படுத்துவான்.


செய்த பாவங்களை நினைத்து உங்கள் உள்ளம் உங்களை நெருக்குகிறதா? 50 நாட்கள் பூமி சுருங்கிப்போன கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பாவமன்னிப்பு வழங்கிய அதே ரஹ்மான், இன்றும் தவ்பாவின் வாசலைத் திறந்து வைத்திருக்கிறான்.


நோயும் வறுமையும் உங்களை வாட்டுகிறதா? அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தீராத துயரத்தை ஒரு நொடியில் நீக்கிய அதே ஷாஃபி (குணமளிப்பவன்) இன்றும் ஜீவித்திருக்கிறான்.


இறைநம்பிக்கையாளர்களே! மனிதர்களிடம் சென்று குறைகளை முறையிட்டு அவமானப்படாதீர்கள். இரவின் கடைசிப் பகுதியில், உலகம் உறங்கும் வேளையில், உங்கள் பாயை விரியுங்கள். கைகளை ஏந்துங்கள். உங்கள் கண்ணீர்த் துளிகளை அல்லாஹ்விடம் பேசுங்கள்.

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் மிகச் சமீபமாகவே இருக்கிறேன். என்னை எவரேனும் அழைத்தால், அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன்" (என்று கூறுவீராக). — (அல்குர்ஆன் 2:186)


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ»

"நிச்சயமாக உங்கள் இறைவன் வெட்கப்படுபவனாகவும், தாராள குணம் கொண்டவனாகவும் இருக்கிறான்; ஓர் அடியான் தன்னிடம் கையேந்தும்போது, அவற்றை வெறுங்கையாகத் திருப்புவதற்கு அவன் வெட்கப்படுகிறான்!"நூல்: அபூ தாவூத்: 


இன்று நம் வாழ்க்கையிலும் பல சோதனைகள் வரலாம்.

குடும்பத்தில் யாருமே நம்மைப் புரிந்துகொள்ளாமல் தனித்து விடப்பட்டிருக்கலாம்.

செய்யாத தவறுக்காக அநியாயமான பழிச்சொற்களைச் சுமந்து உள்ளம் நொறுங்கிக் கொண்டிருக்கலாம்.


தீராத நோய்களோ, பெரும் கடன்களோ நம்மை மூச்சுத் திணற வைக்கலாம்.

பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், வாழ வழியற்றது போல உள்ளம் இறுகிச் சுருங்கிப் போயிருக்கலாம்.

மனிதர்களிடம் சென்று கையேந்தாதீர்கள்; அவர்கள் உங்கள் குறைகளைத் தூற்றிப் பேசுவார்களே தவிர, மன அமைதியைத் தரமாட்டார்கள். படைப்பினங்களிடம் புலம்புவதை நிறுத்திவிட்டு, படைத்தவனிடம் முறையிடுங்கள்!


இரவின் கடைசிப் பகுதியில், உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், உங்கள் முஸல்லாவை விரியுங்கள். நீங்கள் பேசக் கூடத் தேவையில்லை; உங்கள் கண்களிலிருந்து வழியும் அந்த இரண்டு சொட்டுக் கண்ணீரே அல்லாஹ்வின் அர்ஷை அசைக்கப் போதுமானது! மனிதர்களின் கதவுகள் யாவும் சத்தத்தோடு அடைபடலாம்; ஆனால், அர்ஷை ஆளும் ரப்புல் ஆலமீனின் கதவு உங்கள் அழைப்பிற்காக எப்போதும் திறந்தே இருக்கிறது!


யா அல்லாஹ்! எங்களின் உடைந்த உள்ளங்களை உன்னைத் தவிர அறிந்தவர் எவருமில்லை. எங்கள் நெஞ்சங்களின் பாரங்களையும், மறைவான கண்ணீர்த் துளிகளையும் நீயே காண்கிறாய்.


எங்கள் நெஞ்சங்களின் பாரங்களை நீக்குவாயாக! எங்கள் கடன்களை அடைத்து வைப்பாயாக! எங்கள் காரியங்களை எளிதாக்குவாயாக! இங்கு கூடியிருக்கும் எங்களின் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமலும், எந்தக் கவலையையும் நீக்காமலும் எங்களைத் திருப்பி அனுப்பிவிடாதே யா ரஹ்மான்!


எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை அருள்வாயாக; மறுமையிலும் நன்மையை அருள்வாயாக; மேலும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!

ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக