கண்ணீரை துடைக்கும் கரங்கள்
اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ:
فَقَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ:
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
● இஸ்லாம் என்பது கலிமா,தொழுகை ,நோன்பு, ஹஜ்ஜோடு முடிந்துவிடும் ஒரு மார்க்கம் அல்ல.
● பள்ளிவாசலுக்குள் நாம் இறைவனுக்குச் செய்யும் வணக்கங்கள் எவ்வாறு கடமையோ, அவ்வாறே பள்ளிவாசலுக்கு வெளியே சக மனிதர்களுக்குச் செய்யும் நன்மைகளும் மார்க்கக் கடமையாகும்.
● இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:
● أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
● "மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவர், மனிதர்களுக்கு அதிக நற்பயன் அளிப்பவரே ஆவார்." (நூல்: அத்தப்ரானீ)
● நமது தொழுகை, நோன்பு ஆகியவை நம்மைக் காப்பாற்றலாம்; ஆனால், ஒரு சமூகமாக நாம் வாழும்போது பிறருக்குப் பயனளிக்கவில்லை என்றால் நமது ஈமான் முழுமையடையாது என்பதை இந்நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
● இன்றைய காலகட்டத்தில்"நான், என் குடும்பம், என் வசதி" என்ற மனப்பான்மை மேலோங்கிவிட்டது. பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார், அவர் பசியோடு இருக்கிறாரா என்பதுகூடத் தெரியாத அளவிற்கு இயந்திர வாழ்க்கை நம்மை மாற்றிவிட்டது.
● விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பெரும் துயரத்தை எதிர்கொள்கிறார்கள்.
● போதைப்பொருள் பழக்கம், இணையவழிச் சூதாட்டம், சமூக வலைத்தள வீண்விரயங்கள் ஆகியவற்றால் இளைய தலைமுறை தடம் மாறுகிறது.
● இத்தகைய இக்கட்டான சூழலில், ஒரு முஸ்லிம் தன் வீட்டை மட்டும் பூட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிட முடியாது. சமூகத்தின் காயங்களுக்கு மருந்தாக நாம் மாற வேண்டும்.
● பாதிக்கப்பட்டவரின் கண்ணீரை துடைக்கும் கரமாக இருக்க வேண்டும்.
● சமூக நலன் என்பது ஏதோ பெரிய அமைப்புகள் மட்டுமே செய்ய வேண்டிய பணி அல்ல; நம் ஒவ்வொருவராலும் அன்றாடம் செய்யக்கூடிய பணிகளாகும்:
● நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்: "தன் பக்கத்து வீட்டுக்காரர் பசியோடு தூங்கும் வேளையில் தான் மட்டும் வயிறார உண்பவன் உண்மையான முஃமின் அல்ல." நமது தெருவிலும் பகுதியிலும் உணவின்றி தவிப்பவர்கள் எவரேனும் உள்ளனரா என்று கவனிப்பது நமது பொறுப்பு.
● ஒரு சமுதாயத்தின் அறியாமையையும் வறுமையையும் விரட்டும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. பொருளாதார வசதியின்றிப் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பது தலைசிறந்த தர்மமாகும்.
● சாலையில் பிறருக்கு இடையூறாக இருக்கும் கழிவுகளையோ, முட்களையோ அகற்றுவது ஈமானின் ஒரு கிளை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். பொது இடங்களை அசுத்தப்படுத்தாமல் இருப்பதும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் நம் ஈமானின் வெளிப்பாடாகும்.
● நமது ஊரின் இளைஞர்களைத் தீய பழக்கங்களிலிருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பு வழிகாட்டல்களையும், நற்பண்புப் பயிற்சிகளையும் ஏற்படுத்தித் தருவது சமூகப் பாதுகாப்பாகும்.
● நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்குள் காட்டும் அன்புக்கும் பாசத்திற்கும் உவமை ஒரு உடலாகும்; அதில் ஓர் உறுப்பு வலித்தால், முழு உடலும் தூக்கமின்றிக் காய்ச்சலால் துடிக்கிறது. (ஸஹீஹ் முஸ்லிம்)
● சமூகத்தில் ஒருவருக்கு ஏற்படும் அநீதியும் துயரமும் அனைவரின் பொதுப் பிரச்சினையாக உணரப்பட வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் பிளவுபட்டு, விரோதம் பாராட்டிக்கொண்டிருந்தால் சமூகம் அழியும். வேற்றுமைகளைக் களைந்து, பொதுநலனில் ஒன்றிணைவதே இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை.
'ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவேன்
ஒருமுறை ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்காக ஒரு குதிரையை வாங்கி வருமாறு தம் பணியாளரைச் சந்தைக்கு அனுப்பினார்கள். பணியாளரும் சந்தைக்குச் சென்று, ஒரு நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்து, அதன் உரிமையாளரிடம் பேசி 300 திர்ஹம்களுக்கு விலை முடித்து, குதிரையையும் உரிமையாளரையும் ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அழைத்து வந்தார். பணம் கைமாற வேண்டிய நேரம்.
குதிரையை உற்றுப் பார்த்த ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு, அது சாதாரண குதிரை அல்ல; மிக உயர்ந்த ரகக் குதிரை என்பது உடனே புரிந்துவிட்டது. இன்றைய உலகத்தில் நாம் என்ன நினைப்போம்? "300 திர்ஹமுக்கு இவ்வளவு அருமையான குதிரை கிடைத்துவிட்டதே! விற்றவனுக்கு விவரம் தெரியவில்லை, நமக்கு நல்ல லாபம்" என்றுதானே நினைத்திருப்போம்?
ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாசறையில் பயின்ற அந்த உத்தமத் தோழர் என்ன செய்தார் தெரியுமா?
அந்தக் குதிரையின் உரிமையாளரைப் பார்த்து, "சகோதரரே! உமது குதிரை 300 திர்ஹமை விட அதிக மதிப்புடையது. இதை 400 திர்ஹமுக்குத் தருகிறீரா?" என்று கேட்டார். குதிரைக்காரருக்கு ஆச்சரியம்! விலை குறைத்துக் கேட்கும் உலகத்தில், இவரே முன்வந்து கூட்டிக் கேட்கிறாரே என்று வியந்து, "சரி, தருகிறேன்" என்றார்.
மீண்டும் குதிரையை நடை போட்டுப் பார்த்த ஜரீர் (ரலி), "இல்லை, இது 400-ஐ விடவும் மதிப்புள்ளது; 500-க்குத் தருகிறீரா?" என்றார். அப்படியே 600, 700 என ஏற்றி, இறுதியாக அக்குதிரையின் உண்மையான மதிப்பான 800 திர்ஹம்களைக் கொடுத்து வாங்கினார்கள்!
300 திர்ஹமுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு பொருளுக்கு, தாமாக முன்வந்து 800 திர்ஹம்கள்—அதாவது கிட்டத்தட்ட மும்மடங்கு விலை கொடுத்தார்கள்.
சுற்றியிருந்தவர்கள் வியப்பு மேலிடக் கேட்டார்கள்:
"ஜரீர் அவர்களே! அவரே 300 திர்ஹமுக்கு மனமுவந்து தரச் சம்மதித்திருக்கும்போது, நீங்கள் ஏன் வலியச் சென்று 800 வரை விலையை உயர்த்திக் கொடுத்தீர்கள்?"
அதற்கு ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அளித்த பதில், நம் அனைவரின் இதயங்களிலும் பொறித்து வைக்கப்பட வேண்டிய ஒன்று:
بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ
"நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரங்களைப் பிடித்து மூன்று விஷயங்களுக்காக பைஅத் (உறுதிமொழி) செய்தேன்: தொழுகையை நிலைநிறுத்துவேன், ஜகாத் கொடுப்பேன், 'ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவேன்' وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ என்று வாக்களித்தேன். இந்த ஏழைச் சகோதரனுக்குக் குதிரையின் மதிப்பு தெரியவில்லை என்பதற்காக அவரை ஏமாற்றினால், நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்த சத்தியத்திற்குத் துரோகம் செய்தவனாகி விடுவேன்!"
இன்று நமது வியாபாரங்கள் எப்படி இருக்கின்றன? ஒரு பொருளின் குறையை மறைத்து விற்கப் பார்க்கிறோம்; வாங்குபவருக்கு விவரம் தெரியவில்லை என்றால் கூடுதல் விலைக்கு விற்று ஏமாற்றுகிறோம்; அல்லது விற்பவர் ஏழை என்றால் மிகக் குறைந்த விலைக்குப் பிடுங்கப் பார்க்கிறோம்.
ஆனால் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் சமூக நலன் என்ன தெரியுமா? தொழுகை, நோன்பு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு சக மனிதனுக்கு நன்மை நாடுவதும், வியாபாரத்தில் நேர்மை பேணுவதும் முக்கியம். சக மனிதன் ஏமாந்துவிடக் கூடாது என்று சிந்திக்கும் இந்த உயர்வான பண்பே சமூக அமைதிக்கும் இறைவனின் அருள் இறங்குவதற்கும் உண்மையான காரணமாகும்!
நூல்: அல்-முஃஜமுல் கபீர் - இமாம் அத்-தப்ரானீ
மரத்தை போல் மாறுங்கள்
ஒருமுறை ஹழ்ரத் ஷிப்லீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தியானத்திலும் இறைச்சிந்தனையிலும் ஆழ்ந்தவாறு ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்கள். அப்போது பலத்த காற்று வீசி, மரத்தின் கிளைகளும் இலைகளும் ஒன்றுடன் ஒன்று உரசி அசையத் தொடங்கின.
அந்த மரத்தின் அசைவு மற்றும் சலசலப்பிலிருந்து ஒலித்த அந்த ஓசையை ஓர் ஆழமான ஞானப் பாடலாக, ஒரு கவித்துவ செய்தியாக ஷிப்லீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் உணர்ந்தார்கள். அம்மரம் தம்மைப் பார்த்து இவ்வாறு பாடி அழைப்பது போல் அவர்களுக்குக் கேட்டது:
يَا شِبْلِي يَا شِبْلِي، كُنْ مِثْلِي كُنْ مِثْلِي،
يَرْمُونَنِي بِالْحَجَرِ، وَأَرْمِيهِمْ بِالثَّمَرِ.
"ஓ ஷிப்லீ! ஓ ஷிப்லீ! என்னைப்போல் இருங்கள்! என்னைப்போல் இருங்கள்!
மனிதர்கள் என் மீது கல்லெறிகிறார்கள்; நானோ அவர்களுக்குப் பழங்களை எறிகிறேன் (தருகிறேன்)!”
"மனிதர்கள் பசியோடு வருகிறார்கள், ஆனால் கனிவான வார்த்தைகளைப் பேசுவதில்லை; மாறாக என் மீது கனத்த கற்களை எறிகிறார்கள். என் கிளைகள் உடைகின்றன, எனக்கு வலி ஏற்படுகிறது. ஆனால், என் மீது கல்லெறிந்த மனிதனுக்குப் பதிலுக்கு நான் கல்லை வீசுவதில்லை; அவனது பசி தீர மதுரமான பழங்களை அவனுக்குத் தருகிறேன்! ஓ ஷிப்லீ, என்னைப் போல நீங்களும் மாறுங்கள்!"
தீமைக்கு நன்மை செய்தல்: இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:
ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ
"தீமையை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக!" (அல்குர்ஆன் 41:34)
நம்மை ஒருவர் திட்டினால் நாமும் பதிலுக்குத் திட்டுவது மிருக குணம்; நம்மைத் திட்டுபவருக்கு இன்சொல்லால் பதிலளித்து, தீங்கு செய்பவருக்கு நன்மையையே வழங்குவது இறைநேசர்களின் பண்பு.
பொதுநலப் பணிகளிலோ, சமூக சேவைகளிலோ இறங்கும்போது மனிதர்களிடமிருந்து பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. கல்லடிகள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். அந்த மரத்தைப் போல, சமூகம் நம் மீது விமர்சனக் கற்களை வீசினாலும், நாம் அவர்களுக்குச் சேவை என்ற கனிகளையே திருப்பித் தர வேண்டும்.
தும்மியவருக்கு பதில்
ஹதீஸ் கலைப் பேரறிஞர், ஸுனன் அபீதாவூத் என்ற மகத்தான பொக்கிஷத்தைத் தொகுத்துத் தந்த இமாம் அபூதாவூத் அஸ்-ஸிஜிஸ்தானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை பெரிய பயணப் படகில், ஆற்று வழியே பயணம் செய்து கொண்டிருந்தார்கள். படகு தண்ணீரின் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அப்போது நதிக்கரையில் ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.
திடீரென கரையிலிருந்த அந்த மனிதர் பலமாகத் தும்மி, "அல்ஹம்துலில்லாஹ்" என்று இறைவனைப் புகழ்கிறார். ஆற்றின் அமைதியில் அந்த வார்த்தை, நகர்ந்து போய்க் கொண்டிருந்த படகில் அமர்ந்திருந்த இமாம் அபூதாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் காதுகளில் விழுகிறது.
இன்றைய காலகட்டத்தில் நம் பக்கத்தில் இருப்பவர் தும்மி "அல்ஹம்துலில்லாஹ்" சொன்னால்கூட, நாம் "யர்ஹமுகல்லாஹ்" என்று பதில் சொல்லத் தயங்குகிறோம் அல்லது மறந்து விடுகிறோம். ஆனால் இமாம் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
படகு வேகமாக முன்னேறிச் சென்றுவிட்டது. கரையில் நின்ற மனிதரோ வெகுதூரம் பின்னே சென்றுவிட்டார். படகிலிருந்து சத்தமிட்டுக் கூறினாலும் கரையிலிருப்பவருக்குக் கேட்காது.
உடனே இமாம் அபூதாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் படகோட்டியைப் பார்க்கிறார்கள். பக்கத்தில் நின்ற ஒரு சிறிய படகின் உரிமையாளரை அழைத்து, தம்மிடம் இருந்த ஒரு திர்ஹம் வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொடுக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஒரு திர்ஹம் என்பது ஒரு குடும்பத்தின் ஒருநாள் உணவிற்கான பெரிய தொகை!
"படகுக் காரரே! இந்த ஒரு திர்ஹமை வாங்கிக்கொள்; என்னை உடனே அந்த நதிக்கரைக்கு, அந்த மனிதர் நின்ற இடத்திற்கு அழைத்துச் செல்!" என்கிறார்கள்.
அந்தச் சிறிய படகில் ஏறி, அலைகளைக் கிழித்துக் கொண்டு, நீண்ட தூரம் பின்னோக்கிப் பயணித்து நதிக்கரையை அடைகிறார்கள். படகை விட்டு இறங்கி, அந்த மனிதரை நோக்கிச் சென்று, புன்னகையோடு முகம் மலரக் கூறுகிறார்கள்:
"يَرْحَمُكَ اللَّهُ" (யர்ஹமுகல்லாஹ்!)
"அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!"
கரையிலிருந்த அந்த மனிதர் வியந்துபோய், இமாம் அவர்களுக்குப் பதிலாக:
"யஹ்தீகுமுல்லாஹு வ யுஸ்லிஹு பாலகும்" (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி, உங்கள் மனநிலையைச் சீராக்குவானாக!) என்று துஆச் செய்கிறார்.
சுபஹானல்லாஹ்! அந்த ஒரு வார்த்தை வாழ்த்தைச் சொல்லிவிட்டு, மனநிறைவோடு இமாம் அவர்கள் மீண்டும் தமது பயணப் படகுக்கே திரும்பி வருகிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள் வாயடைத்துப் போய் நின்றார்கள். "அபூதாவூத் அவர்களே! என்ன காரியம் செய்தீர்கள்? கரையிலிருப்பவர் யாரோ ஒரு வழிப்போக்கர்! அவர் தும்மியதற்கு 'யர்ஹமுகல்லாஹ்' சொல்வதற்காகவா இவ்வளவு தூரம் தனிப் படகு பிடித்து, ஒரு திர்ஹம் பணத்தையும் விரயம் செய்துவிட்டு வருகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அப்போது இமாம் அபூதாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்
لَعَلَّ الرَّجُلَ حَمِدَ اللَّهَ بِقَلْبٍ صَادِقٍ فَقَبِلَ اللَّهُ حَمْدَهُ، وَلَعَلَّهُ يَكُونُ مُجَابَ الدَّعْوَةِ فَيَرْحَمَنِي اللَّهُ بِدُعَائِهِ، أَوْ يَرْحَمُهُ بِدُعَائِي؛ وَمَا قِيمَةُ دِرْهَمٍ وَاحِدٍ فِي هَذِهِ الدُّنْيَا أَمَامَ إِحْيَاءِ سُنَّةٍ مِنْ سُنَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟
அந்த மனிதர் ஓர் உண்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வைப் புகழ்ந்திருக்கலாம்; அல்லாஹ்விடம் அவரின் அந்தப் புகழ் ஏற்கப்பட்டிருக்கலாம். நான் அவருக்கு 'அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக' என்று பிரார்த்தித்ததால், என் மூலமாக அல்லாஹ் அவருக்குத் தன் அருளைப் பொழியலாம்; அல்லது அவரின் துஆவின் பரக்கத்தால் எனக்கும் இறைவனின் அருள் கிடைக்கலாம். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால், இந்த உலகத்தின் ஒரு திர்ஹம் என்ன பெரிய பொருளா?"
சம்பவம் இத்தோடு முடியவில்லை. அன்றிரவு அந்தப் படகில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளுக்கு ஒரு கனவு அல்லது ஓர் அசரீரி ஒலி கேட்கிறது:
"இன்றைய நாளில் அபூதாவூத் ஓர் ஒற்றைத் திர்ஹத்தைக் கொடுத்து சொர்க்கத்தை விலைக்கு வாங்கிவிட்டார்!" (ஆதாரம்: ஸியரு அஃலாமின் நுபலா, ஃபத்ஹுல் பாரி)
ஒரு தும்மலுக்குப் பதில் சொல்வது என்பது வெறும் சடங்கு அல்ல; அது ஒரு சக மனிதனுக்கு நாம் செய்யும் துஆ! சக மனிதன் நலமோடு வாழ வேண்டும் என்ற உயரிய அக்கறை!
நமது முன்னோர்கள் சுன்னத்துகளையும், பிறருக்குச் செய்யும் நன்மைகளையும் அற்பமாகக் கருதவில்லை. எங்கே ஒரு நன்மைக்கான வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கே தங்கள் பொருளையும் நேரத்தையும் அர்ப்பணித்தார்கள்.
சமூக நலன் என்பது வெறும் உதவிகளைச் செய்வதோடு மட்டும் முடிந்துவிடுவதல்ல; அடுத்த மனிதனின் வலியைத் தன் சொந்த வலியாக உணரும் மென்மையான இதயத்தைப் பெறுவதில்தான் ஈமானின் முழுமை தங்கியிருக்கிறது.
ஒரு அல்ஹம்துலில்லாஹ்விற்காக 30 ஆண்டுகள் பாவமன்னிப்பு
மாபெரும் இறைநேசரான ஹழ்ரத் ஸிர்ரிய்யுஸ் ஸகதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி
அவர்கள் பக்தாத் நகரின் கடைத்தெருவில் வியாபாரம் செய்து வந்த ஒரு காலம். ஒருநாள் அந்தக் கடைத்தெருவில் எதிர்பாராத விதமாகப் பெரும் தீ விபத்து ஏற்படுகிறது. தீ மளமளவெனப் பரவி, சுற்றியிருந்த கடைகளையெல்லாம் சாம்பலாக்கி விடுகிறது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.
அப்போது ஒரு மனிதர் பதற்றத்தோடு ஓடிவந்து ஸரிய்யுஸ் ஸகதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் சொல்கிறார்:
"ஹழ்ரத் அவர்களே! கடைத்தெருவே எரிந்து சாம்பலாகிவிட்டது; ஆனால், ஆச்சரியமாக உங்களது கடைக்கு மட்டும் தீயின் ஒரு பொறிகூடப் படவில்லை, உங்கள் கடை தப்பிவிட்டது!"
தம் கடை பாதுகாப்பாக இருக்கிறது என்ற செய்தியைக் கேட்டவுடன், ஒரு மனிதனின் இயல்பான உணர்வில் அவர்கள்:
"الْحَمْدُ لِلَّهِ" (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனுக்கே!)
என்று சொல்லிவிடுகிறார்கள்.
'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்வது நன்மையான காரியம்தானே? இறைவனைப் புகழ்வது குற்றமா? ஆனால், அந்த இறைநேசர் என்ன சொன்னார்கள் தெரியுமா?
أَنَا أَسْتَغْفِرُ اللَّهَ مُنْذُ ثَلَاثِينَ سَنَةً مِنْ قَوْلِي: الْحَمْدُ لِلَّهِ! قِيلَ لَهُ: وَكَيْفَ ذَاكَ؟ قَالَ: وَقَعَ حَرِيقٌ فِي بَغْدَادَ، فَاسْتُقْبِلْتُ فَقِيلَ لِي: احْتَرَقَتِ السُّوقُ وَنَجَا دُكَّانُكَ، فَقُلْتُ: الْحَمْدُ لِلَّهِ، فَأَنَا نَادِمٌ مُنْذُ ثَلَاثِينَ سَنَةً حَيْثُ أَرَدْتُ لِنَفْسِي خَيْرًا مِمَّا لِلْمُسْلِمِينَ!»
"நான் அன்று சொன்ன அந்த ஒரு 'அல்ஹம்துலில்லாஹ்' என்ற வார்த்தைக்காக, கடந்த முப்பது ஆண்டுகளாக அல்லாஹ்விடம் அழுது அழுது பாவமன்னிப்பு (இஸ்திக்பார்) தேடிக் கொண்டிருக்கிறேன்!"
சுற்றியிருந்த மக்கள் திகைத்துப் போனார்கள். "ஹழ்ரத் அவர்களே! அல்லாஹ்வைப் புகழ்ந்து அல்ஹம்துலில்லாஹ் சொன்னதற்காகவா முப்பது ஆண்டுகள் பாவமன்னிப்புத் தேடுகிறீர்கள்? அதில் என்ன தவறு நேர்ந்துவிட்டது?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் அளித்த பதில், "சகோதரர்களே! அன்று என் கண் முன்னால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் கடைகள் எரிந்து சாம்பலாகிக் கிடந்தன. மக்கள் தங்கள் உழைப்பையும் மூலதனத்தையும் இழந்து, கண்ணீரோடு நடுத்தெருவில் நின்றார்கள். அத்தனை குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த அந்த இக்கட்டான நேரத்தில்... 'ஊரே போனால் எனக்கென்ன, என் கடை தப்பித்ததே!' என்ற ஒரு கண நேர சுயநல உணர்வோடுதானே என் நாவு 'அல்ஹம்துலில்லாஹ்' என்றது?
சக சகோதரர்களின் இழப்பையும் கண்ணீரையும் மறந்து, என் சொந்த லாபத்தை மட்டும் பெரிதாக நினைத்த அந்த அற்பமான, சுயநலமான உள்ளத்திற்காகத்தான் நான் முப்பது ஆண்டுகளாக இறைவனிடம் அழுது கொண்டிருக்கிறேன்!"
அவர்கள் கடைக்கு வந்து அவர்கள் கடையில் உள்ள அத்தனை பொருளையும் எடுத்து பாதிக்கப்பட்ட எல்லா கடைக்காரர்களுக்கும் தன்னுடைய பொருளை பங்கு வைத்து கொடுத்தார்கள். நூல்: ரிஸாலத்துல் குஷைரிய்யா (الرسالة القشيرية) — இமாம் அபுல் காஸிம் அல்-குஷைரீ (ரஹ்)
இன்று நம் சமூகம் எங்கே நிற்கிறது? பக்கத்து வீட்டுக்காரர் பட்டினியாகக் கிடக்கிறார்; பக்கத்துத் தெருவில் ஒரு குடும்பம் மருத்துவச் செலவிற்கு வழியின்றி அழுகிறது; சக மனிதன் ஏதோ ஒரு சோதனையில் சிக்கித் தவிக்கிறான். நாம் என்ன நினைக்கிறோம்? "நல்லவேளை, எனக்கு அந்தச் சோதனை வரவில்லை; என் வீடு நன்றாக இருக்கிறது; என் பிள்ளைகள் நிம்மதியாக இருக்கிறார்கள்" என்று பெருமூச்சு விடுகிறோம் அல்லவா?
பிறரின் இழப்பில் நிம்மதி காண்பதும், பிறரின் துன்பத்தில் சுயநலத்தோடு வாழ்வதும் ஓர் உண்மையான இறைநம்பிக்கையாளனின் பண்பாக இருக்க முடியாது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
"உங்களில் எவரும் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை உண்மையான முஃமினாக முடியாது." (ஸஹீஹுல் புகாரி)
சமூக நலன் என்பது மேடைகளில் முழங்குவது மட்டுமல்ல; அடுத்தவனின் கண்ணீரைத் தன் கண்ணீராகவும், சமூகத்தின் வலியைத் தன் சொந்த வலியாகவும் உணர்வதே இஸ்லாம் காட்டும் உண்மையான ஆன்மீகமாகும்.
எனக்கு நரகம் கிடைத்தாலும் எல்லோருக்கும் சொர்க்கம் கிடைக்கட்டும்
ஹழ்ரத் காஜா முஈனுத்தீன் சிஷ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தம் ஆசான் காஜா உஸ்மான் ஹாரூனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் பல ஆண்டுகள் ஆன்மீகப் பயிற்சி பெற்று வந்த காலம்.
ஒருநாள் இரவு, உஸ்மான் ஹாரூனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் காஜா முஈனுத்தீன் சிஷ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைத் தனியாக அழைத்து ஒரு ரகசியத்தைக் கூறினார்கள்:
"முஈனுத்தீன்! இன்றிரவு அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஓர் இல்ஹாம் (ஆன்மீக உள்ளுணர்வு/செய்தி) கிடைத்துள்ளது. நாளை யார் நமது பள்ளிவாசலில் நம்முடன் ஃபஜ்ரு தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான்!
ஆனால் எச்சரிக்கை: இந்த ரகசியத்தை நீ வேறு யாரிடமாவது பகிர்ந்தாலோ, மற்றவர்களுக்குச் சொல்லி ஊரைக் கூட்டினாலோ, சொல்பவரான உனக்கு நரகம்தான் கிடைக்கும்! எனவே இதை யாரிடமும் சொல்லிவிடாதே!"
இந்த எச்சரிக்கையைக் கேட்ட காஜா முஈனுத்தீன் சிஷ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சற்றும் தாமதிக்கவில்லை. ஒரு கணம் கண்களை மூடிச் சிந்தித்தார்கள்: "நான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை; ஆனால் எனது இந்தச் சிறிய தியாகத்தினால் இந்த ஊரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், பாவிகள், எளியவர்கள் அனைவரும் நாளை ஃபஜ்ரு தொழுது சொர்க்கம் செல்வார்களேயானால், அதுவே எனக்குப் போதும்! என் மக்கள் ஈடேற்றம் பெறுவதற்காக நான் நரக நெருப்பை ஏற்கத் தயார்!"
உடனே அவர்கள் ஊருக்குள் விரைந்து சென்று, தெருத்தெருவாக, வீதி வீதியாக, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி உரக்கக் கூறினார்கள்:
"மக்களே! புறப்படுங்கள்! நாளை யார் நமது ஷைகின் பின்னால் ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றுகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் சொர்க்கம் உண்டு என்று நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது! தவறவிடாதீர்கள்!"
ஃபஜ்ரு தொழுகையில் அலைமோதிய கூட்டம்
மறுநாள் அதிகாலை... வழக்கத்திற்கு மாறாக ஊரே திரண்டு வந்தது. ஊரில் இருந்த முதியவர்கள், இளைஞர்கள், பலவீனர்கள் என அனைவரும் பள்ளிவாசலில் குழுமினர். பள்ளிவாசல் நிரம்பி வழிந்து, மக்கள் தெருக்களிலும் மைதானத்திலும் ஃபஜ்ரு தொழுகைக்காக அணிவகுத்து நின்றனர்.
தொழுகை முடிந்து திரும்பிய ஆசான் உஸ்மான் ஹாரூனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், மக்கள் கூட்டத்தைக் கண்டு முஈனுத்தீன் சிஷ்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு கேட்டார்கள்:
"முஈனுத்தீன்! இந்த ரகசியத்தை மற்றவர்களுக்குச் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும் என்று நான் எச்சரித்திருந்தேனே! தெரிந்தும் ஏன் இதை ஊரெல்லாம் சொன்னாய்?"
அதற்கு காஜா முஈனுத்தீன் அஜ்மீரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் , பணிவோடு விடையளித்தார்கள்:
"என் ஆசானே! நான் ஒருவன் நரகத்திற்குச் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், என் சக முஸ்லிம்களும், சகோதரர்களும் நரகத்திலிருந்து தப்பித்து அனைவரும் சொர்க்கம் சென்றுவிடுவார்கள் என்றால், அந்தப் பெருங்கூட்டத்தின் ஈடேற்றத்திற்காக ஒருவன் நரகத்திற்குச் செல்வது நஷ்டமல்ல; அதுவே எனக்குப் பெரும் பாக்கியம்!"
சீடரின் இந்த எல்லையற்ற மனிதநேயத்தையும், தன்னலமற்ற தியாகத்தையும் கண்ட ஷைகு உஸ்மான் ஹாரூனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கண்கள் குளமாகின. அவர்கள் காஜா அவர்களைக் கட்டித் தழுவி, உச்சிமுகர்ந்து கூறினார்கள்:
"முஈனுத்தீன்! உன் இதயத்தில் உள்ள தியாகத்தையும், மனிதர்கள் மீதான உன் எல்லையற்ற கருணையையும் பரிசோதிக்கவே நான் அவ்வாறு கூறினேன்! பிறர் நலம் நாடும் உன் இந்தத் தன்னலமற்ற உள்ளத்திற்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான்! நீயும் சொர்க்கவாசி; உன்னைச் சார்ந்தோரும் சொர்க்கவாசிகளே!” நூல்: ஸியருல் அவ்லியா (سير الأولياء - Siyar al-Awliya)
தான் மட்டும் நல்லவனாக இருந்து சுவர்க்கம் போனால் போதும் என்று எண்ணாமல், பாமர மக்களும் வழிகெட்டுப் போய்விடக் கூடாது என்று சிந்திக்கும் உயரிய இரக்க குணம்.
எச்சரிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் விட, நம்பிக்கையையும் நற்செய்தியையும் முன்னிறுத்தி மக்களை இறைவழிபாட்டின் பக்கம் ஈர்க்கும் ஆன்மீக ஞானம்.
எறும்பின் சமூக அக்கறை
திருமறைக் குர்ஆனில் 27-வது அத்தியாயத்திற்கு "அந்-நம்ல்" (النمل - எறும்பு) என்றே பெயரிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரம்மாண்டமான படை நகர்வின் போது, ஒரு சிறிய எறும்பு தனது சமூகத்தின் நலனுக்காக எவ்வாறு எச்சரித்துப் பொறுப்புடன் செயல்பட்டது என்பதை அல்லாஹ் அழகாக விவரித்துக் கூறுகிறான்.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் மனிதர்கள், ஜின்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் மொழிகளைப் புரியும் ஆற்றலையும், அவைகளை வழிநடத்தும் மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருந்தான்.
ஒருமுறை சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனிதர்கள், ஜின்கள் மற்றும் பறவைகள் அடங்கிய தங்களின் பிரம்மாண்டமான படையுடன் ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அந்தப் பள்ளத்தாக்கின் வழியே இப்படை அணிவகுத்து வந்தபோது நடந்த காட்சியை அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
حَتَّىٰ إِذَا أَتَوْا عَلَىٰ وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ
"இறுதியாக, அவர்கள் எறும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது, ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி): 'எறும்புகளே! உங்கள் புற்றுகளுக்குள் (இருப்பிடங்களுக்குள்) நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படைகளும் அறியாத நிலையில் உங்களை மிதித்து நசுக்கிவிட வேண்டாம்!' என்று கூறியது." (அல்குர்ஆன் 26:18)
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புன்னகையும் நன்றியுணர்வும்
அந்தச் சிறிய எறும்பின் கூற்றையும், அது தன் கூட்டத்தாரைக் காக்க எடுத்த அக்கறையையும் நெடுந்தொலைவிலிருந்தே சுலைமான் (அலை) அவர்கள் செவியுற்றார்கள். குர்ஆன் தொடர்கிறது:
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ...
"அதன் சொல்லால் (சுலைமான்) புன்னகை பூத்துச் சிரித்தார். மேலும்: 'என் இறைவனே! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்த உன் அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக்கொள்ளும் நற்செயல்களை நான் செய்யவும் எனக்கு அருள் புரிவாயாக!' என்று பிரார்த்தித்தார்." (அல்குர்ஆன் 26:19)
அந்த எறும்பிற்கு இருந்த உன்னத சமூக நலப் பண்புகள்
அறிஞர்களும் தஃப்சீர் (விரிவுரை) ஆசிரியர்களும் இந்த ஒரு வசனத்திலிருந்து அந்த எறும்பின் உயர்ந்த சமூகப் பொறுப்புணர்வை வியந்து பட்டியலிடுகிறார்கள்:
* சுயநலமின்மை (கூட்டுப் பாதுகாப்பு):
படையைக் கண்டவுடன் அந்த எறும்பு, "நான் மட்டும் வேகமாகப் புற்றுக்குள் சென்று பிழைத்துக் கொண்டால் போதும்" என்று ஓடிவிடவில்லை. ஆபத்தைக் கண்ட அடுத்த கணமே தன் முழுச் சமூகத்தையும் காப்பாற்ற உரக்கக் குரல் கொடுத்தது.
* தலைமைத்துவமும் வழிகாட்டலும்:
வெறுமனே "ஆபத்து வருகிறது, ஓடுங்கள்!" என்று பீதியை ஏற்படுத்தாமல், என்ன செய்ய வேண்டும் என்ற தீர்வையும் தந்தது: "உங்கள் இருப்பிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்" (ادْخُلُوا مَسَاكِنَكُمْ) எனப் பாதுகாப்பான புகலிடத்தை வழிகாட்டியது.
* சமூக நல்லெண்ணம் (ஹுஸ்னுழ்-ழன்):
அந்த எறும்பு சுலைமான் அலைஹிஸ்ஸலாம் மீதும் அவர்களின் படைகள் மீதும் பழி சுமத்தவில்லை. "அவர்கள் அறியாத நிலையில் உங்களை மிதித்துவிட வேண்டாம்" (وَهُمْ لَا يَشْعُرُونَ) என்று கூறியது. அதாவது, "அவர்கள் அநியாயக்காரர்கள் அல்ல; இறைத்தூதரான அவர்களோ அல்லது படைவீரர்களோ வேண்டுமென்றே நம்மை மிதிக்க மாட்டார்கள்; அவர்களின் கண்களுக்கு நாம் தெரியாததால் நம்மை மிதித்துவிடக் கூடும்" என்று நியாயம் கற்பித்தது.
காலில் மிதிபடும் ஒரு சிறிய எறும்புக்கே தன் இனத்தின் மீது இத்தனை அக்கறையும், சமூகப் பாதுகாப்பும், பிறர் மீது நல்லெண்ணமும் இருக்கும்போது; ஆறறிவு படைத்த மனிதன், அதிலும் "மனிதர்களிலேயே சிறந்த சமூகம்" என்று வர்ணிக்கப்பட்ட முஃமின்கள் சமூக நலனில் எவ்வளவு அக்கறையோடு இருக்க வேண்டும்?
* அபாயங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தல்:
சமூகத்திற்கு ஒரு கலாச்சார, பொருளாதார அல்லது ஒழுக்கக்கேடான தீமை (போதை, சூதாட்டம், அநீதி) வரும்போது, நாம் மட்டும் அமைதியாக ஒதுங்கிவிடாமல், "எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று எச்சரிக்கும் எறும்பின் பண்பை நாம் பெற வேண்டும்.
இமாம் இப்னுல் கையிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகிறார்கள்: அந்த எறும்பின் ஒரே வாக்கியத்தில் பத்து விதமான மொழிநடை இலக்கணங்கள் (அழைத்தல், விழிப்புணர்வூட்டல், கட்டளையிடல், பெயர் குறிப்பிடுதல், காரணம் கூறுதல், எச்சரித்தல், நல்லெண்ணம் வைத்தல் போன்றவை) ஒரே நேரத்தில் கையாளப்பட்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் விபத்திலிருந்து காக்கும் முழுமையான பாதுகாப்புத் திட்டமாக அமைந்தது.
சிறுபான்மைச் சமூகத்தை மீட்டெடுத்த மாபெரும் மனிதர்
திருமறைக் குர்ஆனில் 130-க்கும் மேற்பட்ட இடங்களில் மிக விரிவாகப் பேசப்படும் இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆவார்கள். குர்ஆன் அவர்களின் வாழ்க்கையை ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமல்லாமல், அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மைச் சமூகத்தை மீட்டெடுத்த மாபெரும் விடுதலைப் போராளியாகவும், தன்னலமற்ற சமூகப் பணியாளராகவும் முன்னிறுத்துகிறது.
எகிப்தில் ஃபிர்அவ்ன் பனூ இஸ்ராயீல் (இஸ்ரவேலர்) என்ற சிறுபான்மைச் சமுதாயத்தை மிகக் கொடூரமாக அடிமைப்படுத்தி வைத்திருந்தான். அவர்களின் சமூகக் கட்டமைப்பை அழிக்கப் பல கொடுமைகளைச் செய்தான். இதை அல்குர்ஆன் இவ்வாறு விவரிக்கிறது:
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ ۚ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ
"நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த நாட்டில் ஆணவம் கொண்டு பெருமையடித்தான்; அந்நாட்டு மக்களைப் பல பிரிவுகளாக்கி, அவர்களில் ஒரு பிரிவினரை (பனூ இஸ்ராயீல் எனும் சிறுபான்மையினரை) பலவீனர்களாக்கினான்; அவர்களின் ஆண் குழந்தைகளை அறுத்துக் கொலை செய்தான்; பெண் குழந்தைகளை (அடிமைகளாகப் பணிபுரிய) உயிரோடு விட்டுவைத்தான்; நிச்சயமாக அவன் பெரும் குழப்பவாதிகளில் ஒருவனாக இருந்தான்." (அல்குர்ஆன் 28:4)
அல்லாஹ் இந்த ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கே தலைமைத்துவத்தையும் அதிகாரத்தையும் வழங்க நாடினான் (அல்குர்ஆன் 28:5). அதற்காக மூஸா (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
மூஸா (அலை) அவர்கள் எதிரியான ஃபிர்அவ்னின் அரண்மனையிலேயே இளவரசராக வளர்ந்தார்கள். நினைத்திருந்தால் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து அமைதியாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால், தங்கள் சமூக மக்கள் அடிமைகளாகக் கூலியின்றி உழைப்பதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் கண்டு அவர்களின் மனம் பொறுக்கவில்லை. அரண்மனை அதிகாரத்தை விட, ஒடுக்கப்பட்ட தன் சொந்தச் சமூகத்தின் விடுதலையே அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. தன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது உடனடி உதவிக்கு விரைந்தார்கள்.
எகிப்தை விட்டு வெளியேறி, பசியோடும் களைப்போடும் ஆதரவற்ற அகதியாக மத்யன் நகரை அடைந்தபோதும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுக்குள் இருந்த சமூக சேவகனைத் தொலைத்துவிடவில்லை.
மத்யன் நகரின் கிணற்றடியில் மேய்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தனர். அங்கே இரு இளம் பெண்கள் (ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகள்கள்) தங்கள் ஆடுகளோடு தள்ளி நின்றுகொண்டிருந்தனர். வலியவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் அந்தப் பலவீனமான பெண்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
அப்போது களைத்துப் போயிருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்:
قَالَ مَا خَطْبُكُمَا ۖ قَالَتَا لَا نَسْقِي حَتَّىٰ يُصْدِرَ الرِّعَاءُ ۖ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ
" 'உங்கள் விஷயம் என்ன?' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள்: 'மேய்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை ஓட்டிச் செல்லும் வரை எங்களால் நீர் புகட்ட முடியாது; எங்கள் தந்தை மிகவும் முதிர்ந்த முதியவராக இருக்கிறார் (அதனால் எங்களால் கூட்டத்தோடு முட்டிமோத முடியாது)' என்றனர்." (அல்குர்ஆன் 28:23)
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடனே களத்தில் இறங்கி, அந்தப் பெண்களுக்காகத் தானே கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து ஆடுகளுக்குப் புகட்டினார்கள். எவ்விதக் கூலியோ அல்லது நன்றியையோ எதிர்பாராமல் செய்துவிட்டு மர நிழலில் சென்று அமர்ந்து, "என் இறைவனே! நீ எனக்கு இறக்கிவைக்கும் எந்த நன்மையின் பக்கமும் நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்" என்று இறைஞ்சினார்கள்.
அறிமுகமில்லாத ஊரிலும் பலவீனமான பெண்களின் துயரைக் கண்டு முகம்சுழிக்காமல் உதவி செய்த தூய சமூக சேவை இது.
அல்லாஹ்விடமிருந்து தூதுத்துவத்தைப் பெற்றுக்கொண்டு, உலகின் மிகப் பெரும் கொடுங்கோலனான ஃபிர்அவ்னின் அவைக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்றபோது, அவர்கள் முன்வைத்த மிக முக்கியமான அரசியல் மற்றும் சமூகக் கோரிக்கை:
فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ
"ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று கூறுங்கள்: 'நிச்சயமாக நாங்கள் உன் இறைவனின் தூதர்கள்; எனவே, பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனைப்படுத்தாதே!' " (அல்குர்ஆன் 20:47)
அவர்கள் ஃபிர்அவ்னிடம் தன் சொந்த குடும்பத்திற்குப் பதவி கேட்கவில்லை, பொன்-பொருள் கேட்கவில்லை. பல தலைமுறைகளாக அடிமைப்பட்டுக்கிடந்த தன் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளையும் சுதந்திரத்தையுமே மீட்டுக் கேட்டார்கள்.
ஃபிர்அவ்னின் அடக்குமுறையிலிருந்து பனூ இஸ்ராயீல் சமூகத்தை இரவோடு இரவாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழிநடத்தி அழைத்துச் சென்றார்கள்.
முன்னால் கடல், பின்னால் துரத்திவரும் ஃபிர்அவ்னின் ராணுவம். சமூகம் அச்சத்தில் நடுங்கி, "நாம் பிடிபட்டுவிட்டோம்" என்று கதறியபோது, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்: "قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ (ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னோடு இருக்கிறான்; அவன் எனக்கு வழிகாட்டுவான்) என்று சமூகத்திற்கு மகத்தான தைரியத்தை ஊட்டினார்கள். அல்லாஹ் கடலைப் பிளந்து அந்த முழு சமூகத்தையும் பாதுகாப்பாக மறுகரை சேர்த்தான்.
பாலைவனத்தில் அந்த மக்கள் தண்ணீரின்றித் தவித்தபோது, பாறையில் அடித்து 12 ஊற்றுகளைத் தோற்றுவித்து தாகம் தீர்த்தார்கள் (அல்குர்ஆன் 2:60).
கொளுத்தும் வெயிலில் அவர்களுக்கு மேகங்களை நிழலாக்கினார்கள்; பசிக்கு 'மன்னு, ஸல்வா' உணவை இறைவனிடம் பெற்றுத் தந்தார்கள்.
அறியாமையும் பலவீனமும் நிறைந்த அச்சமூகம் தமக்கு எத்தனையோ இன்னல்களைத் தந்தபோதும், பொறுமையோடு அவர்களை ஒரு நாகரிக சமூகமாக வார்த்தெடுத்தார்கள்.
இறைத்தூதர்கள் வெறும் ஆன்மீகப் போதனையோடு நின்றுவிடவில்லை; அநீதிக்கு எதிராகவும், விளிம்புநிலை மற்றும் சிறுபான்மை மக்களின் சமூகப் பாதுகாப்புக்காகவும் துணிந்து நின்றார்கள்.
அரண்மனை வசதிகளைத் துறந்து, முள் நிறைந்த சமூக விடுதலைப் பாதையை மூஸா அலைஹிஸ்ஸலாம் தேர்ந்தெடுத்தது தியாகத்தின் உச்சம்.
மத்யன் கிணற்றடியில் பலவீனமான பெண்களுக்கு வலியச் சென்று உதவியது, ஒரு தலைவனுக்குத் தேவையான கருணையையும் தன்னலமற்ற சேவையையும் காட்டுகிறது.
இஃதிகாபை விட சமூகநலன் மேல்
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் இஃதிகாஃப் (பள்ளிவாசலிலேயே தங்கி இறைவணக்கத்தில் ஈடுபடுதல்) இருந்தார்கள்.
அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். அவர் முகம் வாடி, ஆழ்ந்த கவலையோடும் துயரத்தோடும் காணப்பட்டார். அவர் வந்து இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு ஓர் ஓரமாக அமர்ந்தார்.
அவரது வாடிய முகத்தைக் கண்ட இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்: "சகோதரரே! உமது முகத்தில் பெரும் கவலையையும் துயரத்தையும் காண்கிறேனே, என்ன விஷயம்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதர்: "அல்லாஹ்வின் தூதரின் தந்தையின் சகோதரர் மகனே! ஆம், இன்னாருக்கு நான் தர வேண்டிய கடன் சுமை என் கழுத்தை நெரிக்கிறது. ஆனால், இந்தப் பள்ளிவாசலின் மண்ணறையில் அடங்கியிருக்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஆணையாக, அந்தக் கடனை அடைக்க என்னிடம் எந்த வழியும் இல்லை!" என்று தன் இயலாமையைக் கூறி வருந்தினார்.
உடனே இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்:
"நான் அவருடன் பேசி, உனது கடனைத் தள்ளிப்போடவோ அல்லது குறைக்கவோ சிபாரிசு செய்யட்டுமா?" என்று கேட்டார்கள்.
அந்த மனிதரும், "ஆம், நீங்கள் விரும்பினால் அவ்வாறே செய்யுங்கள்" என்றார்.
இஃதிகாஃபை விட்டு வெளியேறுதல்
உடனே இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலணிகளை அணிந்துகொண்டு, அந்த மனிதரின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறத் தயாரானார்கள்.
இதைப்பார்த்த அந்த மனிதர் பதறிப்போய்: "இப்னு அப்பாஸ் அவர்களே! நீங்கள் இஃதிகாஃபில் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? (இஃதிகாஃபில் இருக்கும் ஒருவர் தகுந்த காரணமின்றிப் பள்ளியை விட்டு வெளியேறினால் இஃதிகாஃப் முறிந்துவிடுமே!)" என்று நினைவூட்டினார்.
நபிகளாரின் அடக்கவிடத்தைப் பார்த்து அழுத இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மனிதரின் கேள்வியைக் கேட்ட இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்கள் குளமாகின. அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்ழா ஷரீஃபை (அடக்கவிடத்தை) நோக்கித் தம் கையைச் சுட்டிக்காட்டி விம்மியழுதவாறு கூறினார்கள்: "இல்லை! நான் மறக்கவில்லை. ஆனால், இந்த மண்ணறையில் அடங்கியிருக்கும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை என் காதுகளால் கேட்டேன் — அவர்கள் மறைந்து வெகு காலம் ஆகிவிடவில்லை — அவர்கள் கூறினார்கள்:
مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ وَبَلَغَ فِيهَا كَانَ خَيْرًا لَهُ مِنِ اعْتِكَافِ عَشْرِ سِنِينَ، وَمَنْ اعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ ثَلَاثَ خَنَادِقَ، كُلُّ خَنْدَقٍ أَبْعَدُ مِمَّا بَيْنَ الْخَافِقَيْنِ
'எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து சென்று, அதை முடித்துக் கொடுக்க முயல்கிறாரோ, அது அவருக்குப் பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதை விடச் சிறந்ததாகும்! எவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒரேயொரு நாள் இஃதிகாஃப் இருக்கிறாரோ, அல்லாஹ் அவருக்கும் நரகத்திற்கும் இடையே மூன்று அகழிகளைத் திரையாக ஏற்படுத்துகிறான்; ஒவ்வோர் அகழியும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட தூரத்தை விட அதிக தொலைவுடையதாகும்!'
ஆகவே, பத்து வருட நஃபில் இஃதிகாஃபை விடச் சிறந்த ஒரு நன்மையை அடைவதற்காகவே நான் எனது இஃதிகாஃபை விட்டு வெளியேறுகிறேன்!"
நூல்:அல்-முஃஜமுல் அவ்ஸத் - இமாம் அத்-தப்பரானீ المعجم الأوسط للطبراني
மஸ்ஜிதுந் நபவீ போன்ற புனிதப் பள்ளியில் இருக்கும் இஃதிகாஃபை விடவும், ஒரு சக மனிதனின் கடன் பிரச்சினையைத் தீர்க்கவும், அவனது மனக்கவலையைப் போக்கவும் களமிறங்குவது அல்லாஹ்விடம் பன்மடங்கு உயர்ந்த கூலியைப் பெற்றுத்தரும்.
இராஷா கோத்திரத்து வியாபாரிக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் அபூஜஹ்லிடமிருந்து நீதியைப் பெற்றுத்தந்த வரலாற்று நிகழ்வின் விரிவான விவரமும், நூல்களில் பதிவாகியுள்ள அதன் மூல அரபு வாசகங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
மூல அரபு வாசகங்கள் (ஸீரத் இப்னு ஹிஷாம் & தலாயிலுன் நுபுவ்வஹ்)
> رَوَى ابْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُفْيَانَ الثَّقَفِيُّ قَالَ:
> قَدِمَ رَجُلٌ مِنْ إِرَاشٍ بِإِبِلٍ لَهُ مَكَّةَ، فَابْتَاعَهَا مِنْهُ أَبُو جَهْلِ بْنُ هِشَامٍ، فَطَلَبَهُ بِحَقِّهِ فَغَلَبَهُ عَلَيْهِ، فَأَقْبَلَ الْإِرَاشِيُّ حَتَّى وَقَفَ عَلَى نَادٍ مِنْ قُرَيْشٍ فِي الْمَسْجِدِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ جَالِسٌ، فَقَالَ:
> «يَا مَعْشَرَ قُرَيْشٍ، مَنْ رَجُلٌ يُؤَدِّي لِي حَقِّي مِنْ أَبِي الْحَكَمِ بْنِ هِشَامٍ؟ فَإِنِّي رَجُلٌ غَرِيبٌ ابْنُ سَبِيلٍ، وَقَدْ غَلَبَنِي عَلَى حَقِّي!»
> فَقَالَ لَهُ أَهْلُ ذَلِكَ الْمَجْلِسِ — وَهُمْ يَهْزَؤُونَ بِهِ وَبِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا يَعْلَمُونَ بَيْنَهُمَا مِنَ الْعَدَاوَةِ —: «تَرَى ذَلِكَ الرَّجُلَ الْجَالِسَ؟ — يُشِيرُونَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ — فَاذْهَبْ إِلَيْهِ، فَإِنَّهُ يُؤَدِّي إِلَيْكَ حَقَّكَ مِنْهُ!»
> فَأَقْبَلَ الْإِرَاشِيُّ حَتَّى وَقَفَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ، إِنَّ أَبَا الْحَكَمِ بْنَ هِشَامٍ قَدْ غَلَبَنِي عَلَى حَقٍّ لِي قِبَلَهُ، وَأَنَا رَجُلٌ غَرِيبٌ ابْنُ سَبِيلٍ، وَقَدْ سَأَلْتُ هَؤُلَاءِ الْقَوْمَ عَنْ رَجُلٍ يَأْخُذُ لِي حَقِّي مِنْهُ، فَأَشَارُوا لِي إِلَيْكَ، فَخُذْ لِي حَقِّي مِنْهُ، يَرْحَمُكَ اللَّهُ!»
> فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقْ إِلَيْهِ!» وَقَامَ مَعَهُ.
> فَلَمَّا رَأَوْهُ قَامَ مَعَهُ، قَالُوا لِرَجُلٍ مِمَّنْ كَانَ مَعَهُمْ: «اتَّبِعْهُ، فَانْظُرْ مَاذَا يَصْنَعُ!»
> فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَاءَ بَابَ أَبِي جَهْلٍ فَضَرَبَ عَلَيْهِ بَابَهُ، فَقَالَ: «مَنْ هَذَا؟» قَالَ: «مُحَمَّدٌ، فَاخْرُجْ إِلَيَّ!»
> فَخَرَجَ إِلَيْهِ وَمَا فِي وَجْهِهِ مِنْ دَمٍ، قَدِ امْتُقِعَ لَوْنُهُ رُعْبًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
> «أَعْطِ هَذَا الرَّجُلَ حَقَّهُ!»
> قَالَ: «نَعَمْ، لَا تَبْرَحْ حَتَّى أُعْطِيَهُ حَقَّهُ!»، فَدَخَلَ فَخَرَجَ إِلَيْهِ بِحَقِّهِ فَدَفَعَهُ إِلَيْهِ.
> ثُمَّ انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ لِلْإِرَاشِيِّ: «الْحَقْ بِشَأْنِكَ!»
> فَأَقْبَلَ الْإِرَاشِيُّ حَتَّى وَقَفَ عَلَى ذَلِكَ الْمَجْلِسِ فَقَالَ: «جَزَاهُ اللَّهُ خَيْرًا، فَقَدْ وَاللَّهِ أَخَذَ لِي حَقِّي!»
> وَجَاءَ الرَّجُلُ الَّذِي بَعَثُوهُ مَعَهُ فَقَالُوا: «وَيْحَكَ، مَاذَا رَأَيْتَ؟» قَالَ: «عَجَبًا مِنَ الْعَجَبِ! وَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ ضَرَبَ عَلَيْهِ بَابَهُ، فَخَرَجَ إِلَيْهِ وَمَا مَعَهُ رُوحُهُ، فَقَالَ لَهُ: أَعْطِ هَذَا حَقَّهُ! فَقَالَ: نَعَمْ، لَا تَبْرَحْ حَتَّى أُخْرِجَ إِلَيْهِ حَقَّهُ، فَدَخَلَ فَخَرَجَ بِحَقِّهِ فَأَعْطَاهُ إِيَّاهُ!»
> ثُمَّ لَمْ يَلْبَثْ أَبُو جَهْلٍ أَنْ جَاءَ، فَقَالُوا لَهُ: «وَيْلَكَ، مَا لَكَ؟! وَاللَّهِ مَا رَأَيْنَا مِثْلَ مَا صَنَعْتَ قَطُّ!»
> فَقَالَ: «وَيْحَكُمْ! وَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ ضَرَبَ عَلَيَّ بَابِي وَسَمِعْتُ صَوْتَهُ، فَمُلِئْتُ رُعْبًا، ثُمَّ خَرَجْتُ إِلَيْهِ، وَإِنَّ فَوْقَ رَأْسِهِ لَفَحْلًا مِنَ الْإِبِلِ، مَا رَأَيْتُ مِثْلَ هَامَتِهِ وَلَا قَصَرَتِهِ وَلَا أَنْيَابِهِ لِفَحْلٍ قَطُّ! وَاللَّهِ لَوْ أَبَيْتُ لَأَكَلَنِي!»
முழுமையான வரலாறு (விரிவான தமிழாக்கம்)
ஏழை வியாபாரிக்காக இறங்கிய ஏந்தல் நபி
மக்காவிற்கு வெளியே உள்ள 'இராஷா' என்ற பகுதியைச் சார்ந்த ஓர் ஏழை அரபி வியாபாரி, தனது வாழ்வாதாரத்திற்காகச் சில ஒட்டகங்களை விற்றுப் பணம் ஈட்ட மக்கா நகருக்கு வந்தார். மக்காவின் குறைஷித் தலைவனும் கொடூர அக்கிரமக்காரனுமான அபூஜஹ்ல் அந்த ஒட்டகங்களைத் தந்திரமாக வாங்கிக்கொண்டான். ஆனால், அதற்கான தொகையைத் தராமல் அவரை இழுத்தடித்து, உரிமையைப் பறித்து மிரட்டி அனுப்பினான்.
பாதிக்கப்பட்ட அந்த இராஷி வியாபாரி கஅபாவின் வளாகத்திற்கு வந்து அங்கு குழுமியிருந்த குறைஷிப் பிரமுகர்களைப் பார்த்து உரக்கக் கதறினார்:
குறைஷிக் கூட்டத்தாரே! நான் வெளியூரிலிருந்து வந்த ஓர் அந்நியன்; வழிப்போக்கன். அபுல் ஹகம் இப்னு ஹிஷாம் (அபூஜஹ்ல்) என் ஒட்டகங்களை வாங்கிக்கொண்டு பணத்தைத் தராமல் அநியாயம் செய்துவிட்டான். உங்களில் அவனிடமிருந்து என் உரிமையை மீட்டுத் தரும் நீதியுள்ள மனிதர் எவராவது உண்டா?"
அப்போது கஅபாவின் ஒரு மூலையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனியாக அமர்ந்திருந்தார்கள். குறைஷிகள் அபூஜஹ்லுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இடையே உள்ள கடுமையான எதிர்ப்பை நன்கு அறிந்திருந்தனர். எனவே, இந்த ஏழை வியாபாரியை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமானப்படுத்தலாம் என்று நயவஞ்சகமாகத் திட்டமிட்டனர்.
அவர்கள் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டே, "இதோ, அங்கே அமர்ந்திருக்கிறாரே அந்த மனிதரிடம் போய்க் கேள்! அவர்தான் அபூஜஹ்லிடமிருந்து உனக்குப் பணத்தை வாங்கித் தருவார்" என்று வழிகாட்டினர்.
அந்த வியாபாரி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் அடியாரே! அபூஜஹ்ல் என் உரிமையைப் பறித்துவிட்டான். மக்கத்து மக்கள் உங்களிடம் போகுமாறு கூறினார்கள். எனக்காக அவனிடமிருந்து என் உரிமையைப் பெற்றுத் தாருங்கள், அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!" என்று வேண்டினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், "அவன் எனக்குக் கொடிய எதிரி, நான் அவனிடம் செல்ல மாட்டேன்" என்றோ, "நீ முஸ்லிம் அல்லவே, உனக்காக நான் ஏன் வர வேண்டும்?" என்றோ சொல்லவில்லை. ஒரு மனிதனுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த அந்த வினாடியே எழுந்து நின்று, "انْطَلِقْ إِلَيْهِ" (அவனிடம் வா, போவோம்!) என்று கூறி அவருடன் நடந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஜஹ்லின் வீட்டின் கதவைத் தட்டினார்கள். உள்ளிருந்து "யார் அது?" என்ற குரல் கேட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஜஹ்லே ! வெளியே வா!" என்றார்கள்.கதவைத் திறந்து வெளியே வந்த அபூஜஹ்லின் முகத்தில் துளியும் ரத்த ஓட்டமில்லை; அவனது நிறம் அச்சத்தால் வெளுத்துப் போயிருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த அபூஜஹ்லைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள்:
«أَعْطِ هَذَا الرَّجُلَ حَقَّهُ»
"இந்த மனிதருக்குரிய பணத்தை உடனே திருப்பிக் கொடு!"
என்று ஆணையிட்டார்கள்.
அபூஜஹ்ல் எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல், "இதோ, தாங்கள் இங்கேயே நில்லுங்கள், இப்போதே கொண்டு வருகிறேன்" என்று கூறி உள்ளே ஓடினான். அடுத்த சில நிமிடங்களில் அந்த வியாபாரிக்குரிய முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டுவந்து அவர் கையில் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வியாபாரியிடம், "الْحَقْ بِشَأْنِكَ" (இனி உம் வேலையைக் கவனியும்) என்று கூறிவிட்டுத் திரும்பினார்கள்.
இதையெல்லாம் தூரத்திலிருந்து வேவு பார்த்துக் கொண்டிருந்த குறைஷி ஆள் ஓடிவந்து குறைஷிகளிடம் விவரித்தான். சிறிது நேரத்தில் அபூஜஹ்லும் அங்கு வந்தான். அவனிடம் குறைஷிகள், "அபூஜஹ்லே! உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? முஹம்மது சொன்னவுடன் நடுங்கிப் போய் பணத்தைக் கொடுத்துவிட்டாயே! உன்னைப்போன்ற ஒரு தலைவனுக்கு இது எவ்வளவு பெரிய கேவலம்!" என்று திட்டினர்.
அதற்கு அபூஜஹ்ல் நடுங்கிய குரலில் கூறினான்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு நேர்ந்தது உங்களுக்குத் தெரியாது! முஹம்மது கதவைத் தட்டியபோதே என் உள்ளத்தில் பயம் சூழ்ந்தது. நான் வெளியே வந்தபோது, அவரின் தலைக்கு மேலே ஓர் ஆண் ஒட்டகம் நிற்பதை நான் கண்டேன்! அதன் தலையையும், பிடரியையும், அதன் கோரப் பற்களையும் போன்ற ஒரு பயங்கரமான ஒட்டகத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் மட்டும் பணத்தைக் கொடுக்க மறுத்திருந்தால், அந்த ஒட்டகம் என்னை ஒரே கடியில் கடித்து விழுங்கியிருக்கும்!"
(அல்லாஹ் தன் தூதரின் சமூக நீதிப் போராட்டத்திற்குத் துணையாக வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அங்கே அந்தப் பிரம்மாண்ட தோற்றத்தில் நிறுத்தியிருந்தான்). நூல்:ஸீரத் இப்னு ஹிஷாம் (سيرة ابن هشام) தலாயிலுன் நுபுவ்வஹ் - இமாம் அல்-பைஹகீ (دلائل النبوة للبيهقي
நஃபில் வழிபாட்டை விட சமூக சேவை மேலானது:
இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆண்டுதோறும் ஹஜ் செய்வது அல்லது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வருடம் அவர்கள் தம்முடைய ஊரான மர்விலிருந்து மக்காவை நோக்கி ஹஜ் பயணத்திற்காகத் தம் தோழர்களுடன் பெரும் குழுவாகப் புறப்பட்டார்கள். தம்முடன் பயணித்த ஏழை எளியோரின் பயணச் செலவுகள் அனைத்தையும் தாங்களே ஏற்பதற்காகப் பெருந்தொகையான பொற்காசுகளையும் (தீனார்களை) எடுத்துச் சென்றார்கள்.
அவர்கள் ஒரு பாலைவனக் கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, ஓய்வெடுப்பதற்காக வழியில் உள்ள ஒரு பாழடைந்த ஊரின் ஓரத்தில் தங்கினார்கள்.
இமாம் அவர்கள் அப்பகுதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, குப்பைமேடு ஒன்றில் ஒரு பெண் நின்றுகொண்டிருப்பதை உற்று நோக்கினார்கள்.
அங்கே செத்துக் கிடந்த ஓர் அசுத்தமான பறவையை (சில அறிவிப்புகளில் கோழி, சில அறிவிப்புகளில் வாத்து அல்லது காகம்) அந்தப் பெண் தன் கரங்களால் எடுத்து, அதன் இறகுகளைப் பிய்த்துத் தனது ஆடைக்குள் மறைத்துக்கொண்டு அவசர அவசரமாகத் தனது வீட்டிற்குள் நுழைந்தார்.
இதை நேரில் கண்ட இமாம் இப்னுல் முபாரக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இஸ்லாத்தில் தானாகச் செத்துப்போன பிராணி ( - حلال அல்லாதது) ஹராமானதாயிற்றே! இந்தப் பெண் ஏன் இந்தச் செத்த பறவையை எடுத்துச் செல்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பினார்கள்.
இமாம் அவர்கள் அந்தப் பெண் சென்ற குடிசையின் கதவைத் தட்டினார்கள். உள்ளிருந்து அந்தப் பெண் வெளியே வந்தார்.
இமாம் அவர்கள்:
يَا أَمَةَ اللَّهِ، مَا هَذَا الَّذِي رَأَيْتُكِ صَنَعْتِ؟ إِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ!»
"அல்லாஹ்வின் அடியாரே! குப்பைமேட்டில் செத்துக் கிடந்த அந்தப் பறவையை நீங்கள் எடுத்து வந்ததை நான் பார்த்தேன். இஸ்லாத்தில் செத்ததை உண்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெண் கண்கலங்கியவாறு, விம்மியழுது கூறிய வார்த்தைகள் இமாம் அவர்களின் இதயத்தை உலுக்கிவிட்டன:
يَا هَذَا، لَا تَفْضَحْنَا، أَنَا امْرَأَةٌ أَرْمَلَةٌ، وَلِي بَنَاتٌ أَيْتَامٌ... وَقَدْ حَلَّتْ لَنَا الْمَيْتَةُ بِمَا قَالَ اللَّهُ تَعَالَى: ﴿فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ﴾!»
"அல்லாஹ்வின் நல்லடியாரே! எங்களைப் பற்றி விசாரிக்காதீர்கள்! நானும் என் அனாதைக் குழந்தைகளும் கடந்த பல நாட்களாக உணவின்றிப் பட்டினி கிடக்கிறோம். எங்கள் வீட்டில் ஒரு பருக்கை உணவுகூட இல்லை!
எங்களுக்கு உணவு கிடைக்காததால் பசியின் கொடுமையால் என் பிள்ளைகள் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் வேதத்தில், 'உயிருக்கு ஆபத்தான இக்கட்டான நிலையில் (ளரூரத் - اضطرار) செத்ததும் ஆகுமாக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளதே, அந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்தான் என் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி இந்தக் குப்பைமேட்டுக் கோழியை எடுத்து வந்தேன்!"
அந்த ஏழைத் தாயின் வார்த்தைகளைக் கேட்ட இமாம் இப்னுல் முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கண்கள் அருவியாகக் கொட்டின. உடல் நடுங்கியது. உடனே அவர்கள் தம் கூடாரத்திற்கு விரைந்து வந்து, தம் பயணப் பொறுப்பாளரான பணியாளரிடம்:
"நம்மிடம் ஹஜ் பயணத்திற்காக மீதமிருக்கும் மொத்தப் பணம் எவ்வளவு?" என்று கேட்டார்கள்.
خُذْ مِنْهَا عِشْرِينَ دِينَارًا لِطَرِيقِنَا إِلَى مَرْوَ، وَادْفَعِ الْبَاقِيَ — تِسْعَمِائَةٍ وَثَمَانِينَ دِينَارًا — إِلَى هَذِهِ الْمَرْأَةِ، فَهَذَا أَفْضَلُ مِنْ حَجِّنَا فِي هَذَا الْعَامِ!»
"ஹழ்ரத் அவர்களே! நம்மிடம் ஆயிரம் தீனார்கள் (பொற்காசுகள்) உள்ளன" என்றார்.
இமாம் அவர்கள் கூறினார்கள்:
"நம்முடைய ஊரான மர்வுக்கு நாம் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வதற்கான வழிச்செலவுக்குரிய 20 தீனார்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, மீதமுள்ள 980 தீனார்களையும் இந்தக் குடிசைப் பெண்ணிடம் கொடுத்துவிடு! இந்த ஆண்டு நமது ஹஜ்ஜை விட, இந்த அனாதைக் குழந்தைகளின் பசியைப் போக்குவதே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானதாகும்!"
தம்முடைய ஹஜ் பயணத்தை அங்கேயே ரத்து செய்துவிட்டு, மக்காவுக்குச் செல்லாமல் அந்தக் கிராமத்திலிருந்தே தம் ஊருக்குத் திரும்பினார்கள்.
ஹஜ் காலம் முடிந்து மக்காவிலிருந்து ஹாஜிகள் ஊர் திரும்பியபோது, மக்கள் இப்னுல் முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வீட்டிற்கு வந்து:
"ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு வந்திருக்கும் முபாரக் அவர்களே! உங்கள் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படட்டும்!" என்று வாழ்த்துக் கூறினார்கள்.
அதற்கு இமாம் அவர்கள் பணிவோடு, "இல்லை சகோதரர்களே, நான் இந்த ஆண்டு மக்காவுக்கே செல்லவில்லை; வழியிலேயே திரும்பிவிட்டேன்" என்றார்கள்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒரு ஹாஜி முன்வந்து:
"சுபஹானல்லாஹ்! என்ன சொல்கிறீர்கள்? அரஃபா மைதானத்திலும், தவாஃபின் போதும் நீங்கள் என் அருகில்தானே நின்று தொழுது கொண்டிருந்தீர்கள்! என்னோடு நீர் அருந்தினீர்களே!" என்றார்.
மற்றொரு ஹாஜி கூறினார்:
"ஸஃபா-மர்வாவுக்கு இடையில் நீங்கள் எனக்குத் தண்ணீர் புகட்டினீர்களே!"
இப்படிப் பலரும் தாங்கள் மக்காவில் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களைக் கண்ணாரக் கண்டதாகச் சத்தியம் செய்து கூறினார்கள். இமாம் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அன்றிரவு இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உறங்கும்போது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் தோன்றி புன்னகையோடு கூறினார்கள்:
:
«يَا عَبْدَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ تَقَبَّلَ نَفَقَتَكَ عَلَى تِلْكَ الْأَرَامِلِ وَالْأَيْتَامِ، وَخَلَقَ مَلَكًا عَلَى صُورَتِكَ يَحُجُّ عَنْكَ!»
"அப்துல்லாஹ்வே! அந்த ஏழைப் பெண்ணின் அனாதைக் குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காக நீ உன் ஹஜ்ஜையே தியாகம் செய்தாய்! உன் அந்தச் செயலை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்.
உன் உருவத்திலேயே ஒரு வானவரை (மலக்கை)ப் படைத்து, உன் சார்பாக இந்த ஆண்டு ஹஜ்ஜின் அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றச் செய்தான்! அதுமட்டுமல்ல, இந்த ஆண்டு ஹஜ் செய்த அனைத்து ஹாஜிகளின் நன்மைகளையும் விட, உன் அந்த ஒற்றைத் தியாகத்திற்கு அல்லாஹ் பன்மடங்கு உயர்ந்த கூலியை வழங்கிவிட்டான்!"
நூல்: தாரீகு திமஷ்க் - இப்னு அஸாகிர் (تاريخ دمشق لابن عساكر)
கடமையான ஹஜ்ஜை முடித்த பிறகு, மீண்டும் மீண்டும் செய்யும் நஃபில் ஹஜ்ஜை விடவும், சுற்றியுள்ள ஏழைகளின் பட்டினியையும் அனாதைகளின் கண்ணீரையும் துடைப்பது இறைவனிடம் அளப்பரிய அந்தஸ்தைப் பெற்றுத்தரும்.
நிர்ப்பந்தத்தின் வலி: மார்க்க வரம்புகளைப் பேணி வாழும் ஏழைகள் தங்கள் வறுமையை வெளிக்காட்டாமல் தவிப்பார்கள்; அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து உதவுவதே உண்மையான சமூக நலன்.
மதீனாவிற்கு வந்த கூட்டத்தாரின் அவல நிலை
«كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ النَّهَارِ، فَجَاءَهُ قَوْمٌ عُرَاةٌ مُجْتَابِي النِّمَارِ أَوِ الْعَبَاءِ، مُتَقَلِّدِي السُّيُوفِ، عَامَّتُهُمْ مِنْ مُضَرَ، بَلْ كُلُّهُمْ مِنْ مُضَرَ، فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا رَأَى بِهِمْ مِنَ الْفَاقَةِ»
ஒருநாள் காலை நேரத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது, பாலைவனப் பகுதியிலிருந்து ஒரு கூட்டம் மதீனாவிற்குள் நுழைந்தது. அவர்கள் முளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்களின் வறுமையும் இயலாமையும் எல்லையைக் கடந்திருந்தது:கால்களில் காலணிகள் இல்லை; வெறும் கால்களோடு நடந்து வந்திருந்தார்கள்.
முறையான ஆடைகள் இல்லை; கிழிந்த கம்பளி அல்லது வரிக்குதிரை போன்ற கம்பளித் துண்டுகளில் தலையை நுழைக்கும் அளவுக்கு நடுவில் மட்டும் ஓட்டையிட்டு, உடம்பைச் சுற்றித் தொங்கவிட்டிருந்தார்கள்.
உடல் மெலிந்து, பசியின் கொடுமையால் எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார்கள்.இடுப்பில் வீரத்திற்கான வாட்களை மட்டும் தொங்கவிட்டிருந்தார்கள்.அவர்களின் கடுமையான பட்டினியையும், அரை நிர்வாணக் கோலத்தையும் நேரில் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. அவர்களது திருமுகம் ஆழ்ந்த வேதனையாலும் துயரத்தாலும் நிறம் மாறியது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனையோடு தம் வீட்டிற்குள் சென்று, ஏதேனும் உணவுப் பொருட்கள் உள்ளதா என்று தேடிப் பார்த்தார்கள். ஆனால், அங்கே கொடுப்பதற்கு எதுவும் இல்லாததால் உடனே வெளியே வந்தார்கள்.
அவசர அவசரமாகப் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து பாங்கு மற்றும் இகாமத் சொல்லப் பணித்தார்கள். லுஹர் தொழுகை நிறைவேற்றப்பட்டது. தொழுகை முடிந்த கையோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று, அவசர நிவாரண நிதி திரட்டுவதற்காக உரையாற்றத் தொடங்கினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலத்தின் கூட்டுப் பொறுப்புணர்வையும், குடும்பப் பிணைப்பையும் நினைவூட்டும் குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்:
ஸூரா அந்-நிஸா (4:1):
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
மனிதர்களே! உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; மேலும், இரத்த பந்த உறவுகளைப் பேணிக் கொள்ளுங்கள்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
ஸூரா அல்-ஹஷ்ர் (59:18):
இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; ஒவ்வொருவரும் நாளைய மறுமைக்காகத் தான் எதனை முற்படுத்தி வைத்துள்ளோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கட்டும்!
தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களைப் பார்த்து உணர்ச்சிபொங்க அழைப்பு விடுத்தார்கள்:
«تَصَدَّقَ رَجُلٌ مِنْ دِينَارِهِ، مِنْ دِرْهَمِهِ، مِنْ ثَوْبِهِ، مِنْ صَاعِ بُرِّهِ، مِنْ صَاعِ تَمْرِهِ — حَتَّى قَالَ —: وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»
"ஒவ்வொரு மனிதனும் தன்னிடமுள்ள பொற்காசு (தீனார்), வெள்ளிக்காசு (திர்ஹம்), தனது ஆடை, ஒரு மரக்கால் கோதுமை, ஒரு மரக்கால் பேரீச்சம்பழம் என எதுவாக இருந்தாலும் கொண்டுவந்து தர்மம் செய்யட்டும்! இறுதியாக, பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே, அதைக் கொண்டாவது நரக நெருப்பிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளட்டும்!"
நபிகளாரின் இந்த உருக்கமான அழைப்பைக் கேட்ட மக்கள் உடனே தத்தமது வீடுகளுக்கு விரைந்தனர்.
فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِصُرَّةٍ كَادَتْ كَفُّهُ تَعْجِزُ عَنْهَا، بَلْ قَدْ عَجَزَتْ، ثُمَّ تَتَابَعَ النَّاسُ، حَتَّى رَأَيْتُ كَوْمَيْنِ مِنْ طَعَامٍ وَثِيَابٍ، حَتَّى رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَهَلَّلُ كَأَنَّهُ مُذْهَبَةٌ»
அப்போது அன்சாரித் தோழர்களில் ஒருவர், தன் இரு கைகளாலும் தூக்க முடியாத அளவுக்குப் பெரிய ஒரு பை நிறையப் பொருட்களைச் சுமந்துகொண்டு திணறியவாறு பள்ளிவாசலுக்குள் வந்தார். அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னால் கொண்டுவந்து வைத்தார்.
அந்த அன்சாரித் தோழரின் முன்முயற்சியைப் பார்த்தவுடன், மதீனா மக்களின் உள்ளங்களில் கருணை ஊற்றெடுத்தது. ஒவ்வொருவராகத் தங்கள் வீடுகளிலிருந்து தங்களால் இயன்ற பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கத் தொடங்கினர்.
மலைபோல் குவிந்த தானியங்களும் உணவுகளும்,
அடுக்கடுக்காகப் புதிய ஆடைகளும் துணிகளும்
என இரண்டு பெரிய குவியல்கள் உருவாகின.
துன்பத்தில் தவித்த அந்த ஏழைக் கூட்டத்தாருக்குப் போதுமான ஆடைகளும் உணவுகளும் திரண்டதைக் கண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகம் எல்லையற்ற மகிழ்ச்சியால் பிரகாசித்தது. தங்கம் மின்னுவது போல் நபிகளாரின் முகம் ஒளிவீசியதாக ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விவரிக்கிறார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மகத்தான தத்துவ மொழியை உதிர்த்தார்கள்:
"مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ..."
"எவர் இஸ்லாத்தில் ஒரு நன்மையான வழியை (முன்மாதிரியை)த் தொடங்கி வைக்கிறாரோ, அவருக்கு அதற்குரிய நற்கூலியும் உண்டு; அவருக்குப் பின் அந்த நன்மையைச் செய்வோரின் நற்கூலியும் இவருக்குக் கிடைக்கும்; அதற்காக அவர்களின் கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது..."
(நூல்:ஸஹீஹ் முஸ்லிம் )
அதாவது, கூட்டத்தினர் தயங்கி நின்றபோது முதல் ஆளாக நிவாரணப் பொருளைச் சுமந்துவந்து நன்மையை முடுக்கிவிட்ட அந்த அன்சாரித் தோழரைப் பாராட்டும் விதமாகவும், பொதுச் சமூக நன்மைகளுக்கு வழிகாட்டுவோரின் சிறப்பை உணர்த்தும் விதமாகவும் இந்நபிமொழி அமைந்தது.
அனைத்துப் பொருட்களும் உடனடியாக அந்த முளர் கூட்டத்தாருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களின் ஆடைக் குறையும் பசிப்பிணியும் முற்றிலும் போக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மனிதர்களைக் காணும்போது வெறுமனே அனுதாபம் தெரிவித்துவிட்டு விலகிவிடாமல், அதிகாரத்தில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் உடனடியாகக் களமிறங்கி நிவாரணம் திரட்ட வேண்டும்.
சமூக நலனில் உணவு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று எளிய மக்களின் ஆடைக் குறையைப் போக்கி மானத்தைக் காப்பதும் தலையாய சமூகக் கடமையாகும்.
பிறர் செய்வார்களா என்று தயங்காமல், பொதுநலப் பணிகளில் தானே முதல் ஆளாகக் களமிறங்கி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
இஸ்லாம் தனக்கென வழங்கியுள்ள இரு திருநாட்களான ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) மற்றும் ஈதுல் அழ்ஹா (ஹஜ் / தியாகத் திருநாள்) ஆகிய இரண்டுமே வெறும் தனிநபர் கேளிக்கைகளோ, ஆடம்பரக் கொண்டாட்டங்களோ அல்ல; மாறாக, சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள விளிம்புநிலை மனிதர்களின் பசியையும் தேவையையும் நிறைவுசெய்து, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒரே மகிழ்ச்சியில் இணைக்கும் மகத்தான சமூக நலத் திட்டங்களாகும்.
ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) – பட்டினி இல்லா சமூகம்
ரமளான் மாதம் முழுவதும் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திய பிறகு வரும் ஈதுல் ஃபித்ர் தினத்தில், "ஸதக்கத்துல் ஃபித்ர்" என்ற கட்டாயத் தர்மத்தை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
பெருநாள் தொழுகைக்கு முந்தைய நிபந்தனை
ஒரு செல்வந்தன் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பாகவே, தனது குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரின் சார்பாகவும் (குழந்தைகள், முதியவர்கள், பணியாளர்கள் உட்பட) குறிப்பிட்ட அளவு தானியத்தை ஏழைகளின் இல்லங்களுக்குச் சேர்த்தாக வேண்டும்.
நபித்தோழர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ»
"நோன்பாளிக்கு ஏற்பட்ட வீணான பேச்சுகள், வரம்பு மீறல்களிலிருந்து தூய்மையாகவும், ஏழை எளிய மக்களுக்கு உணவாகவும் அமைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸதக்கத்துல் ஃபித்ரை கடமையாக்கினார்கள். எவர் பெருநாள் தொழுகைக்கு முன் அதை நிறைவேற்றுகிறாரோ அது ஒப்புக்கொள்ளப்பட்ட ஜகாத் ஆகும்."(ஸுனன் அபீதாவூத் - 1609)
நபிமொழியின் சமூக உத்தரவு
«أَغْنُوهُمْ عَنْ طَوَافِ هَذَا الْيَوْمِ»
(ஸுனன் அத்தாரகுத்னீ)
"இந்த (பெருநாள்) நாளில் ஏழைகளை யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்டு அலைவதிலிருந்து தன்னிறைவு பெறச் செய்யுங்கள்!"
என் வீட்டில் அறுசுவை உணவு தயாராகும்போது, அண்டை வீட்டில் ஒரு குழந்தைகூடப் பட்டினியாக இருக்கக் கூடாது. பணக்காரன் புத்தாடை உடுத்திப் பள்ளிவாசலுக்கு வரும் அதே பெருநாள் காலையில், ஏழையின் அடுப்பிலும் உணவு கொதிக்க வேண்டும் என்பதே ஈதுல் ஃபித்ரின் சமூகச் செய்தி.
ஈதுல் அழ்ஹா (பக்ரீத் பெருநாள்) – சத்துணவுப் பகிர்வும் தியாகமும்
ஹஜ்ஜின் நிறைவாகவும், இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக நினைவாகவும் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹாவில் இஸ்லாம் உள்ஹிய்யா (குர்பானி) கொடுப்பதை வலியுறுத்துகிறது.
குர்பானி என்பது வெறும் பிராணிகளை அறுத்துப் பலியிடும் சடங்கு அல்ல; அதன் மையமே சமூகப் பகிர்வுதான். குர்ஆன் கூறுகிறது:
فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ
"ஆகவே, (அறுக்கப்பட்டவற்றிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்; வறுமையில் வாடும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்!" (அல்குர்ஆன் 22:28)
மேலும் கூறுகிறது:
فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ
"...ஆகவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வெளியில் கேட்க வெட்கப்பட்டுத் தன்னிடம் இருப்பதைக் கொண்டு) திருப்தியடைந்திருப்பவருக்கும், யாசித்து நிற்பவருக்கும் உண்ணக் கொடுங்கள்!" (அல்குர்ஆன் 22:36)
குர்பானி இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரிக்க மார்க்க அறிஞர்கள் வழிகாட்டுகின்றனர்:
ஒரு பங்கு — தனது குடும்பத்திற்கு
ஒரு பங்கு — உற்றார், உறவினர், நண்பர்களுக்கு
ஒரு பங்கு — எளிய ஏழை மக்களுக்கு
ஆண்டு முழுவதும் இறைச்சி வாங்கி உண்ண வழியில்லாத விளிம்புநிலை ஏழைக் குடும்பங்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் ஒருசேர இறைச்சி உணவை வழங்கி, அவர்களைச் சமூகத்தின் சமநிலைக்குக் கொண்டுவருவதே குர்பானியின் நோக்கமாகும்.
இரு பெருநாட்களிலும் இஸ்லாம் தொழுகையை ஊரின் பொதுவான திறந்தவெளி மைதானத்தில் (முஸல்லா / ஈத்காஹ்) ஒரே ஜமாஅத்தாக ஒன்றுதிரண்டு நிறைவேற்றக் கட்டளையிடுகிறது.
கோடீஸ்வரனும் தினக்கூலியும் ஒரே வரிசையில் தோளோடு தோள் உரசி நிற்கின்றனர்; எஜமானும் தொழிலாளியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி "ஈத் முபாரக்" கூறி வாழ்த்துகளைப் பரிமாறுகின்றனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியாகச் சென்று, திரும்பும்போது மாற்றுப் பாதையில் திரும்புவார்கள் (ஸஹீஹுல் புகாரி - 986). இதன் முக்கிய சமூக நோக்கம்: இரண்டு வெவ்வேறு பாதைகளில் உள்ள அதிகமான மக்களைச் சந்தித்து நலம் விசாரிக்கவும், வழியில் உள்ள ஏழை எளியோரின் தேவைகளை அறிந்து உதவவும் வாய்ப்புக் கிடைக்கும்.
● ஒரு தனிநபரின் நல்வாழ்வு என்பது அவர் வாழும் சமூகத்தைச் சார்ந்தே உள்ளது; சுயநலத்தைத் தாண்டி சக மனிதர்களின் இன்ப-துன்பங்களில் பங்கெடுப்பதே சமூக நலனின் அடித்தளம்.
● தமக்குக் கிடைக்கும் வளங்களைக்கொண்டு வறுமையில் வாடுவோருக்கு உணவளிப்பதும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுவதும் முதன்மையான சமூகக் கடமை.
● பொது இடங்களைச் சுத்தமாகப் பராமரித்தல், சாலையிலுள்ள தடைகளையும் கழிவுகளையும் அகற்றுதல், மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்தல் ஆகியவை ஒட்டுமொத்த சமூக ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
● சுற்றியுள்ள அண்டை வீட்டாரின் இனம், மதம் பாராமல் அவர்களுடன் நல்லுறவைப் பேணுவதும், அவர்களுக்கு ஆபத்து நேராமல் பாதுகாப்பதும் அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
● ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், விதவைகள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்குத் தேவையான கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளை முன்னின்று வழங்குதல்.
● சமூக அமைதியைக் குலைக்கும் வதந்திகள், புறம்பேசுதல், பொறாமை மற்றும் சண்டைகளைத் தவிர்த்து, இன்சொற்களாலும் நல்லிணக்கத்தாலும் பிளவுகளைச் சரிசெய்தல்.
● சமூகத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு அமைதியாக இருக்காமல், நியாயத்தின் பக்கம் நின்று பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பது கூட்டுப் பொறுப்பு.
● சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் போதைப் பழக்கம், குற்றச் செயல்கள் போன்றவற்றில் வீழ்ந்துவிடாமல் நல்வழிப்படுத்தவும், கல்வி மற்றும் திறன்களை வளர்க்கவும் துணைநிற்பது.
● வெள்ளம், வறட்சி, நோய் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தன்னார்வத்துடன் களமிறங்கி மனிதநேய மீட்புப் பணிகளில் கைகோர்ப்பது.
● பேருந்துகள், தெருவிளக்குகள், அரசு மருத்துவமனைகள், பூங்காக்கள் போன்ற பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தாமல் பேணுவதும், அவற்றை முறையாகப் பயன்படுத்துவதும் சமூகக் கடமை.
● விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர காலங்களில் உடனுக்குடன் ரத்த தானம் செய்வது, ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவது போன்ற செயல்கள் நேரடியாக மனித உயிர்களைக் காக்கும் பணியாகும்.
● குடிநீரை வீணாக்காமல் இருத்தல், மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் மற்றும் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளைத் தூர்வாரிப் பாதுகாப்பது வருங்கால சந்ததிக்கான சமூக நலன்.
● முதியோர்களைத் தனிமையில் விடாமல் கவனித்துக் கொள்வதும், மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை எளிதாகப் பயன்படுத்தும் சூழலை உருவாக்கித் தருவதும் ஒரு முதிர்ந்த சமூகத்தின் அடையாளம்.
● குடும்பங்கள் அல்லது அண்டை வீட்டாருக்குள் ஏற்படும் சண்டைகளை ஊதிப் பெரிதாக்காமல், நடுநிலையோடு பேசி அமைதியை மீட்டெடுக்கும் மத்தியஸ்தராகச் செயல்படுவது.
சமூக நலன்தான் ஈமானின் உரைகல்; சக மனிதனின் கண்ணீரைத் துடைப்பதுதான் உண்மையான ஆன்மீகம்!"
நாம் தொழும் தொழுகை, நோற்கும் நோன்பு, நிறைவேற்றும் ஹஜ், கொடுக்கும் ஸதக்கத்துல் ஃபித்ர் மற்றும் குர்பானி ஆகிய அனைத்தும் வெறும் சடங்குகள் அல்ல; அவை ஒவ்வொன்றும் சுயநலத்தை அறுத்து எறிந்து, சமூகத்தோடு நம்மை இணைக்கும் பயிற்சிக் களங்கள்.
"நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்?"
பக்கத்து வீட்டில் பசியோடு ஒருவன் உறங்கும்போது வயிறு நிரம்ப உண்பவன் முஃமினாக முடியாது. பொதுச் சாலைகளைச் சுத்தமாக வைத்திருப்பதும், எளியோருக்கு வழிவிடுவதும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், பேரிடர்க் காலங்களில் முதல் ஆளாக நிவாரணப் பணிகளில் களம் காண்பதும் நம் தலையாய ஈமானியக் கடமைகளாகும்.
வாருங்கள்! நமது உள்ளங்களிலிருந்து பொறாமையையும் சுயநலத்தையும் வேரறுப்போம். மனிதநேயத்தை உயிர்ப்பிப்போம். சமூகத்திற்குப் பயனுள்ள நல்ல மனிதர்களாக வாழ்ந்து மரணிப்போம். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக