புதன், 29 ஏப்ரல், 2020

மூவரில் ஒருவர் மட்டுமே



மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

இஸ்ரவேலர்களில் மூவர் அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சோதனையில் பீடிக்கப்பட்டிருந்தனர் அவர்களுக்கு முன்னால் இறைவனின் புறத்திலிருந்து நல்லதொரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பைப் பெற்ற பிறகு அவர்கள் மீண்டும் என்னவானார்கள் என்பதை தான் நபி ஸல் அவர்கள் அழகாக எடுத்துரைக்க, அன்புத் தோழர் அபூஹுரைரா (ரலி) அவர் கள் அறிவிக்க, ஹதீஸ்
கலா மாமேதைகளான இமாம் புஹாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர். (மிஷ்காத், பக்கம்-165)


இப்போது வரலாற்றைப் புரட்டிப் பார்க்கலாம் வாருங்கள் "இஸ்ரவேல் சமூகத்தைச் சார்ந்த மூவரில் ஒருவர் குஷ்டரோகி, இரண்டாமவர் வழுக்கை தலையர் மூன்றாமவர் குருடர். இம்மூவரையும் சோதிக்க அல்லாஹ் நாடினான்.

ஒரு வானவர் மனிதக் கோலத்தில் தோன்றினார். குஷ்டரோகியிடம் சென்றார். உமக்கு என்ன வேண்டும்? கேள்" என்றார். அவன் இவரைப் பார்த்துச் சொன்னான் வேறென்ன வேண்டும்எனது உடலிலுள்ள அருவருப்பான நோய் தீர வேண்டும் அழகிய உடலும், அழகிய நிறமும் வர வேண்டும்" என்றான்.

உடனே அந்த வானவர் தன் கையால் அவனைத் தடவினார். என்ன ஆச்சர்யம்? உடனே அந்தத் தொழு நோய் தொலைந்து விட்டது. கை, கால்கள் எல்லாம் எல்லோரையும் போல முழுமையாகக் காட்சி தந்தன. அழகிய தோற்றம் அற்புத வடிவில் காட்சியளித்தான் "இதற்கு மேல் உனக்கு என்ன செல்வம் தேவை" என்று வானவர் கேட்க "ஓர் ஒட்டகம் கிடைத்தால் போதும். அதை வைத்து நான் பிழைத்துக் கொள்வேன்என் றான் அவன். உடனே அவர் கையசைத்தார். கர்ப்பிணியான ஓர் ஒட்டகம் ஓடி வந்தது, இதை வைத்துப் பிழைத்துக்கொள், அல்லாஹ் அபிவிருத்தி அளிப்பானாக" என்று கூறியபடி மறைந்துவிட்டார்.

இரண்டாமவனிடம் - வழுக்கை தலையனிடம் அதே வானவர் வந்தார். "உனக்கென்ன வேண்டும்என்று கேட்டார் "என் வழுக்கைத் தலையில் முடி முளைக்க வேண்டும். பார்ப்பதற்கு அழகாக நான் காட்சியளிக்க வேண்டும்" என்று அவன் சொல்ல "அப்படியே ஆகுக" என அவன் தலையில் தடவினார். அவன் அழகான தோற்றத்துடன் அடர்ந்த முடியுடன் காட்சியளித்தான்.

உன் பிழைப்புக்கு என்ன வேண்டும் என்று அடுத்துக் கேட்க ஒரு மாடு கிடைத்தால் போதும் அதை வைத்து நான் என் பிழைப்பைப் பார்த்துக் கொள்வேன் என்றான் அவன். உடனே அவர் கையசைக்க கர்ப்பம் நிறைந்த ஒரு பசுமாடு வந்தது இதிலே அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்வானாக" என்று வாழ்த்தி விட்டு சென்றார்.

மூன்றாமவரான கண் பார்வையற்ற குருடனிடம் அவர் வந்தார். "உனக்கு என்ன வேண்டும்என்று கேட்டார். "இறைவன் எனக்கு பார்வையற்ற நிலையை மாற்றி கண்ணொளியை தர வேண்டும். இது தான் என் கோரிக்கை" என்றான். உடனே அவனைத் தடவி விட்டார். பளிச் என்று பார்வை தெரியலாயிற்று. தன் இரு கண்களால் அவன் ஆனந்தமாக அகிலத்தைக் கண்டு மகிழ்ந்தான்

உனக்கு எந்தப்பொருள் பிரியமானது" என்று அவர் வினவ "ஓர் ஆட்டுக்குட்டி போதும்" என்று அவன் சொல்ல உடனே ஓர் ஆட்டைக் கொடுத்துச் சென்று விட்டார்

இம்மூவரும் தத்தம் செல்வங்களில் ஓகோ என்று அபரிமிதமான வளர்ச்சி கண்டனர். ஒவ்வொருவரும் பண்ணையாகப் பெரும் செல்வத்தை அடைந்தனர் இப்படியிருக்கையில் மீண்டும் அதே வானவர் முன்பு அவர்கள் இருந்த அதே தோற்றத்தில் வந்தார். முதலில் ஓட்டகப் பண்ணைக்கு வந்தவர் அந்த பணக்காரனிடம் சென்று - அவன் முன்பு இருந்தவாறு தொழு நோயாளியாகக் காட்சியளித்தார் "ஐயா! நான் ஓர் ஏழை. எந்த வழியும் இல்லாமல் உங்களிடம் வந்துள்ள வழிப்போக்கன், என் பயணத்தைத் தொடர அல்லாஹ்வுக்கு அடுத்த படியாகத் தாங்கள் தான் உதவவேண்டும். தங்களுக்கு இப்பெரும் செல்வத்தையும், அழகிய நிறத்தையும்
ஆரோக்கியமான தோலையும் வழங்கிய அல்லாஹ்வின் பெயரால் வேண்டுகிறேன் எனக்கு ஓர் ஒட்டகம் கொடுங்கள்" என்று கெஞ்சினார்.

அவரை ஏற இறங்கப் பார்த்த அவன் "அதெல்லாம் முடியாது எனக்கு ஏகப்பட்ட கடமைகளும் பிரச்சனைகளும் உள்ளன" என்றான்
இப்பொழுது அவனைத் தம் ஏளனப் பார்வையால் பார்த்த அவர் "நீயும் ஒரு காலத்தில் நோயாளியாக ஏழையாகத் தான் இருந்தாய். அந்த அல்லாஹ் தானே உனக்கு நல்ல சுகத்தைக் கொடுத்து, நோயை நீக்கி வைத்து சொத்து சுகத்தையும் அளித்தான். ஞாபமில்லையாஎன்று கேட்க, "என்ன பேசுகின்றாய்? அப்படியெல்லாம் ஏதுமில்லை. இது என் பரம்பரைச் சொத்து" என்று பெருமை பேசினான்.

அப்படியானால் உன் பழைய நிலைமைக்கே நீ திரும்ப இறைவன் வழி செய்வானாக" என்றவாறு அங்கிருந்து கிளம்பினார். அவனுக்கு உடனே பழைய நிலை அதே தொழுநோயும் பிறரிடம் பிச்சை எடுக்கின்ற அவல நிலையும் ஏற்பட்டது

அடுத்து அந்த வானவர் இரண்டாமவனிடம் வந்தார். அவன் இருந்த பழைய தோற்றத்தில் வழுக்கைத் தலையனாக - வறுமையில் தோய்ந்தவனாகக் காட்சியளித்தர் "யார் நீ என்று அவன் அதிகாரத்தோடு கேட்க "நான் ஓர் ஏழை வழிப்போக்கன் பயணத்தின் நடுவே நிர்கதியாகிவிட்டேன், ஏதோ தங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அதை வைத்து நான் பயணத்தைத் தொடர்ந்து பிழைப்புக்கும் வழி தேடிக் கொள்வேன்என்றார்

அவனும் முந்தியவனைப் போலவே பதில் கொடுக்க இவரும் அவனை வாழ்த்தியது போலவே - அல்ல அல்ல சபித்தது போலவே சபிக்க பழைய நிலைக்கு அவனும் மாறிப்போனான்

மூன்றாவதாக வந்தார் அந்த முன்னாள் குருடனிடம், "யார் நீர்என்று அவன் கேட்க்"நான் ஒரு வழிப்போக்கன், கண் பார்வையற்றவன். தங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன். ஏனென்றால் தாங்களும் முன்பொரு காலத்தில் கண் பார்வையற்றவராக - ஏழையாகத்தான் இருந்தீர்கள். எந்த அல்லாஹ் தங்களுக்கு கண்ணொளியைக் கொடுத்து செல்வத்தையும் வழங்கினானோ அந்த அல்லாஹ்வின் பெயரால் வேண்டுகிறேன். உங்களின் பண்ணையிலிருந்து ஓர் ஆட்டினை எனக்கு வழங்குங்கள். அதைக் கொண்டு என் பயணத்தை தொடர்வேன். பிழைப்பையும் பார்த்துக் கொள்வேன்என்று கூறினார்

இது கேட்ட அந்த முன்னாள் குருடர், இன்றைய ஆட்டுப் பண்ணை முதலாளி சொன்னார். "ஆம்! ஆம்! நானும் ஒரு காலத்தில் குருடனாகத்தான் இருந்தேன். ஏழையாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த அல்லாஹ் தான் எனக்கு கண்ணொளியையும் இந்தப் பண்ணைச் செல்வத்தையும் தன் அருளால் வழங்கினான் நீர் என் பண்ணையிலிருந்து ஓர் ஆடு என்ன? எத்தனை வேண்டுமானாலும் ஓட்டிச் செல்லும். அந்த அல்லாஹ்வின் மேல் ஆணை. இன்றைய தினம் நீர் எதை
எடுத்தாலும் நான் உம்மை எந்த வகையிலும் தடுக்கமாட்டேன்" என்று அவர் சொன்னது தான் தாமதம். பரிட்சிக்க வந்த வானவர் பக்கீர் கோலத்திலிருந்து விடுபட்டு அவரை நோக்கிச் சொன்னார்

"நன்று, நன்று நீர் கொடுக்கும் எதுவும் எனக்குத் தேவையில்லை. நீங்கள் மூவரும் மூன்று வகையில் சோதிக்கப்பட்டீர்கள். நீர் மட்டும்
சோதனையில் ஜெயித்தீர் மற்ற இருவரும் தோற்றுவிட்டனர் என்று அவரை வாழ்த்தி விட்டுச் சென்றார். இச்சம்பவம் நன்றியறிதல், நன்றி கொல்லுதல் ஆகியவற்றின் விளைவிற்கு சிறந்த உதாரணமாகும்


MANARUL HUDA JUMADHAL OOLA 1431 MAY - 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக