செவ்வாய், 21 ஏப்ரல், 2020

செல்ஃப் சர்வீஸ்



وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ
விசாலமாக இருந்தும் உங்களுக்கு பூமி நெருக்கடியாகிவிட்டது
அல்குர் ஆன் : (9: 25)

ஹுனைன் என்ற யுத்த களத்தில் நேரிட்ட காட்சியை திருக்குர்ஆன்
இவ்வாறு வர்ணிக்கிறது ஏற்படுமென்பதில்லை. நிம்மதியான வாழ்விலும் இந்நிலை சம்பவிக்கலாம்.


யுத்த களத்தில் தான் இத்தகைய நிலை சாமானியனிலிருந்து சாதனையாளர்கள்வரை அனைவரும் உயர்தர வாழக்கையையே விரும்புகின்றனர். அது அவர்களின் உரிமை. ஆனால் உயர்தர வாழ்க்கை என்பது வசதிகளை வாரி வழங்குவதைப் போன்றே நெருக்கடியையும் உண்டாக்குகின்றது என்பதை மறந்துவிடலாகாது

ஒருவன் பணியாளர்களை வைத்துக் கொள்கிறான். காவலர்களை தேடிக்கொள்கிறான். உண்ணத் தனி அறை! உறங்கத் தனி அறை! உடுத்தத் தனி அறை! என்று வசதிகளை வகுத்துக் கொள்கிறான். வண்ண வண்ண ஆடைகள், வகை வகையான பாத்திரங்கள், வீதியில் வழுக்கிச் செல்லும் வாகனங்கள், பணி செய்யும் இடத்தில் குளிர்ப்பதன வசதிகள் இத்தியாதி! இத்தியாதி


இத்தகைய வசதி வாய்ப்புக்களால் காரியமாற்றுவது இலகுாவக ஆகிறது. என்றாலும் நாளடைவில் அவை அவனை அடிமைப்படுத்தி விடுகின்றன. இல்லையானால் அவனது செயலாக்கம் முடமாகி விடுகிறது. இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டிய அம்மனிதன் வசதி வாய்ப்பிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான்

ஈரான் நாட்டு மன்னன் "எஸ்தறர் துஎன்பான், அவன் நாட்டின் நடந்த
படையெடுப்பின்போது தோற்று ஒடுகிறான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடிய அவன் களைத்துப் போய் அருகாமையில் இருந்த குடிசை வீட்டில் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்கிறான்

அந்த வீட்டிலுள்ளவர் தகரக் குவளையில் அவனுக்கு தண்ணீர்
தருகிறார். அதைப் பெற்ற மன்னன் கோவென்று கதறி அழுகிறான். நான் இந்தப் பாத்திரத்தில் தண்ணீர் அருந்திப் பழக்கமில்லையே! இப்போது எவ்வாறு அருந்துவேன்? பாத்திரத்தைப் பார்த்தாலே குமட்டல் வருகிறதே! என்று ஒலமிட்டான். அவன் நிலை கண்டு குடிசைவாசி பரிதாபப்பட்டான். ஆம் அந்த மன்னனின் அரண்மனைப் பழக்க வழக்கம் அவனுக்கு நெருக்கடியைத்தான் தந்தது.

இது என்றோ, எங்கோ நடந்த புதுமையல்ல. அன்றாடம், பலர் இத்தகைய நெருக்கடியை அனுபவிக்கிறார்கள். 'போம்' மெத்தை இல்லாததால் உறக்கத்தைத் துறந்தவர்கள், மின்சாரப் பற்றாக் குறையால் - குளிர்பதன வசதி இல்லாததால் காரியமாற்ற முடியாதவர்கள், பாதுகாப்புக்கு ஆள் இல்லாமல் பவனி வர முடியாதவர்கள், கார் இல்லாததால் காரியத்தையே தள்ளிப் போடுபவர்கள், பியூன் வராததால் ஃபைலை நகர்த்தத் தெரியாதவர்கள். இவை அன்றாட நிகழ்வுகள்தான். வசதி வாய்ப்பை நம்பித்தான் தமது வாழ்க்கை அமைந்திருப்பதைக் கண்டு சிற்சில சமயங்களில் அவர்களே விரக்தி அடைவதும் இது என்ன வாழ்க்கை! என்று அலுத்துக் கொள்வதும் உண்டு.

பட்டுக் கம்பளங்களைக் கிழித்த  பாரசீகப்போர் வீரர்.

படையெடுப்பின்போது அந்நாட்டுத் தளபதி ருஸ்தும் என்பார் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இஸ்லாமியத் தளபதி ஹள்ரத் ஸஃதுபின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இஸ்லாமியத் தளபதி அவர்கள் ஹள்ரத் ரிப்இ பின் ஆமிர் (ரலி) அவர்களை தமது தூதராக அனுப்பி வைக்கிறார்கள்

தளபதியின் தூதர் ஹள்ரத் ரிப்இ அவர்கள் பாதுகாப்புக்காக ஈட்டியுடன் செல்கிறார். தங்கள் நாட்டுத் தளபதியைச் சந்திக்க ஈட்டியுடன் செல்லலாகாது என்று கூறி அவர்களை ருஸ்துமின் காவலர்கள் தடுக்கிறார்கள். அப்படியானால் பேச்சு வார்த்தை நடத்த, தாம் தயாராக இல்லையென்று கூறி ஹள்ரத் ரிப்இ அவர்கள் திரும்புகிறார். பின்னர் நிலைமையை அனுசரித்து அவர்கள் அனுமதி தருகிறார்கள், தளபதியின் அவயில் விரிக்கப் பட்டிருக்கும் பட்டுக் கம்பளங்களை தனது ஈட்டியால் காயப்படுத்திக் கொண்டே செல்கிறார் ஹள்ரத் ரிப்இ - (ரலி) அவர்கள்


பின்னர் அவர் தளபதியிடம் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து
கொள்கிறார் படைப்பினங்களை வணங்குவதை விடுத்து படைத்தவனை வணங்குவதற்கு அழைப்புக் கொடுப்பதற்காக அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான். உலகத்தின் நெருக்கடியிலிருந்து, விசாலத்தின் பால் அழைக்க நாங்கள் வந்துள்ளோம். மதங்கள் என்ற பெயரால் இழைக்கப்படும் அநீதிகளிலிருந்து காத்து இஸ்லாமிய நீதத்தின் பால் அழைப்பு விடுக்க நாங்கள் வந்துள்ளோம் என்று அவர் கூறினார்.

ஹள்ரத் ரிப்இ அவர்களின் உரை, ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகிறது வசதி வாய்ப்புக்கள் என்ற மாயையால் அவர்கள் சூழப்பட்டிருக்கிறார்கள். அவை இல்லையாயின் அவர்களால் வாழ இயலாது. எனவே அவை வசதி வாய்புக்களல்ல! உண்மையில் அவை நெருக்கடிகளாகும். இஸ்லாம் நெருக்கடி இல்லாத விசாலத்தின்பால் அழைப்பு விடுக்கிறது. இஸ்லாத்தின் அழைப்பை ஏற்றால் இவ்வுலகிலும் விசாலமாக வாழலாம். மறுமையில் மிகப்பெரும் விசாலத்தைக் காணலாம்.

ஜனாதிபதியைக் காண வந்த மன்னன்

கஸ்ஸான் நாட்டு மன்னர், ஜனாதிபதி ஹள்ரத் உமர் (ரலி) அவர்களைக் காண மதீனா நகர் வருகிறார். ஜனாதிபதி அவர்கள் பள்ளிவாசலில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. பள்ளிவாசலில் வந்து தேடிய மன்னரின் பணியாளர்கள் ஜனாதிபதி பள்ளியினுள் இல்லை என்று கூறுகிறார்கள்.

பின்னர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த
போது ஜனாதிபதி உள்ளேதான் இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள் அவர்களில் ஒரு சிறுவன் உள்ளே வந்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் தனது கையை தலைக்கு வைத்து கண்ணயர்ந்து கொண்டிருப்பதைக் காட்டினான்.

மன்னர் அக்காட்சியை வியப்போடு நோக்கினார். பின்னர் ஹள்ரத் உமர் (ரலிஅவர்களை கண்விழிக்கச் செய்து தம் இஸ்லாத்தை எற்க வந்திருப்பதாக மன்னர் கூறினார். மன்னரின் தோற்றத்தைக் கண்ட ஜனாதிபதி ஹள்ரத் உமர் (ரலிஅவர்கள் கோபம் கொண்டார்கள். ஆடைகளை ஐந்து பணியாட்கள் கமந்து வர, தலையில் தங்க கிரீடம் அலங்கரிக்க படாடோபமாக தோற்றம் தந்த அந்த மன்னரிடம், முதலில் நீங்கள் இவற்றையெல்லாம் கழற்றிவிட்டு தனி மனிதனாக வாருங்கள், பகட்டும், படாடோபமும் கொண்டவர், எவ்வாறு முற்றிலும் இறைவனுக்கு, சரணடைய முடியும்? என்று ஹள்ரத் உமர் (ரலி)கூறினார்கள்.

முழுக்க முழுக்க இறைவனுக்கு மட்டுமே சரண் அடைவதற்குப்
பெயர்தான் இஸ்லாம் எனவே ஒவ்வொருவரையும் நோக்கி இஸ்லாம் கூறுகிறது நீ அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருந்திடல் வேண்டும். வேறு எதற்கும் அடிமையாகாதே! உன்னுடைய பழக்க வழக்கங்கள் உன்னைக் கட்டுப்படுத்தும் எஐமானனாக மாறிவிடலாம் உனது வசதி வாய்புக்கள்கூட உன்மீது கட்டுப்பாடுகளை விதிக்க முயலலாம்! உனது ஆசைகள் உன்னை அடிமைப்படுத்தி விடலாம்! அவைகளுக்கு நீ அடிமையாகாதே

இவ்வாறு கூறுவதால் வசதி வாய்புக்களைத் தேடிக் கொள்வதை இஸ்லாம் தடை செய்வதாக எண்ணிக் கொள்ளல் வேண்டாம்! அவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது என்றுதான் கூறுகிறது. அதாவது அந்த வாய்ப்புக்கள் இல்லையானாலும் அவன் காரியமாற்றப் பழகிக் கொள்ள வேண்டும்

வசதி வாயப்புக்கள் இழந்தபோது அவனது செயலாக்கம் முடமாகி
விடக்கூடாது. தன் வேலைகளை தானே செய்ய பழகிக் கொள்ள வேண்டும் போம்மெத்தை இல்லையானாலும், மண் தரையில் விரிப்பின்றி உறங்கும் பழக்கம் வேண்டும். தலையணையை நம்பாமல் தன் கையே தனக்குதவி என்ற நிலையிலும் நிலை தடுமாறாமல் இருக்க வேண்டும். கார் இல்லையானால் பேருந்திலும் பயணம் செய்வதில் தயக்கம் கூடாது. அதுவும் இல்லையானால் கால்நடையாகவும் செல்ல வேண்டும். உதவியாளர் இருந்தால்தான் காரியமாற்ற முடியும் என்ற நிலை ஒரு மனிதனுக்கு மாட்டப்பட்ட கை விலங்கு போன்றது தவிரவும் பணியாள் இல்லாமல், காரியமாற்றுவதை நாம் கேவலமாகக் கருதிக் கொள்ளுதல் கூடாது


நீதி வழுவா இரண்டாம் உமர்

ஓநாயும், ஆடும் ஒன்றாக மேய்ந்த சரித்திரத்தைப் படைத்த ஹள்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ்-ரலி அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது ஒருநாள் இரவு நடுநிசியைக் கடந்த பின்னரும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது காற்று அதிகமாக வீசவே விளக்கு அணைந்துவிட்டது. அவர்கள் தானே எழுந்துசென்று வேறு விளக்கைக் கொளுத்தினார்கள் அதைக் கண்ணுற்ற அதிகாரிகள் "தாங்கள் வேலைக்காரனை எழுப்பினால் என்ன? எல்லா வேலைகளையும் தாங்களே செய்கிறீர்களேஎன்று கேட்டார்கள் வேலைக்காரர்களும் மனிதர்கள்தானே அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சிறு வேலைக்காக அவர்களை எழுப்ப வேண்டுமா? மேலும் விளக்குக் கொளுத்தியதால் நான் என்ன குறைந்தா போய்விட்டேன்? விளக்கைக் கொளுத்துவதற்கு முன்னும் நான் உமராகவே இருந்தேன். விளக்குக் கொளுத்திய பின்னரும் உமராகவே இருக்கிறேன் என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்

இஸ்லாம் கற்றுத் தரும் விசாலம்

ஹள்ரத் அவ்ப் பின் மாலிக் அல் அஷ்ஜஈ (ரலி) என்ற நாயகத்
தோழர் அறிவிக்கிறார். மக்கள் எவரிடத்திலும் நாங்கள் எதையும்
கேட்க மாட்டோம்என்று நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பை அத்செய்து கொடுத்திருந்தோம். அவ்வாறு பைஅத் செய்து கொடுத்திருந்த எங்களில் சிலர் குதிரையில் செல்லும்போது
அவர்களின் சாட்டை கீழே விழுந்தாலும் கூட, அங்கே நிற்பவர்களிடம் அதை எடுத்து தரச் சொல்ல மாட்டார்கள். தாங்களே இறங்கி எடுத்துக் கொள்வார்கள் நூல் : புகாரி

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லுக்கு அவர்களின் நண்பர்கள் செய்து கொண்ட வியாக்கியானம் மிக்க உயர்தரமானதாகும். பிறர் தயவை எதிர்நோக்காமல் தன் வேலையை தானே செய்து கொள்ளப் பழகிக் கொள்ள அந்த வியாக்கியானம் வகை செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பழக்கத்துக்குச்
சொந்தக்காரராகத் திகழ்ந்து வந்தார்கள். ஹள்ரத் ஆயிஷா சித்தீகா (ரலி) அவர்களிடம் அண்ணலார் வீட்டுக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்றொருவர் கேட்டபோது, “ஆட்டில் பால் கறப்பார்கள், செருப்புத் தைப்பார்கள். குடும்பத்தாரின் வேலைக்கு உதவி செய்வார்கள் என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எடுபிடிக்கு ஆள் இல்லை. அதனால் அவ்வாறு செய்தார்கள் என்று எவரும் தவறான கருத்துக் கொள்ளுதல் ஆகாது அண்ணல் நாயகம் (ஸல்) அவர்கள் கண்சாடை காட்டினால் போதும் அவர்களின் பணியேற்க ஆயிரம் ஆயிரம் தோழர்கள் உள்ளன்போடு முன் வருவார்கள். இருப்பினும் அண்ணலார் அவ்வாறு செய்யவில்லை.

அண்ணலார் படுத்துறங்கி எழுந்தால் அவர்களின் பொன்னிற மேனியில் ஒலைப்பாய் அழுத்தியதால் செவ்வரிக் கோடுகள் பதிந்திருக்கும். ஒரு நாள் அக்காட்சியைக் கண்டு கண் கசிந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு சிறு மெத்தை தைத்துப் போட்டுக் கொள்ளக்கூடாதா? வெனக் கேட்ட போது பெருமானார் மறுத்துரைத்து விட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு செல்வம் இல்லை. அதனால் வசதி வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளவில்லை என எவரும் தவறாக எண்ணக் கூடாது அவர்கள் காலடியில் கொட்டப்பட்ட யுத்த வெற்றிப் பொருள்கள் கணக்கிட இயலாததாகும். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் அந்த உண்மை தெரியவரும். மதீனா நகரைச் சுற்றி அகழி தோண்டும்போது பெரும் பாறை ஒன்றை பெருமானார் சம்மட்டியினால் அடித்தபோது அதிலிருந்து ஒளிக்கிற்று தென்பட்டது. அப்போது அவர்கள் உஃதீத்துமபாத்திஹல் ஹஸாயினி" (அனைத்து புதையல்களின் திறவுகோல்களை எனக்குத் தரப்பட்டுள்ளது) என்றுரைத்தார்கள்.

அண்ணலார் அமுத வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் எதுவும்
பொய்யான தில்லை அவர்கள் நினைத்திருந்தால் எல்லாப் புதையல்களையும் வெளிக் கொணர்ந்திருக்க முடியும். திரு. மைக்கேல் ஹார்ட் என்பார் திஹண்ட்ரட் என்ற நூலில் குறிப்பிட்டது போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழையல்ல. ஆனால் அவர்கள் மிக்க எளிமையாக வாழ்ந்தார்கள். அது அவர்களின் வழியொற்றியவர்களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும்

இப்படி இருந்தால்தான் என்னால் வாழ முடியும் என்று எண்ணுவதற்கு நமக்கு எப்படி தைரியம் வரும்? அண்ணலாரே! அப்படி வாழ்ந்திருக்கும் போது

அண்ணலாரின் அறிவுரை

நீங்கள் உங்கள் வேலைக்காரர்களுக்கு அவர்களின் சக்திக்கு மீறிய
பளுவான வேலையைத் தராதீர்கள். அப்படித் தர வேண்டிய நிர்பந்தம்
ஏற்பாட்டால் நீங்களும் அவர்களுக்கு உதவ முன்வாருங்கள்! என நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் நவின்றுள்ளார்கள்

இந்தப் பொன்மொழி அருமையான ஒரு போதனையை உள்ளடக்கியுள்ளது. வேலைக்காரர்கள் மூலமாகப் பெறும் ஒவ்வொரு வேலையையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவனுக்கு அதிக பளு தரும்போது நாமும் அந்த வேலையைச் செய்ய வேண்டும். அவசியம் ஏற்படும்போது நாம் அதைச் செய்வதில் தயக்கம் காட்டக்கூடாது

ஹஜ்ஜுப் பணம் ஒரு இனிய அனுபவம்

தன் வேலையை தானே சமாளிக்கப் பழகியவர்கள் மட்டும்தான் ஹஜ்ஜுப் பயணத்தின் இனிமையை அனுபவிக்க முடியும்; தனக்குத்தானே துணை! தன்மூட்டை முடிச்சுகளை தானே தூக்க வேண்டும்! ஓய்வு இருக்காது! உறக்கம் இருக்காது! தன் காரியத்துக்கு தானே ஓட வேண்டும்! இந்த நிலைகளைச் சமாளிக்கும் பழக்கத்தை ஹஜ்ஜுப் பயணம் ஒவ்வொருவருக்கும் கற்றுத் தந்துவிடுகிறது

குறிப்பாக முஸ்தலிபாவில் தங்கும் அந்த இரவை ஒரு பயிற்சி முகாம் என்று கூறினால் மிகையாகாது. வெளிச்சம் இருந்தால் தூக்கம் வராது! சப்தம் கேட்டால் தூக்கம் வராது! முறையான விரிப்பில்லையானால் உறக்கம் வராது தலையணையின் உயரம் குறைந்தால் உறக்கம் வராது என்று சொல்பவர்களுக்கெல்லாம் அங்கே சரியான பாடம் புகட்டப்படுகிறது. ஆம்! நாம் தனியாக இவ்வுலகிற்கு வந்தோம்! தனியாகவே செல்லப் போகிறோம் இடைப்பட்ட பகுதியிலும் தனியாகவே காரியமாற்றத் தயாராக இருக்க வேண்டும.

புனித ஹஜ் தரும் பாடத்தை மறக்க முடியா நிகழ்வாகக் கருத்தில்
கொண்டு வாழுபவர்கள் இவ்வுலகத்திலேயே சுவன வாழ்வைக் காணலாம். முடியாமை என்பது அவர்களுக்கு இல்லாமையாகி விடும். வாருங்கள் அந்த அதிசயத்தைக் காணுவோம்


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக