புதன், 29 ஜனவரி, 2025

சந்தூக்.

 


ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் ஸக்கராத்தில் இருக்கிறார்கள். அன்னாரின் நெருங்கிய தோழி அஸ்மா பின்த் உமைஸ் ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அருகே அமர்ந்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு கட்டத்தில் ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள், "மைய்யித்தை கட்டிலில் கிடத்தி துணியினால் போர்த்தி சுமந்துச் செல்லும் அக்காலத்தில் இருந்த நடைமுறையில் தனக்கு கிஞ்சிற்றும் விருப்பமில்லை என்றும் என்னதான் மைய்யித்தை துணியினால் போர்த்தினாலும் மைய்யித்தின் உடலமைப்பின் மூலம் மைய்யித் ஆண், பெண் என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்" என்றும் வருத்தப்பட்டார்கள்.


அப்போது அஸ்மா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள், "தான் அபிசீனியாவுக்கு முதல் ஹிஜ்ரத் சென்றிருந்தபோது அங்கு வாழ்ந்த மக்கள் மைய்யித்தை சந்தூக் போன்றதொன்றில் சுமந்துச் சென்றதை தான் கண்டதாகவும் அது மறைவானது; பாதுகாப்பானது என்றும் தெரிவித்தார்கள்.


மனநிம்மதியடைந்த ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் உடனடியாக தனக்கு அந்த சந்தூக்கை செய்துக் காட்டுமாறு பணித்தார்கள். 


அஸ்மா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்களும் கட்டில், பேரீச்ச மரக் கிளைகள், துணி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டிலின் நான்கு ஓரங்களிலும் பேரீச்ச மரக் கிளைகளை வளைத்து இணைத்துக் கட்டி மேலே துணியினால் மூடி அபிசீனியாவில் தான் கண்ட சந்தூக்கை செய்துக் காட்டினார்கள்.


மகிழ்ச்சியடைந்த ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள், "தான் வஃபாத்தாகினால் தனது உடம்பை கணவர் அலி இப்னு அபூதாலிப் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்களுடன் சேர்ந்து அஸ்மா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள்தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் தனது பிரேதத்தை பிற ஆடவர்கள் பார்க்க முடியாத மறைப்பான; பாதுகாப்பான இதே சந்தூக்கில்தான் சுமந்துச் செல்ல வேண்டும் என்றும் வஸிய்யத் செய்தார்கள்.


அவ்வாறே, ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் வஃபாத்தான பிறகு அஸ்மா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் அன்னார் சொன்ன இரண்டு வஸிய்யத்துகளையும் நிறைவேற்றினார்கள்.


இந்த சம்பவத்தை அறிவிக்கும் அப்துழ்ழாஹ் இப்னு அப்பாஸ் மற்றும் உம்மு ஜஃபர் ரழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் கூறுவதாவது: 


ஃபாத்திமா ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள்தான் இந்த மறைப்பான சந்தூக்கில் முதன் முதலில் சுமந்துச் செல்லப்பட்டவராவார். அவருக்குப் பிறகு ரஸுல் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களுள் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரழியழ்ழாஹு அன்ஹா அவர்கள் வஃபாத்தான போது அன்னாரும் இவ்வாறு மறைவான சந்தூக்கில் சுமந்து செல்லப்பட்டார்கள். 


[இஸ்திஆப் ஃபீ மஅரிஃபதில் அஸ்ஹாப் லி இமாமி இப்னு அப்துல் பர்ர்]


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

சிந்திக்கத் தூண்டும் சிறு நிகழ்வுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக