சனி, 23 ஜூலை, 2011

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி




ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)
மேலே 2:185ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மூன்று முக்கிய அம்சங்களைக் கூறுகின்றது.
1. ரமழானின் சிறப்பு.
2. குர்ஆனின் சிறப்பு
3. நோன்பு எனும் மார்க்கக் கடமை, என்பனவே அவையாகும்.
ரமழானின் சிறப்பு:
ஒரு வருடம் 12 மாதங்களைக் கொண்டதாகும் இம் மாதங்களிற் சில மார்க்க ரீதியில் சிலாகித்து நோக்கப்படுகின்றது. அவற்றில் ரமழான் மாதம் பிரதானமானதாகும். இம்மாதம் தீய ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். இதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் செய்யப்படும் இபாதத்துக்கள் ஏனைய காலத்தில் செய்யப்படுவதை விடப் பன்மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தருகின்றன. பாவமன்னிப்புக்கான நீண்ட வாய்ப்பு இம்மாதத்தில் வழங்கப்படுகின்றது. தவறு செய்பவர்கள் திருந்தி தமது வாழ்க்கைத் திசையை நல்லவழி நோக்கித் திருப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் கொண்டுள்ளது. இம்மாதத்தின் சிறப்புக்களுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?
அல்குர்ஆன் அருளப்பட்டது:
ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது. அதுவே ரமழானின் அனைத்துச் சிறப்புக்களுக்கும் அடிப்படையாகும். அது அருளப்பட்ட மாதம் சிறப்பானது. அது அருளப்பட்ட நேரம் மகத்தானதாகும்.
நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம். நிச்சயமாக (அதன்மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்” (44:03)
அந்த இரவு எவ்வளவு பாக்கியம் பெற்றது என்று கூறும்போது “1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்என குர்ஆன் (பார்க்க – 97:1-3) கூறுகின்றது.
மேற்படி சூரா அல்குர்ஆன் அருளப்பட்ட இரவு 1000 இரவுகளை விட அருள் வளம் பொதிந்தது என்று கூறுகின்றது.
அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்திற்கும், இரவுக்கும் ஏன் இத்தகைய பெருமை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மனிதர்களுக்கான வழிகாட்டல்:
அது சாதாரண நூல் அல்ல. சர்வ லோகங்களின் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டது. அதனைச் சுமந்து வந்தவரும் சாதாரணமானவரல்ல. மலக்குகளின் தலைவரும், சக்தியும் நம்பிக்கை நாணயமுமுடைய ஜப்ரீல்(அலை) அவர்கள் அதனை சுமந்து வந்தார்கள். அதனைப் பெற்று மக்களுக்குப் போதித்து நடைமுறைப்படுத்தியவரும் சாதாரண மானவரல்ல. படைப்பினங்களில் சிறந்த, இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் அதனை மனித குலத்துக்குப் போதித்தார்கள். இவ்வகையில் அதன் ஏற்றம் மட்டிட முடியாததாகும்.
இந்த வேதம் ஏனைய வேதங்களைப் போன்று சுருங்கிய வட்டத்தைக் கொண்டதல்ல. இது வாழும் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது. ஏற்கனவே உள்ள வேத மொழிகள் செத்துவிட்டன. ஆனால், அரபு வாழும் மொழியாகும். இருப்பினும் இது அரபியர்களுக்குரிய வழிகாட்டியல்ல. அகிலத்தாருக்குரிய வழிகாட்டியாகும்.
ஏனைய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்கு, மூஸாவின் சமூகத்தாருக்கு, ஆதின் கூட்டத் தாருக்கு என்று இருக்கலாம். இது முஹம்மதின் சமூகத்திற்கு அருளப்பட்ட வேதம் இல்லை. முழு மனித சமூகத்திற்கும் அருளப்பட்ட வேதமாகும்.
அதேவேளை, முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்க்கை காலத்துடன் முடிவு பெறுவதும் அல்ல. அது உலகம் உள்ள அளவு வாழும் மனிதர்களுக்கான வழிகாட்டி வேதமாகும். இந்த வகையில் அல்குர்ஆனின் வருகை என்பது சாதாரண சமாச்சாரம் அல்ல.
வழிகாட்டலின் முக்கியத்துவம்:
வழிகாட்டல் என்பது மனிதனுக்குப் பிரதானமான அம்சமாகும். இன்று பல இலட்சியங்களுடன் வாழும் மக்கள் உள்ளனர். இலட்சியங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் இயல்பும் இவர்களிடம் இருக்கின்றது. ஆனால், சரியான இலட்சியத்திற்கும் அந்த இலட்சியத்தை அடைவதற்கான சரியான அணுகுமுறைக்குமான வழி காட்டல்தான் இல்லாமலுள்ளது.
வறுமையில் வாடுபவனுக்குப் பொருள் தேட வழிகாட்டல் தேவை. பொருள் தேடியவனுக்கு அதனை முதலீடு செய்யவும் செலவழிக்கவும் வழிகாட்டல் தேவை. கற்கும் ஆர்வமும் அயராத முயற்சியுமுள்ள மாணவனுக்கு எதை, எப்படி கற்பது என்ற வழிகாட்டல் தேவை. கற்பிப்பதற்கு, உண்பதற்கு, உறங்குவதற்கு அனைத்துக்குமே வழிகாட்டல் அவசியமானதாகும்.
இவ்வகையில் அல்குர்ஆன் வழிகாட்டலாக அதுவும் அகில உலக மக்கள், முஸ்லிம், காபிர் என அனைவருக்குமான வழிகாட்டலாகத் திகழ்கின்றது.
ஏனைய வேதங்கள் போன்று இது குறிப்பிட்ட காலத்திற்கோ, இடத்திற்கோ, இனத்திற்கோ, மொழியினருக்கோ சுருங்கியதாக இல்லாத, பிரபஞ்சம் தழுவியதாக உலக அழிவுவரை தொடரக் கூடியதான முழு மனித சமூகத்திற்குமுரியதாக இருப்பதால் இந்த வேதம் அருளப்பட்ட மாதம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இன்று மனித குலம் நல்ல வழிகாட்டல் இல்லாது துடுப்பு இழந்த படகு போல் தத்தளிக்கின்றது. அறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல திட்டங்களை முன்வைக்கின்றனர். ஆனால், அவை மனிதனை அதள பாதாளத்தை நோக்கித் தள்ளி விடுபவையாகத் திகழ்கின்றன.
பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக ஆண் பெண் சரிநிகர் சமமாக ஒன்றுபோல் பேச, பழக இடமளிக்க வேண்டும் என்றனர். பாலியல் பலாத்காரத்தை நீக்க பெண்கள் மூடிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு திறந்த நிலைக்கு வரவேண்டும். அப்போது ஆண்கள் மத்தியில் இருக்கும் அறியும் ஆற்றல் குறைந்து பார்த்துப் பார்த்துப் பழகிப்பேய்விடும் என்றனர். இந்தக் கொள்கைளெல்லாம் ஐரோப்பிய உலகில் பாலியல் பலாத்காரத்தை வளர்க்கவே வகை செய்தது.
அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றனர். சீனாவில் வீட்டுக்கு ஒரு பிள்ளைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டன. இன்று சீனா பாரிய பெண்கள் பற்றாக்குறையையும் குடிமக்களிடம் தனித்து வாழ்ந்ததால் சகோதர பாசமோ குடும்ப பாசமோ அற்றுப்போய் குற்றச் செயல்களின் எண்ணிக்கை எகிறிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.
உலகம் நிம்மதியாக வாழ்வதற்கு அரசியல், ஒழுக்கவியல், பொருளியல், ஆன்மீகம் அனைத் துக்கும் நல்ல வழிகாட்டலை வேண்டி நின்கின்றது. அகில உலகம் நிம்மதியாக வாழத்தக்க வழிமுறையாக குர்ஆன் திகழ்கின்றது என்பது மகத்தான விடயமே. குர்ஆனுடன் சாதாரண பரிச்சயம் இருந்தாலே முட்டிவிட்டுக் குனியும் இந்த முட்டாள் தனமான போக்கிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.
யாருக்கு வழிகாட்டும்?:
அல்குர்ஆன் அனைத்து மக்களுக்குமான வழிகாட்டல்தான். காஃபிரான அரசு ஒன்று குர்ஆனின் சட்டப் பிரகாரம் ஆட்சி செய்தாலும் கூட அதன் பிரதிபலனான அமைதி, நீதி, நியாயம், அச்சமற்ற வாழ்வு போன்ற அருட்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் இது அனைவருக்குமான வழி காட்டல்தான். எனினும் அல்குர்ஆனிலிருந்து நேர்வழியைப் பெற்று சீர்வழியில் வாழும் பாக்கியம் கிடைக்க இறையச்ச சிந்தனை அவசியமாகும்.
இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.” (அல்குர்ஆன் 02:02)
இங்கு பயபக்தியுடையோருக்கே இது நேர்வழியைக் காட்டும் என்று கூறப்படுகின்றது. இதனை முரண்பாடாக நாம் கொள்ளக் கூடாது. நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் நமது கண்ணிலும் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி இருக்க வேண்டும். நன்றாகப் பார்வை உள்ள ஒருவர் இருளில் உள்ள பொருளைப் பார்க்க முடியாது. ஏனெனில், அங்கு பொருளில் ஒளி இல்லை. கண்பார்வை இழந்தவர் வெளிச்சத்தில் உள்ளதையும் பார்க்க முடியாது. ஏனெனில், அவரது கண்ணில் ஒளி இருக்காது. கண் பார்வை இழந்தவருக்கு அது இருளாகத்தான் தெரியும். இது சூரியனின் குறைபாடல்ல.
அல்குர்ஆன் சூரியனைப் போன்று ஒளியுடன் திகழ்கின்றது. தக்வா எனும் இறை யச்சம் பார்வையற்றவருக்கு அது வழிகாட்டாது என்பது குர்ஆனின் குறைபாடல்ல. அதைப் பார்ப்போரின் குறைபாடாகும்.
ஆனால், ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை குர்ஆனை ஓதும்போதே தனக்கு நேர்வழி கிடைப்பதற்காக ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடி தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். ஹிதாயத்தை அல்லாஹ்விடம் வேண்ட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர் கூட சத்தியத்தைத் தேடும் நோக்கத்தில் குர்ஆனை அணுகினால் அவர் நிச்சயம் அதை அங்கே அடைந்துகொள்வார்.
தெளிவான சான்றுகள்:
இந்த மறை வசனம் தொடர்ந்து ரமழானைப் பற்றி கூறாமல் குர்ஆன் பற்றியே குறிப்பாகப் பேசுகின்றது. அதில் ரமழானில் அருளப்பட்ட அல் குர்ஆன் எனும் மனிதகுல வழிகாட்டி தெளிவான சான்றுகளைக் கொண்டது என்று வர்ணிக்கப்படுகின்றது.
குர்ஆன் வெறும் இறைவேதம் அல்ல. அது இறைவேதம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அதிலேயே தெளிவான சான்றுகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. 1500 வருடங்களுக்கு முன்னர் மனித கற்பனையில் கூட உதித்திருக்க முடியாத அறிவியல் உண்மைகளைக் குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது. தொள்பொருள் ஆய்வுகள் இன்று உறுதிப்படுத்தும் எத்தனையோ வரலாற்றுச் சான்றுகளை அது தருகின்றது. இவ்வகையில் அது தெளிவான சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது.
பிரித்தறிவிப்பது:
அடுத்து இந்த வேதம் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக் கூடியது. ஏனைய மதங்கள் போல் ஒரு கொள்கையை மட்டும் முன்வைத்துவிட்டு இது மௌனியாக இருக்காது. இறைவன் ஒருவன் என்று கூறுவதோடு ஈஸாவோ, வேறு இறைத் தூதர்களோ, மலக்குகளோ இறைமையைப் பெறமுடியாது என்று தெளிவாக அளந்து கூறும்.
நல்லோர்களின் அந்தஸ்த்தைக் கூறும் போதும் நடுநிலை தவறாது அவர்கள் மனித தன்மைக்கு மேல் உயர்த்தப்படமாட்டார். இவ்வாறு எல்லா வகையிலும் சத்தியமும் அசத்தியமும் அல்குர்ஆனால் தெளிவாகக் கூறுபோட்டுக் காட்டப்படும்.
இதனால்தான் படித்தவர்களெல்லாம் கல்லையும், மண்ணையும் வணங்கிக் கொண் டிருக்கும் போது சாதாரண ஒரு முஸ்லிம் கல்லைக் கல்லாகவும், மண்ணை மண்ணாகவும் பார்க்கின்றார். மண்ணால் செய்த சிலை எந்த சக்தி யையும் பெற்றிடாது; வழங்கிடாது என்று அதனைப் பிரித்து அறிந்து கொள்கின்றார். மாட்டை மாதா வாகப் பார்க்காது மாடாகப் பார்க்கின்றான். மனிதனை அவதாரமாகப் பார்க்காது மனிதப் பிறவியாகவே பார்க்கின்றான்.
நோன்பு பிடியுங்கள்:
இத்தகைய அருள் பொதிந்த அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை எவர் அடை கின்றாரோ அவர் அல்லாஹ் அருள்மறையை வழங்கியதற்கு நன்றி செலுத்து முகமாக அம்மாதம் முழுவதும் நோன்பிருக்கட்டும் என்று இம்மறை வசனம் கூறுகின்றது.
நோன்பு முடிந்ததும் நாம் பெருநாள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அந்நாளில் அல்லாஹ்வுக்காக தக்பீர் செய்து எமது மகிழ்ச் சியை வெளிப்படுத்துகின்றோம். இது கூட அல்குர்ஆன் அருளப்பட்டதற்கான நன்றிக்காகவே என்பதை அனேகர் அறிவதில்லை. இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில்,
உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதையுமே (இதன் மூலம் அல்லாஹ் நாடுகின்றான்)” (2:185)
எனவேரமழான் என்றாலும் நோன்பு என்றாலும் அல்குர்ஆனின் மகத்துவத்தை உணர்த்துபவை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு அல்குர்ஆனுக்கு உரிய உயரிய அந்தஸ்தினை வழங்க முன்வர வேண்டும்.
நோன்பு தக்வாவுக்கான வழி:
நோன்பு ஏன் நோற்கப்பட வேண்டும் என்பதுபற்றித் திருமறை கூறும்போது,
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183)
என்று கூறுகின்றது. நோன்பின் நோக்கம் இறையச்சமே என்று மேற்படி வசனம் கூறுகின்றது.
நோன்பு என்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் குறித்த நேரம் உணவையும், பானத்தையும் உடலுறவையும் தவிர்த்து வைத்து அல்லாஹ் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். உணவையும் தவிர்ப்பேன், உடல் உறவையும் தவிர்ப்பேன் என்று உறுதியெடுக்கும் பயிற்சியே நோன்பாகும்.
இந்தப் பயிற்சி அல்லாஹ் ஏவியவைகளை எடுத்து நடக்கவும் தடுத்தவைகளைத் தவிர்த்துக் கொள்வதற்குமான பக்குவத்தை வளர்க்கும்.
பொறுமையை, நல்ல பண்பாட்டை வீணான காரியங்களில் ஈடுபடாத பக்குவத்தை நோன்பு வழங்க வேண்டும் என்பது நோன்பின் எதிர்பார்ப்பாகும்.
நோன்பும் குர்ஆனும்:
ஹதீஸ்கள் நோன்பையும், குர்ஆனையும் பல கட்டங்களில் இனைத்துப் பேசுகின்றன. நோன்பும் குர்ஆனும் மறுமையில் அவற்றைப் பேணிய அடியார்களுக்காகப் பரிந்து பேசும் என ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் தான் நோன்பும் கடமையாக்கப் பட்டுள்ளது.
இதேவேளை, ஆரம்பத்தில் அல்குர்ஆன் தக்வாவுடையவருக்குத்தான் நேர்வழியாக அமையும் என்பதை அவதானித்தோம். இங்கே நோன்பு, தக்வா உணர்வு ஏற்படுவதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம்.
நோன்பின் நோக்கத்தைச் சரியாக அடையக்கூடிய வகையில் கட்டுப்பாடாக நோன்பு நோற்கப்பட்டால் அவர் தக்வாவைப் பெறலாம். தக்வாவைப் பெற்றால் அல்குர்ஆன் அவருக்கு நேர்வழியைக் காட்டும். அந்த நேர்வழியை அல்லாஹ் வழங்கியதற்காகத்தான் பெருநாளில் தக்பீர் கூறுகின்றோம்.
சிந்திக்க வேண்டியது:
சிலர் நோன்பு காலத்தில் குர்ஆனை ஓதுவர். அத்துடன் அதை மூடிவைத்து விடுவர். தக்வாவுடையவருக்கு குர்ஆன் நேர்வழி காட்டும் என்றால் அவர் அதில் நேர்வழியைத் தேட வேண்டும். குர்ஆனை ஓதாமல் அது என்ன கூறுகின்றது என்பதை அறியவோ, ஆராயவோ முயலாமல் அல்லது அறிந்தவர் கூறுவதைக் கேட்காமல் இருந்துவிட்டு குர்ஆன் நேர்வழி காட்டும் எனக் கருதமுடியாது. எனவே, தக்வாவுடைய உணர்வுடன் சத்தியத் தாகத்துடன் அல்குர்ஆனை உங்கள் கரங்களில் ஏந்துங்கள். உள்ளங்களில் ஒளியைப் பெறுவீர்கள்.

ரமழானும் தர்மமும் மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி




நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும் போதும் மக்களுக்கு தர்மங்கள் ஸதகாக்கள் செய்யும்போதும் ஹலாலான சமம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழானில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.
அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்பு வதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.
நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).
மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.
பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.
ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).
மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனையை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீகரிக்கிறான்.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215).
ரமழான் தரமம் செய்வதற்கான காலம். உண்மையான ஏழை எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற காலம். நபிகளார் (ஸல்) அவர்கள் ரமழானில் வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார்கள். எனவே நன்மைகளை பயிர்ச்சைகை செய்யக்கூடியதாக ரமழானை பயன்படுத்துவோம். தன்மானம் காத்து கையேந்தாது வாழும் உண்மையான ஏழைகளை அடையாளம் கண்டு தர்மம் செய்வோம். அந்த தர்மத்தை எமது குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போம். வீடுவீடாக வீதிவீதியாக சுற்றித்திரியும் மிஸ்கீன்களை பற்றியும் அக்கறை செலுத்துவோம்.
ரமழான் காலங்களில் தர்மத்தின் சிறப்பையும் செயற்பாடுகளையும் அவதானித்து பல பிச்சைக்கரர்கள் வெளியே வருகிறார்கள். உண்மையில் இவர்கள் பிச்சைக்காரர்களா? அல்லது பிச்சைக்காரர்களாக வேடம் போடுகிறார்களா? ரமழானுக்கு முன்பு இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?இந்தளவு தொகையினர் பிச்சைக்காரர்களாக மாறியது எப்படி? என்பதிலும் பரிசீலனை செய்வோம்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் வியாபாரங்கள் செய்யும் இடங்களிலும் அதிகமான பிச்சைக்காரர்கள் காலையிலும் மாலையிலும நடமாடுகிறார்கள். இது பலருக்கு தொல்லையாகவும் மாற்று மத நண்பர்களுக்கு பிரச்சனையாகவும் உருவாகிறது.இஸலாத்தைபற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தப்பு தப்பாகவே விமர்சனம் செய்கிறார்கள்.நாம் அறிந்த வகையில் முஸ்லிமல்லாத நண்பர்களும் முஸ்லிம்கள் போல் பாவனை செய்து பிச்சைகாரர்களாக வலம் வருகிறாரகள். சிலர் நகர் பகுதிக்கு அண்மையில் -சேரிவாழ் பகுதிகளில்-வாடகைக்கு வீடு எடுத்து பிச்சை எடுக்கிறார்கள். பிச்சகைகாரர்கள் இலட்சாதிபதிகளாக ஆகுவதற்கும் போட்டிபோடுவதுண்டு.
உண்மையான மிஸ்கீன்களையும் ஏழை எளியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பிரச்சனைகளை தீரக்க ஒவ்வொரு மஹல்லாவிலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பது பற்றி சிந்தித்தால் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது கடினமாக இருக்கர்து.
தர்மங்களும் ஜகாத்களும் பயனுடையதாக ஆகுவதற்கு ஒவ்வொருவரும் சிந்திப்போம்.

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு! மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். நோன்புஎன்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
மேற்படி வசனம், “நோன்புஎன்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்குநோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2-
கோபம்.
-3-
தவறான உணவு முறை.
-4-
தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் நான் நோன்பாளி!எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் பேசும் மிருகம்என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் பொய்என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும்,ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. பிச்சைக்காரர்கள்என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்புஎன்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்புநடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ஃபித்றாவின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால்ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
ரமழான் மாதம்என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!

சனி, 16 ஜூலை, 2011

ஆபத்தை விளைவிக்கும் மரங்களை வெட்டுங்கள்!








உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே.
ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'தான் அது.
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன.
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லைஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!