மனமொத்த தம்பதியாக வாழ்ந்து வந்த அந்த கணவன் மனைவிக்கு இடையே அன்று திடீரென மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் கோபமாக ஏதேதோ திட்ட ஆரம்பித்தனர். இறுதியில் அவன் சொன்னான்; "சத்தியமாக இனி உன்னுடன் பேசமாட்டேன் நீயாக என்னிடம் பேசம் வரை நான் அப்படிப் பேசினால் நீ தலாக் ஆகிவிட்டாய்" என்று.
இதைக் கேட்ட அவள் சொன்னாள் "உனக்கு மட்டும் தான் சத்தியம் பண்ண முடியுமோ? நானும் சொல்கிறேன் சத்தியமாக உம்மிடம் பேச மாட்டேன் நீயாக என்னிடம் பேசும் வரை இருவரும் இவ்வாறு பேசி முடித்து ஆளுக்கு ஒரு மூலையில் போய் ஆவேசமாக நின்றனர். சற்று நேரம் கழிந்தது இருவருக்கும் அது தணிந்தது. ஒருவரையொருவர் நோக்கி நெருங்கிவந்தனர். பேசலாம் என்று நினைத்தால்.. சத்தியம் பண்ணியது நினைவுக்கு வந்தது. ஆகா. சத்தியமாகப் பேசமாட்டேன் என்று சொல்லி விட்டோமே. எப்படிப் பேசுவது. பேசினால் அவள் தலாக் ஆகிவிடுவதாக வும் சொல்லி விட்டோமே என்ன செய்வது? என கணவன் யோசித்தான் அவளும் தான் ஆசையுடன் நோக்கினாள். ஆனால் சத்தியம் செய்த ஞாபகம் வந்தவுடன் அவளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
இப்படியே இருவரும் ஒரு நாள்... இரு நாள் என நாட்களை நகர்த்தினார்கள். ஊகூம். இனிப் பேசாமல் இருக்க முடியாது என்ற இறுதி கட்டம் வந்தபோது அங்கிருந்த இமாம்களை அணுகினார்.
இருவரின் சத்தியத்தையும் அறிந்த மார்க்க விற்பன்னர்கள் முடிவாகச் சொன்ன தீர்ப்பு. “இருவரும் பேசக் கூடாது. பேசினால் சத்தியமும் முறிந்து விடும். தலாக்கும் நிகழ்ந்து விடும்" இவ்வாறான தீர்ப்பை எங்கும் எல்லோரும் கூற இறுதியாக இமாமுல் அஃளிம் அபுஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் விஷயம் வந்தது. இருவரின் சத்தியத்தையும் விபரமாகக் கேள்விப்பட்ட இமாமவர்கள் உடனடியாக -உறுதியாகச் சொன்னார்கள்.
"இதில் எந்த சிக்கலுமே இல்லையே சத்தியமும் முறியாது. தலாக்கும் நிகழாது. கணவன் முதலில் பேசட்டும். இருவரும் சாதாரணமாகப் பேசிப்பழக வேண்டியது தான் இமாம் இப்படிச் சொன்னது பற்றி அறிந்த மற்ற அறிஞர்கள் இமாமவர்களின் வீட்டைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் ஆதரவாளர்களும் ஏராளமாகத் திரண்டு விட அங்கு பெரிய பரபரப்புத்தான்.
"எவ்வாறு இந்தத் தீர்ப்பை நீங்கள் சொல்லலாம்? நீயாகப் பேசும் வரை சத்திய மாகப் பேசமாட்டேன் அப்படி நான் பேசினால் நீ தலாக் என்று அவன் சொல்லியிருக் கிறான் அவளும் அப்படியே செய்திருக்கிறாள் அப்படியிருக்கும் போது சத்தியமும் தலாக்கும் ஒன்றுமே நிகழாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? என்ன ஆதாரம்?" என்று ஆளாளுக்குக் கேள்வி கேட்க.
இமாமவர்கள் அமைதியாக "அந்தக் கணவன் என்ன சொன்னான் நீயாகப் பேசும் வரை என்று தானே? என்று கேட்கிறார்கள். "ஆமாம்" என சொல்ல அவள் என்ன சொன்னாள்? என மீண்டும் வினவ. அவளும் அப்படியே சொன்னாள் என அவர்கள் கூற "அதாவது அவன் தன் மனைவியை நோக்கி நீயாக என்னிடம் பேசும்வரை என்று சொன்னவுடன் அவள் அவனிடம் பேசிவிட்டாள் தானே? அப்படியானால் அவன் சொன்னது நிறைவேறிவிட்டது. அவளாகப் பேசிவிட்டாள் இல்லையா? பிறகெப்படி சத்தியம் முறியும்? தலாக் நிகழும்?" என்று இமாம் கேட்க எல்லோரும் ஓடிவந்து இமாமைக்கட்டியணைத்து முத்தமிட்டு இப்படிப் பட்ட மூளை தங்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் தந்திருக்கிறான் என்று கலைந்து சென்றார்கள்.
மௌலானா S. லியாகத் அலி மன்பஈ..
ஆகஸ்ட் 2009 மனாருல் ஹுதா இதழிலிருந்து.
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக