வியாழன், 12 நவம்பர், 2026

மன்னிப்போம்! மன்னிப்பை பெறுவோம்!!

 


மன்னிப்போம்! மன்னிப்பை பெறுவோம்!!


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، أَمَّا بَعْدُ 

 وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ


لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ


🔴இன்று நம் குடும்பங்களுக்குள்ளும், உடன்பிறந்தவர்களிடையேயும், ஏன் ஒரே பள்ளிவாசலில் தோளோடு தோள் நின்று தொழக்கூடிய ஜமாஅத்தார்களிடையேயும் கூட மிகச் சிறிய காரணங்களுக்காகப் பகைமை ஏற்படுகிறது.


🔴"அவன் முதலில் பேசட்டும், நான் ஏன் இறங்கிப் போக வேண்டும்?" என்ற போலி கௌரவத்தால் (Ego) பல வருடங்களாகப் பேசாமல் இருக்கும் அவல நிலை அதிகரித்துள்ளது. இது நம் உள்ளத்தின் நிம்மதியைக் கெடுப்பதோடு, நாம் செய்யும் வணக்க வழிபாடுகளின் நன்மைகளையும் தடுத்து விடுகிறது.


🔴மனிதர்களிடம் பகைமை வைத்துக்கொண்டு நாம் எவ்வளவுதான் தொழுதாலும், நோன்பு வைத்தாலும் அதனால் ஏற்படும் இழப்பு மிகப்பெரியது .


🔴கோபப்படும்போது பழிவாங்குவது மனித இயல்பு; ஆனால் பழிவாங்கக்கூடிய சக்தி கையில் இருந்தும், அல்லாஹ்வுக்காக மன்னிப்பதுதான் இறைநம்பிக்கையாளனின் (முஃமினின்) அடையாளம்.

🔴மன்னிப்பு என்பது கோழைகளின் ஆயுதமல்ல; தன் கோபத்தையும் ஈகோவையும் வென்ற மாவீரர்களின் அடையாளம்.

🔴பகைமை என்பது நெருப்பைப் போன்றது; அதை அடுத்தவர் மீது வீசுவதற்கு முன்பாக, அதைக் கையில் பிடித்திருக்கும் நம்மைத்தான் அது முதலில் சுட்டெரிக்கும்.

🔴"நான் ஏன் முதலில் பேச வேண்டும்?" என்பது ஷைத்தானின் குரல்; "அல்லாஹ்வுக்காக நான் இறங்கிப் போகிறேன்" என்பது ஈமானின் குரல்.

🔴பிறரை மன்னிப்பதால் நாம் தாழ்ந்து போவதில்லை; மாறாக, அல்லாஹ்வின் பார்வையில் நம் கண்ணியம் பல மடங்கு உயர்கிறது.

🔴நம் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்; ஆனால், சக மனிதனின் சின்னத் தவறைக் கூட மன்னிக்க நாம் தயாராக இல்லை!

🔴பள்ளிவாசலில் வரிசைகள் நேராக இருந்தால் மட்டும் போதாது; தோளோடு தோள் நிற்கும் சகோதரர்களின் உள்ளங்களும் நேராக இருக்க வேண்டும்.

🔴இறந்த பிறகு நம் ஜனாஸாவைப் பார்த்து அழுவதை விட, உயிரோடு இருக்கும்போதே நம் மனக்கசப்புகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

🔴மனிதர்களிடம் மன்னிப்புக் கேட்பதற்குத் தயங்கும் நம் ஈகோ, நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் தலைகுனிந்து நிற்க வைத்துவிடும்.

🔴உள்ளத்தில் பகைமையை வைத்துக்கொண்டு நாம் செய்யும் அமல்கள், ஓட்டைப் பானையில் ஊற்றப்படும் தண்ணீரைப் போல வீணாகிவிடும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:-

وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

"அவர்கள் கோபத்தை மென்று விழுங்குபவர்களாகவும், மனிதர்களை மன்னிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறு நன்மை செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்." (அல்குர்ஆன்)


இந்த வசனத்தில் அல்லாஹ் மூன்று படிகளைச் சொல்கிறான்:

முதல் படி — கோபத்தை மென்று விழுங்குதல்: கோபம் வரும்போது கத்தாமல், கெட்ட வார்த்தைகள் பேசாமல், கை நீட்டாமல், அந்தக் கோபத்தை அப்படியே உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொள்வது.

இரண்டாம் படி — மனிதர்களை மன்னித்தல் : கோபத்தை அடக்கியதோடு நின்றுவிடாமல், மனதில் பகைமையை வளர்க்காமல், தவறு செய்தவரை மனதார மன்னித்து விடுவது.

மூன்றாம் படி — நன்மை செய்தல் : யார் நமக்குத் தீங்கு செய்தார்களோ, அவர்களுக்குப் பதிலுக்கு நன்மை செய்வது!

 * இப்படி நடந்து கொள்பவர்களுக்கு அல்லாஹ் தரும் பரிசு என்ன தெரியுமா? "வல்லாஹு யுஹிப்புல் முஹ்ஸினீன்" — "அல்லாஹ் அவர்களை நேசிக்கிறான்!"

இந்த உலகத்தில் ஒரு மந்திரியோ, ஒரு பெரிய செல்வந்தரோ நம்மை நேசிக்கிறார் என்றால் நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்? ஆனால், ஏழு வானங்களையும் படைத்த ரப்புல் ஆலமீன்—அல்லாஹ்—நம்மை நேசிக்கிறான் என்றால், அதைவிடப் பெரிய பாக்கியம் இந்த உலகத்திலும் மறுமையிலும் வேறு என்ன இருக்க முடியும்?


ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களும், அடிமைப் பெண்ணின் நாவன்மையும்


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் அலீ பின் ஹுசைன் ஜைனுல் ஆபிதீன் - ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வீட்டிற்கு முக்கியமான விருந்தினர்கள் பலர் வந்திருந்தார்கள். விருந்தினர்கள் அனைவரும் உணவு அருந்துவதற்காக வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள்; அவர்களோடு இமாம் அவர்களும் புத்தாடை அணிந்து அமர்ந்திருக்கிறார்கள்.


அப்போது அந்த வீட்டின் பணியாள்—ஒரு அடிமைப் பெண்—அடுப்பிலிருந்து இறக்கிய கொதிக்கும் சூடான இறைச்சிக் குழம்பு (சால்னா) நிரம்பிய பெரிய பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, விருந்தினர்களுக்குப் பரிமாறுவதற்காக நடந்து வருகிறார்.


இமாம் அவர்களுக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணின் கால் தடுமாறியது! கையிலிருந்த பாத்திரம் நழுவியது! அடுத்த நொடி—அந்தக் கொதிக்கும் சூடான சால்னா அப்படியே ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் உடலிலும், புத்தாடையிலும் கொட்டிவிட்டது!


சற்று கற்பனை செய்து பாருங்கள்! வீட்டில் முக்கியமான விருந்தினர்கள் அமர்ந்திருக்கிறார்கள்; எல்லோருக்கும் முன்னால் புத்தாடை முழுக்க அழுக்காகிவிட்டது; அதுமட்டுமல்ல, கொதிக்கும் குழம்பு கொட்டியதால் தலை மற்றும் உடலில் தாங்க முடியாத எரிச்சலும் வலியும்!


இன்று நம் வீடுகளில் இப்படி நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? விருந்தினர்கள் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் சத்தம் ஊரையே கூட்டிவிடும்; கை நீளும், கெட்ட வார்த்தைகள் வந்து விழும்!


ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கும் மனித இயல்பின்படி கடுமையான கோபம் வந்தது. முகமெல்லாம் சிவக்க, கோபத்தோடு அந்தப் பணியாளை நிமிர்ந்து பார்த்தார்கள்.


அந்தப் பெண் நடுங்கிப் போனார். தன்னைத் தண்டித்து விடுவார்களோ என்று அஞ்சிய அந்தப் பெண், சற்றும் தாமதிக்காமல் தன் எஜமானரைப் பார்த்து அல்லாஹ்வின் வசனத்தை ஓதிக்காட்டினார்:

": يَا مَوْلَايَ، وَالْكَاظِمِينَ الْغَيْظَ

"என் எஜமானரே! அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: இறையச்சமுடையவர்கள் யார் என்றால், அவர்கள் கோபத்தை மென்று விழுங்குபவர்கள்..."


அல்லாஹ்வின் வார்த்தை காதில் விழுந்த அடுத்த நொடி, ஸைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கோபம் அப்படியே பனியாக உருகியது! தன் முகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து சொன்னார்கள்:


قَدْ كَظَمْتُ غَيْظِي

"நான் என் கோபத்தை மென்று விழுங்கிவிட்டேன்!"


இப்போது அந்தப் பெண் அடுத்த வரியை ஓதினார்:

وَالْعَافِينَ عَنِ النَّاسِ

"...மற்றும் மனிதர்களின் தவறுகளை மன்னிப்பவர்கள்..."

உடனே இமாம் அவர்கள் புன்னகையோடு சொன்னார்கள்:

عَفَا اللَّهُ عَنْكِ

"அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக! நானும் உன்னை மனதார மன்னித்துவிட்டேன்!"

அந்தப் பெண் விடவில்லை; அந்த வசனத்தின் இறுதிப் பகுதியையும் ஓதினார்:

وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

"...இவ்வாறு நன்மை செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்!"

அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையில், ஸைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா ?


அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார்கள்:


اذْهَبِي فَأَنْتِ حُرَّةٌ لِوَجْهِ اللَّهِ

"நீ செல்! உயர்ந்தோன் அல்லாஹ்வின் திருப்திக்காக உன்னை அடிமைத்தனத்திலிருந்தே நான் விடுதலை செய்துவிட்டேன்!"

அல்லாஹு அக்பர்! சகோதரர்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள்! தண்டனை கிடைக்க வேண்டிய இடத்தில் மன்னிப்பு கிடைத்தது; மன்னிப்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல், காலமெல்லாம் அடிமையாக இருந்த அந்தப் பெண்ணுக்குச் சுதந்திரமும் கிடைத்தது!


குர்ஆன் வசனத்தைக் கேட்டதும் ஈகோ பார்க்காமல் இறங்கிய இமாம் அவர்களின் உள்ளம் அப்படிப்பட்டது!

இன்று நம்மிடம் யாராவது வந்து, "சகோதரரே, அல்லாஹ்வுக்காக அவரை மன்னித்து விடுங்கள், குர்ஆன் அப்படித்தான் சொல்கிறது" என்று சொன்னால், நாம் என்ன சொல்கிறோம்? "நீங்கள் சும்மா இருங்கள், எனக்கு நடந்த வலி எனக்குத்தான் தெரியும்" என்று அல்லாஹ்வின் வசனத்தையே ஒதுக்கித் தள்ளுகிறோமே! நம் உள்ளம் எங்கே இருக்கிறது, ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் உள்ளம் எங்கே இருக்கிறது என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.


குர்ஆன் வசனத்தைக் கேட்டதும் தன் கோபத்தை உடனே அடக்கியதோடு மட்டுமல்லாமல், மன்னித்து, அந்தப் பெண்ணை விடுதலையும் செய்தார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் ஒரு முஃமின் எவ்வாறு அடிபணிய வேண்டும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு!


"மன்னிப்பது பலவீனம் அல்ல; அது இறைவனிடம் கண்ணியத்தையும் பாவமன்னிப்பையும் பெற்றுத் தரும் உயர்ந்த பண்பு" 


இன்று நம்மிடம் யாராவது வந்து, "அவர் உங்களைப் பற்றித் தவறாகப் பேசினார், ஆனால் நீங்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் மன்னித்து விடுங்கள்" என்று சொன்னால், உடனே நம் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது.

"நான் மன்னித்து விட்டால், என்னைக் கோழை என்று நினைத்து விடுவார்களே! என் கௌரவம் குறைந்து விடுமே! ஊருக்கு முன்னால் நான் தலைகுனிந்து நிற்பேனே!" என்று நாம் அஞ்சுகிறோம்.


அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:-

 لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ ۖ يَغْفِرُ اللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ


"இன்று உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! அவன் கருணையாளர்களுக்கெல்லாம் மிக்க கருணையாளன்."

 

 பகைமை கொண்டவர்களின் அமல்கள் நிறுத்தி வைக்கப்படுதல்:

تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلاَّ رَجُلاً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- 

"ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு அடியாருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது; ஆனால், தமக்கும் தம் சகோதரருக்கும் இடையே பகைமை கொண்டிருப்பவரைத் தவிர! இவர்கள் இருவரும் சமாதானமாகும் வரை இவர்களை விட்டுவையுங்கள் என்று (வானவர்களிடம்) கூறப்படும்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் )

நாம் ஒவ்வொருவரும் எதற்காகத் தொழுகிறோம்? எதற்காக நோன்பு வைக்கிறோம்? எதற்காக இரவு விழித்து தஹஜ்ஜுத் தொழுகிறோம்? நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்று சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே!

ஆனால், நம் உள்ளத்தில் ஒரு சகோதரனைப் பற்றிய பகைமையும் வஞ்சமும் இருக்கும்போது, நம் வணக்க வழிபாடுகளின் நிலை என்னவாகிறது என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக எச்சரிக்கிறார்கள்:

திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் மனிதர்களின் அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. அந்த நாட்களில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, இணைவைப்பு (ஷிர்க்) இல்லாத அனைவருக்கும் அல்லாஹ் பொதுமன்னிப்பு வழங்குகிறான்.

எந்த இரண்டு சகோதரர்களுக்கு இடையே பகைமை இருக்கிறதோ, அவர்களின் அமல்களின் கோப்பை அல்லாஹ் நிறுத்தி வைக்கச் சொல்கிறான். 

"أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا "இவர்கள் இருவரும் சமாதானமாகும் வரை இவர்களை விட்டுவையுங்கள்" என்று வானவர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

ஐந்து வேளை தொழுகை, ரமலான் நோன்பு, குர்ஆன் திலாவத், ஸதகா என நாம் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்த அத்தனை நன்மைகளும், இந்த ஒரு பகைமையால் 'பெண்டிங்' (Pending) நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

நம் மரணம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. ஒருவேளை நம் அமல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த நிலையிலேயே நமக்கு மரணம் வந்துவிட்டால், மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் எதைக் கொண்டு போய் நிறுத்துவோம்? ஒரு மனிதன் மீதுள்ள கோபத்திற்காக, நம் வாழ்நாள் அமல்களைப் பணயம் வைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!

சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா? 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண்மணி அதிகமாக இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) தொழுகிறார், அதிகமாகப் பகலில் நோன்பு வைக்கிறார், அதிகமாகத் தர்மம் செய்கிறார்; ஆனால், தன் நாவால் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டும் பகைமை வளர்த்துக் கொண்டும் இருக்கிறார்" என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

لَا خَيْرَ فِيهَا، هِيَ مِنْ أَهْلِ النَّارِ

"அவளிடம் எந்த நன்மையும் இல்லை; அவள் நரகவாசிகளில் உள்ளவள்!" என்று கூறினார்கள்.நூல்: அல்-அதபுல் முஃப்ரத் , முஸ்னத் அஹ்மத் 

அந்தப் பெண்மணி தஹஜ்ஜுத் தொழுதார், நோன்பு வைத்தார், தர்மம் செய்தார். ஆனால், சக மனிதர்களோடு பகைமையோடும் கசப்போடும் நடந்து கொண்டதால், அவளின் அத்தனை வணக்கங்களும் அவளைக் காப்பாற்றவில்லை!

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களும், அண்டை வீட்டுக்காரரும்

இமாம் அபூஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வீட்டிற்கு அருகில் ஒரு இளைஞர் வசித்து வந்தார். அவர் தினமும் இரவு மது அருந்திவிட்டு, இமாம் அவர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பாட்டுப் பாடித் தொந்தரவு செய்து கொண்டே இருப்பார். இமாம் அவர்கள் எவ்விதப் பகைமையோ கோபமோ கொள்ளாமல் பொறுமையாக இரவுத் தொழுகையில் ஈடுபடுவார்கள்.

ஒருநாள் இரவு அந்த இளைஞரின் சத்தம் கேட்கவில்லை. விசாரித்தபோது, காவலர்கள் அவரைச் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்று தெரிந்தது. உடனே இமாம் அபூஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மறுநாள் காலையில் அந்நகரத்தின் ஆளுநரிடம் (கவர்னரிடம்) நேரடியாகச் சென்று, தன் அண்டை வீட்டுக்காரரை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்தார்கள். இமாம் அவர்களின் மரியாதைக்காக ஆளுநர் அந்த இளைஞரை விடுதலை செய்தார்.

சிறையிலிருந்து வெளியே வந்த அந்த இளைஞரிடம் இமாம் அவர்கள் சொன்னார்கள்: "நாம் உன்னைக் கைவிட்டு விட்டோம் என்று நினைத்தாயா?" தன் மீது பகைமை பாராட்டாமல் தன்னைக் காப்பாற்றிய இமாம் அவர்களின் பெருந்தன்மையைக் கண்டு அந்த இளைஞர் கதறி அழுது, மதுப் பழக்கத்தை விட்டுவிட்டு இமாம் அவர்களின் மாணவராக மாறினார்! நூல் ஆதாரம்: தாரீக் பக்தாத் (கதீப் அல்-பக்தாதி) 

மனிதர்கள் என்ற அடிப்படையில் கோபம் வருவது இயல்புதான். அதனால்தான் இஸ்லாம் மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கோபம் தணிவதற்காக மூன்று நாட்கள் அவகாசம் தருகிறது. ஆனால், அந்த எல்லையைத் தாண்டினால் அது மிகப்பெரிய பாவமாக மாறிவிடுகிறது.

மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராம்:


لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தன் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஆகுமானதல்ல. இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது ஒருவர் இப்புறமும் மற்றவர் அப்புறமுமாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். இவ்விருவரில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே சிறந்தவர்."(நூல்: ஸஹீஹ் புகாரி )

ஒரு சகோதரருடன் மனக்கசப்பு ஏற்பட்டால், அதிகபட்சம் மூன்று இரவுகள் வரை பேசாமல் இருக்க மார்க்கம் சலுகை தருகிறது. ஏனெனில், அதற்குள் கோபம் தணிந்துவிடும். ஆனால் நான்காவது நாளும் பேசாமல் இருந்தால், நாம் ஹராமான காரியத்தில் விழுந்துவிட்டோம் என்று அர்த்தம்.

இன்று மூன்று நாட்கள் அல்ல மூன்று வருடங்கள், பத்து வருடங்கள், ஏன்—மரணித்து ஜனாஸாவாகப் படுக்கும் வரை கூடப் பேசாமல் இருக்கும் குடும்பங்களை நாம் பார்க்கிறோம்!

ஹஸன் (ரலி) அவர்களும், முஹம்மத் பின் அல்-ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களும் 

جَرَى بَيْنَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ وَبَيْنَ أَخِيهِ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ كَلَامٌ فَتَهَاجَرَا، فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ كَتَبَ إِلَيْهِ مُحَمَّدُ بْنُ الْحَنَفِيَّةِ:

«بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ، أَمَّا بَعْدُ: فَإِنَّ اللَّهَ قَدْ فَضَّلَكَ عَلَيَّ، وَجَعَلَ لَكَ مِنَ الشَّرَفِ مَا لَيْسَ لِي، وَأَنْتَ أَحَقُّ بِالْفَضْلِ مِنِّي، فَابْدَأْنِي بِالسَّلَامِ حَتَّى تَكُونَ أَفْضَلَ مِنِّي عِنْدَ اللَّهِ» فَلَمَّا قَرَأَ الْحَسَنُ الْكِتَابَ قَامَ إِلَيْهِ وَجَاءَهُ فَبَدَأَهُ بِالسَّلَامِ وَعَانَقَهُ.

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன்களான இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், அவர்களின் சகோதரர் முஹம்மத் பின் அல்-ஹனஃபிய்யா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கும் இடையே ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்தார்கள். மூன்று நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தம்பி முஹம்மத் பின் அல்-ஹனஃபிய்யா அவர்கள் அண்ணன் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்:

"அன்புள்ள சகோதரரே! அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக! நம் தந்தையார் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எனக்குப் பதிலாக உங்களுக்குத்தான் முதலில் அருள்புரிந்தார்கள்; உங்களுக்குத்தான் சிறப்புகளை வழங்கினார்கள். எனவே, நீங்கள்தான் வயதிலும் அந்தஸ்திலும் மூத்தவர். நீங்கள்தான் முதலில் வந்து என்னிடம் சமாதானம் பேச வேண்டும்!"

இந்தக் கடிதத்தைப் படித்த உடனேயே, இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "நான் ஏன் முதலில் போக வேண்டும்?" என்று ஈகோ பார்க்கவில்லை! உடனே எழுந்து தன் தம்பியின் வீட்டிற்கு நேரில் சென்று, "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று முதலில் ஸலாம் சொல்லி, தம்பியை ஆரத்தழுவி சமாதானம் ஆனார்கள்!

நூல் ஆதாரம்: அல்-பிதாயா வந்-நிஹாயா (இப்னு கஸீர்) 

நபிகளாரின் பேரர் இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "நான் மூத்தவன், அவன் வந்து பேசட்டும்" என்று காத்திருக்கவில்லை; நபிகளாரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு "முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர்" என்ற அந்தஸ்தைப் பெறத் தானே இறங்கிச் சென்றார்கள்!

"இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது ஒருவர் இப்புறமும் மற்றவர் அப்புறமுமாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்." இன்று இதே பள்ளிவாசலிலும், தெருக்களிலும், திருமண வீடுகளிலும் எதிரே வரும் சகோதரனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு, செல்போனைப் பார்ப்பது போல் நடித்துக் கொண்டு கடந்து செல்கிறோமே—இது நபிகளார் தடுத்த செயல்.

யார் சிறந்தவர்? இந்த ஹதீஸின் இறுதி வரிதான் நம் ஈகோவை உடைக்கும் மருந்து: "இவ்விருவரில் யார் முதலில் ஸலாம் சொல்கிறாரோ அவரே சிறந்தவர்."

நம்மில் பலர் சொல்வோம்: "தவறு அவன் பக்கம், அவன்தான் முதலில் வந்து பேச வேண்டும்." ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவறு யார் பக்கம் என்று பார்க்கச் சொல்லவில்லை. யார் தன் ஈகோவை விட்டுவிட்டு, அல்லாஹ்வுக்காக இறங்கி வந்து முதலில் "அஸ்ஸலாமு அலைக்கும்" சொல்கிறாரோ, அவரே அல்லாஹ்விடம் உயர்ந்தவர், அவரே சிறந்தவர் என்று தீர்ப்பளிக்கிறார்கள்!

பகைமையால் நம் அமல்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆனால் அந்தப் பகைமையை மறந்து பிறரை மன்னிப்பதால் அல்லாஹ் நமக்கு என்னென்ன கண்ணியங்களையும் வெகுமதிகளையும் தருகிறான் "

مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا

"தர்மம் செய்வதால் செல்வம் குறைந்துவிடுவதில்லை. மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் ஓர் அடியானுக்குக் கண்ணியத்தையே (இஸ்ஸத்) அதிகப்படுத்துகிறான்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் )


உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களும், தம்மைத் திட்டிய மனிதரும்


கலீஃபா உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசலுக்குள் இருட்டில் நடந்து சென்றபோது, அங்கே படுத்திருந்த ஒரு மனிதரின் மீது தெரியாமல் கால் பட்டுவிட்டது. தூக்கக் கலக்கத்தில் இருந்த அந்த மனிதர் கோபத்தில், " أَمَجْنُونٌ أَنْتَ؟ (அமஜ்னூனுன் அன்த? - நீ என்ன பைத்தியமா?)

உமர் பின் அப்துல் அஸீஸ்: لَا، وَلَكِنِّي عُمَرُ - இல்லை, நான் உமர்).

காவலர்கள்: "அமீருல் முஃமினீன் அவர்களே! இவன் உங்களைப் பைத்தியம் என்று சொல்லிவிட்டான், இவனைத் தண்டிக்க அனுமதி தாருங்கள்."

உமர் பின் அப்துல் அஸீஸ்: لَا، إِنَّمَا سَأَلَنِي: أَمَجْنُونٌ أَنْتَ؟ فَقُلْتُ: لَا : - "வேண்டாம்! அவன் என்னிடம் 'நீ பைத்தியமா?' என்று கேள்விதான் கேட்டான்; அதற்கு நான் 'இல்லை' என்று பதில் சொல்லிவிட்டேன். இதில் தண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?"

நூல் : அல்-இக்துல் ஃபரீத் ,சீரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (இப்னுல் ஜவ்ஸீ).


எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், சின்னச் சின்ன வார்த்தைகளைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையோடு கடந்து செல்லும் பக்குவம் நமக்கு வேண்டும்.

அபூதர் (ரலி) அவர்களும், பிலால் (ரலி) அவர்களும்


ஒருமுறை நபித்தோழர்களான அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, "கறுப்பியின் மகனே!" என்று திட்டிவிட்டார்கள். பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மனம் உடைந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்று முறையிட்டார்கள்.

இதைக் கேட்ட நபிகளார் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்துக் கடுமையாகக் கண்டித்தார்கள்:


أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ


"அவரது தாயைக் கூறி அவரைக் குறை கூறிவிட்டாயா? நிச்சயமாக நீ அறியாமைக் காலத்து (ஜாஹிலிய்யா) குணம் கொண்ட மனிதராக இருக்கிறாய்!"

நபிகளாரின் இந்த வார்த்தையைக் கேட்டதும் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துடித்துப் போனார்கள். உடனே பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஓடிச் சென்று, தன் கன்னத்தை மண்ணில் வைத்துப் படுத்துக் கொண்டு, "பிலாலே! நீங்கள் உங்கள் காலால் என் கன்னத்தை மிதிக்கும் வரை நான் தலையைத் தூக்க மாட்டேன்; என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கதறினார்கள்.

பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தூக்கி நிறுத்தி, அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டு, மன்னித்து ஆரத்தழுவிக் கொண்டார்கள்! நூல் : ஸஹீஹ் புகாரி


தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதும் மன்னிப்புக் கேட்டவுடன் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உடனே கட்டித் தழுவி மன்னிப்பதும் தான் உண்மையான ஈமானின் அடையாளம்!


மனிதர்களின் இந்தத் தவறான எண்ணத்தை உடைத்து, மன்னிப்பவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் உண்மையான கண்ணியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக அறிவிக்கிறார்கள்:

 

பணத்தை எடுத்து ஏழைக்குக் கொடுத்தால் கணக்குப்படி பணம் குறைய வேண்டும்; ஆனால் அல்லாஹ் அதில் பரக்கத்தை வைத்து அதிகப்படுத்துகிறான்.

அதேபோல, பிறரை மன்னித்து இறங்கிப் போனால் நம் கௌரவம் குறையும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அல்லாஹ் சொல்கிறான்: "இல்லா இஸ்ஸா" — மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் அந்த அடியானுக்குக் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான்!


பழிவாங்குபவனைப் பார்த்து மக்கள் பயப்படலாம்; ஆனால், மன்னிப்பவனைப் பார்த்து மக்கள் மரியாதை செய்வார்கள். அவனது அந்தஸ்தை அல்லாஹ் இம்மையிலும் உயர்த்துகிறான், மறுமையிலும் உயர்த்துகிறான்!


அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற வேண்டுமா? 

நாம் ஏன் பிறரை மன்னிக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ் நம் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் ஒரு கேள்வியைக் கேட்கிறான்:

وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

"அவர்கள் (பிறரது தவறுகளை) மன்னித்து, பெருந்தன்மையுடன் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்."." (அல்குர்ஆன் 24:22)


இந்த வசனத்தில் அல்லாஹ் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறான்: "வல்யஃபூ" (மன்னிக்கட்டும்), "வல்யஸ்ஃபஹூ" (பெருந்தன்மையுடன் விட்டுவிடட்டும்).

மன்னிப்பது (அஃப்வு) என்றால் தண்டிக்காமல் விட்டுவிடுவது.

பெருந்தன்மையுடன் விட்டுவிடுவது (ஸஃப்ஹு) என்றால், அந்தத் தவறைப் பற்றி மீண்டும் மீண்டும் குத்திக்காட்டாமல், மனதிலிருந்தே அதை முழுமையாக அழித்துவிடுவது!


நாம் என்ன செய்வோம்? "நான் மன்னித்து விட்டேன்" என்று வாயால் சொல்லிவிட்டு, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் "அன்று நீ அப்படிச் செய்தாயே, நான் பெருந்தன்மையாக விட்டுவிட்டேன்" என்று குத்திக்காட்டுவோம். அல்லாஹ் அப்படிச் செய்யச் சொல்லவில்லை; மனதிலிருந்தே அதைத் துடைத்து எறியச் சொல்கிறான்.

ஏன்? அடுத்த வரியில் அல்லாஹ் நம்மிடம் ஒரு ஒப்பந்தம் போடுகிறான்: "அலா துஹிப்பூன அன் யஃபிரல்லாஹு லக்கும்?" — "அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா?"

 

தினமும் நாம் எத்தனை பாவங்கள் செய்கிறோம்? கண்களால், நாவால், கைகளால் எத்தனை தவறுகள் செய்கிறோம்? நாளை மறுமையில் அல்லாஹ் நம் பாவங்களைத் துருவித் துருவி விசாரித்தால் நம்மால் தப்பிக்க முடியுமா? நாம் என்ன ஆசைப்படுகிறோம்? "யா அல்லாஹ்! என் பாவங்களை மன்னித்துவிடு" என்றுதானே கேட்கிறோம்!

அல்லாஹ் சொல்கிறான்: "நீ என் அடியானை மன்னித்துவிடு, நான் உன்னை மன்னித்து விடுகிறேன்!" இந்த உலகத்திலேயே மிகப் பெரிய லாபகரமான வியாபாரம் இதுதான் சகோதரர்களே!


 இக்ரிமா பின் அபீஜஹ்ல் (ரலி) அவர்களுக்கு நபிகளார் வழங்கிய கண்ணியம்

மக்கா வெற்றியின் போது, இஸ்லாத்திற்கு எதிராகப் பல சதிகளையும் போர்களையும் நடத்திய அபூஜஹ்லின் மகன் இக்ரிமா, உயிருக்குப் பயந்து யமன் நாட்டை நோக்கித் தப்பி ஓடிவிட்டார். அவரின் மனைவி உம்மு ஹகீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, நபிகளாரிடம் வந்து தன் கணவருக்காகப் பொதுமன்னிப்பு கேட்டார்கள். நபிகளார் உடனே மன்னிப்பு வழங்கினார்கள்.


தன் மனைவியின் அழைப்பை ஏற்று இக்ரிமா மக்காவிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களைப் பார்த்து ஒரு முக்கியக் கட்டளையிட்டார்கள்:

நபிகளாரின் அரபி வாசகம்:

يَأْتِيكُمْ عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ مُؤْمِنًا مُهَاجِرًا، فَلَا تَسُبُّوا أَبَاهُ، فَإِنَّ سَبَّ الْمَيِّتِ يُؤْذِي الْحَيَّ وَلَا يَبْلُغُ الْمَيِّتَ

"இக்ரிமா பின் அபீஜஹ்ல் இறைநம்பிக்கையாளராகவும், ஹிஜ்ரத் செய்தவராகவும் உங்களிடம் வருகிறார். எனவே, (அவருக்கு முன்னால்) அவருடைய தந்தையை (அபூஜஹ்லை) யாரும் திட்டாதீர்கள்! ஏனெனில், இறந்தவரைத் திட்டுவது உயிரோடு இருப்பவரை வேதனைப்படுத்தும்; அது இறந்தவரைச் சென்றடையாது."

நூல் : அல்-முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன்


மன்னிப்பதோடு நின்றுவிடாமல், மன்னிக்கப்பட்டவரின் சுயமரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் நபிகளார் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் பாருங்கள்! இந்த மன்னிப்பும் கண்ணியமும்தான் பிற்காலத்தில் யர்மூக் போரில் இஸ்லாத்திற்காக உயிர்த்தியாகம் செய்யும் மாவீரராக இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மாற்றியது.


 நபிகளாரைக் கொல்ல வந்த 'கவ்ரஸ் பின் ஹாரிஸ்' மன்னிக்கப்பட்ட 


'தாத்துர் ரிகா' எனும் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்; அவர்களின் வாள் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது எதிரிக் கூட்டத்தைச் சேர்ந்த கவ்ரஸ் பின் ஹாரிஸ் என்பவன் பதுங்கி வந்து, மரத்திலிருந்த நபிகளாரின் வாளை உருவி, நபிகளாரின் தலைக்கு நேராகப் பிடித்துக்கொண்டு கத்தினான்: "

கவ்ரஸ்: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ - என்னிடமிருந்து உன்னை யார் தடுப்பார்?)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: اللَّهُ 

"அல்லாஹ்" என்ற அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும், அந்த எதிரியின் கை நடுங்கி வாள் கீழே விழுந்தது. உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வாளை எடுத்துக்கொண்டு அவனிடம் கேட்டார்கள்: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ (இப்போது என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?)

அவன் நடுங்கிக்கொண்டே, كُنْ خَيْرَ آخِذٍ - பிடிப்பவர்களில் சிறந்தவராக இருங்கள் / என்னை மன்னித்து விடுங்கள்) என்றான்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனைத் தண்டிக்காமல் மன்னித்து அனுப்பிவிட்டார்கள். அவன் தன் கூட்டத்தாரிடம் ஓடிச் சென்று சொன்னான்: "جِئْتُكُمْ مِنْ عِنْدِ خَيْرِ النَّاسِ" (மனிதர்களிலேயே மிகச் சிறந்தவரிடமிருந்து நான் உங்களிடம் வந்திருக்கிறேன்!) என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.நூல் : ஸஹீஹ் புகாரி


இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் வாழ்வில்…

قَالَ يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى: مَا رَأَيْتُ أَعْقَلَ مِنَ الشَّافِعِيِّ، نَاظَرْتُهُ يَوْمًا فِي مَسْأَلَةٍ، ثُمَّ افْتَرَقْنَا، وَلَقِيَنِي فَأَخَذَ بِيَدِي، ثُمَّ قَالَ: يَا أَبَا مُوسَى، أَلَا يَسْتَقِيمُ أَنْ نَكُونَ إِخْوَانًا وَإِنْ لَمْ نَتَّفِقْ فِي مَسْأَلَةٍ؟

இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு யூனுஸ் பின் அப்துல் அஃலா ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற ஒரு நெருங்கிய மாணவரும் நண்பரும் இருந்தார்.

ஒருநாள், மார்க்கத்தின் ஒரு சட்டப் பிரச்சினையைப் பற்றி இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. விவாதம் சற்றுச் சூடானது. யூனுஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது; இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், கோபத்தோடு சபையை விட்டு எழுந்து தன் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.


"இனிமேல் இமாம் அவர்களைப் பார்க்கக் கூடாது" என்ற அளவுக்கு மனக்கசப்போடு வீட்டிற்குள் முடங்கிக் கொண்டார்கள்.

அன்று இரவு யூனுஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன் வீட்டில் அமர்ந்திருந்தார்கள். அப்போது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது!

யூனுஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுந்து சென்று கதவைத் திறந்தார்கள். வெளியே யார் நிற்கிறார்கள் தெரியுமா?


அந்தக் காலத்தின் மாபெரும் அறிஞர், லட்சக்கணக்கான மக்களால் மதிக்கப்படக்கூடிய இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தன் மாணவரின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள்!


யூனுஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அதிர்ச்சியிலும் வெட்கத்திலும் உறைந்து போனார்கள். இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சற்றும் ஈகோ பார்க்காமல், புன்னகையோடு உள்ளே வந்து, யூனுஸ் அவர்களின் கைகளைப் பாசத்தோடு பிடித்துக்கொண்டு

 "يَا أَبَا مُوسَى، أَلَا يَسْتَقِيمُ أَنْ نَكُونَ إِخْوَانًا وَإِنْ لَمْ نَتَّفِقْ فِي مَسْأَلَةٍ؟"


"அபூ மூஸாவே! ஒரே ஒரு விஷயத்தில் நமக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்பதற்காக, நாம் இருவரும் சகோதரர்களாக இருக்க முடியாதா? (நம்மிடையே இருக்கும் நூற்றுக்கணக்கான அன்பான விஷயங்களை விட, இந்த ஒரு சின்ன கருத்து வேறுபாடு பெரிதாகிவிடுமா?)"


இந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும் யூனுஸ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது! அத்தனை கோபமும் பனியாகக் கரைந்து, இருவரும் ஆரத்தழுவிக் கொண்டார்கள்! நூல்: ஹில்யதுல் அவ்லியா


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நினைத்திருந்தால், "அவன்தான் என் மாணவன், அவன்தான் கோபித்துக்கொண்டு போனான், அவனே வந்து மன்னிப்புக் கேட்கட்டும்" என்று வீட்டிலேயே உட்கார்ந்திருக்கலாம். ஆனால், உறவு முறிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த மாபெரும் அறிஞர் இரவோடு இரவாகத் தன் மாணவரின் வீட்டு வாசலுக்கு நடந்து சென்றார்கள்!


பத்து வருடங்களாக நமக்கு எல்லா உதவிகளும் செய்த அண்ணன், ஒரே ஒரு முறை நம் பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக அவரைப் பகைத்துக் கொள்கிறோம்!

ஆயிரம் நன்மைகள் செய்த நண்பன், ஒரே ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிட்டான் என்பதற்காக அவனுடைய முகத்தையே பார்ப்பதில்லை!

"ஒரே ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக, நாம் சகோதரர்களாக வாழ முடியாதா?"

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீஃபாவாக (ஆட்சியாளராக) இருந்த காலம் அது. அவர்களின் சபைக்கு யார் வேண்டுமானாலும் வந்து தங்கள் குறைகளைச் சொல்லலாம் என்ற எளிமையான நிலை இருந்தது.


ஒருநாள், கிராமப்புறத் தலைவரான உயைனா பின் ஹிஸ்ன் என்பவர், தன் சகோதரரின் மகனான ஹுர்ரு பின் கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "நீ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறாயே, எனக்கு அவரைச் சந்திக்க அனுமதி வாங்கித் தா" என்று கேட்டார். ஹுர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அனுமதி பெற்று, உயைனாவை சபைக்குள் அழைத்துச் சென்றார்கள்.

உள்ளே நுழைந்த உயைனா, கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல், மிகக் கடுமையான வார்த்தைகளால் பேசத் தொடங்கினார்:

"கத்தாபின் மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ எங்களுக்கு அதிகமாக அள்ளித் தருவதும் இல்லை; எங்களிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பதும் இல்லை!"


உலகமே பார்த்து அஞ்சக்கூடிய மாபெரும் ஆட்சியாளர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சபையில், எல்லோருக்கும் முன்னால் நின்றுகொண்டு, "நீ நீதியாக நடக்கவில்லை" என்று ஒருவர் முகத்திற்கு நேராகப் பழி சுமத்துகிறார்!

இதைக் கேட்டதும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது! முகமெல்லாம் சிவந்து, அந்த மனிதரைத் தண்டிப்பதற்காகத் தன் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்கள்!


சபையிலிருந்த அனைவரும் உறைந்து போனார்கள்; இன்று உயைனாவுக்குக் கடுமையான தண்டனை நிச்சயம் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

அந்த உச்சகட்டக் கோபத்தின் நொடியில், அங்கே நின்றிருந்த இளம் நபித்தோழர் ஹுர்ரு பின் கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்வந்து, கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்துச் சொன்னார்கள்:

"யா அமீரல் முஃமினீன்! நிச்சயமாக உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வாறு கூறியுள்ளான்:

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

(நபியே!) நீர் மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! மேலும், அறியாதவர்களைப் புறக்கணித்து (அவர்களின் தவறுகளை மன்னித்து) விடுவீராக! (அல்குர்ஆன் 7:199). அமீருல் முஃமினீன் அவர்களே, இந்த மனிதரும் அறியாதவர்களில் ஒருவர்தான்; இவரை மன்னித்து விடுங்கள்!"


இந்த சம்பவத்தை அறிவிக்கக்கூடிய நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சத்தியம் செய்து கூறுகிறார்கள்:

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த வசனத்தை ஓதிக்காட்டிய அடுத்த நொடி, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த வசனத்தைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை! (உடனே தம் கோபத்தை அடக்கி, இருக்கையில் அமர்ந்து, அந்த மனிதரை மன்னித்து விட்டார்கள்). ஏனெனில், உமர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்கு முன்னால் அப்படியே நின்றுவிடுபவர்களாக இருந்தார்கள்!"


 தண்டிக்கக்கூடிய முழு அதிகாரமும் கையில் இருந்தும், யாரும் தன்னைக் கேள்வி கேட்க முடியாது என்ற நிலையிலும், "மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக" என்ற ஒற்றை குர்ஆன் வசனத்தைக் கேட்டதும், உமர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கோபம் அப்படியே அடங்கிப் போனது; தன்னை அவமதித்த அந்த மனிதரை மன்னித்து அனுப்பினார்கள்!


நம்மை விட வயதில் சிறியவரோ, அல்லது பதவியில் குறைந்தவரோ ஏதாவது ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிட்டால், "எனக்கு எவ்வளவு பெரிய மரியாதை இருக்கிறது, என்னைப் பார்த்து இப்படிப் பேசிவிட்டானே! அவனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன்" என்று வருடக்கணக்கில் பகைமையை வளர்த்துக் கொள்கிறோம்!


அல்லாஹ்வின் வசனத்திற்காகத் தன் கோபத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து மன்னித்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் குணம் நமக்குள்ளும் வர வேண்டும்.


இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களும், அடித்த சிப்பாயும்


அரச பதவியைத் துறந்து இறைவழிபாட்டில் மூழ்கியிருந்த இறைநேசர் இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஒருநாள் ஒரு தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே காவலுக்கு நின்றிருந்த ஒரு சிப்பாய், இவரை யாரோ வழிப்போக்கர் என்று நினைத்து, "இந்த ஊருக்கு வழி எங்கே?" என்று அதிகாரத் தொனியில் கேட்டான்.


இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அருகிலிருந்த மையவாடியை (கப்ருஸ்தானை) சுட்டிக்காட்டி, "இதோ இதுதான் உண்மையான ஊர் (நிரந்தர இடம்)" என்று தத்துவார்த்தமாகப் பதில் சொன்னார்கள்.


தன்னைக் கேலி செய்வதாக நினைத்த அந்தச் சிப்பாய் கோபத்தில் தன் சாட்டையால் இப்ராஹீம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் தலையில் பலமாக அடித்துவிட்டான்; தலையிலிருந்து ரத்தம் வழிந்தது. ஆனாலும் இப்ராஹீம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கோபப்படாமல், அவனை மன்னித்து, அவனுக்காகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்கள்!


இதைப் பார்த்த அந்தச் சிப்பாய் ஆச்சரியப்பட்டு, "நான் உங்களை அடித்தேன், ஆனால் நீங்கள் எனக்காக துஆ செய்கிறீர்களே, ஏன்?" என்று கேட்டான். அதற்கு இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொன்ன பதில்:


عَلِمْتُ أَنِّي أُوجَرُ عَلَى مَا نَالَنِي مِنْكَ، فَلَمْ أُحِبَّ أَنْ يَكُونَ نَصِيبِي مِنْكَ الْخَيْرَ وَنَصِيبُكَ مِنِّي الشَّرَّ

 "உன்னால் எனக்கு ஏற்பட்ட இந்த வலியின் காரணமாக, நாளை மறுமையில் எனக்கு அல்லாஹ்விடம் மிகப்பெரிய நற்கூலி கிடைக்கும் என்பதை நான் அறிந்து கொண்டேன். எனவே, உன் மூலமாக எனக்கு நன்மை (நற்கூலி) கிடைக்கும்போது, என் மூலமாக உனக்குத் தீமை (தண்டனை) கிடைப்பதை நான் விரும்பவில்லை; அதனால் உன்னை மன்னித்து உனக்காகப் பிரார்த்திக்கிறேன்!"

நூல் : ஹில்யத்துல் அவ்லியா (அபூ நுஐம் - பாகம் 8, தாரீக் திமஷ்க்.)


நேற்று வரை நம்முடன் இதே பள்ளிவாசலில் தோளோடு தோள் நின்று தொழுத எத்தனையோ பேர் இன்று மண்ணறைக்குள் (கப்ரில்) இருக்கிறார்கள். நாளை நம்முடைய முறை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

இன்று "அவன் முதலில் பேசட்டும், நான் ஏன் இறங்கிப் போக வேண்டும்?" என்று நாம் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாளை நம் சகோதரனின் ஜனாஸாவுக்கு முன்னால் நின்று கதறி அழுவதால் எந்தப் பயனும் இல்லை! அல்லது நம்முடைய ஜனாஸாவைப் பார்த்து அவர் அழுவதாலும் எந்தப் பயனும் இல்லை! உயிரோடு இருக்கும்போதே ஒருவரையொருவர் மன்னித்து, கட்டித் தழுவி, மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொள்வதுதான் உண்மையான புத்திசாலித்தனம்.


நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் ஒவ்வொருவரும் குற்றவாளிகளாகத் தலைகுனிந்து நிற்போம். நம் ஏடுகளில் மலை அளவு பாவங்கள் இருக்கும். அன்று நாம் அல்லாஹ்விடம் கையேந்துவோம்: "யா அல்லாஹ்! என் பாவங்களை மன்னித்துவிடு, என்னைச் சொர்க்கத்தில் சேர்த்துவிடு" என்று….


அப்போது அல்லாஹ் நம்மைப் பார்த்து, "என் அடியானே! உன் சகோதரனின் சின்னத் தவறைக் கூட மன்னிக்காமல், பல வருடங்கள் பகைமை பாராட்டிக் கொண்டு வந்தாயே, இன்று நான் உன்னை எப்படி மன்னிப்பேன்?" என்று கேட்டுவிட்டால், நாம் என்ன பதில் சொல்வோம் ?


எனவே, இந்தப் புனிதமிக்க ஜும்ஆ நாளில், இந்த அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து நாம் மூன்று உறுதிகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்வோம்:


முதல் உறுதி — இந்தப் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போதே, நம் உள்ளத்தில் யார் மீதாவது கோபமோ, வெறுப்போ இருந்தால் அதை இங்கேயே விட்டுவிட்டுச் செல்வோம். உங்களுடன் பேசாமல் இருக்கும் அந்த சகோதரரிடம் நீங்களே முன்வந்து சிரித்த முகத்துடன் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கை கொடுங்கள். நபிகளார் சொன்ன "சிறந்தவர்" என்ற பட்டத்தை நீங்கள் தட்டிச் செல்லுங்கள்!

இரண்டாவது உறுதி — சொத்துப் பிரச்சினையாலோ, சிறிய மனக்கசப்பாலோ பேசாமல் இருக்கும் உங்கள் அண்ணன், தம்பி, சகோதரிகள், மாமன், மச்சான் மற்றும் உறவினர்களுக்கு இன்றே போன் செய்தோ அல்லது நேரில் சென்றோ பேசுங்கள். உறவுகளைத் துண்டிப்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்பதை மறவாதீர்கள்.


மூன்றாவது உறுதி — இன்று இரவு படுக்கைக்குச் செல்லும்போது, கண்களை மூடுவதற்கு முன்பு உள்ளத்தின் ஆழத்திலிருந்து அல்லாஹ்விடம் சொல்லுங்கள்:

   "யா அல்லாஹ்! இன்று எனக்குத் தீங்கு செய்த, என் மனதை நோவினைப்படுத்திய, என்னைப் பற்றிப் புறம் பேசிய அனைவரையும் உனக்காக நான் மன்னித்துவிட்டேன். அதற்குப் பகரமாக நீ என் பாவங்களை மன்னித்து விடுவாயாக!"


யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் இருக்கும் கசப்புகளையும், பொறாமைகளையும், பகைமைகளையும் நீக்கி, தூய்மையான உள்ளத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! எங்கள் குடும்பங்களுக்குள்ளும், எங்கள் ஜமாஅத்திற்குள்ளும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளும் ஒற்றுமையையும், அன்பையும், சகோதரத்துவத்தையும் பலப்படுத்துவாயாக! 


யா அல்லாஹ்! நாங்கள் பிறரை மன்னிப்பது போல், நாளை மறுமையில் எங்கள் பாவங்களையும் மன்னித்து, உன் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பாயாக!

ஆமீன், யா ரப்பல் ஆலமீன்.


வஆகிரு தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். 


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக