புதன், 27 மே, 2026

இப்ராஹீம் அலை அநீதிக்கு எதிரான குரல் .

 


இப்ராஹீம் அலை அநீதிக்கு எதிரான குரல் 


الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَمَرَ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ، وَنَهَى عَنِ الظُّلْمِ وَالْبَغْيِ وَالْعُدْوَانِ. أَحْمَدُهُ سُبْحَانَهُ وَهُوَ الْقَائِلُ فِي كِتَابِهِ الْكَرِيمِ: "أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ".


وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُ، قَاصِمُ الْجَبَّابِرَةِ وَأَمَانُ الْخَائِفِينَ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَامُ الْمُتَّقِينَ، وَقَائِدُ الْمُجَاهِدِينَ الَّذِي نَصَرَ الْمَظْلُومِينَ وَأَقَامَ الدِّينَ.


اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ، وَعَلَى أَصْحَابِهِ الْأَخْيَارِ الرَّاشِدِينَ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.


أَمَّا بَعْدُ: فَيَا عِبَادَ اللَّهِ، أُوصِيكُمْ وَنَفْسِي أَوَّلاً بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْقَدِيرِ، وَاعْلَمُوا أَنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنْفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ

".

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ


أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ


مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ,فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ


ஹஜ்ஜுப் பெருநாள் (தியாகத் திருநாள்) என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாக வரலாறுதான். நாம் பெரும்பாலும் அவர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் மகனை இறைவனுக்கு கொடுக்கும் சம்பவத்தையும் மட்டுமே பேசுகிறோம். ஆனால், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒட்டுமொத்த தியாக வாழ்வின் அடித்தளமே அநீதிக்கு எதிராக அவர்கள் எழுப்பிய குரல்தான்.


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில், மன்னன் நம்ரூத் என்பவன் தன் அதிகார பலத்தால் மக்கள் மீது கடுமையான அநீதி இழைத்துக் கொண்டிருந்தான். தன்னை ஒரு கடவுள் என்று அறிவித்து, மக்களின் ஆன்மீக மற்றும் உலகியல் உரிமைகளைப் பறித்தான்.


அத்தகைய அசுர பலம் பொருந்திய அநீதி மன்னனுக்கு முன்னால், வாலிபரான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனி ஒரு மனிதனாக நின்று, அவனது போலி அதிகாரத்தை சுக்குநூறாக்கினார்கள்.


அநீதியைத் தட்டிக்கேட்டதற்காக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சந்தித்த தியாகம் சாதாரணமானதல்ல. ஒட்டுமொத்த சமுதாயமும், தந்தையும், அரசும் ஒன்று சேர்ந்து அவர்களை உயிரோடு எரிக்க மாபெரும் நெருப்புக் குண்டத்தை உருவாக்கினர்.


அநீதியின் பலம் நெருப்பாய் சுட்டெரித்தபோதும், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அநீதியோடு சமரசம் செய்யவில்லை. "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்" என்று தங்களை முழுமையாக அர்ப்பணித்தார்கள். அந்தத் தியாகத்தின் காரணத்தினால்தான், அல்லாஹ் நெருப்பைக் குளிர்ச்சியாக மாற்றினான்.


தியாகத் திருநாளின் நாயகரான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் அநீதிக்கு எதிராகச் சமரசம் செய்யாமல் நின்ற வாழ்வுதான்.


அரசன் என்றும் அஞ்சாமல், ஒட்டுமொத்த சமுதாயமே எதிர்த்து நின்றபோதும் "சத்தியத்தின் குரலாக" தனி ஒரு மனிதனாக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நிமிர்ந்து நின்றார்கள்.


இன்று நாமும் நம் சமுதாயத்தில் நடக்கும் வரதட்சணை கொடுமை, வட்டி, ஏழைகளின் சொத்துக்களைப் பறித்தல், பிற மதத்தவர்களின் உரிமைகளை மறுத்தல் போன்ற அநீதிகளுக்கு எதிராக இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துணிச்சலை நம் வாழ்வில் முன்மாதிரியாக எடுக்க வேண்டும்.


சமூகத்தில் நடைபெறக்கூடிய பல்வேறு விதமான தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் நம்மிடத்தில் இருக்க வேண்டும் அதை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய தைரியம் நம்மிடத்தில் வரவேண்டும் உறுதி நம்மிடத்திலே இருக்க வேண்டும். 


அல்லாஹ் நம் அனைவருக்கும் அநீதியைக் கண்டு அஞ்சாமல், நீதியின் பக்கம் நிற்கும் இப்ராஹீமியப் பண்பைத் தந்தருள்வானாக! 


பெருநாள் என்பது வெறும் புத்தாடை அணிந்து, சுவையான உணவுகளை உண்பதுடன் முடிந்துவிடுவதில்லை. அது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, சமூகத்தில் உள்ள பலவீனர்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் உன்னதப் பண்பை நமக்குக் கற்றுத் தருகிறது.


இஸ்லாம் என்ற சொல்லே அமைதியைக் குறிக்கிறது. சமூகத்தில் அநீதி (ளுல்ம்) இருக்கும் வரை அங்கே உண்மையான அமைதி நிலவ முடியாது. எனவேதான், அநீதியை எதிர்ப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 


اتَّقُوا الظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ

"அநீதி இழைப்பதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அநீதியானது மறுமை நாளில் பல இருள்களாக மாறும்." (நூல்: முஸ்லிம்)


அநீதியாளனின் கையைப் பிடித்து நிறுத்துங்கள்

انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا. قَالُوا: يَا رَسُولَ اللَّهِ نَصَرْتُهُ مَظْلُومًا، فَكَيْفَ أَنْصُرُهُ ظَالِمًا؟ قَالَ: تَحْجُزُهُ عَنِ الظُّلْمِ، فَإِنَّ ذَلِكَ نَصْرُهُ

"உன் சகோதரன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும், அநீதிக்குள்ளானவனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்" என்று நபிகளார் கூறினார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அநீதிக்குள்ளானவனுக்கு உதவுவது சரி, அநீதி இழைப்பவனுக்கு எப்படி உதவுவது?" எனக் கேட்டனர். அதற்கு நபிகளார், "அவன் அநீதி இழைப்பதைத் தடுத்து, அவனைக் கையைப் பிடித்து நிறுத்துவதே நீ அவனுக்குச் செய்யும் உதவி" என்றார்கள். (நூல்: புகாரி)


அநீதியைக் கண்டால் மௌனம் சாதிக்கக் கூடாது

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ,فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ

"உங்களில் யாராவது ஓர் அநீதியையோ, மார்க்கத்திற்கு முரணான காரியத்தையோ கண்டால், அவர் அதைத் தன் கரத்தால் தடுத்து நிறுத்தட்டும். அதற்குச் சக்தி பெறாவிட்டால் தன் நாவினால் (எதிர்த்துக் குரல் கொடுத்து) தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறாவிட்டால் தன் உள்ளத்தால் வெறுக்கட்டும். இது ஈமானின் மிக பலவீனமான நிலையாகும்." (நூல்: முஸ்லிம்)


சிறந்த ஜிஹாத்

أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ

"அநீதியான ஓர் ஆட்சியாளரின் முன்னிலையில், உண்மையான நீதியான வார்த்தையைக் கூறுவதே சிறந்த ஜிஹாத் (அறப்போர்) ஆகும்." (நூல்: அபூதாவூத், திர்மிதி)


அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்பது ஏதோ சமூக ஆர்வலர்களின் வேலை அல்ல, அது ஒவ்வொரு முஃமினுடைய ஈமானின் அடையாளம்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு 


இஸ்லாமிய வரலாற்றில் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்று பேசினாலே நம் நினைவுக்கு வருவது நபிகளாரின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கர்பலா சம்பவம்தான்.


மக்களின் உரிமைகளைப் பறித்து, அநீதியான முறையில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்தார் யஸீத். அவர் தன் அநீதியான ஆட்சிக்கு இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அங்கீகாரத்தை (பையத்) கோரினார்.


"நபிகளாரின் பேரர் அநீதிக்குத் தலைவணங்கிவிட்டான்" என்று வரலாறு எழுதிவிடக் கூடாது என்பதில் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு உறுதியாக இருந்தார்கள். தன் குடும்பமே அழியும் நிலை வந்தபோதும், அவர்கள் அநீதியோடு சமரசம் செய்ய மறுத்துவிட்டார்கள். கர்பலா மைதானத்தில் தாகத்தால் தவித்தபோதும், அநீதிக்கு எதிராக இறுதிவரை போரிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்தார்கள்.


அதிகாரமும் பலமும் அநீதியின் பக்கம் இருந்தாலும், ஒரு முஸ்லிம் தன் ஈமானியக் கொள்கையிலிருந்து பின்வாங்கக் கூடாது. தற்காலிக லாபத்திற்காக அநீதிக்குத் துணை போவது ஈமானுக்கு அழகல்ல என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.


அல்லாஹ்வின் சிங்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவில் பல அநீதிகள் இழைக்கப்பட்டன. அப்போது ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.


ஒருநாள், மக்காவின் பெரும் தலைவனும் அநீதியாளனுமான அபூஜஹ்ல், கஃபாவின் அருகே அமர்ந்திருந்த நபிகளாரை மிகக் கொடூரமாக ஏசி, உடல் ரீதியாகவும் துன்புறுத்தி அநீதி இழைத்தான். அல்லாஹ்வின் தூதர் அமைதியாக அதை சகித்துக் கொண்டு இல்லம் திரும்பினார்கள்.


வேட்டையாடிவிட்டு நகருக்குள் நுழைந்த ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், அங்கிருந்த ஒரு பெண்மணி, "ஹம்ஸாவே! உமது சகோதரர் மகனுக்கு அபூஜஹ்ல் செய்த அநீதியை நீர் கண்டிருக்க வேண்டுமே!" என்று நடந்ததைக் கூறினாள்.


அநீதியைக் கேட்ட மாத்திரத்தில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரத்தம் கொதித்தது. வீட்டிற்கு கூடச் செல்லாமல், கையில் இருந்த வில்லுடன் நேராக அபூஜஹ்ல் அமர்ந்திருந்த சபைக்குச் சென்றார்கள்.


முழுச் சபையும் பார்த்துக் கொண்டிருக்க, அநீதியின் மொத்த உருவமான அபூஜஹ்லின் தலையில் தன் வில்லால் ஓங்கி அடித்துக் காயப்படுத்தினார்கள். சபையினர் அதிர்ந்து நின்றபோது, ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு கம்பீரமாக முழங்கினார்கள்:

"என் சகோதரர் மகனையா ஏசுகிறாய்? இதோ நானும் அவர்கள் காட்டிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்! உன்னால் முடிந்ததைச் செய்து பார்!"


பலவீனர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அநீதியாளன் எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவனாக இருந்தாலும், அவனது இடத்திற்கே சென்று அநீதியைத் தட்டிக்கேட்கும் துணிவை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது. இதனால்தான் அவர்களுக்கு "அஸதுல்லாஹ்" (அல்லாஹ்வின் சிங்கம்) என்ற பட்டம் கிடைத்தது.


இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி 

ஹதீஸ் கலை மற்றும் ஃபிக்ஹ் (மார்க்க சட்டம்) துறையில் உலகப் புகழ்பெற்ற இமாமான நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், சிரியாவின் திமிஷ்க் (டமாஸ்கஸ்) நகரில் வாழ்ந்து வந்தார்கள்.


அக்காலத்து சுல்தானான (மன்னர்) ளாஹிர் பைபர்ஸ், மங்கோலியர்களுக்கு எதிரான போருக்காக மக்களிடம் கூடுதல் வரி வசூலிக்க முடிவு செய்தான். மகா வல்லமை பொருந்திய அந்த மன்னனின் முடிவுக்கு பயந்து, அங்கிருந்த பல அறிஞர்கள் அதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர். ஆனால், அது ஏழை எளிய மக்களுக்குச் செய்யப்படும் அநீதி என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கருதினார்கள்.


மன்னன் இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைத் தன் இடத்திற்கு (சபைக்கு) வரவழைத்து, வரி விதிப்புக்கான ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திடக் கோரினான். இமாம் அவர்கள் மிக அமைதியாகவும் கம்பீரமாகவும் மறுத்தார்கள்.


"மன்னா! நீங்கள் மக்களின் சொத்துக்களை வரியாகப் பறிப்பதற்கு முன்னால், உங்களுடைய அரண்மனையில் உள்ள தங்கப் பாளங்களையும், உங்கள் பெண்களின் தங்க நகைகளையும் விற்றுப் போருக்குப் பயன்படுத்துங்கள். அவை அனைத்தும் தீர்ந்த பிறகு, மக்கள் மீது வரி விதிக்க நான் அனுமதி தருகிறேன். அதுவரை இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்!"


கோபமடைந்த மன்னன், "உம்மை விடப் பெரிய அறிஞர்கள் எல்லாம் கையெழுத்திட்டுவிட்டனர், நீர் யார் மறுப்பதற்கு?" என்று கத்தினான். அதற்கு இமாம் அவர்கள், "அவர்கள் உமக்கு அஞ்சி கையெழுத்திட்டனர், நான் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுபவன்" என்றார்கள்.


அவர்களைச் சிறையிலடைக்கவோ அல்லது கொல்லவோ நினைத்த மன்னனின் கைகள் நடுங்கின. அவர்களைத் தன் நாட்டை விட்டே வெளியேற உத்தரவிட்டான். இமாம் அவர்கள் புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டு வெளியேறினார்கள். மன்னனின் மரணத்திற்குப் பிறகே மீண்டும் ஊர் திரும்பினார்கள்.


இமாம்கள் இறைநேசர்கள் என்பவர்கள் தஸ்பீஹ் ஓதிக்கொண்டு தங்களுக்குள் சுருங்கிவிடுபவர்கள் அல்ல; ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை அநீதியான முறையில் சுரண்டும் அரசர்களை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிவு பெற்றவர்கள் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.



இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

ஹன்பலி மத்ஹபின் தோற்றுவிப்பாளரும், கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக வழிகாட்டியுமான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அப்பாஸியப் பேரரசின் கலிஃபாவான மாமூன் என்பவன், "அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம் அல்ல, அது ஒரு சிருஷ்டி (படைப்பு)" என்ற தவறான கொள்கையை (முஃதஸிலா கொள்கை) மக்கள் மீது திணித்தான். இதற்குப் பணியாத மார்க்க அறிஞர்கள் அனைவரும் அநீதியான முறையில் சிறையிலடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.


ஒட்டுமொத்த சாம்ராஜ்யமே அநீதிக்குத் தலைவணங்கியபோது, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மட்டும், "குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தை, அது படைப்பல்ல" என்ற உண்மைக் கொள்கையில் உறுதியாக நின்றார்கள்.


இதற்காக அவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். அடுத்தடுத்து வந்த மூன்று கலிஃபாக்களின் ஆட்சிக்காலத்திலும் (சுமார் 28 ஆண்டுகள்) அவர்கள் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டார்கள்.


ஒவ்வொரு நாளும் ஜனாதிபதியின் முன்னிலையில் அவர்கள் கொண்டு வரப்பட்டு, "உம் கொள்கையை மாற்றிக் கொள்" என்று கூறி தடித்த சாட்டைகளால் கொடூரமாக அடிக்கப்பட்டார்கள். சாட்டையடி பட்டு அவர்களின் உடல் சதை கிழிந்து இரத்தம் கொட்டியபோதும், அவர்கள் மயக்கமடையும் தறுவாயிலும் கம்பீரமாகச் சொன்னார்கள்:- "அல்லாஹ்வின் தூதரின் ஹதீஸிலிருந்தோ அல்லது குர்ஆனிலிருந்தோ ஒரு சான்றைக் கொண்டு வாருங்கள், நான் என் கருத்தை மாற்றுகிறேன். இல்லையெனில் அநீதிக்கு நான் பணிய மாட்டேன்!"


இறுதியில் அவர்களின் இந்த உறுதியான குரல்தான் வென்றது. அநீதியான அந்தக் கொள்கை வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட்டது.


 பாலை வனச் சிங்கம்

நவீன வரலாற்றில் வாழ்ந்த மிகச் சிறந்த இறைநேசர்களில் ஒருவர் ஷைக் உமர் முக்தார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு குர்ஆனை ஓத கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்தவர். 


ஆனால், இத்தாலியப் பாசிசப் படைகள் தங்களின் நவீன ஆயுதங்களுடன் லிபிய நாட்டு மக்கள் மீது அநீதியான ஆக்கிரமிப்பை நிகழ்த்தியபோது, இந்த 70 வயது முதியவர் கையில் துப்பாக்கியை ஏந்திப் போர்க்களத்தில் குதித்தார்.


கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இத்தாலியப் பேரரசைத் திணறடித்தார்கள். இறுதியாக அவர்கள் கைது செய்யப்பட்டு, தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இத்தாலிய தளபதி அவரிடம், "எங்களிடம் மன்னிப்புக் கேள், உன்னை உயிரோடு விடுகிறோம்" என்றான்.


அதற்கு அந்த இறைநேசர் தூக்குக்கயிற்றைப் புன்னகையுடன் பார்த்தபடி முழங்கினார்கள்: "நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம். ஒன்று நாம் வெல்வோம், இல்லையேல் மரணிப்போம். உங்களுக்குப் பின்னால் வரும் தலைமுறையும் உங்களை எதிர்க்கும். எனது ஆயுளை விட, என்னைத் தூக்கிலிடும் உங்களின் தீர்ப்பு மிகச் சிறியது!"


வாலிபர்களே! சிஸ்டமும் அதிகாரமும் எவ்வளவு பெரிய ஆயுதங்களுடன் நம்மை நசுக்க வந்தாலும், நீதியின் பக்கம் நின்றால் மரணத்தைக் கண்டு கூட அஞ்சத் தேவையில்லை என்பதை இந்த வரலாறு காட்டுகிறது.


அஹ்மத் கபீர் ரிஃபாயி (ரஹ்) - அநீதிக்கு எதிரான கர்ஜனை


இறைநேசர்களில் மாபெரும் ஆன்மீகத் தலைவராக விளங்கும் இமாம் ரிஃபாயி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வாழ்ந்த காலத்தில், அப்போதைய ஆட்சியாளர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏழை மக்களைத் துன்புறுத்தினார்கள்.


அப்போது இமாம் ரிஃபாயி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஆட்சியாளர்களின் அரண்மனைக்குத் தேடிச் சென்று எச்சரித்தார்கள்:

"மக்களுக்கு அநீதி இழைக்கும் ஆட்சியாளர்களே! நினைவில் கொள்ளுங்கள், உங்களின் அதிகாரம் தற்காலிகமானது. எந்த நாட்டில் ஏழைகளும், வாலிபர்களும் கண்ணீர் வடிக்கிறார்களோ, அந்த நாட்டின் வீழ்ச்சி இறைவனால் நிச்சயம் எழுதப்பட்டுவிடும்."


அவர்களின் இந்த ஆன்மீகக் கர்ஜனை, பல அநீதியான அதிகாரிகளை நடுங்கச் செய்ததுடன், மக்களுக்கு மாபெரும் அரணாகத் திகழ்ந்தது.


ஹழ்ரத் சாபீர் கலியரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி


ஹழ்ரத் சாபீர் கலியரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜிரி 592 (கி.பி. 1196) இல் தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை சையத் அப்துல் ரஹீம், மாபெரும் ஆன்மீக ஞானியான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பேரர் ஆவார். தாயார் ஹஸ்ரத் ஜமீலா பேகம், இந்தியாவின் புகழ்பெற்ற சிஷ்தியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் பாபா ஃபரீதுத்தீன் கஞ்ச்ஷகர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.


சிறு வயதிலேயே தந்தையை இழந்த அலாவுத்தீனை, அவர்களின் தாயார் இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் உள்ள பாக்வதன் (Pakpattan) நகரில் வாழ்ந்த தன் சகோதரர் பாபா ஃபரீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஆன்மீகக் கல்விக்காக ஒப்படைத்தார்கள்.


பாபா ஃபரீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் அலாவுத்தீன் கல்வி கற்று வந்தபோது, அவர்களுக்கு மடப்பள்ளியின் (லங்கர் கானா) உணவு விநியோகப் பொறுப்பு வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் இப்பொறுப்பை அவர்கள் செவ்வனே செய்தார்கள்.


பல வருடங்களுக்குப் பின் அங்கு வந்த அலாவுத்தீனின் தாயார், தன் மகன் மிகவும் மெலிந்து போயிருப்பதைக் கண்டு பதறினார். பாபா ஃபரீதிடம், "என் மகனுக்கு உணவுப் பொறுப்பு கொடுத்தும் அவன் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறான்?" என்று கேட்டார். அதற்கு பாபா ஃபரீத், ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் "நான் அவனுக்கு உணவைப் பரிமாறும் பொறுப்பைத்தான் கொடுத்தேன், அதை உண்ணும் அனுமதியைக் கொடுக்கவில்லை" என்றார்.


உடனே அலாவுத்தீனிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டபோது, அவர்கள் மிக அமைதியாக, "ஆம் தாயே! மாமா எனக்கு உணவைப் பகிர்ந்தளிக்கத்தான் கட்டளையிட்டார். பொதுப் பணத்தில் உள்ள உணவை நானாக எப்படி உண்பது? நான் காட்டில் கிடைக்கும் இலைகளையும் கனிகளையும் தின்று, மாமாவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நோன்பு நோற்றேன்" என்றார்கள்.


இதைக் கேட்டு வியந்த பாபா ஃபரீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அலாவுத்தீனைக் கட்டிப்பிடித்து, "நீ சாதாரண அலாவுத்தீன் அல்ல, நீ 'சாபீர்' (மாபெரும் பொறுமையாளர்)" என்று வாழ்த்தினார்கள். அன்றிலிருந்து அவர்கள் 'சாபீர்' என்றே அழைக்கப்பட்டனர்.


கல்வி மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் முடிந்ததும், பாபா ஃபரீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சாபீர் கலியரி அவர்களை இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கலியர் (Kalyar) என்ற நகருக்கு ஆன்மீக வழிகாட்டியாக அனுப்பி வைத்தார்கள்.


அப்போது கலியர் நகரை குத்புத்தீன் என்ற எதேச்சதிகார மன்னன் ஆண்டு வந்தான். அவன் மக்களைக் கொடுமைப்படுத்துபவனாகவும், ஏழை எளியவர்களின் நிலங்களைப் பிடுங்கித் தன் சொத்துக்களைப் பெருக்குபவனாகவும் இருந்தான். அங்கு வாழ்ந்த நிலப்பிரபுக்களும் காஜிகளும் (அதிகாரிகள்) மன்னனின் அநீதிக்குத் துணையாக நின்று, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டினர்.


பாபா ஃபரீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்ற ஒரு மாபெரும் ஞானியின் பிரதிநிதியாக சாபீர் கலியரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அங்கு வந்தபோது, மன்னன் குத்புத்தீனும் அங்கிருந்த அதிகார வர்க்கமும் அவர்களை மதிக்கவில்லை. "எங்களுடைய அதிகாரத்திற்கு முன்னால் இந்த ஏழை ஃபக்கீர் என்ன செய்துவிட முடியும்?" என்று கேலி பேசினர்.


மன்னனின் ஆடம்பரத்தையும், மக்கள் பசியால் வாடுவதையும் கண்ட ஹஸ்ரத் சாபீர் கலியரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆன்மீகம், அநீதியைக் கண்டு பொங்கியெழுந்தது. அவர்கள் மன்னனின் அரண்மனைக்குச் சென்று, "மக்களின் உழைப்பைச் சுரண்டுவதை நிறுத்து, இறைவனுக்கு அஞ்சு, ஏழைகளின் நிலங்களைத் திருப்பித் தா" என்று நேருக்கு நேராக எச்சரித்தார்கள்.


ஆனால், அதிகார மதம் பிடித்த குத்புத்தீன் அந்த எச்சரிக்கையைப் புறந்தள்ளினான். ஒருமுறை ஜும்ஆ தொழுகையின் போது, ஹழ்ரத் சாபீர் கலியரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு இமாமத் (தொழுகை நடத்தும் பொறுப்பு) வழங்கக் கூடாது என்று காஜிக்கள் சதி செய்து அவர்களை அவமதித்தனர்.


அதிகார வர்க்கத்தின் அநீதியும், இறைநேசர்களை அவர்கள் இழிவுபடுத்தியதும் எல்லையைக் கடந்த போது, ஹஸ்ரத் சாபீர் கலியரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குக் கடுமையான ஜலாலியத் (ஆன்மீக ஆக்ரோஷம்) ஏற்பட்டது.


அவர்கள் கலியர் நகரின் மையப்பகுதியில் இருந்த ஒரு 'கூலர்' (Gular) மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு வானத்தைப் பார்த்து ஒருமுறை துஆ செய்தார்கள். அவர்களின் அந்த ஆன்மீகக் கோபத்தின் வெளிப்பாடாக, அநீதியின் மையமாகத் திகழ்ந்த மன்னன் குத்புத்தீனின் அரண்மனை, கோட்டைகள் மற்றும் அநீதிக்குத் துணையாக நின்ற அதிகாரிகளின் வீடுகள் அனைத்தும் திடீரென ஏற்பட்ட தீ விபத்தாலும், இயற்கைச் சீற்றத்தாலும் முற்றிலும் அழிந்து சாம்பலாயின என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.


அநீதி இழைத்த ஒட்டுமொத்த சிஸ்டமும் (System) அந்த ஒரே ஒரு இறைநேசரின் ஆன்மீகக் கோபத்திற்கு முன்னால் நிலை குலைந்து போனது.


"கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” CJP

2026-ல் சில தினங்களுக்கு முன் , உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களைப் பற்றித் தவறான ஒரு ஒப்பீடு (அவர்கள் கரப்பான் பூச்சிகளைப் போல, ஓட்டுண்ணிகளைப் போல சமூகத்தைத் தாக்குகிறார்கள் என்று) பரவியது.

ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் தங்களைக் காக்க வேண்டிய நீதிமன்றமே தங்களை இப்படி இழிவாகப் பேசுவதா என்று இந்தியாவின் "ஜென்-ஸி" (Gen-Z) எனப்படும் இளம் தலைமுறையினர் கொதித்தெழுந்தனர். இந்த அநீதியான, தங்களை இழிவுபடுத்திய பேச்சைக் கண்டித்து, சமூக வலைதளங்களில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" என்ற பெயரில் ஒரு குறியீட்டுப் புரட்சியைத் தொடங்கினர்.



சுப்ஹானல்லாஹ்! தங்களைச் சமுதாயத்தில் பலவீனர்கள், வேலை இல்லாதவர்கள் என்று இழிவுபடுத்தியபோது, அந்த இளைஞர்கள் பயந்து ஒதுங்கிவிடவில்லை. மாறாக, தங்களுக்குக் கிடைத்த சமூக வலைதள ஆயுதத்தை வைத்து, அநீதியான அந்தப் பேச்சை உலகறியச் செய்தார்கள். வெறும் சில நாட்களிலேயே கோடிக்கணக்கான இளைஞர்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் யாராவது ஓர் அநீதியைக் கண்டால், அதைத் தன் கரத்தால் தடுத்து நிறுத்தட்டும். சக்தி பெறாவிட்டால் தன் நாவினால் தடுக்கட்டும்..." (நூல்: முஸ்லிம்). 


தங்களை இழிவுபடுத்திய அநீதிக்கு எதிராக இந்த இளைஞர்கள் நாவால் (சமூக வலைதளக் குரலால்) எதிர்த்த விதம் ஒரு சான்றாகும்.


கரப்பான் பூச்சியின் குறியீடு (தாங்கும் சக்தி)

அவர்கள் ஏன் தங்களைக் "கரப்பான் பூச்சி" என்று பெருமையோடு அழைத்துக் கொண்டார்கள் தெரியுமா? அறிவியல் உலகம் சொல்கிறது, உலகமே அழிந்தாலும் தாங்கி வாழக்கூடிய, அணு ஆயுதத் தாக்குதலையும் தாங்கி உயிர் பிழைக்கக்கூடிய ஒரு சகிப்புத்தன்மை கொண்ட பூச்சி கரப்பான் பூச்சி.


அநீதியாளர்கள் எங்களை எவ்வளவுதான் நசுக்கினாலும், அடக்கினாலும், அவமானப்படுத்தினாலும், "நாங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்பவர்கள், எங்களை உங்களால் அழிக்க முடியாது; நாங்கள் மீண்டு வருவோம்" என்ற அந்தத் தாங்கும் சக்தியை (ஸப்ரை) இந்த நிகழ்வு காட்டுகிறது. இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் போட்டபோதும் அவர்கள் கொள்கையில் உறுதியாக இருந்ததைப் போல, அநீதிக்கு முன்னால் இளைஞர்கள் சோர்ந்துவிடக் கூடாது.


இந்த நகைச்சுவையான, கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியதும், அது ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பக்கங்களை விடவும் சமூக வலைதளங்களில் பெரியதாக வளர்ந்தது. உடனே அதன் பக்கங்கள் முடக்கப்பட்டன (Hacked/Blocked).


அநீதி எப்போதுமே பலவீனமானது. சத்தியத்தின் சிறு குரலைக் கேட்டால் கூட அநீதி நடுங்க ஆரம்பித்துவிடும். அல்குர்ஆன் கூறுகிறது: "சத்தியம் வந்துவிட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது; நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதாகவே இருக்கிறது" (அல்குர்ஆன் 17:81).


இந்தச் சமகாலச் சம்பவம் நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்னவென்றால், அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்மைப் பலவீனர்களாக, சாமான்ய கரப்பான் பூச்சிகளாக நினைத்து மிதிக்க வரலாம். ஆனால், நாமும் நம்முடைய சமுதாயமும் அநீதியைக் கண்டு பயந்து நடுங்கக் கூடாது.


"கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" (Cockroach Janata Party) அதிகார வர்க்கத்திற்கு எதிராக முன்வைத்த முக்கியமான 5 பிரதான கோரிக்கைகள் 


1. வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி (Stop Paper Leaks)

கடந்த சில வருடங்களாக நீட் (NEET), யுஜிசி-நெட் (UGC-NET) மற்றும் மத்திய/மாநில அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தொடர்ச்சியாக வினாத்தாள்கள் கசிந்து (Paper Leak) ஊழல்கள் அரங்கேறி வருகின்றன.

கோரிக்கை: இரவு பகலாகக் கண்விழித்துப் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்தத் தேர்வு முறைகேடுகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தேர்வு நடத்தும் அமைப்புகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை (Transparency) வேண்டும்.


2.'கரப்பான் பூச்சி' என்ற இழிச்சொல்லுக்கு மன்னிப்பு (Apology for Derogatory Remarks)

படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நாட்டின் வாலிபர்களை, நீதிமன்ற விசாரணையின் போது "கரப்பான் பூச்சிகள்", "ஓட்டுண்ணிகள்" என்று மிகக் கேவலமாக ஒப்பிட்டுப் பேசியதாகச் செய்திகள் பரவின. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்களை, வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிய அதிகார வர்க்கம் இப்படி இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த அநீதியான பேச்சுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.


3. தேசிய அளவில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் (National Employment Guarantee)

இந்தியாவில் வாலிபர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் (Unemployment) வரலாற்றுச் சாதனை அளவைத் தொட்டுள்ளது.

கோரிக்கை: படித்து முடித்துவிட்டுத் தகுதியோடு இருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். வெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படாமல், சாமான்யர்களின் வேலைவாய்ப்பிற்கான புதிய கதவுகளைத் திறக்க வேண்டும்.


4. கருத்துச் சுதந்திரம் மற்றும் சமூக ஊடகப் பாதுகாப்பு (Protect Freedom of Speech)

இளைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சமூக வலைதளங்களில் இந்தக் குறியீட்டுப் புரட்சியைத் தொடங்கியவுடன், அவர்களின் கணக்குகளும் பக்கங்களும் முடக்கப்பட்டன. அநீதியை அநீதி என்று சுட்டிக்காட்டும் சாமான்ய மக்களின் குரல்வளையை நசுக்கக் கூடாது. ஜனநாயக நாட்டில் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்யும் கருத்துச் சுதந்திரமும், சமூக ஊடகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.


5. இளைஞர்களின் மனநலப் பாதுகாப்பு மற்றும் கல்விச் சீர்திருத்தம் (Student Mental Health & Reforms)

தொடர் தேர்வுத் தோல்விகள், முறைகேடுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இந்தியாவில் மாணவர்களின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


கல்வி முறையை வெறும் மனப்பாடக் கல்வியாகவும், வணிக மயமாகவும் மாற்றாமல், மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களைக் கொன்று குவிக்கும் கல்வி அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


இன்று நம்முடைய கல்வித் துறையில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள், பேப்பர் லீக் (Paper Leak) போன்ற அநீதிகளால் ஏழை மாணவர்களின் எதிர்காலம் பறிக்கப்படும்போது, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது நம்முடைய கடமை.


அன்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனி ஒரு மனிதனாக நம்ரூதின் அநீதியை எதிர்த்தார்கள். இன்று நம் நாட்டின் இளைஞர்கள் தங்களை இழிவுபடுத்திய அநீதியை நகைச்சுவையோடு, அதே சமயம் மிக உறுதியாக எதிர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள்.


எனவே, இந்தத் தியாகத் திருநாளில் நாம் எடுக்கும் சபதம் என்னவென்றால்: அநீதி இழைப்பவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நீதிபதியாக இருந்தாலும், ஆட்சியாளராக இருந்தாலும்... அநீதியை அநீதி என்று சுட்டிக்காட்டும் இப்ராஹீமியத் துணிவை நம் வாலிப நெஞ்சங்களில் வளர்த்துக் கொள்வோம்!"


அல்லாஹ் நம் நாட்டு இளைஞர்களுக்கு நேர்வழிகாட்டி, அநீதிகளுக்கு எதிராக ஜனநாயக முறையிலும், மார்க்க வரம்பிற்குள்ளும் நின்று நீதியை நிலைநாட்டும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்.


இந்தப் புனிதமான பெருநாள் நன்னாளில் நாம் மூன்று முக்கியக் கடமைகளை நம் வாழ்வில் ஏந்திக் கொள்ள வேண்டும்:


நம்முடைய சொல்லால், செயலால் நம்முடைய மனைவி, பிள்ளைகள், பெற்றோர், அண்டை வீட்டார், உடன் வேலை செய்பவர்கள் என யாருக்கும் ஒரு கடுகளவும் அநீதி இழைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.


அநீதியைக் கண்டு "நமக்கு ஏன் வம்பு?" என்று ஒதுங்கிப் போவது முஃமினின் பண்பல்ல. நம்மால் முடிந்தவரை அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் துணிவை வளர்த்துக் கொள்வோம்.


உலக அளவில் இனம், மொழி, மதம் கடந்து ஒடுக்கப்படும் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க நமது கைகளும், குரல்களும் என்றும் நீள வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அநீதியிலிருந்து பாதுகாத்து, நீதியின் பாதையில் பயணிக்கக் கூடிய உன்னத மக்களாக ஆக்கியருள்வானாக!


யா அல்லாஹ்! அரஹ்முர் ராஹிமீன்! இந்தப் புனிதமான பெருநாள் நன்னாளில் கையேந்தியிருக்கும் எங்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக!


யா அல்லாஹ்! எங்கள் தொழுகைகள், எங்கள் நோன்புகள், எங்கள் தர்மங்கள் மற்றும் இந்த நல்வார்த்தைகளை உன்னுடையப் பொருளுக்காக ஏற்றுக்கொள்வாயாக!


யா அல்லாஹ்! அநீதி இழைப்பதிலிருந்தும், பிறரால் அநீதி இழைக்கப்படுவதிலிருந்தும் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக!


யா அல்லாஹ்! எங்களின் நாவுகளாலோ, கரங்களாலோ, சிந்தனையாலோ யாருக்கும் எந்த அநியாயமும் நடந்துவிடாமல் எங்களைக் காத்தொடுவாயாக!


யா அல்லாஹ்! உலகெங்கிலும் அநீதிக்குள்ளாக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, தங்களின் சொந்த நிலங்களை இழந்து தவிக்கும் பலவீனமான முஸ்லிம்களுக்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உன்னுடைய நீதியான உதவியை இறக்கி வைப்பாயாக!


யா அல்லாஹ்! அநீதியாளர்களின் பிடியிலிருந்து இந்த உலகிற்கு அமைதியையும் விடிவையும் தந்தருள்வாயாக!


யா அல்லாஹ்! உமக்கும், உம் தூதருக்கும் அஞ்சி, அநீதியைக் கண்டு அஞ்சாமல் வாழும் இப்ராஹீமியத் துணிவையும், ஸஹாபாக்களின் ஈமானிய பலத்தையும் எங்கள் உள்ளங்களில் வாரி வழங்குவாயாக!


யா அல்லாஹ்! எங்களுக்குள் இருக்கும் பகைமை, பொறாமை, அநீதிப் போக்குகளை நீக்கி, ஒற்றுமையையும் பரஸ்பர அன்பையும் தந்தருள்வாயாக!


யா அல்லாஹ்! எங்கள் வாழ்வாதாரத்தில் பரகத் செய்வாயாக! எங்களின் கஷ்டங்களையும், கடன்களையும், நோய்களையும் தீர்த்து வைப்பாயாக!


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக